Wednesday, June 27, 2018

ஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில

Albert Camus with his children
நான் வேறு யாரோ ஒரு ஆள் என
--
தன் ஆளுமையில் முழுமையாக கரைந்துவிட்டவர்களை அதுவே இறுதியானது என்று நம்புவர்களைப் பார்க்கும்போது எனக்கு பரிதாபமே ஏற்படுகிறது. அவர்கள் கற்பனை வழங்கக்கூடிய மிகப் பெரிய சுதந்திர வெளியை அனுபவிக்கத்தவறிவிடுகிறார்கள். ஒருவேளை தன்னிலிருந்து விடுபட்ட கற்பனை புனைவாசிரியர்களுக்கு மட்டுமே அமையும் அதிர்ஷ்டம் உள்ளதோ என நினைத்து தமிழ் புனைவுகளை வாசித்தால் சுயபுராணமும் சுயபுலம்பலும் சுயதம்பட்டமுமே எங்கும் நிறைந்திருக்கிறது. கவிதை பின்னே கேட்கவே வேண்டாம். முழுக்க முழுக்க சுய ஆராதனைதான்.  தன்னிலிருந்து முழுவதும் வேறுபட்ட, தன் ஆளுமைக்கு எதிரான கதாபாத்திரங்களை தாஸ்தோவ்ஸ்கியால் உருவாக்க முடிந்தது அதனால்தான் அவர் ஐரோப்பிய நாவல் இலக்கியத்தின் உச்சம் தொட்ட படைப்பாளி என்று மிகைல் பக்தின் எழுதினார். அதுவே உண்மையில் இலக்கியம் கற்றுத் தரும் மிக முக்கியமான பாடம் என்பதும் என் எண்ணம்.


அவலட்சண எதிர்காலவியல் கதைகள்
--
அறிவியல் புனைகதைகளில் வழக்கமாகக் காணப்படும் dystopian futureஐ எனக்கே எனக்காக அவலட்சண எதிர்காலமென மொழிபெயர்த்து வைத்திருக்கிறேன். உலகம் அழிவை நோக்கி செல்லாது, மாறாக, மேலும் மேலும் மேம்பட்ட மனித சமூகமாகவே மாறும் என்ற மார்க்சீய சிந்தனைக்கு எதிரானது இது என்பது மட்டுமல்ல மனித சமூகம் சீரழிந்து எதிர்காலத்தில் உலகம் அழிந்து போகும் என்பது பெரும்பாலான மதங்களின் நம்பிக்கையும் கூட. உலகம் அழிந்து போம் என்ற விரக்தி என்னிடத்தில் தோன்றும்போதெல்லாம் அவலட்சண எதிர்காலவியல் கதைகளை நான் எழுதத் தலைப்படுகிறேன். 'ஒரு துண்டு வானம்' கதை அப்படிப்பட்ட ஒன்று. எதிர்காலத்தில் எல்லாம் கார்ப்பரேட் மயமாகி சிறைச்சாலையும் தனியார் கார்ப்பரேட்டிடம் நிர்வாகம் கைமாறிவிடும்போது என்ன நடக்கும் என என் கதை விவரிக்கிறது. அந்தக் கதையில் கார்ப்பரேட்-அரசு தீக்கூட்டிணைவில் அரசியல் எதிரியாக நீட்ஷேவிய அழகியல்வாதி இருப்பான் என்று கணித்திருந்தேன். கதை எழுதி கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு இன்றைக்கு  கார்ப்பரேட்டின் (அரசின்) அரசியல் எதிரி சுற்றுச்சூழலியல்வாதியாக இருப்பான் என அறிகிறேன். நான் இப்போது எழுத நினைக்கும் அவலட்சண எதிர்காலவியல் கதைகள் எனக்கே மனக்கலக்கத்தை உண்டு பண்ணுகின்றன. நிகழ்கால சமிக்ஞைகளோ புனைவை விட கொடூரமாய் கண் சிமிட்டுகின்றன.

தோரோ, டாஃப்லர், லெவிஸ்டிராஸ்

ஆல்வின் டாஃப்லரின் (Alvin Toffler - Future Shock புத்தக ஆசிரியர்) Third Wave வெளிவந்தபோது அதை மிகவும் ஆர்வமாக வாசித்தவர்களில் நானும் ஒருவன். ‘மூன்றாம் அலை’ , எதிர்காலத்தில் உலகளாவிய பிரம்மாண்ட பொருளாதார அமைப்புகள் உடைந்து சிறு சிறு பொருளாதார அமைப்புகள் - ஜே.சி.குமரப்பா எழுதிய காந்திய தன்னிறைவு பெற்ற கிராம அமைப்புகள் போன்றவை- வலுப்பெறும், அவை புதிய வாழ்வியல் முறையாக மாறும் என்று பேசியது எனக்கு மிகவும் உவப்பானதாக இருந்தது. என்ன அழகான கனவு அது என்று இன்றும் தோன்றுகிறது. ஆனால் அப்படி சிறு அமைப்புகளின் தன்னிறைவு இனி சாத்தியப்படுமா, அதன் சாத்தியங்களை என் வாழ்நாளில் காண்பேனா என்றெல்லாம் இப்போது தன்னியல்பான தவிப்புகள் ஏற்படுகின்றன. காந்திய சிந்தனையின் பகுதியான தோரோவின் (Throreau) இயகையோடு ஒன்றிணைந்த வாழ்வு என்பதன் கனவு முன்பே தீய்ந்துபோயிருந்தது. இயற்கை அதனுடைய காட்டு விகாசத்தில் கொடூரமானது; அதை மனித வாழ்க்கைக்கு ஏற்றார்போல பண்படுத்தாமல் வாழ இயலாது என்பது பொதுப்புத்திக்கே எட்டக்கூடியதுதான். அதைப் பிரமாதமாக வார்த்தைப்படுத்தியவர் லெவிஸ்டிராஸே ஆவார். அமேசான் காடுகளில் இயற்கையின் விகசிப்புகளைப் பார்த்து மிரண்டுபோன லெவிஸ்டிராஸ் தெற்கு ஃபிரான்சில் இய்ற்கையும் பண்பாடும் சம அளவில கலந்துள்ள இடங்களே மனித வாழ்க்கைக்கு ஏற்றவை என்று எழுதினார். தோரோவின் wild nature பற்றிய அதீத கற்ப்னைகள் யாதார்த்தத்தில் செல்லுபடியாகதவை. இயற்கையை அழிக்காமல், அளவாக முறையாக பயன் படுத்துவதன் balance என்ன என்பதே மீண்டும் மீண்டும் எழுகின்ற கேள்வி. அதற்கு விடையாக தன்னிறைவு பெற்ற சிறு அமைப்புகளைத் தவிர வேறு விடைகளும் இப்போதைக்கு இல்லை. நமக்கு அப்படி ஒரு வாழ்விற்கான ஏக்கம் இருக்கிறதா, என்ன?

சார்த்தர்

சார்த்தரின் (Jean-Paul Sartre) பிறந்த நாள் இன்று. சார்த்தரின் Being and Nothingness என்னை வெகுவாக பாதித்த நூல்களில் ஒன்று. மாணவப் பருவத்தில் மீண்டும் மீண்டும் வாசித்தேன். தினசரி வாழ்க்கையின் விவரிப்புகளூடே எப்படி தத்துவத்தை எழுத முடியும் என்று கற்றுத்தந்த பேராசிரியர் அவர். அவருடைய ஏன் எழுதவேண்டும் என்ற கட்டுரை சமூகக்கடப்பாடுடைய எழுத்தாளனாய் ஒருவன் எழுத வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. இன்றைக்கும் மனம் துவளும் நேரங்களில் நான் வாசிக்கும் நீண்ட கட்டுரை. நான் அவருடைய critique of Dialectical Materialism நூலை முழுமையாக வாசித்தேன் என்று சொல்ல முடியாது. ஆங்கொன்றும் இங்கொன்றுமாய் பக்கங்களை பல முறை துண்டு துண்டாய் வாசித்திருக்கிறேன். சார்த்தர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை மறுத்து அறிக்கை விட்டது, திருமணம் செய்யாமலேயே சிமோன் தி பூவாவோடு சேர்ந்து வாழ்ந்தது, அல்ஜீரியப் போருக்கு எதிராக தெருவில் இறங்கி போராடியது, மே 68 மாணவர் போராட்டத்தில் பங்கேற்றது எல்லாம் என்னுடைய மதிப்பில் அவரை மிகவும் உயர்த்தியது. இருத்தலியல் பிரச்சனைகளை இலக்கியத்தின் தலையாய பிரச்சனைப்பாடாக பார்க்கவேண்டும் என்ற சார்த்தரின் கருத்தை நான் இன்றும் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். சார்த்தரின் தத்துவம் கவர்ந்த அளவு எனக்கு அவருடைய நாவல்களும் நாடகங்களும் கவரவில்லை. Nausea நாவலை என்னால் வாசிக்கவே முடியவில்லை. No Exit நாடகத்தில் வரும் -மிகுந்த கண்டனத்திற்குள்ளான வரி The other is hell - எனக்கு எந்த கண்டனங்களையும் வாசிப்பதற்கு முன்பாகவே கடும் ஒவ்வாமையை ஏற்படுத்தியது. பின்னாளில் சார்த்தர் அவ்வரிக்காக வருத்தம் தெரிவித்தாலும் என்னைப் பொறுத்தவரை அது ஒரு மாறாக்களங்கமாக அவரைப் பற்றி என்னிடத்தில் தங்கிவிட்டது. ஆல்பெர் காம்யு சார்த்தரை விட சிறந்த இலக்கிய எழுத்தாளர் என்பது என் எண்ணம் ஆனால் காம்யு சார்த்தர் அளவுக்கு தெருவிறங்கி பொதுநலன்களுக்காகப் போராடியவரில்லை. சார்த்தர் அல்ஜீரியாவுக்கு எதிரான போரில் ஃபிரான்ஸ் ஈடுபட்டதை எதிர்த்து தெருவில் நின்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். ஃபிரான்சுக்கு எதிராக சார்த்தர் பிரச்சாரம் செய்கிறார் அவரை கைது செய்யவேண்டும் என்று ஃபிரான்சின் அதிபராக இருந்த டிகாலிடம் சொன்னபோது டிகால் France cannot arrest its Voltaire என்று சொன்னாராம். It was one of the greatest moments in the history of Western civilisation.

சார்த்தரைப் பற்றி குறிப்பு எழுதிய இன்றைய மதியத்தில் அவருடைய முக்கியமான நூலான Saint Genet: Actor and Matyr பற்றி என்னுடைய அவதானத்தை எழுதாமல் விட்டுவிட்டேன். ஜெனேயின் Theif's Journal என்ற புத்தகத்தைப் பற்றிய சார்த்தரின் விரிவான விமர்சனமே புனித ஜெனே. சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுபவர், ஜெயிலுக்கு சென்றவர், ஓரினச்சேர்க்கையாளர் என்றெல்லாம் அறியப்பட்ட ஜெனேயை, ஜெனேயின் எழுத்திலுள்ள கவித்துவத்தை முதன்மைப்படுத்தி அவரை புனிதரெனவும் மேதையெனவும் சார்த்தர் நிறுவினார். மேதமை என்பதை பிறப்பின் அம்சமாகவோ, வரலாறு, கலாச்சார பின்புலம் ஆகியவற்றின் விளைபொருளாகவோ காணாமல் தன் சூழலை படைப்பூக்கத்துடன் எதிர்கொண்ட மனமாக சார்த்தரின் புனித ஜெனே நூல் எடுத்தியம்புகிறது. இந்த நூலின் முக்கியத்துவம் ஹெரால்ட் ப்ளூம் எழுதிய Genius என்ற நூலை வாசிக்கும்போதுதான் துலங்கும். ப்ளூம் எழுதுவது ஷேக்ஸ்பியர் போல உலக அளவில் வெகுவாக அங்கீகரிக்கப்பட்ட ஐம்பத்தி சொச்சம் இலக்கிய மேதைகளைப் பற்றி. அதுவும் எப்படி? யூத மத நூல்களில் கொடுக்கப்பட்ட மேதைகளுக்கான குணநலன்களை வைத்து ஷேக்ஸ்பியரும் மற்றவர்களும் மேதைகள் என ப்ளூம் விளக்குகிறாராம். பாயிண்ட் 1, பாயிண்ட் 2 என box ticking வேலையை செய்திருக்கிறார் ப்ளூம். ஷேக்ஸ்பியரின் மேதமை என்ன என்பது ப்ளூமின் லிஸ்ட் இல்லாமலேயே நமக்குத் தெரியாதா என்ன? ப்ளூம் ஒரு கற்றுச்சொல்லி; சார்த்தர் அசல் சிந்தனையாளர். அசல் சிந்தனையாளர்கள் சிந்தனை முறையையே மாற்றுகிறார்கள்; புதுப்பிக்கிறார்கள். கற்றுச்சொல்லிகள் தண்டி தண்டியான புத்தகங்களினால் கலாச்சார மேலாண்மையை நிறுவுகிறார்கள். அவர்களுடைய புத்தகங்களை எடைக்கு எடை போட்டு பேரீச்சம்பழங்கள் வாங்கி சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது.

வேளச்சேரியில் முகம் தெரியாமல் வாழ்ந்த இனிய நாட்களை இந்த மொட்டைமாடிக்கூட்டங்களுக்குச் சென்று உரையாற்றி நானே கெடுத்துவிட்டேன். முன்பெல்லாம் என் வீட்டைக்கூட என் மனைவியை வைத்து வெள்ளைக்கார அம்மா வீடு என்றோ என் பையன்களை வைத்து ருத்ரன் வீடு என்றோதான் அடையாளம் சொல்வார்கள். நானொருவன் இருப்பதே தெரியாது. இந்த மொ.மா.கூக்களுக்கு போனதிலிருந்து காலை நடையின் போது யாராவது ஒரு அம்மணியோ அம்மனனோ ( தன் மனதை முழுமையாக நம் மேல் கொட்ட விரும்புபவர்) கண்ணில் பட்டுத் தொலைத்துவிடுகிறார்கள். அவர்களுக்கு நான் காலை நடையின் போது என் வாழ்க்கையிலேயே முக்கிய வேலைகளான, பராக்கு பார்த்தல், யோசனையற்று சும்மா இருத்தல், நடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கிறேன் என்று தெரிவதில்லை. இன்றைக்கு பார்த்த அம்மணிகள் ஏதோ பிக்பாஸ் என்பதைப் பற்றி உரையாட விரும்பினார்கள். அது என்ன வஸ்து என்று கேட்டுவைத்தேன். அவ்வளவுதான். ஜெமோ/எஸ்ரா யுடூப் உரைகள் போல பிக் பாஸ் பற்றிய அத்தனை விபரங்களையும் பிளந்து கட்டிவிட்டார்கள். காதுகளெல்லாம் எரிகின்றன. Endlessly sulking. சனி நீராடலாம் என்று சளம்ப எண்ணெய் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.

ஜேஜேயை மற
--
Aeon வலைத்தளத்தில் அயன் ரேண்டை தத்துவ உலகம் கிஞ்சித்தும் மதிப்பதில்லை இருந்தாலும் அவருடைய நாவல்கள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும் என்றொரு கட்டுரை படித்தேன். சுந்தரராமசாமியின் ஜே ஜே சிலகுறிப்புகள் வெளிவந்த புதிதில் ஜேஜேயை அயன் ராண்டின் கதாநாயகர்கள் போலவோ என சந்தேகித்து ராகம் இதழில் நான் எழுதியது நினைவுக்கு வந்தது. ராண்டின் கதாநாயகர்களான ஹோவர்ட் ரோர்க் (The Fountainhead) ஜான் கால்ட் (Atlas Shrugged) இருவருமே படைப்பூக்கமிக்க தனியன்கள் அவர்கள் அரசாங்கம், சமூகம் ஆகியவற்றின் இயங்குவிதிகளுக்கு கட்டுப்படாதவர்கள். அவர்களை நீட்ஷேவிய அதிமனிதன் என யாரோ ஒரு மேதாவி எழுதித்தொலைக்க அதுவே பலரும் கிளிப்பிள்ளையாய் திரும்பச் சொல்லும் பழக்கமாகிருக்கிறது. உண்மையில் நீட்ஷேவிய அதி மனிதன் உலக இலக்கியங்கள் எதிலுமே தோன்றவில்லை என்பது என் அனுமானம். கூடவே அயன் ரேண்டின் அசட்டு சுயமோகிகளுக்கும் நீட்ஷேவிய அதிமனிதக்கும் சம்பந்தமில்லை. ஜிஜெக் (Slavoj Žižek) ராண்டின் பாத்திரங்களை ஆண் மைய கதையாடல்களின் நாயகர்கள் என வாசித்தது ஒத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஜேஜே பெண்களேயில்லாத ஒரு இலக்கிய உலகின் ஆண் நாயகன். வணிக உலகத்தை நிராகரிப்பவன், போலிகளை மறுக்ககூடியவன் தமிழ் சிற்றிலக்கிய உலகின் கலைஞன் என்ற பிரதிமையின் archetype. ஜேஜே சில குறிப்புகள் இன்று அதிகமும் வாசிக்கப்படாத நாவலாக இருக்கலாம். ஆனால் ஜேஜே என்ற பிரதிமையை இலக்கிய ஆசிரியர்களையும் அவர்களது படைப்புகளையும் அணுக தொடர்ந்து பலரும் பயன்படுத்தி வருவதாகவே தெரிகிறது. தனித்துவமிக்க கலைஞன் என்ற figure மிகவும் கவர்ச்சிகரமானதாக கதைவாசிப்பில் இருக்கலாம் ஆனால் அயன் ராண்டின் கதை கருத்தாக்கமாக மாறும்போது அது சுயநலமிகளைக் கொண்டாடும் அசட்டு சித்தாந்தமாகிறது. எனவேதான் தன்னளவில் தர்க்கமற்ற Virtue of sefishness ஐ ராண்டால் வெட்கமில்லாமல் எழுதமுடிந்தது; தத்துவ உலகமும் அவரைப் பார்க்க சகிக்காமல் முகத்தைத் திருப்பிகொண்டது. உண்மையில் மிகப்பெரிய கதாநாயக செயல் என்பது சமத்துவத்தை பேணுதலாகவும், தனித்த படைப்பூக்கத்தின் பொருட்டு எந்த சலுகையையும் கோராதிருப்பதிலேயும்தான் இருக்க முடியும். உயர் அதி மனிதனானாவன் -நீட்ஷேவிய சட்டகத்திலிருந்தும் கூட விடுபட்டு- சமூக பரிணாமவளர்ச்சியோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டவனாக/கொண்டவளாகத் தான் இருக்கமுடியும். அந்த வகையில் ஜேஜேயின் பிரதிமைகள் மறக்கப்படவேண்டியவையே.

கிரைப் வாட்டர் விளம்பரத்தில் காணப்படும் கைக்குழந்தை போல இருக்கும் சிலரின் புகைப்படங்களை ஃபோன் திரையில் காட்டி இவர்களெல்லாம் இப்போது எழுத வந்துள்ள இளைஞர்கள் தெரியுமா என்று என்னைச் சீண்டினார் இளங்கவி. (வேறெப்போது? எல்லாம் வேளச்சேரி மாலை நடையின்போதுதான்). நான் எழுத வந்த புதிதில் குற்றாலம் கவிதைப்பட்டறையில் பிரமிள் என்னைப்பார்த்து அமுல்பேபி என்று சொன்னார் அதனால் இந்த இளைஞர்களின் தோற்றத்தைப் பற்றி எல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன் என்றேன். தாடி, ஜிப்பா, சீவப்படாத கலைந்த கேசம், சோடாப்புட்டி கண்ணாடி, வாயில் அலட்சியமாகத் தொங்கும் சிகரெட்- அந்த எழுத்தாள இமேஜை இனி மியூசியத்தில் கூட பார்க்கமுடியாது போலிருக்கிறது. அதில் எனக்குக் குறையில்லை. என்ன, இன்னும் கொஞ்சம் வயதாகி வேட்டியும் சரிகை அங்கவஸ்திரமும் கோல்ட் ஃபிரேம் கண்ணாடியும் போட்டுக்கொண்டு நடந்தார்கள் என்றால் லேவாதேவிக் கடை கல்லாவிலிருந்து எழுந்து வந்தவர்களைப் போல இருப்பார்கள்.
-
" வினதா சொன்னாள், 'நடுக்கடலுக்குப் போ, அங்கே நிஷாதர்களின் நிலத்தைக் காண்பாய். அங்கே உனக்குத் தேவையான அளவிற்கு அவர்களை உண்ணலாம். அவர்களுக்கு வேதங்கள் தெரியாது. ஆனால் நினைவில் கொள்; ஒருபோதும் பிராமணணைக் கொல்லாதே, பிராமணன் என்பவன் தீ, கூர்மையான வாள், நஞ்சு. எந்தச் சூழ்நிலையிலும் பெருங்கோபத்திலும்கூட நீ பிராமணனைக் காயப்படுத்தக்கூடாது.' கருடன் இன்னும் தீர்க்கமாக கவனித்தான். அவன் கேட்டான்,' ஆனால் அம்மா, பிராமணன் என்றால் என்ன? எப்படிப் பிராமணனை அடையாளம் காண்பேன்?' கருடன் கறுத்த சுருண்ட பாம்புகளையும் ஒருவரையொருவர் வெறுக்கும் இந்த பெண்கள் இருவரையும் தவிர வேறு எதையும் பார்த்திருக்கவில்லை. அவன் தந்தை எப்படி இருப்பார் என்பது கூட அவனுக்குத் தெரியாது. பிராமணன்? என்னவாகத்தான் இருக்கும் அது என்று ஆச்சரியப்பட்டான் கருடன். வினதா சொன்னாள், 'உன் தொண்டையில் ஒரு எரிகொள்ளியை உணர்ந்தாலோ கொக்கியை விழுங்கியதுபோல உணர்ந்தாலோ அதுதான் பிராமணன்' கருடன் அவளையே நேரடியாகப் பார்த்தவாறு நினைத்துக்கொண்டான், 'ஆக விழுங்கினாலொழிய பிராமணன் யாரென்பதைச் சொல்ல இயலாது' ஆனால் அவன் ஏற்கனவே தன் சிறகுகளை விரித்துக்கொண்டிருந்தான், நிஷாதர்களை விழுங்குவதற்கான ஆர்வத்துடன்"
வாசித்துக்கொண்டிருக்கும் ராபர்ட்டோ கலாஸ்ஸோவின் நாவல் 'க' வில் -தமிழில் ஆனந்த், ரவி - பக்கம் 22-23-காலச்சுவடு பதிப்பகம்

Quine: If numbers were words, zero would be an irregular verb.
Tarski: "Zero is one" is a true sentence if and only if zero is one. Malevich: It is from zero that the true movement of being begins.
Hugo: Zero does not exist.
-

வேளச்சேரி இப்போதெல்லாம் மாலை நடைக்கு லாயக்கற்ற அபாயகரமான இடமாகிவிட்டது. முன்பெல்லாம் அசோகமித்திரன் சைக்கிளில் தென்படுவார். கையசைத்தால் சில சமயம் சைக்கிளிலிருந்து இறங்கி இரண்டு வார்த்தை அளவளாவிவிட்டுப் போவார். ஜெயந்தனைப் பார்த்தால் பேசிக்கொண்டே நடக்கலாம். இப்போதெல்லாம் இளம் கவிகளிடம் சிக்கிகொண்டுவிடுகிறேன். நடுரோட்டில் எழுநூறு பக்க நோட்டைக்காட்டி அங்கே அப்போதே வாசிக்கவேண்டும் என்று அடம்பிடிப்பார்களோ என்ற பாவனையில் பேசுவார்களா நமக்கு அஸ்தியில் ஜுரம் காணும். வேறு சிலரோ எனக்கு உலகத்திலேயே பிடிக்காத கேள்வியான உங்கள் நாவலை எப்போது முடிப்பீர்கள் என்று கேட்டு என்னை பதற்றத்துக்கு உள்ளாக்குவார்கள். என்னிடமும் சில குயுக்திகள் உண்டும். இளம்கவியை பார்த்தவுடனேயே நான் கவிதை விமர்சனம் எழுதினால் ஃபூக்கொ, தெரிதா என்றெல்லாம் வருகிறதா யார் படிக்கிறார்கள் என அலுத்துக்கொள்வேன். இன்றைக்கு மாம்பழ வண்டியைப் பார்த்து முகத்தை திருப்பி நின்றுகொண்டேன். கவி விடுவதாயில்லை. நீலம் மாம்பழம் ஒன்றை வாங்கி துளையிட்டு உறிஞ்சி சாப்பிட ஆரம்பித்தேன். அவருக்கும் ஒரு மாம்பழத்தைக் கொடுத்தேன். நீலம் கவிதையை மறக்கடிக்க செய்துவிட்டது. சாப்பிட்டு முடித்த உடனேயே அவர் சார் ஒரு உதவி என்றாரா எனக்கு பகீரென்றது. முடியாது என்றால் விடவா போகிறார்? சொல்லுங்கள் என்றேன். மொட்டைமாடிக்கூட்டத்தில் போன மாதம் உலகின் தலை சிறந்த முதல் வரிகள் என்ற தலைப்பில் பேசினீர்களல்லவா அதை நான் மிஸ் பண்ணிட்டேன். நீங்க தயவு செய்து அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த வரியை சொல்ல முடியுமா? சொன்னால் உடனடியாக வீட்டுக்குப் போய்விடலாமா. என்ன சார் நீங்க, நிச்சயமா. எனக்குப் பிடித்த முதல் வரி: I am pretty much fucked up.
-
வன்முறை, அபத்தம், அர்த்தமின்மை

மது என்ற அப்பாவி ஆதிவாசி இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டதைப் பற்றி கட்டுரை எழுதச்சொல்லி ஆங்கிப்பத்திரிக்கை ஒன்றிலிருந்து கேட்டார்கள் இரண்டு முறை எழுத உடகார்ந்தும் என்னால் எழுத இயலவில்லை. ஆதிவாசிகளையும் காடுகளையும் நாம் ராமாயண, மகாபாரத காலம் தொட்டு நடத்தி வரும் முறை, வெர்ரியர் எல்வினால் உருவாக்கப்பட்ட ஆதிவாசிகள் நலக் கொள்கை, ஆதிவாசிகளுக்கு காடுகளின் மேல் இந்திய சட்டம் சார்ந்து கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் அவை எவ்வாறெல்லாம் நடைமுறையில் ஏமாற்றப்படுகின்றன - என்பதையெல்லாம் விளக்கி வரலாற்றுபூர்வமான சமூகவியல் பார்வையில் மதுவின் மேல் நடந்த வனமுறைக்கான சூழல்களை rationalaise செய்து எழுதிவிட்டால் அந்த வன்முறையின் தன்மை என்ன என்று விளங்கிவிடுகிறதா? இது போலவே விழுப்புரத்தில் தலித் கும்பத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட வன்முறை நில அபகரிப்பு, நிலவுடமை, சாதிகளிடையேயான வன்முறை என பகுத்துக் காட்டிவிட்டால் இந்த வன்முறைக்கு எதிரான மனநிலையை உருவாக்கிவிடமுடியுமா?  சிரியாவில் நடக்கும் போர் புகைப்படங்களில் வெள்ளைப்பொதிகளாக வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் சடலங்களுக்குப் பின்னுள்ள வன்முறையை என்னவென்று புரிந்துகொள்ள? இந்த நிகழ்வுகளைப் பற்றி படிக்கும்போதெல்லாம் எழுத விழையும்போதெல்லாம் ஒருவிதமான திகைப்பும், திகிலும், அருவருப்பும், அவமானமுமே, கையாலாக கோபமுமே என்னை ஆட்கொள்கின்றன. I go blank in the face of a hermeneutic failure.  சகிக்க இயலாத அபத்தமும், அர்த்தமின்மையும் என்னைச் சூழ்கின்றன. காஃப்காவும், காம்யுவும், பெக்கட்டும் செய்ததும் போல வன்முறையின் அபத்தத்தை கூர்மைபடுத்திச் சொல்லும் படைப்புகளை எழுத முயற்சிக்கலாம். ஆனால் அவை யாருடைய மனசாட்சியை உலுக்கும்? நீட்டப்பட்ட துப்பாக்கிகளை எதிர்கொள்ளும் சிரியாவின் குழந்தையாய், கைகள் பிணைக்கப்பட்ட மதுவாய், முகம் சிதைக்கப்ப்ட்ட சிறுமியாய் நம் சுயத்தை சிதைத்துக்கொள்ளலாம். அப்போதும் அபத்தமே எஞ்சி விஞ்சி நிற்கும்.

துறவறத்தின் நிறுவனங்களும் சமூக அதிகாரமும்

ரமானுஜத்தின் ‘சந்நியாசமும் தீண்டமையும்’ நூலை வாசித்து முடித்தபோது, அந்த நூல் துறவறம் நிறுவனமயாகும்போது என்ன விதமான சமூக அதிகாரத்தை இந்திய சமூகத்தில் கைப்பற்றுகிறது, தீண்டாமை என்ன விதமான சமூக கையறுநிலைக்கு சில ஜாதிகளைத் தள்ளுகிறது என்ற வரலாற்றுப் பார்வையைக்கொண்டிருக்கவில்லை எனவே இது மிகவும் பிழைபட்ட நூல் என்ற எண்ணம் தோன்றியது. ராமனுஜத்தின் நூலை விமர்சிப்பதற்கான குறிப்புகளை எடுத்து முடித்த நேரத்தில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதியின் மறைவுச் செய்தி இன்று வந்தது. துறவறத்தை நிறுவனமயப்படுத்துவதற்கும் அதன் மூலம் சமூக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் இந்திய சமூகம் ஏன் அனுமதிக்கிறது துறவறம் ஏன் அதிகாரமற்ற நிலையாக மாறுவதில்லை என்ற கேள்விகளுக்கு காஞ்சி சங்கர மடத்தின் வரலாற்றையும் அதன் நடைமுறைச் செயலபாடுகளையும் ஆராய்வதன் மூலம் ஒருவர் ராமனுஜத்தின் புத்தகத்திற்கு முற்றிலும் புதிய கோணத்திலிருந்து எதிர் எக்கு எழுத முடியும். பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ மடங்களின் வரலாறுகளும் நமக்கு பல புதிய பார்வைகளை வழங்கலாம். ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா, ஶ்ரீரவிசங்கர் போன்ற உருவாக்கியிருக்கும் நிறுவனங்களும் நமக்கு துறவறம் கைப்பற்றும் சமகாலவரலாற்றினை நமக்கு சொல்லும். துறவறம் என புனிதப்படுத்தப்பட்ட மதக் கருத்தாக்கத்தின் ஒரு தளமே ஜாதீயம் அதை மட்டுமே வைத்து ஜாதீயக்கட்டுமானத்தை அணுகியிருப்பது ராமானுஜத்தின் பிழை; அது சமகாலாத்திய வரலாறுகளாலும் மானுடவியல் தரவுகளாலும் சரிசெய்யப்படவேண்டியது.

மு அருணாசலம் எழுதிய தமிழ் வரலாறு பதினாறாம் நூற்றாண்டு நூலில் ‘சைவ சந்நியாச பத்ததி’ என்ற நூலைக் குறிப்பிடுகிறார். அதில் சந்நியாசம் மேற்கொள்ளளும நெறி சைவர்களுக்கு கிடையாது என ஸ்மார்த்தர்கள் வாதிட்டதால் அதை எதிர்த்து இந்த வடமொழி நூல் இயற்றப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.சைவ மடங்களோ பதினைந்தாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் தோன்றிவிட்டன. அந்த விவாதங்களை கவனிக்கும்போது தனி மனித, ஜாதிய, குடும்ப நெறியாக அறியப்பட்ட சந்நியாசத்திற்கும் துறவின் அறமாக அறியப்பட்ட நியதிகளுக்குமான வேறுபாடுகள் முற்றிலும்  அழிந்துபோய்விட்டன என்ற முடிவுக்கு வரலாம். சங்கர மடங்கள் நிறுவப்பட்டபோதே இந்த வேறுபாடுகள் இல்லாமலாகிவிட்டன என்பதும் இன்னொரு வாதம்.  

மேலும் அஸ்வகோஷர் எழுதிய புத்த சரிதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாட்ரிக் ஓலிவில் (ராமானுஜம் தன்னுடைய புத்தகத்தின் வாதத்திற்கு உறுதுணையாக இருப்பதாக குறிப்பிடும் மூன்று கல்வியாளர்களில் ஒருவர்- மற்ற இருவர் வீணா தாஸ் மற்றும் சுந்தர் சருக்கை) அதன் முன்னுரையில் அஸ்வகோஷர் பார்ப்பன வேதாந்தியாக இருந்து பௌத்தத்தை தழுவியவர் எனவே அவர் புத்தரின் துறவறத்தை பார்ப்பன சந்நியாச நெறியாக வித்தியாசமின்றி முன்வைக்கிறார் என்று பனுவல் சான்றுகளோடு முன்வைக்கிறார். எனவே அஸ்வகோஷரின் காலமான ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்த வேறுபாடு இல்லை எனவும் யூகிக்கலாம்.


தாஸ்த்தோவ்ஸ்கி -கெட்ட செய்தி
-
தாஸ்தோவ்ஸ்கியை இப்போதெல்லாம் படிக்கையில் கடும் எரிச்சலே ஏற்படுகிறது. அதுவும் தண்டி தண்டியாய் வாங்கி வைத்திருக்கும் தமிழ் மொழிபெயர்ப்புகளை (கரமசோவ் சகோதரர்கள், அசடன்) பார்க்கும்போது பேசாமல் எடைக்கு எடை போட்டு பேரீச்சம்பழம் வாங்கிவிடலாமா என சம்சயம் உண்டாகிறது. பிரச்சினை மொழிபெயர்ப்புகளிலில்லை; தாஸ்த்தோவ்ஸ்கியிடம்தான். ஐரோப்பிய நாவல் இலக்கியத்தின் உச்சம் தாஸ்த்தோவ்ஸ்கிதான் என மிகைல் பக்தின் நிறுவியதில் என்ன ஓட்டை என மனம் ஆராயத்தலைப்படுகிறது. நபகோவ் தாஸ்தோவ்ஸ்கியின் நாடகீய கதை சொல்லலுக்கும் கிறித்தவ நோக்கிற்காகவும் சாடுவது சரிதான் என நான் மண்டையை ஆட்டிக்கொண்டிருக்கிறேன். இருபது வயதுகளில் விழுந்து விழுந்து படித்த தாஸ்த்தோவ்ஸ்கிக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் ஒவ்வாமை ஏன் என்பதற்கு என்னிடம் ஒரே ஒரு விளக்கம்தான் இருக்கிறது. தாஸ்தோவ்ஸ்கிக்கு வாழ்க்கையின் புதிர்களை புதிர்களாகவே அடர்த்தியாக்கத் தெரியவில்லை; அப்பா கரம்சோவ் போன்ற எதிர்மறைக் கதாப்பாத்திரமாகட்டும் மிஷ்கின் போன்ற களங்கமில்லா கதாபாத்திரமாகட்டும் அவர் அவர்களை ஒருவகையான இறையியலுக்குள் கொண்டுவந்துவிடுகிறார்; புதிர்கள் அவிழ்ந்துவிடுகின்றன. அதன் பொய்மை தாஸ்த்தோவ்ஸ்கியின் கடவுளைப் போலவே நம்மைத் தாக்கும்போது நாம் நிலைகுலைந்து போகிறோம். அந்த அடிநாத அல்லேலூயா ஆமோதிப்பை உதறிவிடும்போது தாஸ்த்தோவ்ஸ்கி நமக்கு கெட்ட செய்தியாகவே வந்து சேருகிறார்.

ஜோ (நானாக வைத்த  பெயர்) ஒரு தெருவோர தீர்க்கதரிசி. நீங்கள் அவரை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் முரசொலி மாறன் அமைத்த, பாதசாரிகள் தெருவைக் கடக்க உதவும் பாலத்தின் அருகில் பார்த்திருக்கலாம். ஜாடாமுடியும், தாடி மீசையுடன் அழுக்குத் தோள்ப்பையுமாக வதங்கிக் கிடப்பார். பாலத்தின் மேலேறி சிலசமயம் ஏதேதோ ஆரூடங்களை உரக்கக் கத்துவார். என்னுடைய அலுவலகத்திற்கு அருகிலுள்ள இடம் என்பதால் அவரை அடிக்கடி பார்க்க நேரிடும். ஒரு முறை என்னிடத்தில் பதினேழு ரூபாய் கேட்டார். கொடுத்தேன். அதிலிருந்து ஏதோ ஒரு எண்ணிக்கையில் பணம் கேட்பார். கூடுதல் குறைவாகக் கொடுத்தால் வாங்கமாட்டார். நாற்பத்தி ஒன்பது ரூபாய் என்றால் சரியாக நாற்பத்தி ஒன்பது தர வேண்டும் ஐம்பது ரூபாய் கொடுத்தால் வாங்கமாட்டார். அருகாமையிலுள்ள பீடாக்கடையில் வட இந்தியர் கூட்டம் அள்ளும்; கார்களை நிறுத்திவிட்டு பீடா வாங்குவார்கள். அவர்களுக்கு ஜோ ஒரு பெரிய ஜோதிடர், தீர்க்கதரிசி, மகான், மாயாவி, மந்திரவாதி என பலவிதமான நம்பிக்கைகளுண்டு. அவர்கள் நூறு, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையெல்லாம் அவருக்கு தருவார்கள் அவற்றையெல்லாம் வாங்கி அவர்களை நோக்கி வீசி எறிவார் அவர்கள் அவற்றை பயபக்தியுடன் பொறுக்கிக்கொண்டு போவார்கள். மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு அவருக்கு பங்க் கடையில் டீ வாங்கிக்கொடுத்து நானும் அவரோடு நின்று குடித்தேன். அதிலிருந்து அவருக்கு என்னிடத்தில் மேலும் நெருக்கம் உண்டானது என நான் நினைத்தேன். போன மாதம் என்னிடத்தில் மடித்த காகிதம் ஒன்றைக் கொடுத்து அதை வாசிக்கும்போது எனக்கு அட்டமாசித்தி கிடைக்கும் என்றார். அதன் பிறகு அவரை நான் பார்க்கவேயில்லை. இன்று அவர் இறந்துவிட்டதாக அறிந்தேன்.வருத்தமாக இருந்தது. அவர் கொடுத்த காகிதத்தைப் பிரிக்காமலேயே பத்திரமாக வைத்திருப்பதும் நினைவுக்கு வந்தது.
-
பெயரில் என்ன இருக்கிறது?

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு என்னுடையது போன்ற முழ நீளப் பெயர்களை வைக்கலாகாது என்றே சிபாரிசு செய்வேன். சிறு வயதில் என்னுடைய பெயரை எழுதுவற்குள் தாவு தீர்ந்துவிடும். வீட்டில் சுரேஷ் என்று கூப்பிடுவார்களா அதைச் சுருக்கி உன் பெயரென்ன என்று கேட்டால் சீ என்று சொல்வேன். சீ என்பது நல்ல பெயர் என்பதே எனக்கு இன்றைக்கும் என் அபிப்பிராயம். மத அடையாளங்களில்லை; நாணத்தோடும் சொல்லலாம் வெறுப்பாகவும் உமிழலாம் என பல உணர்ச்சிகளுக்கு இடம் தரக்கூடிய சப்தம். நீட்டியும் முழக்கலாம் குறுக்கியும் மிரட்டலாம். அம்மா இனிமையாக சீப்பா என்று கூபிடுவார்களா அதன் வாத்ஸ்லயத்திற்கு இணையான இசையொன்றை நான் கேட்டதில்லை. அர்த்தமற்ற ஒற்றை எழுத்துப் பெயரெனில் அதற்கான அடையாளத்தை பெயர்கொண்டவரின் வாழ்க்கை தனித்துவமாய் வழங்கிவிடும். அர்த்தமுள்ளதுதான் வேண்டும் என்றால் பூ,கோ என்று தமிழில்தான் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன!

மும்பையில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணி இந்தியாவின் அரசியல் நனவிலி கம்யூனிசத்தால் தாக்கம் பெற்ற விவசாயிகளும் பழங்குடி மக்களுமே என்பதை மீண்டுமொரு முறை நமக்கு உணர்த்துகிறது. நனவிலி வலிமை வாய்ந்தது; திடீரென மேலெழுந்து வந்து தன் இருப்பை அறுதி செய்ய வல்லது; அழிவில்லாதது. இந்திய அரசியலின் நனவாக இன்றைக்கு பாப்புலிசமும் கார்ப்பரேட் நலன்களையும் கூடவே அதன் ஊழல்களையும் கட்டிக் காப்பாற்றும் கடிகளின் ராணுவத்தன்மையும் சேர்ந்தமைகின்றன. இந்திய அரசியலின் நனவும் நனவிலியும் எதிரெதிர் துருவங்களாய் அமைந்திருப்பது நம் சமகாலம். இதில் கலைஞர்கள் அரசியல் நனவிலியோடுதான் தங்களை அடையாளப்படுத்திகொள்வார்கள்.

இயற்கையின் நியதி, காலத்தின் போக்கு ஆகியவற்றை அறம் என அடையாளப்படுத்துதல் தத்துவத்தில் பெரும் பிழை. உணவுச் சங்கிலியால் ஒன்றையொன்று தின்று வாழ்வதற்காகவும் வல்லவன் வாழ்வதற்கும் வலிமையற்றவன் வம்சாவழியற்று மறைந்து போவதுமாக் இயற்கை அமைக்கப்பட்டிருப்பது டார்வின் நமக்குக் கற்றுக்கொடுத்ததுதான்; ஆனால் அறம் இயற்கையின் நியதி ஒட்டி அமையலாகாது. இயற்கையின் நியதியை எதிர்த்தே மனித அறம் உருவாக்கப்படுகிறது; பின்பற்றப்படுகிறது.  அற விழைவு என்ற விழைவு செயலின்மைக்கு இட்டுச் செல்லாது அது மேம்பட்ட சமூகச் செயலுக்கே இட்டுச் செல்லும். இன்று ஜெயமோகன் வெண்முரசின் பதினேழாவது நாவலான ‘இமைக்கணத்தின்’ முதல் அத்தியாயம் தியானிகன் என்ற புழுக்கும் பிரபாவன் என்ற சிறு பற்வைக்கும் நடக்கும் உரையாடலாக தொடங்கியிருக்கிறது. கதை உணவுச்சங்கிலியின் கால ஓட்டத்தை அறம் என நிறுவுகிறது இது அடிப்படையில் பிழைபட்டது ஒருவகையான அசட்டு Ayn Randism. தவிர, இயற்கையைப் பற்றிய முழு அறிவும் கூட நமக்குக் கிடையாது என்பதும் கவித்துவ நோக்கு/ இலக்கிய பார்வை என்பது வேறு என்பதும் கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியவை. டார்வினிய வல்லவன் வாழ்வான் கோட்பாட்டைப் பற்றி ‘புலியும் மானும்’ என்று கவிதை எழுதிய ஶ்ரீஅரவிந்தர் வலிமையான புலிகள் அருகிவிட்டனவே பலகீனமான மான்கள் பல்கிப் பெருக்கியிருக்கின்றனவே என்று கேள்வி எழுப்பினார். அது ஒரு கவியின் பார்வை; மானுட யத்தனமான அற விழைவுக்கு வித்திடுவது. ஜெயமோகனின் பதினேழாவது நாவல் ஆரம்பிக்கும்போதே சறுக்கிவிட்டதே..

மண்ட்டோவின் பிரார்த்தனை
    —-
“அன்புள்ள இறைவனே, இந்த பிரபஞ்சத்தின் ஆசானே,
இரக்கமுள்ளவனே, கருணையுள்ளவனே!
பாவங்களில் மூழ்கிக்கிடக்கும் நாங்கள்
உன் அரியாசனத்தின் முன் மண்டியிட்டு
கடவுள் பற்று கொண்ட குலாம் ஹசன் மண்ட்டோவின்
மகனான, சாதத் ஹசன் மண்ட்டோவை உன்னிடம் அழைத்துக்கொள்ளுமாறு
மன்றாடி வேண்டிக்கொள்கிறோம்

அவனை உன்னோடு அழைத்துக்கொள் இறைவனே!
நறுமணங்களில் இருந்து விலகி தூய்மையற்றதைத் தேடி ஓடுகிறான்
பிரகாசமான சூரிய ஒளியை வெறுத்து குழப்பமான இருண்ட பாதைகளைத்
தேர்ந்தெடுக்கிறான் நிர்வாணத்தையும் அவமானமற்ற உணர்வுகளையும்
கண்டு பிரமித்துபோகும் அவன் நாணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து
அலட்சியப்படுத்துகிறான் இனிமையானதை வெறுத்து
கசப்பான பழத்தை ருசி பார்க்கத்
தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான்
குடும்பப்பெண்களை ஏறெடுத்துப் பார்க்காத அவன்
வேசிகளோடு இருக்கும்போது ஏழாவது சொர்க்கத்தில் இருக்கிறான்
தெளிந்த நீரோட்டத்தின் பக்கம் போகாதவன் சகதியில் நடக்க விரும்புகிறான்
மற்றவர்கள் அழும்போது அவன் சிரிக்கிறான்
மற்ற்வர்கள் சிரிக்கும்போது அவன் அழுகிறான்
பாவங்களால் கருமையாக்கப்பட்டிருக்கும் முகங்களை
அக்கறை கொண்டு கழுவி விட்டு உண்மையான
முகங்களைப் பார்க்க விரும்புகிறான்

உன்னை எப்போதும் நினைத்ததில்லை அவன்
ஆனால் சாத்தானை எப்போதும் பின்தொடர்ந்துகொண்டிருக்கிறான்
முன்பு ஒரு முறை உன் அதிகாரத்திற்கு
கட்டுப்பட மறுத்த அதே தேவதூதன்தான் அவன் “

-சாதத் ஹசன் மண்ட்டோ - தமிழில் ராமாநுஜம்

எஸ்.என். நாகராஜன் பேட்டியை ஆர்வமாக வாசித்தேன். அவரை நான் கோவை ஞானியின் வீட்டில்  சில முறை 1980 களில் சந்தித்திருக்கிறேன். முதல் சந்திப்பிலேயே எடுத்த எடுப்பிலேயே யாரவன் அல்தூசர் எனக்கு மார்க்சிசம் சொல்லிக்கொடுப்பதற்கு என்று பெருங்குரலில் சண்டையிடத் தொடங்கினார், நான் ஞானியின் அழைப்பின் பேரில் அல்தூசர் பற்றி உரையாற்றிவிட்டு வந்திருந்தேன். நாகராஜன் என் உரையைக்  கேட்க வந்திருக்கவில்லை அப்படியென்றால் எதற்காக என்னிடம் சண்டையிடுகிறார்  என் ஆச்சரியமாக இருந்தது. பின்னர் சில கூட்டங்களில் அவர் ஆவேசமாக பேசுவதைக் கேட்டு அவர் பேசும் பாணியே அதுதான் என தெரிந்துகொண்டேன். இண்டியன் சயன்ஸ் காங்கிரஸில் ( எனக்கு சம்பந்தமில்லாதது என் நண்பர்களுடன் கலந்துகொண்டது) நாகராஜன் பேசுவதைக் கேட்டபோது அவர் வேறொருவராக எனக்குத் தென்பட்டார். நம் (ஆழ்வார்கள் உள்ளிட்ட)சிந்தனைகளையும்  மார்க்சீயத்தையும் இணைக்கவேண்டும், அன்பு வழி, சூழலியல் ஆகியன குறித்து அவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக சொல்லி/எழுதி வருவதில் எந்த மாற்றமுமில்லை. அவருடைய அன்பு வழி என்பது மட்டும் ( காலம் இதழுக்கு அவர் கொடுத்த பேட்டியில்  மலையகத் தமிழர்களுக்கு ஏன் ஆயுதம் கொடுக்கப்படவில்லை என்ற அவருடைய கேள்வி உட்பட) எனக்கு என்ன என்று புரிந்ததே இல்லை.

வெகுஜன தமிழ் சினிமா politically correct நிலைப்பாடுகளை கதையாக்கி, காட்சிப்படுத்தி, உணர்ச்சிகரமாக்கி, நாடகீயமாக்கி (இதற்கு பெண்ணுடலை போகப்பொருளாக்குதல், பெண்ணை ஆணுக்கு தாழ்ந்தவளாக சித்தரித்தல் ஆகியன மட்டும் விதிவிலக்கு) கல்லா கட்டுவதில் தேர்ச்சி பெற்றது. சமூகத்தின் அரசியல் நனவிலிக்கு வடிகாலாக அமைந்துவிடுவதும் கூட. படம் பார்க்கையில் பொங்கிவிட்டு வீட்டுக்கு வந்து குப்புறப்படுத்து தூங்கிவிடலாம் பாருங்கள்.


கழுத்து வலி

கடைசியில் மருத்துவர்கள் என் கழுத்து வலிக்கு காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள். "சார், உங்களுக்கு உட்காரவே தெரியவில்லை." "வோ!" "கை வைத்த நாற்காலியில்தான் எப்போதும் உட்கார வேண்டும் ஆனால் முழங்கைகள் நாற்காலியின் கைகளில் அழுந்தக்கூடாது. முதுகுத்தண்டு நேராக இருக்கவேண்டும் ஆனால் நாற்காலியின் முதுகு கழுத்தளவு உயரமாக இருக்கக்கூடாது. முதுகுக்கு தலையணை பயன்படுத்தலாம் ஆனால் தலையணை மிருதுவாக இருக்கக்கூடாது. கால்களை உயரத்தில் வைக்கவேண்டும். மேஜைக்கடியில் சின்ன ஸ்டூல் போட்டுக்கொள்ளலாம். பார்ப்பதற்கு குத்த வைத்து உட்கார்ந்திருப்பது போல இருக்கக்கூடாது. நீண்ட நேரம் எழுதுவது படிப்பது என்றிருந்தால் நாற்காலியிலிருந்து எழுந்து இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை அண்ணாந்து கூரையைப் பார்க்கவேண்டும். வெண்முரசு படிக்கும்போது முகத்தில் ஒரு இறுக்கம் வருமே அதை அப்படியே தாடைகளில் இருத்தி தலையை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் இனிமேல் படிக்க மாட்டேன் படிக்க மாட்டேன் என்று தலையை மன உறுதி ஏற்படும் வரை ஆட்டவேண்டும்." "அவ்வளவுதானா?" "இது பேசிக் பயிற்சி. அடுத்த பயிற்சி அடுத்த வாரம்." சின்னப்பையன்: "அப்பா, அண்ணாவுக்கு ஒரு டவுட்." "என்ன?" "அப்பா உனக்குத்தான் கழுத்தே இல்லியே அப்புறம் எப்படி கழுத்து வலி?"

Sunday, June 17, 2018

சிறுகதைகள், நாவல்கள், வாசகக் குறிப்புகள்

Candaules, King of Lydiaஸெல்மா லாகர்லாவ்வின் ‘மதகுரு'

நேற்று என் நூலகத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தபோது க.நா.சு. மொழிபெயர்த்த ஸெல்மா லாகர்லாவ்வின் 'மதகுரு' நாவல் கையில் கிடைத்தது. கோஸ்டா பெர்லிங் என்ற தலைப்புடைய அந்த நாவலை நான் ஆங்கிலத்திலும் படித்திருக்கிறேன். ஆனால் தமிழில் க.நா.சுவின் மொழிபெயர்ப்பில் வாசிக்கும்போது கிடைக்கும் மன எழுச்சியும் பீறிடும் வாஞ்சையும் ஆங்கிலத்தில் வாசிக்கும்போது கிடைப்பதில்லை. மதகுரு நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை போல தன்னளவிலேயே முழுமையானதாக அமைந்திருக்கும். 1980 களில் எனது நண்பர்களும் நானும் மதகுரு நாவலை ஒரு cult classic ஆகவே பொத்தி பொதிந்து வாசித்தோம். நான் குறைந்தது ஐம்பது முறைகளாவது இந்த நாவலை வாசித்திருப்பேன். ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் சமுத்திரத்தை முதன் முதலாகப் பார்க்கும்போது உண்டாகிற மனவிரிவையும் பிரமிப்பையும் உண்டாக்கக்கூடிய நாவல். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த நாவலின் பாதிப்பு, உணர்வெழுச்சி க.நா.சு.வின் நாவல்களில் இல்லவே இல்லை. 1985-87 ஆண்டுகளில் க.நா.சு மைலாப்பூரில் தெற்குமாட வீதியில் குடியிருந்தபோது அவரை மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்துவிடுவேன். வேறேதோ உலகத்தில் தன்னுடைய எண்ணங்களில் தொலைந்து போனவராய் துப்பறியும் நாவல்கள் முதற்கொண்டு அனைத்தையும் வாசிக்கக்கூடியவராய் அவர் இருந்தார்; 'பொய்த்தேவு' எழுதியவரை நேரடி பழக்கத்தின் மூலம் பார்த்துவிடலாம் ஆனால் கோஸ்டாபெர்லிங்கை மொழிபெயர்த்தவரை கிஞ்சித்தும் காண இயலாது.

ஒட்டகம் போல நடத்தல்
--
இன்று காலை நடக்கப்போகவில்லை என்பதால் நடை பற்றியே எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தோரோ நடை பற்றி எழுதிய நீண்ட கட்டுரை ஞாபகம் வந்தது. தோரோ நாம் ஒட்டகம் போல எண்ணங்களை அசை போட்டபடியே நடக்க வேண்டும் என பரிந்துரைப்பார். பாலைவன வெயில் போல இங்கேயும் கோடை வெயில் நம்மை பஸ்மமாக்குவதால் ஒட்டகம் போல கானலுக்கு ஆத்மாவை பறிகொடுத்த அரைவாசி மூடிய கண்களின் இமைகள் கனக்க, டாலியின் ஒட்டகங்கள் போல கால்கள் நீண்டு நான் நடப்பதாக மனச்சித்திரம் பிரேமை தட்டுகிறது. தோரோ மனிதனை சமூகத்தின் அங்கத்தினராகப் பார்க்காமல் இயற்கையின் பகுதியாக பார்க்கவேண்டுமென்றும் சொல்வார். Give me a wildness whose glance no civilisation can endure, Life consists with wildness, The most alive is the wildest ஆகியவையும் தோரோவின் வாக்கியங்கள் அல்லவா? பாவம் தோரோ தமிழ்நாட்டின் கோடையை அனுபவித்தாரில்லை. இந்த Wild கோடையில் என்னோடு சேர்ந்து அவரும் ஆவியாகியிருப்பார்.

விண்வெளிப் பூனை
--
என்னுடைய பூனைப் புகைப்பட ஆவணக்காப்பகத்தில் ஃபெலிசிட்டாவுக்கு மகத்துவமான தனியிடம் உண்டு. ஃபெலிசிட்டாதான் விண்வெளியில் பயணம் செய்த முதல் பூனை. விண்வெளியில் பயணம் செய்தவர்கள், நிலவில் நடந்து மீண்டவர்கள் அனைவருமே பூமிக்குத் திரும்பியபின் பற்றற்ற ஒருவித ஆன்மிகவாதிகளாகிவிடுகிறார்கள் என்று வாசித்திருக்கிறேன். ஃபெலிசிட்டா என்னுடைய கதையொன்றில் இவ்வாறாகவே ஆன்மிகவாதியாகிவிடுகிறாள். அந்தக் கதையின் கைப்பிரதி தொலைந்துவிட்டது. ஒவ்வொருமுறை அந்தக் கதையை திரும்ப எழுத முயற்சித்தபோதும் புதிதாக ஒரு கதை உண்டானதே அன்றி பழையகதை கிடைக்கவேயில்லை. கதையின் ஒரு வடிவத்தில் ஃபெலிசிட்டா கம்பனைப் போல அலகிலா விளையாட்டுடையவன் யாரவன் என வியக்கிறாள். இன்னொரு கதை வடிவத்தில் மாணிக்கவாசகர் போல ஆதியும் அந்தமும் இல்லா பெருவெளியை சிதம்பரம் கோவிலில் அநாதியாய் சந்திக்கிறாள். தமிழ் எழுத்தாளனின் கற்பனை வெளியின் எல்லைகளைப் பாருங்கள்! ஃபெலிசிட்டா என்னுடைய அத்தனை கதை வடிவங்களிலும் மீண்டும் மியாவ் என கத்தினாளா, பாயைப் பிராண்டினாளா என நினைவில்லை.

தீட்டு
--
போர்ஹெஸின் புகழ்பெற்ற 'மணல் புத்தகம்' (The Book of Sand) சிறுகதையில் விவிலிய விற்பனையாளன் ஓவ்வொரு முறை திறந்தாலும் புதிய, திரும்ப செல்லவே இயலாத பக்கத்தைக் காட்டும் முடிவிலியான மணல் புத்தகத்தை இந்தியாவில் தீண்டத்தகாதவராக ஒதுக்கப்பட்ட ஒருவரிடமிருந்து வாங்கியதாகச் சொல்வான். அவருடைய நிழல் பட்டால்கூட தீட்டு என்று நினைப்பார்கள் என கதையில் சொல்லப்படும். போர்ஹெஸின் கதையில் ஏன் இந்தியாவின் தீண்டத்தகாதவராக ஒதுக்கப்பட்டவர் வரவேண்டும் என்பதற்கு பெரும்பாலும் விளக்கங்கள் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் போர்ஹெஸின் cosmopolitanism, exotic details in his writings என அவை சப்பைக்கட்டுகளாக இருக்கும். சமீபத்தில் மோஷின் ஹமீது (Moshin Hamid) 'மணல் புத்தகத்தில்' தீண்டத்தகாதவர் வருவது எதற்கென்றால் வாசிப்பு என்பதே தீட்டை உண்டாக்கக்கூடியது ( Reading contaminates) முடிவிலி (Infinite) ஒதுக்கப்பட்டவர்களிடமும் கவனிக்காமல் ஒதுக்கிவிட்ட விஷயங்களிலுமே ஜீவிதம் கொள்கிறது என்பதை சுட்டுவதற்குதான் என விளக்கினார். 'மணல் புத்தகத்தை' மீண்டும் வாசிக்க வேண்டும்.

Sredni Vashtar by Saki
-
ஓ ஹென்றி, டோரதி பார்க்கர் போல சிறுகதைகளின் மாஸ்டராகக் கருதப்படுபவர் சகி என்ற புனைபெயரில் எழுதிய ஹெக்டர் ஹுயுக் மன்ரோ (H.H.Munro 1870-1916). தமிழில் சகிக்கு அறிமுகமில்லை என்றே நினைக்கிறேன் (இன்றைக்கு தமிழில் இயங்கும் அதிவேக மொழிபெயர்ப்பு குடிசைத் தொழிலில் யார் கண்டது? - சகிக்கு அறிமுகமும் மொழிபெயர்ப்பு கதைகளும் இருக்கலாம்) சகியின் கதைகள் இருண்மையும் குறும்புத்தனமும் எதிர்ப்புணர்வும் சமூக விமர்சனமும் கலந்தவை. நேற்று என்னுடைய பிரிட்டிஷ் தோழி ஒருவரோடு ஸ்கைப்பில் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் சகியின் ஸ்ரெட்னி வஷ்டார் கதை போல ஒரு சிறுகதையை தமிழில் காண இயலாது என்றார். அவர் தமிழ் சிறுகதைகளை ஆராய்ச்சி செய்து வருகிறார். ஸ்ரெட்னி வஷ்டார் நோய்வாய்பட்ட சிறுவனொருவனைப் பற்றியது. அவன் தன்னுடைய மூத்த உறவினர் ஒருத்தியின் பராமரிப்பில் இருக்கிறான். பெற்றோர்கள் இல்லை. அவன் தன் வீட்டுத் தோட்டத்தில் காட்டு மரநாய் ஒன்றை ரகசியமாக வளர்க்கிறான் அதன் பெயரே ஸ்ரெட்னி வஷ்டார். அவன் தனிமையும் நோயும் அவனை ஸ்ரெட்னி வஷ்டாரை கும்பிடுபவனாகவும் தனக்கென்று ஒரு மதத்தை பின்பற்றுபவனாகவும் மாற்றியிருக்கின்றன. மதங்கள் எப்படி தோன்றுகின்றன, எப்படி தங்களுடைய வழிபாட்டாளர்களை உண்டாக்குகின்றன என்ற கதையாகவும் இதை வாசிக்கலாம். கதையில் மரநாய் சிறுவனின் அத்தையைக் கொன்றுவிடுகிறது. அதை அந்த சிறுவனின் 'பிரார்த்தனை' சாதித்திருக்கக்கூடும். பெரியவர்களின் ஒடுக்குதலுக்கு எதிரான சிறுவர்களின் மௌன, உள் ஒடுங்கிய போராட்டமாகவும் கதையை வாசிக்கலாம். (கதையை படிக்க/கேட்க: https://en.wikisource.org/…/The_Chronicles_o…/Sredni_Vashtar) இந்தக் கதையாடல் (narrative) வடிவம் தமிழில் ஏன் இல்லையென்றால் தமிழின் கதை வடிவம் லட்சியவாதத்தின் பிடிக்கு உட்பட்டது அதை மீறி தமிழில் கதை சொல்பவர்கள் இல்லை என்பது என் தோழி கூற்று. அது உண்மைதானா என்று பார்க்கவேண்டும்.

அலெக்சாண்டர் ஹீமோனின் (Aleksandar Hemon) சிறுகதை தேனீக்கள் பாகம் 1 (Bees part 1)
--
அலெக்சாண்டர் ஹீமோன் போஸ்னியாவில் பிறந்து அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்பவர். கோசிஸ்ன்கி போல அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த பிறகு ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஆங்கிலத்தில் இலக்கியம் படைக்கும் ஐம்பத்தி நான்கு வயது எழுத்தாளர். Nowhere Man (2002), The Lazarus Project (2008) ஆகிய நாவல்களின் ஆசிரியர். ஏ.கே.ராமானுஜன் போல அமெரிக்காவின் ஜீனியஸ் அவார்ட் எனப்படும் மேக்ஆர்தர் ஃபவுண்டேஷன் அவார்டை வாங்கியவர். அமெரிக்காவின் சமகாலத்திய சிறந்த சிறுகதைகள் தொகுப்பிலும் சரி ஐரோப்பாவின் சிறந்த சிறுகதைகள் தொகுதிகள் 2016, 2017 ஆகியனவற்றிலும் சரி அவருடைய சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஏகப்பட்ட பிற பரிசுகளும் அவருக்கு கிடைத்திருக்கின்றன. எதற்கு இவ்வளவு பீடிகை என்றால் எனக்கு அவருடைய Love and Obstacles சிறுகதைத் தொகுப்பு மிகவும் பிடித்தது; ஒரு மின் பதிப்பு வாங்கி வைத்திருக்கிறேன். இன்று என் நண்பர் ஒருவர் எனக்கு அதே சிறுகதைத் தொகுதியை காகிதப் பதிப்பினை வாங்கி அனுப்பியிருந்தார். என்னடா இது ஏற்கனவே இருக்கிற நூலை வாங்கி அனுப்பிவிட்டாரே என்று எனக்குப் பிடித்த கதையான 'தேனீக்கள் பாகம் 1' ஐ வாசித்தால் பல வாக்கியங்கள் வேறு மாதிரியாக இருப்பது போல ஒரு உணர்வு. மின் நூலையும் காகித நூலையும் ஒப்பிட்டால் ஒவ்வொரு கதையிலும் ஏகப்பட்ட வேறுபாடுகள்! ஏகதேசம் அதே கதைகள்தான் என்று கடைசியில் சமாதானம் செய்துகொண்டாலும் மனம் தன்பாட்டுக்கு பொருமுகிறது.

ரொபொர்டோ பொலொனொவின் கிளாரா
--
என் நினைவுகளையும் தோலையும் கிழித்து ஒரு காதல் கதையை எழுதிக்கொண்டிருந்தபோது நியுயார்க்கரில் பிரசுரமாகியிருந்த ரொபொர்டோ பொலொனொவின் கிளாரா சிறுகதையை வாசித்தேன். கதைசொல்லி கிளாராவை தன் பதினேழு வயதில் சந்திக்க அவர்களிடம் உறவு ஏற்படுகிறது. அது காதலா வெறும் உடல் இச்சையாலான உறவா என நமக்குத் தெரிவதில்லை. அவர்கள் பிரிந்துவிடுகிறார்கள். கிளாராவுக்கு பல உறவுகளை கடந்து செல்கிறாள். திருமணங்கள், விவாகரத்துகள் கடந்து ஒரு மண உறவில் நிலை பெறுகிறாள். கதைசொல்லியும் பல உறவுகளைத் தாண்டி போய்கொண்டிருக்கிறான். பல வருடங்களுக்குப் பிறகான இடைவெளிகளில் அவர்கள் சந்தித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். சில சமயம் அவர்களுக்கிடையே உடலுறவும் நடக்கிறது, கிளாராவின் உடலும் தோற்றமும் வெகுவாக மாறியிருக்கிறது. அவளுக்கு மன அழுத்தங்கள் காரண்மாக எலிகள் நடமாடும் கனவுகள் வருகின்றன. அவன் கிளாராவை கடைசியாக சந்திக்கும்போது அவர்களிடையே பேச்சற்ற மௌனமே நிலவுகிறது. கிளாராவுக்கு புற்று நோய் என்று அவன் அறிகிறான். அவளுடைய கணவனோடும் அவர்களின் குழந்தையோடும் கூட அவன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கிறான். கிளாரா அதன் பிறகு காணாமல் போகிறாள். கதைசொல்லியின் கனவில் வரும் கிளாராவுக்கு வேறொரு உடலும் முகமும் இருக்கின்றன. கிளாரா இறந்திருப்பாள் என பூடகமாகச் சொல்லப்படுகிறது. கிலாராவின் கணவனோடு தொலைபேசியில் பேசும்போது கதைசொல்லிக்கு அவன் தன்னுடைய நட்பை வேண்டுகிறான் எனத் தோன்றுகிறது. இளமையெனும் தெய்வீக செல்வம் வற்றிவிட்டதையும் அதைத்தாண்டி உறவுகள் நிலைப்பதையும் சொல்லும் கதை கிளாரா. கதையில் அதீத வர்ணனைகள் இல்லை வாக்கியங்களில் உபமான உபமேயங்கள் இல்லை. செக்ஸ் காட்சிகள் இல்லை. குறிப்பாக பாலகுமாரன்தனமான நெகிழ்ச்சிகள் இல்லை. ஆனால் கதை அபூர்வ கவித்துவத்தை வெளிப்படுத்துகிறது. நான் என் கதையின் ஏழாவது வடிவத்தை நேற்று எழுதினேன். அதில் அந்த தெய்வீக செல்வம் இன்னும் வற்றவில்லை. அதனால் ஏழு வடிவங்களையும் ஒரே கதைக்குள் வைத்துக்கொள்ளலாமென்றிருக்கிறேன்.

டொனால்ட் பார்த்தல்மேயின் (Donald Barthelme) இந்திய எழுச்சி (Indian Uprising) சிறுகதை
--
நேற்று இந்து நாளேட்டில் ஷிவ் விஸ்வநாதனின் Thoothukudi Fables கட்டுரையை படித்தபோது பார்த்தல்மேயின், 'இந்திய எழுச்சி' சிறுகதை ஞாபகம் வந்தது. நான் எழுத வந்த புதிதில் எனக்கு ஆதர்சமாக வரித்துக்கொண்டது பார்த்தல்மேயின் சிறுகதைகளையே. பார்த்தமல்மேயின் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவம் கொண்டவை; புனைவின் சாத்தியங்களை விசாலப்படுத்தியவை. அவற்றுள் இந்திய எழுச்சி சிறுகதை அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் போராட்ட எழுச்சியைப் பற்றியது. கதை துண்டு துண்டாக பல்வேறு காட்சிகளையும் பல்வேறு பார்வைகளையும் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய அதிகாரியின் மனஓட்டங்களின் வழி சொல்லப்படுகிறது. அவனுக்கும் முன்னாள் காதலிகள் இருக்கின்றனர். ஒருத்தி பெயர் சில்வியா. அவளிடமும் அடையாளமற்ற 'நீ' என்று இன்னொருவரிடமும் அவன் ஏதோ ஒரு அங்கீகாரம் தேடி விக்கி விக்கி கதை சொல்கிறான். கதை வெளியான போது அமெரிக்கர்களின் வியட்நாம் யுத்த அட்டூழியங்களைப் பற்றிய குற்ற உணர்வு கதையாக வாசிக்கப்பட்டது. ஒருவகையில் யுத்தகொடுமைகளுக்கு அத்தனை அமெரிக்கர்களையும் அந்தக் கதை பொறுப்பாக்கியது. யாரோ முகம் தெரியாத நீயிடம் மன்றாடுவதாக மன்னிப்பு கிடைக்காமல் கிடந்து தெவங்குவதாக சிதறுண்ட மனத்தின் வெளிப்பாடாக கதை அறியப்பட்டது. தூத்துக்குடி படுகொலைகளும் பார்த்தல்மேயின் கதையொன்றை வேண்டி நிற்கின்றன.

நபகோவின் பினின் (Pnin)
--
விளாடிமிர் நபகோவின் பினின் நாவலை வாசித்தவர்களை நான் இன்னும் சந்தித்திருக்கவில்லை. லோலிதாவின் ஹும்பர்ஸ் ஹும்பர்ஸிடமிருந்து எவ்வளவு வித்தயாசமானவர் பினின்! தன்னுடைய கதாநாயக பாத்திரங்களுக்கு வி, விக்டர், விளாடிமிர் என்றெல்லாம் பெயர் வைத்து கதாநாயகன்கள் நபகோவின் நீட்சிதானோ என எண்ணவைக்கும் நபகோவ் உண்மையில் பினின் கதாபாத்திரத்தோடுதான் அடையாளம் காணப்பட்டார் என பல விம்ர்சகர்கள் எழுதுகிறார்கள். லோலிதாவின் ஹும்பர்ஸிடம் காணப்படுகிற சுயமோகமும் diabolical intelligence-ம் பினினிடத்தில் சுத்தமாக இல்லை. ஹும்பர்ஸின் கதைசொல்லலை ஒரு வகையான seduction எனலாம்; அது அவனுடைய குற்றச்செயலுக்கு வாசககர்களை சாதக சாட்சிகளாக recruit செய்வது. ஆனால் பினினிடத்தில் அப்பாவித்தன்மையும் வேடிக்கையும் மிளிர்கின்றன. ஒரு புலம்பெயர்ந்த ரஷ்யனாக அமெரிக்காவில் ஆங்கிலத்தோடும் அமெரிக்க வாழ்வோடும் தன்னுடைய புஷ்கினின் கவிதைகளால் நிரம்பியிருக்கும் பாரம்பரியத்தோடும் தடுமாறும் கதாபாத்திரம் பினின். பினினுக்கு அமெரிக்கா கைவசமாவதில்லை. ஹும்பர்ஸோ அமெரிக்காவின் உள்ளார்ந்த இதயத்தை உற்று நோக்கி அதன் துடிப்புகளுக்கு ஏற்ப கதை சொன்னவன். பினின் அமெரிக்காவில் கால் தடுக்கி கீழே விழுபவன். இப்படி வேறுபட்ட கதாபாத்திரங்களை உருவாக்க முடிந்ததும் நபகோவின் சாதனை.

நாடின் கோர்டிமெரின்  (Nadine Gordimer) சிறுகதை நகரத்து காதலர்கள் (City Lovers)
--
மொழிக்குள் அடங்காத உடல்களின் இச்சைகளையும் அவற்றின் கூடல்களையும் தன் கதையாடல்களின் வழி சொன்னவர் நாடின் கோர்டிமெர் என்றொரு எண்ணம் எனக்கு உண்டு. அதற்கு ஒரு நல்ல உதாரணம் கோர்டிமெரின் நகரத்து காதலர்கள் கதை. தென்னாப்பிரிக்காவில் நிறவெறி உச்சத்தில் இருந்தபோது, வெள்ளையர்களுக்கும் கறுப்பினத்தவருக்கும் இடையேயான உறவுகள் சட்டவிரோதமாக இருந்த காலத்தில் கறுப்பின பெண்ணுக்கும் வெள்ளையன் ஒருவனுக்கும் இடையேயுள்ள உறவை இந்தக் கதை சித்தரிக்கிறது. அவர்களுக்கு இடையிலான உரையாடல்களில் அவர்களுடைய உலகம் முற்றிலும் வேறுபட்டதாக இருப்பது தெரிகிறது. ஆனால் உடலிச்சையோடு வெவ்வேறு எதிர்பார்ப்புகளோடு அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். ஒரு நாள் அவனுடைய வீட்டில் போலீஸ் நுழைந்து இருவரையும் பிடித்து (அவள் அவனுடைய பீரோவில் ஒளிந்துகொண்டிருக்கிறாள்) விசாரணைக்கு அழைத்து செல்கிறது. போலீஸ் அதிகாரிகள் அவளை பரிசோதிக்கும் டாக்டர் எல்லோரும் அவர்களை கௌரவமாகவே நடத்துகிறார்கள். கோர்ட்டில் அவர்களுக்கிடையே உடலுறவு நடந்தது என்பதை நிரூபிக்க முடியாததால் வழக்கு தள்ளுபடியாகிவிடுகிறது. அவளுடைய தாய் மறுநாள் செய்தித்தாள்களில் வெள்ளையர் வீடுகளுக்கு கறுப்பின பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடது என பேட்டி அளிப்பதோடு கதை முடிகிறது. கோர்டிமெரின் சித்தரிப்புகளின் உடலுறவு இருக்கிறது ஆனால் காமத்தின் தெறிப்பு இல்லை. வெவ்வேறு உலகங்களுக்குள் சிக்குண்டிருக்கும் உடல்கள் இச்சைகளினால் இணைகின்றன என்ற  கோர்டிமரின் கதைசொல்லல் அபூர்வமானது.

காவபட்டாவின் Beauty and Sadness
--
போன வருடம் ஜப்பான், ஓசாகாவுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்புவதற்காக ஒசாகா விமானநிலையத்திற்கு ரயிலைப் பிடிக்க வேண்டும். தவறுதலாக நானும் இன்னொரு பேராசிரியரும் நேர் எதிர் திசையில் கியோட்டோ நகரத்திற்கு செல்லும் ரயிலில் ஏறிவிட்டோம். ஓடியாடி விசாரித்து அதே ரயிலில் கியோட்டோவிலிருந்து ஒசாகா விமானநிலையத்திற்கு திரும்பி போய்விடலாம் என அறிந்து ஆசுவாசமடைந்தோம். அந்த களேபரத்திலும் எனக்கு காவபாட்டாவின் Beauty and Sadness நாவலில் முதல் அத்தியாயம் நினைவுக்கு வந்தது. நாவலில் கதாநாயகன் ஓகி டிசம்பர் 29 தேதி கியோட்டோ நகருக்கு முதல் அத்தியாயத்தில் சென்று கொண்டிருப்பான். அங்கே புது வருட நாளின் போது கியோட்டோவில் ஒலிக்கும் மணியோசையைக் கேட்பதற்காகப் போய்க்கொண்டிருப்பான். கியோட்டோவில் அவனுடைய பழைய காதலி ஓவியர் இருக்கிறாள் அவளோடு சேர்ந்து அந்த மணியோசையைக் கேட்கவேண்டுமென்பது அவனுடைய அவா. சிறு சிறு வாக்கியங்கள்; அடங்கிய தொனி; அதில் உணர்ச்சி பிழம்பாய் பொங்கும் கதை. காவபட்டாவின் House of Sleeping Beauties, One Thousand Cranes, Snow Country ஆகியவற்றைவிட  Beauty and Sadness எனக்கு மிகவும் பிடித்த நாவல். உண்மையில் லாசராவை பற்றிய பிரேமையிலிருந்து என்னை விடுவித்து வேறுவகையான அமைதியாக கதை சொல்லும் முறையை எனக்கு கற்றுக்கொடுத்த நாவல். ஓசாகாவில் நான் கலந்துகொண்ட கருத்தரங்கு நடைபெற்ற மியூசியத்திற்கு வெகு அருகாமையில்தான் யாசுனேரி காவபட்டா மியூசியம் இருந்தது. 2002 இல் ஜப்பான் சென்றபோது காவபட்டா மியூசியத்திற்கு புனித யாத்திரை செல்வது போல சென்று பார்த்தேன். போன வருடம் காவபாட்டா மியூசியத்திற்கு செல்ல இயலவில்லை. அந்த வருத்தமே Beauty and Sadness நாவலை மீண்டும் மீண்டும் அசைபோட வைக்கிறது. காவபட்டாவின் நாவலைப் பற்றியும் அவருடைய நோபல் பரிசு ஏற்புரை -Moon and Snow in Japanese Literature பற்றியும் முன்பே எழுதியிருக்கிறேன். அழகும் துக்கமும்.

மிலன் குந்தேராவின் (Milan Kundera) சிறுகதை The Hitchhiking Game
--
ஆண்- பெண் காதலுறவுகளை அதிகார மேலாண்மைக்கான போராட்டமாகவும் நாட்டு வரலாறு, அரசியல் சித்தாத்தங்கள் ஆகியன இடையீடு செய்யும் வெளியாகவும் சித்தரித்து எழுதியதில் மிலன் குந்தேராவுக்கு நிகர் மிலன் குந்தேராதான். அவருடைய நாவல்களில் குறிப்பாக The Joke, Unbearable Lightness of Being ஆகிய நாவல்களில் உள்ளார்ந்து இருக்கும் ஆண்-பெண் அதிகாரமேலாண்மைக்கான போராட்டம் வெளிப்படையாக சொல்லப்படுவது The Hitchhiking Game சிறுகதையில்தான். பாலின்ப வெளியில்தான் நாம் மற்றமையை ( the Other) வேறு எந்த செயலையும் விட முற்றிலுமாக புதிதாகக் கண்டுபிடிக்கிறோம் என்பதையும் சொல்கிற கதை. Laughable Loves என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள இந்தக் கதையைப் பற்றி குந்தேரா கூறுகையில் தன்னுடைய அத்தனை படைப்புகளுக்குமே Hitchhiking Game என பெயர் வைத்திருக்கலாம் என்றார். கதையில் ஒரு இளைஞனும் அவனுடைய கேர்ல் ஃப்ரெண்டும் காரில் விடுமுறைக்காக செல்கிறார்கள். அவர்கள் பொழுதுபோவதற்காக role playing விளையாட்டு ஒன்றை ஆரம்பிக்கிறார்கள். அவன் நெடுஞ்சாலையில் காரோட்டி செல்லும் இளைஞன் அவள் சாலையில் வழிமறித்து அவன் காரில் பயணம் செய்யும் விபச்சாரி. விளையாட்டு தீவிரமடையும்போதெல்லாம் இளைஞனுக்கு அவள் எப்படி இப்படி தத்ரூபமாக நடிக்கிறாள் என்ற அச்சம் ஏற்படுகிறது. அவள் விளையாட்டிலிருந்து விலக நினைக்கும்போது அவன் விடுவதில்லை அவன் விரும்பும்போது அவள் விளையாட்டிலிருந்து வெளிவருவதாயில்லை. கடைசியில் விளையாட்டு அவர்களுக்கிடையே வன்முறையிலும் அழுகையிலும் முடிகிறது. குந்தேரா இந்தக் கதைக்கருவைப் பற்றி ஒரு முறை, "They reflect the small number of themes that obsess me, define me, and, unfortunately restrict me. Beyond these themes, I have nothing else to say or write" என்று கூறினார். ஒருவேளை நமக்கான பாத்திரங்களை நடிப்பதுதான் உறவோ?

ஹருகி முராகமியின் The Wind-Up Bird Chronicle
--
முராகமியின் படைப்புகள் பல தமிழில் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன; அவற்றில் Nowegeian Woodஐ தமிழில் இன்னும் படிக்கவில்லை. Kafka on the Shore ஐயும் IQ84ஐயும் யாரேனும் மொழிபெயர்த்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.  முராகமியின் சிறுகதைத்தொகுப்புகளுள் எனக்கு மிகவும் பிடித்த Men Without Women ஐ யாரும் ஏற்கனவே மொழிபெயர்த்துவிட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை. முராகமியின் The Wind-Up Bird Chronicle அவருடைய படைப்புகளிலேயே ஆகச் சிறந்தது என்பது என் எண்ணம். லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் (மார்க்வெஸ் variety) அதீத கற்பனை இல்லாமலேயே கனவு, பிரேமை, யதார்த்தம் ஆகியவற்றிகான இடைவெளிகளை முராகமியால் அழித்துவிட முடிகிறது. The Wind-Up Bird Chronicle நாவலின் கதாநாயகன் டோரு ஒகாடா என்னென்ன உலகுகளை horror of daily life வழியாகவே கடந்து செல்கிறான் என்று வியந்து வியந்தே அவனோடு எனக்கு அடையாள ஒன்றுதல் ஏற்பட்டுவிட்டது. நாவலில் வரும் போர் நினைவுகளின் சித்தரிப்புகளில் ஒருவனை முழுமையாக தோலுரிப்பது விவரிக்கப்படும். அதைப்படித்து எனக்கு ஏற்பட்ட ஒவ்வாமையில் பல முறை இந்த நாவலைக் கைவிட்டேன். பிறகு அந்த அத்தியாய்த்தை ஒதுக்கிவிட்டு பிறவற்றைப் படித்து முடிதேன். The Wind-Up Bird Chronicle ஐ பல விமர்சகர்களும் அதிகாரத்துக்கும் ஆசைக்கும் எதிரான நாவலாக வாசித்திருக்கிறார்கள். நாடகமாக நடிக்கப்பட்ட இந்நாவலின் சிடி போன வருடம் கிடைத்தது; அவ்வளவாக சோபிக்கவில்லை. கனவும் பிரேமையும் யதார்த்தமும் வித்தியாசங்களின்றி அழிந்த உலகு என்னுடையது எனக்கானது. டோரு ஒகாடா தன் பக்கத்து சந்தில் தொலைந்து போன பூனைக்குட்டியைத் தேடுவது போல நானும் அவ்வபோது இணையத்தில் பூனைக்குட்டிகளின் புகைப்படங்களைத் தேடுவேன்.


மரியோ வர்காஸ் லோசாவின் (Mario Vargas Llosa) In Praise of Stepmother இல் வரும் கதை  Candaules, King of Lydia 
-
மரியோ வர்காஸ் லோசாவின் தன் முதல் கதை வெளியானபோதிலிருந்து தான் எதிர்கொள்ளும் கேள்வி தன் கதைகள் பேசும் 'உண்மை' என்ன என்பது என ஒரு பேட்டியில் கூறினார். லோசாவின் நாவல் In Praise of Stepmotherஇல் பாலியல், உண்மை, புனைவு ஆகியனவற்றுக்கிடையான உறவு வேறுவிதமாக அணுகப்படுகிறது. நாவலில் சிற்றன்னையான டோனா லூக்ரிஷியாவும் அவள் கணவன் டான் ரிகோபெர்டோவும் பாலியல் ஓவியங்களைப் பற்றி பேசுவதை தங்கள் படுக்கையறைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காண்டௌலெஸ், லிடியாவின் அரசன் என்ற ஓவியத்தை பற்றி பேசும் அத்தியாயத்தை தனி சிறுகதையாகவும் வாசிக்கலாம். காண்டௌலெசுக்கு தன் அரசியின் அழகை பற்றி அதீத பெருமை. அவள் அழகை யாருடனாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை அவனுக்கு ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. அவன் தன் பிரதம மந்திரியான கைகஸை தன் படுக்கையறைக்குள் ஒளிய வைத்து தன் அரசியை நிர்வாணமாகப் பார்க்க வைக்கிறான். இதை அறிந்து பெருங்கோபம் கொள்ளும் அரசி ஒன்று தன்னை நிர்வாணமாகப் பார்த்த கைகஸ் தன் நாட்டின் சட்டப்படி கொல்லப்படவேண்டும் அல்லது அவன் அரசனைக் கொல்லவேண்டும் என்று சொல்கிறாள். கைகஸ் அரசைக்கொன்றுவிட்டு தான் அரசனாகிறான். யாக்கப் யோர்டன்ஸ் வரைந்த ஓவியத்தில் கைகஸ் ஒளிந்திருந்து பார்ப்பது மட்டும் சித்தரிக்கப்படுகிறது. லோசாவின் நாவலில் வரும் கதையில் கைகஸ் அரசனைக் கொல்வதெல்லாம் இல்லை. லோசா ஓவியத்தை கணவனுக்கும் மனைவிக்குமான பாலியல் discourseஐ தூண்டும், அதிகப்படுத்தும் உபகரணமாக பயன்படுத்திக்கொள்கிறார். கதை வழக்காறாக புழங்கி வந்த லிடியாவின் (இன்றைய துருக்கி) அரசனைப்பற்றிய கதையிலிருந்து வழுவி வெறொரு புனைவின் உண்மையைத் தொட்டு தொட்டுச் செல்கிறது. புனைவிலும் பாலியலிலும் உண்மை என்னவாக இருப்பினும் அது எப்படியாகவேனும் பேசப்பட்டுவிடும். 

Thursday, January 4, 2018

ஈர்ப்பின் பெருமலரிலிருந்து சில இதழ்கள் - எஸ்.சண்முகத்தின் கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரை

போதிவனம் வெளியீடு ரூபாய்:120/-
அகமது வணிக வளாகம் தரைதளம் 
12/293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை
சென்னை - 60014 கைபேசி 98414050437
   மின்னஞ்சல் kskarunaprasad@gmail.com
-->


ஈர்ப்பின் பெருமலரிலிருந்து சில இதழ்கள்


தொடர்ந்து பலவருடங்களாக உரையாடலில் இருக்கும் நெருங்கிய நண்பரான சண்முகத்தின் கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.  இருந்தாலும், கவிதைகளைப் பற்றி எனக்கு இருக்கும் கருத்துகளுக்கும்  சண்முகத்தின் கவிதைகள் குறித்த அண்மைக்கால கட்டுரைகளில் வெளிப்படும்  ஆய்வு கருத்துக்களும் பாரதூரமானவை என்பதை நான் முதலில் குறிப்பிடவேண்டும். என்னுடைய கவிதைகள் குறித்த அணுகுமுறை கவிதை வாசிப்பின் பாதிப்பு (affective dimension of poetry) என்ன விதமான உலகப்பார்வையை நம்மிடத்தில் ஏற்படுத்துகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது. கவிதாமொழியின் இயங்கு தளங்கள் வாசிப்பின்,எனவே நனவு நிலையின்  உடனடி பாதிப்பின் எல்லைகளுக்கு உட்பட்டவை என நான் கருதும்போது சண்முகம் அதன் ஆழ்பிரதி அர்த்தங்களை அகழ்ந்தெடுத்து  அவற்றைக் கனவின் எனவே நனவிலியின் செயல்பாடுகளாக முன்வைக்கிறார். நான் மேற்புறங்களே, நனவே பல ரகசியங்களைக் கொண்டிருக்கக்கூடியது அதன் மேல் நனவிலி என்றொரு மேலும் ஒரு பூடகத்தை, மர்மத்தைத் திணிக்க வேண்டியதில்லை, கவிதையை மொழியின் ஊடாட்டமாக (semiosis) கூர்ந்து வாசித்து சொன்னாலே மொழியின் இயங்குதளங்கள் கவிதையின் ஆசிரியைகளுக்கும் வாசகிகளுக்கும் வசப்பட்டுவிடும் என்றே நான் எண்ணத்தலைப்படுகிறேன். சண்முகத்தின் திறனாய்வு பாணிக்கும் என்னுடைய அணுகுமுறைக்கும் உள்ள இந்த வித்தியாசத்தை கவனப்படுத்துவது கவிதை வாசிப்பு குறித்த உரையாடல்களை வளப்படுத்தக்கூடும் என்பது மட்டுமல்ல; சண்முகத்தின் கவிதைகளை நமக்கு மேலும் அணுக்கமாக மாற்றவும் கூடும்.ஏனெனில் சண்முகத்தின் கவிதைகள் சுலப வாசிப்பிற்கு உரியவை அல்ல; ஃபேஸ்புக்கில் சண்முகம் தொடர்ந்து தினசரி இந்த தொகுப்பிலுள்ள கவிதைகளை பதிவிட்டு வந்தபோது பலரும் அந்த கவிதைகளின் சொற்சேர்க்கைகளுக்காகவும், அழகிய வரிகளுக்காகவும் பெரிதும் சிலாகிப்பதையும் கவனித்து வந்தேன். ஆனால் முழுக்கவிதைகளும் உருவாக்கும் பாதிப்பை யாரும் கவனப்படுத்தவில்லை என்பதையும் நான் கவனித்தேன். அது ஃபேஸ்புக் என்ற தளத்தின் எல்லையெனக் கொண்டால் கூட முன்னுரையாளனின் பணி அந்தப் பார்வையை விசாலப்படுத்த வேண்டியதாகிறது.சண்முகத்தின் சொற்களஞ்சியம் சங்க இலக்கியம் முதற்கொண்டு பக்தி இலக்கியம், தமிழ் உரைகள் என பரந்துபட்ட செழுமையான மரபுகளுக்கு கடன்பட்டது என்பதை அவருடைய மொழியாக்கக் கவிதைகள் ‘துயிலின் இரு நிலங்கள்’ என்ற கனத்த தொகுப்பாக 2016 இல் வெளிவந்தபோதே நானும் பிற விமர்சகர்களும் கணித்தோம். ‘ஈர்ப்பின் பெருமலர்’ தொகுதியை வாசிக்கும்போதும் நம் கவனத்தை முதலில் வசீகரிப்பது சண்முகத்தின் செழுமையான சொற்களஞ்சியம்; பேச்சு தமிழில் அதிகமும் இல்லாத சொற்கள், ‘மெய்குவியும் பகிர்வின் ஆழம்’, ‘இவ்வறிதலின் கணமே என் உயிர்ப்புலமாய் மலர்கிறது’, ‘விழியின் மறு விழி ஆழி’ போன்ற மின்னல் வரிகளுக்கிடையே பொதிந்து வைக்கப்பட்டு ஜாலம் காட்டுகின்றன. தன் சொற்களஞ்சியத்தின் விரிவாக்கத்திற்கும் தனது உணர் கொம்புகளின் கூர்மைப்படுத்துதலுக்கும்  சண்முகம் தன் மொழியாக்கப் பணியினை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ‘ஈர்ப்பின் பெருமலரில்’ இருக்கும் கவிதைகளின் உணர்வு (sensibility)  ‘துயிலின் இரு நிலங்கள்’ மொழியாக்கத் தொகுதியில் இருக்கும் பெரும்பான்மையான கவிதைகளின் உணர்வினைப் போன்றே நவீனத்துவ கவிதைகளின் உணர்வு நிலை சார்ந்தது அல்ல; இந்தக் கவிதைகளின் உணர்வு பிரிவு, கூடல், ஆற்றாமை, தவிப்பு, ஏங்குதல், கூடுதலில் முழுமையின்மை, முழுமையில் அடையப்பெறும் விகாசம் என காதலின் பல உணர்ச்சி நிலைகளை கவிதையின் பாடுபொருளாகக் கொண்டு அவற்றை மறைபொருள் கொண்ட அருள் கவிதைகளாக மாற்றும் மாயம் கொண்டவை. எனவே இந்தக் கவிதைகளை மெய்யியல் கவிதைகள்  (metaphysical poetry) என வகைப்படுத்தலாம்.

            
 மெய்யியல் கவிதைகள் இருப்பு, நேரம், இடம் ஆகியவற்றை  அருவமாக புலன், காலம், வெளி என உருமாற்றி அவற்றில் நான் நீ என்ற இரு கதாபாத்திரங்களை நாடகீயமாக உலவவிட்டு அவற்றின்  இணைவினைப் பற்றிப் பேசும். மெய்யியல் கவிதைகள் இறையுணர்வு அல்லது பக்தி கவிதைகளாக இருக்கும்போது நீ என்ற மற்றமை இறைவனாக அடையாளப்படுத்தப்படும். சண்முகத்தின் கவிதைகளிலோ நீ என்பது இறைவன் என அடையாளப்படுத்தப்படுவதில்லை; இது நாம் ஏற்கனவே வாசித்தறிந்த மெய்யியல் கவிதைகளுக்கும் சண்முகத்தின் கவிதைகளுக்கும் உள்ள பெரிய முக்கியமான வித்தியாசம். சண்முகத்தின் கவிதைகளில் நான் -நீ என்ற கதாபாத்திரங்களும் அவர்களின் உணர்வு நிலைகளும்  இயற்கையின்  சிறு துளிகளாகவும் அவற்றின் பிரும்மாண்ட விகசிப்பாகவும் தொடர்ந்து சுட்டப்படுகின்றன. இந்த நீ- நான் சண்முகத்தின் கவிதைகளில் இயங்கும் செயல்முறைகளை கவனிப்பது அவருடைய கவிதைகளின் அணுக்க வாசிப்பிற்கு துணை செய்யக்கூடும். உதாரணமாக பின் வரும் கவிதையினை வாசிக்கலாம்;என்முகத்தினுள் சுழன்றாடிக் கொண்டிருக்கிறது ஒரு உருவம்
சுவாச கதியினில் சுருங்கியும் விரிந்தும் வெருட்டுகிறது முன்னும் பின்னும் நகர்ந்து மனதின் மீது படிய மறுக்கிறது 
நெருக்கமாய் செதில்கள் அமைந்திருக்கின்றன நொடியினில் நீர்பெருகி நிறைக்கிறது முகவெளியை.

நகர்தலுக்கும் அசைதலுக்கும் இடையில் ஏதோவொன்றை நிகழ்த்துகின்றது
விழுங்கி வெளியேற்றும் சிறுவாயினில் சுவாசக்குமிழ்கள் உடைகின்றன - விடுபட்டு மிதந்தபடி மேலேறும் முடிவிலியான நீர்-உருக்கள் தம்வசம் 
ஏந்திச்செல்லும் ஞாபகங்களில் நீரும்-சுவாசமும் வியாபித்திருக்கின்றன,

முகப்புறத்தே யார் நிற்பதென அறியா புகைந்த தோற்றம்
முகத்து-உட்புறத்தே அசையாதிருக்கின்றது அவ்வுருவம் மெல்ல காற்றினில் புகையென அடர்கிறது
என் உணர்வுகளின் - பிரதிபிம்பங்கள் அதன்மீது ஊர்ந்து படிகின்றன.

எத்தனை விதமாய் சேர்த்து -பிரிக்கும் போக்கில் 
என் முகத்தை பெருக்கியபடி அழிக்கிறது 
முந்தைய முகத்தை 
ஆயினும் அழிந்ததில் எஞ்சியவைகளில் யாவிலும் அச்சாக பொருந்தியிருக்கிறது இந்நாளின் - என்பின்னாளின் முகமும்.

ஒருநிறமாலையின் பின்னலென இறுகி மேலெழுகிறது
என் ஞாபகங்களின் திரிகள் 
அவற்றில் தொடுக்கப்பட்டுள்ளன நான் நினைவழித்த வாழ்வடிங்கள் என்னைக் குறிவைத்து வேகமடைகின்றன.

ஆரத்தழுவிட விழையும் அதன் அகவுணர்வினை 
அரூப-சமிக்ஞைகளாக பரிமாறுகின்றன 
வான்விழுங்கும் விழிகளும் விரிகடலை மார்பினுள் 
அடக்கும் அவாவினது பரந்த -கரங்களும் சங்கமிக்க
அழைக்கின்றன.

என்னிலும் உன்னிலும் தொலையப்போகும் சங்கமத்தின்
நெருக்கத்தினை நீ முன்னுணர்ந்துள்ளாய் என 
என் மனம் அறிந்துள்ளது இவ்வறிதலின் கணமே 
என் உயிர்புலமாய் மலர்கிறது அதன் இதழ்களாய் நாம்.”என் முகத்தினுள் சுழன்றாடிக்கொண்டிருக்கிறது ஒர் உருவம் ‘ என ஒரு காட்சி  சித்திரத்தை விவரிக்க ஆரம்பிக்கும் இந்தக் கவிதை அதை சீக்கிரமே மனதில் படிய மறுக்கிற முடிவிலிகளான நீர் உருக்களாகவும் முகவெளியில் அசைதலுக்கும் நகர்தலுக்கும் இடையிலான ஏதோவொன்றை நிகழ்த்தும் புகைந்த தோற்றமாகவும் பூடகப்படுத்துகிறது. அதை ஒரு அழிவு வெளியாகக் கொள்ளலாம். அந்த அழிவில் எஞ்சியவைகள் அனைத்திலும் அச்சாகப் பொருந்தியிருக்கிறது கவிதை சொல்லியின் முகம். அதிலிருந்து விடுபடுவதற்கான வேட்கை மற்றவையில் சங்கமிக்கும் முன்னுணர்விலிருந்து தோன்றுவதாக  கவிதை கூறுகிறது. இந்த மற்றமை (நீ) எப்படிப்பட்டது? ‘வான் விழுங்கும் விழிகளும் விரிகடலை மார்பினுள் அடக்கும் அவாவினது பரந்த கரங்களும் கொண்டது. இந்த சங்கமிப்பு உண்மையில் நிகழவில்லை; ஆனால் அந்த சங்கமத்திற்கான முன் அறிதலே, அந்த அறிதலின் கணமே உயிர்ப்புலமாக கவிதை சொல்லியின் நானுக்கு மட்டும் பரிணமிக்கவில்லை; அந்த மற்றமைக்கும்  சேர்ந்து மலர்வதால் ‘ அதன் இதழ்களாய் நாம் ‘ என்று கவிதை முடிகிறது. அதாவது இந்தக் கவிதையின் மெய்யியல் நாம் அனைவரும் ஒரு அகண்ட பிரம்மாண்டத்தினால் அரவணைக்கப்படுவோம் என்பதை உணர்ந்த கணத்திலேயே நம் உயிர்த்தலம் மலரும் கூடவே அதன் இதழாய் பிரம்மாண்டமும் மலரும் என்பதாக இருக்கிறது.இந்த மெய்யியல் - தான் பிரம்மாண்டத்தில் கலப்போம் என்ற முன்ணுணர்வுக்கே (intuition), தன்னையும் பிரம்மாண்டத்தையும் சேர்த்து விடுதலை பெறச் செய்யும் சக்தி இருக்கிறது என்பதான-  ஒரு அபாரமான ஆழமான அபூர்வமான நம்பிக்கையிலிருந்து உருவாவதாகும். கடவுளின் இறப்புக்குக்கு பிறகான அவநம்பிக்கையின் நவீனத்துவத்துள் ஊறிய என்னுடைய மனதிற்கு சண்முகம் கவிதைகளில் மேற்சொன்னவாறு வெளிப்படும் நம்பிக்கை  மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் அத்தனை லட்சியத்திற்கான கனவுகள் அனைத்தும் தோற்றுவிட்ட பின்பும் கூட சண்முகத்திற்கு  எப்படி  நம்பிக்கை (faith) சாத்தியப்படுகிறது? எனக்கு அப்படி ஒரு நம்பிக்கையும் அதனால் உண்டாகிற உறுதிப்பாடும் சித்திப்பதில்லையே என்ற ஏக்கமும் கூடவே உருவாகிறது.சண்முகத்தின் கவிதைகளில் வெளிப்படும் மெய்யியல் நம்பிக்கை புலன் வெளியையும் அது சார் உணர்வுகளையும்  பிரம்மாண்டமாக  விஸ்தரிக்கின்ற புனைவிலிருந்து தர்க்கம் பெறுவதாக கணிக்கிறேன்.  உதாரணமாக , ஆழியியிலிருந்து குமிழ்ந்துதெழுகின்றன விழிகள்’ என்று ஆரம்பிக்கும் கவிதையை வாசியுங்கள். அந்தக் கவிதை, ‘நமக்கு நுரைவடிவம் கரையும், அடிவானின் வர்ணக்கோடும் எதிரெதிர் மெய்ம்மைகள். முது நினைவும் இப்பிரக்ஞையும் ஒரு நொடிப்பொழுதினில் பேராற்றல் விளைவிக்கும், என் விழியின் மறு விழி -ஆழி’ என்று முடிகிறது.  இவ்வாறாக புலனையும் (விழி) அதன் உணர்வையும் ஆழியாக விஸ்தரிப்பதன் மூலம் சண்முகம் தன்னிலையையே விரிவுகொள்ளச் செய்துவிடுகிறார்.  சண்முகத்தின் கவிதைகளில் தொடர்ந்து காணக்கிடைக்கும் நான்- நீ ஊடாட்டமும் அதன் நாடகப் பாங்கும் இன்னொரு புனைவுதான், உண்மையில், தன்னிலையே தன்னளவிலேயே முழுமையானது, ‘பேய்மையும் அகோர வனப்பும் இழையும் முகம், ஒரு கணம் இன்றைய சாயலையும், மறுகணம் நம் வரைதோல் தோற்றங்களையும் வகை மாற்றி ஏமாற்றுகின்றன’. நேற்று இன்று என்ற நேரப்பகுப்புகள், அசிங்கம் அழகு ஆகிய புறத்தோற்றங்கள் ஆகியவை அனைத்தையும் மறுத்து ஒரு வகையான காலாதீதத்தில் (eternity) அதை அடைவதற்கான முதுநினைவில் அதற்கான பிரக்ஞையில் கவிதை ஆசுவாசமடைகிறது. சண்முகத்தின் கவிதைகளில் காணப்படும் பிரக்ஞையின் விழிப்பின் மூலம்  அடிப்படையான மூலகங்களுக்கு திரும்புதலை (return to the primary elements)  சாவிற்கான விருப்பு (death wish) என வகைப்படுத்த இயலாது.ஏனெனில் சண்முகத்தின் கவிதைகளிலுள்ள புலனுணர்வு எதிரிணைகள் - ஒளி- இருள், அசைவு- அசைவின்மை, மௌனம்-பேச்சு முதலியன - ஒரு ஒருங்கிணைந்த பிரபஞ்சத்தையும் (unified universe) லட்சிய வடிவ தன்னிலையையும்  (idealized self) முன்வைக்கின்றன. இதன் தீவிரம் எப்படிப்பட்டதென்றால்  தன்னிலையின் எந்த விழைவும் (desire) தேவைப்படாமலேயே எதிரிணைகளின் சமரச ஒருங்கிணைவும் மற்றமை தன்னிலையை நோக்கி நகர்வதன் மூலமாக கைகூடிவிடுகிறது. ‘விழிகள் கனத்து மூழ்குகின்றன’ என ஆரம்பிக்கும் கவிதையில் ‘எனது துயிலை நீயும் உனது துயிலை நானுமாய் தேடியடைவோம் வா என்று நீ அழைக்கிறாய், எங்கென்று உரைக்கவும் மறுக்கிறாய், இருவருமாய் ஒருமுகமாய் கரம்பற்றுகிறோம்’  என்று தொடர்ந்து ‘தன்னிழப்பின் நொடியில் நிகழ்கிறது யாவும்’ என்று முடிகிறது.சைவ பக்தி கவிதைகளில் அடியாரைத் தேடி தடுத்தாட்கொள்ளும் சிவனின் பெருங்கருணையினை - குறிப்பாக மாணிக்கவாசகரிடத்தே- நாம் வாசித்திருக்கிறோம் அல்லவா அந்த வாசிப்பின் நினைவுகளை தன்னிலையை நோக்கி வரும் இறை- மற்றமையின் (the godly Other) இயக்கத்தை சண்முகத்தின் கவிதையில் வாசிக்கும்போது என்னால் தவிர்க்கமுடியவில்லை. இதற்காக தடுத்தாட்கொள்ளலும் ‘யாவும் தன்னிழப்பின் நொடியில் நிகழும்’ சண்முகத்தின் கவிதா நிகழ்வுகளும் ஒன்று என நான் சொல்வதாக அர்த்தப்படுத்திகொள்ளக்கூடாது. சண்முகம் மொழியின் தானியங்கி நகர்தலுக்கு தன்னை ஒப்புகொடுத்ததன் மூலமும் இவை நிகழ்ந்திருக்கக்கூடும்.  அல்லது திருஅருட் பிரகாச வள்ளலாரின் ஆறாம் திருமுறையின் பாதிப்பு சண்முகத்தின் மெய்யியல் கவிதைகளில் சந்தேகத்திற்கிடமின்றி இருக்கவேண்டும். வள்ளலாரின் பாதிப்பு தனக்கு மிகுதியும் இருப்பதாக சண்முகம் ஒரு தொலைபேசி உரையாடலில் இதை எழுதிக்கொண்டிருக்கும்போது உறுதிப்படுத்தினார்.  இதற்காக வள்ளலார் ஆறாம் திருமுறையில் ‘தற்போத இழப்பு’ என்றொரு பகுதி எழுதியிருப்பதும்  சண்முகத்தின் ‘யாவும் தன்னிழப்பின் நொடியில் நிகழும்’ என்ற வரியும் ஒரேபடித்தானவை எனவும் நான் சொல்வதாக பொருள் கொள்ளக்கூடாது. சண்முகத்தின் கவிதைகள் வள்ளலாரின் மெய்யியல் உலகின் (the metaphysical universe ) சில அம்சங்களை பகிர்ந்துகொள்கின்றன என்றே அர்த்தப்படுத்திகொள்ளவேண்டும். சண்முகத்தின் கவிதை வரிகளை பயன்படுத்தியே இதை விளக்க வேண்டுமென்றால், “தொலைதூரத்து  மரகத ஒளியின் துல்லியம், இப்பிறவியை துளைத்துக்கொண்டிருக்க, வான் பிளந்து நீயே வேற்றுருவில் அழைக்கிறாய். கால்கள் பூமியைத் துறக்கினறன” என்ற வரிகளையே குறிப்பிட வேண்டும்.

சண்முகத்தின் விழைவுதான் என்ன என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. “அபூர்வமாய் நிகழ்ந்ததெல்லாம், நேற்றின் ஞாபகம். இன்றும் அதன் சந்திர சுழற்சியில் பித்தனாய் என்னை நானே அறியேன்!” என்றொரு கவிதை அங்கலாய்க்கிறது. “சிறு சிறு வர்ணத்துளிகளாய் சிதறிக் கிடக்கும் அனந்தத்தை ஒன்றாக்க பூர்ணம் தரித்து வருவாயா?” என்று இன்னொரு கவிதை வரி வினவுகிறது. “இடைவிடாது இரைந்து கொண்டே இருக்கும் இப்பிறவியைத் துறந்து எவ்வண்ணம் மீள்வேன்? “ என்றொரு வரி பரிதவிக்கிறது. “சிறகுகளின் பபடத்த நிழலுரு பதியுமிடம் என்னை விழுங்க, தவிப்பின் ரேகைகள் ஓடும் உள்ளங்கைகளுடன் ஒளியூட்டத்தான் அழைக்கிறேன். நீயோ மாய்வின் நெடிய வீதியின் மறுபுறத்தில் நின்றிருக்கிறாய்” எனப் புலம்புதலும் நடக்கிறது. இவை அனைத்துமே “உனது பேரார்வத்தின் திரைகள் யாவும் நானே  என நவின்று சங்கமிக்கிறாய்” என்ர வரியில் இன்னொரு கவிதையின் வரியில் பூரணமடைவதாகத் தோன்றுகின்றன. இதில் குறிப்பிட்டு சுட்டிக்காட்டவேண்டிய அம்சம் என்னவென்றால் எந்தொரு விழைவுமே பாலியல் இச்சையால் உந்துதல் பெற்றதாக இல்லை. பார்த்தல், கேட்டல் ஆகிய புலனுணர்வுகளின் சித்தரிப்புகளைத் தாண்டியும் சண்முகத்தின் கவிதைகள்  செல்வதில்லை.

மேற்கத்திய நவீனத்துவம் முழுமையாக உருவாகி வந்தவேளையில், ரொமாண்டிசிசத்திலிருந்து நவீன கவிதையை விடுவித்து ஆங்கில மெய்யியல் கவிஞர்களுக்கும் அவர்களது கவிதைகளுக்கும் புத்துயிர்ப்பு அளித்த டி.எஸ்.எலியட் எழுதினார், “I take as metaphysical poetry that in which what is ordinarily apprehensible only by thought is brought within the grasp of feeling, or that in which what is ordinarily only felt is transformed into thought without ceasing to be feeling.”  எலியட் தன்னுடைய கவிதைகளிலும் நாடகங்களிலும் பெரும்பாலும் அவநம்பிக்கையை எழுதினாலும் தன்னுடைய விமர்சனக் கட்டுரைகளில் தொடர்ந்து ஆங்கில மெய்யியல் கவிஞர்களின் படைப்புகளை புதிதாகப் படிக்க வேண்டிய அவசியத்தையும் படிக்கும் முறைகளையும் தொடர்ந்து சுட்டி வந்தார். தமிழ் நவீன கவிதையில் இன்றைக்கு மெய்யியல் கவிதைகளுக்கு இடமே இல்லை என்னும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் சண்முகத்தின் கவிதைகள் உணர்ச்சி சிந்தனையாகவும், சிந்தனை உணர்ச்சியாகவும் மாறும் மெய்யியல் கவிதைகளை சூழலின் போக்குகள் பற்றிய கவலையின்றி தைரியமாக தன்னுடைய பாணியில் எழுதியிருப்பது வரவேற்புக்குரியது. மேலும் தமிழ்க் கவிதையின் நவீனத்துவம் மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு முன்பாகவே தாயுமானவர், திருஅருட்பிரகாசவள்ளலார் ஆகியோரிடத்தே தொடங்கிவிட்டது என்பதையும் சண்முகத்தின் கவிதைகள் நம்மை கவனிக்குமாறு கோருகின்றன.  சண்முகத்தின் கவிதைத் தொகுப்பு காட்டும் வழியில் நாம் தமிழின் மெய்யியல் கவிதைகளை அடையாளப்படுத்தி மறுவாசிப்புக்கு உட்படுத்துவதும் நிகழலாம்.அப்படியே எதுவும் நடக்காமல் போனாலும் சண்முகத்தின் கவிதைகளின் வசீகரத்திற்கும் அவற்றின் மொழி வளத்திற்காகவும் வாசிக்க விரும்புவோர் இருந்துகொண்டே இருப்பார்கள்.