Thursday, November 24, 2022

தியானம், இலக்கியம், கவியாக வாழ்தல்

தியானம், இலக்கியம், கவியாக வாழ்தல் —— பௌத்த தியான முறைமையில் உளப்பகுப்பாய்வுக்கு (Psychoanalysis) முக்கிய பங்கு இருக்கிறது. மேற்கத்திய உளப்பகுப்பாய்விலிருந்து பெரிதும் மாறுபட்ட பௌத்த தியானத்தில் இரண்டு அம்சங்கள் என்னை அதை நோக்கி ஈர்த்துக்கொண்டே இருக்கின்றன. ஒன்று பௌத்த தியானம் ஒருவரை தன்னுடைய உண்மை இயல்பு என்ன என்பதை தொடர்ந்து பரிசீலித்து கண்டுபிடிக்கச் செய்கிறது. அப்படி கண்டுபிடிக்கும்போது நம் உண்மை இயல்பு இதுதான் என்பதை நாம் உணரும்போது நமக்கே நம் இயல்பு பிடிக்குமா அதை எதிர்கொள்ளும் துணிச்சலும் நேர்மையும் நம்மிடம் இருக்குமா என்பது இலக்கியத்துக்கும் கலைக்குமான கேள்வி. உண்மையான சுயபரிசோதனைக்குப் பிறகான வழியாக பௌத்த தியானம் கற்பிப்பது என்னவென்றால் வாழ்வியலின் விசைகளை நம்மை நோக்கி ஆற்றுப்படுத்துவதற்கும், வலி நிவாரணத்திற்கும் பயன்படுத்துவதற்கான உத்திகளையே. அவற்றை எளிமையாக விவரிக்கும் குரு ரிம்போஷே பத்மசம்பவரின் போதனைகளைப் பற்றிய Secret Teachings of Padmasambhava எனக்கு பல வகைகளிலும் முக்கியமானது. ———— தினசரி பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளுதல் புத்தியை மொண்ணையாக்கிவிடும் என்ற கருத்து என்னை விட வயதில் மூத்த எழுத்தாளர்கள் (உ-ம்:சுந்தரராமசாமி, ந.முத்துசாமி) பலருக்கும் இருந்தது. அவர்களை ஒத்த அபிப்பிராயம் தியானம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகு எனக்கு மாறியது. தினசரி கால அட்டவணைப்படி இயந்தரத்தனமான சடங்குகளையும் பழக்கங்களையும் தியானத்தோடு சேர்ந்து உண்டாக்கிக்கொள்ளும்போது கால ஓட்டத்தில் இருந்து தப்பித்த கண-இருப்பு (presence) வசமாகிறது. கடிகாரத்தின் டிக்-டாக் தொடர்கிறது ஆனால் சுழற்சியும் லயமும் மனத்தின் கதியாக, புத்தியில் விகாசமும் தீட்சண்யத்திற்கான எதிர்பார்ப்பும் கூடி அதீத விழிப்பிற்கான சாத்தியம் புலப்படுகிறது. பதஞ்சலி யோக சூத்திரம் சமாதி பாதத்தில் சரியான practice-ஐ ஒருவன் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற அறிவுரை இருக்கிறது. சரியான practice என்ன என்பதை தேர்ந்தெடுப்பதே மிகப் பெரிய சவால். ————- தியானத்தின் பலன் தியானம்தான் என்பதையும் உணரவேண்டும். குண்டலினி எழும்பி விபரீத ராஜயோகமெல்லாம் கைகூடி அல்லது கால் கூடி வராது. ஒரு சில மன நோய்கள், நரம்பியல் நோய்களுக்கு தியானம் சுகமளிக்கலாமே தவிர சாதாரண நீரிழிவு முதல் பல நோய்களுக்கும் முதுமையின் பலகீனங்களுக்கும் சொஸ்தமளிக்காது. தியானத்தினால் சூப்பர்மேனாகவும் முடியாது. கவனம், நுண்ணுணர்வு, ஓர்மை கூடும். மனோ லயம் மிகும். ஆழ்ந்த அமைதியும் திருப்தியும் கிட்டும். அகிம்சையின் விழுமியங்களாலான முடிவுகளை மனம் தன்னிச்சையாகவும் உடனடியாகவும் எடுக்கும். பிரபஞ்ச லயத்தோடு ஒத்திசைவாயிருப்பதான பாவனை நம்மை ஆட்கொள்ளும். கவியாக வாழலாம். ——— தியானம் போல ஒரு நாவலின் உரை நடை இருக்க முடியுமா? அரிஸ்டாட்டிலிய நாடகக்கதை வடிவம், வணிகநாவல்கள், ஹாலிவுட் சினிமா, அவற்றின் தமிழ்க் கள்ளக்குழந்தைகள் என்று பொதுத்தளத்தை ஆக்கிரமித்திருப்பது நாம் அறிந்ததுதான். அரிஸ்டாட்டிலிய நாடகக்கதை வடிவத்தினை உலக இலக்கியம் பல வகைகளிலும் துறந்து விட்டது. அப்படி அரிஸ்டாட்டிலிய நாடக்கதை வடிவத்தினை முற்றிலும் துறந்த நாவல் The Rings of Saturn. நாவலில் ஆழ்ந்த அமைதியை, நினைவுகளின் பவித்திரத்தை, தொலைந்து போன நினைவுகளை, ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் தீவிர உணர்ச்சிகளை, அபூர்வமான தியான உரைநடையாக்கியிருக்கிறார் செபால்ட். இங்கிலாந்தில் வாழ்ந்த ஜெர்மானியரான செபால்ட் ஜெர்மன் மொழியில் எழுதிய The Rings of Saturn 1999 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. என்ன வகையான தியானத்தை வடிவமைக்கிறது செபால்டின் உரைநடை? The Rings of Saturn நாவலில் பெயரில்லாத பயணி ஒருவர் இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலேயே கடற்கரை ஓரமாக நடந்து செல்கிறார். அந்தப் பயணியின் தன்னிலைக் கதையாடலாக சொல்லப்படுகின்ற நாவல் அவர் சந்திக்கின்ற மனிதர்கள், பார்க்கின்ற கட்டிடங்கள், அவருக்கு அனுபவமாகின்ற நிலப்பகுதிகள் ஆகினவற்றை அவை கிளர்த்துகின்ற நினைவுகளோடு, சிந்தனைகளோடு இணைக்கிறது. பயண நூலா, நினைவுக்குறிப்புகளா, அனுபவப்பதிவுகளா என்று தனித்து சொல்லவியலாத வகையில் பிரக்ஞையின் தூண்டுதலகள் செபால்டின் உரைநடையில் இணைக்கப்படுகின்றன. இது சுதந்திர இணைவுகளில் ஓடும், மொழியின் ஒலி வழுக்கல்களால் தொடரும் நனவோடை உத்தி அல்ல. நுண்ணுணர்வுகள் உயிர்பெற சிந்தனையின் இழைகள் நனவிலிக்குள் நீர் போல கசிந்து ஊடுறுவும் உரைநடை, கதை சொல்லல். கதாபத்திரங்கள் அவர்களின் வீர தீரச் செயல்கள் இவை நிரம்பியவே கதைசொல்லல் என்று நம்புபவர்களுக்கு செபால்டின் நாவல் மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கும். கதைசொல்லல்கள் பல தரப்பட்டவை அவற்றின் அழகுகள் வித்தியாசமானவை, விதிகளுக்குள் அடங்காதவை, தொடர்ந்த உரையாடல் தருகின்ற அழகிய அனுபவத்தை அளிப்பவை என்று கதைசொல்லலின் எல்லைகளை விஸ்தரித்து புரிந்துகொள்ளும் வாச்கர்களுக்கு செபால்டின் நாவல் அளிக்கின்ற ‘வாசிப்பின்பம்’ எல்லையற்றது. ஆம், அந்த தனித்துவ வாசக அனுபவத்தை ‘வாசிப்பின்பம்’ என்றுதான் சொல்ல வேண்டும். வேறெப்படி சொல்வதாம்? ஆனால் செபால்டின் கதைசொல்லலிலும் உரைநடையிலும் ஆழமான துக்கம் அடியோட்டமாக இருக்கிறது. The Rings of Saturnஇன் கதை சொல்லி மூன்று விதமான அழிவுகளைப் பற்றி தியானிக்கிறான்; இயற்கை உண்டாக்குகிற அழிவுகள், அழிந்துபோன நகரங்கள், அழிந்து காணாமல் போன வாழ்க்கை முறைகள். அழிவுகளைப் பற்றி தியானிக்கின்ற கதைசொல்லிக்கு இரண்டாம் உலகப்போரில் நடந்த யூத இன அழிப்பும் நினைவுகளூடே மேலெழுந்து வருகின்றன. The Rings of Saturn இன் கதைசொல்லியின் நிலையற்ற பிரக்ஞை அவன் பயணம் செய்கின்ற இடங்களின் காட்சிப்புலத்தினால் தூண்டப்படுகிறது. நாவலில் செபால்ட் பல தேவாலயங்கள், மரங்கள், பாலங்கள் ஆகியவற்றின் புகைப்படங்களையும் தன் கதைசொல்லலின் பகுதிகளாக இணைக்கிறார். பயணம் என்பது எப்போதுமே ஓரிடத்திற்கு திரும்பச் செல்லும்போதுதான் உண்மையிலேயே அனுபவமாகிறதோ என்று நாம் வியக்கிறோம் வேறெந்த எழுத்தாளரிடம் செபால்டின் கதைசொல்லி போன்ற பயணியை நாம் எதிர்கொண்டிருக்கிறோம் என்று நான் நினைத்துப்பார்த்தேன். டி.ஹெச்.லாரண்சிடம் நாம் காணக்கூடும். வி.எஸ்.நய்ப்பாலில் The Enigma of Arrivalஇல் நாம் செபால்டின் பயணிக்கு நிகரான தியானத்தையுடையவரை நாம் அடையாளம் காணக்கூடும். ஏன் வர்ஜினியா வுல்ஃபின் The Waves நாவல் கூட நினைவுக்கு வரக்கூடும். ஆனால் செபால்டின் அபூர்வம் அவர் ஜெர்மனியைப்பற்றி ஜெர்மனிக்கு வெளியே இங்கிலாந்தில் வாழ்ந்து எழுதுவதால் செழுமை பெற்றது. செபால்ட் ஜெர்மனியை விட்டு வெளியே வாழ்ந்ததாலே அவரின் பவித்திர நினைவலைகளில் ஜெர்மனியின் போருக்குப் பிந்தைய இலக்கியத்தின் ரொமாண்டிசச கறை படிவதில்லை. பழம்பெருமைக்கான ஏக்கமாகவும் கொச்சையாவதில்லை. செபால்டின் கதைசொல்லலின் வசீகரம் அது காருண்யத்தின் கொடைகளால் நிரம்பியிருப்பதுதான் என்று நான் மெதுவாகவே கண்டுபிடித்தேன். அது ஈடு இணையற்ற வசீகரமும் கூட. தியானத்தின் நோக்கம் மௌனம் என்று யாரேனும் சொல்வதைக் கேட்கும்போதோ, எழுதியதைப் படிக்கும் போதோ எனக்கு செபால்டின் The Rings of Saturn நாவலில் வரும் இயற்கையைப் பற்றிய அவதானிப்புகளை, குறிப்பாக பெரிய வெடிப்புகளில் சூரிய மண்டலம் தோன்றி அதில் சனி கிரகத்தைச் சுற்றி சுழலும் வளையங்களுக்கு என்ன பொருள் என்று கேட்கத் தோன்றும். அதாவது பொருளாலான பிரபஞ்சமே அது அழிவிலிருந்து உயிர்த்ததை சனியின் வளையங்களின் ஒளிர்வுகள் என நினைவு வைத்திருக்கும்போது, மனிதப் பிரக்ஞை அழிவின் நினைவு ஒளிர்வுகளை இழந்து எப்படி மௌனம் கொள்ளும்?

Wednesday, November 23, 2022

இந்த நாற்காலி வெறுமையாகத்தான் இருக்கிறது, ஷுபூதி: கவிதை, முறையீடு, தியானம்

இந்த நாற்காலி வெறுமையாகத்தான் இருக்கிறது, ஷுபூதி: கவிதை, முறையீடு, தியானம் -- தத்துவத்தில் மார்டின் புயுபரின் ‘I and Thou’ என்ற சிறிய ஆனால் முக்கியமான நூலில் கட்டமைக்கப்பட்ட தன்னிலை-பிறன்மை பிரச்சினைப்பாடு (problematic) தத்துவம் என்று மட்டுமில்லாமல் மானிடவியல், இறையியல், சமூக அறிவியல், அரசியல், இலக்கியம், இலக்கிய கோட்பாடு ஆகிய துறைகளில் மிக முக்கிய பங்களிப்பினை ஆற்றியுள்ளது. புயுபரின் பிரச்சினைப்பாடு ‘நீ’ என்பதினை அடுத்த ஆள் என்று மட்டுமில்லாமல், கடவுள், இயற்கை என தான் என் உணரப்பட்டது தவிர்த்த அனைத்திற்குமானதாக விஸ்தரித்தது. அதாவது ‘நீ’ எனப்படுவது ‘பிறன்மை’ என விரிவு கண்டது. தன்னிலைக்கும் அல்லது தன்னடையாளத்திற்கும் பிறன்மைக்கும் உள்ள உறவின் தன்மையே அறவியலின் நம் சமகால தத்துவத்தின் அடிப்படையென மாறியுள்ளது. புயுபரின் நேரடியான தாக்கத்திற்கு உள்ளான சார்த்தர் இருத்தலியல் சூழ்நிலையின் இறுக்கத்திலும் பரிதவிப்பிலும் Other is hell என்ற தத்துவ சறுக்கலுக்கு ஆட்பட்டதும் அதனால் அவருக்கும் காம்யுவுக்கும் இடையில் மோதல் முற்றியதும் பிரசித்தமான ஒன்றே. சார்த்தர் தன்னுடைய கருத்தினை மாற்றிக்கொண்டதாக அறிவித்தபின்பும், தன் சிந்தனை சறுக்கலின் வெளிப்பாடக அமைந்துவிட்ட No Exit நாடகத்தினை நிராகரித்த பின்னரும் கூட சார்த்தரின் சறுக்கல் இன்றுவரை அவருடைய தத்துவத்தில் படிந்த அகலாக்கறையாகவே கருதப்படுகிறது. தவிர, எழுதப்பட்ட அத்தனை நவீன கவிதைகளையுமே தான் - பிறன்மை என்பவனவற்றிற்கிடையேயான உரையாடலே என்றொரு இலக்கிய கோட்பாடு கூட பிரசித்தம். மார்டின் புயுபரின் வாழ்க்கை வராலாற்றை Martin Buber: The Life of Dialogue என்ற புத்தகமாக எழுதிய மௌரிஸ் ஃப்ரீட்மன் புயுபரின் சிந்தனை இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய அமெரிக்காவின் சிந்தனையிலும், பண்பாட்டிலும் எவ்வளவு தீவிரமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றும் விவரித்துள்ளார். பல மதங்களிடை உரையாடல்கள், இடைசமய நம்பிக்கைகள், மனித உரிமை போராட்டங்கள், போர் எதிர்ப்பு இயக்கங்கள் ஆகியன தன்னிலையயும் தன் அடையாளத்தையும் விட பிறன்மைக்கும், பிற அடையாளத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதே அறம் என்ற நிலைப்பாட்டினை பியுபரின் சிந்தனையிலிருந்தே பெற்றுகொண்டன என ஃபிரீட்மன் விவரிக்கிறார். பால் டில்லிச், ரெய்ன்ஹோல்ட் நீபுர் ஆகிய இறையியல் சிந்தனையாளர்களையும் பியுபரின் சிந்தனைக்குத் தாங்கள் கடன் பட்டிருப்பதைச் சொல்கிறார்கள். மார்டின் லூதர் கிங் ஜூனியர் 1963 இல் எழுதிய பிர்மிங்ஹாம் ஜெயிலிலிருந்து ஒரு கடிதத்தில் புயுபரை மேற்கோள் காட்டுகிறார். மதங்களின் இறுதி விதிகளை உதறி இங்கே இப்போது நடக்கும் மானுட நிகழ்வுகளினூடே நடக்கும் உரையாடல்களை செழுமைப்படுத்துவதன் மூலமே மனித குலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும் என்று வாதிட்ட பியுபர் தினசரி வாழ்க்கையின் உரையாடல்கள், தான் -மற்றது என்ற தன்னிலை பொருளுலகு உரையாடலாகவும் தான் -மற்றவர் என்ற தான்- கடவுள் உள்ளிட்ட மற்ற மனிதர்களின் உலகு என்ற உரையாடலாகவும் பரிணமிக்கிறது என்று விளக்கினார். மார்ட்டின் புயுபரின் நூலை தன்னுடைய தம்மபதம் நூலில் குறிப்பிடும் ஓஷோ உரையாடலின் இருமையை துவதைத்தை கிறித்தவம், இஸ்லாம் யூதம் ஆகியவை பிரார்த்தனை மதங்களாக வலியுறுத்துவதால்தான் புயுபரின் நூல் மேற்குலகில் பிரசித்திபெந்ற்றது என்கிறார். இது ஓஷோவின் கவனிக்கத்தக்க அவதானங்களில் ஒன்று. இதற்கு நேர் எதிரானதாக பௌத்தத்தை விளக்கும் ஓஷோ பௌத்தம் ஒரு பிரார்த்த்னை மதமன்று அது தியான மதம். பிரார்த்தனை ஒரு உரையாடல், தியானம் மௌனம். இதுதான் வேறுபாடு என்று எழுதுகிறார். பிரார்த்தனை உண்மையோ உண்மையில்லையோ யாரிடமோ முறையிடுவது தியானத்தில் முறையீடே கிடையாது ஒருவர் மௌனத்தில் வீழ்ந்துவிடுவது அது என்றும் எழுதுகிறார். நான் இதுவரை எழுதியிருக்கும் கவிதைகளை மீண்டும் வாசிக்கும்போது - இதற்கு நண்பர் ஜேபியின் என் கவிதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகளும் கூத்துப்பட்டறையில் என் கவிதா நாடகங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்பட்டதும் இரண்டு முக்கிய காரணங்கள். இவை இரண்டும் நடந்திராவிட்டால் நான் ஏன் என் கவிதைகளை மீண்டும் அணுக்கமாக வாசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகப் போகிறேன்?- என் கவிதைகள் உரையாடல்களில் முறையீடுகளில், பிரார்த்தனைகளில் கட்டப்பட்டவை என்று ஒரு அவதானம் எனக்குத் தோன்றுகிறது. முறையீடுகளில் இருந்து தியானம் நோக்கி நகர்வதே என் கவிதைகளின் அடுத்த கட்ட பயணமாக இருக்கும் என்றும் எனக்குத் தோன்றுகிறது. இந்த நாற்காலி வெறுமையாகத்தான் இருக்கிறது, ஷுபூதி. எப்போது நீ இந்த நாற்காலியின் வெறுமையைக் காண முடிகிறதோ, இந்த இருப்பின் வெறுமையைக் காணமுடிகிறதோ அப்போதுதான் நீ இருந்தும் இல்லாமல் போகிறாய். அகங்காரத்தின் ஏழ்மை சிறிதும் பாதிக்காதவனாக ஷுபூதி இருந்தான். அதனாலேயே ஆயிரக்கணக்கான சீடர்களில் ஷுபூதியை தன்னுடைய தனிப்பட்ட கவனத்திற்கு உரியவனாக புத்தர் கருதினார். ஷுபூதியின் தியானம் இன்மை குறித்ததாக இருந்தது. இன்மையை ஆதாரமாக அவன் அகம் கண்டு விழித்தபோதெல்லாம் பூக்கள் சொரிந்தன. அகங்காரிகளின் கண்களுக்கு அந்த பூக்கள் புலப்படுவதில்லை.