Showing posts with label எழுதாத முன்னுரை. Show all posts
Showing posts with label எழுதாத முன்னுரை. Show all posts

Saturday, October 6, 2012

நான் எழுதாத முன்னுரையும் போர்ஹெஸின் கவிதைகளும் பகுதி III


முகவிலாசமும் முகத்துலக்கமும் மௌனி போர்ஹெஸை வாசித்திருக்கிறார் என்பதைப் படித்ததால் ஏற்பட்டது என்று பகுதி 2 இல் எழுதியதைத் தொடர்ந்து ஏதேதோ யோசனைகள் ஓடிக்கொண்டிருந்தன. மௌனிக்கும் போர்ஹெஸுக்கும் உள்ள பல ஒற்றுமைகளைப் பற்றி யாரும் எழுதியிருக்கிறார்களா என்று தேடிப் பார்த்ததில் எதுவும் கிடைக்கவில்லை. தன் அடையாளம்,  பிறன்மை (other) என்பதன் விளையாட்டினைத் தன் கலையின் மையமான சரடாக மௌனியிடமும் போர்ஹெஸிடமும் காணலாம். தன் அடையாளம் , பிறன்மை என்பவற்றை எதிரிடையாகக் காண்பதன் அபத்தம் கூட இந்த விளையாட்டின் கிரியைகளில் ஒன்று; மாயையின் பூச்சு அடர்ந்து பிளவே இயல்பனெ அறியப்படுவதை என்னவென்று சொல்ல? தன் அடையாளம் எங்கே முடிகிறது? பிறன்மை எங்கே ஆரம்பிக்கிறது?

தத்துவத்தில் மார்டின் புயுபரின் ‘I and Thou’ என்ற சிறிய ஆனால் முக்கியமான நூலில் கட்டமைக்கப்பட்ட தன்னிலை-பிறன்மை பிரச்சினைப்பாடு  (problematic)  தத்துவம் என்று மட்டுமில்லாமல் மானிடவியல், இறையியல், சமூக அறிவியல், அரசியல், இலக்கியம், இலக்கிய கோட்பாடு ஆகிய துறைகளில் மிக முக்கிய பங்களிப்பினை ஆற்றியுள்ளது. புயுபரின் பிரச்சினைப்பாடு ‘நீ’ என்பதினை அடுத்த ஆள் என்று மட்டுமில்லாமல், கடவுள், இயற்கை என தான் என் உணரப்பட்டது தவிர்த்த அனைத்திற்குமானதாக விஸ்தரித்தது. அதாவது ‘நீ’ எனப்படுவது ‘பிறன்மை’ என விரிவு கண்டது. தன்னிலைக்கும் அல்லது தன்னடையாளத்திற்கும் பிறன்மைக்கும் உள்ள உறவிவின் தன்மையே அறவியலின் நம் சமகால தத்துவத்தின் அடிப்படையென மாறியுள்ளது. புயுபரின் நேரடியான தாக்கத்திற்கு உள்ளான சார்த்தர் இருத்தலியல் சூழ்நிலையின் இறுக்கத்திலும் பரிதவிப்பிலும் Other is hell என்ற தத்துவ சறுக்கலுக்கு ஆட்பட்டதும் அதனால் அவருக்கும் காம்யுவுக்கும் இடையில் மோதல் முற்றியதும் பிரசித்தமான ஒன்றே. சார்த்தர் தன்னுடைய கருத்தினை மாற்றிக்கொண்டதாக அறிவித்தபின்பும், தன் சிந்தனை சறுக்கலின் வெளிப்பாடக அமைந்துவிட்ட No Exit நாடகத்தினை நிராகரித்த பின்னரும் கூட  சார்த்தரின் சறுக்கல் இன்றுவரை அவருடைய தத்துவத்தில் படிந்த அகலாக்கறையாகவே கருதப்படுகிறது. தவிர, எழுதப்பட்ட அத்தனை நவீன கவிதைகளையுமே தான் - பிறன்மை என்பவனவற்றிற்கிடையேயான உரையாடலே என்றொரு இலக்கிய கோட்பாடு கூட பிரசித்தம். 

மார்டின் புயுபரின் வாழ்க்கை வராலாற்றை Martin Buber: The Life of Dialogue என்ற புத்தகமாக எழுதிய மௌரிஸ் ஃப்ரீட்மன் புயுபரின் சிந்தனை இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய அமெரிக்காவின் சிந்தனையிலும், பண்பாட்டிலும் எவ்வளவு தீவிரமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றும் விவரித்துள்ளார். பல மதங்களிடை உரையாடல்கள், இடைசமய நம்பிக்கைகள், மனித உரிமை போராட்டங்கள், போர் எதிர்ப்பு இயக்கங்கள் ஆகியன தன்னிலையயும் தன் அடையாளத்தையும் விட பிறன்மைக்கும், பிற அடையாளத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதே அறம் என்ற நிலைப்பாட்டினை பியுபரின் சிந்தனையிலிருந்தே பெற்றுகொண்டன என ஃபிரீட்மன் விவரிக்கிறார். பால் டில்லிச், ரெய்ன்ஹோல்ட் நீபுர் ஆகிய இறையியல் சிந்தனையாளர்களையும் பியுபரின் சிந்தனைக்குத் தாங்கள் கடன் பட்டிருப்பதைச் சொல்கிறார்கள். மார்டின் லூதர் கிங் ஜூனியர் 1963 இல் எழுதிய பிர்மிங்ஹாம் ஜெயிலிலிருந்து ஒரு கடிதத்தில் புயுபரை மேற்கோள் காட்டுகிறார். மதங்களின் இறுதி விதிகளை உதறி இங்கே இப்போது நடக்கும் மானுட நிகழ்வுகளினூடே நடக்கும் உரையாடல்களை செழுமைப்படுத்துவதன் மூலமே மனித குலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும் என்று வாதிட்ட பியுபர் தினசரி வாழ்க்கையின் உரையாடல்கள், தான் -மற்றது என்ற தன்னிலை பொருளுலகு உரையாடலாகவும் தான் -மற்றவர் என்ற தான்- கடவுள் உள்ளிட்ட மற்ற மனிதர்களின் உலகு என்ற உரையாடலாகவும் பரிணமிக்கிறது என்று விளக்கினார். “மீண்டும் உன்னிடம் சிக்கிக்கொண்டேன்’ என்ற ரமேஷ்-பிரேமின் கவிதை வரியும் “மகாமசானத்தில் தெரியாதே என்று இறந்தார் என் கடவுள்” என்ற சுகுமாரனின் கவிதை வரியும் புயுபர் விவரிக்கும் உரையாடல் வகைகளே.

மார்டின் லூதர் கிங் ஜூனியர் தன்னுடைய பிர்மிங்ஹாம் சிறைக்கடிதத்தில் புயுபரை மேற்கோள் காட்டி இன உறவுகளை தான் - மற்றது என பிரித்து தன்னை மனித உலகத்தைச் சேர்ந்தவராகவும் மற்ற இனங்களை உயிரற்ற ஜடங்களின் உலகை சார்ந்தவையாகவும் குறுக்குவதே  இனப்போர்களின் வன்முறைக்கான ஆதரமாகிறது என்று எழுதுகிறார். தமிழர்- சிங்களவர், தமிழர்-இந்தியர், இந்தியர்- ஐரோப்பியர், கீழைத்தேயம்-மேற்குலகு எனப் புழங்கி வரும் சொல்லாடல்களும் கதையாடல்களும் என்ன மாதிரியான உரையாடல் பாங்குகளை ஆதாரமாகக் கொள்கின்றன என்று பார்ப்பது அவசியம். அந்த பிரஞ்காபூர்வமான சிந்தைனையை நோக்கியே தன்னிலையை எழுதிப் பார்த்து அறிதல், மௌனியையும் போர்ஹெஸையும் வாசித்தல் ஆகிய என்னுடைய யத்தனங்கள் இருக்கின்றன. 

முதலில் போர்ஹெஸின் இரு கவிதைகளைப் படித்துவிட்டு போரஹெஸ் மௌனி வாசிப்பிற்கு மீண்டும் வருவோம். தன்னிலையின் நிலைப்பாடுகளை முழுமையாக மறுதளித்துவிட்டு பிற்னமையின் ஆனந்தத்தில் திளைத்த கவிதைகளாக போர்ஹெஸின் ‘இரவின் வரலாறு’, ‘ஒரு பூனையை நோக்கி’ என்ற இரு கவிதைகளைச் சொல்லலாம்.

இரவின் வரலாறு

தொடர்ந்து பல தலைமுறைகளாக
ஆண்கள் இரவினை கட்டமைத்தார்கள்
முதலில் அவள் குருட்டுத்தன்மையாய் இருந்தாள்
வெற்றுப் பாதங்களைக் கிழிக்கும் முட்களாய்
ஓநாய்களுக்கான பயமாய்

இரு அந்திக் கருக்கல்களைப் பிரிக்கும்
இடைவெளி நிழலுக்கான
வார்த்தையைப் போலியாய் சமைத்தது யாரெனெ
என்றுமே அறியப்போவதில்லை

எந்தக் காலத்தில் அது
நட்சத்திர மணித்தியாலங்கள் என 
பொருள்கொண்டதென 
என்றுமே நாம் அறியமாட்டோம்

மற்றவர்கள் அந்த தொன்மத்தை 
உருவாக்கினார்கள்
அவர்கள் அவளை 
நம் தலைவிதியைச் சுழற்றும்
கலைக்கப்படாத விதிகளின் தாயாக்கினார்கள்
அவளுக்கு அவர்கள் பெண் ஆடுகளையும்
தன் சாவினை தானே கூவும் சேவலையும்
 பலியிட்டனர்

சால்டியன்கள்⁠1 அவளுக்கு பன்னிரெண்டு வீடுகளையும்
ஜீனோவுக்கு முடிவற்ற வார்த்தைகளையும் ஒதுக்கினர்
அவள் லத்தீனின் அறுசீர் செய்யுளடியாய் உருவமெடுத்து
பாஸ்கலை பீதி வசப்பட வைத்தாள்
லூயி தி லியோன்⁠2 அவளிடத்து 
தன் அடிபட்ட ஆத்மாவுக்கான 
தாயகத்தைக் கண்டார்
இப்போது நாம் அவளை
தீர்க்கமுடியாத மதுத் தேறலாய் உணர்கிறோம்
யாருமே அவளை தலை சுற்றலின்றி 
உற்று நோக்க முடியாது
மேலும் காலம் அவளின் மேல் நித்தியத்தை ஏற்றிவிட்டது

நம் பலகீனமான கருவிகளான 
கண்களுக்காக என்றில்லாவிட்டால்
அவள் இருக்கவே மாட்டாள் என்பதினை 
நினைக்கும்போது











ஒரு பூனைக்கு

கண்ணாடிகள் இன்னும் அதிக மௌனமாயில்லை
ஊர்ந்தெழும் சூரியோதயமும் இன்னும் அதிக ரகசியத்துடனில்லை

நிலவொளியில்
நாங்கள் தூரத்தில் பிடிக்கும் காட்சியான
நீயே அந்த சிறுத்தை

விளக்க இயலாத தெய்வீகச் சட்டத்தின்படி 
நாங்கள் உன்னை வீணாய்த் தேடுகிறோம்
கங்கையைவிட, அல்லது அஸ்தமிக்கும் சூரியனை விட
இன்னும் தொலைவிலானது
உன்னுடையது ஒரு தனிமை, உன்னுடையது ஒரு ரகசியம்
உன் இடுப்பு உன்னைச் சீராட்டித் தடவும் என் கையை
அனுமதிக்கிறது
நீண்ட காலமானதால் மறந்துவிட்ட கடந்த காலம்
நம்ப முடியாத கையின் காதலை
உன்னை ஏற்றுக்கொள்ள வைக்கிறது
நீ இன்னொரு காலத்தைச் சேர்ந்தவள்; ஒரு கனவைப் 
போல கட்டுண்ட இடமொன்றின் பிரபு 








நான்கு விதமான தன்னிலை (I) பிறன்மை விளையாட்டுக்கள் மௌனியையும் போர்ஹெஸையும் வாசிப்பதில் தொழிற்படுகின்றன. 

முதன்மையாக இவர்களின் இலக்கியப் பிரதிகள் அவற்றின் விசித்திர வசீகரத்தினால் ‘நம்’ கலை இலக்கிய பாரம்பரியத்தில் அவற்றுக்கு என்ன இடம் என்று உடனடியாக சிந்திக்கத் தூண்டுகின்றன. இரண்டாவதாக எழுதும் தன்னிலைக்கும், எழுதப்பட்ட பிரதிக்குமான உறவு, மூன்றாவதாக அளவிலிக்கும் அளவானதற்குமான உறவுகள், நான்காவதாக கனவு-நனவு, நினைவு-நடப்பு, நிகழ்வு- காலாதீதம் ஆகியவற்றின் ஊடாட்டங்கள். 

---தொடரும்


1 பாபிலோனை 625-539 வரை ஆண்ட மக்கள்  சால்டியன்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்கள் வானியல் நிபுணர்களாகவும் ஜோதிடர்களாகவும் விளங்கினர்.
2 லூயி தி லியோன் 
பார்க்க 

Thursday, August 9, 2012

நான் எழுதாத முன்னுரையும் போர்ஹெசின் கவிதைகளும் பகுதி II

ஹா நாட்கள்தான் எப்படி ஓடுகின்றன! கரையும் காலத்தைப் பற்றி பிரக்ஞை ஏதுமின்றி இரண்டாம் பகுதியினை எழுதவேண்டுமே என்ற ஓர்மையில்லாமல், வேற்றுக்கிரகவாசி இவ்வுலக நாட்காட்டியை அலட்சியம் செய்வது போல விச்ராந்தியாய் இருந்துவிட்டேன். சிறு மழைத் தூறல்களுடன் கூடிய மாலை வேளைகள் நாகர்கோவிலுக்கான ஏக்கத்தை அதிகப்படுத்தியபடியே இருந்தன. மழைக்காலம் என்றில்லாமல் எப்பொழுதுமே அப்பா நாகர்கோவிலில் இருப்பதான பாவனையிலேயே சென்னையிலும் வாழ்ந்தார். வயதாக வயதாக அப்பாவின் பாவனைகள் என்னையும் பீடிக்கின்றன போலும். சீக்கிரத்திலேயே நானும் ப்ரௌனிங் ரசிகனாகிவிடுவேனோ?

 அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் அப்பா உப்புக்கு சப்பாணி வக்கீலாய் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு போய் வந்து கொண்டிருந்தார்கள்; வயோதிகத்தில் உடல் பூஞ்சையாகிவிட்டாலும் மனோதிடத்திற்குக் குறைவிருக்கவில்லை. அவரை சந்தித்த என் பெண் நண்பர்கள் அனைவருமே சிறிது நேரத்திலேயே அப்பா பெரிய அழகன் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். வலுவான சுருள் முடி, மெலிந்து உயர்ந்த உடல் என்று அப்பாவுக்கென்று ஒரு வசீகரம் உண்டு. என் பெண் நண்பர்கள் அவரை அழகன் என்று அவரெதிரிலேயே சொல்லும்போது அவர் முகம் வெட்கத்தில் சிவந்து பிரகாசிப்பதை கவனித்திருக்கிறேன். அதே முகப் பிரகாசம் அவருடைய ஒரே ஒரு புகைப்படத்திலும் இருக்கிறது. வக்கீலின் வெள்ளையுடையும், கருப்புக்கோட்டும் அணிந்து கொண்டு திபெத்திய வண்ணக்குடையை ஒரு கையிலும், கேஸ் கட்டுகளை இன்னொரு கையில் மார்போடு அணைத்துக்கொண்டு அந்தப் புகைப்படத்தில் நிற்கிறார். வாயில் நான் ஐரோப்பாவிலிருந்து வாங்கிவந்த ஸ்வீடிஷ் விவசாயிகள் பயன்படுத்துகிற பைப் தொங்கிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கெல்லாம் அந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது திபெத்திய வண்ணக்குடைக்கு அடியில் அப்பாவின் அருகே அம்மாவும் நிற்பதாகத் தோன்றுவது என்ன மாயமோ!

அந்தப் புகைப்படத்தை நான் எடுத்த அன்றுதான் என்று நினைக்கிறேன் அப்பா தான் எழுதிய கேஸ் கட்டு ஒன்றினை மெய்ப்பு பார்த்துத் தரச்சொன்னார்கள். ஏதோ சொத்துத் தகராறு வழக்கு. அதிலும் அப்பாவின் கையெழுத்தில் ஒரு ப்ரௌனிங் மேற்கோள் இருந்தது. அப்பாவுக்கு எழுத்தாளன் என்றால் கவிஞன் என்றால் அவன் எழுதுவது பல சந்தர்ப்பங்களிலும் மேற்கோள் காட்டத்தக்கதாய் இருக்கவேண்டும். எதையும் எழுது என்றவுடன் இந்தாபிடி என்று எழுதித்தந்துவிட வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் எழுதுவதற்கு ஒரு கவிஞனுக்கு இயலவேண்டும். கிட்டத்தட்ட போர்ஹேசின் ‘ப்ரௌனிங் கவியாக உறுதிபூண்டார்’ என்ற கவிதையும் ப்ரௌனிங் தன் வாழ்நாளின் எல்லா தருணங்களையும் கவிதையாக்கும் வல்லமையை ப்ரௌனிங் கொண்டிருந்ததையே குறிப்பிடுகிறது. எழுத்தாளனாவதற்கான முயற்சியில் சதா ஈடுபட்டிருப்பவனாகிய நானோ எப்போதோ ஒரு முறைதான் எழுத உட்கார்வது என்பது அப்பாவிற்கு அலுப்பூட்டக்கூடியதாயிருந்தது. வெறுமனே பகல் கனவுகளில் சஞ்சரிப்பவனுக்கு எழுத்தாளன் ஆகப் போகிறவன் என்ற ஹோதா ஒரு சாக்கு மட்டுமே என்று அப்பா நினைத்திருக்கக்கூடும். மார்கழி மாதக் காலையில் பிடித்த சாணியில் பூசணிப்பூ சேர்வது போல ஏதேதோ பொருள்களும் ஏதேதோ பொழுதுகளும் கூடி வருகையில் மட்டும் எழுதுகிற நான் அப்பாவுக்கு வாழ்க்கையைப் பணயம் வைத்த சூதாடியாகத் தோற்றமளித்திருக்கவேண்டும். பல வாசிப்புகளில் நான் போர்ஹெஸ் ப்ரௌனிங்கை உள்ளபடிக்கும் பாராட்டவில்லை என்றே நம்பத் தலைப்பட்டேன்.

 உண்மை ஆனால் வேறு விதமாக அல்லவா இருக்கிறது? போர்ஹெசின் ப்ரௌனிங் கவிதையைப் பற்றி எழுதுகையில் பிரம்மராஜன் “ஒரு நிஜமான கவிஞனுக்கு வாழ்தலின் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு செயலும் கவித்துவமானதாகத்தான் இருக்க வேண்டும், ஏன் எனில் சாராம்சத்தில் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை, இன்றைய நாள் வரை எவருமே இவ்வுயர்ந்த பிரக்ஞை நிலையை அடையவில்லை. வேறு எவரையும் விட ப்ரௌனிங்கும் (Browning) பிளேக்கும் (William Blake) இந்த நிலையை நெருங்கிச் சென்றிருக்கின்றனர். விட்மன் அந்தத் திசையினை நோக்கி குறி வைத்த போதிலும், அவருடைய கவனமான எண்ணியெடுத்துச் சொல்லுதல் ஒரு வித கரடுமுரடான பட்டியலிடுதல் என்பதற்கு மேல் எழும்புவதில்லை.” என்று போர்ஹெஸ் Preface to The Gold of Tigers இல் எழுதியிருப்பதைக் குறிப்பிடுகிறார்.⁠1

அப்பாவின் ப்ரௌனிங் போல (போர்ஹெஸின் ப்ரௌனிங் போல) என்றென்றைக்கும் நான் ஆக முடியாது என்பதை அப்பாவிடம் ஒரு நாள் சொன்னேன். என் கண்களில் நீர் மல்கியிருந்திருக்க வேண்டும் இல்லை குரல் கம்மியிருக்கவேண்டும். அவருக்கு நான் யதார்த்தம் எது கற்பிதம் எது என்று அறியாத அடூர் கோபாலகிருஷ்ணணின் ‘அனந்தரம்’ படத்தின் கதாநாயகன் போலத் தோன்றியிருக்கவேண்டும். அப்பா வழக்கம்போல் ப்ரௌனிங் மேற்கோள் எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்தது ஆறுதலாயிருந்தது. ஏதோ ஒரு கண்ணியில் அப்பாவும் போர்ஹெஸும் இணைந்து விட்டார்கள்.

போர்ஹெஸோடு உணர்வுபூர்மாக என்னை இணைத்த இன்னொரு கண்ணி மௌனி. மௌனியின் கதைகளின் hallucinatory character என்னை வசீகரித்ததுபோல வேறெவருடைய கதைகளும் என்னை வசீகரித்திருக்கவில்லை. தப்பிவிட வேண்டும் தப்பிவிட வேண்டும் என்று மனதிற்குள் அரற்றிக்கொண்டே மௌனியை வாசிப்பவனாக நான் இருந்த போதிலும் மௌனியின் பிடியிலிருந்து விடுபட்டவனாக நான் என்றுமே இருந்ததில்லை. மௌனியின் ‘மனக்கோட்டை’ சிறுகதையில் உள்கதையாக வரும் குட்டிக் கதை அப்படியே போர்ஹெஸின் கதை போலவே இருக்கும். படித்துப்பாருங்கள்:


 " சிறிது இளைப்பாறி, பிறகு நடக்கலாம், என ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். எதிரே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். கோட்டை கொத்தளங்கள், எட்டித் தெரியும் குன்றுகள் எல்லாம் எட்டி நகர்ந்து மறையத் துடித்து, கானல் சலனத்தில் தெரிந்தன. இந்தக் கோட்டையை இது வரையிலும் பார்க்கதவனானாலும், அதைப்பற்றி அனேக விஷயங்களைக் கேட்டும், படித்தும் தெரிந்து கொண்டிருந்தான். மறைந்த கோவில் வெங்கலத் தேரையும், கோட்டைப் பாதாளச் சுரங்க வழிகளையும், பராபரிச் செய்திகளென, இவன் கேட்டிருக்கிறான். திரேதாயுகத்தில், அதன் நிர்மாணம், ஸ்தல மகிமைப் புராணம், உண்மைக் கூற்றென சரித்திரம், கற்பனைக்கதிகள், முதலிய என்னவெல்லாமோ அதைப் பற்றி புத்தக ரூபமாகப் படித்து தெரிந்துகொண்டவன். இப்போது தனக்குத் தெரிந்ததெல்லாவற்றையும் நினைக்கும்போது, அபத்தமென, சிரிப்பு கூட தோன்றியது. பக்தியில் கோவிலுக்கு  வெங்கலத் தேரை வார்த்துவிட்டு, எதிரிகளை முறியடிக்க, விநோதமான குறுக்குப் பாதைகளை, வெகுயுக்தியுடன் கண்ட ஒரு மேதாவி வீரதீர சக்கரவர்த்தி, தொலைவிலே எதிர்க்கவரும் எதிரிகளை முறியடைக்க, அவர்களின் மத்தியில் திடீரெனப் புகவும், பிறகு தோற்றால் திடீரென மறைந்து கோட்டையை அடையவும், அநேக சுரங்கப்பாதைகளை அமைத்தான். ஓரு தரம் அவ்வகை செய்யத் தீர்மானித்து, அநேகரை, எட்டிய வெளியில் விரோதிகளெனக்கண்டு அவர்களிடை புகுந்து வீர தீர பராக்கிரம் செயல்கள் புரிந்து சுரங்க வழியே கோட்டையை அடையும் ஆவலில் தோற்று, மறைய நினைத்தபோது எல்லாம் மறந்துவிட்டது. அவர்கள் மத்தியிலே, அவர்களாகவே 'ஜே-ஜே' கோஷமிட்டு கோட்டையை அடைந்தான். அவர்களும் மறந்து, தாங்களென மதித்து, இவனையே அரசனாக்கி, கோட்டையை அடைந்து கைகட்டி கட்டளைக்குக் காத்திருந்தனர். அவர்களோடு வெங்கலத் தேரும், சுரங்கப்பாதைகளும் மறந்து மறைந்துவிட்டன. இந்திரன், பிரும்மஹத்தி தோஷ நிவாரணம், சுனையில் முழுகி சுவாமி தரிசனத்தில் கண்டது ….தற்போது ஒருவராலும் இந்திரனாக முடியாததினாலும், அதுவும் மறந்துவிட்டது. மறைய பாழடைந்து கொண்டிருக்கிறது. அந்த அரசன் அவன் தகப்பன் அவந் அவன் மகன் இவன் எனக் கொண்டு, கடல் கடந்து வாணிபம செய்தது இமயத்தை வென்றது, பேரவை கூட்டியது, முத்தமிழ் பரிமாறியது. அது இது எல்லாமும், மனப்பிராந்தியில் சரித்திரமாகி, கல்பனைகளுடன் உண்மையும் மறந்துவிட்டது. கோவில் கோட்டை குளம் எல்லாமுமே, இவன் பார்வைக்கு, ஒன்றெனத் தோனற, இப் பாழ் தோற்றம் இவெனெதிரில் மௌனமாக ஏங்கிப் புலம்பி நின்றன. கானல் சலனத்தில் எங்கேயோ எட்டிய வெளியையும் நாடிப் போகத் துடித்துக்கொண்டிருக்கிறது."⁠2


 எதிரி ராஜனோடு சேர்ந்து உங்களுக்கு எதிராக நீங்களே போரிட்டு, வெற்றி பெற்று மீண்டும் ராஜாவாக முடி சூடுகிற கதை அளிக்கிற மன விரிவும், வரலாறு, காலம், தன்னிலை, யதார்த்தம் இவைகளுக்கு இடையே உள்ள உறவினைப் பற்றி கிடைக்கின்ற பார்வையும், அதனால் ஏற்படுகிற மன எழுச்சியையும் சொல்லி மாளாது. மௌனி போர்ஹெசின் கதைகளை வாசித்திருக்கிறார் என்ற செய்தியை வெங்கட் சாமிநாதனின் கட்டுரையில் படித்தபோது என் முகமே எனக்குத் துலக்கமாகி விட்டதுபோல மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.⁠3 இவ்வாறாக முகவிலாசமும், முகத்துலக்கமும் பெறுவதுதானே ஒருவன் கவிதை எழுதுவதற்கான நோக்கமாயிருக்க முடியும்? கவிதையின் கலை என்ற போர்ஹெஸின் கவிதை அதைத்தானே சொல்கிறது?

கவிதையின் கலை

காலத்தாலும் நீராலும் ஆன நதியை உற்றுப் பார்ப்பதென்பது
காலம் இன்னொரு நதியென நினைவில் கொள்வது
நதி போல நாம் வழி தவறுவதை அறிகையில்
 நம் முகங்கள் நீரெனவே மறைவது அறிவது

விழித்திருத்தல் இன்னொரு கனவென உணர்வதென்பது
விழிப்பு கனவற்றிருப்பதையும் கனவாய் காண்கிறதென உணர்வது
எந்தச் சாவினை நாம் நம் எலும்புகளில் உணர்ந்து பயமடைகிறோமோ
 அந்தச் சாவினையே நாம் ஒவ்வொரு இரவிலும் கனவென்றழைக்கிறோமென்றுணர்வது

ஒவ்வொரு நாளிலும் வருடத்திலும்
 ஒரு மனிதனின் அனைத்து நாட்கள் வருடங்களுக்கான
 ஒரு குறியீட்டினைக் காண்பதாவது
அந்த வருடங்களின் கோபங்களை
 ஒரு இசையாக, ஒரு சப்தமாக, ஒரு குறியீடாக மாற்றுவதாகிறது

 மரணத்தைக் கனவில் காண்பதென்பது
 சூரிய அஸ்தமனத்தில் ஒரு பொற் சோகம்
என்பதாகவே
கவிதை எளிமையானது சாவற்றது
சூரியோதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் போல திரும்ப வருவது

அந்தியின் சில வேளைகளில்
கண்ணாடியின் ஆழத்திலிருந்து நம்மைப் பார்க்கும் முகமுண்டு
கலை அது போன்ற ஒரு கண்ணாடியாகவே
 நம் முகத்தை நமக்குக் காட்டித்தர வேண்டும்

யுலிசஸ்⁠4 அதிசயங்களால் சோர்வுற்று
 எளிமையும் பசுமையுமாயிருந்த இதாகாவைக்
கண்ணுற்று அன்பின் மிகுதியில் அழுதான் என்பார்கள்
கலை அந்த இதாகா
ஒரு நித்திய பசுமை, அதிசயங்களல்ல
கலை ஓடும் நதியைப் போல முடிவற்றது
கடந்து செல்வது, இருப்பினும் இருப்பது
நிலையற்ற ஹெராக்ளிட்டிஸ்⁠5
அவராகவும் வேறொருவராகவும்,
ஓடும் நதியினைப் போலவே
இருப்பதைக் காட்டும் கண்ணாடி





--------------------------------------------------------------------------------------------------------

பகுதி மூன்று, நான்கு என்று இன்னும் வளரும்; எப்போது முடியும் என்று தெரியாது.



 அடிக்குறிப்புகள்

 1பார்க்க பிரம்மராஜனின் தளம் http://brammarajan.wordpress.com
2 தொகுப்பாசிரியர் கி.அ.சச்சிதானந்தம், "மௌனி கதைகள்" பீகாக் பதிப்பகம், சென்னை 2003 பக்கம் 9-10
 3 பார்க்க வெங்கட்சாமிநாதனின் கட்டுரை http://azhiyasudargal.blogspot.in/2010/02/blog-post.html
4 ஹோமரின் காப்பிய கதாநாயகன். ஒடிசியில் உலகெங்கும் கடலாடி கடைசியில் தன் தாயகமான இதாகாவுக்கு திரும்புகிறான்.

5 ஓடும் நதியில் இருமுறை இறங்க முடியாது என்று காலம் நகரும் விதத்தை உலகுக்குச் சொல்லிய கிரேக்க தத்துவ ஞானி.

Saturday, July 21, 2012

நான் எழுதாத முன்னுரையும் போர்ஹெசின் கவிதைகளும் பகுதி I



என்னுடைய “நீர் அளைதல்” கவிதைத் தொகுதி நற்றிணைப் பதிப்பக வெளியீடாக அச்சில் வெளிவரவிருக்கிறது. அத் தொகுதிக்கு ஒரு முன்னுரையை எழுதுமாறு நற்றிணைப் பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் யுகன் கேட்டிருந்தார். நான் பல நாட்கள் நன்றாகத் தூக்கம் போட்டேன், என் மகன்களைக் கொஞ்சி விளையாடினேன், கோடையின் வெக்கை தணிய பூமி குளிர பெய்த முதல் மழையில் விட்டேத்தியாக நனைந்தேன், இஷ்டம் போல் செவ்வாழையும் நேந்திரனும் சாப்பிட்டேன் ஆனாலும் ஒரு வரி கூட முன்னுரைக்காக என் மனதில் உதயமாகவில்லை. மெல்லிய, சிறிய முதல் கவிதைத் தொகுதி அச்சு காணப்போகும் சந்தோஷத்தில் தலை கிறுகிறுத்தது உண்மைதான் என்றாலும் முன்னுரையாக எழுத ஒன்றுமில்லை என்றே தோன்றியது. Minimalist poetryக்கு எதற்கு முன்னுரை என்று யுகனை  சம்மதிக்க வைத்தேன்; அவர் பின்னட்டை பத்தியாவது தாருங்கள் என்றவுடன் நாற்பது வயதிற்கு மேல் முதல் கவிதைத் தொகுதி வெளியிடும் நாணத்தில் முகம் சிவந்து விட்டது. ஒரு வழியாகத் தயங்கித் தயங்கி “Minimalist poetry என்ஆழ்மனத்தினை அறியும் முறைமையாக இருக்கும் என்று ‘நீர்அளைதல்’ தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதிப்பார்ப்பதற்கு முன்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்ச வெளிப்பாடு என்ற எல்லையின்றி வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதிப்பார்த்தவை இந்தக்கவிதைகள்.” என்ற இரண்டு வரிகளை பின்னட்டைப் பத்திக்கு கொடுத்துவிட்டேன்.  

எழுதிப்பார்த்து ஆழ் மனதை அறிதல் என்பதில் ஒரு வகையான அறிவுத்தோற்றவியலின் அதீத கற்பிதம் (epistemological fantasy) இருக்கிறது. என் அடையாள அட்டையில் உள்ள புகைப்படத்தை வைத்து நான்தான் என்று பிறர் அறுதியிடுவது போல அல்லது புகைப்படம் எடுத்த பின்னரே, கண்ணாடியின் முன் நின்ற பின்னரே என் முகம் எனக்கு அடையாளம் ஆவது போல எழுதி முடித்த கவிதை என்னைப் முழுமையாகக் காட்டுமா? இல்லை ஏதேனுமாவது சொல்லுமா? கவித்துவ பிரக்ஞையை கவிதை வெளிப்படுத்துமா? எழுதாத முன்னுரைக்கான கேள்விகள் தொகுதி அச்சுக்குச் சென்றபின்னும் அலைக்கழித்துக்கொண்டிருந்தன. அகத்தையும், அனுபவங்களையும் பிடிப்பதற்கு மொழிக்கு இருக்கும் ஆற்றல் என்ன? மொழியின் போதாமை என்ன?

மனம் தன் போக்கில் அசைபோட்டுக்கொண்டிருக்கும்போதே போர்ஹெஸ்ஸின்⁠1 கவிதைகள் நினைவுக்கு வந்தன. மொழியின் போதாமையையே கவிதையின் பொருளாகக் கொண்ட போர்ஹெஸ்ஸின் கவிதைகளில் ஒரு அறியவொணா அடர்த்தி சேர்வதை கவனித்திருக்கிறேன். படிக்கும்போது வெகு சாதாரணமாகத் தோன்றக்கூடிய போர்ஹெஸ்ஸின் கவிதைகள் அனுபவம்-அகம்-வரலாறு-பிரபஞ்சம் என்ற தொடர்பினை   வெளிப்படுத்த மொழி போதாதிருப்பதை பல இடங்களில் சுய சுட்டுதலாகக் கொண்டிருக்கின்றன. போர்ஹெஸ்ஸின் தனித்துவமான உரைநடையும், கவிதைகளும் மொழி எந்தப் பொருளையும் பெயரிடக்கூட வல்லமையற்றது என்ற அவருடைய எண்ணத்திலிருந்தே முகிழ்த்திருக்க வேண்டும். மாறிக்கொண்டேயிருக்கும் பிரபஞ்சத்தைப் பிடிக்க இறுக்கமான மொழி போதுமானது அல்ல என்று பல சமயங்களில் அவர் எழுதுகிறார். நழுவிப்போகிற, ஒன்றன் வழித்தோன்றலாய் மற்றொன்று இருப்பதான வார்த்தைகளைப் பற்றிய புகார்களும் ஆச்சரியங்களும் போர்ஹேஸுக்கு அனேகம் உண்டு. ‘இரவின் வரலாறு’ என்ற புத்தகத்திற்கான அனுபந்தத்தில் போர்ஹெஸ் எழுதுகிறார்: “ ஸ்டீவன்சன் அறுதியிடுவது போலவே, மொழியின் பொருளாயம் அபத்தமான போதாமையையுடையது….சலித்துப் போன வார்த்தைகளையும் அவற்றின் அணி இலக்கண உபாயங்களையும் கொண்டு என்னதான் செய்ய இயலும்?”

“A Johannes Brahms”, “Juan” ஆகிய கவிதைகளில் போர்ஹெஸின் வரிகள் மொழியின் போதாமை பற்றிய அவரின் சலிப்பையும் அதனால் ஏற்படும் தேர்வையும் ஒருங்கே சொல்கின்றன. “A Johannes Brahms” கவிதையில் ஒரு பத்தி:

“ஒரு கருத்திற்கும், ஒரு ஒலிக்கும் வழித்தோன்றலான 
தூய்மையற்ற சொல்லுக்கு என் கடப்பாடு
குறியீடல்ல, கண்ணாடியுமல்ல முனகலும் அல்ல
ஓடிக்கொண்டேயிருப்பதும் நிலைப்பதுமான ஆறு உனக்குரியது”

Juan கவிதையில் உள்ள வரிகள்:

“எந்த மனிதனிடத்தும் நான் இதை நம்பி ஒப்படைக்கலாகாது
அது எப்போதுமே நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதுவாகாது
அது தன்னுடைய பிரதிபலிப்பேயன்றி வேறெதுவுமாகாது”

மொழியினால் எதையுமே பெயரிட இயலாமல் போவதைப் பற்றியும் நைந்து போனதாகவும், துல்லியமற்றும் மொழியிருப்பதைப் பற்றியும் போர்ஹேசின் விரக்தி அவருடைய புகழ் பெற்ற கவிதைகளான The Other Tiger, The Other- the same, ஆகியவற்றிலும்கூட காணலாம். இதை மீறியும் தொடர்ந்து மொழியில் போர்ஹெஸை இயங்க வைப்பது எது?

“இரும்புக் காசு” என்ற புத்தகத்தின் அனுபந்தத்தில் கலைகளின் எல்லைகளை விவாதிக்கும் போர்ஹெஸ் நழுவும் அர்த்தங்களை மீறியும் சொற்களின் கலைக்கு ஒரு எதிர்காலம் இருக்கிறது என்கிறார். “ஒவ்வொரு பொருளும் எவ்வளவுதான் தற்காலிகமாக இருந்தாலும் அது ஒரு தனித்துவமான அழகியலால் நம்மை நிறைக்கிறது. ஒவ்வொரு சொல்லும், பல நூற்றாண்டுகளின் அர்த்த சுமைகளைத் தாங்கிக்கொண்டிருந்தாலும் ஒரு வெற்றுப் பக்கத்தைத் தொடங்குவதன் மூலம்  தன் எதிர்கால வாழ்விற்கான சமரசத்தைச் 
செய்கிறது”

தூய்மையற்ற மொழிக்கும் பூமியில் தன்னுடைய தற்கால இருப்பிற்கும் இடையில் ஊடாடும் கவி போர்ஹெஸ் தன் கவிதைகளில் ஒரு நிலைத்த அர்த்தத்தை உருவாக்க போராடுகிறார். நழுவி ஓடும் அர்த்தங்களை ‘எதிரொலிகளின் சுழலோட்டம்’ என்ற ஆக்டேவியா பாசின் சொற்சேர்க்கையால் அழைப்பார் தெரிதா என்பது நினைவுக்கு வருகிறது.

போர்ஹெஸின் ‘அந்த மற்ற புலி’ என்ற கவிதையிலும் சரி ‘முடிவுறா ரோஜா’ என்ற கவிதையிலும் சரி, போர்ஹெஸ் புலியும் ரோஜாவும் சொற்களாக பல நூற்றாண்டுகளாகக் கொண்டிருக்கின்ற அர்த்த சுமைகளையும், பல பொருள்த்தன்மைகளையும், அவை உருவாக்குகின்ற தொடர்புறுத்துதல்களையும் முதலில் கவனிக்க  வைக்கிறார்.  

இதற்காக போர்ஹெஸ் தன்னுடைய கவிதைகளுக்கான பாடுபொருள்களை மிகவும் நனவுபூர்வமாகத் தேர்ந்தெடுப்பதாகவே தெரிகிறது. ரோஜா, புலி ஆகியன ஏராளமான இலக்கிய, கவித்துவ தொடர்புறுத்துதல்களை உடைய சொற்கள். அவற்றின் அர்த்த சங்கிலியை எல்லையற்று நீட்ட முடியும். இந்த அர்த்த ஊடுபாவுகளின் மேல் கவனத்தைக் குவித்து அதிலிருந்து தன் தனித்துவ பார்வையை நோக்கி போர்ஹெஸின் கவிதைகள் நகர்வதால் அவை ஆழமான வசீகரத்தை கொள்வதாகின்றன.

‘முடிவுறா ரோஜா’ கவிதையில் ரோஜாவைப் பார்த்து கவி சொல்லும் பத்தியை கவனியுங்கள்:

“ஒவ்வொரு பொருளும்
முடிவற்ற பொருள்கள். நீ இசை
சொர்க்கங்கள், அரண்மனைகள், ஆறுகள், தேவதைகள்
ஆழமான ரோஜா, எல்லயற்றது, அணுக்கமானது
என்பதாகவே காட்டுவார் கடவுள் என் அவிந்த கண்களின் முன்”

தனித்துவ இருப்பிற்கும் எல்லையற்ற அர்த்த சாத்தியப்பாடுகளுக்கும் இடையில் ஊடாடி மீண்டும் தனித்துவம்  நோக்கி மீள்வதும் போர்ஹெஸின் கவிதைகளில் நிகழ்கிறது.

“அப்பாவி”என்ற கவிதையில் எல்லையின்மைக்கும் தனித்துவ இருப்பிற்குமான ஊடாட்டம் தெளிவாகவே கவிதையாகிறது:

“ஒவ்வொரு சூரியோதயமும் (அவர்கள் சொல்கிறார்கள்) அற்புதங்களை
உருவாக்குகிறது
மிகப்பிடிவாதமான அதிர்ஷ்டங்களையும் திருகி மாற்ற வல்லது;
சந்திரனையும் அளந்த மனிதக் காலடிகள் உண்டு
வருடங்களையும் பல மைல் தூரங்களையும் நாசமாக்கியதும் உண்டு
நீலத்தில் காத்திருக்கின்றன பொதுவெளியின் துர்க்கனவுகள்
அவை நாளினை இருளடையவைக்கின்றன. அந்த வெளியில் அங்கே ஏதுமில்லை,வேறொன்றானதும், மாறுபட்டதும் ஏதுமில்லை
மிக எளியவை மட்டுமே என்னை அங்கே தொந்திரவு செய்கின்றன
என் கை நிச்சயமான ஒரு பொருளாக இருக்கலாம் என்பது என்னைஆச்சரியப்படுத்துகிறது
கிரேக்கத்தின் உடனடியான எலேயா நகர்சார் அம்பு அது அடையமுடியாதஇலக்கினை அடைவதில்லை என்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது
குரூரமான வாள் அழகாய் இருக்ககூடுமென்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது 
அவ்வாறே ரோஜாவுக்கு ஒரு ரோஜாவின் மணம் இருக்கலாம் என்பதும்”

தன்னை அப்பாவியாக வெகுளியாகக் கருதிக்கொள்ளும் குரலில் இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது என்பது தவிர அப்பாவித்தனம், வெகுளித்தனம் என்பதற்கும் இந்தக் கவிதையின் சிந்தனைபோக்கிற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை!  ஸ்பானிஷ் மூலத்தில் படித்து இந்தக் கவிதையைப் பற்றி எழுதியுள்ள விமர்சகர்கள் அபாரமான லயத்துடன் எழுதப்பட்ட இந்தக் கவிதை வியத்தல் படைப்பூக்கத்தின் அடிப்படையாக இருக்கும் பட்சத்தில் வெளிப்படையாக நன்றாகத் தெரிந்த விஷயங்களைப் பற்றி கூட ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கலாமே என்ற பட்டியலை கவிதையின் இரண்டாம் பகுதியில் வைத்திருப்பதன் மூலம் முதல் பகுதியில் சொல்லப்பட்ட ‘அவர்கள் சொல்லும் ஆச்சரியங்களை’ கேலிக்குள்ளாக்குகிறது  என்கிறார்கள். இந்தக் கவிதையிலும் கூட போர்ஹெஸுக்குப் பிடித்தமான கருப்பொருள்களான மொழியின் போதாமை, சாதாரணமாகப் புழங்கும் சொற்களின் மேலும் பொருட்களின் மேலும் ஏற்றப்பட்டுள்ள அர்த்த சுமைகள் முடிவின்மையை தரிசிக்க தடையாயிருப்பது சுட்டப்படுவதை அவதானிக்கலாம். 

கடந்த இருபத்தைந்து வருடங்களில் பல்வேறு சமயங்களில் போர்ஹெசின் கவிதைகளை திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். அவைகளுக்கு அவ்வபோது நான் எழுதிவைத்த குறிப்புகளைப் படித்து  மேற்கண்டவாறு எனக்காகத் தொகுத்துக்கொள்ளும்போது கவிதையைப் பற்றி கவிதையாலல்லாமல் பேசமுடியாதோ என்று தோன்றுகிறது. அதனால்தான் என் கவிதைத் தொகுதிக்கு நான் முன்னுரை எழுத இயவில்லையோ? 

எனக்குப் பிடித்த மற்ற கவிஞர்கள் எல்லோரையும் விட போர்ஹெஸின் கவிதைகளையே நான் அதிகம் முறைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வாசித்திருக்கிறேன். ஆனாலும் மொழியின் போதாமை, நழுவிச் செல்லும் அர்த்தங்கள், நூற்றாண்டுகளின் அர்த்த சுமையைத் தாங்கும் சொற்கள் ஆகவே நனவு பூர்வமாக கவிதையை எழுதுவதன் தேவை ஆகியவை கவிதை எழுதிப்பார்க்கும் என் முயற்சியினை பாதிக்கவேயில்லை. மாறாக நனவற்ற நிலையில், அலங்காரமற்ற, மிகையுணர்ச்சிகள் அற்ற  எளிய சொற்களின் முயங்குதலில் ஒரு ரசவாதம் ஏற்பட்டு அழகு மின்னலென பற்றாதா என்று தேடிப்பார்த்திருக்கிறேன். 

இந்தத் தேடலில் போர்ஹெஸின் வேறு சில கவிதைகள் என்னை பாதித்திருக்கக்கூடும். குறிப்பாக “ப்ரௌனிங் கவியாக உறுதிபூண்டார்” என்ற கவிதை. கவிதையின் முழு மொழிபெயர்ப்பையும் தருவதற்கு முன் ராபர்ட் ப்ரௌனிங் கவிதைகளுக்கும் என் அக உலகுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி சில வார்த்தைகள்.

என் தந்தைக்கு ப்ரௌனிங் கவிதைகள் மிகவும் பிடிக்குமென்பது என் அனுமானம். எனக்கு அவர் அன்பளித்த புத்தகங்கள் எல்லாவற்றிலும் ப்ரௌனிங்கின் கவிதை மேற்கோள்களையே  எழுதி கையெழுத்திட்டுத் தந்திருக்கிறார்.  புத்தகப்புழுவான அம்மாவுக்கும் அப்பாவின் ப்ரௌனிங் மேற்கோள்கள் ஆச்சரியத்தையே தரும். எல்லாம் இண்டெர்மீடியெட் கோட் அடித்து கோட் அடித்து படித்தபோது உருப் போட்டது இப்பொழுது எதுவும் படித்ததில்லையாக்கும் என்பார் அம்மா. அப்பா அதற்கு எதுவும் பதில் சொன்னதாக நினைவில்லை. அவர் ஒரு ரகசிய கவிதை வாசகர் என்று எனக்கு மட்டுமாக நான் துப்புத் துலக்கிவைத்திருந்தேன். கல்லூரியில் ப்ரௌனிங் பாடப்புத்தகக் கவிஞர் என்பதால் அவ்வளவாக ஈடுபாடு ஏற்படவில்லை.  அப்பாவிடம் போர்ஹெஸுக்குப் பிடித்த கவிஞர்களில் ப்ரௌனிங்கும் டென்னிசனும் உண்டு என்று உற்சாகமாக ஒரு முறை சொல்லி அவருடைய ரகசிய வாசிப்பு உலகத்தைத் திறக்க வைத்தேன். ப்ரௌனிங் ஒரு மேஜிஷியன் என்றார் அப்பா.




ப்ரௌனிங் கவியாக உறுதிபூண்டார்

லண்டனின் சிவப்புச் சுழல் வழி பாதைகளில்
நான் விசித்திரத்திலும் விசித்திரமான அழைப்பினை
தேர்ந்தெடுத்துள்ளேன்
எந்த அழைப்புமே விசித்திரம்தான் என்றாலும் கூட
தத்துவவாதியின் கல்லினை
பாதரசத்தில் தேடிய ரசவாதியைப் போல
தினசரி வார்த்தைகளையெல்லாம்—
சூதாடியின் குறியிடப்பட்ட சீட்டுக்களாக, சாதாரண காசாக-
தோர்⁠2 அவற்றின் கடவுளாகவும் சத்தமாகவும்
இடியாகவும் பிரார்த்தனையாகவும் இருந்தபோது
அவை கொண்டிருந்த மாயாஜாலம் அனைத்தையும்
வெளியிட வைப்பேன்
இன்றைய மொழியில் சொல்வதானால்
என் பாணியில் நான் சொல்வேன் நிரந்தர பொருட்களை;
மகத்துவமிக்க பைரனின் எதிரொலியாய்
தகுதி பெற முயற்சிப்பேன்
இந்தத் தூசியாகிய நான்
ஒரு பெண் காதலைப் பகிர்ந்தால்
காயப்படுத்தமுடியாதவனாயிருப்பேன்
என் பா வட்டத்துள் வட்டமாய் சுழலும் சொர்க்கங்களின் 
பத்தாவது வெளியைத் தொடும்
ஒரு பெண் என் காதலை நிராகரிப்பாளென்றால்
அந்தத் துயரத்தை இசையாக்கி
காலத்தின் நிறைந்த ஆற்றில் ஒலித்துச் செல்ல வைப்பேன்
என்னையே நான் மறந்தபடியே வாழ்வேன்
லேசாகப் பார்த்து உடனே மறக்கும் முகமாவேன்
காட்டிக்கொடுப்பவனாய் இருக்க வேண்டிய யூதாசின்
தெய்வீகக் கடமையைச் செய்வேன்
தன் சகதியில் உழலும் காலிபானாய்⁠3 இருப்பேன்
பயமற்றும் நம்பிக்கையற்றும் சாகும்
கூலிக் கொலையாளியாவேன்
விதி திருப்பி அனுப்பிய முத்திரையை
பெரும் ஆச்சரியத்துடன் பார்க்கும்
பாலிக்ரேட்டீஸ்⁠4 ஆவேன்
நானே என்னை வெறுக்கும் நண்பனாவேன்
அந்தப் பெர்ஷியன் எனக்கு வானம்பாடியைத் தருவான் ரோம் எனக்கு வாளினைத்தரும்
முகமூடிகள், துயரங்கள், உயிர்த்தெழல்கள்
என் வாழ்வை நெய்தும் அவிழ்த்துமிருக்கக்
காலப்போக்கில் நான் ராபர்ட் ப்ரௌனிங் ஆவேன்



அடிக்குறிப்புகள்

1 Jorge Luis Borges ஐ தமிழில் 
ஹோர்ஹேலூயீஸ்போர்ஹெஸ்என்றுஎழுதவேண்டும்
2 Thor ஸ்கேண்டிநேவிய புராணங்களில் குறிப்பிடப்படும் இடி மழை கடவுள்
3 ஷேக்ஸ்பியரின் Tempest  நாடகத்தில் தனித்தீவில் வாழும் காட்டுமிராண்டி கதாபாத்திரத்தின் பெயர் காலிபான்
4 Polycrates see