Friday, February 15, 2013

மதுக்கூடத்தில் ஒரு கண்ணாடி | சிறுகதை
மாதவன் அந்தக் கண்ணாடியை மதுக்கூடத்தில் கொண்டு வந்து வைத்த நாளிலிருந்துதான் அங்கே வியாபாரம் செழிக்கத் தொடங்கியது என்பது ஹோட்டலில் ஒரு பரவலான நம்பிக்கை. மாதவன் அந்த ஆளுயரக்கண்ணாடியை பழம்பொருள்கள் அங்காடியிலிருந்து வாங்கிவந்திருந்தான். தேக்கு மர ஃபிரேமுக்கு வார்னீஷ் அடித்தவுடன் அதற்கு ஒரு புதுப் பொலிவு வந்து விட்டது. ஆங்காங்கே ரசம் போய் சிறு சிறு வெள்ளைப்புள்ளிகள் கண்ணாடியெங்கும் விரவியிருந்ததை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நீங்கள் அந்த ஆளுயரக் கண்ணாடியில் உங்களைப்பார்க்கும்போது ரசம் போன புள்ளிகள் வேறொரு கோலத்தினை உங்கள் மேல் வரைந்தன. கோலத்தினை பார்ப்பவர்கள் தங்களைப் பார்க்க இயலுவதில்லை; தங்களைப் பார்ப்பவர்கள் கோலத்தினைப் பார்க்க இயலுவதில்லை. நல்ல நிறை போதையில் கண்ணாடியில் பார்க்கையில் கோலங்கள் அதிக உயிர்ப்புடன் திரள்வதான தோற்றம் பெற்றன. காலடிச்சுவடு, கனவு, கல்தூண், முகமூடி, கடற்கரை என தன் உருவத்தின் மேல் கண்ணாடியால் எழுதப்படும் கோலங்களைப் பலர் பல விதமாகக் கண்டனர். கண்டவர் விண்டிலர்.

தன் மேல் வரையப்படும் கோலங்களை விட தனக்கென்று முகம் இருப்பதே முக்கியமானது என்று மாதவனுக்கு தோன்றும்; மதுக்கூட கண்ணாடியில் இப்போதெல்லாம் அவனால் தன் முகத்தைப் பார்க்கவே முடிவதில்லை. மாதவன் மதுக்கூடத்தில் வேலை செய்ய வேண்டும் என்று எந்தக் கடவுளுக்கும் நேர்ந்துகொண்டிருக்கவில்லை. அவன் கேடரிங் டெக்னாலஜி படித்து முடித்து வேலை தேடியபோது இந்த மூன்று நட்சத்திர ஹோட்டல் அவனை உடனடியாக வேலைக்கு எடுத்துக்கொண்டது. அவனுக்கு கல்லூரியில் சீனியரான மிருதுளா அதே ஹோட்டலில் மேலாளராக இருந்ததால் அவள் சிபாரிசின் பேரில் நல்ல சம்பளமும் கிடைத்தது. மாதவன் குடிப்பதில்லை புகைப்பதில்லை என்பதினால் அவனை மதுக்கூட மேலாளராக்கிவிட்டார்கள். 

பழம்பொருள் அங்காடியில்கண்ணாடி வாங்க மாதவன் சென்றபோது மிருதுளாவும் கூட வந்திருந்தாள்.  மதுக்கூடத்தின் மத்திப் பகுதியில் அசௌகரியமான வெற்றிடம் ஒன்று இருந்தது. அதில் கண்ணாடி வைத்தால் நல்லது என்று மாதவன் யோசனை சொன்னான். நிர்வாகம் ஒத்துக்கொண்டது மட்டுமல்லாமல் பழம்பொருள் மதிப்பு கொண்ட அலங்காரக் கண்ணாடியினை வாங்கும்படி பணித்தது. மிருதுளா அன்று மஞ்சள் நிற கையில்லா ரவிக்கை அணிந்திருந்தாள். மாதவனுக்கு அவளுடைய காட்டன் சிவப்புப் புடவையும் அதற்கு அவள் அணிந்திருந்த  வான்கோ மஞ்சள் நிற ரவிக்கையும் பிரமாதமான ஒத்திசைவு கொண்டவையாகத் தோன்றின. மிருதுளாவும் அவனும் கண்ணாடி கண்ணாடியாகப் பார்த்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பழம்கண்ணாடி முன்னும் அவர்கள் சற்று  நின்று கடந்தபோது ஜென்மாந்திரங்களைக் கடப்பதான பாவனையை ஒவ்வொரு கண்ணாடியும் அவர்களுக்கு காட்டியது போலத் தோன்றியது. ஜென்மாந்திரங்களை ஒன்றாக காலத்தில் முன்னோக்கி கடந்தார்களா பின்னோக்கி கடந்தார்களா காலக்குழப்பங்களின்படி கடந்தார்களா என்று சொல்வதற்கில்லை. உண்மையில் ஒவ்வொரு கண்ணாடியையும் ஒரு ஜென்மேந்திரம் போல இருக்கிறதே என்று மிருதுளா தற்செயலாய் சொல்லப்போய்தான் அவர்களுக்கு அப்படி தோன்ற ஆரம்பித்திருக்க வேண்டும். வித விதமான அலங்கார சட்டகங்களுடன் இருந்த கண்ணாடிகள் காலங்கள் போலவே அவர்களை தங்களுக்குள் பிம்பப்படுத்தின. அங்காடியின் நீள் கூடத்தில் ஒரு கண்ணாடியிலிருந்து மறு கண்ணாடிக்கு சென்றபோது முதல் பிம்பம் நினைவாய் மனதில் தங்கி  இரண்டாம் பிம்பத்தைப் பார்ப்பதைத் தீர்மானித்தது. முதல் பிம்பத்தை மீண்டும் பார்க்கலாம் என்று முந்தைய கண்ணாடிக்குச் சென்றால் நினைவில் தங்கிய பிம்பம் அகப்படுவதாயில்லை. புதியதாய் ஒரு சட்டகத்திற்குள் அவர்கள் அகப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

கண்ணாடிகளுக்கு நினைவு இருப்பதில்லை என்றான் மாதவன் மெதுவாக. தன்னுடைய ஜென்மேந்திரியம் பற்றிய கூற்று தன் வாயிலிருந்து வந்ததுதானா என்று திகைப்படைந்திருந்த மிருதுளாவுக்கு மாதவன் சொன்னது ஆசுவாசமாயிருந்தாலும் தங்களிடையே ஒரு உறவு வளர்வதான மயக்கம் ஏற்பட்டது.

உண்மையில் அவர்களுக்கிடையே வெறும் ஹாய் பை உறவுதான் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது  டிஸ்கோவில் கூட்டத்தோடு கூட்டமாய் கும்பலாய் நடனமாடியிருக்கிறார்கள். அப்போது  மாதவனின் கை மிருதுளாவின் மேல் படக்கூடாத இடங்களில் பட்டதற்கு அவள் எதுவும் சொல்லவில்லை. அவர்களிருவரும் நல்ல ஜோடி என்பது கண்ணாடிக்கடையில்தான் அவர்களுக்கு தெரிய வந்தது போல. 

கடைசியில் மாதவன் வாங்கிய கண்ணாடிக்கு முன் அவர்கள் நின்றபோது ஒரு அழகான புகைப்படம் போல இருந்தார்கள். மாதவன் மிருதுளாவைவிட ஒரு தலை உயரமாக இருந்தான். ரசம் போன வெண்புள்ளிகள் அவர்கள் மாலையும் கழுத்துமாய் இருப்பதான கிறக்கத்தினை ஏற்படுத்தின. இது எதிர்காலக் கண்ணாடி என்று மாதவன் மனதிற்குள் சொல்லிக்கொண்டபோது அவன் காஃப்காவின் 
வாக்கியமொன்றினை சொல்லிக்கொள்கிறோம் என்று அறிந்திருக்கவில்லை. மிருதுளாவுக்கு அந்தக் கண்ணாடியை ஹோட்டலுக்கு வாங்குவதில் விருப்பமில்லை. ஆனால் மாதவன் பிடிவாதமாய் அந்தக் கண்ணாடியையே வாங்குவது என்று ஒற்றைக்காலில் நின்று வாங்கிவிட்டான். மிருதுளாவுக்கு மாதவனுடைய திடீர் அறுதியிடல் ஆச்சரியமாக இருந்தது. மிருதுளா சட்டென்று திரும்பியபோது மாதவனுடைய பெல்ட்டில் இருந்த சிறு கம்பி அவள் பின் இடுப்பில் கீற அவள் கிளர்ச்சியடைந்ததால் அப்போது அவனை எதிர்த்துப் பேசாமல் இருந்துவிட்டாள்.

ஆனாலும் மாதவனை விடப் பெரிய அதிகாரியான தான் அவன் இஷ்டப்பட்ட கண்ணாடியை வாங்கிவிட்டோமே என்று அவளுக்குள் குமைந்து கொண்டிருந்தது. மதுக்கூடம் ஹோட்டலின் பேஸ்மெண்ட்டில் இருந்தது. எந்த வெற்றிடத்தை நிரப்ப அந்தக் கண்ணாடியை வாங்கினார்களோ அந்த இடத்தில் வைக்கக்கூடாது என்று மிருதுளா வாதிட்டாள். மாதவன் சின்னதாக ஆட்சேபித்துவிட்டு பின்னால் பேசாமல் இருந்துவிட்டான். கண்ணாடியை பல நாற்காலிகளை நகர்த்திவிட்டு இடம் மாற்றி வரிசையில் அடுக்கி மதுப்புட்டிகள் வைத்திருக்கும் உயர் மேஜைக்கு நேர் எதிரில் மிருதுளா சொன்ன இடத்தில் வைத்தார்கள். ஏற்கனவே வெளிச்சம் குறைவாக இருந்த மதுக்கூடத்தில் அக்கண்ணாடியை இன்னும் இருள் கூடிய இடத்தில் வைத்ததால் அதன் வெண் புள்ளிகள் உடனடியாகத் தெரிவதாக இல்லை. பழம் கண்ணாடி என்பதால் அதற்கு ஒரு அமானுஷ்யம் கூடிவிட்டது போல மர்மப்படலம் ஏறிவிட்டது. மதுக்கூடத்தில் இருந்த இதர கண்ணாடிகளின் பிரதிபலிப்புகளையும் அது தன்னுள்ளே வாங்கியதால் அந்தக் காட்சிக்கலவை அசாத்தியமாக இருந்தது. ஹோட்டல் முதலாளி உட்பட எல்லோரும் மிருதுளாவின் அழகுபடுத்தும் திறமையை பாராட்டினார்கள். மிருதுளாவின் இந்த சிறிய வெற்றியில் மாதவன் எரிச்சலும் வியப்பும் அடைந்தான். 

மிருதுளாவுக்கு கண்ணாடியை மதுக்கூடத்தில் அவள் விரும்பிய இடத்தில் வைத்ததில் மேலும் ஒரு வெற்றியும் இருந்தது. அவள் மேல்தளத்தில் தன் அலுவலகத்தில் இருந்து பார்க்கும் மேலாண்மை கண்காணிப்பு கேமரா மதுக்கூடத்தின் கண்ணாடியை நோக்கி வைக்கப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேமரா வழி மிருதுளாவினால் மாதவனையும், மதுக்கூடத்தையும் முழுமையாகக் கண்காணிக்க முடிந்தது. ஆட்களில்லா மதிய நேரமொன்றில்  மாதவன் கண்ணாடி முன் நின்று குரங்கு சேஷ்டைகள் செய்வதை மிருதுளா பார்த்து வெகுவாக மகிழ்ச்சி அடைந்தாள். மாதவனுக்கு மிருதுளா தன்னை சதா வேவு பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் இருக்கவில்லை. இன்னொரு மதியம் மாதவன் கண்ணாடி முன் நின்று கண்ணாடியின் வழியே அவனுக்குப் பின்னால் தரையை சுத்தம் செய்துகொண்டிருந்த பெண்ணின் இடுப்பையும் மார்புகளையும் வெறிப்பதை மிருதுளா பார்த்தாள். 

‘மிர்தூஸ்’ என்று மாதவன் மிருதுளாவை செல்லமாக எப்போது இருந்து அழைக்க ஆரம்பித்தான் என்று சொல்ல இயலாது. கண்ணாடி வாங்க அவர்களிருவரும் ஒன்றாகச் சென்ற நாளுக்குப் பிறகுதான் என்று மிருதுளாவும் குரங்குக்குட்டிகளோடு உறங்கும் மிருதுளாவைக் கனவில் கண்டபின்தான் என்று மாதவனும் நம்பினர். அது ஒரு அழகான ஈரக் கனவு. பதின்பருவத்திற்குப் பிறகு அது போன்ற ஈரக் கனவு மாதவனுக்கு வெகு நாட்களுக்குப் பிறகு வந்தது. குற்றாலம் போல மலையும் சாரலுமாய் இருக்கக்கூடிய இடம். அதில் ஒரு கல்மண்டபத்தில் உள்ள மேடையில் மிருதுளா ஆடையில்லாமல் உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் மேல் நாலைந்து குரங்குக்குட்டிகள் படுத்திருக்கின்றன. மண்டபத்தின் தூண்கள் ஓவியச் சட்டகம் ஒன்றினை அமைக்க அதன் வழி வானமும் வானத்தில் நிலவு வெளிச்சமும் தெரிகின்றன. குரங்குக்குட்டிகள் நன்றாக விழித்திருந்தன. மாதவன் மிருதுளாவை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான். மாதவனைப் பார்த்த குரங்குக்குட்டிகள் மிருதுளாவை மிரட்சியில் தங்கள் கைவிரல்களால் பிராண்டிப் பிடிக்கின்றன. குரங்குக்குட்டிகளின் விரல் நகங்கள் மிருதுளாவின் தோள்களிலும் பிருஷ்ட வளைவுகளிலும் அழுந்துகின்றன. மிருதுளாவோ சலனமின்றி தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். மண்டபத்தின் தரையில் மாதவன் கால் வைத்தபோது கண்ணாடியில் கால் வைத்தது போல தரை பாளம் பாளமாய் நொறுங்கியது. மாதவன் துள்ளி அவன் கண்களுக்குப் புலப்படாமல் தரையில் படுத்திருந்த குரங்குக்குட்டிகளின் மேல் நளுக் நளுக்கென்று மிதிக்கிறான். மௌனத் திரைப்படமொன்றின்  காட்சி போல சப்தமில்லாமல் குரங்குக்குட்டிகள் பாவனைகள் காட்டி ஓடுகின்றன. மேலும் தரைக்கண்ணாடிகள் பாளங்களாக நொறுங்க மாதவன் துள்ளிய வேகத்தில் மிருதுளாவின் மேல் படுத்திருந்த குரங்குக்குட்டிகள் சிதறி ஓடுகின்றன. மாதவனின் உடல் தீண்டலில் மண்டபத்தின் மேடையில் படுத்திருக்கும் மிருதுளாவின் இமைகள் திறக்கின்றன. அவளுடைய இமைகள் திறக்கையில் மாதவன் வெடித்து ஈரமானான். 

மறுநாள் மாதவன் வெல்வெட்டும் பஞ்சும் கலந்த குரங்குக்குட்டி உருவத்தில் செய்த தோள்ப்பையினை வாங்கி மிருதுளாவுக்குப் பரிசளித்தான். அதைக் கொடுக்கும்போது பரிசுப்பொதியின் மேல் அட்டையில் ‘மிர்தூஸுக்கு’ என்று எழுதிக்கொடுத்தான். சிறு புன்னகையோடு அதை வாங்கிக்கொண்ட மிருதுளா அதை உடனடியாகத் திறந்து பார்க்கவில்லை.

மதுக்கூடத்தில் கல்லூரி இளைஞர்களும் யுவதிகளும் ஏற்பாடு செய்திருந்த விருந்து நடந்துகொண்டிருந்தது. எல்லோரும் வெறித்தனமாய் ஆடிக்கொண்டிருந்தார்கள். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து நகர பழக்க வழக்கங்களையெல்லாம் மாதவன் நன்றாக அறிந்திருப்பவன்தான் என்றாலும் அவனுக்கே அந்த விருந்து கடுமையான உளத் தொந்திரவுகளை உருவாக்கியது. இளம் பெண்கள் பிருஷ்டங்களின் வளைவுகளும், தொப்புள்களும், மார்பின் பிளவுகளும் வித விதமாய் வெளியில் தெரியும்படி  குறைந்த ஆடைகள் அணிந்திருந்தார்கள். கண் மூடித்தனமாய் எல்லோரும் குடித்தார்கள். மாதவன் அதுவரை கேட்டிராத இசை மதுக்கூடம் முழுக்க நிறைந்திருந்தது. மிருக ஒலிகளும் தாப முனகல்களும் நிறைந்திருந்த அந்த இசைக்கேற்ப ஆணுடல்களும் பெண்ணுடல்களும் குழைந்துகொண்டிருந்தன. மதுக்கூட பார் மேஜையின் பின்னால் நின்று கொண்டிருந்த மாதவன் தான்  மிருதுளாவுக்கு வாங்கிக் கொடுத்த குரங்குக்குட்டி பொம்மை, சிகரெட் புகையினால் ஆன சிறு மேகங்களில் ஏறி அணைந்து அணைந்து எரியும் விளக்குக்குகேற்ப பல உடல்களின் வழி மிதந்து பயணம் செய்வதை கண்ணாடியில் பார்த்தான். மிருதுளாவும் தான் வாங்கிக்கொடுத்த குரங்குக்குட்டித் தோள்ப்பையை முதுகில் மாட்டிக்கொண்டு ஆடுகிறாளோ என்று மாதவன் ஒரு கணம் எண்ணி மீண்டான். காமவெறியும், போதையும் ஏறியிருந்த சூழலில் மாதவனுக்கும் ஏதாவது உடலைத் தீண்டவேண்டும் போல இருந்தது. மேற்பார்வை பார்க்கின்ற ஊழியரின் தீவிர முகபாவத்துடன் நடனக்கூட்டத்தினூடே செல்லலானான். யாரோ ஒருவர் அவன் கையிலும் ஒரு மதுக்கிண்ணத்தை திணித்தார்கள். மாதவன் ஒரு மிடறு குடித்து வைத்தான். மதுவில் கூடவே வேறு போதையும் சேர்த்திருப்பார்கள் போல; மாதவன் முழுக்கோப்பையையும் ஒரே மடக்கில் குடித்தான். 

மதுக்கூடத்தின் மத்தியில் சிறு இடம் உண்டாக்கி அதில் இரு பெண்கள் தலைமுடியை முழுவதுமாக அவிழவிட்டு அவற்றைச் சுற்றி சுற்றி ஆட்டிக்கொண்டே கைகளை முன்னோக்கி நீட்டியவர்களாய் வா வா என்று சைகைகள் செய்து ஆடினர். மாதவனுக்கு எங்கோ தூரத்தில் மிருக ஒலிகள் கேட்டன. கனவில், தூக்கத்தில் நடப்பவன் போல மாதவன் அந்த இரு பெண்களிடையே போய் நின்று கொண்டான். ஆணுடல்களும் பெண் உடல்களும் ஒன்றையொன்று தழுவி சுற்றி நெருங்கி மாதவனை இரண்டு பெண்ணுடல்களின் மத்தியில் தள்ளின. இரு பெண்களின் கூந்தல்களும் மாதவனை முன்னும் பின்னும் வருட மாதவன் தன் டை, சட்டை, பனியன் எல்லாவற்றையும் ஏதோ ஆவேசத்திற்கு ஆட்பட்டவனாய் கழற்றி விட்டெறிந்தான். அந்தப் பெண்கள் இருவரும் தங்களின் மென்மையான கூந்தல்களால் சாமரம் வீசுவது போல தலையை சுழற்றி சுழற்றி  அவனுடைய வெற்று மேலுடலில் வருடினர். பின்னணியில் ஒலித்த இசையில் உக்கிரம் ஏறியிருந்தது. திடீரென ஹோட்டல் ஊழியர் தங்களோடு சேர்ந்து நடனமாடுகிறாரே என்று கவனிக்கும் நிலையில் நடனக்கூட்டத்தினர் இல்லை. கூந்தல் சுழற்றும் பெண்கள் திரும்பி ஆடியபோதுதான் அவர்களின் முதுகுகளை கூந்தல் தவிர வேறெதுவும் மறைத்திருக்கவில்லை என்று தெரிந்தது. அவர்களின் வெற்று முதுகுகளில் சர்ப்பங்களை பச்சை குத்தியிருந்தனர்.

பச்சை சர்ப்பங்களின் வால் நுனிகள் அவர்களின் பிருஷ்டங்களின் வளைவின் ஆழத்தில் இறங்கியிருந்தன. மாதவனுக்கு இரண்டு பெண் தலைகளுடைய சர்ப்பங்கள் ஆடுவது போல தோன்றியது. அவன் எப்படி வெல்வெட் மயிரடர்ந்த குரங்குக்குட்டி புகையில் மிதந்து வருவதை இந்த சர்ப்பங்களைத் தாண்டி கண்டான் என்று தெரியவில்லை. புகையில் நளினமாக மிதந்த குரங்குக்குட்டியை அவன் ஆடியபடியே எட்டி எட்டி பிடிக்க முயற்சி செய்தான். இல்லாத குரங்குக்குட்டியை பிடிக்க அவன் செய்யும் யத்தனங்களாய் அவன் அசைவுகள் ரம்மியமாயின. மெதுவாக சுற்றியிருந்த நடனக்கூட்டம் மாதவனின் போதை நடனத்தைக் கவனிக்கத் தொடங்கியது. அவனைத் தங்களின் கூந்தல்களாலும் தங்கள் இடுப்புகளின் களிவெறியேற்றும் அசைவுகளாலும் சீண்டிய பெண்கள் மேலும் உற்சாகமாயினார். சோடியம் குழல் விளக்குகளும் அணைந்து அணைந்து எரிய, வண்ணக் குமிழ் விளக்குகளின் ஒளிப்புள்ளிகள் மதுக்கூடமெங்கும் அலைய பெண் தலைகள் கொண்ட சர்ப்பங்களின் நடனம் உன்மத்தம் ஏற்றுவதாய் இருந்தது.

குரங்குக்குட்டிகளை மாதவன் முன் ஒன்றும் பின் ஒன்றும் அணைத்ததான பிரமையிலிருந்தான். மதுக்கூடத்தின் கண்ணாடியைத் தன் காமெரா வழி பார்த்த மிருதுளாவுக்கு இரு பெண் தலை சர்ப்பங்களுக்கு இடையில் சிக்கிய உடலாய் மாதவன் தெரிந்தான். மாதவனோடு நடனமாடிய இரு பெண்களும் அவனை முன்னும் பின்னுமாய் கட்டி அணைத்தபடியே தொடர்ந்து நடனமாடத் தலைப்பட்டனர். அவர்கள் தங்கள் கூந்தல்களை ஒய்யாரக் கொண்டையாய் இப்போது தூக்கிக் கட்டியிருந்ததால் அவர்கள் முதுகுகளில் இருந்த சர்ப்பங்கள் விளக்கொளிகளின் அலைவுறுதலுக்கு ஏற்ப  நெளிவதான காட்சியைத் தோற்றுவித்தன. முன்னிருந்த பெண்ணைத் தழுவியிருந்த மாதவனுக்கோ தான் தடவுவது பெண்ணின் முதுகு என்று தெரிந்திருக்கவில்லை. அவன் குரங்குக்குட்டியொன்றின் வெல்வெட் முதுகு ஒன்றினை தடவுவதாகவே நினைத்திருந்தான். மாதவனை அவன் பின்புறமிருந்து தழுவியிருந்த பெண்ணின் கைகளும் மாதவன் முன்னிருந்த பெண்ணின் முதுகு வரை நீண்டன.

பின்னணியில் மதுக்கோப்பைகள் கருங்கல்லில் மோதி உடைவதான ஒலிகளுடன் இசை தொடர்ந்தது. ஓய்யாரக்கொண்டை பெண் தலைகள் மதுக்கோப்பைகள் உடைய உடைய அவைகளுக்கு ஏற்ப சிலிர்த்து கண்களை போதையில் மீண்டும் சொருகுவதான பாவனைகளைக் காட்டின. இரு சர்ப்பங்களின் வழவழத்த நெளிவுகளுக்குள் சிக்கிய மாதவனின் உடலையும் தலையையும் பார்த்த மிருதுளாவுக்கு அந்தக் காட்சியை கல்லாய் எங்கேயோ பார்த்திருப்பதாய் நினைவில் தட்டியது. பெண்தலை சர்ப்பங்களிடையே சிக்கிய மாதவன் அவளுக்கு மேலும் வசீகரமானவனாய்த் தோன்றினான். சட்டென்று மிருதுளாவுக்கு நினைவு வந்தது. கோவில் பிரகாரங்களில் வால் நுனிகளில் நின்று ஒன்றையொன்று பின்னி ஓரு தலையாய் நிற்கும் சிறு கற்சிலைகளுள் ஒன்று உயிர் பெற்றுவிட்டதோ? அப்படியா? உண்மைதானா? சிறு கற்சிலை கல் தூணாகிவிட்டதா?

மீண்டுமொருமுறை மதுக்கோப்பைகள் சிலீர் சிலீரென இசையில் உடைய மதுக்கூடத்தின் நிலைக்கண்ணாடி பாகாய் உருகி வழிய ஆரம்பித்தது. கண்ணாடிக் குழைவின் உருகிய பாகின் வழி மாதவன் தான் அணைத்த குரங்குக்குட்டியோடு தாவி கண்ணாடியினுள் நுழைந்தான். மிருதுளா அவனை போதையூட்டப்பட்டவனாக ஒரு கணம் கூட அவதானிக்கவில்லை. அவளுக்கு அவனுடைய முகமூடி கழன்று விழுந்து அவனுடைய நிஜ முகம் இந்தப் பாம்பு நடனத்தின் மூலம் தெரிவந்துவிட்டதாக நினைத்து கோபம் கலந்த ஏமாற்ற உணர்வை அடைந்தாள். மாதவனை ஏதாவது ஒரு விதத்தில் தண்டிக்கவேண்டும் என்று மனதிற்குள் கருவிக்கொண்டாள். இசையாய் உடைந்த மதுக்கோப்பைகள் கிரேக்க மதுக்கோப்பைகளோ? அவைகளின் அடிப்பாகத்தில் டயனோஷியசின் உருவம் செதுக்கப்பட்டிருந்ததா? மதுவின் திரவப் படலத்தில் தன் முகம் பார்க்கிறவன் தன்னைக் காண்கிறானா டயனோஷியசின் உருவத்தைப் பார்க்கிறானா? மிருதுளாவின் எண்ணங்கள் அவள் மேஜையில் இருந்த கிரேக்க மதுக்கோப்பையைச் சுற்றியும் வந்து கொண்டிருந்தன.

கன்ணாடிக்குள் நுழைந்துவிட்ட மாதவனோ ஆரஞ்சு நிற மேகங்கள் நிறைந்த கடற்கரையில் இருந்தான். அதிகாலை. கடற்கரை. நித்தம் சிறுகாலை வந்துன்னை சேவித்தே, வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என்று ஏதேதோ மனனம் செய்த வார்த்தைகள் எப்போதோ கேட்ட வார்த்தைகள் மாதவனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. முப்பத்தியிரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் பிரஜாபதியிடம் திரும்பிய இந்திரனா மாதவன்?. ஆனால் எந்த ஜென்மத்தில்? ஜென்மேந்திரியங்களைக் கடக்கவில்லையா மிருதுளாவும் தானும் ஒவ்வொரு கண்ணாடி தாண்டும்போதும்? சர்ப்பங்கள் இறுக்க கடற்கரையில் நடனம் தொடர்ந்தது. 

மதுவோடு என்ன போதைமருந்தை கலந்திருப்பார்கள் இந்த நடன விருந்தினர் என்று யோசித்தாள் மிருதுளா. வேறு ஏதோ கனவுகளையும் பிரேமைகளையும் உருவாக்கும் போதையை உட்கொள்ளாமல் மாதவன் இந்த மாதிரியான நடத்தையில் ஈடுபட்டிருக்கமாட்டான் என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள். மாதவன் கண்ணாடியின் முன் இரு பெண்களின் அணைப்பில் லயத்தோடு ஆடிக்கொண்டிருந்தான். அவனை வேலையை விட்டு நீக்கிவிடுவார்கள் என்று மிருதுளா நினைத்தாள். ஆனாலும் மதுக்கூடத்திற்குக் கீழே இறங்கிச் சென்று அவனை மீட்டெடுத்துக் கூட்டி வரவேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அவன் அதிக போதையிலும் காமக்களியாட்டத்திலும் நெஞ்சு வெடித்து இறந்துவிடுவானோ என்று சில வினாடிகள் பதறினாள். ஆனாலும் அவள் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. தன்னைத் தவிர ஹோட்டலின் மேல் தள நிர்வாகத்தினர் யாருக்கும் மாதவனின் நிலைமை தெரியக்கூடாது என்று அவள் கவனமாக இருந்தாள். அவள் மேலதிகாரி அவள் மேஜையை நோக்கி வந்த போது அவள் தன்னிடமிருந்த அலங்கார கிரேக்க மதுக்கோப்பையை காட்டி அதைப் பற்றி பேசி அவர் கவனத்தைத் திசை திருப்பினாள். கிரேக்க மதுக்கோப்பைகள் உள்ள மதுக்கூடம் இன்னும் அழகு பெறும் என்று அவள் சொன்னதைக்கேட்ட அவர் ஆமாம் நீயும் மாதவனும் வாங்கி வந்த  கண்ணாடியைப் போல என்று சொல்லி நகர்ந்தார்.

மாதவன் குரங்குக்குட்டியாய் தன்னை உணர்ந்தான். இரு பாம்புகளுடையே மாட்டிக்கொண்ட குரங்குக்குட்டியாய் அவன் கடற்கரையில் நடனமாடிக்கொண்டிருந்தான். சர்ப்பப்பெண்கள் அவன் உடலை இறுக்கி மேலும் மேலும் பிணைத்தார்கள். அவன் குரங்குக்குட்டி விரல் நகங்களினால் அவர்களைக் கீறினான். கிறீச்சிட்டு கிறீச்சிட்டுக் கீறினான். அவனுடைய ஓவ்வொரு கீறலும் சர்ப்பப்பெண்களிடம் அதீத தாபத்தினை ஏற்படுத்தின. கடற்கரை பொன்னிறமாய் நீண்டு கிடந்தது. சர்ப்பப்பெண்களின் ஒய்யாரக் கொண்டைகள் தளர்ந்துவிட்டிருந்தன. அவர்கள் மாதவனின் இடுப்பைப் பிடித்துக்கொண்டு இரு புறமும் இழுத்து இழுத்து நடனமாடினர்.

“கண்ணாடிகளின் மேற்புறங்கள் கள்ளமற்றவையல்ல அவை ஆழ்பிரதிகள் இருப்பதான மாயைகளை உண்டாக்குகின்றன. ஆழ்பிரதிகள் எவற்றுக்குமே இல்லை எல்லாமே மேற்புறங்கள்தான்”  என்று கிரேக்க மதுக்கோப்பையின் அடியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை வாசித்தவாறே மிருதுளா மாதவனின் களி நடனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கேமராவே அவள் கண்ணாகிவிட்டதுபோல அவள் இயக்கமற்று உறைந்திருந்தாள்.

எவ்வளவு நேரம் மிருதுளா மாதவனை மட்டுமே  பார்த்துக்கொண்டிருந்தாள் என்று சொல்வதற்கில்லை. தற்செயலாய் அவளுக்கு மாதவன் கொடுத்த பரிசுப்பொதியை பிரித்தே பார்க்கவில்லையே என்பது நினைவுக்கு வந்தது. அவள் தன் மேஜையின் கீழ் இழுப்பறையில் இருந்த பரிசுப்பொதியை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். குரங்குக்குட்டித் தோள்ப்பை! அதைத் தடவி தோளில் மாட்டிப்பார்த்தாள். அதன் வெல்வெட்தன்மை அவளை வெகுவாக ஆசுவாசப்படுத்தியது.

ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பட்டவள் போல மிருதுளா படபடவென்று கீழே மதுக்கூடத்திற்கு இறங்கிப் போனாள். நடனக்கூட்டத்தினரை விலக்கி நடுவில் இரு பெண்களோடு ஆடிக்கொண்டிருந்த மாதவனைக் கையைப்பிடித்து இழுத்தாள். அவன் கழற்றி எறிந்திருந்த அவனுடைய சட்டை, டை, பனியன் ஆகியவற்றைப் பொறுக்கினாள். மாதவனைத் தரதரவென்று மாடிப்படிகளில் இழுத்து வந்து அவனைத் தன் அலுவலகத்தில் இருந்த பாத்ரூமிற்குள் தள்ளினாள். ஹேண்ட் ஷவரினால் அவன் முகத்தில் தண்ணீரை அடித்தாள். அவனுடைய பனியன், சட்டையை மாட்டிவிட்டாள். தன் இருக்கையில் அவனை அமரவைத்து அவன் கையில் கிரேக்க மதுக்கோப்பையில்  சுத்தமான நீரை ஊற்றி அவனுக்கு புகட்டி விட்டாள். மாதவனுக்கு சிறிது தெளிர்ச்சி ஏற்பட்டது. அவர்கள் இருவரும் பிறர் பார்வைக்கு நல்ல ஜோடி என்பதாகவே தோற்றமளித்தனர்.Saturday, February 2, 2013

கலங்கிய குட்டை: மணிரத்னத்தின் ‘கடல்’
தமிழ் சினிமா என்ற எந்திரம் கலக்கித் துப்பிய இன்னொரு பிம்பக் குவியலாய் மணிரத்னத்தின் ‘கடல்’ வெளிவந்திருக்கிறது. லூயி புனுவலின் ‘நஸ்ஸரீன்’ என்ற படத்தின் மூலக்கதை மணிரத்னத்தின் ‘கடல்’ என்று அரசல் புரசலாகக் கேள்விப்பட்டிருந்ததால் படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என்று ஆர்வமாயிருந்தேன். லூயி புனுவல் என்னுடைய ஆதர்ச சினிமா பட இயக்குனர்களுள் ஒருவர். அவருடைய ‘விருதியானா’ ராஜீவ் மேனனால் சக்கை எந்திரமொன்றில் சுழற்றி ‘மின்சாரக் கனவாக’ தமிழில் வந்தது எனக்கு என்றுமே ஆச்சரியமளிக்கக்கூடிய பிம்ப நிகழ்வு. ஈயடிச்சான் காப்பி ரக தமிழ்த் திரைப்படங்களை விட இந்தப் பிம்பக்குடுவைக் கலக்கல் ரக படங்கள் எனக்கு மிகவும் ஈர்ப்புடையனவாய் இருக்கின்றன. இயக்குனர்களும் கதாசிரியர்களும் ‘இந்தியத்தன்மை’, ‘தமிழ்த்தன்மை’, ‘பொதுவெளியின் பார்வையாளன் ரசனை’ ஆகியவற்றை எப்படிக் கணிக்கிறார்கள் என்பதை இந்தவகை பிம்பப்பிரதிகள் காட்டிக்கொடுத்துவிடுகின்றன. தமிழ் சினிமாவின் மூலப்படங்கள் எவை எவை அவற்றை தமிழ் சினிமா எப்படி சப்பி நெளித்து சூடு வைத்து தமிழனுக்குக் கொடுக்கிறது என்பதை ஆராய ஈயடிச்சான் காப்பி முதற்கொண்டு, ‘இன்ஸ்பிரேஷன்’ வரை உள்ள இந்த பட்டியலை அடிக்கடி ஒப்பு நோக்குவேன். நீங்களும் பார்க்கலாம் http://www.imdb.com/list/-vrlQwkSUhY/ 

லூயி புனுவலின் நஸ்ஸரீன்  மணிரத்னத்தின் சேற்றுக் குட்டையான ‘கடலில்’ ஒற்றை அடுக்கு மட்டுமே வேறு பல அடுக்குகளும் இணைக்கப்பட்டுள்ளன என்பது எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. ஆனால் தமிழ் சினிமா எந்திரத்திற்கு ஒரு காதல் கதை வேண்டும், பாடல்கள் வேண்டும், நல்லவன்- கெட்டவன், கடவுள் -சாத்தான் என்று தெளிவாக தனித்தனியாக பிரிந்து இருக்கின்ற ஞானப்பழமும் (அரவிந்த சாமி), அழுகிய பழமும் (அர்ஜுன்) வேண்டும் சுபத்தில் முடிகிற உச்சகட்டம் வேண்டும் வேறு என்ன செய்வார்கள் தோத்திரம் பாடும் பாவிகள்  என்று மனதினை தேற்றிக்கொண்டேன். 

மிகையுணர்ச்சிகளின் பீதாம்பரமான ஜெயமோகன் கதாசிரியர். படம் ஆரம்பித்த முதல் பத்து நிமிடங்களிலேயே இரண்டு மிகையுணர்ச்சி பின்னணிக் கதைகள் படு வேகமாய் தலைப்புகளோடு தலைப்புகளாகச் சொல்லப்பட்டுவிடுகின்றன. ஒன்று கதையின் நாயகன் (கௌதம் கார்த்திக்) கடலோர  மீனவர் கிராமம் ஒன்றில் பாலியல் சேவையாளராகிய தன் தாயின் மரணத்திற்கு பின் பல் வேறு உதாசீனங்களுக்கும், அவமானங்களுக்கும் ஆட்பட்டு அனாதையாயும் பொறுக்கியாகவும் பதின்பருவத்தை அடைவது. இந்தப் பின்னணிக் கதையில் சிறுவன் இன்னும் கதையின் நாயகன் கௌதம் கார்த்திக்கின் பிம்பரூபத்தை அடைவதில்லை. பின்னணிக் கதையின் பின்னணி இசையாக ஏ.ஆர்.ரஹ்மானின் கைவண்ணத்தில் உருவான ‘மகுடி மகுடி’ என்ற உற்சாகமான பாடல் வருகிறது. ஏசுவுக்கு தோத்திரம் பல முறை படத்தில் சொல்லப்படுவதன் புண்ணியத்தினால் என்றுதான் நான் நினைக்கிறேன் தாயின் கால் சவப்பெட்டிக்கு வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும்போது மண்வெட்டியால் உடைத்து பொண்வண்ணன் அண்டு கோ பிணத்தை அடக்கம் செய்யும்போது இந்த உற்சாகப் பாடல் பின்னணி இசையாய் வருவதில்லை. அனாதைப் பிணங்களை மீனவ சமூகம் இப்படியா அடக்கம் செய்யும் என்ற கேள்வியும் நம் மனதில் எழுவதில்லை. ஏசுவுக்கு தோத்திரம். சிறுவன் ‘அம்மா அம்மா’ என்று அலறுவது  மணிரத்னத்தின் அஞ்சலி படத்தில் ‘எந்திரி அஞ்சலி எந்திரி அஞ்சலி’ என்று ஒரு அலறல் வருமே  அது போல நீடிக்குமோ  என்ற என் பீதியை ‘மகுடி மகுடி’ உற்சாகப்பாடல் நீக்கி என்னை அமைதிப்படுத்திவிட்டது. மிகையுணர்ச்சியின் எல்லை கதாசிரியருக்கும் இயக்குனருக்கும் தெரியுமோ தெரியாதோ இசையமைப்பாளருக்கு தெரிந்திருக்கிறது அவர் தன் பெயரைக் கெடுத்து காப்பாற்றியிருக்கிறார். 

இன்னொரு பின்னணிக் கதை ஞானப்பழமான நல்ல பாதிரி அரவிந்தசாமிக்கும் அழுகியபழமான கெட்ட பாதிரி அர்ஜுனுக்கும் வெட்டுப்பழி குத்துப்பழி உருவாவதைச் சொல்கிறது. மில்ஸ் அண்ட் பூன்ஸ் நாவல்கள் படமானால் ஹீரோவாகப் போடலாம் என்பது போல இருந்த அரவிந்தசாமி இந்த ஞானப்பழம் பாதிரி கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி வயதாகியிருக்கிறார்.  கெட்ட பாதிரி அர்ஜுன் பென்ணொருத்தியோடு கெட்டகாரியத்திற்காக கூட பார்த்து, ஞானப்பழம் திருச்சபை பெரியவர்களிடம் போட்டுக்கொடுத்து அவரை வெளியே அனுப்பிவிடுகிறது. அர்ஜுன் சாத்தானாகிவிடுகிறாராம் அதன் பிறகு. அதாவது தமிழ் சினிமா எந்திரம் கதநாயகனாகவும் வில்லனாகவும் மாறி மாறி காட்டி நம் மனதில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கும் உள்ளூர் ரௌடி தான் சாத்தான். மிஸ்டர் சாத்தானை இதைவிட யாரும் கேவலப்படுத்தியிருக்க முடியாது. பிணத்தின் காலை மண்வெட்டியால் உடைத்து சவப்பெட்டிக்குள் அலட்சியமாக இருத்தினானே அவனிடம் சாத்தானின் சாயல் இருக்கிறது என்று சொன்னாலாவது நம்பியிருக்கலாம். கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு துப்பாக்கியால் டப் டப் என்று சுடும் அர்ஜுன் சாத்தான் என்றால் அது சாத்தானுக்கே பெரிய அவமானம்.

ஞானப்பழம் பாதிரியும் சர்ச்சை கூட்டி மெழுகி ஒரு குட்டி ஃபிரிட்ஜ் போல இருக்கும் டேப்ரிகார்டரில் கிராமத்தில் குரல்களைப் பதிவு செய்ததைத் தவிர ஏதும் நல்ல சேசு காரியம் செய்ததாகத் தெரியவில்லை. பொறுக்கி சிறுவனையும் கன்னத்தில் நாலு அறைவிட்டுதான் பணிய வைக்கிறது ஞானப்பழம். பையன் வளர்ந்த பிறகு அவனோடு பைக்கில் சுற்றுவது சேசு காரியமா என்றும் தெரியவில்லை. ஞானப்பழம், பாதிரி அர்ஜுனின் தந்திரத்திற்கு பலியாகி சிறைக்கு செல்லும்போது நமக்கு ஞானப்பழத்தின் மேல் எந்த பரிதாபமும் ஏற்படுவதில்லை. பின்னால் வரும் காட்சிகளில் ஞானப்பழம் எப்படி இவ்வளவு சீக்கிரம் ஜெயிலிலிருந்து வெளியே வந்தது என்று வியப்பே ஏற்படுகிறது. 

இதற்கிடையில் அபரிதமான உடல் எடையுடன் வெள்ளை ஆடை மட்டுமே அணிந்த கதாநாயகி அறிமுகம்.  ஸ்லீவ் லெஸ் எல்லாம் அணிந்த வெள்ளை ஆடை செவிலியாம். அவருக்கு ஐந்து வயதுக்கு மேல் மனம் வளர்ச்சியடையாமல் ஸ்தம்பித்து விட்டதாம் ஆனால் மகப்பேறெல்லாம் பார்ப்பாராம்.  மற்ற மீனவர்களுக்கெல்லாம் கைவிரல் நகத்தில் அழுக்கு இருக்கிறது என்று சொல்லி விட்டு கதாநாயகன் கௌதம் கார்த்திக்கை மகப்பேறு பார்க்க கிராமத்தில் குடிசைக்குள் கூட்டிப்போகிறார். பெண்கள் பெரியவர்களெல்லாம் வெளியே நிற்கிறார்கள். கௌதம் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் நீச்சல் குளத்தில் பொழுதுபோக்கிற்கு மீன் பிடிக்கிறவர் போல. ‘அடியே எங்கே கூட்டிப் போறெ’ என்று சித் ஶ்ரீராம் உருகி உருகி பாடும் காட்சியில் துளசி டிசைனர் சேலை கட்டிக்கொண்டு பாசி மணியெல்லாம் அணிந்து இடுப்பை நோக்கி முக்கோணமாய் வளைந்த இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு பூதகி போல நிற்கிறார்.  பூதகி நடனத்தில் எங்கே நீ கூட்டிபோறே அடியே என்று கேட்டு கதாநாயகன் பாடும்போது அவன் மேல் நமக்கு கழிவிரக்கம் பிறக்கிறது. 

எசகுபிசகாய் கௌதம் அர்ஜுனுடன் சேர்ந்து விடுகிறார். நிறைய குட்டிக் கரணங்கள் படகுகளிடையே ஓட்டம் சாட்டம். நிறைய கண்ணாடிகள் வேறு உடைகின்றன. என்னடே பெகளெம் என்றால் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. ஏதோ சாத்தான் காரியமாம். கதாநாயகன் தன் அப்பா என்று நம்பும் செட்டி பார்னபாஸ் என்ற கதாபாத்திரத்தை சாத்தான் அர்ஜுன் ஐந்து புல்லட்களால் துளைத்து கொன்றுவிட கதாநாயகன் செட்டியின் உடலை கையால் தாங்கி இல்லிக்கண்களில் நீர் வழிய வாய் கோணி கதறி அழுகிறான். மற்ற படங்களானால் உடனேயே அர்ஜுன் சாத்தானை கதாநாயகன் பிரித்து மேய்ந்திருப்பான். ஆனால் அவன் அதற்கு மேல் எதுவும் செய்வதில்லை. அர்ஜுனின் அடியாள் என்பதினால் சும்மா கதறி அழுதுவிட்டு  செட்டி வீட்டில் துஷ்டி அறிவிப்பதோடு பேசாமல் இருந்து விடுகிறானா இல்லை அப்போதே ஞானப்பழ குருவின் துணையில்லாமலேயே தூய அன்பினை தரிசித்துவிட்டானா என்று நமக்கு ஏற்படும் குழப்பத்திற்கு இயக்குனரோ கதாசிரியரோ பொறுப்பில்லை. எல்லா கதாபாத்திரங்களின் எல்லா நடவடிக்கைகளுக்கும் அவர்களா ஜவாப்தாரி? 

‘நெஞ்சுக்குள்ளே உமை முடிஞ்சிருக்கேன்’ பாட்டைக் கேட்டு சொக்கிப் போய் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரியில் வேறு அதைக் கேட்டு மயங்கி படத்தில் காட்சிபடுத்துதல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்திருந்தீர்களென்றால் அதற்கும் நீங்களேதான் பொறுப்பு. படத்தில் பாட்டு பின்னணியில் ஓடிக்கொண்டிருக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள் கதாபாத்திரங்கள். பாட்டும் காதில் சரியாய் விழுவதில்லை பேசுவதும் சரியாய் கேட்பதில்லை. ‘கடல்’ படத்தின் டிரெய்லரில் காட்டப்பட்டதாகச் சொல்லப்படும்  உதடோடு உதடு பொருந்திய முத்தக்காட்சியை இந்தப்பாடல் காட்சியில் வைத்து கதாபாத்திரங்களின் வாயை அடைத்திருக்கலாம். பாட்டை நாம் நன்றாகக் காது கொடுத்து கேட்டிருக்கலாம். முத்தக் காட்சியால் இளைய சமுதாயம் எப்படி சீரழிந்து போகிறது என்று ஞாநி moral instruction வகுப்பு எடுக்க ஃபேஸ்புக், டிவிட்டர் என்று களேபரமாகியிருக்கும். இலவச விளம்பரத்தினால் படம் இன்னும் ஓடியிருக்கும்.

 ஆரம்ப, கடைசி டைட்டில்கள் காட்டும்போது இரண்டு பாட்டு, பின்னணி இசையாக இரண்டு பாட்டு என்று போய்விட இரண்டு பாட்டுக்கள்தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு வேளை என் கணக்கு தப்போ என்னமோ. தமிழ் சினிமா ரசிகனை சக்கையாக ஏமாற்றிவிட்டார்கள். கொடுத்த ஆஸ்காரை திரும்பப் பிடுங்கச் சொல்லலாமா என்பது போல ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை கர்ண கொடூரமாய் இருக்கிறது. பல காட்சிகளில் பேசாமல் இயற்கையான சப்தங்களையும் வசனங்களையும் மட்டும் வைத்திருந்தாலே போதுமே சாமி என்று உள் மனம் கத்துகிறது.  இது போலவே ‘அன்பின் வாசலிலே’ என்ற பாட்டு எப்போது வந்தது எப்படிப் போனது என்று யாருக்கும் தெரியவில்லை. ஒரே திருஷ்டி பரிகாரம் ‘மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்’ பாடல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் மட்டும்தான். 

கூட்டிக் கழித்து கதையின் multiple plots, தொடர்ச்சி விட்டுப்போன கதைப் போக்கு எல்லாம் ஒரு வழியாய் தெரியவரும்போது கடுமையாய் மண்டையிடி வந்து விடுகிறது. அவ்வமயம் பார்த்து கதாநாயகன் அரவிந்தசாமியை குருவே என்று விளித்து என் மூலமாய் எதைப் பார்க்க நீ நினைத்தாய் என்று விளம்புகிறான். அரவிந்தசாமி டீ போடுவதில் மும்முரமாய் இருப்பது சரிதான் என்று நமக்குப் படுகிறது. யோசிப்பதற்கான தருணம் என்று ஒரு கண இளைப்பாறுதல் கூட இல்லாமல் கிளைமேக்ஸ் வந்துவிடுகிறது.  சாத்தான் அர்ஜுன் தன் மகளான கதாநாயகியை நடுக்கடலில் மோட்டார் சிறு கப்பலில் இருந்து தள்ளிவிட்டு கொன்று விடுகிறார் என்று காட்டப்படுகிறது.  அர்ஜுனை அரவிந்தசாமியும் கௌதமும் அடித்து நொறுக்குகின்றனர். அர்ஜுனை  ஒற்றைக்காலில் சுருக்குக் கயிறில் மாட்டி அந்தரத்தில் தூக்கி கடலில் முக்குகின்றார் அரவிந்தசாமி. நல்ல பாதிரி தோத்துட்டார் போ என்று இருக்கையைவிட்டு எழுந்திருக்க நினைக்கையில் கௌதம் அர்ஜுனை காப்பாற்றிவிடுகிறார். அர்ஜுன் தான் என்னதான் சாத்தான் என்றாலும் தன்னால் தன் மகளை கொல்ல முடியவில்லை என்கிறார். Anti Climax. ஓ எல்லோருமே நல்லவர்கள் என்று ஒரு முடிவுக்கு வருகிறோம். கதாநாயகி ஆஸ்பத்திரியில் பயந்து நடுங்கி கைகால் இழுத்துக்கொள்ள கட்டிலில் கிடக்கிறாள். கதாநாயகன் கட்டிப்பிடித்து அவளைத் தேற்றியவுடன் இழுத்துக்கொண்ட கை சரியாகி கதாநாயகனின்  கை விரலை க்ளோசப்பில் தொட அன்பு என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. 

அர்ஜுனைக் கடலில் முக்கி கொல்லப்பார்த்தோமே என்ற ஓர்மையே இல்லாமல் அரவிந்தசாமி பாடிக்கொண்டே முன் செல்ல ஏதோ ஒரு கிறித்துவ திருவிழா ஏகப்பட்ட விளக்கு அலங்காரங்களுடன்  நடக்கிறது. இறுதி டைட்டில்கள் ஓடுகின்றன. படம் ஒரு வழியாய் நல்லபடியாம் முடிந்துவிட்ட திருப்தியுடன் பிதா, சுதன், ஆவியின் பெயராலே ஆமென் என்று தோத்திரம் கூறி வெளியே வருகிறோம். 

எதற்கும் லூயி புனுவலின் படத்தையும் பார்த்து வையுங்கள். இந்தக் கதைக்கருவினை masters எப்படி அணுகுவார்கள் என்று ஒரு பிடி கிடைக்கும்.

லூயி புனுவலின் படத்திற்கான சுட்டி http://www.youtube.com/watch?v=joGGitsS05k