Friday, July 26, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-91

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-91

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி கூற்று

இயற்றியவர்: தாமோதரனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 92

திணை: நெய்தல்

————

ஞாயிறு பட்ட வகல்வாய் வானத்

தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை

இறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த

பிள்ளை யுள்வாய்ச் செரீஇய

இரைகொண் டமையின் விரையுமாற் செலவே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

கதிரவன் மறைந்த, அகன்ற இடம் பொருந்திய வானத்தில் வளைந்த சிறகுகளை உடைய பறவைகள், தாம் தங்கும்படி உயர்ந்த வழியின் அயலில் வளர்ந்த கடம்பின்கண் உள்ள கூட்டிலிருக்கும் குஞ்சுகளின் வாயுனுள்ளே செருகும்பொருட்டு இரையைத் தம் அலகில் எடுத்துக்கொண்டமையால் விரைந்து செல்லும் அவை இரங்கத்தக்கன.

——-

கழிபடர் கிளவி

——

தலைவியின் கூற்றாகிய இப்பாடல் காமமிக்க கழிபடர் கிளவியாற் பொழுது கண்டு சொல்லியது என விரித்து சொல்லப்படுகிறது. கழிபடர் கிளவி என்பது மிக்க துன்பத்தை புலப்படுத்துஞ் சொல் எனப் பொருள் தரும். அந்தி நேரம் என்றேன்றைக்கும் காமத்தின் துன்பத்தையும் தனிமையையும் தருவதாக இருந்திருக்கிறது போலும். மாலைக்காலம் வந்தது இனியும் காம நோயை ஆற்றேன் எனத் தலைவி தனக்குத்தானே சொல்லிக்கொண்டதாக அமைந்திருக்கும் இப்பாடலில் அந்தியில் கூடு திரும்பும் பறவைகளைப் பற்றிய ஒரு காட்சியே உள்ளது.  வரைவு நீட்டித்ததால் பெரிதும் வருந்தியிருந்த தலைவி பொழுது கண்டு சொன்னது என எழுதும்  பொ. வே. சோமசுந்தரனார்  அன்பின் வழியே இப்பறவைகள் இயங்குதலால் அவை இரக்கத்தக்கன என்னுமுகத்தால் அன்பின்றித் தன்னை மறந்துறையும் வன்கண்மையுடைய தலைவர் இவ்வன்புதானும் அறிகிலரே என்று கருதி இரங்கியதாய் இப்பாடலின் அர்த்ததை விளக்குகிறார்.   தமிழண்ணல்  இறைச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டான பாட்டு இது என உரை எழுதுகிறார். இரங்கல் நிமித்தம் உள்ள உரிப்பொருள் என தொல்காப்பியம் அகத்திணையியல் சூத்திரம் 14 இந்த உணர்ச்சியைக் குறிக்கிறது. 

——

கொடுஞ்சிறைப் பறவை

—-

கொடுஞ்சிறைப் பறவை என்பது வளைந்த சிறகுகளை உடைய பறவை எனப் பொருள்தரும். குறுந்தொகை 352 ஆவது பாடலிலும் இதே விதமான சொற்சேர்க்கையை ‘கொடு மென்சிறைய கூர் உகிர்ப் பறவை’ என வாசிக்கலாம்.  மாலைக்காலத்தில் பறவைகளும் விலங்குகளும் தங்கள் கூட்டிற்கும் வீட்டிற்கும் விரைந்து சென்று அடைவதை ‘விலங்கும் பறவையும் வீழ்துணைப் படர’ எனப் பெருங்கதையில் வரும் மாலைப்புலம்பல் பாடல் வரி 43 விவரிக்கும். புறத்து நிகழும் நிகழ்ச்சிகள் காமத்தை வளர்ப்பன என்பது பறவைகளின் செயலால் உணர்த்தப்படுகிறது. கொடிஞ்சிறை எனும் அடைமொழி பறவைகள் தங்கள் கூடுகள் நோக்கி விரைந்து வருவதற்கு ஏற்ப உள்ளதையும் உணர்த்துவதாக இருக்கிறது. தாய்ப்பறவை தன் குஞ்சுகளின் முன் வாயில்  இரையை வைத்தால் அது விழுந்துவிடும் என்பதால் வாயின் உள் இடத்தில் செருகுவதற்காக இரையுடன் வந்தன.  பறவைகளின் விரைவும் நோக்கமும் தலைவியைப் பொறுத்தவரை காமக்குறிப்பையும் உள்ளடக்கியவை. 

“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை”  என தொல்காப்பியம் மரபியல் சூத்திரம் 4 கூறுவதற்கு இணங்க பறவைக் குஞ்சுகளைப் பிள்ளையென்றாள். செரீஇய- என்பது செருகும்பொருட்டு, செருகியென்பது செரீஇ என்று வந்தது, செரீஇய - செய்யுளிசை அளபெடை. அருகிலிருந்த கடம்பமரமென்பது, ‘இறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த’ என்ற வரியால் குறிப்பிடப்படுகிறது. மராஅத்த –  என்பதில் அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது.  மாலைப்பொழுதில் கூடு திரும்பும் பறவைகளைப் போல தானும் இன்புற்று பிள்ளைப் பேறு எய்தி,  தன் பிள்ளைகளைப் பாதுகாத்து மகிழ்தல் வேண்டும் எனத் தலைவி விரும்பினாள்.  காலம், இடம் தெரிதலும் பிள்ளையை ஊட்ட விரைவாக வருதலும்  ஆகியன பறவைகளின் அறிவுடமையைக் காட்டுவதாகவும் தலைவி கூறுகிறாள். ‘அளியதாம்’ என்ற சொல் பறவைகளின் அறிவுடமையைக் குறிக்கும். இந்த அறிவுடமை இல்லாதவனாய் தலைவன் இருக்கிறான் என்பது அதன் உட்குறிப்பு. அந்த உட்குறிப்பின் எள்ளல் விரக்தியும் காதலும் நிறைந்தது; அவற்றின் முன்னால் தலைவன் மடையனாய் தீற்றப்படுகிறான்.