டி.தருமராஜ் அனுப்பிக்கொடுத்த அவருடைய நூல் “ஜல்லிக்கட்டு” இன்று கிடைத்தது. தருமராஜின் “யாதும் காடே, யாவரும் மிருகம்” நூலின் பகுதிகளை இணையத்தில் வாசித்தபோது எனக்குப் பிடித்திருந்தது. அந்தப் பகுதிகளைப் பற்றி பத்தொன்பது இருபது வயதுகளில் தருமராஜ் இருந்தபோது அவர் எழுதிய சிறுகதையைப் படித்த நினைவு வந்ததாக நெகிழ்ந்து எழுதியிருந்தேன். மொத்தமாக நூலாகப் படித்தபோது அந்த நூலின் அரசியல் கூர்மையும், அந்தத் தலைப்பு சுட்டுகிற கடும் அவநம்பிக்கையும் என்னைத் திகைக்க வைத்தன. வாழ்க்கையில் சொல்லவொணா துயரங்களையும் இழப்புகளையும் சந்தித்த எனக்குக்கூட மனிதர்கள் மேல் அப்படியொரு அவநம்பிக்கைத் திரளவில்லை. மனிதர்கள் எனக்குத் துரோகமிழைக்கையில் நான் என்னுடைய உள்ளுணர்வும், அப்பாவித்தன்மையும் பொய்த்துவிட்டதாக வருந்தக்கூடியவனாகவே இருக்கிறேன். உண்மைக்கான தேட்டம், அழகில் மயங்கிவிடுதல், அப்பாவித்தன்மையை ஒரு விழுமியமாக, பொக்கிஷமாக பாதுகாத்தல், உள்ளுணர்வின் (intuition) மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை, ஆகிய என்னுடைய இயல்புகள் தருமராஜின் எழுத்தில் அரசியல் கூர்மையைக் கண்டு திகைத்துப் போனதில் வியப்பில்லை. அழகின் சத்தியத்தை நம்பும் எனக்கு, ராஜன் குறை ஒரு முறை எழுதியது போல அரசியல் அந்நியமான துறையாக இருக்கக்கூடும். எனக்கு அரசியல் தெரியும் என நான் மார்தட்டிக்கொண்டலும் கூட. தருமராஜை, பலப்பல வருடங்களுக்குப் பிறகு, சமீபத்தில் சென்னையில் ஒரு கருத்தரங்கில் சந்தித்தபோது, கருத்தரங்கு நடந்த நட்சத்திர விடுதியில் லிஃப்டில் அவருடன் மேலே சென்றபோது, என்னுடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஒருவிதமான excitement-உடன் உரையாடிக்கொண்டே வரும் பையன் கண்ணுக்குப் புலப்படுகிறானா என்று உற்றுப் பார்த்தேன். அவர் தலை நரை கண்டுவிட்டதாகவும் சாயம் பூசி இருப்பதாகவும் தெரிவித்தார். அந்தப் பையன்தான் சந்தேகமில்லை என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். எனக்கு இப்போதுதான் ஆங்காங்கே நரை தென்பட ஆரம்பித்திருக்கிறது. நல்லது.
என்னைப் போல அல்லாமல், அரசியல் கூர்மை வாய்க்கப் பெற்றவர்கள் தங்கள் கருத்தியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப கோட்பாடுகளை முலாம் பூசும்போது எனக்கு அந்த எழுத்தின் மீது ஆர்வம் போய்விடுகிறது. மானிடவியல், நாட்டுப்புறவியல் என இரண்டு ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த துறைகளுமே களப்பணி மூலம் பெறப்படும் தரவுகளின் கட்டப்படுபவை. தரவுகளை, அடர்த்தியான விவரணையின் வழி இனவரைவியல் எழுத்தில் சேர்க்கவேண்டும். கற்பனையோ, யூகங்களோ வேலைக்கு ஆகாது. இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தருமராஜின் “ஜல்லிக்கட்டு” நூலில் எனக்குத் தெரிந்த, சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கூட நடந்து வந்த இளைஞன், தென்படுகிறானா என்று வாசிக்கவிருக்கிறேன்.

