Sunday, September 18, 2022

கவிதையிலிருந்து நாடகத்திற்கு

 வாஸ்லி காண்டின்ஸ்கி ஓவியத்தின் அரூபத்தை இசைக்கு ஒப்பிடுவார். ஒரு சித்திரத்தில் கோடும் நிறமும் செல்லும் பாதையை இசையோடு இணைத்து கவிதை வரிகளை நாடக நடிப்போடு சேர்த்தால் என்ன மாதிரியான visual composition உருவாகும் என்று நேற்று செய்து பார்த்துக்கொண்டிருந்தேன். என் பையன்கள் எனக்கு chrome music lab அறிமுகப்படுத்தினார்கள். நான்இருந்தும், இல்லாது போதல்தொடர் கவிதைகளில் ஒன்றானவாசற்படி பாடலுக்குஎன் பையன்கள் உதவியோடு சிறிய டிஜிட்டல் பரிசோதனை ஒன்றை செய்து பார்த்தேன். அதன்பிறகு நேற்றிரவு சுத்தமாக தூக்கமே வரவில்லை. விதவிதமான கவிதை வரிகளாலும்  சித்திரங்களாலும் ஆன காட்சிகள் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தன. எலுமிச்சை சாறோடு சந்தனக்கட்டையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவுறும் என்றொரு வரி சிந்தனையில் தோன்றி மறைந்தது; அப்படிப்பட்ட பொலிவான காட்சி எப்படிப்பட்டதாய் இருக்கும்?

—-

நாடகத்தில் சிறு சிறு பொருட்களைப் பயன்படுத்துவது எனக்கு மிகவும் பிடிக்கும். கூத்துப்பட்டறை நடிகர்கள் என் கவிதா நாடகங்களை நிகழ்த்தியபோது என் ஆலோசனைப்படி பல சிறு பொருட்களை பயன்படுத்தினர்: கைமுகக் கண்ணாடிகள் ( நான் இப்போது கைவிட்டுவிட்டஅழாதே மச்சக்கன்னிநாவலில் கைமுகக்கண்ணாடி கதை சொல்லும் குரல்களில் ஒன்று), ஆதிவாசி ஆப்பிரிக்க பொம்மைகள், தொட்டால் பௌர்ணமியின் நிலவு போல ஒளிரும் உருண்டை விளக்குகள், திருஷ்டி பூசணிக்காய்கள்,  கண்ணைப் பார் சிரி திருஷ்டி தாள் முகமூடிகள் என அவர்கள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திய பல பொருட்கள் எவ்வளவு அழகு சேர்த்தன என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது.  கிழித்துப் போடப்பட்ட கசங்கிய தாள்கள், தாம்புக் கயிறு, முறுக்கிய துணிகள் என  எத்தனையோ பொருட்களை இன்னும் சேர்த்திருக்கலாம்.  நான் பலப்பல வருடங்களுக்கு முன் இயக்கிய நாடகங்களில் பல பொருட்களை மேடையில் உடைத்துக்கொட்டுபவனாக இருந்தேன். சுத்தியலால் டெலிவிஷன் பெட்டிகளை சுக்கு நூறாக உடைப்பது, பழ மூட்டைகளை -குறிப்பாக, தக்காளி, ஆப்பிள், மாதுளை போன்ற சிவப்பு நிற பழங்கள்- அவிழ்த்து மேடையில் கொட்டுவது, பஞ்சுப்பொதிகளைக் கொட்டி மேடையில் பஞ்சுகளை பறக்கவிடுவது, பழைய லாரி டயர்களை உருட்டிவிட்டு அது வரையிலான மேடை அமைப்பை சிதைத்து சின்னாபின்னமாக்குவது என பல demolition art projects களை மேடையில் நடத்திப்பார்த்திருக்கிறேன். இந்த மாதிரியான ஆலோசனைகளை இதுவரை கூத்துப்பட்டறை நடிகர்களுக்கு சொல்லவில்லை.

கூத்துப்பட்டறையில் நடிப்புப்பயிற்சி பெறுகின்ற மாலை நேர வகுப்பு மாணவர்கள் மீண்டுமொருமுறை என்னுடைய எட்டு கவிதா நாடகங்களை செப்டம்பர் 5, 6 தேதிகளில் நிகழ்த்த இருக்கிறார்கள். இதற்காக முந்தா நாளும் நேற்றும் அவர்களிடையே உரைகளாற்றினேன். இந்த மாணவர்கள் ஏற்கனவே என் கவிதைகளை எந்தவித காட்சி அமைப்பும் இல்லாமல் வெறும் கவிச்சொல்லும் உடல்மொழியும் கொண்டு நிகழ்த்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு கூத்துப்பட்டறையின் முழு நேர நடிகர்களுக்கு நான் பயிற்றுவித்த காட்சி அரங்க அமைப்பினை (mise en scéne) கவிதை வழி அணுகுவதற்கும் செயல்படுத்துவதற்குமான  உத்திகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். நேற்று அவர்களுடைய உடல் மொழியை -யதார்த்த வகை நடிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டு- புத்தம்புதியதாய் மாற்றுவதற்கான உத்திகளைச் சொல்லிக்கொடுத்தேன். இந்தப் புதிய உடல்மொழி உருவாக்கத்தின்படி 

வீடொன்று தூரத்தில் தெரிந்து

மீண்டும் தூசுப் படலத்தில் மறைகிறது

அதனருகே மேப்பிள் மரம்

தன் ஐந்து கூர்முனை கொண்ட

இலையொன்றை 

உதிர்க்கிறதுஎன்ற வரிகளைக்கூட ஒரு நிமிடத்திலும் நிகழ்த்தலாம் ஒரு மணி நேரத்திற்கும் நிகழ்த்தலாம் ஏன் ஓரிரவு முழுக்கக்கூட விரித்து நிகழ்த்தலாம். 

கூத்துப்பட்டறையின் முழு நேர நடிகர்களில் ஒருவரான பிரேம்குமார் இயக்குகிறார். திங்கட்கிழமையிலிருந்து ஒத்திகைகள் தொடங்குகின்றன.


 

அதாவது

——

நேற்று மதியம் பருவ மழை கொட்டித்தீர்த்தபின் மாலை ஆறாவது நாளாக நடைபெற்ற எனது நாடகங்களின் விழா கூத்துப்பட்டறையில் நிறைவு பெற்றது. இறுதி நாளுக்கு சி.மோகன், நித்தியானந்தன், முருகபூபதி ஆகியோர் வருவதாக இருந்தது. மோகன் உடல் நலக்குறைவினால் வர இயலவில்லை என அறிந்து வருந்தினேன்; அவரோடுதான் நித்தியானந்தனும் வருவதாக இருந்ததால் அவரும் வரவில்லை. நான் மழைக்குப் பிந்தைய மாலை இது வளைந்து நிமிரும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டிருந்தபோது முருகபூபதி வந்தார்; அவர் சதுரக்கண்ணாடி அணிந்து வெள்ளைத்தாடியும் கறுப்புத்தலைமுடியும் தீர்க்கமான கண்களுமாய் இருந்ததால் எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. அவர் உருவம் வெள்ளந்தியான புன்னகையை தர்மசங்கடமாக உதிர்க்கும் இளைஞனாக என் மனதில் தங்கியிருந்தது. அவ்ர் கூடவே கோணங்கியும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் மகேந்திரனும் வந்திருந்தார்கள். கோணங்கியைப் பார்த்தவுடன் மனம் பூரித்துவிட்டது. “உன் கூட சண்டை ஆனாலும் உன்னைப் பார்த்தது சந்தோஷமாக இருக்கிறதுஎன்று கோணங்கியிடம் சொல்லிவைத்தேன்.  கோணங்கி என்னுடைய பழைய தொகுதிநீர் அளைதல்” -ஐக் கையோடு கொண்டு வந்திருந்தார்; அதில் நிறைய குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். நான் பரிசல் செந்தில்நாதனிடம் போய்ஒரு படிமம் வெல்லும், ஒரு படிமம் கொல்லும்பிரதியை வாங்கி கோணங்கிக்குப் பரிசளித்தேன். அவர் ஒரே ஒரு பிரதிதான் விற்பனைக்குக்கொண்டு வந்திருந்தார். நிகழ்த்தப்படும் எட்டு நாடகங்கள் புதிய தொகுதியிலும் இல்லாதது என்பதையும் கோணங்கிக்குச் சொன்னேன்.  சுரேஷ் சுகோ,  சுகந்தன், குங்குமராஜ், அஜித்குமார், அஜய் அரவிந்த் ஆகியோரின் நிகழ்த்துதல்கள் சரளமாகிவிட்டதை கவனித்தேன். தோழர் மகேந்திரன்ஊஞ்சல் மண்டபம்கவிதையில் வரும் சமநிலை எங்கேயிருக்கிறது என்ற கேள்வி, ‘அரவான்நாடகத்தில் வரும் போர் எதிர்ப்பு ஆகியனவற்றின் அரசியல் பார்வையைச் சுட்டிக்காட்டியது கூர்மையான அவதானமாக இருந்தது. கோணங்கி எங்கள் இருவரிடையான உரையாடல் வழி வெளிவந்த கல்குதிரை நகுலன் சிறப்பிதழையும், நான் சிறுகதை, கவிதை வழி நாடகத்திற்குள் வடிவமாயங்கள் செய்கையில் நகுலன் .முத்துசாமி இணையும் வண்டிச்சோடை ஒன்றை நிர்மாணிப்பதையும் அது எங்கள் இருவருக்கும் பொதுவான பாதை என்று அவருக்கே உரித்தான கவித்துவ மொழியில் சொன்னார். கம்பனும் ஆண்டாளும் என் கவிதைகளுக்கு பாரம்பரியம் சேர்ப்பதையும் குறிப்பிட்டார். நான் வளைந்து நெளிந்திருந்த சாயுங்காலம் நேராகி ஒரு அழகிய இரவு வெளியே தொடங்கியிருக்குமென நினைத்தேன். முருகபூபதி தான் கண்ட சடங்கொன்றை விவரித்து யதார்த்தத்தின் தளைகளை சடங்குகள் உடல்மொழியால் மீறுவது போல என் கவிதா நாடகங்களில் நடிக்கும் நடிகனும் தன் உடல் மொழியால் மீற வேண்டும் என்று சொன்னார்; சினிமாவின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடவேண்டும் என்றும் சொன்னார். நான் மழையைப் பற்றி சிறிது பேசினேன் மழையும் என்னோடு தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறதல்லவா?  கோணங்கி நினைவூட்டியதில், முருகபூபதி பாண்டிச்சேரி பல்கலையில் நாடகவியல் மாணவராக இருந்தபோது அவருடைய மேற்படிப்பு நாடகத்திற்கு இந்திராபார்த்தசாரதி அழைப்பின் பேரில் நான் எக்சாமினராகச் சென்றிருந்ததும் அதில் ஒரு காட்சியும் துள்ளி எழுந்து நினைவுக்கு வந்தது. ரமேஷ் பிரேதன் தாஸ்தோவ்ஸ்கியின் Notes from the underground நாடகப்பிரதியாக்கியிருந்தார். முருகபூபதி இயக்கியிருந்தார். அதில் சிறைக்காவலதிகாரி பலூன்களை முலைகளாக வைத்து வலம் வரும் கைதியின் பலூனை பிடுங்கி கையால் உடைக்கும் காட்சி எனக்கு முப்பத்தி சொச்சம் வருடங்களுக்குப் பின்  நினைவுக்கு வந்தது. என்ன மாதிரியான வன்முறைக்காட்சி அது! தமிழ் நாடகங்களின் வரலாற்றில் அது ஒரு முக்கியமான நாடகம் என்பது என் எண்ணம். அடுத்து உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல வருடங்களுக்கு முன் முருகபூபதி நிகழ்த்திய நாடகமொன்றில் சுரைக்குடுக்கைகளை வைத்து பின்னணி இசைஅமைத்திருந்ததைக் குறிப்பிட்டு முருகபூபதி நாடக இசை பற்றி கூத்துப்பட்டறை நடிகர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டுமென்று சொன்னேன். முருகபூபதியின் நூல்சின்னமானூர் சர்க்கஸ்காரிமுன்னுரையில் .முத்துசாமி கோணங்கி குறிப்பிட்ட எங்களுக்கான நமக்கான தமிழ் நாடக அரங்கிற்கான வண்டிச்சோடையின் வரைபடம் இருப்பதை அடையாளம் காட்டினேன். தினசரி கர்மசிரத்தையாய் வந்திருந்து நாடகங்களை முழுமையாகப் பார்த்து விருந்தினர் அனைவரையும் கூத்துப்பட்டறை அறங்காவலர்கள் சார்பில் கௌரவித்த கருணா பிரசாத்துக்கு நன்றி சொன்னேன். என் சார்பிலும்  நடேஷின் சார்பிலும்  நாடகங்களை நேரலையில் ஒளிபரப்பிய இன்மதி இணைய இதழின் கல்யாண், வினோத், நிக்சிட், அபூர்வின் ஆகியோருக்கும் நன்றி சொன்னேன். தோழர் மகேந்திரன் அவர் மகன் புகழை அறிமுகப்படுத்திவைத்தார். நண்பர் கௌதம் இன்றும் வந்திருந்தார் இன்றும் அவரோடு ஹலோ மட்டுமே சொல்ல முடிந்தது

அதாவது நேற்று ஒரு இனிய மாலை. 

இரவு படுக்கையில் படுத்து என் உள்ளங்கையைப் பார்த்துக்கொண்டிருந்தேன்; அதில் ஓடும் கவி ரேகையை இந்த விழா ஆரம்பிக்கையில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தன் உரையால் என் கண் கொண்டு காணச் செய்தாரல்லவா, அந்தக் கை ரேகை இன்னும் ஆழமாகியிருப்பதாகத் தோன்றியது. நன்றாக உறங்கினேன்

—-

நேற்று கூத்துப்பட்டறையில் நாடகங்கள் சுமுகமாக நடைபெற்றன. ஐந்து நாடகங்களை நிகழ்த்திய நடிகர்கள் சுரேஷ் சுகோ, கார்த்தி, ஶ்ரீதேவி, ராமர், பிரேம்குமார் அனைவரும் லாவகமாக தங்கள் நாடகங்களை நிகழ்த்திக்காட்ட பழகிவிட்டார்கள். இன்னும் தங்கத்தைப் புடம் போடுவது போல மேலும் மேலும் மெருகேற்றுவதுதான் அவர்கள் செய்யக்கூடியது. நேற்று நாடகங்களின் இயக்குனர் கலைச்சோழனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் அவர் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது எனக்கு மிகவும் வருத்தமளித்தது. கலைச்சோழன் நல்ல திறமையான நாடக இயக்குனர். கூத்துப்பட்டறையினுள்ளாகவே நல்ல நாடக இயக்குனர்களும் உருவாகி வளர்வது கூத்துப்பட்டறையை மேலும் வலுப்படுத்தும் என்பது என் அபிப்பிராயம்.  நேற்று பிரவீன், பிரீத்தி ஆத்ரேயா, .ஆர்.கோபாலகிருஷ்ணன், பிரளயன், கருணா பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். நண்பர்கள் சுகன் கலாபன், கௌதம் ஆகியோரும் வந்திருந்தனர். பிரவீனை பல வருடங்களுக்குப் பின் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். எங்கள் லயோலா கல்லூரி நாட்களில்  நான் வோலே சோயிங்காவின் ‘Lion and the Jewel’ நாடகத்தை இயக்கியபோது பிரவீன் கலந்துகொண்டதை நான் சொன்னபோது எங்கள் இருவருக்கும் நண்பரான, மறைந்த அலெக்சை நாங்கள் இருவரும் நினைவுகூர்ந்தோம். மின்னல் கீற்று போல ஒரு நினைவலை அலெக்சைப்பற்றி எழுந்து அடங்கியது. பிரளயன், ஈஆர்ஜி ஆகியோர் பேசியதிலிருந்து தனி நபர் நாடகம், கவிதை ஆகியவற்றைப் பற்றி நானும் பேச ஒரு கலந்துரையாடல் உருவாகியது. அலெக்சின் நினைவு மனதிலாட, நான் கூத்துப்பட்டறைக்கு கவிதைகளை சுமந்து செல்பவனாக இருபத்திச்சொச்சம் புதிய நண்பர்களை ஈட்டியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்; என் கவிச்சொற்களைத் தங்கள் நினைவு சாகரத்தில் தேக்கிவைத்திருக்கும் நண்பர்கள்; அவர்களுக்கு நான் நலமும் செல்வமும் புகழும் விழைகிறேன் என்பது எனக்கு மங்கலங்களை அள்ளித் தருகிறது.

கூத்துப்பட்டறைக்காக மேலும் 11 தனி நபர்  கவிதா நாடகங்களை இரண்டு மாதங்களுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறேன். அவை இப்போதைய எட்டு நாடகங்களிலிருந்து வேறுபட்டவை. இந்த எட்டு நாடகங்களை கூத்துப்பட்டறை நடிகர்கள் நிகழ்த்தி என் கவிதைகளை அவர்கள் தங்களுடையவையாக சுவீகரித்துக்கொண்டபோது எனக்கு எம்.டி.முத்துக்குமாரசாமி என்பவர் வேறு யாரோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே எண்ணத்திலேயே இந்த பதினோரு நாடகங்களுக்கான முன்னுரையை வேறு யாருடைய நாடகங்களுக்கோ எழுதுவது போல எழுதி நடேஷுக்குக் கொடுத்தேன். கொடுத்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது. 

———————————————

இருந்தும், இல்லாமல் போவது

—————————-

இருந்தும், இல்லாமல் போவது”, எம்.டி.முத்துக்குமாரசாமியின் பதினோரு ஒன்றோடு ஒன்று தொடர்புடைய தனி நபர் கவிதா நாடகங்களாகும். இந்தப் பதினோரு கவிதா நாடகங்களைத் தனித்தனி நாடகங்களாகவும் நிகழ்த்தலாம்; பதினோரு பகுதிகள் கொண்ட ஒரே நாடகமாகவும் நிகழ்த்தலாம். இந்தப் பதினோரு நாடகங்களின் வரிசையை விதவிதமாகக் கலைத்து அடுக்குவதன் மூலம் படைப்பூக்கம் மிக்க இயக்குனர் ஒருவர் பார்வையாளர்களுக்கு விதவிதமான மாறுபட்ட பார்வைகளை உருவாக்க இயலும்.  இருந்தும், இல்லாமல் போவதுஎன்ற நாடகப் பிரதி இவ்வாறாக தனித்துவம் மிக்கதும் கலைச்செறிவும் நுட்பமும் கொண்ட வடிவத்தைக் கொண்டதாகவும் திகழ்கிறது.  இந்த நாடகத்தின் தனி நபர் கவிதா நாடகங்கள் பின்வரும் தலைப்புகளைக் கொண்டிருக்கின்றன:

மலையுச்சி 

ஆனித் தேர் 

குரு பௌர்ணமி 

சொல்லீடு 

அம்மாவும் பிள்ளையும் 

இன்று தூக்கம் வரவில்லை

சச்சிதானந்த நிமிடங்கள்

வாசற்படி பாடல்

பேச்சு, பேச்சு, ஓயாத பேச்சு

மழை நாட்கள்

தளர்தல் 

இருந்தும், இல்லாமல் போவதுநாடகத்தில் கதை என்பது பதினோரு கோவைகளின் வழியாக மெல்லிய நூலால் கட்டப்பட்ட இழையாக இருக்கிறது. பதினோரு தனி நபர் கவிதா நாடகங்களிலும் வெவ்வேறு ஆண் அல்லது பெண் குரல்கள் கதாபாத்திரங்களாகப் பேசுகின்றன; அந்தக் கதாபாத்திரங்களுக்குள் பல்வேறு உறவுகளும் நாடகீய தருணங்களும் இருக்கின்றன. தனித்தனி கதாபாத்திரங்களின் பார்வை வழி பதினோரு கவிதைகளும் சொல்லப்படுவதால அகிரோ குரோசாவின் புகழ்பெற்றரோஷோமான்திரைப்படத்தைபோல யார் சொல்வது உண்மை யார் சொல்வது பொய் என்ற குழப்பமும் அதே சமயம் உண்மை பொய் என்பவற்றை அவரவர் பார்வையில் புரிந்துகொள்வதன் மாயமும் நாடகங்களாகின்றன. பதினோரு கதாபாத்திரங்களில் சில இப்போது இங்கே நிகழ்பவற்றைப் பேசுகின்றன வேறு சிலவோ வயதான காலத்தில் தங்கள் இறந்த கால நிகழ்வுகளைப் பற்றி யோசிப்பவையாக இருக்கின்றன. பண்பாட்டு ஒவ்வாமை, விளிம்பு நிலை, மொழியின் சிதைவாக்கம், பிரம்மை, கனவு, அதீத புனைவு, அந்நிய நிலப்பகுதிகள், தொடற்சியற்ற கதை சொல்லல், சித்தப் பிரமை ஆகியவை கலந்த மாற்று அழகியலின் கூறுகளை பரிசீலித்துப் பார்ப்பதற்கான சந்தர்ப்பங்களை இந்த தனி நபர் நாடகங்களின் கோவை  வழங்குகிறது. பதினோரு உள் கவிதா நாடகங்களில் வரும் கதாபாத்திரங்களும் மிகவும் அந்நியமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் இருந்தும் இல்லாமால் போவதாய் கற்பனை செய்துகொண்டே இருக்கிறார்கள்; இப்படியாக அவர்கள் கற்பனை செய்வதை இவற்றினூடே ஊடுபாவாய் செல்லக்கூடிய புனைவின் இழை எனச் சொல்லலாம். 

இருந்தும், இல்லாமல் போவதுநாடகத்தின் உணர்ச்சிகள் மரபான நவரசங்களில் இருந்து வேறுபட்ட நவீன, சமகால உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவை. அவற்றை சலிப்பு (boredom), பதற்றம்( angst), இயற்கை, கடவுள், சக மனிதன், தன்னுடைய சுயம் ஆகியவற்றிலிருந்து அந்நியமாகி இருத்தல் (alienation) அவநம்பிக்கை, உள்ளுக்குள்ளாக உடைந்து சிதறி இருத்தல் (fragmentation) மன முறிவு (despair) மெலிதான மனப்பிறழ்வு - என தோராயமாக வகைப்படுத்தலாம். இந்த சமகால உணர்ச்சிகளை அவற்றின் சிக்கலான வடிவங்களில் நடித்துக்காட்டுவதே இருந்தும், இல்லாமல் போவதுநாடகத்தை நிகழ்த்துவதிலுள்ள சவால்களாகும்.

யதேச்சதிகாரத்தை நோக்கி நகரும் சமூகம் ஒற்றை அர்த்த ஒழுங்கமைப்பினை தன் சமூக ஒப்பந்தமாக்க முயற்சிக்கிறது.  இருந்தும், இல்லாமல் போவதுநாடகத்தில் வரும் மனித உறவுகள் அருவமானவை; அந்த அருவங்கள் புற யதார்த்தம் வழி கட்டமைக்கப்படுகின்ற தன்னிலைகளை கேள்விக்குள்ளாக்குகின்றன. அதன் வழி ஒற்றை அர்த்த ஒழுங்கமைப்புகளே கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. “இருந்தும், இல்லாமல் போவதுநாடகம் ஒற்றை அர்த்த ஒழுங்கமைவுகளால் சிதைக்கப்பட்ட பிம்பக்கோர்வைகளை முன்வைக்கிறது. இம்மாதிரியான அதி நவீன நாடகத்தை, அதன் புத்தம் புதிய வடிவத்தில் நிகழ்த்துவதற்கு கூத்துப்பட்டறை மட்டுமே நாடகப்பயிற்சியும், தேர்ந்த நடிகர்களும், உள்க்கட்டமைப்பும் கொண்ட நாடக நிறுவனமாகும்.

 பத்மஶ்ரீ .முத்துசாமி அவர்களின்  கலைப்பார்வையின்வழியும் அவர் எழுதிய நாடகங்களின்வழியும் கூத்துப்பட்டறை நடிகனுக்கு என தனித்துவமான உடல் மொழியை உருவாக்கியிருக்கிறது. கூத்துப்பட்டறை உருவாக்கிய தனித்துவ உடல்மொழியே கூத்துப்பட்டறையின் முன்னாள் நடிகர்களுக்கும்  மாணவர்களுக்கும் பெரும் புகழை ஈட்டித் தந்திருக்கிறது. இப்போது நடேஷ் அவர்களின் ஓவியங்களும் கோட்டுச்சித்திரங்களும் அரங்கக் காட்சி அமைப்பின் பகுதிகளாய் மாறிவிட, கூத்துப்பட்டறை புத்தம்புதிய, தனித்துவமான காட்சிமொழியை தமிழ் அரங்கிற்கு கொண்டுவருகிறது.   புதிய அரங்கக்காட்சி அமைப்பும் அதன் மொழியும் ஒரு நடிகன் எப்படி கவிச்சொல், காட்சிப்படிமம், ஒளி, இசை, மௌனம், வெளி ஆகியவற்றுக்கு எதிர்வினை புரியும் கலைநுட்பம் தேர்ந்த உடல் மொழியை உருவாக்க உதவுகிறது. இவை அனைத்திற்கும் எதிர்வினை புரியும் நடிகன் முழுமையான அரங்கின் -Total theatre- முழுமையான நடிகன் -Total actor ஆகிறான். அந்த முழுமையான நடிகன் நம் சமகால வாழ்வின் சித்திரத்தை நமக்கு அளிக்க வல்லவர். கூத்துப்பட்டறை இப்படிப்பட்ட திறமை வாய்ந்த நடிகர்களின் தனித்துவ உடல் மொழியாலும், விசேஷமான காட்சி மொழியாலும் உருவாக்கப்பட்ட நாடகமாக எம்.டி.முத்துக்குமாரசாமியின்இருந்தும், இல்லாமல் போவதுநாடகத்தை நிகழ்த்த விழைகிறது. எம்.டி.முத்துக்குமாரசாமியின் வேறு எட்டு தனி நபர் கவிதா நாடகங்களை கூத்துப்பட்டறை ஏற்கனவே நடிப்புப்பயிற்சி மானவர்களையும் , முழு நேர நடிகர்களையும் வைத்து வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டி அனுபவசேகரம் பெற்றிருக்கிறது.

மேலும்இருந்தும், இல்லாமல் போவதுநாடகம் சமகாலத்திய தத்துவங்கள் பலவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் விவாதிக்கக்கூடியதாக இருப்பதால் இந்த நாடகத்தை நிகழ்த்துவது மூலம்  நாடகம் என்ற கலைவடிவம் சமகாலசிந்தனைக்கு வளம் சேர்ப்பது என்பதையும் கூத்துப்பட்டறை நிலைநிறுத்த விரும்புகிறது. 

இருந்தும், இல்லாமல் போவதுநாடகம் வாழ்க்கையில் திருப்தி என்றால் என்ன, காதல்,  மரணம், நட்பு, துரோகம் ஆகியவற்றுக்கான தருணங்களின் அர்த்தங்களை பார்வையாளர்களின் விசாரணைக்கு முன்வைக்கிறது.  அத்தனை நாடகங்களும் ஆனித்தேர் போன்ற தமிழ்ப்பண்பாட்டிலுள்ள திருவிழாக்களையும், தமிழ் நிலப்பகுதிக்கென்றே இருக்ககூடிய பறவைகளையும், மரங்களையும் பூக்களையும் குறியீட்டு அர்த்தங்கள் செறிவாகிய காட்சிப்படிமங்களாகவும் மாற்றுகின்றன. “வாசற்படி பாடலில்வருகிற கதாபாத்திரம் தன் சீரழிவுகளை மீறி வெற்றி பெற்றுமலையுச்சிகவிதையில் தன் சாதனைகளை வியந்து பார்க்கிறது. இப்படி சகட ஓட்டம் போல மேலும் கீழுமாய் செல்லும் வாழ்க்கைகளை சொல்வதன் மூலம் நாடகம் தன் வீரியத்தை அதிகமாக்கிக்கொள்கிறது.

கவிதையிலிருந்து நாடகத்திற்கு, நாடகத்திலிருந்து திரைப்படத்திற்கு

————

நேற்று கூத்துப்பட்டறையில் நடந்த என் கவிதாநாடகங்களைப் பார்க்க கவிஞர் தேவேந்திர பூபதி, திரைப்பட இயக்குனர்கள் ஜேடி- ஜெர்ரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர். நேற்றும் நாடகங்கள் சுமுகமாக அருமையான


 லயத்துடன் நடந்து முடிந்தன. சுரேஷ் சுகோ, சுகந்தன் செல்வராஜ், குங்குமராஜ், அஜித்குமார், அஜய் அரவிந்த் ஆகியோர் தங்கள் உடல்மொழியை மேலும் நுட்பப்படுத்தியிருந்தனர். பின்னணி இசை நாடக நடிப்போடு நேற்று வெகு அழகாக இதுவரைக்கும் இல்லாத அளவு லயம் சேர்ந்திருந்தது. நாடகங்களைப் பலமுறை நிகழ்த்தவேண்டும், பலமுறை பார்க்கவேண்டும் சினிமா போல அது உறைந்த வடிவமல்ல நாடகம் நிகழும் கணம் தோறும் நம் உணர் கொம்புகளை அது மேலும் மேலும் தீட்டி தீட்சண்யப்படுத்துகிறது. தேவேந்திர பூபதி ஊஞ்சல் மாண்டபத்தில் வருவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் மண்டபம் என்று உடனடியாக அடையாளம் கண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவர் திருநெல்வேலியில் ஐந்து வருடங்கள் இருந்திருக்கிறாராம். நண்பர்கள் ஜேடியும் ஜெர்ரியும் நாங்கள் மூவரும் கல்லூரித்தோழர்கள் 35 வருட கால நண்பர்கள் என்பதைக் குறிப்பிட்டுப் பேசியது ம்ன நிறைவாகவும் நெகிழ்வாகவும் இருந்தது. இப்படிப் பேசுகின்ற பொது நிகழ்ச்சிகள் எங்களுக்கு வாய்த்ததில்லை. ஜேடிக்கும் ஜெர்ரிக்கும் நாடகங்களின் கலைத்தன்மை, நடிகர்களின் உடல் மொழி, இயக்கம் ஆகியன இணைந்து உண்டாக்கிய மாயாஜாலம் பிடித்திருந்ததாகச் சொன்னார்கள். ஜெர்ரி பேசும்போது முத்துவிடம் நாங்கள் இயக்கும் சினிமாவுக்கு எழுது என்று இருபது வருடங்களாகக் கேட்டு வருகிறோம் அவர் எழுதுவதில்லை எனக் குறைப்பட்டுக்கொண்டார். உண்மைதான் என்னால் வணிகத்திரைப்படங்களின் சட்டகத்திற்கு ஏற்ப கதை, திரைக்கதை எழுத முடிந்ததில்லை. அவ்வகை முயற்சிகள் தோல்வியில் முடிய நான் அவற்றை பாதியில் கைவிடுபவனாக இருந்தேன். இப்போது ஜேடிக்கும் ஜெர்ரிக்குமாக முழுக்க முழுக்க கவிதைகளாலான முழு நீளத் திரைப்படமொன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘மாதுளைஎனப் பெயரிட்டிருக்கும் திரைப்படத்தின் முதல் வரைவை எழுதி இப்போது இரண்டாம் வரைவை இறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறேன். முழுமையாக வணிகசினிமாவின் சட்டகத்தைத் தவிர்த்திருக்கிறேன். கவிதையை நாடகத்திற்கு வெற்றிகரமாக எடுத்துச் செல்லலாமென்றால் கவிதையை திரைப்படத்திற்கும் வெற்றிகரமாக எடுத்துச் செல்லலாம்தானே? இன்னும் கொஞ்சம் காலம்தான், இன்னும் சற்றே தூரம்தான்.

மெருகேறிய ஒளிர்வு

நேற்று கூத்துப்பட்டறையில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் என் நாடகங்கள் அரங்கேறின. ஒன்றுமே நடக்கவில்லை என்று நினைக்கும் ஒத்திகை நாட்களில் கூட கூத்துப்பட்டறையின் அரங்கக்கூரையில் தேங்காய் விழும்; அணில்கள் ஓடும்; பக்கத்து அடுக்ககத்தில் அரசியல் கூட்டம் நடைபெறுவதன் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். நேற்று அமைதியாக, சுமுகமாக, மெருகேறிய ஒளிர்வுடன் ஐந்து நாடகங்களும் நடந்து முடிந்தன. என் மனைவியும் நாடகங்கள் பார்க்க வந்திருந்தார்.  டாக்டர் ஞானராஜசேகர் அவர்கள் நவீன நாடகத்தின் சமகால இயல்புகளைச் சுட்டிக்காட்டி சினிமா தவறவிட்ட பாதையை இந்த நாடகங்களின் வழி புதுப்பிப்பதாக குறிப்பிட்டது நல்ல அவதானம். அழகியசிங்கர், ஆகாசமூர்த்தி, ராஜா, சத்தியேந்திரா, செ.ரவீந்திரன், சந்திரா, கருணா பிரசாத் எனப் பலரும் நாடகங்கள் பார்க்க வந்திருந்தனர். என் மனைவி ஆங்கியோ வீடு திரும்பியபின் நாடகங்களில் தனக்குப் பிடித்த மூன்று தருணங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். ‘ஈரப்பதம்நாடகத்தில் சுரேஷ் சுகோஎன் புன்னகையின் கோடு முடியும் புள்ளியை நீங்கள் கணித்துவிடுகிறீர்கள்என்பதை சிறு குழந்தையின் கண்ணீருடன் சொன்னது, ராமர்,   தருணம்நாடகத்தில் 

கோடானுகோடி மூலகத் துணுக்குகளால்

ஆனது ஒரு தருணம்

கூடியபின் கலைந்தால் மீண்டும்

அதே போலக் கூடுவது துர்லபம், அபூர்வம்

இல்லை நடக்கவே நடக்காதது

இந்த இரண்டாவது வைகாசி முழு மதியில்

விசாக நட்சத்திரம் கூடவில்லை

இம்மி பிசகாத மறு தருணம்

மீண்டும் வாய்ப்பதில்லைஎன்ற வரிகளை thunderbolt delivery ஆக பேசியது, கார்த்திசாகசப்பிழைநாடகத்தில் பேசியகல்லறைகளின் மேற்கூரைகளில் தேங்கிய மழைநீர் அலையடிக்கிறது தானும் ஒரு கடல் என்ற நினைப்பில்வரி என ஆங்கியோ சுட்டிக்காட்டிய நிகழ்த்துதல் தருணங்கள் உண்மையில் பிரமாதமானவைதான். நான் ஆங்கியோவை நாடகங்களின் இறுதியில் பேச அழைத்திருக்கவேண்டும்.  ஆங்கியோவினால் அதே வரிகளை அப்படியே மேற்கோள் காட்ட இயலவில்லை ஆனால் அந்த இடங்களை அடையாளம் காட்டமுடிந்தது.  'அரவான்', 'மாத்ரி 'ஆகிய நாடகங்களின் கதைப்பின்னணியை அவர் என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

இன்மதி இணைய பத்திரிக்கை inmathi.com இந்த நாடகங்களை தினசரி யூடூபில் live streaming செய்து வருகிறது. நேற்றைய நேரலை தரமாக இருந்தது. இன்னும் சில  சிறிய மேம்படுத்தல்கள் செய்தால் போதும். உலகெங்கிலும் கூத்துப்பட்டறையின் அரங்க நிகழ்வுகள் அப்படியே உங்கள் விரல் நுனிகளில்.

கூத்துப்பட்டறையில் என் நாடகங்களை நிகழ்த்தும் நடிகர்கள் அபாரமான ஆற்றலும் திறமையும் கொண்டவர்கள். சுரேஷ் சுகோ என்னுடைய கவிதை வரிகளை ஒவ்வொருமுறை ஒத்திகையின் போதும் வித விதமாக நடித்துக்காட்டுவார். மேடையில் நிகழும் சிறு தவறுகளையும் கூட தன்னுடைய நடிப்பின் பகுதியாக மாற்றிக்கொள்ளக்கூடியவர். ராமர் ஒரு கவிதை வரியின் அர்த்த சாயைகளை மீண்டும் மீண்டும் நடித்து அதை மேலும் மேலும் நுட்பபப்டுத்துபவர். இந்த இரண்டுவகை நடிப்பின் improvisational techniques ஐயும் கூத்துப்பட்டறையின் நிகழ்த்து மொழியின் (performance lanaguage) பின்னாலுள்ள உத்திகள் எனலாம். இதர நடிகர்கள் இந்த இரண்டு நிகழ்த்து மொழிகளையும் கலந்து தங்களுடைய தனித்துவத்தை சேர்க்கிறார்கள். அஜித்குமாரால் தன் நடிப்பிற்கேற்ற காட்சிப்பின்புலத்தை கற்பனை செய்து அதற்கேற்ற நகர்வுகளை வடிவமைக்க முடிகிறது. ஶ்ரீதேவியால் தன் நடிப்பில் ஒரு லயத்தை ஸ்தாபிக்க முடிகிறது. குங்குமராஜ் தன் கண்களிலும் முகபாவனைகளிலும் தன் நடிப்பை வெளிப்படுத்துவதில் சோபிதம் கொள்கிறார். சுகந்தனின் உணர்ச்சி வெளிப்பாடுகள் அபாரமானவை. பிரேம்குமார்  மேடையில் நிகழ்த்தும் swift movements  கண்களைக் கொள்ளைகொள்ளச் செய்பவை. அஜயின் ஆஜானுபாகு உடலில் ஓடும் அப்பாவித்தன்மையை அவரால் தன் நடிப்பிற்கு மூலதனமாக்க முடிகிறது.

—-

எட்டுத் திசையும் இடிய- மழை

எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!”

——

என் நாடகக் கவிதைகளில் மழை விதவிதமாய்ப் பெய்கிறது. குடை வேண்டுமா வேண்டாமா என்றவாறு மழை மெலிதாகத் தூறிக்கொண்டிருக்கும்போது கவிதையின் பேசு குரல்கள் முடிவெடுக்க முடியாமல் சஞ்சலமடைகின்றன. சொட்ட சொட்ட மழையில் நனையும்போது என் கவிதாபாத்திரங்களால் உறுதியான முடிவுகளை எடுக்க முடிகிறது. இன்னொரு கவிதையில் ஒரு கவிதாபாத்திரம்நான் உங்களை நோக்கிப் பேசவில்லை, ஆரம்பத்திலிருந்தே நான் உங்களை நோக்கிப் பேசவில்லை, எந்த இடம் மழையால் நனைக்கப்படுகிறதோ அந்த இடத்தை நோக்கிப் பேசிக்கொண்டிருக்கிறேன், உங்களுக்கென்றும் எனக்கென்றும் தனித்தனியாக மழை பெய்வதில்லைஎன்று பேசுகிறது. ‘இப்படி மழையைத் தொடர்ந்து கவிச்சொல்லால் அழைத்துக்கொண்டே இருக்காதே அது மேகங்களின் சுழுமுனைகளைத் திறந்து அன்பின் பெருவெடிப்பாய்க் கொட்டிவிடும்என்று முன்பொருமுறை என் நண்பரொருவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நேற்று கூத்துப்பட்டறையில் இரண்டாம் நாள் நாடக நிகழ்த்துதல்களின் போது மழை  அப்படியே கொட்டித் தீர்த்துவிட்டது. நாடகம் பார்க்க மிஷ்கின், டெபொரா தியாகராஜன், வெளி ரங்கராஜன் குமாரவேல், எஸ்.சண்முகம், ஷங்கரராமசுப்பிரமணியன், கீதா ஹட்சன், அனிதா பன்னீர்செல்வம், செ.ரவீந்திரன், கருணா பிரசாத், எனப் பலரும் வந்திருந்தார்கள். இரண்டாவது நாடகத்திலிருந்தே நாடகக்கொட்டகையின் கூரையின் மேல் விழும் மழைச்சத்தம் சொற்களின் இடத்தைப் பிடித்துக்கொண்டது. மழை எழுதும் இசைக்குறிப்புகளால் ஆன நாடகங்கள் என்பதாக அவை தொடர்ந்தன. நடிகர்கள் சுரேஷ், குங்குமராஜ், அஜித், சுகந்தன், அஜய் என அனைவரும் ஒரு கணம் கூட தொய்வுறாமல் நடித்தார்கள். பார்வையாளர்கள் சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  மழை புறத்தே பெய்கிறதா அகத்தே பெய்கிறதா என்ற சம்சயம் எனக்கு ஏற்பட்டது. நாடகங்கள் முடிந்து வீடு திரும்ப பலரும் சிரமப்பட்டிருப்பார்கள். சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் என்னையும் கூத்துப்பட்டறையையும் வாழ்த்த ஒரு நற்சொல் இருந்தது. மழை என்றுமே என்னைப் பொறுத்தவரை ஒரு அருள்க்கொடைதான்.

—-

முகூர்த்தங்களின் பொன் விகாசம்

—-

நான் எந்த முகூர்த்தத்தில் என்னுடைய கவிதா நாடகமானஅராவான் வெளி ரங்கராஜன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தேனோ அதிலிருந்து அந்த நாடகங்களும் அதன் கூடவே எழுதிய வேறு ஏழு நாடகங்களும் தொடர்ந்து மேடையேற்றம் கண்டுக்கொண்டிருக்கின்றன. உண்மையைச் சொல்லப்போனால் உடல் நலிவுற்றிருந்த நடேஷை தினசரி பார்க்கச் செல்வதற்கான வாய்ப்பாக, சாக்காகத்தான் நான் பிற ஏழு நாடகங்களையும் எழுதினேன் அவற்றை கூத்துப்பட்டறை நடிகர்களுக்கும் எடுத்துச் சென்றேன். சில நோக்கங்களின் முகூர்த்தங்கள் பொன் விகாசம் அடைகின்றன.

நினைவில் தங்கும் சொல்

—-

நேற்று கூத்துப்பட்டறையில் என் நாடகங்களின் நிகழ்த்துதல்களுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த கோபி அவர்கள் தன்னுடைய உரையில் .முத்துசாமியின் தொடர்ச்சியை அவருடைய கனவுகளின் நிறைவேற்றங்களுக்கான முன்னெடுப்புகளை இந்த நாடகங்களில் காண்பதாகக் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. 1980 களின் இறுதியில் பிரசுரமான என்னுடைய நாடகம்குதிரைக்காரன் கதையிலிருந்து என் நகர மக்களே கேளீர்’, ‘உடல்களின் விழிப்பிற்கான நாடகம் இதுபோன்ற வரிகளை மேற்கோள் காட்டி பேசியது எனக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் ஒருங்கே அளித்தது. எழுதிய சொல் என்றும் வீணாவதில்லை அது எவருடைய நினைவிலேனும் தங்கிவிடும் என்பது எவ்வளவு பெரிய நம்பிக்கை!

——

சொல்லால் முகிழ்க்கும் அன்பு

—-

நேற்று கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் கூத்துப்பட்டறையில் என்னுடைய கவிதா நாடகங்களை நடிகர்கள் நிகழ்த்தி முடித்தவுடன் ஆற்றிய உரை அபாரமானது. இறுதியாக நிகழத்தப்பட்ட அரவான் நாடகத்தின் கடைசி வரிகளானஇந்த எளிய சொற்கள் சில கதவுகளைத் திறக்கலாம் அல்லது தட்டலாம்என்பதை மேற்கோள் காட்டி பேச ஆரம்பித்த கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் தன் 15 நிமிட உரையில் என் கவிதைகளைப் பற்றிய நுட்பமான அவதானங்களை முன்வைத்தார். என் கவிதைகளில் வரும் மாதுளை, கடல், மழை, பூனை, மலர்கள் ஆகியவற்றைக்குறிப்பிட்ட அவர் நவீன கண்காணிப்பு சமூகத்தில்  கவிச்சொல் எப்படி தப்பிக்கும் பிரக்ஞையில் பித்தின் கீறலொன்றைப் பெறுகிறது என்பதையும் விளக்கினார். எழுதி முடித்த கவிதை கவிஞனை விட்டு நடிகனின் உச்சரிப்பில் மீள் உருவம் பெறுகையில் உயிர்க்கும் கவி மனதின் தன்மையையும் அவர் விளக்கினார். அப்போதுதான் நடந்து முடிந்திருந்த நாடகங்களின் கவிதை வரிகளை எந்த வித குறிப்புகளும் வைத்துக்கொள்ளாமல் மனதிலிருந்தே அவர் மேற்கோள் காட்டியதும் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. உண்மையில் என்னுடைய கவிதைகளைப் பற்றி இவ்வளவு தீர்க்கமாக வேறு யாரும் பேசி நான் இதுவரை கேட்டதில்லை. சொல்லால் பித்து மட்டும்தான் முகிழ்க்குமா என்ன? சொல்லால் அன்பும்தான் முகிழ்க்கும் என நான் எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். அது மட்டுமல்ல கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களால் நாடக நடிப்பைப் பார்த்தே நடிகர்கள்தான் தாங்கள் நிகழ்த்திய கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்ற creative processesஐயும் சரியாக அனுமானிக்க முடிந்தது. நான் அவருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நடேஷின் கோட்டுசித்திரங்கள் நூலை அவருக்கு எங்கள் இருவரின் சார்பாகவும் பரிசளித்தேன். அது என் பாக்கியம்.

—-

கூத்துப்பட்டறையின் இரண்டாவது மாடியில் இருக்கும் அரங்கு அளவில் சிறியதுதான் ஆனால் தனி நபர் நாடகங்களை நிகழ்த்த விரும்புபவர்களுக்கு, நாடக நடிகர்களுக்கு, நடிப்பு பயிற்சி எடுத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு பிரமாதமான வசதிகள் நிறைந்தது. தொலை நோக்கோடும், நாடகத்தின் தேவைகள் ஏன்னென்ன என்பதை அறிந்தவர்களாலும் உருவாக்கப்பட்ட அழகான அரங்கு. நான் அதை அன்னியோன்ய அரங்கு (intimate theatre) என்றழைப்பேன். ஒரு நடிகனின் உடல் மொழியையும், முக பாவனைகளையும் மிக நெருக்கமாகப் பார்த்து அபூர்வமான காட்சிகளை மனதில் பிடித்து எடுத்துச் செல்வது என்பது பார்வையாளர்களுக்கு கூத்துப்பட்டறையின் அரங்கு வழங்கக்கூடிய பெரும் கொடுப்பினை. இந்த அரங்கின் சகல மூலைகளையும் விரும்பியவாறு ஒளியூட்ட 19 விளக்குகள் இருக்கின்றன. கறுப்பு பெட்டிகளையும் சக்கரங்கள் பொருத்திய ஆளுயர panelகளையும்  வைத்து விதவிதமாக செட்டுகள் போடலாம். பின்னால் சுவரிலுள்ள அடைப்பான் தட்டிகளை நீக்கினால் ஒரு சுவரிலிருந்து மறு சுவர் வரை கண்ணாடிகள்- நடிகர்கள் தங்களைத் தாங்களே பார்த்து பயிற்சி செய்துகொள்ள வசதியாக இருக்கின்றன. தரையின் மென்சிவப்பு நிறம் ஒளியை அழகாக உள்வாங்கி பிரதிபலிக்ககூடியது. பக்கவாட்டில்  நடிகர்கள் காத்திருக்கும் இடத்திலிருந்து வெளியே சென்றால் அரங்கிற்கு வெளியே சிறிய பால்கனி இருக்கிறது அங்கே இருபது நடிகர்கள் வரை வரிசையாக நிற்கும்படிக்கு ஒளித்து வைக்கலாம். பார்வையாளர் பகுதி இரண்டு அடுக்குத்தளமாக இருக்கிறது. பரண் போன்ற மேற்பகுதியை இப்போது பழைய செட்டுகளை வைத்திருக்க பயன்படுத்துகிறார்கள். அதிலும் நாற்காலிகள் போட்டு பார்வையாளர்களை உட்கார வைக்கலாம் என்பது என் எண்ணம். என்னைப் போல theatre craft அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு, அரங்கை அங்குலம் அங்குமாகப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு கூத்துப்பட்டறையின் அன்னியோன்ய அரங்கு ஒரு பெரும் வரப்பிரசாதம். பெருந்தொற்று காலத்தில் சற்றே நலிவடைந்திருந்த கூத்துப்படறை அரங்கை நடேஷும் அவர் தலைமையில் இயங்கும் முழு நேர நடிகர்களும் புத்தம் புதியதாய் தற்போது பொலிவுறவைத்துவிட்டார்கள். இவ்வளவு அழகான அன்னியோன்ய அரங்கினை வேறெங்காவது பார்த்திருக்கிறேனா என்றால் ஜெர்மனியில் ரிச்சர்ட் வாக்னர் தன் வாழ்நாளின்போது உண்டாக்கிய அரங்கினை மட்டுமேதான் சொல்ல முடியும். வாக்னரின் அரங்கை அவர் பிறந்த ஊரில் இன்னும பழைமை மாறாமல் அப்படியே வைத்துப் பயன்படுத்துகிறார்கள். நாடகத்திருவிழா நடக்கும் பருவங்களில் டிக்கெட் யானை விலை குதிரை விலை விற்கும். அப்படியிருந்தும் நிகழ்ச்சிக்குத் டிக்கெட் கிடைக்க ஆறு மாதம் வரை காத்திருக்கவேண்டும். அன்னியோன்ய அரங்கொன்றில் கவிதை, ஓவியம், கோட்டுச்சித்திரம், இசை, தனித்துவமான உடல்மொழியாலான நடிப்பு இவற்றை ஒருங்கே காண்பது கலை திவ்யம் கொள்வதன் பகுதியாவதாகும். அது எப்போதாவதுதான் நடக்கும்

இன்று திருக்கடையூரில் சன்னிதித் தெருவில் நிற்கும் சிவப்பு மலர்களால் கிளைகள் மறைத்த மரமொன்றை என் ஹோட்டல் ஜன்னல் வழி பார்ப்பதில் விடிந்தது. நேற்று அபிராமியின் கடைக்கண்கள் வேண்டிச் செல்லும் வழியில் என்னையும் என் மனைவியையும் யூடூப் பேட்டிகள் வழி அடையாளம் கண்ட ஒருவர் என்னை இவர் ஒரு கவி என இன்னொருவருக்கு அறிமுகப்படுத்திவைத்தார். அரசுக் கட்டிலில் தூக்கம் போட்ட மோசிகீரனார், படிக்காசுப் புலவர் -interesting fellow, you know_ அமாவாசையை பௌர்ணமியாக்கிய அபிராமி பட்டர் என எழுதிய சொல்லால் மட்டுமல்லாமல் செய்த செயலாலும் கவியாக அறியப்படும் வரிசையில் சேர்வது என் பாக்கியம். என் தங்கையின் கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதைக் கொண்டாட இங்கு வந்தோம். வந்த இடத்தில் பைத்தியத்தின் ரேகை ஓடும் ஒரு கவி வரிசை துலக்கமாகிறது. அது சரி அந்த சிவப்பு மலர்களுக்கு என்ன பெயர்?

—-

இன்று கூத்துப்பட்டறையில் என் கவிதாநாடகங்களுக்கு காட்சி அமைப்புகள் உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். காட்சிகளின் பகுதியாக நடேஷின் கோட்டுச் சித்திரங்களை கறுப்பு பின்னணியில் வெள்ளைக்கோடுகளாக மாற்றி பின்னாலுள்ள திரையில் பெரிதாக ப்ரொஜக்டர் மூலம் காட்டியபோது அந்த சித்திரங்களின் அழகு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது. தமிழ் அரங்கிற்கு கூத்துப்பட்டறையில் புதிய தனித்துவமிக்க காட்சிமொழி உருவாகிக்கொண்டிருக்கிறது.

Mise en scène

——

நடேஷின் அழைப்பின் பேரில் கூத்துப்பட்டறைக்கு மீண்டும் இரு முறை செல்லலாமென்றிருக்கிறேன். போன முறை என் கவிதைகள் வாசிப்பு, உரைகளுக்குகவிதையிலிருந்து நாடகத்திற்குஎனப் பெயரிட்டிருந்தேன். இந்த முறை வகுப்புகளுக்கு mise en scène எனப் பெயரிட விழைகிறேன். தமிழில் காட்சி அமைப்பின் அரங்கேற்றம் என மொழிபெயர்க்கலாம். முதல்முறை செல்லும்போது கூத்துப்பட்டறையின் முழு நேர நடிகர்களோடும் இரண்டாம் முறை செல்லும்போது ஏற்கனவே என் கவிதைகளை தனி நபர் நாடகங்களாக நிகழ்த்திக்காட்டிய நடிப்பு பயிற்சி மாணவர்களோடும் வேலை செய்ய இருக்கிறேன். இந்த முறை பின்னணி இசை சேர்ப்பது, நடேஷின் ஓவியங்களையும், சித்திரங்களையும் காட்சி அமைப்பினுள் கொண்டுவருவது, ஒரே கவிதையை இரு வேறு விதங்களில் நாடகமாக்குவது, ஒளி அமைப்பினை மேம்படுத்துவது, இவற்றிற்குத் தேவையான அளவு நாடகக்கோட்பாடுகளை பயிற்றுவிப்பது ஆகியன என் வகுப்புகளாக இருக்கும். போன தடவை எடுத்துச்சென்ற கவிதைகளோடு புதியதாய் எழுதிய பல கவிதைகளையும் எடுத்துச் செல்லலாம் என்றிருக்கிறேன்.நாடக நடிகனுக்கு சொல், ஒலி, இசை, மௌனம், காட்சி, ஒளி ஆகியவற்றோடு இயைந்து உடல் மொழியை நுட்பப்படுத்துவது எப்படி என்பதை கவனப்படுத்துவதும், பயிற்றுவிப்பதும் என் வகுப்புகளின் நோக்கமாக இருக்கும். போனதடவை போலவே இந்தத் தடவைகளிலும் வகுப்புகள் நிகழ்த்துதல்களில் அந்தியுறும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முழு நேர நடிகர்களுடன் கவிதைகள் வாசிக்கத் தொடங்குகிறேன். அன்று திருவாடிப்பூரம். திருவாடிப்பூரத்தன்று கவிதைகள் சுமந்து செல்வது தவிர வேறு என்ன பிறவிப் பயன் எனக்கு இருக்கமுடியும்?

சொல் தீண்டி விழிக்கும் பிரக்ஞை

——

நேற்று கூத்துப்பட்டறையில் என் கவிதைகள் தனி நபர் நாடகங்களாக பரிணமித்த நிகழ்வுக்கு வந்திருந்தவர்களில் வெளி ரங்கராஜன், அஜயன் பாலா, றாம் சந்தோஷ், பரிசல் செந்திநாதன் ஆகிய நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. நான் நிகழ்ச்சிக்குத் தாமதமாக கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாகப் போய்ச் சேர்ந்தேன் அதனால் கொஞ்சம் பரபரப்பாக இருந்தேன் இதில் பரிசல் செந்தில்நாதனிடம் வாங்கிக்கொள்வதாகச் சொன்ன இலக்கிய இதழை அவர் கிளம்புவதாகச் சொன்னபோது கேட்டு வாங்க மறந்துவிட்டேன். வீடு திரும்பிய பிறகுதான் நினைவு வந்தது. றாம் சந்தோஷ் இந்த நிகழ்ச்சிக்காக குப்பத்திலிருந்து வந்திருந்ததாகச் சொன்னதைக் கேட்க ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது அவரை நான் வேறொரு பிசினஸ்மேன் என்று நினைத்துவிட்டேன். வெளி ரங்கராஜனுக்கு அரவான் கவிதையை சமர்ப்பணம் செய்திருப்பதை நான் பேசியபோது சொல்ல மறந்து கடைசியில் நினைவு வந்துசொன்னேன். இப்படியாக என் பக்கம் பல சிறு சொதப்பல்கள். 

வெளி ரங்கராஜன் பேசியபோது கவிதை நாடகத்துக்கு எப்படி நெருக்கமாக இருக்கக்கூடிய வடிவம் என்று சொன்னதும், றாம் சந்தோஷ்  ஒரே கவிதையின் (ஈரப்பதம், அரவான்) இரு நிகழ்த்துதல்கள் அந்தக் கவிதையின் உள்ளார்ந்த அர்த்தங்களை விரிவுபடுத்தியதாகச் சொன்னதும், இன்னொருவர் அரவான் கவிதை எப்படி சமகாலப் போர்களின் சாட்சியாகவும் பலியாகவும் நம் மனசாட்சியாகவும் இருப்பதாக  விளக்கமளித்ததும்- நானும் நடேஷும் பல மாதங்களாக பேசி முன்னெடுத்தகவிதையிலிருந்து நாடகத்திற்குஎன்ற இந்த பரிசோதனை   வெற்றியின் முதல் படியை தொட்டிருக்கிறது என்று தெரிய வந்தது.

நான் நேற்று கற்றுக்கொண்டவை:

தனி நபர் நாடகமாக கவிதையை நிகழ்த்துவதற்கு கூத்துப்பட்டறை மாணவர்களிடம் பெரும் வரவேற்பும் ஆர்வமும் இருக்கிறது. என்னுடைய வகுப்பில் இல்லாத காலை நேர வகுப்புகளிலுள்ள மாணவர்களும் என் கவிதைகளை நடிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்கள்.

கவிதையை தனி நபர் நாடகமாக நிகழ்த்தும்போது கவிதை பேச்சு மொழிக்கு மிகவும் அருகில் வருவதாகவும் தங்கள் தினசரி அனுபவங்களுக்கு சொல் வடிவம் கிடைப்பதாகவும் கவிதைகளை நடித்த மாணவர்கள் தெரிவித்தார்கள்.

என்னுடைய ஒரு கவிதையை நடித்த மாணவர் என் கவிதைத்தொகுதியையும் வாங்கி வாசித்துவிட்டார். என் கவிதைகளில் வரும் மழை, நாகலிங்க மரங்கள், பூக்கள், பூனைகள், என அவரால் என் கவிதைகள் உருவாக்கும் உலகினை உள்வாங்க முடிவதாகச் சொன்னார். ஒரு சொல் தீண்டலிலும் கூட ஒரு சக பிரக்ஞை விழிக்கும்தானே?  

நேற்று நிகழ்த்தப்பட்ட எட்டு கவிதைகளும் என் வலைத்தளத்தில் இருக்கின்றன. விரும்புபவர்கள் வாசித்துப் பார்க்கலாம்.