Saturday, August 8, 2020

அனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை ஒளி நெறி: உப்பு

மீண்டும் மீண்டும் ஒரே காரியத்தை செய்துகொண்டிருக்கிறேன்

கவிதை எழுதுகிறேன் பேர்வழி என

ஒரு படி உப்பை எடுத்துக் கொண்டு போய் 

கடலில் கரைத்துக் கொண்டிருக்கிறேன்

கர்மவினை


1

முடிவு

எல்லா பயணங்களுமே ஏதோ ஒரு கடற்கரையில் நிறைவடைகின்றன

ஆங்கே

உனக்கு எல்லையின்மையின் விஸ்வரூப தரிசனம் காத்திருக்கிறது

நீயோ

நீ வளர்த்த நாய்க்குட்டி உன்னைப் பின் தொடர்ந்ததா எனக் கவலைப்படுகிறாய்

அதன்

அகன்ற விழிகளில் பிரிவின் ஈரக்கசிவைக் காண விழைகிறாய்

உன்

நெஞ்சக் கூடகன்ற கருநீலப் பறவை கேவுமா கரையுமா எனத் தவிக்கிறாய்

ஏதோ 

மூன்று வார்த்தைகளுக்குள் உன் வாழ்க்கையை அடக்க யத்தனிக்கிறாய்

மெதுவாகவே

உணவு, உதை, ஊழ்வினை என முணுமுணுக்கிறாய்

மாயா

உன்னிடமின்றி யாரிடம் உன் துர்க்கனவுகளுக்கு பொதுமன்னிப்பு கோருவது என வியக்கிறாய்

உன்

பார்வைக்கப்பால் அதோ அந்த தரிசனக் காட்சி வியாபகம் பெறுகிறது


2

உன் துயர நினைவுகளூடே சோதரா

மஞ்சள் அரைநிலவின் கண்ணீருடனே 

பரிகசிக்கும்  தொண்டையிலிருந்து வெளியேறும் 

நாரசம் என 

ஆடும் தொட்டிலிலிருந்து 

ஒன்பதாம் மாத நள்ளிரவில்

 வெளியேறி

(புத்தனான சித்தார்த்தனைப் போல எனவும் சொல்லலாம்)

மலட்டு மணல் மேடுகளின் மேல் பறந்து

தனியே திரிந்து

அனுபவம் சேர்த்து

வெற்றுக்கால்களுடன்

வெற்றுத் தலையுடன் 

உணவு, உறையுள், ஊழ்வினை 

என்று மட்டுமே கூவும்

உன் நெஞ்சக்கூடகன்ற கரு நீலப் பறவை

சொல்லும் ஆப்த வாக்கியம்தான் என்ன?

யாருக்கும் யாருமில்லை


3  

யாருக்கும் பலனற்று

சிதைவுற்ற அடுக்ககத்தின் இண்டு இடுக்கொன்றில் 

பரவசத்துடன் அடர்ந்திருக்கிறது மூலிகை

திருநீற்றுப்பச்சை

அதன் 

சின்னஞ்சிறிய விரிந்த பூவிதழ்களுக்கு வானமும்

கீழே விழும் விதைகளுக்கு பூமியும்

சாத்தியங்களின் எல்லையின்மையை காட்டிக்கொண்டே இருக்கின்றன


-

4

கட்புலனில் இணைசாலைகளும் ஏதோ ஒரு

மாயப்புள்ளியில் 

தூரத்தில் இணையத்தானே செய்கின்றன என அவள்

உன்னிடத்தில் சொன்ன நாளில் 

நீ அவளை

நிரந்தரமாய் பிரிந்தாய்


-

காற்றோ கனத்திருக்கிறது, இரவோ சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது

பௌர்ணமி நிலவு ஒளிரும் நள்ளிரவில்

பிச்சிப்பூ ஒன்று மொக்கவிழும் சிற்றோசையில்

ஓராயிரம் கோடி இடி முழக்கங்கள் 

சங்கமிக்கின்றன 

நம் செவிப்புலன்கள் தாண்டி. 


5 

நீங்களும் நானும் அந்த நதியைப் பார்த்திருக்கிறோம்

அதில் இரண்டு முறை இறங்க முடியாது என 

ஹெராக்லிட்டஸ் சொல்லாமலேயே நமக்குத் தெரியும்

ஆடிப் பெருக்குக்கு 

முளைப்பாரியையையும் தொன்னைதீபங்களையும் 

நதியலைகளில் மிதக்க விட்டோம்

கம்பங் கூழ், காரக்குழம்பு, முருங்கைக்கீரை வதக்கல்,

கொழுக்கட்டை, பொரி, சர்க்கரை, மாவிளக்கு மாவு 

என படையலிட்டோம்

தீபங்கள் நீரில் அசைந்தாடிச் செல்வதைப் பார்த்து நின்றோம்

வீடு திரும்பினோம்

இவ்வுலகு மட்டுமே நாம் அறிவோம்

தீபங்களுக்கும் இல்லை மறு கரை

என்றவாறே


6

நாற்புறமும் இறுக்கி மூடப்பட்ட 

கண்ணாடிப் பேழைக்குள்ளிருந்து 

உலகை சாட்சி பூதமாய் பார்க்கும் 

உனக்கு கனவொன்று வந்தது

அதில் நீ

வைகாசி மாத மாம்பூக்களை நுகர்ந்தவாறே

இளம் மாவிலைகளினூடே களித்தவாறே

மாம்பழம் ஒன்றை சாறு வழிய வழிய

கடித்து நக்கி உறிஞ்சி சாப்பிடுகிறாய்

அப்போதிருந்து நீ

நனவிலும் கூட 

இந்தப் பிரபஞ்சமே 

ஒரு மாமரம் என்ற 

ஓர்மையை அடைந்தாய்-

7

தூரத்தில் கடலில் 

குழந்தைகளின் குதூகலத்துடன்

கோலாகலமாக துள்ளி விளையாடுகின்றன

டால்ஃபின்கள்

காவிய ஆரவாரத்துடன்

மீன் பிடி பாதாள கரண்டிகளோடு விரைகிறது கப்பல்

நீ

குளியலறை புணர்ச்சிக்குப் பின்

சிகரெட் தரும் ஆழ்ந்த ஆசுவாசத்துடன்

அந்தக் கடல் காட்சியை

உன் பால்கனியிலிருந்து பார்த்து நிற்கிறாய்


8

மலைப்பாம்பின் தழுவல்

மெல்ல மெல்ல இறுகுவது போல

வயது 

உன் உயிர்ச் சரட்டை முறுக்கும்போது

அந்தத் திரி முனையில் ஒரு 

சுடரைக் காண விழைகிறாய்

அச்சுடர் மற்றொரு திரியில் பற்ற

அது வேறொன்றில் தொற்ற

அனந்த கோடி தீபங்கள் ஒற்றைச் சுடராய்

தரிசனமாகிறது

இருளின் கர்ப்பத்திலிருந்து

ஜனிக்கவிருக்கும் முதல் தீப்பொறிக்காய்

உன் உயிர்ச் சரட்டை திரித்தபடியே இப்போது

காத்திருக்கிறாய்