சென்னையில் தொடங்கியிருக்கும் புத்தகக்கண்காட்சியில் நான் வாங்கவிருக்கும் புத்தகங்களின் முதற் பட்டியலைத் தயார் செய்தேன்.
நிஜந்தன் தோழனின் நாவல் “பிறழ்”. “ரோஜாவின் பெயர்” நாவலைப் பற்றி நிஜந்தன் தோழன், அவர் மனநல சிகிக்சையில் இருப்பதாகவும் நாவலில் யார் கொலையாளி என்பதை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடிகிறதா என்ற நோக்கில் நாவலை வாசிப்பது அவரைத் தற்காலிகமாக ஆரோக்கியமாக வைத்திருப்பதாகவும் எழுதியிருந்தது எனக்கு மனக்கலக்கத்தை உண்டுபண்ணியது. அவருடைய நாவலை வாசிக்க விரும்புகிறேன்.
வேல்முருகன் இளங்கோவின் “மன்னார் பொழுதுகள்”, “இரவாடிய திருமேனி” ஆகிய இரு நாவல்கள். வேல்முருகன் இளங்கோவின் ஃபேஸ்புக் பதிவுகளில் அவர் குறிப்பிடும் படைப்புகளில் பல எனக்கும் முக்கியமானவையாக, பிடித்தவையாக இருப்பதை கவனித்திருக்கிறேன். சமீபத்தில் கூட அவர் ரோமானிய நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மிர்ஷியா கேர்டெரெஸ்குவின் (Mircea Cărtărescu ) Solenoid நாவலைப் பற்றி எழுதியிருந்தது எனக்குப் பிடித்திருந்தது. ஒத்த அலைவரிசை சிந்தனை இருக்கக்கூடும். தவிர, சரவணன் மாணிக்கவாசகம் “இரவாடிய திருமேனி” பற்றி எழுதியிருந்த குறிப்பும் நாவலாசிரியரின் நடையைக் கவனப்படுத்தியிருந்தது.
பழநி பாரதி, மா.காளிதாஸ், கார்த்திக் திலகன். என்.டி.ராஜ்குமார், கலியமூர்த்தி ஆகியோரின் கவிதை நூல்கள். கூடவே சமயவேலின் கவிதைகளின் மொத்தத் தொகுப்பு.
“ஏழு உலகப் பெண்கவிகள்” யமுனா ராஜேந்திரன், எஸ்.வி. உதயகுமாரி, ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் மொழிபெயர்த்த நூல். சுபஶ்ரீ முரளிதரன் மொழிபெயர்த்த, காஃப்காவின் ‘உருமாற்றம்’, ஸிந்துஜா மொழிபெயர்ப்பில் வெளியாகும், நபக்கோவின் சிறுகதைகள், “மேகம், அரண்மனை, ஏரி”, ஶ்ரீதர் ரங்கராஜின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கும் ஹூலியோ கோர்த்தசாரின் “பாண்டி ஆட்டம்”, அகிலன் எத்திராஜின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கும் தெஃப்னெ சுமானின், “பசியாறும் மேஜையில்” கார்த்திகை பாண்டியனின் மொழிபெயர்ப்பில் வெளியாகும் “யாரும் போகாத பாதை ஐரோப்பிய சிறுகதைகள்”, இல.சுபத்திராவின் மொழிபெயர்ப்பில் வெளியான யுவான் ரூல்ஃபோவின் “எரியும் சமவெளி”, முகமது சஃபியின் “என்றார் முல்லா, முல்லா கதைகளின் பெருந்தொகுப்பு”
அமலன் ஸ்டான்லியின் எல்லா நாவல்களையும் வாங்கிவிடுகிறேன். அவருடைய ஜென் தத்துவ நோக்கு அவருடைய நாவல்களில் எப்படி வெளிப்படுகிறது என்பதை வாசிக்க சுவாரஸ்யமாய் இருக்கிறது. அவருடைய “ஒளவிய நெஞ்சம்” போன புத்தகக்கண்காட்சிக்கே வாங்கியிருக்க வேண்டியது. இந்த வருடம் வெளியாகும் புதிய நாவலோடு சேர்த்து வாங்கவேண்டும்.
தமிழ்நதியின் “தங்க மயில் வாகனம்”, பாலசுப்ரமணியன் பொன்ராஜின் “சீமூர்க்”, ஜே.பி.சாணக்யாவின் சிறுகதை நூல்கள், பா. திருச்செந்தாழையின் “நெருப்பில் வளர்பவை”, மு.குலசேகரனின் “தங்க நகைப் பாதை”, என்.ஶ்ரீராமின் “தேர்ந்தெடுத்த குறுநாவல்கள்”, அஸ்வகோஷின் நாடகங்கள், முருகபூபதியின் “ குகைமரவாசிகள் 23 நாடகங்கள்” . வாசுதேவனின் ‘ரித்விக் கட்டக்” பற்றிய நூல், சி.மோகனின் "பால்ய நதி", வே.மு.பொதிகைவெற்பனின் “புதுமையும் பித்தமும் ஐந்து தொகை நூல்கள்” , கிருஷ்ணமூர்த்தியின் நான்கு நாவல்கள், முபீன் சாதிகாவின் “ ‘கறுப்பு ரோஜா வனத்தில் எதிரொலிக்கும் கிளியின் குரல்’ ஆகிய நூல்களும் நான் வாங்கவிருக்கும் முதற்பட்டியலில் இருக்கின்றன.

