Sunday, May 19, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-35

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-35

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: பரணர்

குறுந்தொகையில் பாடல் எண்; 36

திணை: குறிஞ்சி

————-

துறுகல் அயலது மாணை மாக்கொடி

துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,

நெஞ்சு களன் ஆக நீயலென் யானென

நற்றோள் மணந்த ஞான்றை மற்று அவன்

தாவா வஞ்சினம் உரைத்தது,  

நோயோ தோழி நின்வயினானே.

————-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

உருண்டைக் கல்லின் அயலில் உள்ளதாகிய மாணையென்னும் பெரிய கொடியானது தூங்குகின்ற களிற்றின் மேல் படரும் குன்றங்களையுடைய நாட்டுக்குத் தலைவன் நின் நெஞ்சு களமாக இருந்து பிரியேனென்று எனது நல்ல தோளை அணைந்த போது அத தலைவன் கெடாத உறுதிமொழியைக் கூறியது உன்னிடத்தில் வருத்தத்திற்குக் காரணமாகுமோ? ஆகாதன்றே.

————

மாணைக்கொடி களிறு போலத் தோன்றும் பாறையில் படர்தல்

——-

யானையைப் பெரும்பாறைக்கு உவமிப்பதை பல சங்கக் கவிதைகளில் வாசிக்கலாம். இந்தப் பாடலில் பெரும்பாறை போல இருந்த யானையின் மேல் படர்ந்த மாணைக்கொடியானது யானை துயில் நீங்கும்போது சிதைவுபடும்; தலைவனின் சூளுரையை நம்பியதால் தலைவியின் நிலைமை மாணைக்கொடியின் நிலைமையைப் போன்றது. உ.வே.சா. துஞ்சுகின்ற அளவும் துறுகல் என்று தோன்றும் யானையின் மேல் படர்ந்து, துயில் நீங்கி அது சென்ற இடத்துப் பற்றுக்கோடின்றி இருத்தலைப் போல என உரை வளம் சேர்க்கிறார். 

——

வஞ்சினம் உரைத்தல்

———-

சங்க இலக்கிய புறப்பாடல்களில் வஞ்சினம் உரைத்தல் வீரத்தின் உயர்பண்பாகப் போற்றப்படுகிறது. இது அஞ்சாமையின் அடையாளமாக வீரநிலைக் காலப் பாடல்களில் காணப்படுகிறது. தம் வீரத்தைப் பகைவர்க்கு உணர்த்த வேண்டிய சூழலில் வஞ்சினம் எழுகிறது. அகப் பாடல்களிலோ வஞ்சினம் உரைத்தல் தலைவன் தலைவிக்கு அவளைப் பிரியேன், மணமுடிப்பேன் என அளிக்கும் வாக்குறுதிகளைக் குறிப்பதாகும். அகத்திற்கும் புறத்திற்குமிடையே ஒழுங்கமைப்பு உறவுகளை (systemic relations) உருவாக்கும் கருத்தாக்கங்களில் வஞ்சினம் உரைத்தலும் சேர்வது ஒரு அரிய மொழிபு ஆகும். இப்பாடலில் தலைவியின் தோளணைந்து தலைவன் வஞ்சினம் உரைக்கிறான்.

———

‘நோயோ தோழி” என்பதிலுள்ள ஓகாரம் எதிர்மறை

——-

தோளணைந்து தலைவன் சூளுரைத்தபோது நற்றோளாய் இருந்தது இப்போது இல்லை; இப்பொது நலிந்து மெலிந்த தோளாய் இருக்கிறது. நற்றோள் என்பது தலைவிக்கு நினைவு என்பது போலவே தலைவனின் சூளுரையும் நினைவாகவே இருக்கிறது. இதைத் தலைவி தோழியிடத்து தலைவன் வஞ்சினம் உரைத்து மறந்திருத்தல் எனக்குத் துன்பந் தருவது; அதனை நான் பொறுத்து ஆற்றியிருப்பது உனக்கு வருத்தமுண்டாக்க காரணமாயிருக்கக் கூடாது என்றும் சொல்லும் விதமாக ‘நோயோ தோழி’ என்று வினவுகிறாள்.  ஆகவே நோயோ என்பதிலுள்ள ஓகாரம் எதிர்மறைப் பொருளில் வந்தது.

——-

நெஞ்சு களனாக

——

களம் என்ற சொல்லை களன் என எழுதலாம்; மனம் என்பதை மனன் என்று எழுதலாம் என்பதைப் போல. மகரத்திற்கு பதிலாக னகரம் வருவது மகரனகரப்போலி எனப்படும். நெஞ்சை நோக்கிப் பேசப்படும் கவிதைகளிலும், நெஞ்சின் போராட்டங்களைப் பேசும் கவிதைகளிலும் நெஞ்சு ஒரு களனாக, போர்க்களத்திற்கு இணையானதாக அகக்கவிதைகளில் வருகின்றன. இக்கவிதையில் 

வரும் “நெஞ்சு களன் ஆக நீயலென் யானென, நற்றோள் மணந்த ஞான்றை மற்று ,அவன்தாவா வஞ்சினம் உரைத்தது” எனும் வரிகள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஞான்றை என்ற சொல்லில் ஐ சாரியை. தாவா வஞ்சினமென்றது அது கூறிய காலத்தில் தலைவியின் நினைவு, இப்போது அது தவறியது என்பது குறிப்பு.

‘நெஞ்சு களனாக’ என்பதற்கு இரா. இராகவையங்கார்  தன் நெஞ்சு சான்றாக, தன் நெஞ்சே அறியும் அவைக்களனாக இருப்பதாக உரை எழுதுகிறார். 

——

காதலின் நிலம்

——-

மாணைக்கொடிகள் தூங்கும் யானைகளைப் பெரும்பாறைகளென நினைத்து அவற்றின் மேல் படந்திருப்பது என்ற காட்சி காதலர்கள் பின்னிப் பிணைந்து கிடக்கும் காதலின் மலைநிலத்தைச் சொல்கிறது.  குறிஞ்சித் திணையின்பாற்பட்ட அழகிய காட்சிகளில் இதுவும் ஒன்று. 

—-

Saturday, May 18, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-34

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-34

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் சொன்னது

இயற்றியவர்: கழார்க்கீரன் எயிற்றியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 35

திணை:மருதம்

————-

நாண் இல மன்ற எம் கண்ணே, நாள் நேர்பு

சினைப்பசும் பாம்பின் சூன் முதிர்ப்பு அன்ன

கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ

நுண் உறை அழி துளி தலைஇய

தண்வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே.

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, தலைவன் பிரிந்த நாளில் உடம்பட்டு, பச்சைப் பாம்பினது கருவின் முதிர்ச்சியைப் போன்ற திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு

மலரும்படி நுண்ணிய மழை பொழிந்து அழிந்ததுளி பொருந்திய தண்ணிய வருதலையுடைய வாடைக்காற்றையுடைய கூதிர் காலத்தும் பிரிந்துறையும் தலைவன் பொருட்டு அழுதலால் எம்முடைய கண்கள் நிச்சயமாக நாணம் இல்லாதன.

————-

பச்சைப்பாம்பின் முதிர்ச்சியடைந்த கருவும் கரும்பின் அரும்பும்

———

இந்தப் பாடலில் வரும் ‘சினைப்பசும் பாம்பின் சூன் முதிர்ப்பு’ - பச்சைப்பாம்பின் முதிர்ச்சியடைந்த கரு கரும்பின் அரும்பிற்கு ஒப்பிடப்படுவதும் இரண்டும் தலைவியின் கண்ணீர்த்துளிக்கு உவமையாதலும் சிறப்பானதாகும்.  ஒன்று முதிர்ச்சியடைந்த கரு இன்னொன்று அரும்பு என்பதிலுள்ள பருவ வேறுபாடு கவனிக்கத்தக்கது. தலைவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றபோது, அவன் பிரிந்து செல்ல உடன்பட்டு அழாமல் இருந்தபோது அவளுடைய கண்ணீர்த்துளி எந்த நேரமும் சிந்தத்தயாராக, எந்த நேரமும் பிரசவமாகிவிடும் பாம்பின் முதிர்ச்சியடைந்த கரு போல இருந்தது; ஆனால் சிந்தவில்லை. ஆகவே அது கரும்பின் அரும்பிற்கு ஒப்பிடப்பட்டது. அரும்பியதும் சிந்தவில்லை.

———

தாமதமாக சிந்திய கண்ணீர்த் துளி

——-

அரும்பியதும் சிந்தாத கண்ணீர்த்துளி தாமதமாய்த் தலைவிக்கு சிந்துகிறது. கார்காலத்து மழை பெய்தபின் எஞ்சியிருக்கும் துளிகள் கூதிர்காலத்து வீழ்தல் போல என்பதை “நுண் உறை அழி துளி தலைஇய வாடை” என்று அவள் சொல்கிறாள். அதாவது தலைவன் பிரிந்து சென்றபோது அரும்பிச் சிந்தாமல் நின்ற கண்ணீர்த்துளிகள் இப்போது  பிரிவாற்றமையினால் சிந்துகின்றன. 

——-

உறை அழிதுளி வாடை

——

வாடைக்காற்றால் கரும்பின் பொதி அவிழ்தலைப் போல அதுவரை உறைந்திருந்த கண்ணீர்த்துளி இப்போது சிந்துகிறது என்று தலைவி “நீ அழுதது ஏன்” என வினவிய தோழியிடம் சொல்கிறாள். இத்க்கவிதையில் கவனிக்கத்தக்க இன்னொரு அழகான சொல் சேர்க்கை ‘நாள் நேர்பு’ ஆகும். இந்த நாள்தான் கண்ணீர்த்துளி சிந்துவதற்கு, நேர்வதான நாளாயிருக்கிறது. அபாரமான படிமங்களான பச்சைப்பாம்பின் கரு, கரும்பின் அரும்பு ஆகியன  அபாயம் சூல் கொண்டிருந்ததையும் இனிமை வருவதற்குக் காத்திருந்ததையும் ஒருங்கே சொல்கின்றன. ‘அழிதுளி’ என்ற பிரயோகமும் அபாரமானது. உ.வே.சா. அழிதுளி என்பதை அழிந்த துளி என்றும் பொ. வே. சோமசுந்தரனார்  அழிந்து விழும் துளி, இரா. இராகவையங்கார்  பெருந்துளி என்றும் விளக்கமளிக்கின்றனர்.  இரா. இராகவையங்கார்  பெருந்துளி என்று சொல்வதற்கு அத்துளி நாணமற்ற கண்களினால் சிந்தப்படுவது காரணமாகும். 

——

நாண் இல மன்ற எம் கண்ணே

————-

தொல்காப்பியம் இடையியல் சூத்திரம் 17, மன்ற என்ற சொல்லுக்கு மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் என்று சொல்கிறது. "கடவு ளாயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே" என்ற நற்றிணையின்   34 ஆவது பாடலும் தேற்றம் என்பது ஈண்டு உறுதி செய்தலைக் கருதிற்று. தாமதமாகக் கண்ணீர்த்துளியை சிந்துகின்ற தலைவியின் கண்கள் நாணமற்றவை. 

இந்தக் கவிதையில் வாடைக்காற்று தலைவிக்கு துக்கத்தின் பூங்காற்றாக வீசுகிறது.  

——

Friday, May 17, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-33

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-33

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவியிடம் கூறியது

—-

இயற்றியவர்: கொல்லிக் கண்ணனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 34

திணை:மருதம்

————-

ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்,
தமியர் உறங்கும் கௌவையின்றாய்,
இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே,
முனாஅது யானையங்குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்  
குட்டுவன் மரந்தை அன்ன, எம்
குழை விளங்கு ஆய் நுதல் கிழவனும் அவனே.

————-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

முன்னிடத்திலுள்ளதாகிய கடற்கரையிலுள்ள வண்டாழங் குருகின் பெரிய தொகுதியானது, பகைவரைக் கொன்ற வீரரது வென்று முழங்கும் முழக்கத்தினை அஞ்சுதற்கு இடமாகிய, குட்டுவனுக்குரிய மரந்தை என்னும் நகரைப் போன்ற பனிச்சை விளங்குகின்ற, அழகிய நெற்றிக்கு உரிமையுடையோனும், வரைவொடு வரும் அத்தலைவனேயாவான்; ஆதலின், வருத்ததிலிருந்து நீங்கி தெளியராகித் தலவனைப் பிரிந்து தனியாய் உறங்குகின்ற வருத்தம் இல்லாதவராய் இவ்வூரிலுள்ளோர் கூறும் இனியது கேட்டு இன்புறுவாயாக.

———-

யானையங்குருகு

———

மதுரைக்காஞ்சிக்கு (674 ) உரை எழுதிய நச்சினார்க்கினியரின் குறிப்பைப்பின்பற்றி உ.வே.சா. யானையங்குருகு என்பது வண்டாழங்குருகு என்று அடையாளப்படுத்துகிறார். திருப்பாவையில்(பாடல் 7)  வரும் ஆனைச்சாத்தனென்னும் பறவையாகவும் இது இருக்கலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார். அகநானூற்றுப்பாடல் 145 இல் குஞ்சரக் குரல குருகு என்ற  பறவை குறிப்பிடப்படுகிறது. யானையைப் போன்ற  குரலுடைய பறவை என அதற்குப் பொருள் ஆகையால் அது யானையங்குருகு என்று பெயர் பெற்றிருக்கவேண்டும்.  தொல்காப்பியம் இந்தப் பறவை என்றில்லாமல் அனைத்து பறவைகளையும் ‘புள்’ என்ற பொதுச் சொல்லால் குறிக்கிறது. யானைக்குருகை திருவோண  நட்சத்திரத்திற்குரிய புள் எனவும் ஜோதிட நூல்கள் குறிக்கின்றன. 


பறவைக்கூட்டத்தை தோடு எனக்குறிப்பிடும் வழக்கத்தை இப்பாடலில் வரும் ‘கானலம் பெருந்தோடு’ என்ற வரியும் வேறு குறுந்தொகைப் பாடல்களில் வருகிற “காக்காய்ச் செவ்வாய்ப் பைந்தோடு”, “அன்னத்து வெண்டோடு”, “இருந்தோடுப் புள்ளினம்” ஆகிய வரிகளாலும் அறியலாம்.

இந்தப் பாடலில் பகைவர்களை வென்று அவ்வெற்றிக்களிப்பினால் நகைத்து ஆராவாரித்து நடனமாடும் வீரர்களின் ஆர்ப்பிசை கேட்டு கடற்கரையில் பெருங்கூட்டமாகக் கூடியிருந்த யானையங்குருகுகள் அஞ்சுகின்றன.


அப்படிப் பறவைகளும் அஞ்சுகின்ற வீரர்கள் புழங்கும் நிலத்தைச் சேர்ந்த தலைவனும் பெரும் வீரன் என்பது பெறப்பட்டது. தொல்காப்பியம் புறத்திணை 12 ஆம் சூத்திரமான “தும்பைதானே நெய்தலது புறனே” என்பதற்கு உரை எழுதுகிற இளம்பூரணர் போருக்கு பெரிய வெளி வேண்டியிருப்பதால் காடும் மலையும் கழனியும் அதற்கு ஆகாதென்பதால் அந்நிலம் கடல் சார்ந்த இடமென்று அறியலாம் என விளக்கமளிக்கிறார். 


“குட்டுவன் மரந்தை அன்ன” என்ற வரியில் வரும் குட்டுவன் என்பது சேரர்களுக்குரிய பெயர். சேரன் செங்குட்டுவன் என்ற பெயராலும் இது அறியப்படும். மரந்தை என்பது மேலக்கடற்கரையிலுள்ள பண்டைய ஊர். 

——

எம்குழை விளங்கு ஆய் நுதல் கிழவன்

———-

தோழி எம் நுதல் (கண் வழி) கிழவன் என்று கூறினாலும் அவள் கூறியது தலைவியின் பார்வை வழி என்றே நாம் பொருள் கொள்ளவேண்டும். தலைவியின் உடல் உறுப்புகளைத் தன்னுடையதாகத் தோழி  கூறுவதைப் புலனெறிவழக்காக தொல்காப்பியம் பொருளியல் சூத்திரம் 25 கூறுகிறது. மகளிர் தங்கள் குழல்களை வகுக்கும் ஐந்து பண்டைய முறைகளுள் பனிச்சையும் ஒன்று; குழல்களை எடுத்து முன்னுச்சியிலும் நெற்றியிலும்  அமைத்துக்கொள்வது பனிச்சை ஆகும்.  தலைவியின் அழகிய நெற்றிக்கும் அதில் கிடக்கும் குழலுக்கும் உரிமையாளன் தலைவன் என்று இப்பாடல் சொல்கிறது. தலைவியின் உடலுக்கு உரிமையாளனாகத் தலைவனைக் குறிப்பிடுதல் சங்கக்கவிதைகள் பலவற்றிலும் வருகிறது. கலித்தொகை பாடல் 19 இல் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் அவள் குழலையும் கண்களையும் நுதலையும் நீவிச் சென்றான் ஆகையால் ‘குழல் விளங் காய்நுதற் கிழவன்’ என அப்பாடல் அந்த மென்செய்கையைக் குறிப்பிடுகிறது. 

———

ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்

———

இப்பாடலில் உள்ள பல சொற்களுக்கு அறிஞர்களின் உரைகளில் மிகுந்த வேறுபாடு உள்ளன.  ஓவலர் என்பதற்கு பொ. வே. சோமசுந்தரனார் தலைவியைவிட்டு நீங்காத செவிலி, நற்றாய் முதலியோர் எனவும்   மறுப்ப என்பதற்கு உ. வே. சா. தோழியர் பல காரணங்கள் கூறி இங்ஙனம் வருந்துதல் தகாதென்று மறுத்துக் கூறியதாகவும்,  பொ. வே. சோமசுந்தரனார் களவில் கூடியது தேறாத தந்தை முதலியோர் தலைவனுக்கு மணம் மறுத்தனர் என்றும்  முன்னர் மறுத்துப் பின்னர்த் தலைவனுடைய தகுதி கண்டு உடன்பட்டனர் என்றும் இப்பாடலுக்கு விளக்கம் எழுதியிருக்கின்றனர். இந்த வேறுபாடுகள்  தலைவியினுடைய கூந்தலையும் அது புரளும் அழகிய நெற்றியைப் பற்றிய விளக்கங்களிலும் இல்லை. 


தலைவன் விரைந்து வருவான் அவன் தலைவியைத் திருமணம் புரிந்துகொள்வான் என்று தலைவியைத் தோழி தேற்றியது இந்த அழகாக கவிதையின் உட்பொருள். அந்தப் பொருளை அஞ்சும் பறவைக்கூட்டத்தினுள்ளேயும் தலைவியின் நெற்றியில் புரளும் குழல்களுக்குள்ளேயும் இக்கவிதை ஒளித்து வைத்திருக்கிறது. 

——-


Thursday, May 16, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-32

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-32

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

இளம் பாணன் கேட்க தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: படுமரத்து மோசிகீரனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 33

திணை:மருதம்

————-

அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்

தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ

இரந்தூ ணிரம்பா மேனியோடு

விருந்தி னூரும்  பெருஞ்செம்மலனே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழியே, இவன் ஒரு இளைய மாணாக்கன். தனது ஊரிலுள்ள பொதுவிடத்து எத்தகையவனோ? இரந்து பெறும்  உணவினால் முற்ற வளராத மேனியோடு, புதியதாகப் பெறும் விருந்தின்பொருட்டுச் செல்லும் பெரிய தலைமையையுடையவன்.

———-

படுமரத்து மோசிகீரனார்

—————

படுமரத்து மோசிகீரனாரின் இந்தக் கவிதை தனித்துவமானது. குறுந்தொகையிலுள்ள பெரும்பான்மையான பாடல்களின் அமைப்பை இப்பாடல் கொண்டிருக்கவில்லை. இளம் பாணனின் மெலிந்த உடல், பெரு விருந்து ஆகிய இரண்டு குறிப்புகளே, அக்குறிப்புகளில்  அடங்கியிருக்கும் உள் ஆலோசனைகளே  ( suggestions) இதைக் கவிதையாக மாற்றப் போதுமானதாக இருக்கிறது. அந்தக் குறிப்புகளிலிருந்து விமர்சன விளக்கங்கள் அளித்தே இக்கவிதையை உள்வாங்கிக்கொள்ள வேண்டுமாகையால் வாசக பங்கேற்பினை அதிகம் கோரும் கவிதையாகவும் இது இருக்கிறது. உம்பர்ட்டோ எக்கோ தன்னுடைய நூலொன்றில் ஒவ்வொரு இலக்கிய பிரதியும் ஒரு சோம்பேறி எந்திரம் அது வாசகரை அர்த்ததைப் பெற உழைக்க வைக்கிறது என்று எழுதுவார். (பார்க்க: Eco, Umberto. The Role of the Reader: Explorations in the Semiotics of Texts. Indiana University Press, 1979.) அது இந்தக் கவிதைக்கு பொருத்தமானதாக இருக்கிறது. இப்படிப்பட்ட கவிதைகளை இயற்றியதால்தான் மன்னன் சாமரம் வீச மோசிகீரனாரால் பரிசில் வாங்கச் சென்ற இடத்தில் அரசுக் கட்டிலில் தூக்கம் போட முடிந்தது போலும். 

—————

உடல் எனும் பிரதி (Body as text)

——-

இளம் பாணனின் உடலை இரந்து உண்ணும் மாணவனின் உடல் எனவும், மெலிந்த உடல் எனவும் தலைவி தன் தோழியிடம் சொல்வது ஒரு காமவிருப்பக் குறிப்பை உள்ளடக்கி வைத்திருக்கிறது.  இதையே உ.வே.சா. பாணன் வாயிலாகப் புக்குத் தலைவன் பெருமையைச் சொல்வன்மை புலப்பட பாராட்டியதால் அவனை ‘இள மாணாக்கன்’ என்றாள்; அவனை புகழ்ந்ததால் அவன் மேலும், தலைவன் மேலும் அவளுக்குள்ள பிரியம் புலப்பட்டது என்று எழுதுகிறார். மெலிந்த பசித்த உடலுக்கு விருந்து என்பது வெறும் உணவாக மட்டும் இருக்க முடியுமா? ‘ஊண் நிரம்பா மேனி’ என்பதிலும் காமக்கூடுதலை வேண்டுகின்ற மேனி என்ற உள்க்குறிப்பு அடங்கியிருக்கிறது. இரா. இராகவையங்கார் விருந்தோடு யானை, பரி, தேர் இவற்றில் ஊர்ந்து செல்லும் என்று பொருளை இன்னும் விரித்து எழுதுகிறார். விருந்தின் ஊர்தலாவது விருந்து பெறுதற்குரிய இடங்களுக்கெல்லாம் செல்லுதல். சீவகசிந்தாமணியில்  286 ஆவது செய்யுளில் “ ஊர்தல் ஈண்டு போதமேற்று” என்றொரு குறிப்பு வருகிறது. 

———

விருந்தினூரும் பெருஞ்செம்மலன்

——-

தலைவனை ஏற்றுக்கொள்ளும் எண்ணமுடையவளாக தலைவி இருப்பதால் தலைவன் வரும்போது விருந்தயர்தலும் அவனுக்கு வாயிலாக வந்த பாணனும் விருந்துணவு பெறுதலும் நேரும் என்பதால் விருந்தினூரும் பெருஞ்செம்மலன் என்றாள். தோழியை நோக்கி இப்படி தலைவி கூறியவற்றால் அவளது உடன்பாட்டுக் குறிப்பை அறிந்த பாணன் அதனைத் தலைவனிடம் சென்று உணர்த்த அவன் வந்து தலைவியோடு அளவாளவுவான் என்பது இன்னொரு உள்க்கிடக்கை.  


தோழியை ‘அன்னாய்’  ( அன்னை) என விளிப்பதும் மரபு.  

————-

என்னென்கொல்லோ

——-

அயலிடாமாகிய இங்கேயே இவ்வளவு சொல்வன்மையுடன் பேசுவோன் தன் ஊரில் தான் தங்கும் மன்றத்தில் எத்தைகைய சிறப்புடையவனோ என “என்னென்கொல்லோ’ என்பதற்கு பொ. வே. சோமசுந்தரனார் விள்க்கமளிக்கிறார். ‘கொல்’  என்பது ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்; ஆகையால் எப்படி சிறந்திருப்பானோ என்ற கேள்வியாக அதை வாசிக்கவேண்டும். 

பாணர்கள் காதலருக்கிடையில் தூது சென்றிருப்பது நல்ல மரபாக இருந்திருக்கிறது. 

——-


Wednesday, May 15, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-31

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-31

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: அள்ளூர் நன்முல்லையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 32

திணை:குறிஞ்சி

————-

காலையும் பகலுங் கையறு மாலையும்

ஊர்துஞ் சியாமும் விடியலு மென்றிப்

பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்

மாவென மடலொடு மறுகிற் றோன்றித்

தெற்றெனத் தூற்றலும் பழியே

வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

காலைப்பொழுதும், உச்சிப்பொழுதும், பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப்பொழுதும் ஊரினர் துயில்கின்ற இடையிரவும், விடியற்காலமும் என்ற இச்சிறுபொழுதுகள் இடையே தோற்றுமாயின் அத்தகையோருடைய காமம் உண்மையானதன்று, பிரிவு வருமாயின் பனை மடலாற் செய்த குதிரையின் உருவத்தை ஊர்ந்து யாவரும் இன்னாளால் இவன் இச்செயல் செய்தானென்று தெளியும்படி தலைவி செய்த துயரைப் பலர் அறியச் செய்தலும் பழிக்குக் காரணமாகும். அது செய்யாது வாழ்ந்திருந்தாலும் பழிக்குக் காரணமாகும்.

———

கையறு மாலை

——

திருக்குறள் 1227 “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய்” என்று கூறுவது போலவே தலைவனும் இக்கவிதையில் காம நோய் மிகுந்து செயலறுதற்கு ஏதுவாகின்ற மாலையை “கையறு மாலை” என்றழைக்கிறான். பொழுது என்பது காலத்தைக் குறிக்கும். அது சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும். சிறுபொழுது என்பது  ஒரு நாளின் சிறுபிரிவு:

மாலை, யாமம் (நள்ளிரவு), வைகறை (அதிகாலை நேரம்)

எற்படு காலை (சூரியன் மறையும் நேரம்),  நண்பகல்

எனச் சிறுபொழுது 5 பிரிவுகளை உடையது.


பெரும்பொழுது இது ஓர் ஆண்டின் உட்பிரிவு ஆகும்.இளவேனில் (சித்திரை, வைகாசி மாதங்கள்), முதுவேனில் (ஆனி, ஆடி மாதங்கள்)

கார்காலம் (ஆவணி, புரட்டாசி மாதங்கள்) கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்), முன்பனிக்காலம் (மார்கழி, தை மாதங்கள்)

பின்பனிக்காலம் (மாசி, பங்குனி மாதங்கள்) ஆகியன பெரும்பொழுதுகள் ஆகும். 


குறிஞ்சித்திணைக்கு  யாமம் சிறுபொழுது, கூதிர், முன்பனிக்காலங்கள் பெரும்பொழுதுகள். 

பாலைத்திணைக்கு   நண்பகல் சிறுபொழுது வேனில், பின்பனிக்காலங்கள் பெரும்பொழுதுகள். 

முல்லைத் திணைக்கு மாலை சிறுபொழுது, கார் காலம் பெரும்பொழுது. 

மருதத்திணைக்கு  வைகறை சிறுபொழுது  கார்காலம் முதலான ஆறும் பெரும்பொழுதுகள்.

நெய்தல் திணைக்கு எற்படு காலை (சூரியன் மறையும் நேரம்) சிறுபொழுது கார்காலம் முதலான ஆறும் பெரும்பொழுதுகள். 


தலைவன் இக்கவிதையில் முதல் யாமத்தை விடுத்து இடையாமத்தைக் கருதி ஊரினர் துஞ்சும் யாமம் என்றான். 

——-

தெற்றெனத் தூற்றல்

——-

தலைவி என்னைத் துன்புறுத்தினாள், அவள் என் குறையறிந்து நிறைவேற்றமையினால் மடலேறுவேன் எனத் தோழியிடம் தலைவன் அப்படி மடலேறி அவளை அடைந்தால் அது தலைவிக்குப் பழி தருவதாதலால் அதைச் செய்ய துணியமாட்டேன்; அது செய்யாது உயிர் வைத்துக்கொண்டு தலைவி இல்லாமல் வாழ்வதும் அரிது ஆகவே உயிர் நீத்தலே நன்று என்று தலைவன் தோழியிடம் இரக்கம் உண்டாகும்படிக் கூறுகிறான். 


களவொழுக்கத்தின் இலக்கணங்களில் இறுதியாகிய சாக்காடு என்பதை தொல்காப்பியம் களவொழுக்கம் சூத்திரம் 9 கூறுவது இதனுள் வரும்.


பொழுதுகள் பற்றியும் களவொழுக்க இலக்கணத்தைப் பற்றி அறியவுமே இக்கவிதை உதவியாக இருக்கிறது. 

——- 



Tuesday, May 14, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-30

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-30

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: ஆதிமந்தியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 31

திணை: மருதம்

————-

மள்ளர் குழீஇய விழவி னாலும்

மகளிர் தழீஇய துணங்கை யானும்

யாண்டுங் காணேன் மாண்டக் கோனை

யானுமோ ராடுகள மகளே யென்கைக்

கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த

பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே

———

யாண்டும் காணேன்

——-

ஆதிமந்தியார் தன் கணவனான ஆட்டனத்தியைத் தொலைத்துவிட்டுத் தேடுவது அகநானூற்றுப் பாடல்கள் 45, 76,135, 222, 236, 396  ஆகியவற்றிலும் வாசிக்கக் கிடைக்கின்றன. இரா. இராகவையங்கார்  ஆதிமந்தியார் மன்னன் கரிகாலன் மகள் என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்பட்டது (சிலப்பதிகாரம்  21:11).  எனக் குறிப்பிடுகிறார். இக்கவிதையில் எங்கேயுமே தன் தலைவனைக் காணோம் எனக்கூறும் தலைவி தேடிய இடங்கள் வீரர் கூடும் விழாக்களாகவும்  நடன அரங்குகளாகவும் இருக்கின்றன. ‘மள்ளர் குழீஇய விழவி னாலும்’ என்றது போர் வீரர்கள் கூடும் விழாக்களை. தலைவனது ஆணுடலானது பண்பாட்டுவயப்பட்டதாக, ஒரு வீர உடலாக எனவே பெண்டிரால் தழுவத்தக்கதாக  இருப்பதாக பொருள்கொள்ள வேண்டும். “யாண்டும் காணேன்’ என்றது விரக்தியின் உச்சம்.

——

துணங்கைக் கூத்து

———

பெண்களை ஆண்கள் தழுவி ஆடும் துணங்கைக்கூத்து இக்கவிதையின் மைய உருவகமாக இருக்கிறது.  துணங்கைக் கூத்தைப் பற்றி விரிவாக எழுதுகிற உ.வே.சா. இதை சிங்கிக் கூத்து என்றும் அழைப்பர் எனக் குறிப்பிடுகிறார். துணங்கை ஆடுதலின் போது ஆண்கள் பெண்களுக்கு முதற்கை கொடுத்தலும் பண்டைய வழக்கம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.  மள்ளர் களமாடும் வீரக்களங்களிலும், பெண்டிற்கு முதற்கை கொடுக்கும் துணங்கைக் கூத்துகளிலும் வழக்கமாகக் காணப்படுகிற தலைவன் என்பதால் அவன் வீரனென்றும் தனக்குப் பொருத்தமானவன் என்றும் கருதும் தலைவி அவனை ‘மாண்டக் கோன்’ -  என்று அழைக்கிறாள். வீரர்களம், நடனக்களம் இரண்டிலும் தலைவனின் இன்மை (absence) அவனுடைய இருத்தலை (presence) ஐ சொல்வதாக அமைவது இக்கவிதையின் சிறப்பு. 

——

அக லயத்தை இழத்தல்

———

‘யானும் ஓராடு கள மகளே’ என தலைவி கூறுவதால் இக்கவிதையின் மைய உருவகமான நடனம், துணங்கைக் கூத்து, மேலும் துலக்கமாகிறது; தலைவன் அத்துணங்கைக்குத் த்லைக்கை கொடுத்தானென்பதையும் மேலும் புலப்படுத்துகிறது. பொ. வே. சோமசுந்தரனார்  இங்ஙனம் ஆண்டுஞ் சென்று தேடுதலானே யானும் கூத்தாடும் களத்திற்குரிய மகளே ஆயினேன் எனப் பொருளுரைக்கிறார். தனக்கு வேறு மணம் செய்விக்க இருக்கும் பெற்றோருக்குத் தான் வேறொரு பொருத்தமான தலைவனோடு உறவில் இருப்பதாகத் தோழி வழி தலைவி தெரிவித்ததாகவும் இக்கவிதையை வாசிப்பதற்கு இடம் உண்டு. ‘கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த’ என தனது சங்கு வளையல்கள் நெகிழ்ந்து நழுவுமாறு எரியூட்டிய தாபத்தைத் தன்னில் வளர்த்த தலைவனை, அதுவும் பெருமை மிகு தலைவனை (பீடுகெழு குரிசிலுமோ) ஆடுகள மகளிரில் ஒருவளாகிய தான் காணவில்லை என்றது தலைவியின் அக லய இழப்பினைத் தெரிவிக்கிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்ட அகநானூற்றுப் பாடல்களில் ஆதிமந்தியார் பித்துற்று தன் தலைவனாகிய ஆட்டனத்தியத் தேடியதாக நாம் அறிகிறோம். ஆதிமந்தியாரின் பித்தின் ஆரம்ப நிலையான அக லய இழப்பினை இக்குறுந்தொகைப் பாடலில் நாம் அறிகிறோம். அகத்தின் லய இழப்பு நடனம் மைய உருவகமானதால் தெரிய வந்தது. 

——-


Monday, May 13, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-29

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-29

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 30

திணை: பாலை

————-

கேட்டிசின் வாழி தோழி யல்கற்

பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇய

வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்த்

தம்ளி தைவந் தனனே குவளை

வண்டுபடு மலரிற் சாஅய்த்

தமியேன் மன்ற வளியேன் யானே

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, கேட்பாயாக, இராக்காலத்தில் பொய் கூறுதலில் வன்மையுடைய தலைவன், என் உடம்புடன் அணைதலைப் பொருந்திய, மெய் போலுந்தன்மை உடைய, பொய்யாகிய கனவு மயக்கத்தை  உண்டாக்க, துயிலுணர்ந்து எழுந்து, தலைவனென எண்ணிப் படுக்கையைத் தடவினேன்; வண்டுகள் வீழ்ந்து உழக்கிய குவளை மலரைப் போல மெலிந்து, நிச்சயமாகத் தனித்தவளாயினேன்; அத்தகைய நான், அளிக்கத்தக்கேன்.

————-

ஏக்கம், ஏமாற்றுதல், மனமுறிவு

————-

மிக்ககுறைந்த, தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் இக்கவிதை காதலின் ஏக்கம், ஏமாற்றுதல், மனமுறிவு ஆகியவற்றைப் பற்றிச் சொல்கிறது. ஒரு பொய்க்கனவை திரும்பச் சொல்வது போல ஆரம்பிக்கும் கவிதை , ‘கேட்டிசின் வாழி தோழி’ என தோழியை, (எனவே கவிதை வாசிப்போரை/கேட்போரைத்) தன் நன்னம்பிக்கைக்குரிய பாத்திரமாக மாற்றி அவளுடைய கவனத்தையும், அவளுடைய அனுதாபத்தையும் கோருகிறது.  அடுத்தவரின் அனுதாபத்தைக் கோரும் விளியின், வாழ்த்தின் பின்னணியில் ஆழமான மனமுறிவும், ஏக்கமும், பலவீனமும் இருக்கிறது. ‘கேட்டிசின்’ என்ற சொல்லிலுள்ள ‘இசின்’ முன்னிலை அசைச்சொல்லாகும். சின்’ என்பது இசின் என்பதன் முதற்குறை. மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் என தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26 ஆம் சூத்திரம் சொல்கிறது.

———

பொய்வலாளனும் பொய்க்கனவும்

———

தலைவி தலைவனைப் பொய்வலாளனென்றது தான் கூறிய நாளில் வந்து தலைவியைத் தான் கூறிய நாளில் வந்து மணம்புரியாததைப் புலப்படுத்தியது. வாய்த்தகைப் பொய்க்கானாவென்றது உணம்மையைப் போலத் தோன்றி பொய்யாக முடியும் கனவு. தலைவியின் கனவென்னும் மெய்ப்பாடு எதைப்பற்றியது?  தன்னைத் தலைவன் அணைத்தது போல உணர்ந்து வெறும் படுக்கையைக் கையால் தடவி விழித்ததா அல்லது தலைவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட பிரிவாற்றமையினால் விழைந்த விரக்தியா? கனவும் நனவும் இவ்வாறாக ஒன்றன் மேல் ஒன்றாகப் பொருளீர்ப்பதால் இக்கவிதை செழுமை பெறுகிறது. சாஅய் – என்பது இசை நிறை அளபெடை தமியேன் என்பது தனியாக நின்றேன்;  மன்ற என்பது தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல். தனியாகத் தலைவி விரக்தியில் வாடி நிற்பதை இவை மேலும் சொல்கின்றன.

———-

வண்டுபடு குவளை மலர்

——-

வண்படு மலரைப் போல மெலிதல் என்பது இந்தக் குறுந்தொகைப் பாடலிலிருந்து பல்வேறு வகையான இடைக்காலச் செய்யுள்களிலும் எடுத்தாளப்பட்ட உவமையாகும். உ.வே.சா. இதற்கு வண்டுகள் வீழ்ந்து உழக்கிய குவளை மலரைப் போல என விர்த்து உரை எழுதுகிறார். உழக்கியதால் மெலிந்து, நலிந்து கிடத்தலே அதன் பொருள். பொய்க்கனா கண்டு எழுந்த தலைவியின் அமளியும் அரற்றலும் அவள் உடல் மெலிந்து நலிந்திருத்தலால் மேலும் மெய்ப்பாடு கண்டது. 

——- 


Sunday, May 12, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-28

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-28

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது

—-

இயற்றியவர்: ஒளவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 29

திணை: குறிஞ்சி

————-

நல்லுரையிகந்து புல்லுரை தாஅய்ப்

பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல

உள்ளத் தாங்கா வெள்ள நீந்தி

அரிதாவா வுற்றனை நெஞ்சே நன்றும்

பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு

மகவுடை மந்தி போல 

அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

நெஞ்சே, நல்ல உரைகள் நீங்கி, பயனற்ற உரைகள் பரவப்பெற்று, பெய்தலையுடைய மழையின் நீரை ஏற்றுக்கொண்ட பசு கலம் போல, சுடப்படாத பசுமண்ணாலாகிய பாண்டத்தைப் போல, உள்ளத்தினால் பொறுக்கமுடியாத ஆசை வெள்ளத்தில் நீந்தா நின்று பெறுதற்கரியதை பெறவிரும்பினை. உயர்ந்த மரக்கொம்பிலுள்ள குட்டியையுடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப்பெற்று அமைவது போல மனம் பொருந்த என் குறையைக் கேட்டு நிறைவேற்றுவோரைப் பெறுவாயாயின் உனது போராட்டம் மிகவும் பெருமையுடையது.

———-

நல்லுரையும் புல்லுரையும்- நெஞ்சும் உள்ளமும்

—————-

தலைவனும் தலைவியும் இரவு நேரத்தில் களவில் சந்தித்துக் கூடி மகிழும் இடம் இரவுக்குறி எனப்படும். தலைவனின் விருப்பத்திற்கு இணங்கி இரவுக்குறி நேரும் உரை நல்லுரை என்றும் தலைவனின் விருப்பத்தை மறுத்து வரைவு கடாயது புல்லுரை எனவும் அறியப்படும். இக்கவிதையில் தலைவியைத் திருமணம் செய்துகொள்ள நினையாது கூடுவதற்கு மட்டும் அவாவுற்ற அவன் தன் நெஞ்சிடம் பேசுகிறான். என்ன மாதிரியான அகம் நோக்கிய பேச்சு இது? பசுங்கலம் நீரைத் தாங்காமை, உள்ளம் ஆசை வெள்ளத்தைத் தாங்காமைக்கு உவமை. ஆகையால் தாங்க முடியாத ஆசைக்கும் மறுக்கப்பட்ட நிலைக்கும் இடையில் நெஞ்சில் நடக்கும் பூசலைப் பற்றியதாய் இக்கவிதை இருக்கிறது. உ.வே.சா இதற்கு நெஞ்சுக்கு உள்ளம் கூருதல் மரபு என்று உரை எழுதுகிறார். நெஞ்சம் உணர்ச்சியின் வெள்ளத்தால் நிரம்பித் ததும்புவதாகவும் உள்ளம் உண்மையைச் சொல்வதாகவும் நாம் விளங்கிக்கொள்ளலாம்.  நெஞ்சு அடிமனதையும் உள்ளம் அறிவின் பாற்பட்ட மேல் மனதையும் குறிப்பதாகும். 

———-

உயர் கோடு மகவுடை மந்தி

———

தலைவன் தனக்குத்தானே உயர்ந்த மரக்கொம்பிலுள்ள் குட்டியையுடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப்பெற்று இருப்பது போல , அகன் உற- மனம் பொருந்த, தழீஇ- என் கருத்தைத் தழுவிக்கொண்டு என் குறையைக் கேட்டு நிறைவேற்றுவாயின் உனது போராட்டம் பெருமையுடையது எனச் சொல்லிக்கொள்கிறாரன். உயர் கொம்பு மந்தி என்று சொன்னது உயரமான இடத்தில் இருக்கும் நோக்கம் நிறைவேறுமாயின் என்று பொருள்படும். இங்கே மேலான நோக்கம் என்பது அரிதாக அடையப்பட்ட தலைவியை , (அரிதாவா வுற்றனை), நெஞ்சம் கேட்பது போல அடையப் பெறுவதாகும். இரா. இராகவையங்கார் இதைத் தன்னைத் தழுவிய மகவைத் தான் தழுவி அணைத்து ஏறும் மந்தி போல என விளக்கமளிக்கிறார்.

———-

நீர் படு பசுங்கலம்

———-

நற்றிணை பாடல் 318 இலும்  ‘ஈர் மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு’ என்ற வரி வருகிறது. சுடப்படாத பசுங்கலத்தில் மழைவெள்ளம் நிரம்பி வழிவது போல 

தலைவன் ஆசை வெள்ளத்தில் நீந்தா நிற்கிறான். ‘பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல’ - பெய்யும் மழைக்கு ஏற்ற பசுங்கலம் போல எனப் பொருள்படும். இதில் ‘நீர்க்கு’ என்பது ‘நீரை’ என இரண்டாவதன் பொருட் கண் வந்ததால் இதை வேற்றுமை மயக்கம் என திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் குறிக்கிறார். ஆசை வெள்ளத்தில் மூழ்குதல் இக்கவிதையின் மைய உருவகம்.  தாய் மந்தி தன் மகவை அணைத்துக்கொள்ளுதல் எனும் காட்சிப்படிமம் தலைவன் தன் மூழ்குதலில் இருந்து விடுபட்டு தன் விருப்ப நிறைவேற்றத்தை அடைவான் எனக் கொள்ளும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. 


நெஞ்சே, நின் பூசல் கேட்கப்படுமாயின் பெரிது. 


Saturday, May 11, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-27

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-27

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: ஒளவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 28

திணை: பாலை

————-

முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்

ஒரேன் யானுமோர் பெற்றி மேலிட்

டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்

அலமர லசைவளி யலைப்பவென்

உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

சுழலுதலையுடைய, அசைந்து வருகின்ற தென்றற்காற்று வருந்தாது நிற்க, எனது வருந்துதலையுடைய காமநோயை உணர்ந்துகொள்ளாமல், கவலையின்றித் தூங்கும் ஊரிலுள்ளாரை நான், முட்டுவேன் கொல்- முட்டுவேனா, தாக்குவேன் கொல்- தாக்குவேனா, ஒருதலைக் கீட்டை மேற்கொண்டு ஆஅ ஒல்லென- ஆவென்றும் ஒல்லென்றும் ஒலி உண்டாகக் கூவுவேன் கொல்- கூப்பிடுவேனா, இன்னது செய்வதென்பதை அறியேன்.

————

முட்டுவேன் கொல், தாக்குவேன் கொல்

——-

காம நோய் பீடித்து என்ன செய்வதென்று அறியாத தலைவி, முட்டுவேன் கொல், தாகுவேன் கொல் என்று சொல்லும் ஆரம்பர வரி சுவாரஸ்யமானது. முட்டுதல் உடம்பால் செய்யப்பட்டதென்றும் தாக்குதல் கோல் முதலிய ஆயுதங்களால் செய்யப்ப்டுவது எனவும் உ.வே.சா. உரை எழுதுகிறார். கொல் என்ற சொல் கொல்லுதல் என்ற பொருளில் வரவில்லை. கொல் என்பது ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல் ஆகையால் முட்டுவேனோ, தாக்குவேனோ என்று தலைவி கேட்பதாக பொருள் கொள்ள வேண்டும். தலைவியின் ஆற்றாமை அறியாது தூங்கிக்கொண்டிருக்கும் மொத்த ஊரையும் தலைவி தாக்குவாளா என்றால் இல்லை என்கிறார் இரா. இராகவையங்கார்; அவருடைய உரையில் ஊர் என்பது செவிலி, தாய் முதலிய நெருங்கியோர் என்று எழுதுகிறார்.

——-

ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்

——-

தலைவியின் காம நோயானது, ‘ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்’ என்ற வரியில் இன்னும் அடிப்படையான தொன்மையான நனவிலியின் எல்லையற்ற விகாசத்தை அடைகிறது. மொழிக்கு முந்தைய சப்தங்களால் தன் காம நோயைக் கூவுவேனோ எனத் தலைவி  கேட்பது நனவிலியின் நீர்த்தேக்கம் பீறிட்டு உடைந்திருப்பதை உணர்த்துகிறது. தலைவியின் உயவு நோய் அறியாது துயிலும் ஊரை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற தர்க்கம் இந்த நனவிலியின் பீறிடலால் நியாயமாகிறது. உயவு என்பது உயா என்ற சொல்லின் திரிபு. தொல்காப்பியம் உரிப்பொருள் 71 ஆவது சூத்திரம் ‘உயாவே யுங்கல்’ எனக் குறிப்பிடுகிறது. இக்கவிதைவுன் இறுதி சொல், ‘ஊர்க்கே’ என்பது ‘ஊரை’ என்றிருக்க வேண்டும். அதாவது எனது துயர நிலை அறியாது துயிலுகின்ற இந்த ஊரை என்ன செய்வேன் என்பது கவிதை வரியின் பொருள். ஆகவே’ ஊர்க்கே’ என்பது ‘ஊரை’ என்பதன் உருபு மயக்கம்.

———  

அலமரல் அசை வளி

——-

இந்தக் கவிதையிலுள்ள ஒரே இயற்கைக் குறிப்பு ‘அலமரல் அசை வளி’ என்பதாகும்.  1141 ஆவது திருக்குறளில் ‘அலரெழ வாருயிர் நிற்கும்’ என்ற குறிப்பு இருக்கிறது. அலமரல்- சுழலுதலையுடைய, அசை வளி- அசைந்து வருகின்ற தென்றற்காற்று, அலைப்ப- வருந்தாமல் நிற்க- தலைவியின் அகமோ புயலடித்ததாய் இருக்கிறது. அகச்சூழலும், புறச்சூழலும் எதிரெதிராய் நிற்பதை இந்த இயற்கைக் குறிப்பு உணர்த்தியது. தொல்காப்பியம் சொல்லதிகாரம் 310 ஆவது சூத்திரம் அலமரல், தெருமரல் இரண்டும் சுழற்சி எனப் பொருளுரைக்கிறது. பொ. வே. சோமசுந்தரனார்  வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் கூதிர் காலமாகலின் வளி ஈதல் வாடை என மேலும் விளக்கம் சேர்க்கிறார். 

——

ஓரேன்

——

இன்னது செய்வது அறியேன் எனத் தலைவி அரற்றுவது, ‘ஒரேன்’ என்ற சொல்லால் பெறப்பட்டது. ஊரை முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்? கூவுவேன்கொல்? ஒரேன் என்பது யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய ஒரு நிலை. 



Friday, May 10, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-26

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-26

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: வெள்ளிவீதியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 27

திணை: பாலை

————-

கன்று முண்ணாது கலத்தினும் படாது

நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்

கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது

பசலை யுணீஇயர் வேண்டும்

திதலை யல்குலென் மாமைக் கவினே

———————

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

நல்ல பசுவின் இனிய பாலானது அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், தரையில் சிந்தி வீணானது போல, எனது அல்குல் பகுதியில் தேமல் படர்ந்து எனது மாமையாகிய பேரழகு எனக்கும் ஆகாது, என் தலைவனுக்கும் இன்பம் பயக்காமல் பசலை படர்ந்திருக்கிறது.

——-

வாசிப்பு

———-

இந்தப் பாடலை இயற்றியது யார்?

—————

உ.வே.சா. தன்னுடைய 1937 குறுந்தொகைப் பதிப்பில் இந்தப்பாடலின் ஆசிரியராக கொல்லன் அழிசியைக் குறிப்பிடுகிறார். ஆனால் பல உரையாசிரியர்களும் இப்பாடலை இயற்றியவர் வெள்ளிவீதியார் என்றே குறிப்பிடுகின்றனர். வெள்ளிவீதியார் பெண்பாற் புலவர். பொ. வே. சோமசுந்தரனார்  இப்பாடல் வெள்ளிவீதியார் என்னும் நல்லிசைப் புலமையாட்டியார் தம் கணவனைப் பிரிந்த காலத்தே கூறியது என்றும் தம் பெயரையோ கணவன் பெயரையோ கூறினால் இதுப் புறப்பாடல் ஆகிவிடும் என்று  அஞ்சி பெயர் கூறாமல் விட்டதால்  அகப்படாலாயிற்று என்றும் கூறுவார்கள் என்று விளக்கமளித்திருப்பது பொருத்தமானதாக இருக்கிறது.   இரா. இராகவையங்கார் தன் உரையில் நச்சினார்க்கினியரின் உரையை மேற்கோள் காட்டி இது வெள்ளிவீதியாரின் பாடல்தான் என்று உறுதி செய்கிறார்.

———-

அல்குல்- சொற்பொருளும் பதிப்பு வரலாறும்

——-

அல்குல் என்ற சொல்லுக்கு பெண் குறி என்ற பொருள் பொதுவாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் அது பெண்ணின் அடிவயிற்றிலிருந்து பெண்குறியை உள்ளடக்கிய தொடைகள் வரை நீளும் பகுதி என்ற பொருளில் பல சங்கப்பாடல்களில் வருகிறது. இந்தக் கவிதையில் வரும் அல்குல் என்ற சொல்லுக்கு டி.வி.கோபாலய்யர் பின்பாகம் என பொருள் சொன்னதாக ஈவா வில்டன் குறிப்பிடுகிறார்; அவர் அல்குல் என்ற வார்த்தையை இடுப்பு (hip) என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். வைதேகி ஹெர்பர்ட் ‘loins’ என மொழிபெயர்த்திருப்பது பொருத்தமாக இருக்கிறது. 


குறுந்தொகையை உ.வே.சா.வுக்கு முன்னதாக, முதன் முதலில் 1915 இல் பதிப்பித்த திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் அல்குல் என்ற சொல் வருமிடங்களிலெல்லாம் அதை வேறு சொற்களால் நிரப்பிவிடுவதால பாடல் என்ன சொல்ல வருகிறது என்று தெரியாமல் பொருள் மங்கிவிடுகிறது. சி.வை.தாமோதரம் பிள்ளையும் தன்னுடைய கலித்தொகைப் பதிப்பில் திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் போலவே அல்குல் என்ற சொல்லுக்கு வேறு சொற்களை பதிலீடு செய்திருக்கிறார். உ.வே.சா.வுக்கு மேற்கண்ட கட்டுப்பெட்டித்தனம் இல்லை. அவர் எப்போதெல்லாம் தோலின் நிறமோ அல்குலின் நிறமோ ‘மாமை’ (மாந்தளிர் நிறம்) எனக் குறிப்பிடப்படும்போது அதில் கவனம் செலுத்தி சங்கப்பாடல்கள் பலவற்றிலும் மாந்தளிர் நிறமே பேரழகு வாய்ந்ததாகச்  சொல்லி நம் கவனத்தை அந்த நிறத்தின் மேல் குவிக்கத் தவறுவதில்லை. இந்தப் பாடலுக்கும் உ.வே.சா. உரை எழுதும் போது அல்குலை விட்டுவிட்டு ‘திதலை யல்குலென் மாமைக் கவினே’ என்ற வரிக்கு “ மாமைக் கவின் ; இது மகளிருக்கு பேரழகு பயப்பது; இதன் நிறம் மாந்தளிர், ஆம்பலில் நாருரித்த மெல்லிய தண்டு, ஈங்கையென்னும் கொடியின் தளிர், அசோகந்தளிர் என்பவற்றின் நிறத்தைப் போன்றது ; பசலை படர்ந்தால் இந்நிறம் அழிந்துவிடும்’ என உரை எழுதுகிறார்.

———

பசலை பாய்தெலென்னும் மெய்ப்பாடு

———

பசலை பாய்தலை, தலைவனின் பிரிவைத் தலைவி, தன் உடலில் வெளிப்படையாக தோன்றிய அறிகுறியாய் உணர்ந்ததால் இது மெய்ப்பாடென அழைக்கப்படும். பசலை படர்தலை அல்லது வெள்ளைப்படுதலை பெண்ணுடலின் இழிநிலையாக (abjection) பெண்ணால் உணரப்படுவதாக ஜூலியா கிறிஸ்தவா எழுதுவார். (பார்க்க: Kristeva, Julia. Powers of Horror: An Essay on Abjection. Translated by L.S. Roudiez, Columbia University Press, 1982.) தமிழண்ணல் தன் உரையில் தேமல் படர்ந்த அடிவயிற்றின் அடிப்பகுதி தலைவனுக்கோ தனக்கோ பயன்படாமல் வீணாவதாக தலைவி விசனப்படுவதாக உரை எழுதுகிறார். பென்ணுடல் யார் பார்வையில் இந்த இழிநிலையை அடைகிறது எனக் கவனித்தல் அவசியம். இக்கவிதையில் தலைவி தோழியிடம் தன்னுடலின் மெய்ப்பாட்டினை விவரித்தாலும் அது ஒரு வெளிப்பார்வையை தலைவி அகவயமக்கிக்கொண்டதால்தான் எனக் கருத இடமிருக்கிறது. 

———

தாய்மையின் இழப்பு

———-

‘கன்று முண்ணாது கலத்தினும் படாது’ பசுவின் சீம்பால் வீணாவதைத் தலைவி தன் பசலை படர்ந்த அல்குலின் நிலைமைக்கு உவமிப்பதால் இழப்பு பாலியல் கூடுகை மட்டுமல்ல, தாய்மையின், வளமையின், படைப்பின், உயிருருவாக்கத்தின் இழப்பையும் சேர்த்தே தலைவி கூறுவதாக பொருள் கொள்ள வேண்டும். பசுவின் பால் யாருக்கும் பயனற்று நிலத்தில் கொட்டியது போல மாநிற அல்குலின் பேரழகு பசலை படந்ததால் அழிந்தது. அந்த அழிவு உயிருருவாக்கமே அழிவதற்கு ஒப்பானது. 


Thursday, May 9, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-25

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-25

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி செவிலித்தாயிடம் சொன்னது, கட்டுவிச்சியை அவள் வினவிய வேளையில்

—-

இயற்றியவர்: கொல்லன் அழிசியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 26

திணை:  குறிஞ்சி

————-

அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை

மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை

பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்

தகாஅன் போலத் தான்றிது மொழியினும்

தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே

தேக்கோக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்

வரையாடு வன்பறழ்த் தந்தைக்

கடுவனு மறியுமக் கொடியோ னையே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

அரும்புத்தன்மை இல்லாமல் மலர்ந்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் மேலே வளர்ந்த பெரிய கிளையில் இருந்த மயிலானது அதன் மலரைக் கொய்யும் மகளிரைப் போலத் தோன்றுதற்கு இடமாகிய நாட்டையுடைய தலைவன், இவளுக்கு உரியனாகுந்த தகுதியிலானென்பது போல கட்டுவிச்சி, தெய்வத்தால் வந்ததென்று தீங்கானதைக் கூறினாலும், தேமாவின் கனியை உண்ணுகின்ற முள்ளைப் போன்ற கூரிய பற்களையும் செவ்விய வாயையுமுடைய மலைகளில் விளையாடும்,வலிய குட்டியின் தந்தையாகிய ஆண் குரங்கும் அந்தக் கொடியவனாகியத் தலைவனை அறியும்; ஆதலின் அது தன் கண்ணாற் கண்ட நிகழ்ச்சியை காணேனென்று பொய் சொல்லாதது.

————

வாசிப்பு

———

கவிதை எனும் எதிர்க்குரல்

———

தோழி இக்கவிதையில் குறி கூறும் கட்டுவச்சியின் தெய்வ வாக்குக்கு எதிராகப் பேசுகிறாள். ஆகையால் ஒரு எதிர்க்குரலாக இக்கவிதை மிளிர்கிறது. தெய்வவாக்கின் அதிகாரத்திற்கு எதிராக தோழி இரண்டு இயற்கைக் காட்சிளை இணைத்து சொல்கிறாள்; மனித உடல்கள் அந்த இரண்டு இயற்கைக் காட்சிகளின் பகுதிகளாக இருக்கின்றன. ஒன்று  அரும்புத்தன்மை இல்லாமல் மலர்ந்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் மேலே வளர்ந்த பெரிய கிளையில் இருந்த மயிலானது அதன் மலரைக் கொய்யும் மகளிரைப் போலத் தோன்றுவது; இரண்டு தேமாவின் கனியை உண்ணுகின்ற முள்ளைப் போன்ற கூரிய பற்களையும் செவ்விய வாயையுமுடைய மலைகளில் விளையாடும்,வலிய குட்டியின் தந்தையாகிய ஆண் குரங்கும் அந்தக் கொடியவனாகியத் தலைவனை அறியும் எனச் சொல்வது. அரும்பு முழுவதும் மலர்வதற்கு முன்பே பறித்து அணிந்துகொள்ளுதல் என்பது கவனிக்கத்தக்கது. தோழி முழு உண்மையும் (இன்னும் முழுமையாக மலராத) அறிவதற்கு முன்பாகவே தலைவியின் நோய் தெய்வத்தினால் ஏற்பட்டது எனக்கூறுவது தவறு என்பது அரும்பால் சுட்டப்பட்டது; அரும்பைக் கொய்யும் பெண்டிர் கிளையில் இருக்கும் மயிலைப் போல அழகாகவும் இருக்கலாம் ஆனால் உண்மையோ வேங்கை மரத்தின் கரிய், பெரிய கீழ்ப்பகுதியைப் போன்றது. 

உ.வே.சா வேங்கையின் பூவைக் கொய்து அதன் அழகைக் கெடுக்கும்  மகளிரைப் போல மயில் தோற்றினும் உண்மையில் அம்மரத்திற்கு  மேலும் அழகைத் தந்து அமைவது போல தலைவன் இப்போது இவளது நலமழியச் செய்தவனாக இருப்பினும் அவளை மணப்பான் என்பது குறிப்பு என்று எழுதுகிறார். திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கனும் பொ. வே. சோமசுந்தரனாரும் தங்கள் உரைகளில் இதை உள்ளுறை எனக் குறிப்பிடுகின்றனர்.

———-

குரங்கின் சாட்சி

———

குறி சொல்லும் கட்டுவச்சிக்கு எதிராக தோழி குரங்கு பார்த்ததை சொல்கிறாள். அது எப்படிப்பட்ட குரங்கு என்றால் கொக்கு மாமரத்தின் ( தேன் கொக்கு, தேமா, கொக்குக்காலி ஆகிய சொற்களால் குறிக்கப்படுவது) பழத்தை தன் கூரிய பற்களால் தின்கின்ற துவர் வாயை உடைய குட்டிகளுக்குத் தந்தையாகிய வலிய குரங்கு. அந்த தந்தைக் குரங்கு கொடியோனாகிய தலைவனை அறியும், அந்தக் கடுவன் குரங்கு பொய் சொல்லாதது. தலைவன் தகான் போல தீதுமொழிபவனாக இருந்தாலும், அக்கொடியோனைக் கடுவனும் அறியும்; ஆதலால் கடுவன் கண்டது பொய்க்காது என்பது இதனால் பெறப்படுகிறது. இந்த கவித்துவ தர்க்கம் பல சங்கக் கவிதைகளில் காணப்படுகிறது. இவற்றை வாசிக்கும்போது இயற்கையின் பகுதியாக இருப்பவற்றை கருத்துக்களை, உணர்வுகளைப் புலப்படுத்தும் குறிகளாக (communicative signs) வாசித்தார்கள் எனக் கருத இடமிருக்கிறது. மனிதர்களும் இய்றகையின் பகுதிகளாகவே கருத்தப்பட்டனர் என்ற உலக நோக்கும் (world view) இதனால் பெறப்படுவதாகிறது.

———

பொய்க்குவதன்றே எனும் அறுதியிடல்

——

தோழியின் ‘பொய்க்குவதன்றே’ எனும் அறுதியிடல் இந்தக் கவிதையின் உள்தர்க்கத்தின்படி எது உண்மை எது பொய் என கேட்போரை, இந்தக் கவிதையில் செவிலித்தாயை முடிவெடுக்கும்படி கோருகிறது. வாசகர்களாகிய நாமும் செவிலித்தாயின் இடத்தில் நின்று இக்கவிதையின் தர்க்கத்தை ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கை வைக்கப்படுகிறோம்.  இவ்வாறாக வாசக வெளியை இக்கவிதை வைத்திருப்பதால்தான் திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கனால் மலர்ந்த வேங்கையின் மேலோங்கிய சினையிலிருந்த தோகை, பூக்கொய் மகளிரைப்போன்று தோன்றினாற்போல, தலைவன் தன் நெஞ்சத்திடத்துப் பிறிது நினைத்திருக்கும் வெளித்தோற்றத்து வேண்டியன செய்வான்போற் காணப்பட்டான் என விரித்து உரை எழுத முடிகிறது.

———

பறள் என்றது குரங்கின் இளமைப் பெயர்

——-

அரும்பற மலர்தல், கருங்கால் வேங்கை, பூக்கொய்யும் பெண்டிர், பெருஞ்சினை யிருந்த தோகை மயில், தேக்கொக்கு, ஆகிய அழகிய காட்சிப்படிமங்களுக்கு இடையே  கூரிய பற்களும் செவ்வாயும் உடைய ஒரு குரங்குக் குட்டியும் ஒளிந்திருக்கிறது; அது அதன் தந்தையாகிய கடுவன் குரங்கைச் சொல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘வரையாடு வன்பறழ்த் தந்தை’ என்ற வரியில் வரும் பறள் என்ற சொல் குரங்கின் இளமைப் பெயரைக் குறிப்பதாகும். இது தொல்காப்பியம் மரபியல் சூத்திரம் ஒன்று, “பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே” என்பதால் அறியப்பட்டது. 

———————-

Tuesday, May 7, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-24

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-24

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 25

திணை:  குறிஞ்சி

————-

யாரு மில்லைத் தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

தினைத்தா ளன்ன சிறுபசுங்கால

ஒழுகுநீ ராரல் பார்க்கும்

குருகு முண்டுதான் மணந்த ஞான்றே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவர் வேறு ஒருவரும் இலர். தலைவனாகிய கள்வன் ஒருவன்தான் இருந்தனன்; தலைவன் அப்போது கூறிய சூளுறவின்று தப்பினால் நான் என்ன செய்வேன்? ஓடுகின்ற நீரில் ஆரல் மீனை உண்ணும் பொருட்டு அதன் வரவை எதிர்பார்த்து நிற்கும் தினையின் அடியைப் போன்ற சிறிய பசிய கால்களை உடைய நாரையும் இருந்தது.

———

வாசிப்பு

————-

தாம் என்ற பன்மையும் கள்வன் என்ற ஒருமையும்

———

தலைவனைத் தலைவி கள்வன் எனக் குறிப்பிடுவதை நாம் பல சங்கக் கவிதைகளில் வாசிக்கிறோம். தன்னைக் களவில் மணந்ததை நினைத்து பெருமிதம் கொள்ளும் தலைவி ‘தாம் மணந்த ஞான்றே’ என்று பன்மையில் தன்னைச் சொல்லிக்கொள்கிறாள் ஆனால் அதற்கு மனித சாட்சியில்லை என்பதாலும் அதை அவன் உறுதிப்படுத்துவானா என்ற ஐயப்பட்டினால் கள்வனாகிவிட்டபடியால் அவனை ஒருமையிலும் தலைவி அழைக்கிறாள். தலைவனைக் கள்வன் என்பது பல சமயங்களில் செல்லமாகவும், பல சமயங்களில் ஏசுதலாகவும் சங்கக் கவிதைகளில் பலவற்றில் வருகிறது. இக்கவிதையில் கள்வன் ஒருமையில் விளிக்கப்படுவதால் அவன் ஏசப்படுதலின் பொருட்டே ஒருமையில் அழைக்கப்படுகிறான். அவன் சொல்லியது பொய்க்கும் என்றால் ‘யான் எவன் செய்கோ?’ என்ற சொற்களில் தலைவியின் தன்னிலையின் பெருமிதம்  உடைந்து ஒருமையாகிவிடுகிறது.  ‘கள்வன்’ என்ற சொல் தலைவி தன்னை தலைவனின் அதிகாரத்திற்கு, அவனுடைய வலுவுக்கு ஒப்புக்கொடுத்து அதற்கு சாட்சியாய் ‘யாருமில்லை’ என உடைந்து போகிறாள். அவளுடைய தன்னிலையின் அடையாளம் மற்றவனின், தலைவனின் சொல்லை நம்பியிருக்கிறது அல்லது அந்த சொல்லின் உண்மையை நமபியிருக்கிறது. சொல்லின் உண்மை தரும் தலைவியின் தன்னிலையின் ஒருமை, சொல் பொய்யானால் சிதைந்துவிடும். 

——————

ஆரல் பார்க்கும் பசிய கால்களுடைய நாரை

——-

தலைவனும் தலைவியும் சேர்ந்திருந்த களவின் கூடுதல் ‘ஆரல் பார்க்கும் நாரை (குருகு) இருந்த இடத்தில் நடந்ததால் அந்த இடம் ஒரு நீர்த்துறை என அறியலாம். தலைவன் சூளுரைத்ததற்கு ஒரே சாட்சியாய் நின்றது பசிய நீண்ட கால்களை உடைய நாரை. அதுவோ ஆரல் மீன்களை மட்டுமே நோக்கிய கருத்தொருமையில் நின்றதால் தலைவன் கூறிய சொல்லைக் கவனமாய்க் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஏன் கேட்டிருக்கவே வாய்ப்பில்லை. ஆரல் பார்க்கும் நாரை என்ற  படிமம்  தலைவன் களவின் கண் கூடியதால் அவன் கவவனமும் கூடுதலில் மட்டுமே இருந்தது என்பதையும் சொல்கிறது. ஆகவே அவனுடைய சூளுரை பொய்யாக அதிகமும் வாய்ப்பிருக்கிறது; எனவேதான் அவன் கள்வன் எனவும் அழைக்கப்படுகிறான். 

——-

பேசப்படாததன் வன்முறை

———

குருகு ஆரல் மீனை எதிர்நோக்கிக் காத்திருப்பது வர இருக்கிற அபாயத்தை சொல்வதாகவும் வாசிக்கலாம். நீரின் அடியோட்டமாக பேசப்படாதது இக்கவிதையில் இருக்கிறது. ஒன்றையொன்று  காத்திருந்து வேட்டையாடித் தின்னும் இயற்கையின் உலகு ஆரல் பார்க்கும் நாரையால் சுட்டப்பட்டது.  அந்த இயற்கையின் வன்முறை கவிதையில் பேசப்படாததாக, அடியோட்டமாக காணப்படாததாக இருக்கிறது. நாரையின் நீண்ட பசிய கால்கள் குறிப்பிடப்படுவதாலும்  நாரையின் படிமம் இயறகை உலகை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கிறது. அதற்கு எதிராக பண்பாட்டு உலகு களவு, கூடுகை, சூளுரை ஆகியவற்றால் கவிதையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

——

உம்மையின் இழிவுச் சிறப்பு

——————


கவிதையின் கடைசி வரியில் வரும், ‘குருகு முண்டு’ என்பதிலுள்ள உம்மை இக்கவிதையில் இழிவுச் சிறப்பு பெறுகிறது. அதாவது குருகு இருந்தும் சாட்சியாவதற்குத் தகுதி பெற்றதாய் இல்லை என்பதை உம்மை விகுதி சொல்கிறது. ‘செய்கோ’ என்ற சொல்லில் உள்ள ஓகார அசைநிலையையும், ‘ஞான்றே’ என்ற சொல்லில் உள்ள ஏகார அசைநிலையையும் கூடவே கவனிக்க வேண்டும். என்னை பிறரறியாதவாறு கவர்ந்த களவன் அவன் சொல்லியபடி செய்யவில்லை. அவனுடைய சொல்லுக்கும் செயலுக்கும் சாட்சியாய் நின்றது அங்கேயிருந்த தகுதியில்லாத நாரை ஒன்றே. இதற்கு நான் என்ன செய்வேன் என்று தலைவி தோழியை நோக்கி வினவுகிறாள். 




Monday, May 6, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-23

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-23

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: பரணர்

குறுந்தொகையில் பாடல் எண்; 24

திணை:  முல்லை

————-

கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்

என்னை யின்றியுங் கழிவது கொல்லோ

ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்

தெகுளிறு மிதித்த வொருபழம் போலக்

குழையக் கொடியோர் நாவே

காதல ரகலக் கல்லென் றவ்வே.

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

கரிய தாளையுடைய வேப்பமரத்தினது ஒள்ளிய பூவின் புது வருகையானது என்னுடைய தலைவன் இல்லாமலும் செல்வதுவோ? என் காதலர் என்னை நீங்கிச் செல்ல, ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த, வெள்ளிய கொம்புகளையுடைய அத்திமரத்தினது, உண்ண விரும்பிய ஏழு நண்டுகளால் மிதிக்கப்பட்ட ஒற்றைப்பழமானது குழைவது போலக் குழைய, நான் வருந்தும்படி அயலாராகிய கொடிமகளுருடைய நாக்கள் அலர் கூறிக் கல்லென்று முழங்கின. 

———-

வாசிப்பு

———

காதல், வலுவற்றமென்நிலை, இன்மையின் எடை

———-

இந்தக் கவிதை காதலியோடு காதலன் இல்லாதது எந்தவகையான வலுவற்றமென்நிலையைக் காதலிக்கு ஏற்படுத்தும் என்பதை ஒரு அழகிய படிமத்தோடும், அவளுடைய அகப் பதற்றத்தினைச் சொல்லும் குறிப்போடும் அவள் எந்தவகையான ஊராரின் குரூர சொற்களை எதிர்கொள்கிறாள் என்பதையும் சேர்த்துச் சொல்கிறது.  


‘கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்’ என்ற முதல் வரியில் உள்ள ‘யாணர்’ என்ற சொல் இளவேனிலில் வேப்பமரம் தழைத்துப் பூத்துக் குலுங்குவதைக் குறிப்பிடுவதாக தமிழண்ணல் உரை எழுதுகிறார். பாண்டியரும் அவர் படையும் சூடி நின்ற சிறப்பால் வேம்பூவை ‘ஒண் பூ’ என்றாள் என இரா. இராகவையங்கார் விளக்கமளிக்கிறார். கருங்கால் வேம்பு என்றது வேப்பம் பூவிற்கு எதிராக வேப்பமரத்தின் கருமையான நடுமரத்தை நிறுத்தியது பிரிவாற்றாமையினால் விளைந்த பூக்கள் என்பதைக் குறிப்பிடவாகும். 


‘என்னை யின்றியுங் கழிவது கொல்லோ’ - என்பதில் ‘கொல்’ என்பது ஐயப்பட்டு வந்து இடைச்சொல், ‘ஓ’ என்பது அசைநிலை. ‘என்னை’ என்பது தலைவனை என்று விளக்கம் எழுதுகிற உ.வே.சா. குறுந்தொகையில் பல பாடல்களில் தலைவி ‘என்னை’ என்று தலைவனைக் குறிப்பதை காணுமாறு அறிவுறுத்துகிறார். வேப்பம் பூக்கள் மலரும் இளவேனில் காலத்தில் என்னோடு இருக்க வேண்டிய தலைவன் என்னை விட்டு நீங்கி எப்படிச் சென்றான் எனத் தலைவி வினவுகிறாள்; ‘கொல்’ என்பது இரங்கற் குறிப்பும் ஆகையால் அவள் துயரத்திலிருப்பதும் தெரிகிறது. 

————

ஏழு நண்டுகள் மிதித்தொரு அத்திப் பழம்

—————

ஆற்றங்கரையில் ஏழு நண்டுகள் மிதித்துக் குழைந்த அத்திப்பழம் போலக் கிடப்பதாகத்  தலைவி தன்னைச் சொல்லிக்கொள்வது அக்கவிதையிலுள்ள அழகான படிமம். மரத்திலிருந்து விழுந்தது வரை

தலைவியின்  சுய-உணர்வு ஒரு பேரழிவுகரமான மாற்றத்திற்கு உட்படுகிறது. ஒரு காலத்தில் மரத்தின் மீது உயரமான இடத்தில்  இருந்த  அத்தி, இப்போது எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக, நண்டுகளின் கால்களில் கூட மிதிக்கப்படக்கூடிய இடத்தில் உள்ளது.  இங்கே எழு என்பது பலவென்பதைக் குறிக்கும் வாய்பாடு என உ.வே.சா.விளக்கமளிக்கிறார். ஜூலியா கிறிஸ்தவா அத்திப்பழம் குழைந்து முசிந்து கிடப்பது போன்ற பென்ணின் நிலைமைகளை விளக்கும்போது அதை இழிநிலைமை  ( abjection) என அழைக்கிறார். (பார்க்க: Kristeva, Julia. Powers of Horror: An Essay on Abjection. Translated by L.S. Roudiez, Columbia University Press, 1982.) கிறிஸ்தவாவின் இழிநிலை எனும் கருத்தாக்கம் பென்ணின் பாதுகாப்பு எல்லைகள் முழமையாக அழிக்கப்படுவதைக் குறிக்கிறது. கிறிஸ்தவா பெண்ணிற்கு இந்த நிலைமை தாய்மையடைதலின்போதும், மகப்பேறின் போதும் ஏற்படுவதாக விவரித்தாலும் பெண்களின் உளவியல் நிலைகளில் ஆரம்ப நிலை ஒடுக்குதல்களைச் சொல்லும் ஒரு மனோநிலை பற்றிய கருத்தாக்கமாகவும் கருதப்படுகிறது. முசிந்து போதல், அழுகுதல், அழிவுறுதல் போன்ற நிலைகளை அருவருப்பான அனுபவமாக உணர்தலையும் கிறிஸ்தவா விளக்குகிறார். இந்தக் கவிதையில் நண்டுகள் மிதித்துக் குழையும் அத்தி எனும் படிமம் அவள் தன் இழிநிலையை அருவருப்பான அனுபவமாக உணர்தலை எடுத்துச் சொல்கிறது.

———-

கொடியோர் நாவின் தாக்குதல்

———

ஏற்கனவே தலைவனைப் பிரிந்த துயரிலும் அச்சத்திலும் இருக்கும் தலைவி, தன்னைக் குழைந்து நசிந்து இழிநிலையில் இருப்பதாகக் கருதிக்கொள்ளும் தலைவி கொடியோர் நாக்குகளாலும் அவமதிக்கப்படுவதை நினைத்து வருந்துகிறாள். கொடியோரென்பது உயர்திணை இருபாபாற் பொதுப் பெயரென்றாலும் தொழிலால் ஆணொழித்தது என்று விளக்கமெழுதும் உ.வே.சா. கொடிமகளுடைய நாக்கள் என பெணகளின் நாக்குகளே தலைவியைப் புறம் பேசும் என உரை எழுதுகிறார்.  தலைவன் பிரிவினால் தலைவி வேறுபட்டிருத்தலை எடுத்துக்கூறிப் பழித்தல் கல்லென்றல் என அழைக்கப்பட்டது. கொடியமகளிரின் நாக்குகள் அலர் கூறி கல்லென்று முழங்கின. 



Saturday, May 4, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-22

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-22

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி அகவன் மகளிடம் கூறியது

—-

இயற்றியவர்:  ஔவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 22

திணை:  பாலை

————-

அகவன் மகளே யகவன் மகளே

மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்

அகவன் மகளே பாடுக பாட்டை

இன்னும் பாடுக பாட்டே, அவர்

நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டுவிச்சியே, சங்கு மணியினாலாகிய கோவையைப் போன்ற  வெண்மையாகிய, நல்ல நீண்ட கூந்தலையுடைய அகவன் மகளே பாட்டுக்களைப் பாடுவாயாக, நீ பாடிய பாட்டுக்களுள் அவருடைய நல்ல நெடிய குன்றத்தைப் புகழ்ந்து பாடிய பாட்டை மீண்டும் பாடுவாயாக. இவள்பால் அன்பு பூண்ட தலைவருடைய குன்றத்தைப் பாடின் இவளது வேறுபாடு நீங்கும்

—————-

ஓதுதல் போலத் திரும்பச் சொல்லுதல்

—————-

கவிதையின் தொடக்க வரி, "அகவன் மகளே யகவன் மகளே", ஒரு மந்திரம் போன்ற லயத்தைக் கொண்டு  பெண் மீது கவனத்தைக் குவிக்கிறது. திரும்பத் திரும்ப கூறுவது மொழியின் மீது பயன்படுத்தப்படும் தேர்ச்சியின் முதல் வடிவம்; இது கட்டமைக்கப்பட்ட அர்த்தத்தை விட மொழிக்கு முந்தைய, உடலின் இருப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. ‘அகவன் மகளே’ என்ற விளியை  உ. வே. சாமிநாதையர்  தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டவிச்சியே என்றும்   திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் வெறியாடும் மகளே என்றும் வேலனை அழைக்கும் மகளே என்றும் உரை எழுதுகின்றனர். இந்தக் கவனம் பெண்ணின் தலைமுடியைப் பற்றிய விவரிப்புடன் தொடர்கிறது.   ‘மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்’ - சங்குமணியினாலாகிய கோவையைப் போன்ற நல்ல நீண்ட கூந்த்லை உடைய  என அவளது கூந்தலைச் சொல்லி  முக்கியத்துவம் கொடுப்பது,  அவளுடைய தொன்மையையும் அதனால அவளுடைய சொல்லுக்கு இருக்கும் ஆதி வலுவையும் குறிப்பதாகிவிடுகிறது.

———-

பெண்ணின் உடலும் சொல்லும்

———

அகவன் மகளின் தலை முடி பற்றிய விவரிப்பால், அந்த முதிய பெண்ணின் பௌதீக  உடலில் தெய்வீக சக்தியைக் காண்பதற்கான  முகாந்திரம் நிறுவப்படுகிறது; ஆனால் அவள் பாட இருக்கும் சொல்லே அவளுடைய ஆதி சக்தியை வெளிப்படுத்தும் வல்லமை உடையதாகவும் கவிதை சொல்கிறது. பௌதீக உடல் குறியியல் தளத்திலும் (semiotic field) அவள் சொல் குறியீட்டுத்தளத்திலும் ( symbolic plane ) இயங்குவதாக கவிதை சொல்வதாக நாம் வாசிக்கலாம். குறியியல் தளத்திற்கும் குறியீட்டுத்தளத்திற்கும் இடையிலான பாலமாகவும் அவள் பாட்டு கருதப்படுவதாகவும் கவிதையை வாசிக்கலாம். எவா வில்டன், டி.வி.கோபாலய்யர் முதிய பெண்கள் தங்கள் கூந்தலை முடியும் வழக்கம் அப்போதில்லை எனவே அவள் கூந்தல் ‘மனவு’ என குறிப்பிடப்படுகிறது என விளக்கமளித்ததாகப் பதிவு செய்திருக்கிறார். 

——

குன்றம் பாடிய பாட்டு

———

தலைவியினுடைய காம நோயினை அறியாத தாயர் அவளிடத்தில் தோன்றியுள்ள வேறுபாட்டை அறிய அகவன் மகளாகிய கட்டுவிச்சியை அழைத்துக் கட்டுப்பார்ப்பது வழக்கம். கட்டுவச்சி முறத்தில் நெல்லையிட்டு அதனை எண்ணி அதனால் சில நிமித்தங்களை அறிந்து ‘இவள் முருகனால் அணங்கப்பட்டாள்’ என்று கூறுவாள். அது கேட்ட தாயர் வேலனை அழைத்து வெறியாட்டெடுப்பர். இந்த வழக்கத்தைப் பின்பற்றித் தோழி மும்முறை அகவன் மகளை விளித்து தான் கூறும் கூற்றின் உண்மையை கூர்ந்து அறியும் பொருட்டு பாடுக என்றாள். ஏற்கனவே குறிப்பிட்டது போல ‘மனவுக்கோப்பென்ன’ என்றது அவள் அணிந்த அணியையே அவள் கூந்தலுக்கு உவமை கூறியதால் அகவன் மகள் நரை மூதாட்டியென்பது பெறப்பட்டது.  மலைவாழ்சாதினளாகிய அகவன் மகள் தான் கண்ட மலைகளின் வளத்தைப் பாடுவது இயல்பாதலலில் அவள் மலைவளங்களைப் பாடுவாள்; தலைவனது ‘நன்னெடுங் குன்றத்தின்’ வளத்தைக் கேட்பதில் தலைவிக்கு பெருவிருப்பம் உளதால் அதை மீண்டும் பாடென்றாள். நன்னெடுங் குன்றம் எனும் நிலப்பகுதி தலைவனுக்கு பதிலீடாக இக்கவிதையில் நிற்பது இக்கவிதையின் சிறப்பு.  இக்கவிதையில் பேசுவதும் கேட்பது பெண்கள் எனினும் பேசப்பட, பாடப்பட இருப்பது, ஆண் என்பதும், அப்படிப் பேசப்பட இருப்பது விரும்பப்பட இருப்பதாகவும் அறியப்பட இருப்பதாகவும் சொல்வது மொழியும் ஆசையும் எப்படி குறியீட்டுத்தளத்தில் இயங்குகின்றன என்பதையும் நமக்குச்  சொல்கின்றன. 


Friday, May 3, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-21

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-21

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவியிடம் கூறியது

—-

இயற்றியவர்:  சேரமானெந்தை

குறுந்தொகையில் பாடல் எண்; 22

திணை:  பாலை

————-

நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய

யாரோ பிரிகிற் பவரே சாரற்

சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து

வேனி லஞ்சினை கமழும்

தேமூ ரொண் ணுத னின்னோடுஞ் செலவே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

சிலம்பு அணி கொண்ட மலைப்பக்கமானது தனக்கு அழகாகக்கொண்ட வலமாகச் சுரித்த வெண் கடப்ப மலரையுடைய வேனிற் காலத்தில் மலர்ந்த அழகிய கிளையினிடத்தில, நன் மணம் பரவிய விளக்கத்தையுடைய நெற்றியையுடையாய் துயரத்தினால் நீர் சொரியும் கண்ணை உடையாயாகி நீ இங்கே தனியாகத் தங்க நின்னைப் பிரிந்து செல்லும் ஆற்றலுடையவர் யாவர்? தலைவன் செல்லுதல் நின்னோடே ஆகும்.

——-



குறியியல் ஒழுங்கின்  சீர்குலைவு, அதன் சாத்தியமான மீள் ஒருங்கிணைப்பு

——-


இந்த சிறுகவிதை, அதன் சாதாரண படிமத்துடனும் உணர்ச்சிகளில் ஏற்படுகிற  மாற்றங்களுடன் ஒரு குறியியல் ஒழுங்கின் சீர்குலைவையும் அதன் மீள் ஒருங்கிணைப்பிற்கான சாத்தியப்பாட்டையும் சொல்கிறது. ஜூலியா கிறிஸ்தவா கவிதையில் குறியியல் ஒழுங்கின்  சீர்குலைவு  மொழிக்கு முந்தைய சக்தியினால் ஏற்படுவதாகவும் அதே சமயம் குறியீடானது சமூக ஒழுங்கினையும் அதன் மொழியையும் குறிப்பதாகவும் விவரிப்பார். (பார்க்க: Kristeva, Julia. Revolution in Poetic Language. Trans. Margaret Waller. New York: Columbia University Press, 1984) .  இந்தக் கவிதை இந்த இரண்டு மொழிவிசைகளுக்கான மோதலை உண்ர்ச்சியின் அக மோதலாக  ஆராய்ந்து இறுதியில் அவை இரண்டும் சேர்ந்து ஒருங்கிணைந்து இருப்பதற்கான சாத்தியப்பாட்டினைச் சொல்கிறது. 


இதில் குறியியல் ஒழுங்கின் சீர்குலைவைச் சொல்வது தலைவியின் நெற்றியைப் பற்றிய சித்தரிப்பு. கடைசி வரியில் ‘தேமூ ரொண் ணுதல்’ என்றது தலைவியின் வாசனையை விரும்பி வண்டுகள் மொய்க்கும் நெற்றியையுடைவள் என்று உ.வே.சா. பொருள் கொள்ளச் சொல்கிறார். ஆற்றாமை மிக்க தலைவி, ‘யாரோ பிரிகிற்பவரே’ என்று தோழி கூறிய மாத்திரத்தில் துயர் நீங்கித் தலையெடுத்து நிமிர்ந்து நோக்கினாளாக, நெற்றியின் விளக்கங்கண்ட தோழி, ‘தேமூரொண்ணுதல்’ என விளித்தாள்.


ஒரு பெண்ணின் அழகை, உனது நெற்றி வண்டுகள் மொய்ப்பதற்கு ஏற்றாற்போலுள்ளது  என்றது சீர்குலைக்கும் அழகு என்றே அழைக்கப்படமுடியும். அதோடு துயரத்தினால் நீர் சொரியும் கண்ணை உடையாயாகி நீ (  நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய) என்பதும் சேரும்போது அங்கே முழுமையாக சீர்குலைந்த தலைவியின்  சித்திரம் ஒன்று தீட்டப்படுகிறது.

———-

இழப்பு பற்றிய பயத்தினால்  ஏற்பட்ட உருமாற்றம்

——-

நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய என்ற வரி இழப்பின் சோகத்தை தலைவியின் உடலில், கண்ணீரில் எழுதுகிறதென்றால், யாரோ பிரிகிற் பவரே என்ற வரி உன்னை யார் தான் பிரிய முடியுமென வினவுகிற அதே நேரத்தில் பிரிந்து விடுவாரோ என்ற பயத்தின் சோகத்தினை அவள் அகத்தில் எழுதுகிறது. வண்டுகள் மொய்க்க சாத்தியமுடையதாய் இருக்கும் நெற்றி என்பது இழப்பு பற்றிய பயத்தினால் ஏற்பட்ட உருமாற்றமென்பது தெளிவாகிறது.

——-

மீள் சேர்க்கைக்கான சாத்தியப்பாடு

——

குறியியல் சீர்குலைவை முதலில் சித்தரித்த கவிதை, தோழியின் கூற்றில் அதே சீர்குலைவை, ‘சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து’ என்ற வரியில் மீண்டும் குறியீட்டு ஒழுங்கிற்குள் (symbolic  order) கொண்டு வந்து தலைவனும் தலைவியும் சேர்வதற்கான சாத்தியப்பாட்டினைச் சொல்கிறது.  அதாவது எது சீர்குலைவின் சித்திரமாய், வண்டுகள் மொய்க்கக்கூடிய நெற்றியாய் சொல்லப்பட்டதோ அதுவே மலைச்சரிவினிலுள்ள கடம்ப மரக்கிளைகளின் பகுதியான பூக்களாய் சொல்லப்படுகிறது.  வலஞ்சுரியென்றது, பூவிற்கு அடை; மராம் என்பது ஆகுபெயர் அது இளவேனிலில் மலருமென்பது.  உ.வே.சா. “நெடுங்கான் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி, வலஞ்சுரி வாலிணர்கொய்தற்கு நின்ற” என்ற ஐங்குறுநூறு பாடலையும் மேற்கண்ட தலைவனும் தலைவியும் மீள் சேர்வதற்கான சாத்தியப்பாட்டை உணர்த்தும் விதமாக சான்றுரைக்கிறார். 

——-

யாரோ என்பது ஒருவருமிலரென்னும் பொருளில் வந்தது

———

ஒண்ணுதல், நீ ஒழியப் பிரிகிற்பவர் யார், தலைவன் செல்லுதல் நின்னோடே ஆகும், நின்னைப் பிரிந்து செல்லான் என்று தோழி தலைவிக்கு நல்லுரை கூறுதல் இக்கவிதையின் முடிபாகக் கருதலாம்

‘யாரோ பிரிகிற் பவரே’ என்ற வரியில் யாரோ என்பது ஒருவருமிலரென்னும் பொருளில் வந்தது என்பது கவனிக்கத்தக்கது.

பாலைத் திணைப்பாடல்களில் பிரிவாற்றாமையினால் மொழி முந்தைய உந்துதல் ( இதை ஜூலியா கிற்ஸ்தவா chora என்றழைப்பார்) ஒரு சீர்குலவை வர்ணிப்பதையும் அது ஒருங்கே மீட்டெடுக்கப்படுதலையும் வாசிக்கலாம். 



Thursday, May 2, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-20

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-20

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்:  ஓதலாந்தையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 21

திணை:  முல்லை

————-

வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு

பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்

கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்

கானங் காரெனக் கூறினும்

யானோ தேறேனவர் பொய்வழங் கலரே.

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

வண்டுகள் தேன் உண்ணுதற்கு வந்து வீழும்படி, செறிந்து மலர்ந்த நீட்சியுடைய பூங்கொத்துகளைத் தழைகளின் இடையே மேற்கொண்டு பொன்னாற் செய்த அணிந்துகொள்ளுதற்குரிய தலையணிகளைக் கோர்த்துக்கட்டிய, மகளிருடைய கூந்தலைப் போன்ற, கண்ணுக்குத் தோன்றுகின்ற புதிய பூக்களையுடைய கொன்றைமரங்களையுடைய காடானது, இது கார்ப்பருவமென்று கூறினும் நான் தெளியேன் ஏனென்றால் தலைவன் பொய்மொழி கூறாதவன். 

——

கொன்றை மகளிரைப் போலத் தோன்றினும் மகளிரல்ல

——-

இயற்கை தன் பருவத்தைப் பற்றி என்றேனும் பொய் சொல்லுமா? இந்தக் கவிதையில் தலைவிக்கு இயற்கை பொய் சொல்கிறது; அப்படி பொய் சொல்வதாக அவள் சொல்கிறாள். கார் காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவன் இன்னும் திரும்பவில்லை ஆனால் கார் காலத்தின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் கானகத்தில் தோன்ற ஆரம்பித்துவிட்டன. ஒன்று கானகம் பொய் சொல்ல வேண்டும் அல்லது தலைவன் பொய் சொல்லியிருக்க வேண்டும். தலைவியின் காதல்நம்பிக்கையைப்  பெற்ற தலைவனோ ‘பொய் வழங்கலரே’ எனவே கானகம்தான் பொய் சொல்லியிருக்க வேண்டும்; தலைவி உண்மையில் கார் காலம் வரும் வரை அவன் சொல் பற்றி அவனுக்காகக் காத்திருப்பாள். ‘புதுப்பூங் கொன்றைக் கானங் (கானகம்) கார் என்று கூறினும். தலைவி இயற்கையின் சமிக்ஞைகளை என்னைப் போல இன்னும் பல நவீன சம காலத்திய கவிஞர்களைப் போல சித்தபிரமையின் பாற்பட்ட பருவநிலை அறிக்கையை (paranoid seasonal weather report) முன்வைக்கவில்லை. தலைவி தன் காதலனின் சொற்களுக்கு காதல் உண்மையின் உயர் ரக அதிகாரத்தைக் கொடுக்கிறாள். தன் வாதத்தை வலுப்படுத்த அவள் கூறுவதை உ.வே.சா. பொன்னாற் செய்த தலையணிகளைக் கோர்த்துக்கட்டிய  மகளிரின் கூந்தலைப் போன்ற புதிய பூக்களையுடைய கொன்றை மரங்கள் உண்மையில் மகளிரில்லைதானே அது போல வந்துவிட்ட கார்காலத்துக்கும் அவை சமிக்ஞைகளல்ல என விளக்கமளிக்கிறார். 

———

காதலில் காத்திருத்தலின் அழகியலும் குறியியலும் (The semiotics and aesthetics of waiting in love)

———

ஓதலாந்தையாரின் இந்தக் கவிதையைப் போன்ற முல்லைத் திணை சங்கப் பாடல்கள் இருத்தலையும், இருத்தலின் நிமித்தத்தையும் பேசுகின்றன. இருத்தலும் இருத்தலின் நிமித்தமும் காதலில் காத்திருக்கையில் நீண்டுகொண்டே போகின்றன; அப்போது இயற்கையின் சமிக்ஞைகள் ஒன்று தவறாக இருப்பதாக புரிந்துகொள்ளப்படுகின்றன இல்லையென்றால் சமிக்ஞைகள் பேசா நிற்கின்றன. பேசும் இயற்கையின்  படிமங்களைத் தன் கவிதைகளில் சதா குறிப்பிடும் சங்கக் கவிதைகளுள் காத்திருத்தலின் அழகியலைச் சொல்லும் முல்லைத் திணை கவிதைகள் இயற்கை பேசாத எதிர் உலகத்தைக் கட்டமைப்பதாக வாசிக்கலாம். முல்லைத் திணையைச் சார்ந்த கவிதைகளுனூடாகவே இவ்வாறாக சங்கக்கவிதைகளின் அமைப்பாக்கம் (sturucture in the structuralist sense) நமக்குத் தெரியவருவதாக இருக்கிறது.  

———————

இயற்கையே பெண்மையின் உருவகமாக

———————

புதுப்பூ என்றதால் பருவம் தொடங்கியதைச் சொல்ல வேண்டும்; கொன்றை மரத்திற்கு மகளிரும் , தழைக்கு அவர் கூந்தலும், பூங்கொத்திற்கு பொன்னிழையும் உவமிக்கப்படுகின்றன. இய்றகையே பெண்மையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது எனக் கொண்டால் அந்த உருவகம் அதன் செழுமையில் அதன் விகசிப்பில் பேசும் தலைவியின் உடலின் நீட்சியாகிறது. மழை வருவதைப் பற்றி, கார் காலம் வருவதைப் பற்றி கிசுகிசுப்பது உடலா, இயற்கையா? 

———

பருவகால சுழற்சிகளும் குறியியல் மாற்றமும்

———


கவிதை இரண்டு குறியியல் அமைப்புகளுக்கு இடையே ஒரு முரணை முன்வைக்கிறது. முதலாவது இயற்கை உலகம்: பூக்கும் மரங்கள், சலசலக்கும் தேனீக்கள், வரவிருக்கும் மழையின் கிசுகிசுப்புக்கள். இந்த அறிகுறிகள் உடனடி பருவ சுழற்சி மாற்றத்தைக் குறிக்கின்றன. இரண்டாவது குறியியல் அமைப்பு மனித அனுபவத்திலிருந்து வெளிப்படுகிறது, குறிப்பாக காதலமும்  அவனின் வார்த்தைகளில் அசைக்க முடியாத நம்பிக்கையும். இது இன்னொரு  குறியியல் புலமாகும், அங்கு அன்பின் குறிப்பான்கள் இயற்கையில் காணக்கூடிய மாற்றங்களைக் காட்டிலும் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றனவாக இருக்கின்றன. 

கொன்றை மரங்கள் தொடக்கத்தில், எதிர்பார்க்கப்படும் மழைக்காலத்துடன் வாழ்க்கையின் வளர்ச்சியை, மாற்றத்தை உறுதியளிக்கும் அறிகுறிகளாக செயல்படுகின்றன. இருப்பினும், காதலனின் இருப்பு - கவிதையில் காணப்படாதது - இந்த வெளித்தோற்றத்தில் நிறுவப்பட்ட குறியீட்டை சீர்குலைக்கிறது. இயற்கை, பண்பாடு அல்லது மனித உலகு ஆகிய இரண்டு குறியியல் உலகங்களுக்கு இடையிலான போராட்டங்களாக, முரண்களாகவே குறுந்தொகைக் கவிதைகள் முழுக்க காதலுணர்வின் வெளிப்பாடு சௌந்தர்யம் கொள்கிறது. இயற்கையுலகு   வெல்கிறதா, மனித உலகு வெல்கிறதா அது நடக்கும் திணைக்களம் எது என்பதை நாம்தொகுக்கும்போது நமக்கு பழந்தமிழரின் அகக் கவிதையியல் என்ன என்பது பற்றிய முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கும்; அப்படிக் கிடைக்கும் சித்திரத்தை நாம் நமது பாரம்பரியமாக வரித்துக்கொள்ளவேண்டும்.  முல்லைத் திணையின்பாற்பட்டு மனித விழைவை இயற்கையின் சமிக்ஞைக்கு  மீறிய முக்கியத்துவமுடையதாய் காட்டும் இக்கவிதையை முழுசித்திரத்தை நோக்கிய தூரிகைத் தீற்றுதலாய் குறித்தல் அவசியம். 


Wednesday, May 1, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-19

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-19

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்:  கோப்பெருஞ்சோழன்

குறுந்தொகையில் பாடல் எண்; 20

திணை:  பாலை

————-

அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து

பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்

உரவோ ருரவோ ராக

மடவ மாக மடந்தை நாமே.

—————-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழியே, அருளையும் அன்பையும் துறந்து தன் துணைவியை விட்டு பொருள்தேடும் முயற்சியின் பொருட்டு பிரியும் செயலையுடைய தலைவன் அறிவுடையவனாயின் அவ்வாற்றலையுடையோர் அறிவுடையவர் ஆகுக, அவனைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றலில்லாத நாம் அறிவிலேம் ஆகுக.

——

வாசிப்பு

——-

கூற்றும் கேட்போரை தன்னிலையாக்கம் செய்தலும்

————

இந்தக் கவிதை போல படிமங்கள் இல்லாத நேரடியான கவிதைகள் மொழியின் வேறு பல இயங்குதளங்களை ஆராய உதவியாக இருக்கின்றன. தலைவி தோழியிடம் கூறியது என்பதை உ.வே.சா. இன்னும் விளக்கமாக ‘செலவுணர்த்திய தோழிக்கு கிழத்தி உரைத்தது’ (செலவு- தலைவன் பொருள்வயிற் பிரிதல்) எனக் கூற்றின் தனமையை விர்த்து சொல்கிறார். ‘மடந்தை நாமே’ என்ற கவிதையின் இறுதி சொற்கள் தோழியையும் தலைவியைப் போலவே மடந்தை என கட்சி கட்டி சேர்த்துக்கொள்கிறது. கூற்று எவ்வாறாக யாரை நோக்கி எப்படி பேசப்படுகிறது என்பதை வைத்தே கேட்போரின் தன்னிலையாக்கம் (subjectivity) கட்டமைக்கப்படுகிறது. (பார்க்க: Silverman, Kaja. The Subject of Semiotics. Oxford University Press, 1983.) ‘மடந்தை நாமே’ என்ற  சொற்கள் அங்கதத்துடன் கூடிய தொனியில் சொல்லப்பட்டதால் அதில் ஒரு தோழமையின் கண் சிமிட்டல் இருக்கிறது; மடந்தை என்பதற்கான நேர் எதிரான பொருளைக் குறிக்கிறது; தோழி தலைவியின் வலியைப் பகிர்ந்துகொள்வாள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.  

————

தெரிவுகளின் மாயத்தோற்றங்கள்

———

இந்தக் கவிதை இரண்டு எதிரெதிர் பாதைகளைக் கட்டுகிறது. ஒன்று பொருளீட்டும் ஆசையால் பிரிதல் இன்னொன்று இதயத்தின், காதலின் பொருட்டு பிரியாது சேர்ந்திருத்தல். “அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து, பொருள்வயின் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக” எனும் போது தலைவனை பொருளுக்காக பிரிந்து செல்லும் அவன் வலுவுடையன் எனில் (உரவோர் ஆயின்) அவனே வலுவுடையவனாக இருக்கட்டும் என கசப்பின் தொனியில் சொல்கிறாள். மடந்தை நாமே என்பதற்கு எதிரானதாக ‘உரவோர் உரவோர் ஆக’ என்பது சொல்லப்பட்டதால் உரவோர்  புத்திசாலிகளும் ஆவர் என பொருளைச் சுட்டி அதற்கு நேரெதிராக முட்டாள்கள் என்ற அர்த்ததைத்க் கடத்திவிடுகிறது. கூற்றின் நாடக தொனி எப்படி தெரிவுகளின் மாயத்தோற்றங்களை உடனடியாகச் சொல்லிவிடும் என்பதற்கு இது ஒரு நல்ல எளிமையான சான்று. 

————-

அன்பும் அருளும்

—————

பொருள்வயின் பிரிந்து செல்லும் தலைவனை ஏசுகின்ற கவிதையில் வரும் முதல் வரியான “அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து” என்பதை எப்படிச் சரியாக புரிந்துகொள்வது? உ.வே.சா அருள் என்ற சொல்லுக்கு தம்மோடு ஒரு தொடர்பும் இல்லாதார் மாட்டும் அவர் துயரங் கண்டதால் உண்டாகும் இரக்கம் என்றும் அன்பு என்ற சொல்லுக்கு தொடர்புடையாரிடத்தும் தன்னாற் புரக்கப்ப்டுவார் மேலும் உளதாகிய காதல் எனவும் உரை எழுதுகிறார். அன்பினின்றும் அருள் உண்டாகுதல் தோற்றும் முறை; அருளின் பின் அன்பு நீங்குதல் நீங்கும் முறை. காதலியின் மேல் அன்பில்லாமல் பொருளுக்காக பிரிந்து செல்லக்கூடியவனுக்கு அருளும் வசப்படாது என்பது உட்குறிப்பு; அந்த உட்குறிப்பினுள் இருக்கிற சோகமும் கசப்புமே இந்த எளிய சொற்களைக் கவிதையாக்குகின்றன. 


 


Monday, April 29, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-18

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-18

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது

—-

இயற்றியவர்:  பரணர்

குறுந்தொகையில் பாடல் எண்; 19

திணை:  மருதம்

————-

எவ்விழந்த வறுமையாழ்ப் பாணர்

பூவில் வறுந்தலை போலப் புல்லென்

றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத்

தெல்லுறு மௌவனாறும்

பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

நெஞ்சே, மனைப்படப்பையிலுள்ள மரத்தின் மீது படர்ந்த, ஒளியையுடைய முல்லை மலர்கள், மணம் வீசுதற்கிடமாகிய, பலவாகிய கரிய கூந்தலையுடைய இவள், நம் திறத்தில் எத்தகைய உறவினை உடையவளோ!. ஆதலால் எவ்வியென்னும் உபகாரியை இழத்தலால் உண்டாகிய வறுமையையுடைய யாழ்ப்பாணரது பொற்பூ இல்லாத வறிய தலையானது பொலிவிழந்திருத்தல் போல பொலிவிழந்து வருந்துவாயாக.

———-

வாசிப்பு

—-

இழப்பு, துரோகம், எஞ்சியிருக்கும் நினைவு

————

‘யாரளோ நமக்கே’ என்ற கவிதையின் இறுதிச் சொற்களில் தலைவன் தன்னிடமிருந்து தலைவி மிகவும் அந்நியப்பட்டு போய் யாரோ ஆகிவிட்டதை தன் நெஞ்சிடம்  சொல்கிறான். குறுந்தொகைப் பாடல்களில் இப்படி தன் நெஞ்சோடு பேசும் கவிதைகள் அனைத்துமே மிகுந்த நாடகீயமானவை. யாரளோ என்று தலைவி ஆனதற்கு கவிதையில் காரணங்கள் நேரடியாகச் சொல்லப்படவில்லை.  ‘மனை மரத்து’ என்றது வீட்டு முற்றத்திலுள்ள மரத்தின் மேல் படர்ந்த , ‘எல் உறு மெளவல்’ என்றது ஒளியையுடைய முல்லை மலர்களை. உ.வே.சா மகளிர் முல்லையை வளர்த்தலும் சூடுதலும் கற்புடைமை என்பதைச் சுட்டுகிறார். ‘மௌவல் நாறும் கூந்தல்’ என்றது முல்லையை அணிந்ததால் உண்டாகக்கூடிய நறுமணத்தை சொல்லியதாகும். கற்புடைய தலைவி என்பதால் உறவுக்குத் துரோகம் செய்தவன் தலைவனே. அதனாலேயேதான் அவன் தன் நெஞ்சிடம் பேசுகிறான். ஒருவன் தன் நெஞ்சிடம் எப்படிப் பொய்யுரைக்க முடியும்?  துரோகத்தினால் ஏற்பட்ட குற்ற உணர்வோடு நினைவுகளின் துன்புறுத்துதலுக்கும் அவன் ஆளாகிறான்.

——-

புலனுணர்வுகளின் துய்ப்பால் செழுமையடைந்த உலகும் நினைவும்

——————-

இந்தக் கவிதை புலனுணர்வுகளின் துய்ப்பால் நினைவில் படிந்து செழுமைப்படுத்திய பெண்ணைக் கொண்டாடுகிறது. தலைவன் சூடாமலேயே முல்லை மலர்களின் நறுமணம் அடர்ந்த தலைவியின் கூந்தலைப் பற்றி பேசுகிறது. இரா. இராகவையங்கார் மனைமரத்து இரவிலுற்ற முல்லை மலர்கள் ஒருவருஞ் சூடாமலே மணம் வீசுதல் போல இவள் கூந்தலும் நாம் அணையாமலே மணம் வீசும என்பது குறிப்பு என எழுதுகிறார். கூந்தலை முடிவதற்கு ஐந்து வகைகள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. கூந்தலை உச்சியில் வைத்து முடிவது முடி; கூந்தலைச் சுருட்டி இடப்பக்கமோ வலப்பக்கமோ திரளாகத் தொகுத்துக்கொள்வது கொண்டை; கூந்தலை மலர்ச்சரங்களோடு  செருகினால் அது சுருள்; கூந்தலை அள்ளி முடிவது குழல்; கூந்தலைச் சடையாகப் பின்னிக்கொள்வது பனிச்சை. உ.வே.சா. பனிச்சை முதலிய ஐந்து பகுதிகளை உடையது ஆதலால் தலைவியின் கூந்தலை பல் கூந்தலென்றான் என்று எழுதுகிறார். ‘பல்லிருங் கூந்தல்’ நினைவாக, வலியாக, தலைவனை ஆக்கிரமிக்கிறது, கூடவே மல்லிகை மணமும், மனையில் நிற்கிற முல்லை படர்ந்த மரமும்.

——————

இழப்பும் அதன் எதிரொலிகளும்

———-

கவிதை தன் நினைவின் செழுமைகளைலிருந்து சடாரென மாறி சமூகத் தளத்தில் எவ்வி என்னும் புரவல மன்னனின் இறப்பால் பொற்பூக்களை இழந்த பாணர்களின் தலைகள் வெறுமையானதைப் பேசுகிறது. எவ்வி என்னும் மிழலை நாட்டின் மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் போரில் கொல்லப்பட்டான் என புறநானூறு 115  கூறுகிறது . எவ்வி பாணர்களுக்குப் பெரும் புரவலனாய் இருந்தவன், அவனுடைய இறப்பினால் பாணர் ‘பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனை’ ஆயினர். இனை என்பதற்கு திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்  இன்னை என்பதன் இடைக்குறை,  அதற்கு வருந்தினை என்பது பொருள் என உரை எழுதுகிறார். பாணர்களின் பொற்பூ இன்றி வறுமையடைந்த தலை, தலைவியின் முல்லையும் மல்லிகையும் மணக்கும் செழுமையான கூந்தலுக்கு எதிராகிறது.

——-

வலியும், சிதைவும்

———-

இக்கவிதை இரு வேறு துண்டுகளை இணைத்து உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் காட்டும் வடிவத்தைக்கொண்டிருக்கிறது.  நெஞ்சே, கூந்தல் நமக்கு யாரளோ ஆதலின் பாணர் தலை போலப் புல்லென்று இனைமதி; இவள் இப்போது வேறுபாடுடையவளானாள்- என்ற அளவில் சிதறுண்டதாக, சிறியதாக, வலியைச் சொல்வதாக இருக்கிறது. சிதறுண்ட வெளிப்பாடுகள் வலியைச் சொல்பவை. அதன் குறுகிய வடிவத்தில் இக்கவிதை மாறும் குறியீடுகளின் வழி, புலனுணர்வின் படிமத்தின் வழி தான் துரோகம் செய்ததை ஒருவன் தனக்குத் தானே சொல்வதை அழகாக வடிவமாக்குகிறது. ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வலியிலும் நினைவிலும் இழப்பிலும் தோய்ந்திருக்கிறது.


Sunday, April 28, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-17

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-17

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவனிடம் கூறியது

—-

இயற்றியவர்:  கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 18

திணை:  குறிஞ்சி

————-

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சார னாட செவ்வியை யாகுமதி

யாரஃ தறிந்திசி னோரே சாரற்

சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கியவள்

உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

சிறு மூங்கிலாகிய வாழ்வேலியையுடைய, வேரிலே பலாக்குலைகளையுடைய பலாமரங்கள் செறிந்த பக்கத்தையுடைய மலைநாடனே, பக்க மலையில், பலாமரத்தின் சிறிய கொம்பில், பெரும் பழம் தொங்கியது போல இத் தலைவியினது உயிரானது மிகச் சிறுமையையுடையது; காம நோய் மிகப் பெரிது, அந்நிலையை அறிந்தவர் யார்? ஒருவருமில்லை; அவளை வரைந்துகொள்ளும் பருவத்தை உடையை ஆகுக.

————

வாசிப்பு

—————-

அர்த்தத்திற்கான போராட்டம்

———-

இந்தக்கவிதை இரண்டுவகையான குறிபீட்டாக்கங்களுக்கிடையிலான (modes of signification), நம் அனுபவத்தில் நிகழும் அர்த்தத்திற்கான போராட்டத்தை விவரிக்கிறது. ஒரு புறம் இயற்கை உலகம்; அது மலைச்சரிவுகளின் மனிதன், மூங்கிலாகிய வேலி, வேரிலே பலாப்பழங்கள் செறிந்த மலைப்பகுதி, பலாமரத்தின் சிறிய கொம்பில் பெரும் பழம் தொங்கியது போன்ற இத்தலைவியின் உயிர் ஆகியன அடங்கியதாக இருக்கிறது. மலைச்சாரலில் இயல்பாக வளர்ந்த சிறு மூங்கிலே பலாமரங்களுக்கு வேலியாகிறது. இதை உயிர்வேலி என்றது சிறப்பு. இந்த இயற்கையுலகு மொழிக்கு முந்தையது,  உந்துணர்வால் பார்ப்பதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவது. இவ்வுலகில் தலைவி தன்னந்தனியாய் இருக்கிறாள். ‘யார் அஃது அறிந்திசினோரே’   என்றது தலைவியின் தனிமையை இயற்கை உலகிற்கும் பண்பாட்டு உலகிற்கும் இடையிலான பாலமாக வைக்கிறது. இயற்கை உலகு குறியியல் தளமெனின் (semiotic plane) பண்பாட்டு உலகு சட்டம், சமூக நியதிகள் நிறைந்த குறியீட்டுத்தளம் (symbolic plane). தோழி தலைவனை இயற்கை உலகிலிருந்து பண்பாட்டுத்தளத்திற்கு  தலைவியை மணம்புரிந்து கூட்டிச் செல்லச் சொல்கிறாள்.

—————

உயிர் தவம் சிறிது காமம் பெரிது எனும் கவித்துவ உச்சம்

———

இந்தக் கவிதையின்  உச்சமாக நான் கருதுவது  “உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே” என்ற வரியினை. என்ன மாதிரியான வரி அது! உயிரின் தவம் இவ்வுலகில் சிறிது ஆனால் காமமோ அதனினும் பெரிது எனில் உயிரின் தவத்துக்கு அடிப்படை சக்தியான காமமே அதற்கு எதிராகவும் அதை விடப் பெரியதாகவும்  இருக்கிறது என இவ்வுலக வாழ்வின் அடிப்படை முரணை கவித்துவ உச்சமாக இக்கவிதை சொல்லிவிடுகிறது.  இதன் காட்சிப்படிமமாக சிறு கொம்பில் தொங்கும் பெரிய பலாப்பழம் இருக்கிறது. இந்தப்படிமம், தலைவியின், பெண்ணின் வலுவற்றமென்நிலையைச் சொல்கிறது. பொ. வே. சோமசுந்தரனார் சிறு கொம்பில் பலாக்கனி பின்னும் பருத்து முதிருமாயின் அக்கொம்பினை முறித்துக்கொண்டு வீழ்ந்து சிதறுமாறு போலத் தலைவியின் காமம் பின்னும் முதிருங்கால் அவள் உயிருக்கு இடையூறு செய்து தானும் கெடும் என்பது உவமையாற் போந்தமை உணர்க என்று எழுதுகிறார். இரா. இராகவையங்கார் சிறு கோடு என்பதனால் தலைவியினது இளமையும் மென்மையும் தெரிய வந்ததைக் கவனிக்கச் சொல்கிறார். 

———-

வேர்கோள் பலவின் சாரல் நாட

————

வேரிலே பழக்குலைகளையுடைய பலாமரங்கள்  செறிந்த பக்கங்களையுடைய மலைநாடனே என்றது தலைவனின் மனத்தை ஒரு மலைச்சரிவெனும் நிலப்பகுதியாக்கியதாகும்; அந்நிலப்பகுதியில் ஒரு பழம் கனிந்து கிளை ஒடியத் தயார் நிலையில் இருப்பவளாக தலைவி சுட்டப்படுதல் அபாரமான கவிதையின் உள்ளடுக்காகும். நிலப்பகுதியின் செழுமையும் அதனுள் ஒரு  வலுவற்றமென்நிலையையும் ஒரே சமயத்தில் கவிதை நம்மை கவனம்கொள்ளச் செய்கிறது. 

—————-

தோழி வரைவு கடாயது (தலைவியை மணம் முடிக்கக்கோரியது)

—————

உ.வே.சா முதற்கொண்டு நான் வாசித்த அத்தனை உரையாசிரியர்களும் தலைவியின் நிலையைக் கருத்தில்கொண்டு தலைவன் அவளை மணம் புரியவேண்டும் என்று கூறுவதாகவே விளக்கமளித்துள்ளனர். உ.வே.சா. ‘நாட இவள் உயிர் தவச் சிறிது; காமம் தவப் பெரிது; அஃது அறிந்திசினோர் யார்? ‘ என்பதன் கருத்து ‘தலைவியை நீ விரைவில் மணம் புரிந்து கொள்ள வேண்டும்” என எழுதுகிறார். ஆனால் கவிதை மூங்கில் வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட வேரில் பழுத்த பலாமரங்களின் நடுவே மெல்லிய கிளையொன்றில் எந்நேரமும் ஒடிந்து விழுந்துவிடலாம் என்பது போல அதிக எடையுடைய கனிந்த பலா தொங்கிக்கொண்டிருக்கிறது; அது உயிரின் தவம் சிறிது காமம் அதனினும் பெரிது என்பதைப் போல இருக்கிறது என்பதைச் சொல்வதோடு நின்றுவிடுகிறது.  அது காட்சிப்படிமமாய் நிலைத்து கவிதையில் இருப்பதே அதன் அழகு!

———



Saturday, April 27, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-16

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-16

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்:  பேரெயில் முறுவலார்

குறுந்தொகையில் பாடல் எண்; 17

திணை:  குறிஞ்சி

————-

மாவென மடலுமூர்ப பூவெனக்

குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப

மறுகி னார்க்கவும் படுப

பிறிது மாகுப காமங் காழ்க் கொளினே.

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

காம நோயானது முதிர்வுற்றால் பனை மடலையும் குதிரையெனக்கொண்டு ஆடவர் அதனை ஊர்வர்; குவிந்த அருமப் உடைய எருக்கம் பூமாலையையும் அடையாள மாலை போல தலையில் அணிந்துகொள்வர். வீதியில் பிறர் தம்மைக் கண்டு ஆரவரிக்கவும்படுவர்; தம் கருத்து முற்றாதாயின் சாதலுக்குரிய வரைபாய்தல் முதலிய வேறு செயலையுடையவரும் ஆவர்.

———

வாசிப்பு

——-

காதல் நோயும் மடலேறுதலின் காட்சியும்

————

தான் மடலேற எண்ணியுள்ளதாகத் தலைவன் தோழியிடம் சொல்வதாக அமைந்துள்ள இக்கவிதை காதல் நோய் முற்றிய நிலையில் அது என்ன மாதிரியான கேலிக்குரிய நடத்தையை ஆண்மகனின் மேல் சுமத்தும் என்பதைக் காட்சிப்படுத்துகிறது. காதலன் தலைவியால் நிராகரிக்கப்பட்டவனாக  இருக்கும்பட்சத்தில் மடலேறுதல் தலைவியின் மனதை உருக்க, அல்லது சமூக அழுத்தத்தைக் காதலனின் பொருட்டு, காதலியின் மேல் உண்டாக்குதல் மடலேறுதலின் சமூகச்செயற்பாடாக இருந்திருக்க வேண்டும். பனைமடலால் குதிரையைப் போல ஒருருவம் அமைத்து அதன் கழுத்தில் மணி, மாலை முதலியவற்றைப் பூட்டித் தன் உருவத்தையும் தலைவியின் உருவத்தையும் ஒரு படத்தில் எழுதிக் கையிலேந்தி அதன் மேல் ஊர்ந்துவருதல் மடலேறுதலாகும். இக்கவிதையில் தலைவன் மடலேறவில்லை; தன் காமம் முற்றியிருப்பதால் மடலேறிட இருப்பதாகச் சொல்கிறான். பனை மடலில் ஏறுதல், எருக்கம்பூ அணிதல் ஆகியவற்றை விவரித்து தன்னைத்தானே வெட்கமுறும் நடத்தைக்கு உட்படுத்திக்கொள்வதைக் காமம் காழ்கொளின் மடலும் ஊர்வேன், கண்ணியுஞ் சூடுவேன், ஆர்க்கவும் படுப்பேன், பிறவும் செய்வேன் என மடலேறுதலைக் காட்சிப்படுத்துகிறான்.  இதைத் தோழியிடம் தலைவன் கூறுவதை ஒரு அச்சுறுத்தலாக வாசிக்கலாம். இன்னொரு வகையில் காதல் என்பதையே ஒரு சமூக நியதிகளுக்கு எதிரான காட்சிப்படுத்துதலாக இக்கவிதை பொதுமைப்படுத்துவதாகவும் வாசிக்கலாம்.

——

எருக்கங் கண்ணியுஞ் சூடுதல்

——-

எருக்கங் கண்ணியும் சூடுவேன் என்பதிலுள்ள உம்மை விகுதி எருக்கம்பூ சாதாரணமாக அணியத்தக்கதல்ல என்பதைச் சொல்கிறது; அதையும் அணிவேன் என்றது அந்த அளவுக்குக் கீழிறங்கிச் செல்லத் தலைவன் தயாராக இருப்பதைச் சொல்வதாக அமைகிறது. உ.வே.சா., மடலேறும் தலைவன் நீறு, எருக்கமாலை, ஆவிரம்பூமாலை முதலிவற்றை அணிந்து வருதல் வழக்கமெனவும், மடலேற்றைக் குறித்த வேறு பலச் செய்திகளை திவ்யபிரபந்தத்திலுள்ள பெரிய திருமடல், சிறிய திருமடலென்பவற்றின் வியாக்கியானங்களால் உணரலாம் எனத் தெரிவிக்கிறார். காமம் முற்றும்போது சமூக நியதிகள் மீறப்படுவதற்கு மடலேறுதலைப் போலவே எருக்கம்பூ அணிதலும் குறியீடாகிறது. 

——-

காதல் எனும் சமூக மீறல் (Love as transgression)

————

குறுந்தொகைக் காதற்பாடல்களில் காதல் என்பதே சமூக மீறல் என்ற கருத்து அடியோட்டமாக இருப்பதை அவதானிக்கலாம். இந்தக் கவிதையிலும் அது அறுதியிடப்படுகிறது.  தலைவன் காமம் முற்றி அவனைப் பீடிப்பதால் அவன் எதற்கும், எந்த அவமானத்தை ஏற்கவும் தயராக இருப்பதை வெளிப்படையாகச் சொல்கிறான். இழிபு சிறப்பாகிறது. 

———————-

வலுவற்றமென்நிலையின் ஆளுமைத் திறம் (The Power of Vulnerability)

————

கேலிக்கும் அவமானத்துக்கும் உட்படத் தயாராக இருக்கும் தலைவனின் வலுவற்றமென்நிலை (vulnerability) காதலின் புனிதத்தின் வழி அவனுக்கு ஆளுமைத் திறத்தை அளிப்பதை இந்தக் கவிதையில் நாம் பார்க்கிறோம். எந்தவொரு வலுவற்றமென்நிலையும் ஆளுமைத் திறத்தினை நல்காது; அதற்கு ஒரு அற அடிப்படை இருக்கவேண்டும். அந்த அற அடிப்படை காதலின் வழி முற்றிய காமமாகத தலைவனை வந்தடைகிறது. இதைத் தமிழன்ணல் வைரம் பாய்ந்து முற்றுதல் எனவும்,  பொ. வே. சோமசுந்தரனார் நனி முதிர்ந்தல் எனவும், இரா. இராகவையங்கார்  முற்றிய பரலாகிய விதையைத் தம் முட்கொள்ளின் எனவும் உரை எழுதுகின்றனர். 


Friday, April 26, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-15

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-15

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவியிடம் கூறியது

—-

இயற்றியவர்:  பாலை பாடிய பெருங்கடுங்கோ

குறுந்தொகையில் பாடல் எண்; 16

திணை:  பாலை

————-

உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம்

பொன்புனை பகழி செப்பங் கொண்மார்

உகிர்நுதி புரட்டு மோசைப் போலச்

செங்காற் பல்லி நன்றுணைப் பயிரும்

அங்காற் கள்ளியங் காடிறந்தோரே

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

ஆறலைக் கள்வர், செப்பம் செய்யும்பொருட்டு, இரும்பினாற் செய்யப்பட்ட தம் அம்பை, நகனுனியிலே புரட்டுதலால் உண்டாகிய ஒலியைப் போல செம்மையான காலையுடைய ஆண்பல்லியானது தன் பெண் பல்லியை அழைத்தற்கு இடமாகிய அழகிய அடியையுடைய கள்ளிகளையுடைய பாலையைக் கடந்து பொருள்வயிற் சென்ற தலைவன் நம்மை நினையானோ?

——-

வாசிப்பு

—-

ஏக்கத்தின் நிலப்பகுதி

————

பிரிவின் ஏக்கத்தையும் அதனால் உண்டாகும் நிச்சயமற்றதன்மையையும் இதயம் பிளக்கும் விதத்தில் சொல்லும் இக்கவிதை பல தள அலசலைக் கோருகிறது. தலைவன் தலைவியைப் பிரிந்து கள்ளிச்செடிகளையுடைய பாலைக்குச் சென்றுவிட்டான்.  அப் பாலை நிலம் ஒரு உருவகவெளி; அது பிரிவு உணர்ச்சியால் இன்னும் தூரமாகியிருக்கிறது; கூடவே அது உணர்ச்சியின் நெடுந்தொலைவுக்குக் காட்சியாகிறது. ‘கள்ளியங் காடிறந்தோரே’ என்ற பதச்சேர்க்கை, கள்ளிகளையுடைய பாலையைக் கடந்து சென்ற தலைவன், அந்த பிரிவுணர்ச்சியின் நெடுந்தொலைவைக் கடந்து செல்வதால் அவன் தலைவியை நினைத்தானா என்ற நிச்சயமற்றதன்மையைச் சொல்கிறது; ஆசை பலசமயங்களில் அதனுடைய வழியின் அபாயங்களை மறைக்கிறது.  ‘உள்ளார் கொல்லோ தோழி’  என்ற வரியில்   ‘கொல்’ என்பது ஐயப்பாட்டினை வெளிப்படுத்தும் இடைச்சொல்; அதை அவன் உன்னை நினைக்காமலா போய்விடுவான் என்றும், நினைப்பானா என்றும் சிறு பொருள்மயக்க வேறுபாட்டோடு  விளங்கிக்கொள்ளலாம். 

——-

பொன்னென்றது இரும்பை, செப்பமென்றது கூர்மையை

——-

‘தம் பொன் புனை பகழி’ என்பது இரும்பினால் செய்யப்பட்ட அம்பு; அதை ‘உகிர்நுதிப் புரட்டும் ஓசை போல’ என்றது அந்த அம்பினை நகங்களினால் புரட்டும் போது ஏற்படும் ஓசை எனப் பொருள்படும். ’செப்பம் கொண்மார்’ என்றது நகத்தினால் புரட்டுவது  அம்பினைக் கூர்மைப்படுத்துவதற்காக. அம்பினைக் கூர்மைப்படுத்துவர் கள்வர் என்பதால் அந்தப் பாலையின் அபாயமும் சுட்டப்படுகிறது. இந்த ஒலி எந்த மற்ற ஒலியோடு ஒப்பிடப்படுக்கிறது என்பதில்தான் இந்தக் கவிதை இன்னும் நுட்பமடைகிறது. அம்பைத் தீட்டும் ஒலி ஆண் பல்லி பெண்பல்லியை அழைக்கும் ஒலியோடு ஒப்பிடப்படுகிறது.

——-

செங்காற் பல்லி 

———

அம்பைக் கூர் தீட்டுகிற ஒலி தலைவனுக்கு ‘செங்காற் பல்லி’ தன் இணையைக் கூப்பிடும் ஒலியை நினைவுபடுத்தத் தலைவன் தன் தலைவியை நினைப்பானோ என்கிறாள் தலைவியின் தோழி. அம்பைக் கூர் தீட்டுகிற ஒலி வன்முறையையும் போரையும் குறிக்கிறதென்றால் அதற்கு நேரெதிராகப் பல்லி எழுப்புகிற ஒலி இயற்கையையும் இணைவதற்கான ஏக்கத்தையும் குறிக்கிறது. இந்த வன்முறையின் சித்திரம் காதல் ஏக்கத்தில் உள்ள விரக்தியை பிரதிபலிக்கிறது, காதல் எப்படி காயப்படுத்தக்கூடும் என்ற பயத்தையும்  கூடவே. பல்லியின் முதன்மையான ஏக்கத்திற்கும் கள்வரின் கொள்ளைக்கான தயார் நிலைக்கும் இடையே உள்ள அப்பட்டமான வேறுபாடு, இணைப்புக்கான இயற்கையான ஏக்கத்திற்கும் அந்த ஆசைக்குள் இருக்கும் ஆபத்துகளுக்கும் இடையிலான பதற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. வில்லைக் கூர்மைப்படுத்தும்,  ‘விரல் நகங்களில்’,  பதுங்கியிருக்கும் காமக்குறிப்பு அச்சுறுத்தலுக்கு நெருக்கத்தின் ஒரு அடுக்கை சேர்க்கிறது. இந்த நெருக்கமான ஆபத்து அன்பே மென்மையாகவும் அழிவுகரமானதாகவும் இருக்கும் விதத்தைக் குறிக்கலாம்.

———-

நிச்சயமற்ற தீர்மானங்கள்

———-

திட்டவட்டமான தீர்மானம் இல்லாததால் ஒரு தெளிவின்மை கவிதையின் முடிவிலும் நீடிக்கிறது. தலைவனின் மறுபிரவேசம் பற்றிய தோழியின்  நன்னன்பிக்கைக் கூற்று  நிச்சயமற்றதாக இருக்கிறது.  அது  உண்மையானதா அல்லது தலைவியின் பொருட்டு அன்பால் கூறப்பட்ட பொய்மொழியா?  இந்த திறந்த முடிவு காதலின் ஆசையின் சிக்கலான தன்மையை பிரதிபலிக்கிறது, தலைவியின்  சொந்த கையறு நிலையை எடுத்துச்சொல்கிறது. அச்சமும் ஏக்கமும் நம்பிக்கையும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடும் ஒரு அக நிலப்பரப்பு இங்கே கவிதையாகியிருக்கிறது. 

——-

பல்லியின் அழைப்பு எனும் இறைச்சி

——-

உ.வே.சா. இக்கவிதை நிச்சய்மற்ற தீர்மானத்தோடு முடிவதாக எழுதவில்லை. அவர் ‘பல்லி தன் துணையை அழைக்கும் பாலைநிலத்திற் செல்பவர் அது கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்; ஆதலின் நீ ஆற்றியிருப்பாயாக வென்பது குறிப்பு’ என கவிதைக்கு தலைவிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஒரு நல் முடிவை அளிக்கிறார். இக்கவிதைக்கு  தமிழண்ணல் , சிற்றுயிர்களாகிய கார்ப்பொருளின் காதலைக்கூறி, மானிட உரிப்பொருளுக்குத் துணையுமாக வரும் இதுவே ‘இறைச்சி’ எனப்படும்’ என்று எழுதுகிறார். அந்த வாசிப்பும் அருமையானதே. 


Thursday, April 25, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-14

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-14

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொல்லியது

—-

இயற்றியவர்: ஒளவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 15

திணை:  பாலை

————-

பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு

தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய

நாலூர்க் கோசர் நன்மொழி போல

வாயா கின்றே தோழி யாய்கழற்

சேயிலை வெள்வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

———- 

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

அழகிய வீரக்கழலையும், செம்மையாகிய இலையையிடைய வெள்ளிய வேலையும்கொண்ட தலைவனோடு பலவாகத்தொக்க வளைகளைப் பூண்ட முன்கைகளையுடைய நின் மகள், வெள்ளிய வேலைக் கொண்ட தலைவனோடு செய்த நட்பானது, மிகப்பழைய ஆலமரத்தடியின்கண் உள்ள  பொதுவிடத்தில் தங்குதலைக் கொண்டு தோன்றிய, நான்கு ஊர்களிலுள்ள கோசரது நன்மையையுடைய மொழி உண்மையானவதைப் போல, முரசு முழங்கவும், சங்கு ஒலிக்கவும் மணம் செய்தததால் உண்மை ஆகியது.

———

வாசிப்பு

——- 

செவிப்புல குறிப்பான்களும் (auditory signs) தலைவியின் சமூக நிலை மாற்றமும்

————

‘பறைபட’ என்ற ஆரம்பச் சொற்களுக்கு உ.வே.சா. பறையும் சங்கும் மங்கல நாளில் முழங்குவன என உரை எழுதுகிறார். பொ. வே. சோமசுந்தரனார் மணப் பறைகள் ஆரவாரிப்பவும் என அந்த மங்கல நிகழ்ச்சி என்ன என்று சொல்கிறார்.  மணவிழாவின் கொண்டாட்ட சப்தங்களை செவிப்புல குறிப்பான்கள் என (auditory signs)  அழைக்கலாம்; இவற்றைக் கவனப்படுத்தி ஆராயும் அறிஞர்கள் ஓசைகளும் இசையும் சமூக யதார்த்தத்தை க் கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்று எழுதுகிறார்கள். (பார்க்க: Drobnick, Jim, ed. The Smell Culture Reader. Oxford: Berg, 2006.). மங்கல இசைக்கு அடுத்தபடியாக கவிதையில் சுட்டப்படும் அணிகலணான முன்கை வளையல் அவள் மணமகளாக சமூக நிலையில் உயர்ந்த மாற்றத்தைப் பெற்றுவிட்டாள் என்பதைக் குறிக்கிறது. வான் கென்னப் (Van Gennep) எனும் ஃபெரெஞ்சு மானிடவியலாளர் எழுதிய Rites of passage  எனும் நூல் மணவினை போன்ற வாழக்கைவட்ட சடங்குகள் ஒருவரின் வாழ்க்கையில் சமூக அந்தஸ்த்தின் நிலை மாற்றத்தை எப்படிக் கொண்டுவருகின்றன என்பதை விளக்குகிறது. உடன்போக்கில் முன்பு தலைவனோடு ‘தொன் மூது ஆலத்து’ (தொன்மையான ஆலமரத்தடியில்) இருந்த தலைவி, அதாவது முன்பு சமூக ஒப்புக்கொள்ளாத உடன்போக்கு உறவில் இருந்த தலைவி இப்போது மண உறவில் நுழைந்து சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டாள் எனக் கவிதை சொல்கிறது. சமூக அங்கீகாரத்தை பெறுவதற்கு முன்பான ஆலமரத்தடி நிலையை வான் கென்னப் liminal stage - சமூக இடைநிலை - என வகைப்படுத்துவார். கவிதையில் வெள்ளிய வேல்தாங்கிய தலைவன் என்றது தலைவி தலைவனோடு சென்றது அபாயங்கள் நிறைந்தது என்பதைக்குறிப்பால் உணர்த்தியது.

——-

காதல் சமூகத்தில் வேர்கொண்டது

——

உடன்போக்கின் பின் இருவரும் மணம் புரிந்து கொள்வதானால் மடந்தையின் நட்பானது உலகறிய உண்மையாகும் என செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொல்வதாய் இக்கவிதை அமைந்துள்ளது.  பலர் கூடியிருத்தற்கேற்ற கிளைபரப்பும் நிழலுடய ஆலமரத்தினடியும், ‘நாலூர்க் கோசர் நன்மொழி போல’ என்றதும் சமூகம் என்பதன் விளக்கங்கள் ஆயின. இந்தக் கவிதை  தனிப்பட்ட இணையரின் பிணைப்பை சமூக வழக்கத்தின் வலு, அதன்  நீண்ட ஆயுளுடன் இணைக்கிறது;  இது அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தை மீறிய சொந்தம், ஆதரவு ஆகியவை தரும் பாதுக்காப்பு உணர்வையும் குறிக்கிறது.

———-

பகிர்ந்துகொண்ட நம்பிக்கை

——

தலைவிக்கும் தலைவனுக்கும்  திருமணம் நிகழும்போது உடன்போக்கு சென்ற மகளின் நிலை சமூக அங்கீகாரத்தைப் பெற்றுவிடும் என செவிலி தலைவியின் தாய்க்கு ஆறுதல் கூறுவதாக இந்தக் கவிதை அமைந்துள்ளது. அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்ப்டாத தாய்மார்கள் எந்தக் காலத்திலாவது இருந்திருக்கிறார்களா, என்ன? இக்கவிதையை ஒளவையார் எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. உடன்போகிய மகளை செவிலியோ, தாயோ கண்டிக்கவில்லை என்பதையும் செவிலி மகளை ‘வளை முன் கை மடந்தை’ என அழைப்பதை அன்பின் விளி என்றும் எடுத்துக்கொண்டால் செவிலியும் தாயும் மகளின் உடன்போக்கு திருமணம் மூலம் சமூக அங்கீகாரம் பெற வேண்டும் என்று விழைகிறார்களே தவிர மகள் செய்தது தவறென நினைக்கவில்லை என்றும் வாசிக்கலாம். 

——-


Wednesday, April 24, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-13

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-13

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தோழி கேட்கும்படி சொன்னது

—-

இயற்றியவர்: தொல்கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 14

திணை:  குறிஞ்சி

————

அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த

வார்ந்திலங்கு வையிற்றுச் சின்மொழி யரிவை

பெறுகதைல் லம்ம யானே பெற்றாங்

கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில்

நல்லோள் கணவ னிவனெனப்

பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

அமுதத்தின் இனிமை நிரம்பிய செவ்விய நாவானது, அஞ்சும்படி முளைத்த நேராகி விளங்குகின்ற கூர்மையான பற்களையும் சிலவாகிய சொற்களையும் உடைய தலைவியை நான் மடன்மா ஏறுதலாற் பெறுவேனாக, பெற்ற பின்பு, இந்த ஊரிலுல்ளோர் அறிவாராக, பலர் வீதியில் நல்லோள் கணவன் இவன் எனக் கூற நாம் சிறிது நாணுவேம்!

————

வாசிப்பு

——

செவ்விய நாவும், கூர் பற்களும்

———

தலைவியின் செவ்விய நாவை ‘அமிழ்தென்றது எயிற்றில் ஊறிய நீரை, அமிழ்து பொதி எயிறு எனக் கூட்டுக” என்று எழுதுகிறார் உ.வே.சா. தலைவியைப் பற்றிய  இந்த விவரணை காமத்தின் உணர்ச்சிகரத்தில் தோய்ந்தது. அவளுடைய நாக்கு சிவப்பு, இனிப்பு, அமுதம் நிறைந்தது என்றது, பழுத்த காமத்தையும் துடிக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்துவது. ஆயினும்கூட, அது ஒரு பொய்யான பயத்தின் தொடுதலால் உன்மத்தம் அடைகிறது. அவளுடைய நேரான, பிரகாசமான பற்களுக்கு பயம் என்று சொல்லப்பட்ட  மாறுபாடு ஒரு முரண்பாடு அல்ல, மாறாக அது முற்றிலும் காம இன்பத்தைப் பற்றிய ஒரு  முழுஈர்ப்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இது ஒரு மகிழ்ச்சிகரமான அச்சத்தின் குறிப்பு. இந்தக் கலவை கவிதையின் உணர்வுச் செழுமையை (sensuousness) அதிகரிக்கிறது.  இப்படியான எதிரெதிரான காமக்கவர்ச்சியும் அச்சமும் நிறைந்த உணர்ச்சிகர படிமத்தை தலைவன் சொல்வது, அவனுடைய இப்போதைய நிலைமையின் போதாமையையும் (lack) அதற்காகத் தன் நிலைமையை மீறிய நிறைவை அடைய விரும்புவதையும் சொல்வதாக வாசிக்கலாம் (A desire to have a transcendental fulfillment). 


சிமோன் தி பூவா (Simone De Beauvoir) தன்னுடைய இரண்டாம் பாலினம் (Second Sex) நூலில் இப்படி உள்ளடுக்குகள் கொண்ட விருப்பத்தின் வெளிப்பாடுகள் ஒரு முழுமையான தன்னிலைக்கான தேடல்  என்றும் அது இன்னொரு நபரால் முழுமையடைகிறது எனவும் எழுதுகிறார்.

  

இந்தக் கவிதையிலும்  தலைவனின் விருப்பமானது தன்னை தலைவியோடு சேர்ந்து தன்னை முழுமைப்படுத்திக்கொள்வதில் இருக்கிறது என வாசிக்கலாம். அந்தத் தன்னிலையின் முழுமைக்காக அவன் மடலேறவும் தயாராக இருக்கிறான். 

உ.வே,சா. தன் பொழிப்புரையின்  மேற்கோளாட்சி பிரிவுகளில் மடலேறுதல் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தின் 16 பாடல்களில் வருவதாக எழுதுகிறார்.  தலைவன் தன்னுடைய உருவத்தையும் தலைவியினது உருவத்தையும் எழுதியமைத்த படத்தைக் கையேந்தி பனைமடல் குதிரையின் மேல் செல்வது மடல் ஏறுதல் என்றழைக்கப்படுகிறது. 


மடல் ஏறுதலை காதல் விரக்தியின் உச்ச கட்ட செயல்பாடாகக் காணலாம். An act of extreme despair. 

———-

ஊரார் பார்வை

———-

மடலேறித் தலைவியை அடைந்த பின் ஊர் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய தலைவனின் சொற்கள் சுவாரஸ்யமானவை. 

"நான் அவளை அடைந்தவுடன், இந்த ஊரின தெருக்களில் பலர், ‘அவன் ஒரு நல்ல பெண்ணின் கணவன்' என்று கூறுவார்கள்,” என்று தலைவன் கூறுவது அவனது  ஆசை அவனது காதலியை சொந்தமாக்குவதில் மட்டும் இல்லை; அவளுக்குத் தகுதியானவளாக ஊராரால்  கருதப்பட வேண்டும் என்ற சமூக அங்கீகாரத்திற்கான ஏக்கமாகவும் இருக்கிறது.  அப்போது “நான் கொஞ்சம் வெட்கப்படுவேன்" என்ற இறுதி வரி, வெற்றியின் நுட்பமான இன்பத்தைச் சொல்கிறது. 

————

கவிதையில் கண்ணில்படாமல் கேட்கும் தோழி

———

‘தலைவன் தோழி கேட்கும்படி சொன்னது’ என்ற கவிதையின் கூற்று வடிவத்தை நாம் மறந்துவிடக் கூடாது;  கூற்றினைக் கவிதையில் கண்ணில் படாமல் கேட்கும் தோழி  கவிதைக்கு ஒரு  சுவையான அர்த்த அடுக்கினை சேர்க்கிறாள்.  தோழி தலைவனின் மௌன சாட்சியாக மாறுகிறாள், ஒருவேளை அவள் தலைவனின் கூட்டு சதிகாரியாகவும்  இருக்கலாம். அவளுடைய இருப்பு தலைவனின்  பிரகடனத்தின் ஆழமாக்குகிறது. மடலேறிவிடுவேன் என்ற அச்சுறுத்தலை தலைவிக்குக் கொண்டு சேர்க்கும் தூதுவராகவும் தலைவன் தோழியைப் பயன்படுத்தலாம். இந்தக் கவிதை ஒரு பெண்ணின் மீதான ஆணின் ஆசை பற்றியது மட்டுமல்ல. இது காதல் நாட்டத்தில் காணப்படும் பாதிப்பு, விளையாட்டுத்தனம்,  காமத்தின் உணர்ச்சிகரத்தில் தோய்தல், அதில்  கிளர்ச்சியடைதல் ஆகியவற்றையும் பற்றியது.  


இந்த போதையான கலவையை அறிந்த இன்னொருவருடன் பகிர்ந்துகொள்வதில் ஏற்படும் சிலிர்ப்பும் கவிதையை அழகாக்குகிறது. 

——


Tuesday, April 23, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-12

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-12

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் சொல்லியது

—-

இயற்றியவர்: கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 13

திணை:  குறிஞ்சி

————

மாசறக் கழீஇய யானை போலப்

பெரும்மெயலுழந்த விரும்பிணர்த் துறுகல்

பைதலொருதலைச் சேக்கு நாடன்

நோயதந் தனனே தோழி

பசலை யார்ந்தன குவளையங் கண்ணே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

மேலையுள்ள புழுதி முற்ற நீங்கும்படி பாகனாற் கழுவப்பட்ட யானையைப் போல பெரிய மழையை ஏற்றுத் தூய்மையுற்ற பெரிய  துறு கல்லானது, பசுமையையுடைய ஓரிடத்தில், தங்குகின்ற மலைநாட்டையுடைய தலைவன், காம நோயைத் தந்தான்; அதனால் முன்பு குவளை மலரைப் போன்றிருந்த என்னுடைய அழகிய கண்கள், இப்போது பசலை நிறம் நிரம்பப் பெற்றன. 

———-

வாசிப்பு

————

மாசு, மாசின்மை, இரண்டையும் இழத்தல்

——-

‘நோய தந்தனனே தோழி’ என்ற வரி தன்னுடைய நோயற்ற உடலும் மாசற்ற மனமும் மீறப்பட்டதை, தான் பீடிக்கப்பட்டதை தலைவி சொல்வதாக அமைந்திருக்கிறது. இங்கே தலைவனுக்கு உவமையாகச் சொல்லப்படுகிற யானை போன்ற உறுகல் தன்னுடைய மாசினை முழுமையாக மழையினால் கழுவப்பட, தன் இயல்பில் இல்லாத தூய்மையை  உறுகல்லாகிய தலைவன் அடைகிறான். மாசின்மையை தலைவி இழக்கிறாள், தூய்மையைத் தலைவன் பெறுகிறான். இந்த இரட்டைக் குறிப்பான்களின் (double signifiers) குறியீட்டுப் பரிமாற்றத்தில் ( symbolic exchange) தலைவி நோய் பீடித்தவள் ஆகிறாள். உ.வே.சா. இதையே  ‘துறுகல் மாசு நீங்கப் பெற்ற நாடன் அவவியற்புக்கு மாறாக என் கண்ணின் இயல்பை மறைக்கும் பசலையை வளரச் செய்தானென்பது குறிப்பு” என்று எழுதுகிறார். நோய் என்பது உருவகம்; அது தலைவி தன் மாசின்மையை, கள்ளமின்மையை இழந்துவிட்டதை சொல்கிறது. 

———-

பெரும் மழை, யானை, உறுகல்

———

‘பெரும் பெயல் உழந்த’ என்ற வரி பெரு மழையால் யானை போன்ற கல் சுத்தமாகக் கழுவப்பட்டததைச் சொல்கிறது. பெருமழை ஒரு பேரனுபவத்தின் குறியீடாக இக்கவிதையிலிருக்கிறது; அந்த பேரனுபவத்திறகு ஆட்பட்ட தலைவன் தலைவி இருவருமே இயல்பு திரிந்தனர். இதை இறைச்சி என திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் தன் உரையில் குறிக்கிறார். இறைச்சி என்ற கருத்தாக்கத்தை தொல்காப்பியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது. கூறவந்த பொருள் வெளிப்படாமல் மறைவாக இருக்க, அதை உணர்த்த, வேறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைக்கும் இலக்கிய உத்தியே இறைச்சி என்றழைக்கப்படுகிறது. யானையையும் பாறையையும் ஒப்பிடுதல் அகநானூற்றுப் பாடல்களிலும் குறுந்தொகைப் பாடல்கள் பலவற்றிலும் வாசிக்கக் கிடைக்கிறது. யானை பலம், விவேகம், தெய்வீகம் என பல குறியீட்டு அர்த்தங்கள்  கொண்டதாக அகப்பாடல்களில் வருகின்றன. இந்தக் கவிதையில் தலைவன் இக்குணங்களைக் கொண்டவனாக மறைமுகமாக சுட்டப்படுகிறான்.

——

இல்லாத தலைவன் (absent hero)

————

இந்தக் கவிதையில் தலைவன் நேரடியாக இல்லை; அவன்  தலைவி அவனை சந்தித்து தன் மாசின்மையை இழந்து நோய் பெற்ற இடத்தின் தன்மையாலேயே சுட்டப்படுகிறான். ‘பெருமழையால், கழுவப்பட்ட யானை போன்ற பாறை’ தலைவனுக்குப் பெயராகிறது (metonomy); அதே நிலையிலேயே தலைவன் நீடித்திருப்பானா என்பது நிச்சயமில்லை. அதுவே தலைவிக்கு இனிமையின் நினைவையும் எதிர்காலத்தைப் பற்றிய வேதனையையும் (anguish) தருகிறது. 

———-

தலைவியின் உருமாற்றம்

——

‘பசலை யார்ந்தன குவளையங் கண்ணே’ என்ற வரி அழகான குவளை மலர்கள் போன்ற தலைவியின் கண்கள் பசலை படர்ந்து வெளிறிவிட்டதைச் சொல்கின்றன. 

—-

அணுக்கத் தோழி

———

இக்கவிதையில் தலைவி தோழியை நேரடியாக விளிப்பது அவர்களுக்கிடையேயான அணுக்கத்தையும் (intimacy) அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான சூழலையும் குறிக்கிறது. ஜூலியா கிறிஸ்தவா இம்மாதிரியான பெண்களுக்களுக்கிடையிலான அணுக்கத்தருணங்கள் முக்கியமானவை என்றும் அவை கவனித்து ஆராயத்தக்கன என்றும் சொல்கிறார். ( பார்க்க :Kristeva, Julia. Desire in Language: A Semiotic Approach to Literature and Art. Translated by Thomas Gora, Alice Jardine, and Leon S. Roudiez. New York: Columbia University Press, 1980.) 


Monday, April 22, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-11

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-11

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் சொல்லியது

—-

இயற்றியவர்: ஓதலாந்தையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 12

திணை:  பாலை

————

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய

உலைக்க லன்ன பாறை யேறிக்

கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்

கவலைத் தென்பவவர் சென்ற வாறே

அதுமற்ற றவங் கொள்ளாது

நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தலைவன் போன வழியானது, எறும்பின் வளைகளைப் போல, குறுமையையுடைய பலவாகிய சுனையை உடைய, கொல்லனது உளைக்களத்துள்ள பட்டடைக் கல்லைப் போன்ற வெம்மையையுடைய, பாறையின் மேல் ஏறி வளைந்த வில்லையுடைய எயினச் சாதியினர் தம் அம்புகளைத் தீட்டுதற்கு இடமாகிய கவர்த்த வழிகளை உடையது என்று கண்டோர் கூறுவர். இந்த ஆரவாரத்தையுடைய ஊரானது அவ்வழியின் கொடுமையைபபற்றித் துயரத்தை உட்கொள்ளாமல், அயற்றன்மையுடைய சொற்களைக் கூறி இடித்துரைக்கும். 

——-

வாசிப்பு

———

சுனைகளும், வெம்பாறைகளும், கொடுவில் எயினரும் நிறைந்த சுழற்பாதை

—————

தலைவன் பிரிந்து சென்ற பாதையை எறும்பின் வளைகளால் நிரம்பியது என தலைவி தன் தோழியிடம் முதல் வரியில் சொல்கிறாள். எறும்பை எறும்பி என அழைக்கும் மரபு திருவெறும்பியூரென்னும் சிவத்தலத்தின் பெயராலும் அறியப்படுமென உ.வே.சா தன் பொழிப்புரையில் குறிப்பிடுகிறார். இரா. இராகவையங்கார் தன் உரையில் தலைவன் சென்ற பாதையில் உணவளிப்பது எறும்பியளை, நீர் தருவது அறுநீர்ச்சுனை, உறைவிடம் உலைக்கலன்ன பாறை, வாழ்வோர் பகழி மாய்க்கும் கொடுவில் எயினர் என அவன் சென்ற வழியின் இடையூறெல்லாம் தெரியக் கூறினாள் என்று எழுதுகிறார். 


 தலைவியின் துயரம் தோய்ந்த சொற்கள் அவளுடைய உள்ளுலகும் வெளியுலகும் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதைச் சொல்கின்றன. தலைவன் பிரிந்து சென்ற பாதையின் கொடுமைகளையெல்லாம் அறியாத, புரிந்துகொள்ளாத ஊர் அவள் பிரிவாற்றமையினால் துயருற்று இருக்கிறாள் என்று சொல்கிறது; உண்மையில் அவளோ அவன் சென்ற பாதையிலிருக்கிற இடையூறுகளை நினைத்து கவலையுற்றிருக்கிறாள்.


சுனைகள் வாழ்வளிப்பவை ஆனால் கவிதையில் அவை சிறியனவாக எறும்பின் வளைகளைப் போல இருக்கின்றன; அவை வெம்பாறைகளும் கொடு வில் ஏந்தியவருக்கும் நடுவில் இருக்கின்றன. தலைவியின் உள்ளுலகு இவ்வாறாக தலைவன் சென்ற பாதையின் கொடுமைகளை நினைத்து உருகுகிறது.


———-


ஊர் எனும் வெளியுலகின் வன்கொடுமை

——

ஊர் என்றைக்கு தனி நபர்களின் துயரங்களை அனுதாபத்துடன் அணுகியிருக்கிறது? இந்தக் கவிதையில் ஊர் எனப்படுவது இந்தக் கவிதையைக் கேட்கும் தோழியினால் பிரதிநிதித்துவப்படுத்தபடுகிறது. ஆகவே கவிதையை வாசிக்கும் நாமே இந்தக் கவிதையின் சொல்லாடலின்படி (discourse) ஊராகிறோம். ‘நொதுமற்கழறென்றது’ வழியின் கொடுமையை அறிந்து வருந்துதை உணராமல் பிரிவினால் ஆற்றாதிருந்தாளென தோழியின் மேல் தலைவி குறைப்பட்டுக்கொள்கிறாள். தலைவி கூற்று இக்கவிதையில் தோழியை நோக்கியது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். உ.வே.சா. தோழியை ஊரென்று சொல்வது மரபு எனக் கற்பிக்கிறார். “இமைப்பிற் கரப்பாக் கறிவனைத்திற்கே ஏதில ரென்னு மிவ்வூர் “ என்ற குறளுக்கு ( எண் 1129) பரிமேலழகர் தன் உரையில் ‘ தன் கருத்துதறியாமையைப் புலந்து சொல்லுகின்றாளாதலின் தோழியை வேறுபடுத்தி இவ்வூரென்றாள்”  என்று எழுதுகிறார். 


நொதுமல் என்ற சொல்லுக்கு அயல் என்ற பொருளாகையால் அது அந்நியமானது,  தன்னிலைக்கு (self) மற்றவையானது (other), எதிராகிறது. மற்றவையின் கரிசனமின்மையும், முன் தீர்மானமும் தலைவியின் துயரத்தில் இன்னொரு அடுக்காகிறது. Other is not hell here, but other is hostile.

இந்தக் கவிதையின் உலகம் இரண்டு எதிரெதிர் உலகங்களை வண்ணந்தீட்டுகிறது; வெளியுலக கரிசனமின்மை X உள்ளுலகத் தனிமை. தலைவன் எதிர்கொள்ளும் சிரமங்கள் X அவற்றிலுள்ள நேர்மறையான சாத்தியப்பாடுகள்.

—————

குறியீடுகளை செயல்களாக அறிதல்

——-

இந்தக் கவிதையில் தலைவி பொதுவாக குறியீடுகளாக அறிப்படுபவற்ற செயல்களாக அறிகிறாள்; அவ்வாறகவே தன் தோழியிடத்து சொல்கிறாள். தலைவன் செல்லும் வழியின் எறும்பு வளைகள் போன்ற சுனைகள்,  சுடுகின்ற வெம்பாறை, வில்லேந்தியவர் என இயற்கை, மனிதச் சூழல் ஆகியவற்றின் பகுதியாக தலைவன் எதிர்கொள்வதாக அவள் நினைப்பவை அவளுடைய  அக உலகின் ஒடுக்குதலைச் செய்யக்கூடியனவாக மாறுகின்றன. 

தலைவியின் துயரம் காமப் பிரிவாற்றமையினால் அல்ல மாறாக தலைவன் எதிர்கொள்ளும் சிரமங்களை நினைத்து வருந்துவதால் வருவது என்ற நுண் வேறுபாட்டினை விளக்க அவள்தான் எவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கிறது! அவள் எதிர்கொள்ளும் ‘ஊர்’ என்பது லேசுப்பட்டதா, என்ன? 

————


Saturday, April 20, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-10

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-10

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக

—-

இயற்றியவர்: மாமூலனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 11

திணை:  பாலை

————

கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும்

பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி

ஈங்கிவ ணுறைதலு முய்குவ மாங்கே

எழுவினி வாழியென்னெஞ்சே முனாது

குல்லைக் கண்ணி வடுகர் முனையது

பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்

மொழிபெயர் தேஎத்த ராயினும்

வழிபடல் சூழ்ந்திசி நவருடை நாட்டே.

————————

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

எனது நெஞ்சே நீ வாழ்வாயாக! சங்கினை அறுத்துச் செய்யப்பட்டு விளங்கும் கைவளை உடல் மெலிவினால்  நெகிழாநிற்ப,  நாள் தோறும் இமைபொருந்துதல் இல்லாதனவாகிக் கலங்கியழும் கண்ணோடு இங்கு தனித்து வருந்தி, இப்படி இங்கே தங்குதலின்றும் தப்புவேனாக. ஆங்கு தலைவன் இருக்கும் இடத்திற்கு செல்ல இப்பொழுது எழுவாயாக. முன்னே உள்ள கஞ்சங்குல்லையாகிய கண்ணியை அணிந்த, வடுகருக்குரிய இடத்தினதாகிய பலவேலையுடைய கட்டியென்பவனுடைய நல்ல நாட்டுக்கு அப்புறத்தில் உள்ள, மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவரேனும் அவருடைய நாட்டினிடத்து செல்லுதலை எண்ணினேன்.

———

துயருறும் நெஞ்சின் பாடல்

——

‘வாழியென்னெஞ்சே’ என்ற தலைவியின் அகவாழ்த்து ஒரு கத்தித்திருகலைப் போன்ற பிரிவாற்றமையின் துயரத்தை உள்ளடக்கியிருக்கிறது என்றாலும் அது விரக்தியில் எழுந்த  துணிச்சலைப் தனக்குத் தானே பாராட்டி வாழ்த்திக்கொள்கிறது; அதில் விரக்தியில் எழும் அங்கதம் தொனியாகிறது. சங்கு வளையல்கள்  இன்னும் மெலியும் உடலில் இருந்து நழுவவில்லை, இமை பொருந்தா விழிகள் இன்னும் தூக்கத்தைக் காணவில்லை, புலம்புதலும் அழுகையும் இன்னும் நிற்கவில்லை என்ற வரிகளுக்குப் பின் வரும் வாழ்த்து ஒரு பிளவுண்ட தன்னிலையையும் (fractured self) நமக்கு அறிவிக்கிறது. கட்டி எனும் கருங்குலையாகிய கண்ணியை அணிந்த வடுகர் தலைவனின் நாட்டைத் தாண்டி அறியாத மொழி பேசும் நிலத்துக்கு தலைவனைத் தேடிச்செல்லத் துணிகிறது அவள் மனது. அந்தத் துணிச்சல் பாராட்டத்தக்கது என்றாலும் மொழி அறியா நிலத்தின் அபாயங்களும் அறியப்பட்டாதவையே. வாழ்த்துக்குரிய துணிச்சலையும் அறியப்படா அபாயங்களையும்  ஒருங்கே இரட்டைத் தன்மையோடு இக்கவிதை அறிவிப்பதால் அதன் வசீகரம் கூடுகிறது.

——-

தேஎத்தர் எனும் இன்னிசை அளபெடை

——-

இக்கவிதையில்  வரும் வடுகர் எங்கே வாழ்ந்தார்கள், எந்த நிலப்பகுதி கட்டி எனும் வடுகர் தலைவனால் ஆளப்பட்டது, எந்த நிலப்பகுதியைத் தாண்டிச் செல்ல  தலைவி விரும்பினால் என்பதற்கான விளக்கத்தை நாம் பிற உரைகளைலிருந்தே பெற முடிகிறது. புற நானுற்றிற்கு 278 ஆவது பாடலுக்கு உரை எழுதுகிற ஒளவை துரைசாமிப்பிள்ளை தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் அவர்கள் வடுகர் என்றழைக்கப்பட்டனர் என்று எழுதுகிறார். முன்னிலை என்பதற்கு முன்னே உள்ளதாகிய (நிலம்) என்று மட்டுமே உ.வே.சா பதவுரை தருகையில், தமிழண்ணல் அதை எல்லையென வகுக்க, பொ. வே. சோமசுந்தரனாரும், இரா. இராகவையங்காரும் அதைப் பகைப்புலம் என விளக்குகின்றனர்.   தேஎத்தர் இன்னிசை அளபெடை ஆகையால் அது அந்த நாட்டின் மக்கள் என்று மட்டுமே பொருள்படும். அம்மக்களுக்கு எந்த எதிர்மறை குணத்தையும் கற்பிக்காது. 

——-

வழிபடலுக்கான ஏக்கமும், தப்பித்தலின் அபாயமும்

——-

இங்கே புலம்பிக்கொண்டும் அழுதுகொண்டும் இருப்பதற்குப் பதிலாகத் துணிந்து வடுகர் தலைவன் ஆளும் நிலம் தாண்டித் தப்பிச் செல்லாம் என, ‘வழிபடல் சூழ்ந்திசி’ என தலைவி நினைக்கிறாள். வழிபடல் என்பது பிரயாணம். தலைவனைப் பிரிந்து தனித்திருத்தலை இனி ஆற்றேன் என்ற துணியும் மனம் உடனடியாக  மொழி அறியாததை அந்நிலத்தின் அபாயமாகவும் உடனடியாக அடையாளம் காண்கிறது. துணிந்த எண்ணம் செயலாகுமா என்பதற்கான குறிப்பு கவிதையில் இல்லை. துணிந்ததற்கு மட்டுமேதான் ‘வாழியென்னெஞ்சே’ என்ற வாழ்த்து. வடுகர் தலைவன் கட்டி, கஞ்சங்குல்லையாகிய கண்ணியை (துளசியின் ஒரு வகை) அணிந்தவன் என்ற விவரிப்பினாலும், நல் நாடு என்றதாலும் வடுகர் நிலைத்தைக் கண்டு தலைவி அஞ்சவில்லை எனப் பொருள் கொள்ளலாம். அதற்கு அப்பால், ‘உம்பர்’ இருக்கக்கூடிய நிலமே அபாயகரமானது, மொழி அறியாததால். மொழி தரும் பாதுகாப்புக்கு அப்பாலான ‘வழிபடல்’ இப்போது தலைவி அனுபவிக்கும் துயரத்தை விட அதிகமான மொழியற்ற அர்த்தமின்மைக்கும், பெரிதும் ஒழுங்கற்ற நிலைக்கும் (chaos) இட்டுச்செல்லும். 


வழிபடலுக்கான ஏக்கம் துயரம்.