கடந்த பத்து வருடங்களில் நீட் வினாத்தாள் 150 முறை கசிந்திருக்கிறது. இது வரை இந்தப் பரீட்சையின் அழுத்தம் தாங்கமாட்டாமல் 20 பேர் தன்னுயிரை மாய்த்திருக்கிறார்கள். புள்ளிவிபரம். இதற்குப் பின்னணியிலுள்ள சமூக வாழ்க்கை என்னவாக இருக்கிறது?
உங்கள் வீட்டில் பிளஸ் டூ படிக்கும் குழந்தை இருந்தாலே அந்த வீடு நரகமாகிவிட்டது என்று பொருள். பள்ளிக்கூடத்தில் ஒரு பாடத்திட்டம். நீட் தேர்வுக்கு வேறொரு பாடத்திட்டம். இரண்டையும் படிக்க வேண்டுமென்றால் அந்தக் குழந்தை தினசரி பதினாறு மணி நேரமாவது படிக்க வேண்டும். நாமக்கல் கோழிப்பண்ணை போன்ற பள்ளிகள் அதனால் ஒன்பதாம் வகுப்பிலிருந்தே டிரெய்னிங்கை ஆரம்பித்து விடுகின்றன. பள்ளிக்கு செல்லுதல் என்பதே தேர்வு எழுதத்தான், படிப்பதற்கெல்லாம் இல்லை. மூலைக்கு மூலை செயல்படும் ராஜஸ்தானிய இஞ்சி ஊறுகாய் கோச்சிங் செண்டர்களோ இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள். லட்சக்கணக்கில் பணத்தையும் கறந்துவிடுவார்கள். நாடு முழுவதும் குழந்தைகள் zombieகள் போல அலைந்துகொண்டிருக்கின்றன. அவர்களுக்கு கோழிப்பண்ணை வெள்ளை லெக்கான் கோழி வாழ்க்கை இரண்டரை வயதிலேயே தொடங்கி விடுகிறது. கூண்டுக்குள் நின்ற இடத்திலே தின்று கொழுத்து, கழிந்து, முட்டையிடவேண்டும்.
ஃபின்லாந்தில் ஒரு குழந்தை சௌகரியமாக ஏழு வயதில் ஒன்றாம் வகுப்புக்குச் செல்லும். மெதுவாக இருபது இருபத்தியிரெண்டு வயதில் உயர்பள்ளிக் கல்வியை முடிக்கும். நிறைய பேரோடு பழகிப் படுத்து எழுந்து 39 வயதில் சரியான இணையரைத் தேர்ந்தெடுத்து மணம் செய்துகொள்ளும். நமது குழந்தையோ ஐந்து வயதிலேயே நெற்றியில் பட்டையோடும் கழுத்தில் கொட்டையோடும் திருவாசகம் முற்றோதும். 1330 குறள்களையும் மனப்பாடமாய் ஒப்புவிக்கும்.
இப்படி ராவாய் பகலாய் சித்திரவதை எந்திரத்தினுள் நுழைந்து வெளியே வந்தால் வினாத்தாள் கசிந்துவிடும். அதாவது தெரிந்த கசிவு. தெரியாத கசிவு எத்தனை என்று யாருக்கும் தெரியாது. யார் யாரோ ஜெயித்துவிடுவார்கள். அப்பன் பணக்காரன் என்றால் எங்கேயாவது முன்னாள் ரௌடி கல்வித்தந்தையாக இருக்கும் பல்கலையில் ஏதாவது சீட் வாங்கிக்கொடுத்துவிடுவான். அப்பன் ஓட்டாண்டி என்றால் விரலை சூப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான். அப்பன் ஆத்தா நிலைமையும் மோசமாகத்தான் இருக்கும்.
ஆணாக இருந்தால் இருபதுகளின் கடைசியிலும், பெண்ணாக இருந்தால் இருபதுகளின் ஆரம்பத்திலும் மணமாகியிருக்கும். இரண்டு குழந்தைகள், ஈஎம்ஐ, ஜிஎஸ்டி, மின்கட்டணம், சொத்துவரி, தண்ணீர் வரி, இத்யாதி, இத்யாதியில் முப்பத்துஐந்து வயதிலேயே சலித்துப் போய் தொப்பையைத் தடவிக்கொண்டிருப்பார்கள், நாற்பதில் கெட்ட டாஸ்மாக் சரக்கை உள்ளே தள்ளியதாய் ஏற்பட்ட சர்க்கரை நோயால் எதுவும் எழுந்திருக்காது. எந்த அங்கமும் வேலை செய்யாது. அம்மணி இரண்டு பிள்ளை பிறந்தபின் வட்டப்பாறையாய் மாறி இருப்பார். திரைப்பட நாயகன்களைப் பார்த்து ஜொள்ளு வடித்துக்கொண்டிருப்பார். எல்லோரையும் சினிமா சினிமா சினிமா என்று பிம்பப்பால்வினை நோய் பிடித்தாட்ட பிம்பங்களுக்குக் கொத்தடிமையாய் ஆகியிருப்பார்கள் .
இலக்கியம் பக்கம் போனால் அங்கே மாஃபியா கூட்டத்தலைவன், தன் குடும்பத்தின் மேலாண்மையை நிறுவ, வருடம் நூறு நூல்கள் வெளியிட்டு நூறு கூட்டங்கள் நடத்துவான். அவனும் தன்னறம் என்பது சந்தையில் வெற்றி பெறுவதுதான் என்று போதிப்பான். ஓடு, ஓடு, ஓடு, நிற்காமல் ஓடு என்று ஓட வேண்டும். பதிப்பகங்கள் கண்காட்சிக்கு கண்காட்சிக்கு நூறு புதிய நூல்களை சாணித்தாளில் அச்சிட்டுக் கழிந்து தள்ளும். எந்த நூல் வந்தது எந்த நூல் போனது என்று யாருக்கும் தெரியாது.
ஆன்மிகம் பக்கம் போனால் எல்லாவற்றுக்கும் ஆசைப்படுவதுதான் ஆன்மிகம் என்று கார்ப்பரேட் சாமியான் சொல்லிக்கொடுப்பான். பர்சிலிருக்கும் மிச்ச சொச்ச காசையும் உருவிவிடுவான். பதிலுக்கு தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து, குண்டியின் தசை பிடித்துக்கொள்ளும்படி, இரண்டு முட்டிகளையும் கைகளால் பிடித்துக்கொண்டு மேலும் கீழும் ஆட்டச்சொல்வான். கண்களை மூடி புருவமத்தியில் வைத்து, நாக்கை மடித்து மேலண்ணத்தில் வைத்து, மூச்சு இருக்கிறதா இல்லையா என்று கவனிக்க வேண்டும். கண் ஒன்றரைக் கண்ணாகிவிடும். கவட்டை அகண்டு ஓதம் வந்தது போல நடக்க வேண்டும். மூச்சு இப்பவோ அப்பவோ என்றிருக்கும்.
ஃபேஸ்புக்குக்கு வந்தால் எம்டிஎம் போல யாராவது ஒருத்தன் சார்த்தரின் Being and Nothingness என்று பத்து பக்க கட்டுரையைப் போட்டுத் தாலி அறுப்பான்.
பின்னே போராட்டம் வெடிக்காமல் என்ன செய்யும்? நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்துவிடுவது என்பது ஹார்ட் அட்டாக் வந்த சமூகத்தின் நெஞ்சில் ஜண்டு பாம் போட்டுத் தடவுவது போல. ஆனால் அதையாவது செய்ய வேண்டும்
No comments:
Post a Comment