Friday, January 27, 2012

பத்மஶ்ரீ ந.முத்துசாமி


ந.முத்துசாமி


நாடக ஆசிரியரும், கூத்துப்பட்டறை இயக்குனரும், சிறுகதை எழுத்தாளருமான ந.முத்துசாமிக்கு இந்த வருடத்தின் பத்மஶ்ரீ விருது வழங்கப்படுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 
முத்துசாமியின் சிறுகதைத் தொகுதியான ‘நீர்மை’யும் சரி அவருடைய நாடகங்களும் சரி மீண்டும் மீண்டும் பயிலப்படவேண்டியவை. ‘சுவரொட்டிகள்’, ‘அப்பாவும் பிள்ளையும்’, ‘நாற்காலிக்காரர்’, ‘இங்கிலாந்து’, ‘உந்திச்சுழி’, ‘நற்றுணையப்பன்’,‘காலம்காலமாக’ ‘படுகளம்’ ஆகிய நாடகங்கள் தமிழின் இணையற்ற நவீன நாடகங்கள். முத்துசாமியின் ‘அன்று பூட்டிய வண்டி’ தெருக்கூத்து பற்றி முத்துசாமி எழுதிய தனித்துவமான பார்வையுடன் கூடிய கட்டுரைகளின் தொகுப்பு. 
முத்துசாமியின் உரைநடை அபூர்வமானது; அவருடைய நாடகங்களைப் போலவே தனித்துவமானது; அலங்காரங்களும், தளுக்குகளும், மேனாமினுக்குகளும், சாமர்த்தியங்களும், தந்திரங்களும் இல்லாதது. நகரத்தில் வாழும் முத்துசாமி தான் பிறந்த கிராமமான புஞ்சையின் ஒவ்வொரு அங்குலத்தையும் தன் எழுத்துக்குள் கொண்டுவர யத்தனித்ததால் உருவான உரைநடை அது. 
தெருக்கூத்துதான் தமிழனின் அரங்கு என்பதை நாற்பது வருடங்களாக தொடர்ந்து எழுத்திலும் பேச்சிலும் வலியுறுத்தி தெருக்கூத்திற்கு  சமூக அந்தஸ்தும் அங்கீகாரமும் கிடைப்பதற்காக அயராமல் பாடுபடுபவர் முத்துசாமி. தனிப்பட்ட முறையில் 1985இல் ஆய்வு மாணவனாக நான் சென்னையில் இருந்தபோது முத்துசாமிதான் என்னை புரிசைக்கு கூட்டிக்கொண்டுபோய் மகாபாரதக் கூத்தினை எனக்கு அறிமுகப்படுத்தினார். இவ்வாறாக பலருக்கும் மகாபாரதக்கூத்தினை அறிமுகப்படுத்துவதை அவர் தன்னுடைய கடமையாக செய்துவந்தார். முத்துசாமி கொடுத்த அறிமுகத்தினாலேயே நாட்டுப்புறவியல்துறையே என்னுடைய துறை என நான் தேர்ந்தெடுத்தேன். என்னைப் போல் எண்ணற்ற நபர்களின் வாழ்வினை முத்துசாமி சீரமைத்திருக்கிறார்.
எனக்குத் தெரிந்து கலைராணி, பசுபதி, ஜெயக்குமார், ஜெயராவ், ஜார்ஜ், சுந்தர், சந்திரா, பழனி என  அசலான நாடக நடிகர்களை முத்துசாமி உருவாக்கியிருக்கிறார். நாடக நடிகர்களாக இவர்கள் உருவானதை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். நான் பார்க்காமல் இன்னும் இரண்டு மூன்று அடுத்த தலைமுறை நடிகர்களும் முத்துசாமியால் உருவாக்கப்பட்டிருக்கின்றனர். 
ந.முத்துசாமியோடு நான் பழகுவதற்கு வாய்த்த சந்தர்ப்பங்களை என் வாழ்க்கையின் பெறும்பேறாகவே  நினைக்கிறேன்.  லட்சியக் கனவுகள் கொடுக்கும் வேகம், நடைமுறை சார்ந்த விவேகம், உள்ளார்ந்த உறுதி, கூர்மையான பார்வை, வெள்ளம்பியான மனம், பெருந்தன்மை என எப்போதுமிருக்கும் முத்துசாமியோடு உரையாடும் சந்தர்ப்பங்களில் இயல்பாகவும், பாதுகாப்பாகவும், ஆசுவாசமாகவும் உணர்ந்திருக்கிறேன். கள்ளமற்ற கலை ஆளுமையின் வசீகரம் அது.
முத்துசாமியையும் அவருடைய படைப்புகளையும் பற்றி விரிவாக நான் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன். இந்த சிறு குறிப்பு முத்துசாமிக்கு பத்மஶ்ரீ வழங்கப்படுவதையொட்டி நான் அடைந்த மகிழ்ச்சியை பதிவு செய்வதற்கு மட்டுமே.
 ந.முத்துசாமிக்கு என் வணக்கங்களும் வாழ்த்துகளும்.

Sunday, January 22, 2012

‘அநாதையின் காலம்’- அறிவிப்பு
விகடதுன்பங்கள் இடுகையைத் தொடர்ந்து ‘அநாதையின் காலம்’ எப்போது வெளிவரும் என்று கேட்டு எழுதிய நண்பர்களுக்கு நன்றி.
‘அநாதையின் காலம்’ கிட்டத்தட்ட 120 பக்கங்கள் வரக்கூடிய ஒரே நீள்கவிதை; கவிதைகளின் தொகுதி அல்ல. முழுமையாகத் திருத்தியபின் பக்கங்கள் குறையலாமே தவிர கூடாது. ‘நீர் அளைதல்’ வெளியானது போலவே மின் பதிப்பாக தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி வெளியிட உத்தேசித்திருக்கிறேன். ‘நீர் அளைதல்’ தொகுதியை epub வடிவத்தில் வெளியிட இயலவில்லை. Epub வடிவத்தில் மாற்றும்போது தமிழ் எழுத்துரு சிதைந்து போனது. இப்போது அதை சரி செய்துவிட்டேன். ‘அநாதையின் காலம்’ pdf ஆகவும் கைபேசி, ஐபேட் போன்ற கருவிகளில் வாசிக்கத் தகுந்த விதத்தில் epub ஆகவும் வெளிவரும். விலைக்கு விற்பதாக இல்லை.

Saturday, January 21, 2012

விகடதுன்பங்கள்விகடதுன்பங்களை ஈர்ப்பது என் ஜாதக விசேஷம். அதிலும் என் கவிதைகளைத் தொகுத்து மின் பதிப்பாய் வெளியிட்டதிலிருந்து என் ஜாதக விசேஷம் முழுமையாய் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது போலும்; என் மின்னஞ்சல் பெட்டி நிரம்பி வழிகிறது. 
மாகானுபாவர் சித்திரக்குள்ளன் தினசரி இருபதிலிருந்து முப்பது பக்கக் கட்டுரைகளால் என் மின்னஞ்சல் பெட்டியை நிரப்புவதில் முதன்மையானவராக இருக்கிறார். யார் பெற்ற பிள்ளையோ வார்த்தைகள் சுலபமாகக் கொட்டுகின்றன; ஆனால் அவர் விமர்சிப்பதாகச் சொல்கிற என் கவிதைகளுக்கும் அவர் எழுதுவதற்கும் எந்த சம்பந்தத்தையும் காணோம். நான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தது முதலாகவே ஒவ்வொரு பதிவுக்கும் சித்திரக்குள்ளனுக்கு சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது. பின்னே இப்பொழுது தொகுதியே கிடைத்துவிட்டது. சும்மா புகுந்து விளையாடுகிறார்.
சித்திரக்குள்ளன் ஜெயமோகனின் கையாளோ என்று பாரதி விவாதத்தின்போது சந்தேகப்பட்டேன். அப்படி எதுவும் குழு விசுவாசி போலவும் இப்போது தெரியவில்லை. ஒரு கும்பலே சித்திரக்குள்ளன் என்ற பெயருக்குள் ஒளிந்திருப்பதாக எனக்கொரு சம்சயம். சொல்லாடலா சொற்களனா எது சரியான கலைச்சொல் என்பது போன்ற கலைச்சொல்லாக்கங்கள் குறித்த கவலைகள் அவரது கடிதங்களின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கின்றன என்றால் நான் எப்போதோ ஆற்றிய உரைகள், உதிர்த்த முத்துக்கள், எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள் என என்னுடைய மொத்த இறந்த காலமும் சித்திரமொன்றில் விகார குள்ளனாய் உருவெடுத்துபோல ஏகத்திற்கும் என் வார்த்தைகளே எனக்கு மேற்கோள்களாய் காட்டப்படுகின்றன. ஏச்சை விட மிகையான பாராட்டுகள் மனதை அதிகம் கூசச் செய்கின்றன; எங்கேயாவது போய் தலையை மணலில் புதைத்துக் கொள்ளலாமா என்றிருக்கிறது.
வழமையாக நவீன கவிதை என்று தமிழில் அறியப்பட்டதிலிருந்து வேறுபட்டதாக என் கவிதைகள் இருப்பதாகவும் அவை சாதாரண தினசரி அனுபவத்திற்கும் ஒரு வகையான அநாதைத் தன்மைக்கும் இடையில் ஊடாடுவதாகவும் எழுதியிருக்கும் கோலி சோடா வெர்ஷன் 2 க்கு நன்றி. தொகுதியாக வாசிக்கும்போது ஒரு மனிதனின் அந்தரங்க கவியுலகு உருக்கொள்வதை அவதானிக்க முடிவதாக பெயரிலி எழுதியிருக்கிறார். கோலி சோடா வெர்ஷன் 2-க்கும் பெயரிலிக்கும் மேற்கோள் காட்டும்போது நான் மகிழ்ச்சியடையும் விதத்தில் வசதியாக நல்ல பெயர்கள் சீக்கிரமே கைகூடி வரட்டும். கோலி சோடா வெர்ஷன் 2க்கு  என் கவிதைகளைப் பற்றி இந்த அபிப்பிராயமாம் அந்த அபிப்பிராயமாம் என்று எழுதினால் நன்றாகவா இருக்கிறது!
மு கதைகளில் வரும் மு நான்தான், முதான் ‘பே’  என்ற முன்அனுமானங்களோடும் முன் தீர்மானங்களோடும் கவிதைகளுக்கு விளக்கம் கேட்பவர்களுக்கு என்ன பதில் எழுத? நான் முவுமில்லை பேயுமில்லை என்றால் நம்பப்போவதில்லையாம் அவர்கள். இந்த வன்முறையிலிருந்து எப்போது எப்படி தப்பிக்கப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. இப்படியே போய்க்கொண்டிருந்தால் என் எழுத்து, என் வாழ்க்கை, என் முகம், என் அனுபவங்கள் அனைத்தையும் மறுத்து எனக்கென அவர்கள் வழங்கும் அடையாளங்களும் அனுபவங்களும்தான் என்னுடயவை என்று கூச்சலிடுவார்கள் போல. என்னைப் பலராய் நினைத்துருகும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பிறர் அனுபவங்களைத் தங்களால் மட்டுமே தீர்மானிக்கமுடியும் என்றும் நம்புவர்களுக்கும் இலக்கியமே லபிக்கமால் போகக்கடவதாக. 
என் கவிதைகளை ஆங்கிலத்திலும் ஃபிரெஞ்சிலும் மொழிபெயர்ப்பவர்கள் கிட்டத்தட்ட தங்கள் வேலைகளை முடித்துவிட்டார்கள். ஆனால் கடந்த மாதங்களில் அவர்கள் என்னைப் படுத்திய பாட்டினை சொல்லி மாளாது. அக்கு அக்காய் கவிதைகளைப் பிரித்து இந்தச் சொல்லுக்கு அந்தப் பொருள்தானா, அந்தச் சொல்லுக்கு இந்தப்பொருள்தானா என்று நச்சரித்ததில் கந்த சஷ்டி கவசம் படிக்காமல், நெற்றி நிறைய விபூதி அள்ளிப் பூசாமல், தூங்கச் செல்வதில்லை என்றாகிவிட்டது. மொழிபெயர்ப்புத் திட்டங்களில் நான் பங்கேற்க மாட்டேன் என வீரசபதம் எடுத்தபின்னர்தான் என் மின்னஞ்சல் பெட்டியில் பதற்றம் குறைந்தது.
ரொமாண்டிசிசமே இல்லாமல், அடர்த்தியான பிரயோகங்களே இல்லாமல் இவையெல்லாம் என்ன கவிதைகள் என்று கர்ம சிரத்தையாய் கேட்டு வந்திருக்கும் கடிதங்களுக்கும் குறைவில்லை. அவர்களுக்கு என் நல்வாழ்த்துகள். 
என் ஆப்பிள் கணிணியிலிருந்து வலைத்தளத்திற்கு கவிதைகளை படியெடுக்கும்போது சில தமிழ் எழுத்துருக்கள் சிதைவதாயிருந்தன. இதை சரி செய்ய நான் அணுகிய நண்பர் சதீஷ்பாலாவுக்கு என் கவிதைகள் பிடித்துப்போய்விடவே என் தளத்தையும் தன் ஓய்வு நேரத்தில் இலவசமாக நிர்வகிக்கிறார். அவர் கொடுத்த புள்ளிவிபரத்தின்படி முந்தா நாள் வரை 2088 தடவைகள் என் கவிதைத் தொகுதி தரவிறக்கப்பட்டுள்ளதாம். முப்பதிலிருந்து ஐம்பது ரூபாய் என விலை வைத்து விற்கலாம் என்று இப்போது விடாமல் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார். அமேசான், ஐபுக்ஸ் என்றெல்லாம் கூட விற்கலாமாம். பதிப்பகங்களின் துணை வேண்டாமல் தனி ஆளாகவே பேபால் கணக்கு தொடங்கி செய்யலாம் என்கிறார். என் தொழில் கவிதை என்று அறிவித்தவர்களெல்லாம் வயிற்றுப்பாட்டுக்குக் கவலையில்லாமல் வாழ்வதான கற்பிதச் சித்திரம் சதீஷ்பாலாவின் குறுஞ்செய்திகளில் கூடிக்கூடி கலைகிறது.  
விகடதுன்பங்களையும் மீறி அடுத்து ‘அநாதையின் காலம்’ என்ற என் நீள்கவிதையை மின்பதிப்பாய் வெளியிட யோசனை.

Tuesday, January 17, 2012

நகுலன் எழுதியிருக்கக்கூடும் இப்படிநகுலன் எழுதியிருக்கக்கூடும் இப்படி

கருணாநிதியா என்று கேட்டேன்
கருணாநிதிதான் என்றார் அவர்
எந்தக் கருணாநிதி
அவரும் சொல்லவில்லை
நானும் கேட்கவில்லை
என்றாலும்
கருணாநிதியை
கருணாநிதி என்றழைத்தால்
ஆவேசம் கொள்வர் பலர்

Sunday, January 15, 2012

என் கவிதைத் தொகுதி தரவிறக்க

என் கவிதைத் தொகுதி "நீர் அளைதல்" pdf ஆக தரவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் கீழ்க்காணும் சுட்டியில் அதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://docs.google.com/open?id=0BzHCwqQ3UxT7ZDNmYjQ1YzctNTk1Ni00MjMyLThkODktNGNmOTYyYjMyMGNi

நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்

Wednesday, January 11, 2012

சிவாஜிராவின் சிவதனுசு


சிவதனுசு- தோல் பாவைபடத்தொடரை எழுதவேண்டும் என்ற நினைப்புடன் அலுவலகத்திலிருந்து வந்துகொண்டிருந்தபோது ராஜமாதாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. போனமாதம் அப்பாவின் நினைவு நாளைக்குக் கூப்பிடவேயில்லையே அண்ணண் என்ற ராஜமாதா மறைந்த தோல்பாவை நிழல் கூத்து கலைஞர் சிவாஜிராவின் மகள்; மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தானேயில் இப்பொழுது இருக்கிறாள். ஐந்து வருடங்களுக்கு முன்பு ராஜாமாதா என்னைப் பார்க்க வந்தபோது சிவாஜி ராவ் மறைந்து ஒரு வருடமாகிவிட்டது என்று அறிந்தேன். அவருடைய நினைவு நாள் என்ன என்று கேட்டு குறித்து வைத்துக்கொண்டேன். ஒவ்வொரு வருடமும் ராஜமாதாவை சிவாஜிராவின் நினைவு நாளன்று தொலைபேசியில் அழைப்பேன் ஏதாவது அளாவளாவிக்கொள்வோம். இந்த வருடம் வேலைப்பளு அதிகமாய் இருந்ததில் மறந்துவிட்டது.
மறந்துவிட்டேன் என யோசிக்காமல் சொல்லிவிட்டேன். ராஜமாதா பிடிபிடியென்று பிடித்துக்கொண்டாள். என்னைவிட பத்து வயதாவது வயதில் குறைந்தவள். ஆனால் என்னமாய் சண்டைபிடிக்கிறாள்! அப்பனுக்கு மகள் தப்பவில்லை என்றவுடன் கொஞ்சம் அமைதியானாள்.அப்பா உங்களுக்கு என்று எடுத்து வைத்திருந்த சிவ தனுசு பொம்மையை அனுப்பி வைத்திருந்தேனே கிடைத்ததா என்றபோதுதான் அவளுடைய தபால் தீபாவளியின்போதே வந்துசேர்ந்துவிட்டதும் ஞாபகம் வந்தது.
சிவ தனுசு, மிக அழகான தோல் பாவை. சிவாஜி ராவுக்கு மிகவும் பிரியமான பாவை. சிவாஜி ராவைப் பற்றி நான் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளில் நான் அவருக்கும் சிவ தனுசு பாவைக்கும் உள்ள உறவைக் குறிப்பிடவில்லையென்று நான் என் கட்டுரைகளின் சாராம்சத்தை மொழிபெயர்த்துச் சொன்னபோது சுட்டிக்காட்டியது நினைவுக்கு வந்தது. நான் எழுதாமல் விட்டதால்தான் அதை எனக்கென்று பரிசளித்தாரோ?
ஆரம்பத்தில், அதாவது எண்பதுகளின் இறுதியில் தோல்பாவைக் கூத்து பற்றிய ஆராய்ச்சியின் நிமித்தம் நான் சிவாஜி ராவை சந்தித்தபோது அவர் திருநெல்வேலியில் மேலப்பாளையம் தாண்டிய புற நகர்ப் பகுதியில் வசித்து வந்தார். சிறிய குடிசை அவர் வீடு. இரண்டு மனைவிகள். முதல் மனைவி நிரந்தர நோயாளியாய் எப்போதும் படுத்த படுக்கையாய் இருந்தார். இரண்டவது மனைவிக்கு மகள் ராஜாமாதா வயதுதான் இருக்கும்; மனைவி என்பது சிவாஜி ராவை அண்டியிருக்க ஒரு பாதுகாப்பான அடையாளம் மட்டுமே. அவரின் வீட்டைச் சுற்றி கரகாட்டக் கலைஞர்கள், பபூன் நடனமாடுபவர்கள் என நாட்டுப்புற கலைஞர்கள் பலரின் வசிப்பிடங்கள் இருந்தன. சிவாஜி ராவ், ராஜமாதா, அவருடைய இரண்டு மனைவிகள் சேர்ந்தது அவர்களின் பொம்மலாட்டக்குழு. வெள்ளைத்துணியால் கட்டி எழுப்பிய ஆளுயுர நிகழ்த்துப்பெட்டிக்குள் சிவாஜி ராவ் சிறு மனைப் பலகையில் உட்கார்ந்து கொள்வார். அவருடன் இருக்கும் இரண்டாவது மனைவி தோல் பொம்மைகளை எடுத்துக் கொடுத்து உதவி செய்வார்; அவர் கதை சொல்லி பாட்டுப்பாடி தோல்பாவைக்கூத்து நிகழ்த்தும்போது அவர் ஆமாம் ஆமாம் என்றோ கேள்வி கேட்டோ ஒத்துப் பாடுவார். திரைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் முதல் மனைவி டோலக்கு வாசிப்பார்; அவருடைய உடல் நிலை மோசமானபின்பு ராஜமாதா டோலக்கு வாசிப்பதாயிற்று. ராஜமாதா கூடவே சேர்ந்து பாடவும் சிவாஜிராவின் நகைச்சுவைக்கு ஏட்டிக்குப் போட்டியாகவும் ஏதாவது சொல்வாள். சிவாஜி ராவ் பத்து நாள் கூத்தாக முழு ராமாயாணமும் நிகழ்த்துவது கிராமங்களில் பிரசித்தம். அவருக்கு தமிழ் தவிர கன்னடம், மலையாளம், தெலுங்கும் தெரியுமாதலால் ராமாயணக் கூத்தினை அவர் தென்னிந்தியா முழுக்க நிகழ்த்தியிருக்கிறார். வீட்டில் அவர்கள் புழங்கும் தாய்மொழி மராத்தி. 
எண்பதுகளின் மத்தியிலேயே சிவாஜி ராவுக்கு நிகழ்ச்சிகள் கிடைப்பது குறைந்துவிட்டிருந்தது. மழை வேண்டி நிகழ்த்தப்படும் நல்லதங்காள் கதைக்குக் கூட கேட்பவர்கள் அருகிவிட்டிருந்தனர். ராமாயணக்கூத்து என்பதெல்லாம் பெயருக்குத்தான் என்று மாறிவிட்டிருந்தது. தோல்பாவைக் கூத்தின் கோமாளிகளான உச்சிக்குடுமியும், உளுவாத்தலையனும் அடிக்கும் லூட்டியே இரவு பதினோரு மணி வரை செல்லும்; அப்புறம் இடையிடையே சில ராமாயணக்கதைக் காட்சிகளும் கதைசொல்லலும் பிறகு சினிமாப் பாடல்களுக்கு ஏற்ப ராஜமாதாவின் நடனம் என்று சீக்கிரமே கிழக்கு வெளுத்துவிடும். சிவாஜிராவுக்கு தன் கலை இவ்வாறாக சிதிலமடைந்துவிட்டதே என்ற வருத்தம் உள்ளுக்குள் தீயாய் அவித்துக்கொண்டிருந்தாலும் வெளிப்பார்வைக்கு விட்டேத்தியாக எல்லாவற்றிலுமிருந்து விடுபட்டுவிட்ட தோரணையே இருந்தது. அவர் எப்பொழுதுமே தன் பாவைகளோடு பாவையாய் வேறொரு உலகத்தில் இருப்பதான பாவனையிலேயே இருந்தார். எல்லா எதிர்வினைகளும் அவரிடமிருந்து பாவைக்கூத்தின் போதுதான் வெளிப்படும். உயரமான ஒல்லியான போர் வீரன் போன்ற தேகம் அவருடையது. பெரிய முறுக்கு மீசையுடன் பெரிய அகலமான விழிகளுடன் மரக்கட்டைபோல முகத்தை உணர்ச்சியற்று வைத்திருப்பார். பல நாட்கள் குலைப்பட்டினி கிடந்து பழகிவிட்டதால் ஒரு வகை வைராக்கியமும் அலட்சியமும் முகத்தில் விரவியிருக்கும்.தொன்னூறுகளில் சிவாஜிராவும் அவர் குடும்பமும் சென்னைப்புற நகர்ப்பகுதிலுள்ள காட்டாங்கொளத்தூருக்குக் குடி பெயர்ந்துவிட்டனர். சென்னைத் தீவுத் திடலில் அரசுப்பொருட்காட்சி நடக்கும்போது சிவாஜிராவுக்கு பாவைக்கூத்து நிகழ்த்தும் வாய்ப்புகிடைத்து வந்தது. அரசுப்பொருட்காட்சி நிகழ்ச்சியில் ராமனும் சீதையும் கொக்கோகோலா குடித்துக்கொண்டே காட்டுக்குள் உலா போவதாய் கதை போய்க்கொண்டிருந்தது. சிவாஜிராவ் மிகவும் நொந்துபோயிருந்தார். இனி வாழ்நாளில் ராமாயணம் முழுமையாக நிகழ்த்தவே முடியாது போலிருக்கிறது, உச்சிக்குடுமி, உளுவாத்தலையன், பொருட்காட்சி அசட்டுத்தனம் என்றுதான் எஞ்சிய வாழ்வு கழியும் போலிருக்கிறது என்றார். ரிகார்ட் டான்ஸ் ஆடுவதற்கு பொருட்காட்சி எவ்வளவோ பரவாயில்லை என்றாள் ராஜமாதா.

சில மாதங்களுக்குப் பின் சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து உள் செல்லும் பாதையிலுள்ள தென்மேல்பாக்கம் என்ற கிராமத்தில் சிவாஜிராவுக்கு முழு ராமாயாணக் கூத்து பத்து இரவுகள் நடத்தும்படிக்கு ஏற்பாடு செய்துகொடுத்தேன். சிவாஜிராவின் குடும்பமிருந்த காட்டாங்குளத்தூரிலிருந்து தென்மேல்பாக்கம் பக்கமாகவும் இருந்தது. ராஜமாதா அந்த பத்து நாட்களும்தான் சிவாஜிராவ் மிகவும் சந்தோஷமாக இருந்த நாட்கள் என்று பின்னாளில் குறிப்பிட்டாள்.   நான் ஆறேழு இரவுகள் அவருடைய பாவைக்கூத்தை விடிய விடிய பார்த்தேன். நகைச்சுவைக் காட்சிகள் இயல்பாகவும், அளவாகவும், கதையோட்டத்தினை ஒட்டியும் இருந்தன. சிவாஜிராவுக்கு கம்பராமயாணம் தளபாடமாய் தெரிந்திருந்தது. ஒரு நாள் இரவு நிகழ்த்துத்துணிப் பெட்டிக்குள் போய்  அவர் பாவைகளை ஆட்டுவிப்பதைப் பார்த்தேன். பாவைகளை ஆட்டிக்கொண்டும் கதை சொல்லிக்கொண்டும் இருந்த சிவாஜிராவ் நான் சாதாரணமாகத் தெரிந்து வைத்திருந்த ஆளாய் இல்லை. ஒரு ஆவேச சந்தோஷத்தின் உச்சத்தில் களி நடனத்திலிருக்கும் கலைஞனாய் அவர் இருந்தார். சட்டை போடாத வெற்று மார்பில் சிவதனுசு பாவையை இறுக்கக்கட்டியிருந்தார். ஒவ்வொரு காட்சி மாற்றத்தின்போதும் சிவதனுசு பாவையைத் தொட்டுக்கொள்வதும் அதனோடு ரகசியமாய் உரையாடிவிட்டு கதையைத் தொடர்வதுமாய் இருந்தார். சிவதனுசு பாவையோடு என்னதான் செய்கிறீர்கள் என்று கேட்டு வைத்தேன் மறு நாள் காலையில். அதற்கு அவர் உடனடியாகப் பதில் சொல்லவில்லை.

காட்டாங்கொளத்தூரை சுத்தியிருந்த கிராமங்களில் அவருடைய கூத்துக்கு நிறைய தாம்பூலங்கள் வர ஆரம்பித்தன. நானும் சிவாஜிராவையும் அவருடைய குடும்பத்தினையும் அடிக்கடி சந்தித்து வந்தேன். சுத்துப்பட்டு கிராமம் ஒன்றில் அவர்கள் பாவைக்கூத்து நிகழ்த்தும்போதுதான் அவர்களுக்கு ஒரு போலீஸ்காரனால் தொந்திரவு வந்தது. ராஜமாதாவை போலீஸ்காரன் வம்பிழுக்கப்போக சிவாஜிராவ் போலீஸ்காரனை அடித்திருக்கிறார். போலீஸ்காரன் அவரை அடித்து லாக்கப்பில் நான்கு நாட்கள் வைத்துவிட்டான். இந்த சம்பவங்களெல்லாம் நடந்து முடிந்து ஒரு மாத காலம் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது. சிவாஜிராவை நான் சென்று பார்த்தபோது அவர்கள் மகாராஷ்டிரத்திற்கு இரண்டொரு நாளில் பயணப்பட இருந்தார்கள். சிவாஜிராவ் ஆடிப்போயிருந்தார். மராத்தியில் ஏதோ தனக்குத் தானே முணுமுணுத்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் தரையில் சிவதனுசு கிடந்தது. திடீரென்று சிவாஜிராவ் ‘அன்னிக்கு கேட்டில்லாடே இதோட என்ன பேசுகேன்னு இதுக்க கவுத்துல தர்ப்ப புல்ல அம்பாட்டு கட்டி விடுகேனாக்கும், அவனவன் அலறி ஓடுகானில்லியா’ என்று சொல்லிச் சிரித்தார். ‘மந்திரம் சொல்லி இல்ல விடுவாக’ என்றாள் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்த மனைவி. ‘பத்து நாள் ராமாயணஞ் சொல்லதுக்கும், போலீஸ்காரங்கிட்ட ஒத திங்கதுக்கும் தெம்பு வேண்டாமாடே தெம்பு?’

கடைசியாக சிவாஜிராவைப் பார்த்தது அவரையும் குடும்பத்தினரையும் மும்பைக்கு ரயிலேத்திவிடப் போனபோதுதான். ராஜமாதா அனுப்பித் தந்த சிவதனுசு பாவை கண்ணாடி ஃபிரேம் போட்டு வந்துவிட்டது. தர்ப்பைப் புல்லை அம்பாய் பாவித்து சிவதனுசின் நாணில் ஏற்றும் வித்தையை நான் இனிமேல்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.   Tuesday, January 3, 2012

சாரல் விருது 2012: வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும்நண்பர்கள் ஜேடி-ஜெர்ரி நிர்வகித்து வரும் அறக்கட்டளையின் சார்பில் இந்த வருடம் சாரல் விருது வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அளிக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். வண்ணநிலவனும் வண்ணதாசனும் நாம் மீண்டும் மீண்டும் பயிலவேண்டிய படைப்பாளிகள் ஆவர். திலீப்குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன் என்று தொடர்ந்து வருடாவருடம் சிறந்த படைப்பாளிகளுக்கு சாரல் விருது போய்ச் சேர்வது இந்த விருதின் கௌரவத்தை அதிகப்படுத்துவதாக இருக்கிறது. வண்ணநிலவனையும் வண்ணதாசனையும் இணையத்தில் வாசிப்பதென்பதும் அபாரமானதாக இருக்கிறது.
வண்ணநிலவனின் தளம்: http://wannanilavan.wordpress.com
வண்ணதாசனின் தளம்:  http://vannathasan.wordpress.com