Pages

Saturday, June 13, 2026

ரொமாண்டிக் நாவல்களின் பலிகடா: மதாம் பொவாரியின் கள்ளக்காதல்கள் அல்லது The Semiotics of Adultery: Roland Barthes Reads Flaubert


ரோலாண்ட் பார்த் குஸ்டாவ் ஃப்ளாபெரை  (Gustave Flaubert) ப்ரெஞ்ச் இலக்கியம் தனது செவ்வியல் காலத்திலிருந்து நவீனத்துவ யுகத்துக்கு மாறியதைக் கட்டியங் கூறிய எழுத்தாளர் என்று வாசித்தார்.  பார்த்தின் வாசிப்பில் யதார்த்தவாதத்தின் மரபான கருத்துக்கள் செயலிழக்கும் வகையில் ஃப்ளாபெரின் நடையே நவீனத்துவ பனுவலை படைக்கக்கூடியதாக இருந்தது. 1968 இல் எழுதப்பட்ட L’effet de réel என்ற கட்டுரையில் பார்த் காற்றழுத்தமானி Un Cœur Simple என்ற சிறுகதையில்  யதார்த்த விளைவினை வாசகரிடத்தே உண்டாகுவதற்காகக் விவரிக்கப்படுகிறதே அல்லாமல் யாதர்த்ததையே பிரதிபலிப்பதற்காக சொல்லப்படுவதில்லை, கதையை நகர்த்திச் செல்வதற்கும் காற்றழுத்தமானியின் விவரிப்பு உதவுவதில்லை என்று வாதிட்டார்.  பார்த்தை வாசித்தபோது சுந்தரராமசாமி ஒரு முறை லாசராவின் சிறுகதைகள் எப்படி அவற்றில் விவரிக்கப்படும் பொருட்களால் பழமையில் சிக்கித் தவிக்கின்றன என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது . சுந்தரராமசாமி சொல்வார் லாசராவின் கதைகளில் கிணறுதான் இருக்கும், தண்ணீர்க் குழாய் இருக்காது, குத்துவிளக்குத்தான் சுடர் விடும்  மின்விளக்கு  எரியாது என்று. பார்த் சொல்வது சுரா லாசராவைப் பற்றி சொல்வது போன்றதுதான் ஆனால் நேர் எதிரான விலைவை வாசகரிடத்தே உண்டாக்குவது. லாசராவின் கதைகளில் பொருட்கள் பழமையின் சூழலை ‘யதார்த்தமாகக்’ கட்டமைக்கின்றன என்றால் பார்த்தின் அவதானத்தின்படி ஃப்ளாபெரின் கதைகளில் பொருட்கள் நவீன சூழலைக் கட்டமைக்கின்றன. கதைகளில் பொருட்கள் பொருட்களாக இல்லை; மொழியாக இருக்கின்றன.


ஃப்ளாபெர் உருகங்களையும், உவமைகளையும் மிக அதிகமாகப் பயன்படுத்துபவர். நம்முடைய திருச்செந்தாழை போல. இன்றைக்கு அப்படி அதிகப்படியான உவம, உவமேயங்களை, உருவகங்களை உரைநடையில் பயன்படுத்துவது நல்ல உரைநடையாக இன்று மேற்குலகில் கருதப்படுவதில்லை. பார்த்தோ ஃப்ளாபேரின் உவம உவமேயங்கள் அலங்காரங்களல்ல அங்கதங்கள் என்று வாசிக்கிறார். ஒரு கதாபாத்திரத்தின் உள்ளார்ந்த ஆசையை நேரடியாக விவரிப்பதற்கு பதிலாக வெளியே இருக்கும் மந்த யதார்த்தத்திற்கும் உள்ளே கொழுந்துவிட்டெரியும் ஆசைக்கும் இடையிலான வலி நிரம்பிய இடைவெளிகளை ஃப்ளாபெரின் உவம உவமேயங்கள் நிரப்புவதாக பார்த் வாசிக்கிறார். மீண்டும் இருப்பது மொழிதானே தவிர யதார்த்தமல்ல.  


பார்த்தைப் பொறுத்தவரை ஃப்ளாபெரின் தலைசிறந்த படைப்பான ‘மதாம் பொவாரி’ உள்ளூர் பிரபுக்களுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு படுத்து எழுந்திருப்பது பற்றிய நீதி உபதேசக் கதையல்ல மாறாக மொழியை யதார்த்தமாகப் புரிந்துகொண்டதன் விளைவைப் பற்றிய ஆழமான தத்துவ எச்சரிக்கை. எம்மா பொவாரிக்கு விருப்பம் கள்ளக் காதலின் மேல் அல்ல அவள் இள்மையில் படித்த ரொமாண்டிக் நாவல்களில் மொழியால் சித்தரிக்கப்பட்ட காதல் என்ற கருத்தின் மேல்.  பொவாரியின் கள்ளக்காதல்கள் வாசிப்பினால் உண்டான இலக்கியப் பிழைகள். நமக்கு ரமணி சந்திரணையும், லட்சுமியையும், மில்ஸ்  அண்ட் பூன்ஸையும், டன் டன்னாக எழுதிக்குவிக்கப்படும் சரித்திர நாவல் குப்பைகளையும் வாசிப்பதால் உண்டாகும் இலக்கியப் பிழைகள் என்ன என்பது கண்கூடாகத் தெரிவதில்லை. சினிமா பார்ப்பதால் உண்டாகும் அரசியல் பிழைகள் மட்டுமே நமக்குக் கண்கூடாக வரலாறாகின்றன. பிழைகள் பிழைத்து நல்லது நடக்குமானால் அது பிம்பம் அருளிய கொடை. அபத்தம் பற்றி அழகு விகசித்ததன் தற்செயல். வரலாற்றின்  கருணை.


ஃபபெர்டினாண்ட் சசூர் சொல்லியதை தமிழில் பலப்பத்தாண்டுகளாகத் திரும்பத் திரும்பச்சொல்லி இப்போது இலக்கிய வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கக்கூடியதுதான் மொழிக்குறி (linguistic sign) என்பதற்கு இரணடு பாகங்கள் இருக்கின்றன; குறிப்பான் (signifier), குறிப்பீடு (signified) 


எம்மா பொவாரி தான் ரொமாண்டிக் நாவல்களில் படித்த குறிப்பான்களான, வெல்வெட் மேலங்கிகள், நள்ளிரவில் எழுதப்படும் ரசம் சொட்டும் காதல் கடிதங்கள், நிலவொளியில் விடப்படும் ஆழ்ந்த பெருமூச்சுகள் ஆகியவற்றை சேகரித்தால் போதும் தான் விரும்பிய குறிப்பீடான உணர்ச்சிகரமான காதல், சலிப்பூட்டும் வாழ்க்கையிலிருந்து விடுதலை, ஆகியன கிடைத்துவிடும் என்று. ஆனால் அவளுக்குக் கிடைப்பதென்னவோ மெலியோரை முறைகேடாகப் பயன்படுத்துகிற ஒரு வியாபாரியின் மீளாக் கடன். எம்மா பொவாரிக்கு என்ன தஎரிவதில்லை என்றால் குறிப்பான்களுக்கும், குறிப்பீடுகலுக்கும் இடையில் இருப்பதே உண்மையான கள்ள உறவு. உம்பர்ட்டோ எக்கோ தன்னுடைய “ரோஜாவின் பெயர்” நாவலில் எழுதிக் காண்பைத்தது போல. நாவலில் வரும் கிறித்துவ மடலாயம் என்ற குறிப்பான் ஆன்மீகத்தைக் குறிப்பீடாகக்கொள்ளாமல் கொலைகளைக் குறிப்பீடாகக் கொண்டிருப்பது போல . ரோஜாவின் பெயர் ரோஜா என்ற மலரைக் குறிப்பிடாமல் வரலாற்றில் உள்ளீடற்று வெற்றுக் கூடாய் ஆகிவிட்டது போல. 


ஆனால் எம்மா பொவாரியும்தான் என்ன செய்வாள்? அவளுடைய கணவனான சார்ல்ஸ் பொவாரியுடன் அவளுடைய வாழ்க்கை ஒன்றும் துன்பங்கள் நிறைந்ததல்ல. சார்ல்ஸ் நல்ல மனிதன்; அவனை நம்பலாம். ஆனால் அவனோடு ரொமாண்டிக் மெழுகுவர்த்தி டின்னர் என்பது உருளைக்கிழங்கை சத்தம் போடாமல் உண்டு செரிப்பதுதான்.  பாவம் எம்மா பொவாரி அவளுக்கென்ன தமிழ் சினிமா பிம்பங்களா இருந்தன கனவு காண்பதற்கும், கட்டிப்பிடித்துத் தூங்குவதற்கும். கிடைத்ததெல்லாம் ரொமாண்டிக் நாவல்கள். அவற்றின் குறிப்பான்கள் சதி செய்துவிட்டன. உண்மையான குறிப்பீடுகள் வேறாய் இருந்துவிட்டன. பாவம் எம்மா பொவாரி நம் பரிதாபத்திற்குரியவள்.  மொழி இன்னொரு மொழியையே கட்டமைக்கிறது யதார்த்தத்தை அல்ல என்று அறியாதவள். 

 

No comments:

Post a Comment