Showing posts with label பொது விவாதம். Show all posts
Showing posts with label பொது விவாதம். Show all posts

Friday, September 2, 2016

போர்ஹெசின் கதாபாத்திரம் தேடிய ஒற்றை வார்த்தை கவிதை: "மௌனி"



மௌனி கதைகளைப் பற்றி நான் ஆறு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரே ஒரு “மௌனியின் நடை” என்ற சின்னஞ்சிறு கட்டுரை காவ்யா வெளியிட்ட ‘மௌனி இலக்கிய தடம்’ என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கட்டுரையின் துர்பாக்கியம் என்னவென்றால் அதை ஜெயமோகன் படித்துவிட்டார். எனக்குத் தெரிந்தே அந்தக்கட்டுரையை ஏழு முறை அவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அக்கட்டுரையை வித விதமாக வாசிக்கிறார்.  அவர் தளத்தில் இரண்டு பகுதிகளாக வெளிவந்த கட்டுரையில் ஒரு இடத்தில் நான் மௌனியின் நடை மொண்ணையானது என்று சொன்னேன் என்கிறார். எங்கே ஐயா அப்படி சொன்னேன் என்று நினைத்துக்கொண்டே மேலும் வாசித்தால் இன்னொரு இடத்தில் நான் எழுதியது முக்கியமான கட்டுரை என்கிறார். வேறொரு இடத்தில் என் பெயர் குறிப்பிடாமல் என் கட்டுரைப் பகுதி ஒன்றை விரித்து எழுதியிருக்கிறார். என்ன செய்ய? மௌனியாக இருந்துவிடலாம் பாரதி விவாதம் போல மௌனி விவாதம் ஒன்றை இப்போது தொடங்க வேண்டாம் என்பதுதான் என் உடனடியான எண்ணம். ஆனால் சுமார் பத்தாயிரம் வார்த்தைகளில் நீட்டி முழக்கி ஜெயமோகன் என்ன சொல்கிறார் என்றால் மௌனி புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், கநாசு முதல் நான் உள்ளிட்ட அத்தனை தமிழ் விமர்சகர்களும் மௌனிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதிகபட்சம், அவ்வளவு தேவையில்லை என்பது அவர் வாதம். இது முற்றிலும் தவறானது. மௌனியின் நடையை ஆராய்வதன் மூலம் நான் மௌனியின் மெய்யியல் என்ன என்பதை சுட்டிக்காட்டினேன். மௌனியின் மெய்யியல் என்னுடைய தத்துவார்த்த சார்புகளுக்கு எதிரானது. அதை நான் இப்போது விளக்கப் போவதில்லை. ஆனால் மௌனி கதைகளின் முக்கியத்துவம் இன்னும் அதிகரித்திருக்கிறது என்றுதான் சொல்வேன். மௌனியை உருப்போட்டு நாம் படிக்க வேண்டும்.  அழகியல் காரணங்களுக்காக. 

போர்ஹெசின் கதை ஒன்றில் ஒற்றை வார்த்தை கவிதையைத் தேடி செல்பவனைப் பற்றிய கதை  இருக்கிறது. என்னைப் பாடாய் படுத்திய கதை அது. ஒற்றை வார்த்தை கவிதை என்னவாக இருக்கும் என்று போர்ஹெசின் கதாபாத்திரமாகவே மாறி, விடாமல் யோசித்து பார்த்திருக்கிறேன். தவம் தவமாய் அந்த ஒரு வார்த்தைக்காக காத்திருக்கலாமல்லவா என்று நினைத்திருக்கிறேன். என்றோ ஒரு நாள் ஒரு மாயக்கனவில் மின்னலாகி வரும் ஒற்றை விரல் என் நெற்றிப்பொட்டில் தீண்ட உயிரின் அலையாய் அந்த வார்த்தை மேலெழும்பி வரும் என்று நான் இன்றும் நம்புகிறேன். அந்த வார்த்தை மௌனியின் கதைகளுக்குள்ளாகவே இருக்கிறது. “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?”, “சாவில் பிறந்த சிருஷ்டி”, “அழியாச்சுடர்”, “உலகம் அலுப்பு மயம், களைப்பு மயம்”, “எங்கிருந்தோ வந்தான்’, “கொஞ்ச தூரம்” “ ஆதாரம் தெரிந்தும் தவறை (பிரமை) தவிர்ப்பது எப்படி…தவறென உலகைக் காண்பதில்தான் போலும்”, “இருள், மறைவு, ஒளி, இசைவு முறை நியதினின்றும் நழுவியது போலும்” என நம்மை நிலைகுலையச் செய்யும் எத்தனை பதச்சேர்க்கைகள், எத்தனை வாக்கியங்களை மௌனி எழுதியிருக்கிறார்! அவருடைய கதைப்பிரதிகளில் ஒற்றை வார்த்தை கவிதையைத் தேடாமல் வேறெங்கு போய் தேடுவது? 

மௌனியின் கதை சொல்லலும் முக்கியமானது. “நினைவுச்சுவடு” கதையில் வரும் ஒரு பத்தியை கவனியுங்கள் “அவள் ஒரு விலை மாது. ஒரு காலத்தில் சேகருடன் உறவு கொண்டாடியவள். எத்தனையோ பேர்ககளின் அடிச்சுவட்டை தாங்கிய மணல் பரப்புத்தான் அவள் உள்ளம். முன் நடந்தவன் சுவட்டை அழித்து நடப்பவரும், நடக்கும்போதே சின்னத்தைக் களைந்து நடப்பவரும் உண்டு. யார், எப்படி நடந்தால் என்ன், மணல் பரப்பிற்கு நடப்பவர் யாரென்று உணர்வு உண்டா? மயங்கிய எண்ணங்களில்தானே இன்பக் கனவுகள் காண்பது?” வேறு யார் தமிழில் எந்தவித முன் தீர்ப்புகளும் இல்லாமல் மேற்சொன்னவாறு வாசக மனதையும் பார்வையையும் விசாலப்படுத்தும் விதத்தில் கதை சொல்லியிருக்கிறார்கள்?  அதுவும் இவ்வளவு குறைவான வரிகளில்?

போர்ஹெசோடு உணர்வுபூர்மாக என்னை இணைத்த இன்னொரு கண்ணி மௌனி. மௌனியின் கதைகளின் hallucinatory character என்னை வசீகரித்ததுபோல வேறெவருடைய கதைகளும் என்னை வசீகரித்திருக்கவில்லை. தப்பிவிட வேண்டும் தப்பிவிட வேண்டும் என்று மனதிற்குள் அரற்றிக்கொண்டே மௌனியை வாசிப்பவனாக நான் இருந்த போதிலும் மௌனியின் பிடியிலிருந்து விடுபட்டவனாக நான் என்றுமே இருந்ததில்லை. மௌனியின் ‘மனக்கோட்டை’ சிறுகதையில் உள்கதையாக வரும் குட்டிக் கதை அப்படியே போர்ஹெசின் கதை போலவே இருக்கும். படித்துப்பாருங்கள்:


 " சிறிது இளைப்பாறி, பிறகு நடக்கலாம், என ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். எதிரே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். கோட்டை கொத்தளங்கள், எட்டித் தெரியும் குன்றுகள் எல்லாம் எட்டி நகர்ந்து மறையத் துடித்து, கானல் சலனத்தில் தெரிந்தன. இந்தக் கோட்டையை இது வரையிலும் பார்க்கதவனானாலும், அதைப்பற்றி அனேக விஷயங்களைக் கேட்டும், படித்தும் தெரிந்து கொண்டிருந்தான். மறைந்த கோவில் வெங்கலத் தேரையும், கோட்டைப் பாதாளச் சுரங்க வழிகளையும், பராபரிச் செய்திகளென, இவன் கேட்டிருக்கிறான். திரேதாயுகத்தில், அதன் நிர்மாணம், ஸ்தல மகிமைப் புராணம், உண்மைக் கூற்றென சரித்திரம், கற்பனைக்கதிகள், முதலிய என்னவெல்லாமோ அதைப் பற்றி புத்தக ரூபமாகப் படித்து தெரிந்துகொண்டவன். இப்போது தனக்குத் தெரிந்ததெல்லாவற்றையும் நினைக்கும்போது, அபத்தமென, சிரிப்பு கூட தோன்றியது. பக்தியில் கோவிலுக்கு  வெங்கலத் தேரை வார்த்துவிட்டு, எதிரிகளை முறியடிக்க, விநோதமான குறுக்குப் பாதைகளை, வெகுயுக்தியுடன் கண்ட ஒரு மேதாவி வீரதீர சக்கரவர்த்தி, தொலைவிலே எதிர்க்கவரும் எதிரிகளை முறியடைக்க, அவர்களின் மத்தியில் திடீரெனப் புகவும், பிறகு தோற்றால் திடீரென மறைந்து கோட்டையை அடையவும், அநேக சுரங்கப்பாதைகளை அமைத்தான். ஓரு தரம் அவ்வகை செய்யத் தீர்மானித்து, அநேகரை, எட்டிய வெளியில் விரோதிகளெனக்கண்டு அவர்களிடை புகுந்து வீர தீர பராக்கிரம் செயல்கள் புரிந்து சுரங்க வழியே கோட்டையை அடையும் ஆவலில் தோற்று, மறைய நினைத்தபோது எல்லாம் மறந்துவிட்டது. அவர்கள் மத்தியிலே, அவர்களாகவே 'ஜே-ஜே' கோஷமிட்டு கோட்டையை அடைந்தான். அவர்களும் மறந்து, தாங்களென மதித்து, இவனையே அரசனாக்கி, கோட்டையை அடைந்து கைகட்டி கட்டளைக்குக் காத்திருந்தனர். அவர்களோடு வெங்கலத் தேரும், சுரங்கப்பாதைகளும் மறந்து மறைந்துவிட்டன. இந்திரன், பிரும்மஹத்தி தோஷ நிவாரணம், சுனையில் முழுகி சுவாமி தரிசனத்தில் கண்டது ….தற்போது ஒருவராலும் இந்திரனாக முடியாததினாலும், அதுவும் மறந்துவிட்டது. மறைய பாழடைந்து கொண்டிருக்கிறது. அந்த அரசன் அவன் தகப்பன் அவன் அவன் மகன் இவன் எனக் கொண்டு, கடல் கடந்து வாணிபம செய்தது இமயத்தை வென்றது, பேரவை கூட்டியது, முத்தமிழ் பரிமாறியது. அது இது எல்லாமும், மனப்பிராந்தியில் சரித்திரமாகி, கல்பனைகளுடன் உண்மையும் மறந்துவிட்டது. கோவில் கோட்டை குளம் எல்லாமுமே, இவன் பார்வைக்கு, ஒன்றெனத் தோனற, இப் பாழ் தோற்றம் இவெனெதிரில் மௌனமாக ஏங்கிப் புலம்பி நின்றன. கானல் சலனத்தில் எங்கேயோ எட்டிய வெளியையும் நாடிப் போகத் துடித்துக்கொண்டிருக்கிறது."⁠


 எதிரி ராஜனோடு சேர்ந்து உங்களுக்கு எதிராக நீங்களே போரிட்டு, வெற்றி பெற்று மீண்டும் ராஜாவாக முடி சூடுகிற கதை அளிக்கிற மன விரிவும், வரலாறு, காலம், தன்னிலை, யதார்த்தம் இவைகளுக்கு இடையே உள்ள உறவினைப் பற்றி கிடைக்கின்ற பார்வையும், அதனால் ஏற்படுகிற மன எழுச்சியையும் சொல்லி மாளாது.

ப.சிங்காரத்திடம் மௌனியை விட அதிகமான மின்னல் வாக்கியங்கள் இருக்கின்றன என்கிறார் ஜெயமோகன். இருக்கட்டும். இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் அவை எப்படி மௌனியின் முக்கியத்துவத்தை குறைக்கமுடியும்? 

மௌனியை காஃப்காவோடு ஒப்பிடவேண்டும் என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்திருக்கிறார் ஜெயமோகன். மனித வாழ்வின் அபத்தத்தைத் தீண்டிய எந்த எழுத்தாளனின் பிரதியிலும் காஃப்காவை நாம் பார்க்கலாம். இந்த ஒப்பீட்டில் பெரிதாக ஒன்றுமில்லை. 

மரபிலக்கிய பயிற்சி இல்லாததால் மௌனியின் மொழி வலுவற்று இருக்கிறது என்பது ஜெயமோகனின் இன்னொரு  கண்டுபிடிப்பு. மொழி அவ்வாறா இயங்குகிறது? அன்றொரு நாள் ஆட்டோக்காரர் ஒருவர் கண்டெய்னர் லாரிகளில் கோடி கோடியாய் பணக்கட்டுகள் பிடிபட்டதை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது தன் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்த, “கும்பித்தீ கூரையில பற்றி எரியுது சார்” என்றார். அந்த ஆட்டோக்காரர் கொங்கைத் தீ மதுரையை எரித்த சிலப்பதிகாரக் கதையை நிச்சயமாக வாசித்திருக்க வாய்ப்பில்லை. பின்னே எப்படி அவருடைய பேச்சில் சிலப்பதிகாரத்தின் மொழிப்படிமம் தடம் பதித்தது? ஏனெனில் மொழி இயங்கும் விதம் அப்படி. நீங்கள் தமிழ் மொழியை பாவிப்பவராக இருந்தாலே போதும் நீங்கள் தமிழ் மரபுக்குள் வந்து விடுகிறீர்கள். மௌனியின் “காதல் சாலை” என்ற கதையில் இந்த பத்தியை வாசியுங்கள்:”தனக்கு முன்னால் போடப்படிருந்த பெரிய வைக்கோல் போர், பழுப்பாக வைக்கோல் மாதிரியே தோன்றவில்லை. நன்கு காயாமல் பசுமை கலந்த பழுப்பிலேயே, உயர்ந்து, ஏதோ தோற்றம் கொண்டது. தூரத்தில் இருந்த வேலிக்கால் காட்டாமணக்கு செடியின் மீது ஒரு குருவி வாலை ஆட்டிக்கொண்டு கத்தியது. அது கத்திக்கொண்டே இறக்கும் போன்று தோன்றியது. ‘சீ சீ! அவள் போய்விட்டாள்’ என்றது அக்குருவி. “யார்? எங்கே?” என்றான் இவன். மிக வெட்கமுற்றுப் பறந்தோடிவிட்டது அக்குருவி. “குருவியே உனக்கு புத்தியில்லை. ஏன் கத்திக் கத்தி சாகிறாய்?” என்று வெற்று காட்டாமணக்கு செடியைப் பார்த்துச் சொன்னான். திடீரென்று எழுந்து நடக்கலானான். சிறிது சென்றவுடன் மற்றொரு முள் குத்த இவன் கீழே உட்கார்ந்தான். முள்ளைப் பிடுங்கி எறிந்தான். பக்கத்தில் ஒரு எருக்கஞ்செடி முளைத்திருந்தது. அதன் மலராத மொட்டுக்களை நசுக்கினான். அப்போது உண்டான சிறு சப்தத்தில் கொஞ்சம் ஆனந்தம் அடைந்தான்.“  இந்தப் பத்தியில் நீங்கள் ஒரு சங்க அகக்கவிதையின் சாயலை அடையாளம் காணாவிட்டால் உங்களுக்கு சங்க இலக்கியம் தெரியாது என்றுதான் அர்த்தம். மௌனிக்கு சங்க இலக்கியம் தெரியாதே என்று நீங்கள் கூக்குரலிடலாம். ஆனால் மேற்கண்ட பத்தியை எழுதியிருகிறாரே? ஒரு மொழியினை பயன்டுத்துவதாலேயே வந்து சேர்கின்ற கொடை அது. 

ஜெயமோகனின் பத்தாயிரம் வார்த்தைகள் கட்டுரையைத் தாண்டியும் மௌனியின் கதைகள் தொடர்ந்து நம் அகங்களை நோக்கி கண் சிமிட்டி காந்த அலைகளை வீசிக்கொண்டேதான் இருக்கும். ஏனெனில் இலக்கிய விமர்சனம் என்பது இலக்கிய பிரதியை வாசித்து பொருள்கோள் முறைகளை விசாலப்படுத்துவதுதானே தவிர இலக்கிய பிரதிகளின் ஆசிரியனை ஒரு அரசவை கொலு மண்டபத்தில் தகுதிக்கேற்ப நாற்காலி கொடுத்து அமரவைப்பதும் அல்ல ஏற்கனவே உடகார்ந்திருக்கும் ஆசனத்தைப் பிடுங்கி குப்புறத்தள்ளிவிடுவதும் அல்ல. அந்த மாதிரியான விமர்சனங்களை ஜெயமோகன் எழுதும்போதெல்லாம் என் எதிர்ப்புக் குரலை பதிவு செய்வது அவசியமாகிறது. மேலும் அரசவை கொலு மண்டபம் என்பதே ஒரு கடந்தகால அநாகரீகம்.

 மௌனியின் கதைகளை மீண்டும் மீண்டும் அணுக்கமாக வாசியுங்கள் நண்பர்களே.

சொல்ல மறந்துவிட்டேனே. போர்ஹெசின் கதாபாத்திரமாய் மௌனியின் கதைகளுக்குள்ளாக ஒற்றை வார்த்தை கவிதையை தேடினேன் என்றேனல்லவா, அது தவறான பாதை; உண்மையில் அந்த ஒற்றை வார்த்தை கவிதை: “மௌனி”. 


Monday, February 22, 2016

பாரதி விவாதம்- பெருந்தேவி கட்டுரை

நான்கு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த பாரதி விவாதம் பற்றி பெருந்தேவி  ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  அந்தக்கட்டுரை 'மலைகள்' இணைய தளத்தில் பிரசுரமாகி இருக்கிறது. அதை எனக்கு கவனப்படுத்திய பெருந்தேவிக்கு என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். பெருந்தேவியின் கட்டுரையை http://malaigal.com/?p=7891 என்ற சுட்டியில் வாசிக்கலாம்.

பாரதியின் கவிதைகளை நவ வேதாந்தத்திற்குள் வைத்து வாசிக்க வேண்டும் என்று வாதிடும் பெருந்தேவி நான் ஏற்கனவே பாரதியாரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு அவை அவரை எப்படி வேதாந்தத்திலிருந்து வேறு பட்ட மெய்யியல் பார்வையை பெற காரணங்களாக இருந்தன என்று எழுதியிருப்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

நான் முன்பு எழுதியது:

"சமணமும், பௌத்தமும், சைவமும், வைணவமும் தங்கள் மெய்யியல் உண்மைகளை ஒன்றினை வைத்து மற்றொன்றினை மறுத்து, உரையாடியே தங்களை புதுப்பித்துக்கொண்டன, அவையனைத்தும் தங்கள் வழிமுறைகளையும் தர்க்கவிவாதங்களையும் செயல்வடிவங்களையும் வெளிப்படையாகவே வைத்திருக்கிண்றன. எதையும் பூடகமாக்கவில்லை. பாரதியாரே தன்னுடைய மெய்யியல் மரபை கடுமையாக விமர்சனத்துக்குள்ளாக்கியே தன் கவிக்குரலில் ஆத்மார்த்தமும் அந்தரங்க சுத்தியும் ஏறச்செய்தார். பாரதியின் தத்துவ மரபு என்ற கட்டுரையில் முப்பால் மணி எழுதியுள்ளதை வாசியுங்கள்
 “தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் பிறப்பாலேயே அத்வைதிகள். இந்நிலையில் மேற்கூறிய அத்வைதக் கருத்தியல் பின்னணியிலேயே முதலில் பாரதியார் இருந்தார். அப்போது “தேகம் என்பது யான் அன்று, மேலும் அகவயமான யானும் பிரம்மம் அன்று, வாழ்வு என்பது கனவு” என ஏற்றிருந்தார். அதாவது சார்வாகம், உலகாயதம் போற்றியுரைத்த தேகாத்மம் என்பதை அப்போது இயல்பாகவே தமது சுயமரபு காரணமாக மறுப்புக்கொண்டிருந்தார், தேகமே ஆத்மாவாக உள்ளது, ஆத்மா எனத் தனியாக ஒன்றும் இல்லை என்பது தேகாத்ம வாதம், ஆனால் பாரதி இதை ஏற்கவில்லை, அவர் தேகம் வேறு, ஆத்மா வேறு, அவை தனித்தனி என்பதையே மேற்கொண்டு இறுதிவரை இப்படியே திகழ்ந்தார், "அகவயமான யான் என்பதே பிரம்மம் மற்றும் வாழ்வு என்பது கனவு" என்பன சங்கரரின் அகவய-அத்வைதம், இது அவருடைய சுயமரபு. இதிலிருந்துதான் அவர் மாறுபாடு அடைகிறார்.

1906 முதல் 1913 வரை அவரது வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. சொந்தக் குடும்பம், அரசியல், பத்திரிகை-எழுத்து என அவை பொலிவுபெற்றன. 1912-ஆம் ஆண்டில் அரசியல், பத்திரிகை ஆகியன தொடர்ச்சியற்றுவிட்டன. 1911-ஆம் ஆண்டில் குள்ளச்சாமி பழங்குப்பை, பழம்பொய் எனச் சுட்டிக்காட்ட, பாரதியார் கடந்தகாலத்திலிருந்து விடுதலை பெற்ற புதியவன் ஆனார். புதிய காற்றால் புதிய உயிராய்ப் பிறந்துவிட்டார். கோவிந்த ஞானியின் தொடர்பு கண்ட பின் எல்லாமுமே அனைத்துமே பிரம்மம், பரம்பொருள். தெய்வம், பரசிவம் எனத் தெளிந்தார். இதனோடு நிற்காமல் சம்சார விருத்திகள் பரம்பொருளின் விருத்திகள், செயல்கள் எல்லாம் சிவன் செயல்கள் எனத் தெளிந்து பகவத் கீதைக்கு முன்னுரை எழுதினார். விருத்தி என்பது இல்லையெனில் அழிவு, காதல் போயின் சாதல், விருத்தி என்றால் பிறப்பு-செயல்-மாற்றம்-இன்னொரு பிறப்பை ஈன்று விட்டு ஏகமாதல், இதுவே அத்வைத நிலை, முக்தி ஆகும் என்ற உறுதிக்கு வந்தடைந்தார். இதுவே அவரது மாற்றம், இயலுலக வாழ்வில் விருத்தி என்பது சமூக விருத்தி ஆகும்.” தன் மரபு மெய்யியலை விமர்சித்ததால்தான் பாரதிக்கு நம் அகத்தோடு பேசுகின்ற கவிக்குரல் கூடி வந்தது." பார்க்க: http://mdmuthukumaraswamy.blogspot.in/2011/10/blog-post_23.html 


பாரதியின் மெய்யியல் பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனத்தில் கொள்ளாமல் பெருந்தேவி வாதிடுவதால் அவருடைய மொத்த வாதமும் பிழைபட்டதாக இருக்கிறது. 


இரண்டாவதாக ஆத்மார்த்தமாக பேசும் கவிக்குரலை ஒரு வரலாற்று காலகட்டத்தில் கவிஞர்கள் எப்படி அடைகிறார்கள் என்பதை விளக்கத்தான் என்னுடைய பாரதி, டி.எஸ்.எலியட் ஒப்பீடே தவிர இரு கவிகளின் நவீனத்துவத்தை நேரடியாக ஒப்பிடுவதல்ல.


இன்னும் அணுக்கமாக பெருந்தேவி வாசிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். 

Wednesday, May 6, 2015

ஜெயமோகன் என்னை தகுதியிழக்க செய்துவிட்டார், என்னவொரு கொடுப்பினை!

திடீரென்று 2013 இல் நான் எழுதிய கட்டுரை ஒன்றிற்கு இன்று ஜெயமோகன் என்னை திட்டியிருப்பதைப் பார்த்து (பண்பாட்டாய்வும் எம்டிஎம்மும்) அவருக்கு கடிதமெழுத என் மின்னஞ்சலை திறந்தபோது அவர் எனக்கு 10.11.2014 அன்று எனக்கு எழுதியிருந்த கடிதமும் அதற்கு நான் எழுதிய பதிலும் கிடைத்தது. 10.11.2014 அன்று நான் மகாபாரதத்தை பற்றி,   பாரத பிரசங்கிகளைப் பற்றி அதிகமும் அறிந்த ஆய்வாளனாக, நாட்டாரியல் அறிஞராக ஜெயமோகன் பார்வையில் இருந்திருக்கிறேன்.  இந்த வாரம் சினிமா விமர்சன கட்டுரை ஒன்றை நான் எழுதியதும் நான் அவர் மதிக்கும் நாட்டாரியல் அறிஞர்கள் பட்டியலில் இல்லாமல் போய்விட்டேன். மேற்சொன்ன கட்டுரையில் அவர் எழுதியிருக்கிறார் :"ஆனால் அவரது சினிமா விமர்சனங்களைக் காணும்போது இவரது உண்மையான எல்லை இதுதானோ என்ற எண்ணமும் எழுகிறது". அதாவது நான் 2013இல் எழுதிய கட்டுரைக்கு 2015 இல் ஜெயமோகன்பதில் எழுதுவதற்கான காரணம் தெரிந்துவிட்டது. நீ நாட்டரியல் பார்வையிலிருந்தா உத்தம வில்லனை விமர்சிக்கிறாய் நீ ஒரு நாட்டாரியல் ஆய்வாளனே இல்லை போ என்று வணிக சினிமாவுக்கு அடியாளாக மாறியிருக்கும் ஜெயமோகன் என்னை தகுதியழக்க செய்துவிட்டார். என்ன ஒரு கொடுப்பினை! நான் பெரும் பாக்கியம் செய்தவன்.  இதுவல்லவோ ஜென்ம சாபல்யம்!

மற்றபடி, நீலியைப் பற்றி அவர் எழுதிய அபத்தக் கட்டுரைக்கும் அதற்கான என்னுடைய பதிலுக்கான சுட்டியும் ஜெயமோகனின் தளத்திலேயே இருக்கின்றன. தகுதிகளை விடுத்து, தர்க்கம் என்ன என்று பார்ப்பது அவரவர் விழைவையும், தேடலையும் பொறுத்தது.

கடிதங்களை கீழே தந்திருக்கிறேன்.

ஜெயமோகன் 10.11. 2014 அன்று எனக்கு எழுதிய மின்னஞ்சல்:

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய எம்.டி.எம் அவர்களுக்கு,

வெண்முரசு வரிசையில் முதற்கனல் மழைப்பாடல் வெளிவந்துள்ளது. வண்ணக்கடல் நீலம் வெளிவரப்போகிறது

இந்நாவல்வரிசையை இன்னும் அதிகமாக கொண்டுசெல்லாவிட்டால் அதை தொடரமுடியாது. மிகப்பெரிய முயற்சி. ஆகவே ஒரு வெளியீட்டுவிழா ஏற்பாடுசெய்திருக்கிறோம்

ஏற்கனவே உங்களிடம் அரங்கா சொல்லியிருந்தார்.. அப்போது நிதிச்சிக்கல். தேதிச்சிக்கல். இப்போது மீண்டும் உறுதிசெய்திருக்கிறோம்

வரும் நவம்பர் 9 அன்று. சென்னையில். மியூசியம் தியேட்டர் அரங்கில்

நீங்கள். கமலஹாசன் இளையராஜா, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் ஆகியோரை தமிழில் இருந்து அழைக்கிறோம்

எஸ்.எல்.பைரப்பா, எம்.டி வாசுதேவன் நாயர் இருவரையும் கன்னடம் மலையாளம் மொழிகளில் இருந்து. அவர்கள் இருவரும் மகாபாரதம் பற்றி எழுதியவர்கள்.

ஐந்து மகாபாரத நாட்டுப்புற கதைசொல்லிகளை கௌரவிக்கவிருக்க விரும்புகிறோம். அவர்களைப்பற்றி அதிகம் உங்களுக்குத்தான் தெரியும். நீங்கள் ஐந்துபேரை தேர்ந்தெடுத்து அவர்களைப்பற்றி ஒரு சிறிய குறிப்பையும் விழாவில் வாசித்து உதவவேண்டும் .

நீங்கள் விழாவுக்கு வந்து  கதைசொல்லிகளை கௌரவிக்கவேண்டும்

இது என் விண்ணப்பம்

உங்களை நேரில் சந்தித்து நண்பர்களும் நானும் விரிவாக பிற தகவல்களைச் சொல்கிறோம்

ஜெ
நான் அவருக்கு எழுதிய பதில்:
அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
‘வெண்முரசு' நாவல் வரிசைக்கான வெளியீட்டு விழா நடத்துவது அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். மகாபாரத பிரசங்கியார்களை கௌரவிப்பது மிகவும் நல்ல விஷயம்; அவர்கள் இப்போது எண்ணிக்கையில் அருகி வருகிறார்கள்.  ஐம்பது பேர்கள்தான் இப்போது மொத்தமாக இருக்கிறார்கள். அவர்களில் ஐவரை பிரபலங்கள் கூடும் சபையொன்றில் கௌரவப்படுத்துவது மிகவும் உன்னதமான காரியமாகும். ஆனால் ஐவரைத் தேர்ந்தெடுப்பது அவர்களை அறிமுகம் செய்து பேசுவது ஆகியவற்றுக்கு என்னை விட பொருத்தமான நபர் இரா.ஶ்ரீனிவாசன்தான்.  அவர் ‘நல்லாப்பிள்ளை பாரத’த்தினை இரண்டு பாகங்களாக பதிப்பித்தவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிகிறார். ‘புதிய பனுவல்’ என்ற கல்விப்புல தமிழ் இதழின் ஆசிரியர். அவர் மகாபாரத பிரசங்கியார்கள் கூடும் கூட்டத்தினை வருடந்தோறும் நடத்தி அவர்களுடைய மேம்பாடுக்காக உழைத்து வருகிறார். ஶ்ரீனிவாசனின் சில முயற்சிகளுக்குப் பின்னணியில் நான் இருந்தாலும் கூட அவரை அழைப்பதுதான் முறையானது. அவருடைய தொலைபேசி எண் 9841838878 மின்னஞ்சல் முகவரி: panuval@gmail.com 

நீங்களும் நண்பர்களும் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வாருங்கள். என் மனைவி ஆங்கியோவிடம் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தினைப் பற்றியும் சொல்லியிருக்கிறேன். அவளுக்கும் குழந்தைகளுக்கும் நண்பர்களின் வருகை எனக்கிருப்பது போலவே மிகவும் சந்தோஷமளிக்கக்கூடியதாக இருக்கிறது.

நன்றியும், வணக்கங்களும்
அன்புடன்,
எம்டிஎம்

————————————————
எம்.டி.முத்துக்குமாரசாமி

Friday, July 25, 2014

நண்பர் ஜெயமோகனுக்கு: மூலாதார ஆற்றல் சாத்வீக ஆற்றலே

அன்புள்ள நண்பர் ஜெயமோகனுக்கு,

நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் ‘காமமும் சாத்வீகமும்’ என்ற பதிவில் என்னுடைய தொடர்புடையதும் தொடர்பற்றதுமான மூன்று டிவீட்டுகளை ஒன்றிணைத்து வாசகர் அனுப்பிய கடிதமொன்றிற்கு பதிலளித்திருப்பதை வாசித்தேன். அதில் உங்கள் கட்டுரைக்கு தொடர்புடையது முதல் ஆற்றல் (காமம்) சாத்வீக ஆற்றலாக அடையாளம் காணப்படவேண்டும் என்ற என்னுடைய டிவீட் மட்டுமே. 

நமது யோக மரபுகள் பெரும்பானவற்றில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை, சகஸ்ரம் ஆகிய ஏழு சக்கரங்களையும் உடலின் ஏழு புள்ளிகளில் இயங்கும் ஆற்றல்களாக உருவகித்து பல சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன; நீங்கள் பிரசுரித்தது போல நம் ஓவிய மரபுகளில் கிடைக்கும் இந்த சித்திரங்கள் பலவற்றை நான் சேகரித்தும் வைத்திருக்கிறேன். பிற்காலத்திலான இந்த சித்திரங்கள் ஏழு சக்கரங்களாக உருவகிக்கப்படும் மனித உடலில் செயல்படும் ஆற்றல்களை ஒன்றோடு ஒன்று தொடர்பற்றவையாகவும் ஒரு சக்கரத்தினை கிழித்து மேல் நோக்கி எழுகிற குண்டலினி விசையே அவற்றைத் தொடர்புபடுத்துவதாகவும் பொதுக்கருத்து உருவாக காரணமாக இருந்தன; இல்லை இந்த வகை சித்திரங்கள் அவ்வாறாக உருவாகிவிட்ட பொதுக்கருத்தின் பிரதிநிதிகளாகவும் இருக்கலாம். 

ஆனால் பதஞ்சலியின் பிரம்ம சூத்திரம் ( குறிப்பாக சமாதிபாதம் -அதற்கு கிருஷ்ணமாச்சாரியார் எழுதிய தமிழ் மொழிபெயர்ப்பும் உரையும் கூட இருக்கின்றன), திருமந்திரம், சௌந்தர்யலகிரி, ஶ்ரீவித்யா தியான முறைமை, கிரியா யோக மரபு ஆகியன உண்மையில் எழு சக்கரங்களில் இயங்கும் ஆற்றல்களும் இயற்கையிலேயே தொடர்புடைய ஒற்றை ஒளிநாக சக்தி என்றே உருவகிக்கின்றன. விநாயகரை முதன்மைக்கடவுளாகக் கொண்டு வளர்ந்த கணாதிபத்யம் கணபதியை மூலாதார சக்கரத்தின் கடவுளாக உருவகிப்பதும், அதை பிற மரபுகள் ஏற்றுக்கொண்டதும் நமக்கு தெரிவிப்பது என்னவென்றால் மூலாதார ஆற்றலை சாத்வீக ஆற்றலாக அறிவதில் நமக்கு உள்ள தடைகளை, விக்னங்களை கணபதி தியானம் விலக்கும்; நாசம் செய்யும் என்பதே.

இதன் தொடர்ச்சியும் சூட்சுமமும் என்னவென்றால் ஏழு சக்கரங்களும் அவற்றின் ஆற்றல்களும் உடலில் மூளையில் அடையாளம் காணப்படவேண்டும்; அல்லது மூளையின் நீட்சியாக முதுகுத்தண்டும் அதன் நரம்பு நீட்சிகளும் அறியப்படவேண்டும். காகபுசுண்டரின் பெருநூல் மனிதன் தலைகீழாக நட்டு வைக்கப்பட்ட செடி என்று மூளைக்குள்ளாகவும் அதன் நீட்சியான முதுகுத்தண்டினையும் அவற்றிலுள்ள சக்கர தொடர்புறுத்துதல்களையும் உருவகிக்கிறது. இந்த மூளை மைய அத்தனை சக்கரங்களிலும் இயங்கும் ஒற்றை ஆற்றல் என்ற கருத்தாக்கமே வைத்திய சாத்திரங்களிலும், களரி உள்ளிட்ட வர்மக்கலைகளிலும் காணக்கிடைக்கிறது.

மூலாதார ஆற்றலை சாத்வீக ஆற்றலாக அடையாளப்படுத்திய புத்தர் இதை  தன்னுடைய சாரநாத் உரையில் விளக்கி தர்மசக்கரம் சுழல்வது மனித உடலிலும் பிரபஞ்ச இயக்கத்திலும் தொடர்புற்றிருப்பதை சொல்கிறார். சமணம் மனித உடலிலும் பிரபஞ்சத்திலும் இயங்கும் ஜீவசக்தி மொழிவழி விரிவிலும் செயல்வழி ஒழுகிலும் லயம் பெறுவதைச் சொல்கிறது. மேல்சித்தாமூர் சமணக்கோவிலில் உள்ள சுவர்சித்திரம் இதற்கான சிறந்த விளக்கம்; சமண முனிவர்கள் தயாரித்த அகராதிகளின் பின்புல சிந்தனையும் அதுதான்.

ஒரு புத்தகமாக விரித்து எழுத வேண்டிய பொருள் இது. வெகு சுருக்கமாக எழுதியிருக்கிறேன் ஆனால் மூலாதார முதல் ஆற்றலே சாத்வீக ஆற்றல்தான் என்பதினை விளக்குவதற்கு இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.  

அன்புடன்


எம்.டி.எம் 

Tuesday, February 4, 2014

லௌகீக ஞானம்


குறிப்பு 1: 


'முனைவர்' 'பேராசிரியர்' சாருநிவேதிதா தம் பள்ளியில் பயிலும் மாணாக்கர் நிர்மல் 
கூகுலில் தேடினால் எளிதில் கிடைக்கக்கூடியதான மிலோரெட் பாவிச்சின் நாவலின் 
பெண் பிரதியிலும் ஆண்பிரதியிலும் உள்ள வித்தியாசங்களை எனக்குச் சுட்டிக்காட்டி நான் தகவல் பிழை செய்ய நேரிட்ட போது மடக்கிவிட்டதாக பெருமிதம் அடைந்திருக்கிறார். பேராசிரியருக்கும் மாணாக்கருக்கும் கூகுல் தொடர்ந்து துணையிருக்க வாழ்த்துகள். பதினாறே வரிகளின் வித்தியாசத்தினால் ஒரே நாவலின் ஒரு பிரதி எப்படி பெண் பிரதியாயிற்று, இன்னொரு பிரதி எப்படி ஆண் பிரதியாற்று என்று கற்றுணர்ந்த மாணவர் விளக்கினால் நல்லது. மாணாக்கரின் இலக்கிய பிரயாசைக்கு பேராசிரியரும் மனமுவந்து உதவலாம்.




குறிப்பு 2: 


‘உன்னிடம் தவறாக நடந்துகொண்டதற்காக என்னை நானே விளாறிக்கொள்ள வேண்டும்’ என்று எழுதுகிற தருண் தேஜ்பாலுக்கு பதிலெழுதுகிற இளம்பெண் ‘ நீ என்னுடைய தந்தையின் நண்பனில்லையா (எனவே தந்தையின் ஸ்தானத்தில் இருப்பவனில்லையா) என்று சொல்லி உன்னிடம் எத்தனை முறை கெஞ்சினேன்’ என்கிறாள். 

தன் பிள்ளை-பிறர் பிள்ளை- ஊரார் பிள்ளை அனைவரும் சமம் என்பதே தன் ஞானம் என்று பறைசாற்றுகின்ற ஞானவான் சாருநிவேதிதாவுக்கு தருண் தேஜ்பாலால் பாதிக்கப்பட்ட பெண் தன் பிள்ளையாகக் கண்ணில் தெரியவில்லை. தொடர்ந்து தருண் தேஜ்பாலுக்கு ஆதரவு தெரிவித்து எழுதிக்கொண்டிருக்கிறார். ஏனெனில், ஷீரடி சாய் பாபாவின் அருள் கிடைத்து அவருடைய புத்தகம் ஆங்கிலத்தில் பிரசுரமாகிறதோ இல்லையோ தருண் தேஜ்பாலின் தயவு இருந்தால்தான் புத்தகம் ஆங்கிலத்தில் பிரசுரமாகும். இந்த ‘லௌகீக ஞானம்,’ சாருநிவேதிதா என்னுடைய ‘சாதனைகளாக’(-சம்பாதித்து வீடு கட்டியது, கல்யாணம் செய்துகொண்டது, பிள்ளைகளைப் பெற்று படிக்கவைப்பது, சர்வதேச பல்கலைக்கழகங்ககளில் பயிற்றுவிப்பது என) பட்டியலிட்டிருக்கும் லௌகீக வெற்றிகளை ஒப்பிடுகையில் மிகவும் உயர்ந்ததே. தன் படிப்பு, எழுத்து ஆகியவற்றின் மூலம் சாருநிவேதிதா அடைந்திருக்கும் இந்த லௌகீக ஞானாம்ருதசாகரத்தில் அவர் வாசகர்கள் இன்புற்று திளைப்பார்களாக. நிற்க.

மிலொரெட் பாவிச் எழுதிய ‘டிக்‌ஷனரி ஆஃப் கஸார்ஸ்’ 1988 ஆம் வருடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்தது. அந்த வருடமோ அதற்கு அடுத்த வருடமோ நடந்த குற்றாலம் கவிதைப் பட்டறையில் கவிஞர் பழமலை அவர்களுக்கு நான் ‘டிக்‌ஷனரி ஆஃப் கஸார்ஸ்’ நாவல் பற்றி ‘பாடம் எடுத்ததாக’ சாரு நிவேதிதா பிரசித்தமாக முன்பு எழுதியிருக்கிறார். 

இப்போது அவர் பாவிச்சின் நாவலை முப்பது வருடங்களுக்கு முன்னாலேயே -நாவல் ஆங்கிலத்தில் வெளிவருவதற்கு முன்பே-வாங்கிவிட்டதாக சொல்கிறார். அப்போது நான் பாலகன் என்றும் எழுதுகிறார். அப்படியெல்லாம் மாயங்கள் நம் உலகில் நடக்கும்தானே.

போகட்டும். இப்போதாவது நிர்மலோ அவருடைய ஞானத்தந்தையான சாருநிவேதிதாவோ ‘டிக்‌ஷனரி ஆஃப் காஸார்ஸ்’ நாவலின் ஆண் பிரதி பெண் பிரதி விவகாரத்தை விளக்கலாம். 

நண்பரே சாருநிவேதிதா நான் எதற்காக இதையெல்லாம் எழுத நேரிட்டதென்றால் நான் உங்களை முட்டாள் என்று எந்தக் காலத்திலும் சொல்லவில்லை என்பதை விளக்குவதற்காக. லௌகீகத்தில் தேர்ந்த நீங்கள் எப்படி முட்டாளாக இருக்க முடியும்? 

இதில் எங்கிருந்து வருகிறது படித்தவனின் சூதும் வாதும் என்பதினை அவரவர் புரிதலுக்கு விட்டு விடுகிறேன்.


குறிப்பு 3:

லட்சுமி மணிவண்ணனின் கவிதை ஒன்று;

"எனது பெண்ணைக் 
கண்டுபிடிக்க முடிவதில்லை
அவள் எல்லா பேருந்து 
நிலையங்களிலும்
என் கண்களில் படாமல் ஒளிந்து
கொள்கிறாள்
அவளைத் தேடிச் சலித்த கண்களில்
முலைகளும் பிருஷ்டங்களுமே 
படுகின்றன"

இந்த லட்சுமி மணிவண்ணனின் கவிதை சாருநிவேதிதாவிற்காகவே எழுதப்பட்டதோ?


குறிப்பு 4:

சதா சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. ஐந்து பக்க கட்டுரை ஒன்றாவது எழுதி எப்படி தருண் தேஜ்பால் -தாஸ்தயேவ்ஸ்கி, கஸான்ஸாகிஸ் ஆகியோருக்கு நிகரானவர் என்று சாரு நிறுவவேண்டும்









Sunday, November 24, 2013

மிஷெல் ஃபூக்கோவின் முக்கிய உரைகள்








ஃபேஸ்புக்கில் சமணர் கழுவேற்றம் குறித்து நடந்தவரும் விவாதத்தைத் தொடர்ந்து வாசித்துவரும்  சேதுராமன் ஃபூக்கோவின் புத்தகங்களுக்கு அல்லது உரைகளுக்கு சுட்டிகள் தர முடியுமா என்று கேட்டு எழுதியிருந்தார். அவர் பொருட்டு ஃபூக்கோவின் உரைகளுக்கான இந்த சுட்டிகளைத் தருகிறேன். பயனுள்ளதாக இருக்கின்றனவா என்று கேட்டுப்பாருங்கள். 

சமணர் கழுவேற்றம் பற்றிய விவாதத்திற்கான ஃபேஸ்புக் சுட்டி https://www.facebook.com/mdmuthukumaraswamy/posts/10151810604068995?notif_t=like 



Sunday, August 25, 2013

பண்பாட்டு தேசியவாதத்தின் அபத்தங்கள்


பண்பாட்டு தேசியவாதத்தின் விசித்திர கற்பனைகளும், அபத்தங்களும், அபாயங்களும் நிறைந்த கட்டுரை ஒன்றினை 'சங்குக்குள் கடல்-தேசமென்னும் தன்னுணர்வு' என்ற தலைப்பில் ஜெயமோகன் தன் தளத்தில் பிரசுரித்துள்ளார். ஜெயமோகனின் இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்      http://www.jeyamohan.in/?p=38716 இது அவர் சுதந்திர தினத்தன்று திருப்பூரில் ஆற்றிய உரையாம்! 'மீனுக்குள் கடல்' கவிதைத் தொகுதியை எழுதிய பாதசாரி தன் கவிதையின் தலைப்பு சங்குக்குள் ஓலமிடும் கடலாக ஜெயமோகனால் மாற்றப்பட்டிருப்பதை அறிந்து நெஞ்சில் அடித்துக்கொண்டு விம்மியிருக்க வேண்டும். 

'நம்முள் உறையும் வரலாறு எது? தேசம் எது?' என்று வீராவேசமான கேள்விகளை எழுப்பி தனக்கு தன்னுணர்வு வெகு இளமையிலேயே தோன்றிவிட்டதாக அறிவிக்கும் ஜெயமோகன் -அதாவது மூன்று வயதில்!- தன்னை தன் பெற்றோர் திருவிதாங்கோடில் உள்ள குடும்ப வீட்டிற்கு அழைத்துச் சென்று குடும்பக்கோவிலில் நீலியைக் காண்பித்ததை முதல் தருணமாகக் குறிக்கிறார். இரண்டாவது தன்னுணர்வு தருணம் ஆறு வயதில் அவருடைய தமக்கை நீலியால் பீடிக்கப்பட்டு சன்னதம் கொண்டு ஆடியதைப் பார்த்தபோது ஜெயமோகனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இருக்கட்டும். இரண்டாவது தருணத்தை ஏற்படுத்திய இடம் இன்னும் விசேஷமானது ஏனென்றால் அது மேலாங்கோட்டு நீலி நின்ற இடம் அங்கே பல நடுகற்கள் இருக்கின்றன.  நீலியை ஆதி தாயாக, தாய் தெய்வமாக வர்ணிக்கும் ஜெயமோகன் நீலியை வனத்தின் தெய்வம், நீல கேசி என்று நீட்டிப்பது மட்டுமல்ல தொல்கபிலர் பாடிய குடைவரை எழுதிய தொல்தமிழ்ப்பாவையே நீலிதான் என்றும் ஒரு போடு போடுகிறார்.

இங்கே சில கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.

நீலி தாய் தெய்வ வழிபாட்டினைச் சேர்ந்தவளா?
சமணத்திற்குள் 'புகுந்தவளாக' ஜெயமோகனால் குறிக்கப்படுகின்ற நீலியும், பழையனூர் நீலி, கள்ளியங்காட்டு நீலி, போன்ற நீலிகளும் ஒரே நீலிதானா?
நீலி கதைகள் நீலியைப் பற்றி என்ன சொல்கின்றன? 
'நீலிக்கண்ணீர் வடிக்காதே' என்று போலியாகக் கண்ணீர் வடிப்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் பேச்சு வழக்கு இருக்கிறதே ஆதி தாய் தெய்வமா நீலிக் கண்ணீர் வடிக்கக்கூடியவள்?

நண்பர்களே ஜெயமோகன் ஒன்றும் வழக்கொழிந்து போய்விட்ட நீலி வழிபாட்டினைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவில்லை. பல்வேறு நீலி கதைகள் வில்லுப்பாட்டில் தென் மாவட்டங்களில் இன்றும் பாடப்படுகின்றன.

சு. சண்முக சுந்தரம் 'பழையனூர் நீலி கதையை' புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். பார்க்க http://tamilhindu.secretstories.org/t56580-topic 

பார்பரா ஷூலர் என்ற ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அருகே உள்ள பழவூர் என்ற கிராமத்தில் நடைபெறும் இசக்கியம்மன் வழிபாட்டினையும் நீலி கதைப் பனுவல்களையும் ஆராய்ந்து ஆயிரம் பக்க ஆய்வு நூல் ஒன்று எழுதியிருக்கிறார். பார்க்க http://www.sai.uni-heidelberg.de/abt/IND/publikation/pub_pdf/schuler09.pdf 
 திருவாலங்காடு தல வரலாறு, திருவாலங்காட்டிற்கு அருகிலுள்ள பழையனூர் கிராமத்தில் நீலியினால் பெரும் அழிவுக்கு ஆளாக்கப்பட்டு தீப்பாய்ந்து இறந்து போன வேளாளர்களின் கதையைச் சொல்கிறது. பழையனூர் நீலி கதையையும் திருவாலங்காடு தல புராணத்தையும் சுருக்கமாக வாசிக்க விரும்புபவர்கள் கீழே நான் தந்திருக்கும் சுட்டிகளில் அவற்றை வாசிக்கலாம்.

நீலி கதைகளின்படி நீலி தாயல்ல, பேய். நீலி என்ற பேய் குல அழிவினை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக அவளுக்கு பிரீதி செய்யும் பொருட்டு கொடை விழாக்களும் கிராம வழிபாடுகளும் செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே படித்தானவை அல்ல.  

இந்த இடத்தில் சில பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். ஒரு நாள் நான் திருவாலங்காடு கோவிலுக்குச் சென்று அங்குள்ள காரைக்காலம்மையார் பஞ்சலோக சிலையை பார்த்து வரலாமென்று கிளம்பிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் விக்கிரமாதித்யன் என்னைப் பார்க்க வந்தார். அவரும் திருவாலங்காடு வருவதாக சொல்ல, மேலும் எங்களோடு வருவதற்கு விருப்பமுள்ள வேறு நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவாயிற்று. கடைசியில் நான், விக்கிரமாதித்யன், இளையபாரதி, நடேஷ் எல்லோருமாய் திருவாலங்காட்டையும் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள வேறு கோவில்களை பார்த்து வரலாம் என்று கிளம்பினோம். திருவாலங்காட்டு கோவிலில் பழையனூர் நீலி கதைக்கும் கோவிலுக்கும் உள்ள தொடர்பினைப் பற்றி விசாரித்தேன். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செட்டி ஒருத்தனின் மனைவி நீலி. செட்டி விலைமாதுகளிடம் செல்லும் பழக்கம் உடையவன். அதை அவன் மனைவி நீலி கண்டித்ததால் நீலியை செட்டி கொன்றுவிட்டான். கொலை செய்யப்பட்ட நீலி பேயாக மாறி செட்டி பழையனூருக்கு அருகிலுள்ள காட்டின் வழி பயணம் செய்துகொண்டிருந்தபோது அவனைக் கொல்ல முயற்சி செய்தாள். ஆனால் செட்டியிடம் ஒரு மந்திர வாள் இருந்ததால் நீலியால் அவனை எதுவும் செய்ய முடியவில்லை. நீலி உடனே ஒரு அழகிய இளம் பெண்ணாக உருவெடுத்து கைக்குழந்தையுடன் தோன்றினாள். செட்டி பழையனூரை அடைந்தபோது நீலியும் இளம்பெண்ணாக பின்னாலேயே குழந்தையுடன் தொடர்ந்து வந்து சேர்ந்தாள். பழையனூரில் இருந்த எழுபது வேளாளர்களிடம் நீலி தன் கணவன் தன்னையும் தன் குழந்தையையும் சேர்த்துக்கொள்ளாமல் தன்னிடமுள்ள வாளினால் விரட்டி விடுகிறான் என்று நீலிக்கண்ணீர் வடித்து புகார் செய்தாள். வேளாளர்கள் செட்டியை நீலியுடன் சேர்ந்து இருக்கும்படி சொன்னார்கள். செட்டி நீலி ஒரு பேய் அவளுடன் தன்னால் சேர்ந்து இருக்க முடியாது என்று வேளாள்ர்களிடம் முறையிட்டான். ஆனால் பழையனூர் வேளாளர்கள் வணிகனின் பேச்சை நம்பாமல் நாங்கள் எழுபது பேர் இருக்கிறோம் பார்த்துக்கொள்கிறோம் என்று வாக்களித்து அவனை நீலியுடன் இரவு தங்குமாறு செய்தனர்; அவனுடைய மந்திர வாளினையும் அவனிடமிருந்து பறித்து வைத்துகொண்டனர். அதுவரைக் கள்ளக் கண்ணீர் வடித்த நீலி கள்ளப்புன்னகையோடு செட்டியோடு சென்று அன்றிரவு அவனைக் கொடூரமாகக் கொன்றுவிட்டாள். மறு நாள் செட்டி கொலையுண்டதை அறிந்த வேளாளர்கள் தாங்கள் வாக்களித்தபடி செட்டியைக் காப்பாற்ற முடியவில்லையே என்று வருந்தி 69 பேர் தீப்பாய்ந்து மாண்டனர். குலம் முழுவதும் நாசமாய்ப்போனது. பல்லாண்டுகளுக்குப் பின் தப்பிபிழைத்த ஒருவரால் குலம் தழைக்க அந்தக் குலமரபினர் திருவாலங்காடு ஈசனுக்கு தங்கள் வயற்காடுகளில் விளைந்த முதல் நெல்லை படைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது பழையனூர் நீலி கதையின் ஒரு வடிவம்; இக்கதைக்கு சிறு சிறு வேறுபாடுகளுடன் பல வடிவங்கள் இருக்கின்றன. நீலி செட்டியைக் கொலை செய்வதற்கு சகல நியாயங்களும் இருக்கின்றன. ஆனால் பழையனூர் வேளாளர்களின் அழிவுக்குக் காரணமாக அவள் ஏன் இருக்க வேண்டும்? 

சிலப்பதிகார கண்ணகி கதையிலும் கண்ணகி கோவலன் கொலையுண்டதற்கு பாண்டிய மன்னனை அழித்தது நியாயமானது; ஆனால் மதுரையை முழுக்க எதற்காக எரித்து அழிக்கவேண்டும்? கேரளத்தில் மன்னார் பழங்குடியினர் மத்தியில் கோவலன் கதை வாய்மொழிக் கதையாக இன்றும் சொல்லப்பட்டு வருகிறது. கோவலன் மன்னார் பழங்குடியினருக்கு மூதாதையாகக் கருதப்படுகிறவன். மன்னார் பழங்குடியினர் கோவலன் கதையை சன்னதம் கொண்டாடி தன் மூதாதையரின் சந்நிதியில் சொல்லிச் சொல்லி கண்ணகி மதுரையை எரித்தது என்ன விதத்தில் நியாயம், கோவலன் சந்ததியினர் ஊர் விட்டு ஊர் ஓடுபவர்களாக மாறியது எந்த விதத்தில் நியாயம் என்று தங்கள் குலச் சடங்குகளின்போது இன்றைக்கும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய பிரார்த்தனையும் குல நாசம், பொதுவான பேரழிவு மீண்டும் நிகழ்ந்துவிடாமால் இருக்க வேண்டும், நீலியின்  தாக்கத்திற்கு கண்ணகித்தாயார் மீண்டும் ஆட்படாமல் இருக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. 

திருவாலங்காட்டு கோவிலில்  குல நாசத்தின் நினைவுச் சின்னங்களாக வேளாளர்கள் தீப்பாய்ந்த மண்டபமும் அதில் யாகம் வளர்த்து வேளாளர்கள் தீப்பாய்வது போல உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன; அவற்றுக்கு எதிரில் சாட்சி பூதேஸ்வரர் சந்நிதியும் தீப்பாய்ந்த இடமும் உள்ளன. பழையனூர் வேளாள மரபினரும் பிற்காலத்தோரும் அறியும் வகையில் “கூழாண்டவர் கோத்திரம் சாதாசேர்வை” என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோவிலின் முன் வாயிலில் உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற்படியாக வைத்துள்ளனர். அந்தக் கல்லின் முன்னால் நின்று ஒருவர் நீலியின் கதையைச் சொல்ல நாங்கள் கேட்டோம். கேட்டுக்கொண்டிருந்த இளையபாரதிக்கு வியர்த்து கொட்டிவிட்டது. அவர் மிகுந்த பதற்றத்திற்கு உள்ளானார். கோவிலிலிருந்து உடனடியாகக் கிளம்பிவிடவேண்டும் என்று எல்லோரையும் துரிதப்படுத்தினார். எனக்கு இளையபாரதியின் பதற்றம் புரிபடவில்லை. குல நாசக் கதையினை கேட்கும் எவருக்கும் இந்தப் பதற்றம் உண்டாகக்கூடியதே நீங்கள் மரபிற்கு வெளியே இருக்கிறீர்கள் இளையபாரதி மரபுக்குள்ளே இருக்கிறார் என்று விக்கிரமாதித்யன்  பிறகு என்னிடம் விளக்கம் சொன்னார். 

பின்னாளில் பலசமயங்களில் நீலி வில்லடி கதைகளைக் கேட்கச் சென்றபோது, நீலியின் ஒரு வடிவமான இசக்கியம்மன் கதை வில்லடிப்பாட்டுகளைக் கேட்டபோதெல்லாம் நீலி அவளுடைய அழிக்கும் சக்தியின் பொருட்டே வழிபடப்படுகிறாள் தாய் தெய்வமாக அல்ல என்று தெரிந்து கொண்டேன். முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள இசக்கியின் சுடுமண் சிற்பங்களில் பல தன் வாயில் அப்போதுதான் பிறந்த சிசுவை தன் வாயில் வைத்து கோரைப்பற்களால் கடித்துக்கொண்டிருப்பதான பல சிற்பங்கள் இருக்கின்றன. வாயில் சிசுவை வைத்து எந்த தாய் தெய்வமாவது கடித்துக்கொண்டிருக்குமா ஜெயமோகன்? 

நீலி கோவில்களின் அருகே நடுகற்கள் காணப்படுவது இயல்புதான். தட்சிண பீடபூமியில் நடுகற்கள் எதற்காக நடப்பட்டிருக்கின்றன? பாளயங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிபுரிந்த கேசவராஜின் முனைவர் பட்ட ஆய்வேடு நடுகற்களைப் பற்றியது. அவருடைய ஆய்வேடு சொல்கிறது விபத்தில் அகால மரணம் அடைந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள், கொலையுண்டவர்கள், போரில் மரணமடைந்தவர்கள் ஆகியோரின் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன; குலதெய்வமாகவும் பின்னாளில் வழிப்படப்பட்டன என்று. மூதாதையருக்கும் இறந்து போனவர்கள் அனைவருக்கும் நினைவுக்கற்கள் எழுப்பும் பழக்கம் பெருங்கற்களின் காலத்தில் உலகம் முழுவதும்-ஐரோப்பா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, மைய ஆசியா என இந்திய நிலப்பகுதி தவிர- பரவியிருந்தது. வரலாற்று காலகட்டத்திற்கு முந்தையது எனக் குறிக்கப்படும் பெருங்கற்களின் காலம் உலகம் முழுவது பரவியிருந்ததை http://www.megalithic.co.uk சுட்டியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கிறித்தவ கல்லறைகளில் மறைந்தவர்களின் பெயர் பொறித்த கற்களை நடும் வழக்கம் நினைவுக்கற்களின் மரபின் நீட்சியேயாகும். 

ஒரு பண்பாட்டு வெளிக்குள்ளாகவே நீலி கதை மற்றும் வழிபாட்டுக்கு இரு வேறுபட்ட உணர்வெழுச்சிகள் (ஒன்று ஜெயமோகனுடையது இன்னொன்று இளையபாரதியுடையது) இருக்கும்போது, நடுகற்கள்/நினைவுகற்கள் உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும்போது, நீலி கதையையும் வழிபாட்டினையும் நடுகற்களையும் வைத்து  வரலாற்று தேசியத் தன்னுணர்வு புராதனமாக இருப்பதாக ஜெயமோகன் எப்படி கதைக்க முடியும்? தவிர ஆங்கில ஆய்வாளர்கள் ஆராய்ந்த குகை ஓவியங்களையும் நீலி வழிபாட்டினையும் வேறு ஜெயமோகன் தொடர்புபடுத்தி தன்னுடையது ஆய்வுக்கட்டுரை என்ற மயக்கத்தினையும் நீலி தாய் தெய்வ வழிபாட்டிற்கு ஒரு இடையறாத தொடர்ச்சி இருப்பதுபோலவும் காட்டிக்கொள்கிறார். அவர் ஏதேனும் ஒரே ஒரு குகை ஓவியத்தையாவது தன் வாதத்திற்குப் பொருத்தமாகக் காட்டமுடியுமா?

ஆதிகாலத்திலிருந்து தொடரும் தாய்தெய்வ வழிபாடு ஒன்றினை தேசத் தன்னுணர்வோடு இணைக்கும் ஜெயமோகனின் கற்பிதம் அழகானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் அது உண்மையானதும் அல்ல தர்க்கபூர்வமானதும் அல்ல சான்றுகள் உடையதும் அல்ல. வர்ஜீனியா வுல்ஃபின் Orlando நாவலின் கற்பனையை ஒத்தது. நாவலுக்கு உதவும்; வரலாற்று ஆராய்ச்சிக்கு உதவாது.   

ஜெயமோகனின் தர்க்க பிழைகள் என்னென்ன?

முதலில் அவர் தன்னையே எல்லாவற்றிற்கும், எல்லோருக்குமான அளவுகோலாகக் கருதிக்கொள்கிறார். தன் யூகங்கள் உண்மையானவையா என்று சோதித்து கூட அவர் பார்ப்பதில்லை. உதாரணமாக தன் குடும்பக் கோவிலின் நீலி கதை என்ன என்று அவர் தன் பெற்றோரையோ தமக்கையையோ கேட்டிருக்கலாம். அல்லது அவர் பெரிதும் மதிக்கக்கூடிய நாட்டுப்புறவியல் அறிஞரான ஏ.கே.பெருமாளிடம் விசாரித்திருக்கலாம்.   

இரண்டாவதாக இந்த குழந்தை ஜெயமோகன் படு dangerous fellow ஆக இருக்கிறான்; வேறொரு உரையில் குழந்தை ஜெயமோகன் ஆசாரி ஒருவர் பூணூல் போட்டிருப்பதை பார்த்துவிடுகிறான் ஆகவே வளர்ந்த ஜெயமோகன் அந்தக் காலத்தில் எல்லா சாதியினருமே பூணூல் போட்டிருந்தார்கள் என்ற, முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிடுகிறார். மூன்று வயதில் ஆறு வயதில் அடைந்த  பார்த்த அனுபவங்களையெல்லாம் வரலாற்று தேசாபிமான தன்னுணர்வு என்று வளர்ந்த ஜெயமோகன் குறிப்பிடுவாரேயென்றால அவர் வளர்ச்சியடைந்தது உண்மைதானா என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.

பண்பாட்டு தேசியவாதத்தின் தர்க்கப் பிழை சாவர்க்கரிடம் ஆரம்பிக்கிறது. சாவர்க்கர்தான் முதன் முதலில் ஹிந்து எனப்படுவது மதமல்ல, பண்பாடு என்று கூறி பண்பாட்டு தேசியவாதத்தினை உருவாக்கினார். ஒரு தேசத்திற்குள்ளாக பல்வேறு வகைப்பட்ட வேறுபாடுகளை பண்பாட்டு தேசியவாதம் தன்னுடைய பலமாக அங்கீகரிப்பதற்கு பதிலாக ஒரு ராட்சசத்தனமான ஒருமையை தேசப் பிரஜைகள் அனைவரின் மீதும் திணிக்கிறது. சாவர்க்கரின் ஹிந்து பண்பாட்டு தேசியவாதம் இஸ்லாமியரையும், கிறித்தவர்களையும் இந்திய தேசத்திற்கு  பண்பாட்டு தேசியவாதத்தின் மூலம் எதிரிகளாக உடனடியாகக் கட்டமைத்துவிடுகிறது. பண்பாட்டு தேசியவாதத்தை புராதனமாகக் காட்ட விழையும் ஜெயமோகனுக்கும் ஒரு எதிரி தேவைப்படுகிறார். அந்த எதிரியை பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கவாதிகளை சுட்டிக்காட்டி ஜெயமோகன் தன் கட்டுரையில் உருவாக்குகிறார். பிரிட்டிஷ் காலனீய ஆதிக்கத்தின் கொடுமைகள் பொதுத்தளத்தில் இன்னும் அறியப்படாததாகவே இருக்கின்றன என்பதும் காலனீய ஆதிக்கத்தின் ஈவு இரக்கமற்ற கொடுமைகள் மேலும் மேலும் வெளிவர வேண்டும் என்பதும் உண்மைதான். ஆனால் காலனீய ஆதிக்கத்தின் கொடுமைகள் இந்திய நிலப்பகுதியில் சாதி அமைப்பு இல்லாமலிருந்தால் சாத்தியப்பட்டிருக்குமா என்பதையும் நாம் கூடவே சேர்த்து அறிந்து கொள்ளவேண்டும். ஜெயமோகன் உதாரணம் காட்டும் பிரிட்டிஷ் கால இந்திய பஞ்சங்களில் பட்டினியால் மடிந்தவர்கள் ஏன் கீழ்ச் சாதியைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருந்தார்கள் என்றும் நாம் கேட்கவேண்டும். அப்படிக் கேட்கும்போதுதான் என்ணிக்கையில் குறைந்த ஆங்கிலேயரின் காலனீய கொடுங்கோலாண்மை என்பது இந்திய நிலப்பகுதியின் வன் கொடுமையான சாதி அமைப்பாலேயே சாத்தியமானது என்பது புலனாகும். சாதிய அமைப்பைச் சார்ந்த குல உணர்வுகளை புராதன வரலாற்றுத் தேசிய தன்னுணர்வு என்று கூறுவதன் மூலம் நாம் தொடர்ந்து காலனீயத்திற்கு உட்பட்டவர்களாக இருப்போமேயன்றி காலனீய கொடுமைக்கும் தொடரும் காலனீய மனப்பான்மைகளுக்கும் எதிரானவர்களாக மாறமாட்டோம்.

வரலாற்று தேசத் தன்னுணர்வு எனப்படுவது புத்திபூர்வமானது; உணர்வுபூர்வமானது அல்ல. இன்று இந்தியதேசம் எதிர் நோக்கி இருக்கும் சிக்கல்கள் எண்ணற்றவை அவற்றை தீர்ப்பதற்கு தீர்க்கதரிசனங்களோடு கூடிய திட்டங்கள் தேவை. தேசம் என்பது நிலப்பகுதியல்ல; மக்கள். தேச நலன் என்பது பெருவாரி மக்களின் நலனும் அமைதியான நல்லுறவுகளுடன் கூடிய வாழ்வே என்பதுதான் வரலாற்று தேசத் தன்ணுணர்வு உண்டாவதற்கான முதல் தொடக்கப்புள்ளி. அந்தத் தொடக்கப்புள்ளியிலிருந்து தேவைப்பட்டால் நம்மால் ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்‘ என்றும் முழங்கமுடியவேண்டும். அப்படி மக்களின் நலன்களை முன்னிறுத்தும் சிந்தனை யாவும் கற்பிதமான புராதன குலத் தன்னுணர்வினை தேசத் தன்னுணர்வாக எடுத்தியம்பும் ஜெயமோகனின் கட்டுரையை நிராகரிக்கவே செய்யும்.    

ஜெயமோகனின் கட்டுரையில்  அவர் ஆதிச்சநல்லூர், அதிராமபட்டிணம், ஹரப்பா என தொல்லியல் களன்களை ஒற்றையடியில் இணைப்பதன் அபத்தம் குறித்து தனிக்கட்டுரைதான் எழுத வேண்டும்.

Wednesday, November 14, 2012

இந்திய தேசம் பற்றி கோவை ஞானி

ஜெயமோகன் தன்னுடைய ஆசானாக பல முறை அறிவித்த கோவை ஞானி இணையதள பேட்டி ஒன்றில் இன்றைய இந்திய தேசத்தின் உள்கட்டமைப்பு பிரச்சனைகள் என்னென்ன என்ற கேள்விக்கு விடையளிக்கும் முகமாகச் சொல்கிறார்:

"இன்று இந்தியாவை ஒரு தேசமெனக் கருதி இந்திய தேசமென்று சொல்வதில் உண்மையில்லை. இந்தியா என்பது பல தேசங்கள்/பலதேசிய இனங்கள் அடங்கிய ஒரு துணைக்கண்டம். இந்தியா என்ற இந்த மாபெரும் துணைக்கண்டத்தை ஒரு தேசமென இராணுவம் முதலியவற்றை கொண்டு ஒடுக்கி உருவாக்குவதன் மூலமாகவே மாபெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன. காஷ்மீர் என்பது ஒரு மாபெரும் சிக்கல். அறுபது ஆண்டுகளாக காஷ்மீரை இந்தியாவோடு வைத்திருக்கவேண்டும் என்ற முயற்சியில் பலநூறுகோடி வீண் செலவு. ஆயிரக்கணக்கில் படுகொலைகள். இதுபோல பிற கிழக்கு மாநிலங்களிலும்
கடுமையான சிக்கல். இந்தியா என்ற ஒரு தேசத்திற்கு ஒரு மொழி தேவையென்ற நம்பிக்கையில் இந்தியின் ஆதிக்கத்தை தமிழ் முதலிய பலமொழிகள் மீது திணிக்க வேண்டியிருக்கிறது. இந்தியப் பண்பாடு என்று ஒன்று இருப்பதாக நம்பி இந்துத்துவம் என்ற பிசாசை வளர்க்க வேண்டியிருக்கிறது. அரசியல் சட்டத்தினுள்ளும் சாதிக்கு இடம் தரப்பட்டிருக்கிறது. அந்நிய நிறுவனங்களின்
பொருளியில், ஆதிக்கத்திற்கு அணுசரணையாகவும் இந்தியாவை ஒரு தேசம் என்று வைத்திருக்க வேண்டியிருக்கிறது." பார்க்க http://koodu.thamizhstudio.com/nerkaanal_3.php

கோவை ஞானி சொல்லும் கருத்துக்களை அப்படியே பிசகாமல் குற்றங்களாக அடுக்கும் ஜெயமோகன் எழுதுகிறார்:

“இந்தியாவில் வெளிநாட்டு அமைப்புகளின் உதவியுடன் நாட்டாரியல், மானுடவியல், சமூக அரசியல் தளங்களில் நிகழும் ஆய்வுகளில் பெரும்பகுதி பொதுவாக மூன்று ‘அஜென்டாக்களை’ கொண்டதாகவே இருக்கும். அவற்றை மீறி, அந்த முன் சட்டகத்தை மறுத்து ஓர் ஆய்வை எவரும் செய்துவிடமுடியாது.

1. இந்தியா பண்பாட்டு ரீதியாக ஒரே நாடல்ல. இது பல தேசியங்களை ஒடுக்கி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தேசியம்.
2. இந்து மதம் என்பது அடக்குமுறையாலும் மோசடியாலும் உருவானது. அதன் மையமான பிராமணியம் பிற கூறுகளை அடக்குகிறது, அழிக்கிறது.
இந்தியாவிலுள்ள சாதியவேறுபாடு என்பது இன [Race] வேறுபாடு. ஆகவே தலித்துக்கள் மீதான ஒடுக்குமுறை என்பது சமூகப்பிரச்சினை அல்ல இனப்பிரச்சினை.

இவற்றை நிரூபிக்கவே மீண்டும் மீண்டும் இந்த ஆய்வுகள் எழுதப்படுகின்றன. இங்குள்ள அறிஞர்கள் அந்த ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு நூல்களை உருவாக்குகிறார்கள். அந்நூல்கள் மூலநூல்களாக மேலைநாடுகளில் அங்கீகரிக்கப்படுகின்றன. அவை அவர்களால் மேற்கோள் காட்டப்படுகின்றன.

எஸ்.வி.ராஜதுரையின் ‘இந்து இந்தி இந்தியா’ என்ற நூலை மட்டும் வாசித்தாலே போதும். இந்திய தேசியம் ஒரு மோசடி, அது உடைந்து இந்தியா துண்டாகவேண்டும் என ஆவேசத்துடன் வாதிடுகிறது இந்நூல்.” பார்க்க http://www.jeyamohan.in/?p=28449

எஸ்.வி.ராஜதுரை ‘இந்து இந்தி இந்தியா’ நூலை எழுதுவதற்கு எந்தவித அந்நிய நிதியும் பெறப்படவில்லை என்று கூறியிருப்பதை ஒரு கணம் நாம் மறந்துவிடுவோம். எஸ்.வி.ஆர் எழுதுகிறார்:

“இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தையும் வலியுறுத்தும் எனது ‘இந்து இந்தி இந்தியா' நூலில்,  பொருளாதார, தேசிய இன ஏற்றத்தாழ்வற்ற ஒரு புதிய இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்னும் கருத்தைக் கூறியிருந்தேன். இந்தியா என்னும் தேசத்தை பிரிட்டிஷார்தான் முதலில் உருவாக்கினார் என்பதாலோ, அதை சுரண்டும் வர்க்கங்களும் ஆதிக்கச்சாதிகளும் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் பயன்படுத்துகிறார்கள் என்பதாலோ அந்த சட்டகத்தை அப்படியே தூக்கியெறிய வேண்டியதில்லை; அதை புதிய இந்தியாவாக உருமாற்ற முடியும் என்பது எனது கருத்து.” பார்க்க  http://aadhavanvisai.blogspot.in/2012/11/blog-post.html

எஸ்.வி.ஆர். தன்னுடைய புத்தகத்தைப் பற்றி சொல்லும் கருத்தினை குற்றம்சாட்டும் ஜெயமோகன் ஏற்ற்க்கொள்ளவேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் ஜெயமோகன் எந்தக் “குற்றச்சாட்டுகளை” எஸ்.வி. ஆரின் புத்தகத்தின் மேல் சுமத்துகிறாரோ அதே குற்றச்சாட்டுகளை தன்னுடைய கருத்தாக முன் வைக்கும் கோவை ஞானியை ஏன் கேள்விக்குள்ளாக்கவில்லை?  கோவை ஞானி ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’, ‘கொற்றவை’ ஆகிய நூல்களைப் புகழ்கிறார் என்பதாலா? சுந்தர ராமசாமி திருப்பி அனுப்பிய கதையை ‘நிகழில்’ கோவை ஞானி பிரசுரித்தார் என்பதாலா? உண்மைதான் என்றால் புகழ்ச்சியாலும் பிரசுர ஏற்பாட்டினாலும் ஜெயமோகனை விலைக்கு வாங்கிவிட முடியுமா? முடியும் என்றால் ஜெயமோகனுக்கும் நிதியை வாங்கிக்கொண்டு அதற்கேற்ப ஆய்வுகள் செய்பவர்களாக ஜெயமோகனால் வசைபாடப்படுபவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இல்லை அப்படி தன் சிந்தனை விலை போவதால்தான் பிறரையும் ஜெயமோகன் அப்படி பழிக்கிறாரா? தன்னையும் தன் அனுபவங்களையும் வைத்து மட்டும்தானே அனைத்தையும், அனைவரையும் அளக்க ஜெயமோகனுக்குத் தெரியும்?

கருத்துலக ஊழல்கள் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிப்பதில்லை.

Friday, November 9, 2012

மீண்டும் தவறு செய்கிறார் ஜெயமோகன்


எஸ்.வி.ராஜதுரை அனுப்பிய வக்கீல் நோட்டீசை முன் வைத்தே  தன் வாசகர் கடிதங்களுக்கு பதில் சொல்லும் ஜெயமோகன் எஸ்.வி.ராஜதுரையை ‘ஆளுமையின் வீழ்ச்சி’, ‘இருளான பகுதியுடையவர்’, ‘வன்மம் உடையவர்’  என்றெல்லாம் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார். எஸ்.வி.ராஜதுரை ஜெயமோகனுக்கு எழுதிய தெளிவான மறுப்பிற்கு எந்த பதிலும் ஜெயமோகனிடமிருந்து இல்லை.

அன்னிய நிதிக்கும் கருத்துலகச் சூழலுக்கும் உள்ள உறவைப் பற்றி சிந்திக்கச் சொல்லும் ஜெயமோகன் “ அயோத்திதாசர் சிந்தனைகள்” (1999) என்று ஞான அலோசியசால் தொகுக்கப்பட்டு, ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்றுக்கொண்டிருந்த பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையத்தினால் வெளியிடப்பட்ட புத்தகத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?  அயோத்திதாசரின் சிந்தனைகள் அதற்கு முன் முழுமையாகத் தொகுக்கப்பட்டு ஏன் புத்தகமாக வெளியிடப்படவில்லை? ஒரு கிறித்தவ  அன்னிய நிதி பெறுகிற நிறுவனம்தானே அயோத்திதாசரின் சிந்தனைகளை பதிப்பித்தது? கிறித்தவ அன்னிய நிதி பெறுகிற நிறுவனம் பதிப்பித்தது என்ற செய்தி அயோத்திதாசரை முதன்மையான சிந்தனையாளர் என்று மதிப்பிடவும் அவருடைய சிந்தனைகளைப் பற்றி உரையாற்றவும் ஜெயமோகனுக்கு எந்தவிதத்தில் இடையூறாக அல்லது உறுதுணையாக இருந்தது? ஜெயமோகன் முன்வந்து விளக்கவேண்டும்.

அதுதான் போகட்டும். எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் எழுதிய Towards a Non Brahmin Millennium: From Iyoothee Thass to Periyar என்ற நூலில் அயோத்திதாசரைப் பற்றி எஸ்விஆரும், வ.கீதாவும் சொன்ன கருத்துக்களில் இருந்து மாறுபட்ட என்ன கருத்தினை ஜெயமோகன் தன் அயோத்திதாசர் உரையில் சொல்லிவிட்டார்? வ.கீதாவும் எஸ்விஆரும் கல்விப்புல கறார் மொழியில் சொன்னதை தன் பாணியில் மிகையுணர்ச்சி கூடிய சினிமா பாணி நாடகீயமாக்கியதைத் தவிர ஜெயமோகனின் கருத்துக்கள் எந்த விதத்திலும் மாறுபடவில்லை. ஜெயமோகனின் கருத்திலிருந்து மாறுபடாத கருத்தினைக் கொண்ட இன்னொரு நூல் எப்படி வ.கீதாவும் எஸ்.வி.ராஜதுரையும் எழுதியதாலேயே, கிறித்துவ மதத்தைப் பரப்புகிறதும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளைச் சீரழிக்கும் ஏகாதிபத்திய நோக்கத்தைக் கொண்டதும், இந்தியப் பண்பாடு, இந்திய தேசியம் ஆகியவற்றை அழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டதுமாய் மாறிவிடும்? இந்திய ஞான மரபிற்குத்தான் வெளிச்சம்.

சிற்றிதழ்ச் சூழலில் புழங்கி வருபவர்களுக்கு நன்றாகத் தெரியும் எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை மூவரும் கருத்தொருமித்த இடதுசாரி அரசியல் சிந்தனையாளர்கள்; செயல்பாட்டாளர்கள். இவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் மாறுபாடான கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாகவோ வேறு வேறான நோக்கங்கள் கொண்டவர்களாகவோ எந்தப் பதிவுமே இல்லை. எஸ்.என்.நாகராஜனை தமிழின் முதன்மையான சிந்தனையாளராகக் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். சந்தோஷம். கோவை ஞானியே தர்மசங்கடத்தில் நெளியும்படி தன் ஆசான், ஆசான் என பலமுறை குறிப்பிட்டிருக்கிறார் ஜெயமோகன். ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஆனால் எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி ஆகியோரின் கருத்துலகிலிருந்து எந்த மாறுபாடும் இல்லாத எஸ்.வி.ராஜதுரை மட்டும் ஜெயமோகனுக்கு எப்படி வில்லனாகிவிட்டார்? இந்திய ஆன்மீக மரபின் உள்ளொளிபட்டுதான் நாம் அறியமுடியும் போல.

எஸ்விஆரின் வக்கீல் நோட்டீசுக்குப்பின் ஜெயமோகன் எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு என்று பதிவு எழுதியதை நான் மனதிற்குள் பாராட்டினேன். அதே பதிவில் இளம் மார்க்ஸ், முதிய மார்க்ஸ், என்ற  கார்ல் மார்க்ஸின் சிந்தனை வளர்ச்சியையும்  பிரிவையும் கூறும் அல்தூசர் கருத்தினை ஜெயமோகன் தன் வாசகருக்கு ஓரிரு வரிகளில் விளக்குவதையும் ஆச்சரியத்துடன் கவனித்தேன். எஸ்விஆரின் “அல்தூசர் ஒரு அறிமுகம்” நூல் எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி ஆகியோர் விரும்பும் விதத்தில் Humanist Marxist perspective இல் எழுதப்பட்டது. அது ஜெயமோகனுக்கு தெரியவில்லையா இல்லை தெரிந்தும் மறைக்கிறாரா?

அந்த அளவுக்கு நுட்பமாக விளக்கமுடியாத நிலையில் வாசகர்கள் இருப்பார்களென்றால் அவர்களிடம்  போய் ஆளுமையின் வீழ்ச்சி என்று இன்னொரு எழுத்தாளரைப் பற்றி எழுதுவது என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும்? அன்னாகரீனாவையே இப்போதுதான் பல நாட்களாக சிரமப்பட்டு படித்ததாய் ஃபேஸ்புக் நிலைத்தகவல் எழுதும் ஜெயமோகனின் பிரதம வாசகர் அரங்கசாமி நூறு ரஷ்ய படைப்புகளுக்கு மேல் ஆராயும் ‘ரஷ்ய புரட்சியும் இலக்கிய சாட்சியமும்’ எழுதிய ராஜதுரையைப் பற்றி “ங்கொய்யால் நாத்திகத்த பரப்ப ஏன்யா கிருத்துவ மதப்பரப்பு ஏகாதியபத்ய நிறுவனத்தோடு கூட்டுக்கிற கேள்விக்கு பதிலே வரமாட்டங்குதே?# WACC#எஸ்விஆர்” என்று டிவிட்டரில் எழுதுகிறார். பார்க்க: ஸ்கிரீன்ஷாட்







கண்ணில் பட்டது இப்படி ஒன்று. இப்படி எத்தனை பேர் என்னென்னவிதமாக டிவீட்டினார்களோ.


மீண்டும் தவறு செய்கிறார் ஜெயமோகன் என்பதைத் தவிர சொல்வதற்கேதுமில்லை.

Thursday, November 8, 2012

எஸ்.வி.ராஜதுரையின் முக்கியமான எதிர்வினை

“ஜெயமோகன்  என் மீது சுமத்தியுள்ள அவதூறுகள் ஒருபுறம் இருக்கட்டும், இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்படுகிற மக்களின் விடுதலைக்கான ஓளிவிளக்குகளாக உள்ள மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரைக் காமுகர்களாக ஜெயமோகன் சித்தரித்த போது வாய் மூடி இருந்துவிட்டு இப்போது எழுத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அறம் குறித்து மாய அழுகை அழுகின்றவர்கள் எனக்காகக் குரல் கொடுக்கவில்லை. விதிவிலக்காக ஓரிரு எழுத்தாளர்கள் இருந்தனர் என்பதை நான் மகிழ்ச்சியோடு பதிவு செய்கிறேன். நான் வேலை பார்த்த நிறுவனம் நடத்திய கருத்தரங்குகள், சிறப்புக் கருத்துரைகள் ஆகியவற்றில் பங்கேற்றவர்களும் ஜெயமோகனால் புகழப்பட்டவர்களுமான கோவை ஞானி, எஸ்.என். நாகராஜன், வே.ஆனைமுத்து ஆகியோரும்கூட வாய் திறக்கவில்லை.” என்று எழுதும் எஸ்.வி.ராஜதுரையின் ஜெயமோகனுக்கு எதிரான கட்டுரை “தேசபக்தியும் தேசதுரோகமும்” என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. அந்தக் கட்டுரைக்கான சுட்டி இதோ
http://aadhavanvisai.blogspot.in/2012/11/blog-post.html  படித்துப் பாருங்கள்.

அவதூறுகளைப் பரப்புவதையும் அதனால் கிடைக்கின்ற வக்கீல் நோட்டீசுகளை வைத்து அழுகினி டிராமா போடுவதையும் ஜெயமோகன் நிறுத்திவிட்டு எஸ்.வி.ராஜதுரையின் புத்தகங்கள் முன் வைக்கின்ற கருத்துக்களை நேர்மையாக விவாதிக்க முன்வரவேண்டும்.

Wednesday, November 7, 2012

எஸ்.வி.ராஜதுரைக்கும் கண்டனம்




மனோ என்று நண்பர்கள் வட்டாரத்தில் அழைக்கப்படும் எஸ்.வி.ராஜதுரை என் அபரிதமான அன்பிற்கும் ஆழமான மரியாதைக்கும் உரிய நண்பர். அவர் துணைவியார் ஷகு என் தாய்க்கு நிகரானவர். 1985இல் நான் பிஹெச்டி ஆய்வு மாணவனாக சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது எஸ்.வி.ஆரின் நட்பு கிடைத்தது. அவர் ‘ரஷ்யப் புரட்சியும் இலக்கிய சாட்சியமும்’ புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த போது பல ரஷ்ய படைப்புகளை மாணவனாக இருந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்டு அவரோடு விரிவாக விவாதித்திருக்கிறேன். எஸ்.வி.ஆர் பின்னால் எழுதிய ‘அல்தூசர் ஒரு அறிமுகம்’, ‘கிராம்சி’, ‘ஃபிராங்க்ஃபர்ட் மார்க்சியம்’ ஆகிய நூல்களுக்கான தயாரிப்பின்போதும் அவரோடு பல மூல நூல்களை வாசித்து விவாதிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. எஸ்.வி.ஆர் நடத்திய ‘இனி’ இதழில் அவரோடு சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். ‘இனி’ இதழ்களில் பல கட்டுரைகளும் ஒரு கதையும் எழுதியிருக்கிறேன். 1996 வாக்கில் தமிழ் இலக்கிய உலகில் இருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்து நான் யாருடைய தொடர்பிலும் இல்லாமல் இருந்ததில் எஸ்.வி.ஆரோடும் தொடர்பு அறுந்துவிட்டது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் எஸ்.வி. ஆரை யதேச்சையாக சந்திக்கும் வாய்ப்பு கூட அமையவில்லை.

எஸ்.வி.ராஜதுரையின் மேல் நான் பேணி வைத்திருக்கும் மிக உயரிய மரியாதையின் நிமித்தமே அவர் ஜெயமோகனுக்கு அனுப்பியிருக்கும் வக்கீல் நோட்டிசைப் படித்தபோது மனம் துணுக்குற்றது. சில தினங்களுக்கு முன்னாலேயே அந்த வக்கீல் நோட்டிசை இணையத்தில் பார்க்க நேர்ந்தது. அது படவடிவாக வெளியிடப்பட்டிருந்ததால் முழுமையாக படிக்க இயலவில்லை. இன்று காலை ஜெயமோகன் அவருடைய தளத்தில் http://www.jeyamohan.in/?p=31578 வெளியிட்டிருந்த எஸ்.வி.ஆரின் வக்கீல் நோட்டீசை தட்டச்சு வடிவத்தில் படித்து, அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தரக்குறைவான மொழியைக் கண்டு ஆடிப்போனேன். ஜெயமோகன் சொல்வது போல எஸ்.வி.ஆர் இந்த தரக்குறைவான மொழியை பயன்படுத்தியிருப்பார் என்று நான் நம்பவில்லை. வேறு யாரேனும் எழுதியதில், கடும் கோபத்திலும் விரக்தியிலும், எஸ்.வி.ஆர். கையொப்பமிட்டிருப்பார் என்றே நான் நம்ப விழைகிறேன். அப்படி கொந்தளித்துப் போய் உணர்ச்சிவசப்படக்கூடியவர்தானே மனோ.

இருப்பினும், என் மிக உயரிய அன்பிற்கும் மரியாதைக்கும் பாத்திரமான எஸ்.வி.ராஜதுரைக்கு, ஜெயமோகனுக்கு அனுப்பப்பட்ட தரக்குறைவாக எழுதப்பட்ட வக்கீல் நோட்டீசில் கையொப்பமிட்டதற்காக என் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tuesday, November 6, 2012

ஜெயமோகனுக்கு மறுப்பும் கண்டனமும்

ஜெயமோகன் தன்னுடைய எஸ்.வி.ராஜதுரை வழக்கு என்ற இன்றைய பதிவில் நான் ‘இந்தியா ஒரு தேசமே அல்ல’ என்ற வகையில் கருத்து சொன்னதாகவும் அதைத் தொடர்ந்தே அன்னிய நிதி பற்றிய விவாதம் எழுந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

‘இந்தியா ஒரு தேசமே அல்ல’ என்ற வகையில் நான் என்றுமே கருத்து சொன்னதில்லை. அப்படி நான் சொன்னதாக ஜெயமோகன் எழுதுவது சுத்தப் பொய்.

ஃபோர்ட் ஃபவுண்டேஷன் தவறான நிறுவனம் அல்ல என்பதை அவர்கள் நிதியுதவி அளித்திருக்கும் பண்பாட்டு இலக்கிய திட்டங்களைச் சுட்டிக்காட்டி அவற்றில் என்ன பிழை காணமுடியும் என்று கேட்டிருக்கிறேன். மேலும் நான் சொன்ன தகவல்கள் எல்லாமே பொது வெளியில் வலைத்தளங்களில் எல்லோரும் படிக்கக்கூடிய தகவல்களே. இந்திய தேச ஒருமைப்பாட்டினை பேணுவதே ஃபோர்ட் போன்ற நிதியுதவி நிறுவனங்களின் நோக்கமாக இருக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

இந்தியாவில் செயல்படும் அத்தனை நிதியுதவி செய்யும் நிறுவனங்களும், பெறும் நிறுவனங்களும் அரசின் சட்டங்களுக்கும் கண்காணிப்பிற்கும் உட்பட்ட சட்டபூர்வமான நிறுவனங்களே. அவற்றில் வேலை பார்ப்பதே குற்றம் என்பதாக ஜெயமோகன் எழுதியதாய் அவரின் சிஷ்ய நண்பர்கள்  புரிந்து கொண்டு டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் என்னை அவமதித்ததும், எள்ளி நகையாடியதும் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இவை எல்லாவற்றையும் நான் முறையாக சேகரம் செய்து வைத்திருக்கிறேன்.

நான் வேலை பார்த்த/ பார்க்கும் நிறுவனங்களின் நிதியாதாரத்தை சார்ந்தே என்னுடைய கருத்துக்கள் இருக்கின்றன என்று ஜெயமோகன் எழுதுவது வசை. சிந்தனைத் துறையில் செயல்படும் எவரைப் பற்றியும் இந்த வசையினால் தாக்கி அவர்கள் சொல்லும் கருத்துக்களின் உண்மையை அறியவிடாமல்  திசை திருப்பி விடலாம். இதைத்தான் ஜெயமோகன் செய்து வருகிறார்.

ஜெயமோகனின் பொய்க்கும் வசைக்கும் என்னுடைய மறுப்பினையும் கடும் கண்டனத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.

நித்ய சைதன்ய யதியையும் நாராயண குருவையும் தன் குருக்களாக சொல்லிக்கொள்ளும் ஜெயமோகன் பொய்களையும் வசைகளையும் எழுதுவது தன் குருக்களை அவமானப்படுத்துமே என்று அக்கறை கொள்ளவேண்டும்.  ஏனெனில் நிதியாதாரங்களால் அல்ல குருக்களின் ஆசீர்வாதத்தினாலே கருத்துக்கள் தோற்றம் பெறுகின்றன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார் ஆகியோரை பேராசான்களாகக் கருதி தங்கள் வாழ்வு நெறி முறையை அமைத்துக்கொண்ட கோடிக்கணக்கானோர் இந்தியதேசத்தில் இருக்கிறார்கள். ஜெயமோகன் தந்தை பெரியாரைப் பற்றியும், அண்ணல் அம்பேத்கார் பற்றியும் எழுதி வரும் கருத்துக்கள் அவருடைய குருக்களுக்கு பெருமை சேர்க்குமா என்றும் ஜெயமோகன் ஆன்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 

தீபாவளிக்கு தீபாவளி இப்படியொரு தலைவலி.

Saturday, December 24, 2011

மூடன் விமலாதித்த மாமல்லன் வியப்பளிப்பதில்லை


தெரியாமல்தான் கேட்கிறேன் தெரியாமல்தான் கேட்கிறேன் என்று பொறுக்கி மொழியில் கூச்சலிடும் மாமல்லன் மூர்க்கன் மட்டுமல்ல மூடன் என்பது ‘ஆராய்ச்சியும் அகழ்வாராய்ச்சியும்’ என்ற அவரின் பதிவின் மூலமாக மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. நரிக்குறவர் மொழி அகராதியாலும் ஜேனு குறுபர் மொழி அகராதியாலும் சமூகத்திற்கு என்ன பயன் என்று தெரியாமல் கேட்கும் மாமல்லன் தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி பெறுவற்காக மட்டுமே தீட்டும் திட்டங்களில் அகராதிகள் தயாரிப்பும் ஒன்று என்று நினைத்துக்கொண்டு அவருடைய வழக்கமான பொறுக்கி மொழியில் எழுதுகிறார். நரிக்குறவர், ஜேனு குறுபர் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் இந்த அகராதிகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தப் பள்ளிகளில் போய்ப் பார்த்தால் இந்த அகராதிகளின் சமூகப் பயன்பாடு என்ன என்று தெரியவரும். நரிக்குறவர், ஜேனுகுறுபர் உள்ளிட்ட பல ஆதிவாசி மக்களின் மொழிகளுக்கு அகராதிகள் இல்லாதபடியால் மொழிகள் அழிந்து போகின்றன. அச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் தன் தாய்மொழியறிவுடன் மட்டுமே பள்ளிக்கு வருவதால் பிற பயன்பாட்டு மொழிகளை கற்றுக்கொள்ள முடியாத நிலை இருக்கிறது. பள்ளிப்படிப்பில் பின் தங்கும் ஆதிவாசிக் குழந்தைகள்  பள்ளிப்படிப்பை பாதியில் இதனால் நிறுத்திவிடுகின்றன. அகராதிகள் தயாரிக்கப்பட்டு நரிக்குறவர், ஜேனுகுறுபர் போன்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் அவற்றை விநியோகிக்கும்போது பிற பயன்பாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு கருவி கிடைக்கிறது. இதனால் அந்தக்குழந்தைகள் மேலும் படிப்பைத் தொடர ஏதுவாகிறது. மொழி அகராதிகளின் பயன்பாடு என்ன என்ற சிறிய அறிவே போதும் இந்த மாதிரியான அகராதிகளின்  சமூகப் பயன்பாடு என்ன என்று யூகிப்பதற்கு ஆனால் மாமல்லன்தான் மூடனாயிற்றே மனம் போன போக்கில் ஏசுகிறார். 
கருணை அடிப்படையில் தன் அரசாங்க வேலையைப் பெற்ற மாமல்லன் எனவே உழைப்பினால், திறனால், படிப்பறிவால் யாரும் எந்த வேலையையும் பெற்றிருக்கவும் முடியாது, வேலைகளில் தொடர்ந்து இயங்கவும் முடியாது என்று நினைக்கும் மாமல்லன், சென்டிரல் எக்சைஸ் இன்ஸ்பெக்டராக நீடிக்கும் மாமல்லன், தன் மேலதிகாரிகளை தன் ‘இலக்கிய தொடர்பினால்’ சரிக்கட்டும் மாமல்லன், அகராதிகளின் பயன்பாட்டை அறிவதற்கு நிறுவனத்தின் பொது வெளி கணக்கறிக்கையை பயன்படுத்துவதில் வியப்பில்லை. வரி ஏய்ப்பு (Tax evasion) வரி விடுபடல் ( missing sentence) இரண்டும் ஒன்று என்ற ரீதியில் தன் வேலையில் கற்ற நிபுணத்துவத்தையே இலக்கிய விமர்சனத்திற்கும் பயன்படுத்தி சிறு தகவல் பிழைகளை இலக்கிய உரைகளிலும் பிரதிகளிலும் கண்டுபிடித்து தன் பொறுக்கிமொழியில் குற்றப்பத்திரிக்கை எழுதி எழுத்தாளர்களை அவமானப்படுத்தி அதன் மூலம்  இணையத்தில் தன்னை ஒரு மல்லன் என நிறுவி வரும் மாமல்லனுக்கு ஒரு பிரதியின் பல்வகை வாசிப்பு தெரியாமல் போவதும் வியப்பில்லை; ஏனெனில் கணக்கறிக்கையும் இலக்கியப் பிரதியும் மூடன் மாமல்லனுக்கு ஒன்றுதானே.



மேலும் உலகெங்கிலும் உள்ள தலைசிறந்த எழுத்தாளர்கள் இலக்கணப் பிழைகளோடும், தட்டச்சுப் பிழைகளோடும், தகவல் பிழைகளோடும் எழுதக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் பிழைகளை பதிப்பகங்களிலும் பத்திரிக்கைகளிலும் வேலை பார்க்கும் எடிட்டர்களே களைகிறார்கள். மெய்ப்பு திருத்துபவர்களும், எடிட்டர்களும் தங்கள் தொழிலினை இலக்கிய விமர்சனமாக முன் வைப்பதில்லை. இது உலக நிலவரம். தமிழ் எழுத்தாளர்களுக்கு எடிட்டர்கள் இல்லை. க்ரியா போன்ற ஒரு சில பதிப்பகங்களே தாங்கள் பிரசுரிக்கும் புத்தகங்களுக்கு எடிட்டர்களை நியமித்து, எழுத்தாளர்களுடன் கலந்தாலோசித்து, பல முறை மெய்ப்பு பார்த்து புத்தகங்களை வெளியிடுகிறார்கள்.  இது தவிர உலகெங்கிலும் ஒரு பிழை எழுத்தில் சுட்டிக்காண்பிக்கப்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய எழுத்தாளர்களோ, பதிப்பகங்களோ தயங்குவது இல்லை.
தன்னைப் போலவேதான் பிறரும் இருப்பார்கள் எனறு நம்பும் மூடனும் மூர்க்கனுமான மாமல்லன் நான் நம்பிக்கும் எனக்கும் எந்தெந்தச் சூழலில் உறவு ஏற்பட்டது என்று சொல்வதற்காக பிரமிளுக்கும் நடந்த வாக்குவாதத்தைச் சொல்லப்போக நான் ஏதோ இதன் மூலம் இலக்கிய அந்தஸ்து தேடுவதாய்  எழுதியிருப்பதும் வியப்பளிக்கவில்லை. ஏனெனில் அவர்தான் ஜெயகாந்தன் மாமல்லனை ‘தேவடியா பிள்ளை’ என்று திட்டியதையும், சுந்தர ராமசாமிக்குத் தான் புரொஜெக்டரோடு போய் ஆட்டோவில் இறங்கி படம் போட்டு காண்பித்ததை கமலா ராமசாமி எழுதியதையும் பிரசுரித்து, உணர்ச்சிவசப்பட்டு, கண்கலங்கி இணைய வாசகர்களிடம் நொள்ளை பிம்பம் கட்டமைப்பதற்கு முயன்றவர். அப்படித்தானே பிறரும் மாமல்லனுக்கு இருக்கமுடியும்? சினிமாப் பாடல்கள் வெளிவந்த வருடங்கள், கணக்கறிக்கைகள், தான் தொலைபேசி உரையாடல்களின் மூலம் துப்பறிந்த தகவல்கள் ஆகியவற்றை மட்டுமே நம்பும் மாமல்லனுக்கு பிரமிள் குற்றாலம் கவிதைப்பட்டறை சண்டையைப் பற்றி அவரே எழுதியிருக்கிறார் என்று தெரியப்போவதில்லை. அதை ‘லயம்’ காலப்பிரதீப் சுப்பிரமணியத்திடமல்லவா கேட்கவேண்டும் என்று மாமல்லனுக்கு தெரியாமல்போவதைப்பற்றி யாராவது ஆச்சரியப்படவா போகிறார்கள்? மாமல்லனுக்குத்தான் அவர் செய்தித்தாள்கள் மூலம் ஈழப்போராட்டம் பற்றித் தெரிந்துகொண்டவை அதில் நேரடியாக பங்குபெற்றவர்கள் சொல்வதைவிட முக்கியமானதாயிற்றே.
நானும் தெரியாமலேயே மாமல்லனிடம் சில கேள்விகள் கேட்டு வைக்கிறேன். சரி, நானும் நாகார்ஜுனனும் மேற்குலகின் சிந்தனைகளை தமிழுக்குக்கொண்டுவருபவர்கள். உங்கள் எழுத்துக்களின்படி நீங்கள் மண்ணின் மைந்தர்; ஆங்கிலம் முறையாகப் பயிலாதவர். இந்த மண்ணின் சிந்தனை, இலக்கிய மரபுகள் என்ன என்று அறிந்துகொள்ள நீங்கள் மேற்கொண்ட படிப்பு என்ன? பழந்தமிழ் இலக்கியம் கற்றீர்களா? இல்லை நாட்டுப்புற கலைகளை அறிய முயற்சி செய்தீர்களா? அப்படி முயற்சி செய்திருந்தால் விளிம்பு நிலை கானாப் பாடகர்கள் பாடுவது உங்களுடையதைப் போன்ற பொறுக்கி மொழியிலல்ல குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களின் அறுபடாத இலக்கியத் தொடர்ச்சி என்று தெரிந்திருக்கக்கூடும். அட, ஆர்.வி.ரமணியின் சுனாமிக்குத் தப்பிய கேமிராவை புளங்காகித்து எழுதும் நீங்கள் அவரின் மற்றொரு படமான ‘நீ எங்கே’ படத்தை பார்த்திருந்தால் நாடோடிகளாய், தன் குடும்பப்பெண்களை ரிக்கார்ட் டான்ஸ் ஆடவிடும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட தோல்பாவை நிழல் கூத்து கலைஞர்கள் ராமாயணத்தை ஜெயமோகனைவிட அதிகமாய் கரைத்துக் குடித்தவர்கள் என்று தெரிந்திருக்கக்கூடும். மேலும் ஆராய்ந்திருந்தால் தன் விளிம்பு நிலை சமூகத்தைப் பற்றி எழுதுகிற திருநங்கை பிரியா பாபு மாமல்லனின் பொறுக்கி மொழியை தன் புத்தகங்களை எழுதப் பயன்படுத்தவில்லை என்றும் தெரிந்திருக்கக்கூடும். விளிம்பு நிலை மனிதர்களின் மொழியும் பொறுக்கி மொழியும் ஒன்று என்று, இவ்வளவு தூரம் எடுத்துச் சொன்ன பிறகும், தொடர்ந்து சொல்லிவரும் மாமல்லன் படித்துப்பார்ப்பது நல்லது; படிப்பு என்பது மூடனான மாமல்லனுக்கு ஏறாது என்றாலும் கூட. 
ஆலென் கின்ஸ்பெர்க் ‘Howl’ என்ற கூச்சல் கவிதை எழுதியதும், நிர்வாணமாய் தெருவில் நின்றதும் வியட்நாம் போருக்கு தன் எதிர்ப்பினை தெரிவிப்பதற்காக. எதிர் கலாச்சாரம் பற்றி எழுதிய நாகார்ஜுனன் தன் புத்தக அட்டைப்படமாய் கின்ஸ்பெர்கின் படத்தை பிரசுரித்ததை எடுத்துப்போட்டு தன் பொறுக்கி மொழியினை நியாயப்படுத்தி தொப்பை குலுக்கும் மாமல்லனுக்கு வியட்நாம் போரும் தெரியாது, ஈழப்போரும் தெரியாது என்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
மாமல்லனுக்குத் தெரிந்ததெல்லாம் தமிழ் திரைப்படப்பாடல்களும் வடிவேலு நகைச்சுவையும்தான். வடிவேலுவின் ஜாதி என்ன  என்று யாரும் மாமல்லனுக்கு சொல்லிவிடாதீர்கள். மூடனிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச நகைச்சுவையும் போய்விடப்போகிறது. காவி அணிவது, இஸ்லாமிய குல்லா தரிப்பது போன்ற வடிவேலு நகைச்சுவைகளில் ஈடுபடும் மாமல்லன் நாளை கிறிஸ்துமஸ் ஆயிற்றே கின்ஸ்பெர்க் வெள்ளைக்காரனாயிற்றே அவனும் கிறிஸ்துமஸ்தானே கொண்டாடுவான், என்று கிறிஸ்துமஸ் கொண்டாட ஊர்வலம் கிளம்புவாராயின் அவருக்கு என் எளிய பரிசு: ஓர் மூடனின் தொப்பி.

Thursday, December 22, 2011

விமலாதித்த மாமல்லனின் பொறுக்கி மொழி


மேற்கண்ட கட்டுரையில் என்னை தன்னுடைய வழமையான பொறுக்கி மொழியால் அவதூறு செய்து எழுதியிருக்கும் மாமல்லன் அடிப்படையான விபரங்கள் அறியாமல் எழுதியிருக்கிறார்.
நான் தயாரிப்பில் ஈடுபட்டு பதிப்பித்த நரிக்குறவர் அகராதியும், ஜேனு குருபர் மொழி அகராதியும் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்றவை அல்ல; ஒரு பைசா கூட ஃபோர்டிலிருந்து வந்ததில்லை. நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் இந்த அகராதிகளை யார் வேண்டுமென்றாலும் வாங்கிப்பார்க்கலாம். இந்த அடிப்படை பொது விபரத்தினை அறிந்துகொள்ளாமல் மேற்கண்ட பதிவில் மாமல்லன் என்னை அவதூறு செய்வதன் காரணம் என்ன?
லும்பன் மொழியென்றால் என்ன என்ற உரையாடலில் லும்பன் மொழி என்பது பொறுக்கி மொழி என்று மொழிபெயர்க்கப்படவேண்டும் அது மாமல்லன் குறிப்பிட்டது போல விளிம்பு நிலை மக்களின் மொழி அல்ல, வட்டார வழக்குகளோ ஜாதீய வழக்குகளோ அல்ல என்று விளக்கி பொறுக்கி மொழி  வெகுஜன மொழியாக  தமிழில் எப்படி தோற்றம்பெற்றது என்பதை ஃபேஸ்புக், டிவிட்டர் உரையாடல்களின் போது மாமல்லனிடமும் உரையாடலில் பங்கேற்ற மற்றவர்களிடமும் சொன்னேன். பொறுக்கி மொழியிலேயே தன்னுடைய தவறான புரிதலை தொடர்ந்து முன் வைத்த மாமல்லன் பிராமணீய பிள்ளைவாளான நான் சென்னை வட்டார வழக்கினை இளக்காரமாகப்பார்ப்பதாகச் சொன்னார். நரிக்குறவர் மொழிக்கும், ஜேனு குறுபர் ஆதிவாசி அகராதி உள்ளிட்ட பல ஆதிவாசி மொழிகளுக்கும் அகராதி தயாரிப்புகளில் ஈடுபட்டவன் எப்படி வட்டார வழக்குகளை இளக்காரமாகப் பார்க்கக்கூடிய பிள்ளைவாளாவான் என்று திரும்பிக் கேட்டதற்கு மாமல்லன் மேற்கண்ட பதிவினை எழுதியிருக்கிறார். ஃபோர்ட் ஃபவுண்டேஷனிடமிருந்து பணம் வரவில்லை என்பது மட்டுமல்ல வெவ்வேறு மொழியியலாளர்களோடு சேர்ந்து  அகராதிகள் தயாரிப்பில் ஈடுபடுவதற்கு ஒருவனுக்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது, பணம் கொடுத்துவிட்டால் ஒருவனால் செய்துவிட முடியுமா, பணம் கொடுத்துச் செய்யச் சொன்னாலுமே தன் வாழ் நாளின் சிறந்த வருடங்களை எந்தவித எதிர் காலமோ, அங்கீகாரமோ இல்லாத இந்த மாதிரியான பணிகளில் யாரேனும் ஈடுபடுவார்களா என்பதையெல்லாம் ஒருவர் யோசித்துப்பார்க்கவேண்டும். இந்த உழைப்பிற்கு பின்னாலுள்ள நுட்பமான படிப்பறிவின் தேவையை, இலக்கியத்துறையில் செயல்படும் மாமல்லன், கேவலப்படுத்தினாரென்றால் அவரை என்னவென்று அழைப்பது? ஒரு எழுத்தாளனுக்கு எல்லா சிந்தனைத்துறைகளைப் பற்றிய அறிவு இருக்கவேண்டியதில்லை; ஆனால் சிந்தனைத்துறைகள் பற்றிய மரியாதை கூடவா இருக்காது?
கவிஞர் விக்கிரமாதித்யன் நம்பி என்ற என்னுடைய பதிவில் சினிமாப்பாடல்களை உதாரணம் காட்டியதில் ஆண்டுகள் தப்புத்தப்பாகிவிட்டதாம். இவர் கண்டுபிடித்துவிட்டராம். தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்  நான் நினைவிலிருந்து எழுதுகிறேன் என்று. இந்த மாதிரியான பாடல்வரிகளை இந்த மாதிரியான செய்திகளுக்கு தலைப்பாக வைப்பது போன்ற, இந்த மாதிரியான ஒலிகளை பயன்படுத்துவது போன்ற உதாரணங்களைக் கொடுத்து விளக்கினார் என்று எழுதினால் அவர் பேசிய வருடத்தில் இந்தப் பாடல்கள் திரைக்கு வரவில்லையே என்று மாமல்லன் எழுதினால் என்ன செய்வது?  உதாரணங்கள் கொடுப்பது நான். இந்தமாதிரியான உதாரணங்களைக் கொடுத்து நம்பி பேசினார் என்று எழுதினால் அந்த உதாரணங்களை விக்கிரமாதித்யன் நம்பியே கொடுத்தார் என்று எப்படி பொருள்படும்? யார் வேண்டுமென்றாலும் என் பதிவினைப் படித்துப்பார்க்கலாம்.  மேலும் உரை நடைகளின் வகைகளைப் பற்றிய விமர்சனங்கள் ஆயிரம் இருக்கலாம் ஆனால் யார் யார் எந்தெந்த உரை நடைகளின் உருவாக்கத்திற்கு பங்காற்றினார்கள் என்று சொல்லத்தானே வேண்டும்? ஒரு மொழியிலுள்ள பலவேறு வகை நடைகளையும் அவை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளையும் எப்படி ஆராய்வது?
விக்கிரமாதித்யன் நம்பி தன்னுடைய நிர்ப்பந்தத்தினால் தன் கவிதை மொழிக்கு சம்பந்தமில்லாத நேரெதிரிடயான வெகுஜன பத்திரிக்கை உரைநடை உருவாக்கத்தில் பங்குபெற்றார். கேள்வி நம்பியைப் பற்றி அல்ல. மேலும் அவர்கள் அந்த உரைநடையை உருவாக்கியதும் பயன்படுத்தியதும் ஊழல் அரசியல்வாதிகளையும், திரை மறைவு செயல்பாடுகளையும் அம்பலமாகுவதற்காக. இருப்பினும் நம்பிக்கு அப்படிப்பட்ட மொழி நடை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைப் பற்றிய அவதானம் இருந்தது. ஆனால் குறிப்பிட்ட வெகுஜனப் பத்திரிக்கை உரை நடையிலிருந்து உருவான பொறுக்கி மொழியை மாமல்லன் எதற்கெடுத்தாலும் பயன்படுத்துவதன் ‘நிர்ப்பந்தம்’ என்ன என்பதுதான் கேள்வி. 'சிறுமி கொண்டு வந்த மலர்', 'முடவன் வளர்த்த வெள்ளைப்புறாக்கள்' ஆகிய கதைகளை எழுதிய மாமல்லனா இது? இல்லை சுந்தர ராமசாமி இப்போது இருந்திருந்தால் மாமல்லன் வகைதொகையில்லாமல் பயன்படுத்தும் உரைநடையை ஆதரித்துதான் இருப்பாரா?
மாமல்லன் தன் பதிவில் கொடுத்திருக்கும் விக்கிரமாதித்யன் கவிதையில் உள்ள மொழியும், மாமல்லனின் பதிவிலுள்ள பொறுக்கி உரை நடையின் மொழியும் ஒன்றா? 


நாகார்ஜுனனின் புத்தக அட்டையை தன் பதிவில் கொடுத்திருக்கிறாரே மாமல்லன், பொறுக்கி மொழி நாகர்ஜுனன் கடுமையாக விமர்சிக்கும் அ-கலாச்சாரத்தின்பாற்பட்டது, எதிர்கலாச்சாரம் சம்பந்தப்பட்டதல்ல என்பது கூடவா தெரியவில்லை மாமல்லனுக்கு? இல்லை எல்லாருடைய சாமானமும் ஒன்றுதானே என்ற அ-கலாச்சார பதில்தானா அதற்கும்?
ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் மாமல்லனுக்கும் தகராறு இருந்தால் அதை எதற்கு இந்த விவாதத்தில் கொண்டுவருகிறார் மாமல்லன்?
கல்யாணராமனுக்கும் எனக்கும் நிகழ்ந்த டிவிட்டர் உரையாடல் முழுவதையும் மாமல்லன் ஏன் தன்னுடைய பதிவில் தரவில்லை?
தமிழ் உரை நடைகளின் வகைகள், அவற்றின் உருவாக்கம், பொருத்தப்பாடு, பயன்பாடு, ஆகியவற்றைப் பற்றிய ஆக்கபூர்வமான விவாதமும் உரையாடலும் மீண்டுமொருமுறை மாமல்லனின் பொறுக்கி உரை நடையால் திசை திருப்பப்பட்டிருக்கிறது. 

Tuesday, October 25, 2011

ஜென் தருணத்திற்கான முடிவுறா சந்தர்ப்பங்கள் (ஜெயமோகனுக்கு)


அன்புள்ள ஜெயமோகன்:
உங்களுடைய நன்றிக் கடிதம் படித்தேன். நாகர்கோவிலில் மின் தடை இவ்வளவு அதிகமாக இருப்பது கவலையைத் தருகிறது. சிறு தொழில்கள் என்ன ஆகும்?
நான் முன் வைத்த வாதத்தை நீங்கள் புரிந்து கொண்ட முறையில் இன்னும் சில பிழைகள் இருக்கின்றன. ஆத்மார்த்தமான அக எழுச்சி பாடல்களை எழுதியிருக்கிறார் பாரதி என்று நான் சொல்லவில்லை. நீங்கள் சொல்வது போல பிழைபட்டுச் சொல்கையில் அக எழுச்சிப்பாடல்கள் என்பவை பாரதி எழுதிய இதர வகைப்பாடல்களான விடுதலைப்போராட்ட பாடல்கள், பக்திப் பாடல்கள் போல இவையும் ஒரு வகை என்பதாகக் குறுகுகிறது.  
ஆத்மார்த்தமாக நம்முடைய (வாசகனுடைய) அகத்தோடு பேசக்கூடிய குரலைக் கொண்டிருப்பவை பாரதின் பாடல்கள் என்பதே என் மைய வாதம். இந்தக் குரலின் தன்மையைச் சுட்டிக்காட்டவே டி.எஸ். எலியட்டின் ‘பாழ் நிலத்தோடு’ நான் ஒப்பிட்டுக்காட்ட வேண்டியிருந்தது. கவிதையில் ஆத்மார்த்தமாக பேசும் இந்தக் குரலின் அந்தரங்க சுத்தியை மேலும் மேலும் தூய்மையாக்கவே சங்க அகப்பாடல்களிலும் சரி, பக்திக் கவிதைகளிலும் சரி தீவிர கவித்துவ முயற்சி நடந்திருக்கிறது. இந்தக்குரலை இலக்கியப்பாரம்பரியமாகப் பெறும் பாரதி, தன் மரபு மெய்யியலை தீவிரமான விசாரணைக்குட்படுத்தி தன் விடுதலை, சக மனித விடுதலை, சமூக விடுதலை மூன்றையும் நிரந்தரப் பிணைப்பிலிருத்தும் கவிக்குரலை உருவாக்குகிறார். இதனால் பாரதியின் அத்தனை பாடல்களுமே -ஒரு சில என்று நீங்கள் குறிப்பிடுவதுபோலில்லாமல்- மெய்யியல் கவிதைகளாக இருக்கின்றன.
அவ்வாறு பாரதி தன் கவிக்குரலை சுத்தியுடையதாய் செய்தது நீங்கள் குறிப்பிடுகிற பத்தொன்பதாம் நூற்றாண்டின் நவ வேதாந்த இயக்கமா, முப்பால் மணி குறிப்பிடுவதுபோன்ற பாண்டிச்சேரி தலைறைவு  வாழ்க்கையில் பாரதி விசிஷ்டாத்வைதத்திற்கு மாறியதா என்ற வரலாற்றுத் தரவு சார்ந்த காரண காரியங்களைச் சற்றே விவாதத்திலிருந்து விலக்கிவைப்போம். ஏனெனில் அத்வதை வேதாந்தம் பாரதியின் கவிக்குரலை உருவாக்கத்தக்க ஆற்றல் கொண்டதா, இந்திய மரபுகளில் அத்வைத வேதாந்தம் என்ன பங்காற்றியிருக்கிறது, அதற்கும் இந்திய அழகியலுக்குமிடையிலுள்ள தொடர்புகள் என்ன என்பதெல்லாம் தனியான நீண்ட விவாதத்திற்கும் பரிசீலினைக்கும் உரியவை.
பாரதி இவ்வாறாக உருவாக்கிக்கொண்ட கவிக்குரல் காண்ட் குறிப்பிடுவதுபோன்ற Transcendental ethical inner voice என்றும் நான் சொல்லியிருப்பதை கவனியுங்கள். பாரதி தன் கவிக்குரலைக் கண்டுபிடித்தபின் எழுதிய அத்தனை கவிதைகளுமே தேசபக்திப்பாடல்கள், பக்திப்பாடல்கள் என அனைத்துமே இறுதியான பரிபூரண உண்மையைச் எடுத்தியம்புகின்ற பாடல்களாகிவிடுகின்றன. தேசம், மொழி, பெண் விடுதலை, சாதிகளும் வர்க்கங்களுமற்ற சமூகம் எல்லாமே பாரதியிடத்து மெய்யியலின் பரிபூரண இறுதி உண்மைகளாகின்றன. மாகாளியும், பராசக்தியும், சுதந்திர தேவியும், பாரத மாதாவும் பாரதியிடத்தே ஒத்த ஆன்மீக வடிவங்களாகின்றனர். 
சுதந்திரப் போராட்ட காலத்தில் பல்லாயிரக்கணக்கோரை  செயலுக்குத் தூண்டும் சக்தியை (agency) கொடுக்கும் வல்லமை பாரதியின் கவிதைகளுக்கு இருந்ததும் அதனால்தான். சுதந்திர இந்தியா, திராவிட இயக்க காலகட்டம், ஈழத்தமிழர் இனப்படுகொலை ஆகிய மூன்று அறிவுத்தோற்றவியல் சட்டகங்களுக்குள்ளே (epistemological frameworks)  வைத்து பாரதியின் கவிதைகளை கட்டவிழ்த்துப் படித்தாலே கவிதையயும் நம் காலகட்டத்தையும் நாம் அறிந்துகொள்வோம் என்பது என் வாதத்தின் முறையான நீட்சியாகும். ஈழத்துக் கவிஞர் றியாஸ் குரானாவின் 'எனது அறையில் பேயாகி அலைகிறது பாரதியின் கவிதைகள்' என்ற கவிதை பாரதியின் தேச பக்திப்பாடல்களிலுள்ள மெய்யியல் உண்மையான தேசம் என்பதினை நம் காலகட்டத்திற்கேற்ப கட்டவிழ்த்து காட்டுகிறது என்பது என் துணிபு.
மற்றபடி தன் மெய்யியல் மரபுகளைத் தீவிர விமர்சனத்திற்கு உள்ளாக்கி transcendental ethical inner voiceஐ அடையாளம் கண்டு அதை நம் அகத்தோடு  ஆத்மார்த்தமாக பேசுகிற கவிக்குரலாய் சுவீகரிப்பவனை எல்லா மொழிகளுமே, எல்லா பண்பாடுகளுமே மகாகவி என்று மட்டுமல்ல அதி மானுடன், யுக புருஷன் என்றெல்லாம் கூட கொண்டாடத்தான் செய்யும். நீங்கள் இப்பொழுது எழுதியிருக்கும் பாரதி மகாகவியே என்ற கட்டுரை உங்களுக்கு நீங்களே எழுதிக்கொண்ட self help recipeயே தவிர வேறொன்றுமில்லை. உங்களைத்தவிர எல்லோருக்கும் இலக்கிய அடிப்படைகளின்படி பாரதி மகாகவி என்று நன்றாகத் தெரிந்தேயிருக்கிறது.
என் விமர்சன முறைமையோடும் அது சொல்கிற விஷயங்களோடும் நீங்கள் உரையாடுவதும் உரையாடமலிருப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் அவற்றைப் பிழைபட புரிந்துகொள்ளலாகாது. 
றியாஸின் தேநீர் சீக்கிரம் ஆறிவிடுகிறது. என் தேநீர் விருந்தினில் தேநீரின் சூடும் ஆறுவதில்லை சுவையும் குன்றுவதில்லை. உங்கள் ஜென் தருணத்தினை தேர்ந்தெடுப்பதற்கு முடிவுறா சந்தர்ப்பங்கள் காத்துக்கிடக்கின்றன.
அன்புடன்,
எம்.டி.முத்துக்குமாரசாமி