Saturday, December 29, 2012

கல்யாணி ஆச்சியின் கடைசி தினங்கள் | சிறுகதை


ஒன்றுமே நடக்காதது போல நினைவுகளைச் சப்புகொட்டிக்கொண்டு குத்த வைத்து உட்கார்ந்திருந்தாள் கல்யாணி ஆச்சி. சீவலப்பேரி சுடலைமாடன் அவள் கனவில் வந்து இட்லி சுடவேண்டாம் என்று மிரட்டியதிலிருந்து அவள் கடந்த வாரங்களில் பன்ணி வரும் கலாட்டா கொஞ்ச நஞ்சமல்ல. அவள் உட்கார்ந்திருந்த இயல்பையும் அவளருகே நின்ற அவளுடைய கோட்டிக்கார மகனின் தோரணையும் பார்க்கப் பற்றிக்கொண்டு வந்தது சுப்பிரமணிக்கு. ‘கிழட்டு சவத்துக்கும் கோட்டிக்கார மூதிக்கும் நாலு பொடதில போட்டாத்தான் சரியா வரும். இட்லி சுட மாட்டாளாமே இட்லி. காத்தக் குடிச்சிட்டா காலத்த கழிக்க முடியும்?’ என்று முணுமுணுத்த சுப்பிரமணியை ஆச்சி முறைத்தாள்.

“என்னலே அங்க வாய்க்குள்ள முணுமுணுக்க?”

“ஒண்ணுமில்ல ஆச்சி. எல்லாம் என் கிரகத்தச் சொல்லனும்”

என்ன செய்வான் அவன் பாவம்! ஆச்சியை நம்பித்தான் அவன் பிழைப்பு நடந்துகொண்டிருந்தது. திருநெல்வேலி ஜங்ஷனில் இரவு நேர இட்லிக்கடை ஒன்றை அவர்கள் நடத்தி வந்தார்கள். ஆச்சிக்கடை இட்லி ரொம்பவும் பிரசித்தம். ஒவ்வோர் இட்லியும் வெள்ளை வெளேர் என்று மிருதுவாயும் சுடச்சுடவும் இருக்கும். சாப்பிடுகிற ஒவ்வொருத்தனும் கூடவே பயரும் ஆம்லெட்டும் வாங்கிவிட்டான் என்றால் போதும். வியாபாரம் கொழித்துவிடும். குஷியில் வெள்ளிக்கிழமை லீவு விட்டு விடலாம். அத்தனையும் கிழவி கண்ட கனா கெடுத்துவிட்டது. அரச மரத்தப் பிடிச்ச சனி பிள்ளையாரையும் பிடிச்சது மாதிரி கிழவிக்கு வந்த கேடு சுப்பிரமணிக்கு லபித்த பட்டினி என்று நாட்கள் கழிந்துகொண்டிருந்தன. கொஞ்ச நாட்களாகவே கல்யாணி ஆச்சியின் நடவடிக்கைகள் எல்லாம் குளறுபடியாய் மாறியிருந்தன. ஆச்சிக்கு வயது எழுபதுக்கு மேலிருக்கும். ஆனால் இந்த வயதிலும் அதிகாலையில் எழுந்து குறுக்குத்துறை தாமிரபரணியில் குளித்து துணி துவைத்து பிள்ளையார், முருகன் கோவில்களில் நான்கு தங்க அரளிப் பூக்களைப் போட்டு கும்பிட்டுவிட்டு வந்தால்தான் ஆச்சிக்கு பொழுது புலரும். ஆச்சி பெரிய உழைப்பாளி. தன் வேலைகளை மிகவும் மகிழ்ச்சியாகச் செய்வாள். இத்தனைக்கும் அவள் வாழ்க்கையில் சந்தோஷப்படும்படியாக ஏதுமில்லை. பதினெட்டு வயதில் சொந்தக்கார கிழவன் ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டாள். இருபத்தி நான்கு வயதில் விதவையானாள். நாற்பத்தி ஏழு வயதில் வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றின் அனாதைப் பயலான கோட்டிக்கார சங்கரவேலு அவளுடன் ஒட்டிக்கொண்டான். ஆச்சி அவனைத் தன் சொந்த மகன் என்றே எல்லோரிடமும் சொல்லி வந்தாள். தள்ளாத காலத்தில் சுப்பிரமணியும் அவளுடன் ஒட்டிக்கொண்டான். மூவரும் சேர்ந்ததுதான் இட்லிக்கடை. ஆச்சிதான் கிட்டத்தட்ட எல்லா வேலையும் செய்வாள்.

இந்த வயதிலும் ஒரு பெரிய குத்துப்போணிக்கு மாவரைத்து இடுப்பில் தூக்கிக்கொண்டு கைலாசபுரத்திலிருந்து ஜங்ஷனுக்கு வந்துவிடுவாள். மடக்கு மேஜை, நான்கு நாற்காலிகள் இவற்றைத்  தூக்கிப்போடுவது, பரிமாறுவது, பில்தொகை சொல்லி கணக்குப் பார்த்து பணம் வாங்கிக் கல்லாவில் போடுவது இவ்வளவுதான் சுப்பிரமணிக்கு வேலை. சங்கரவேலு ஆச்சிக்கு எடுபிடி. உண்மையில் அவன் எந்த வேலையும் செய்யமாட்டான். வாட்ட சாட்டமாய் இருப்பான். முப்பதோ, நாற்பதோ, ஐம்பதோ எது வேண்டுமானாலும் அவன் வயதாய் இருக்கலாம். அவன் மாதிரி உடல்வாகு உள்ளவர்களைச் சாதாரணமாகத் தீவெட்டித் தடியன் என்றழைப்பார்கள். தொப்புளுக்குக் கீழே லுங்கியை இறக்கிக் கட்டிக்கொண்டு மேலே ஒரு அழுக்குத் துண்டை இறுக்கி பெல்ட் மாதிரி கட்டியிருப்பான். சட்டை போடமாட்டான். சும்மாவே உடாகார்ந்திருப்பான். திருச்செந்தூர் முருகனின் தெய்வீக அருள் இருப்பதால்தான் அவனுக்கு சாப்பிடுகிற சாப்பாடு செமிக்கிறது என்பாள் ஆச்சி. சங்கரவேலுவுக்கு எது தெரிகிறதோ இல்லையோ சதா நேரம் என்ன என்று தெரிந்தே ஆகவேண்டும். அதையும் மற்றவர்களிடம் சரியாகக் கேட்கத் தெரியாது. சாப்பிடுகிறவர்கள், சாப்பிடாதாவர்கள், போகிறவர்கள், வருகிறவர்கள் யாராக இருந்தாலும் அவனுக்கு நேரம் தெரியவேண்டும்போது அவர்களை வழி மறித்து ‘காலம் என்ன?’ என்று கேட்பான். அதற்கு பதிலாய் சரியான மணிதான் சொல்ல வேண்டுமென்பதில்லை. உண்மையில் என்ன பதில் வேண்டுமானாலும் சொல்லலாம். உதாரணத்துக்கு இப்போது நடக்கிற கூத்தை பாருங்கள்:

‘காலம் என்ன?’

“காலம் அழிவு காலம்டா சங்கரவேலு. சீவலப்பேரி சுடலைமாடசாமி எங்கிட்ட சொல்லுச்சு. சீவனுள்ள மேகம் ஒண்ணு தரையெறங்கி கூத்தாடும் அந்தன்னைக்கு எல்லாம் அழியும்னு மாடன் துடியான தெய்வம்லா. காலம் அழிவு காலம்டா சங்கரவேலு”

‘ஏ ஆச்சி, ஒன் சொள்ள மாடன் பேச்ச விடமாட்ட? சதா இதே பேச்சு ஆறுமுவத்துமங்கலத்துல போயி பேயோட்டுனாத்தான் சரியா வருவ ஆத்தாவும் பிள்ளையும் வந்துட்டாங்கய்யா பொளப்ப கெடுக்க”

“எங்கிட்ட சாமி சொன்ன நாலாமத்து நாளு திருநெல்வேலிக்கு பொயலும் வெள்ளமும் வந்துச்சே அதுக்கு என்ன சொல்லுத நீ? கைலாசபுரம் முழுக்க முங்கிப்போச்சு. ஆத்துல பாலத்துக்கு மேல தண்ணி போச்சு. மேகம் தரையிறங்கி கூத்தாடல? கடைசி அம்பது வருசத்துல இப்டி ஒரு வெள்ளம் உண்டுமாலே? உண்டுமா? ஏலே உண்டுமா? ஏதோ பேச வந்துட்டான். மாடசாமியைப் பத்தி பேசின நாக்க இழுத்து வச்சு அறுத்துப் போடுவேன் ஆமா”

“பெரிய குறிகாரி இவ. போ ஆச்சி. சும்மா இருப்பியா. ஒனக்கு வேல செஞ்சு மடுத்துருச்சு. ஏதுடா சாக்குன்னு பாத்த. வெள்ளம் வந்த பெறவு வேல செய்ய மாட்டேங்கிர. ஒன்னச் சொல்லியும் குத்தமில்ல. வாழ்க்கைல ஒழைச்சு ஒழைச்சு நீயும்தான் என்னத்தக் கண்ட?”

ஆச்சி பதில் பேசவில்லை. சுப்பிரமணிதான் அவனுடைய வழக்கமான கடைசி அஸ்திரமான ‘வாழ்க்கைல நீ என்னத்த கண்ட?’ என்பதைப் பிரயோகித்துவிட்டானே, இனி எப்படி அவள் பதில் சொல்லுவாள்? சுப்பிரமணி அடிக்கடி ஆச்சியிடம் இந்தக் கேள்வியைக் கேட்பான். எந்தவித சுயபிரக்ஞையும் இல்லாமல் வேலை வேலை என்று மட்டுமே இருந்த ஆச்சியை இந்தக் கேள்வி பல சமயம் நிலை குலைய வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இதுவெல்லாம் என்ன கேள்வி என்பதுபோல அலட்சியமாய் இருந்தாள். சுப்பிரமணி அடிக்கடி கேட்க கேட்க யோசித்து பதில் சொல்லவேண்டும் என்று மனத்திற்குள் சங்கல்பம் எடுத்துக்கொண்டாள்.

ஒரு நாள் விடை கிடைத்துவிட்டது போல தோன்றியவுடன் உடனடியாக சுப்பிரமணியிடம் சென்று பெருமையாக, “ஏலே சுப்பிரமணி, வாழ்க்கைல நான் என்னத்தக் கண்டேன் என்னத்தக் கண்டேன்னுட்டு சும்மா நீ கேப்பிலா. நா நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் பாத்திருக்கன்லாலே?” என்றாள். சுப்பிரமணி அதற்கு அப்படி விழுந்து விழுந்து சிரித்திருக்கத் தேவையில்லைதான். அவனோடு கிட்டத்தட்ட ஒரு மாசம் அவள் முகங்கொடுத்தே பேசவில்லை. சுப்பிரமணி தனக்குத் தெரிந்த அத்தனை தகிடுத்தத்தங்களையும் கருவிகளாய் பயன்படுத்திதான் ஆச்சியை சமாதானம் செய்ய முடிந்தது. நெல்லையப்பர் கோவில் தேரோட்டம், திருச்செந்தூர் சஷ்டி விழா, பாஞ்சாலங்குறிச்சி ரேக்ளா பந்தயம், சுடலைமாடனுக்குரிய பங்குனி உத்திரக் கொடை ஆகியவற்றை ஆச்சி வாழ்க்கையில் கண்ட பெரிய விஷயங்களாக சுப்பிரமணி ஏற்றுக்கொண்டான் அல்லது ஒரு சமயம் ஏர்றுக்கொள்வது போல நடித்தான். ஆச்சிக்கு உள்ளுக்குள் அவன் தான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நன்றாகவே தெரியும். அவன் ஒப்புக்கொண்டிருந்தான் என்றால் நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி கேட்பானேன்? உண்மைக்கும் பெரிய திருவிழாவில் பங்கேற்பதை விட வேறென்ன பெரிய விஷயம் வாழ்க்கையில் இருக்க முடியும் என்று ஆச்சிக்குப் புரியவில்லை. கோபத்தில், உன் சங்காத்தமே வேண்டாம் என்று சுப்பிரமணியை விரட்டி விட்டு விடலாமா என்று கூட யோசித்தாள். ஆனால் கதை நடக்கவேண்டுமே! சங்கரவேலுத் தடியனை வைத்துக்கொண்டு தனியாக வியாபாரம் செய்ய முடியுமா என்ன? இது தவிர தன்னை அங்கீகரிக்க மறுக்கின்ற இன்னொருவனின் வன்முறைக்கு ஆட்பட்டு வாழ்வதுதானே நம் எல்லோருடைய வாழ்க்கையும்? ஆச்சி மட்டும் இந்தப் பொது விதிக்கு விலக்காக முடியுமா? இல்லையென்றால் தன்னை அங்கீகரிக்காத மற்றவனைக் கொன்று தீர்த்துவிடவா முடியும்? ஒருவரின் ஜீவித நியாயத்தை கேள்விக்குள்ளாக்க இன்னொருவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்ற கேள்வி சத்தியமானதுதான். ஆனால் நம் சரித்திர விபரீதங்கள் எல்லாம் ஒருவரின் ஜீவித நியாயத்தை மற்றொருவர் மறுக்கப் போய்  விளைந்த விபத்துக்களின் தொகுதிதானே? ஆச்சி இந்த மாதிரியெல்லாம் சிந்திக்காமலேயே, மௌனமான நாகரீக உடன்படிக்கைக்கு உடபட்டவளாய் சுப்பிரமணியைத் தொடர்ந்து வேலைக்கு வைத்துக்கொண்டாள். அதே சமயத்தில் தான் கண்டுபிடித்த உண்மையின் பல பரிமாணங்களையும் சுப்பிரமணிக்கு உணர்த்தவே ஆச்சி பல தடவை முயன்றாள். இரவு கண் முழித்ததன் அயர்ச்சி நீங்கக் காலை முழுவதும் தூங்கிவிட்டு மதியம் மூன்று மணி வாக்கில் ஆச்சி வழக்கமாக மாவாட்ட உட்காருவாள். அப்போதெல்லால் சுப்பிரமணி முழித்துக்கொண்டே தூங்குவது போல ஒரு கள்ளத் தூக்கம் போட்டுச் சோம்பேறித்தனமாய் படுத்துக் கிடப்பான். மாவை ஒதுக்கி உதவி செய்யும் சங்கரவேலு ‘காலமென்ன காலமென்ன‘ என்று படுத்த ஆரம்பித்த உடனேயே ஆச்சி ‘நீயாவது கேளுடா சங்கரவேலு’ என்று ஆரம்பித்து திருவிழாக்களின் அருமை பெருமைகளை அளப்பாள். வருடா வருடம் திருவிழா பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், பக்தி பரவசம், ஏராளமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் தெய்வத்திற்கு அதிகரிக்கின்ற சக்தி நின்று கொல்லும் சக்தியாகச் செயல்படுவது என ஆச்சியின் வளவளப்பு நீண்டுகொண்டே போகும். 

சுப்பிரமணி  கிட்டத்தட்ட ஒரு வாரம் பொறுத்துப் பார்த்தான். அதற்கு மேல் அவனுக்கு சகிக்கவில்லை. முதலில் தன்னைத் தூங்கவிடாமல் கிழவி அறுக்கிறாள் என்று கத்திப்பார்த்தான். பிறகு அவள் சங்கரவேலுவிடம் கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே சினிமாப் பாடல்களை பெருங்குரலில் பாடிப்பார்த்தான். எதற்கும் ஆச்சி அசரவில்லை. சுப்பிரமணியை ரெண்டு அதட்டல் போட்டுவிட்டு அவள் பாட்டுக்குத் திருவிழாப் பெருமை பேசினாள். இதற்கு ஒரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்ற வீறாப்பு சுப்பிரமணிக்கு வலுத்துவிட்டது. ஒரு நாள் சங்கரவேலுவைப் பிடித்து வைத்து ‘என்னாலே தேரோட்டம், கொடைன்னு ஒங்கம்மா கத அளக்கா? திருவிழான்னா மொற மாப்பிள்ள பசங்க மொறப்பொண்ணுங்கள பாப்பானுங்க. ரௌடிப் பயலுக நாலு பொம்பளகள கையப் புடிச்சு இளுப்பானுக’ என்று சுப்பிரமணி சொன்னதற்கு சங்கரவேலு கிளுகிளுவென சிரித்தான். “பாரு, ஒனக்கே சிரிப்பாணி பொங்குது. ஒங்க ஆத்தா ஏன் ஒனக்கு தேரோட்டக் கத சொல்லுதான்னு இப்பல்ல புரியுது” ஆச்சி காது படத்தான் அவன் இப்படிச் சொன்னான். ஆச்சிக்குத் துணுக்கென்றது. “என்னலே சொல்லுத?” என்றான் கோபமாக. “ சங்கரவேலுவுக்கு கலியாணம் வேண்டாமா ஆச்சி? அதான் ஆச உண்டாக்குதேன்” இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுப்பிரமணி நிம்மதியாக மத்தியானங்களில் படுத்துக்கிடந்தான். ஒரு முறை சங்கரவேலு “ காலம் என்ன?” என்றதற்கு ஆச்சி “ சும்மா கிட சவமே” என்றாள்.

ஆச்சி அதன் பிறகு மௌனமாக இருந்தாளே தவிர அவளுக்கு சுப்பிரமணி மேல் உள்ளுக்குள் கடுங்கோபம் கனன்றுகொண்டிருந்தது. இந்த சனியன் பிடிச்ச பயல ஒழிச்சுக் காட்டிவிடணும்னு மனத்திற்குள் கருவிக்கொண்டாள். ஆனால் சுப்பிரமணி இல்லாவிட்டால் யார் இட்லிக்கடைக்கு வரும் குடிகாரர்களையும் ரௌடிப்பசங்களையும் சமாளிப்பது? அதிகாலையில் இட்லிக்கடையில் இருந்து திரும்பிய பின் அந்த ஆயாசத்திலும் ஆச்சிக்குத் தூக்கம் வருவது சிரமமாக மாறிவிட்டது. சுப்பிரமணியை எப்படியாவது கதறக் கதற அடித்துவிடவேண்டும் என்று ஒரு சமயமும் தெய்வம் அவனை சரியானபடி தட்டிக்கேட்கும் என்று இன்னொரு சமயமும் நினைத்துக்கொள்வாள்.

ஆனால் சுப்பிரமணிக்கோ தான் ஆச்சியின் வாழ்க்கையின் ஆதார மையங்களை குறி வைத்துத் தாக்கி வருகிறோம்  என்று சத்தியமாகத் தெரியாது. அவனைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையேனும் சலித்துக்கொள்ள வேண்டும். சலிப்பே ஏற்படாத அளவுக்கு திருப்தியோடு  எப்படி ஒருவர் வாழமுடியும்? அதிலும் இளம் வயதில் விதவையான இந்தக் கிழவி, வெந்ததைத் தின்று விதி வந்தபோது சாவோம் என்றிருக்கக்கூடிய இந்தக் கிழவி, உழைப்பைத் தவிர வேறெந்த இன்பத்தையும் அடையாத இந்தக் கிழவி ஒரு முறை கூட சலித்துக்கொள்ளாமல் இருப்பது ஏன்? இப்படியெல்லாம் சுப்பிரமணி யோசிக்கவில்லையென்றாலும் ஆச்சி பெரிய கர்வி என்று அவன் நினைத்ததில் அவன் அறியாத இந்தப் பின்புலம் இருந்தது. அந்தப் பின்புலம் சோதிடம், சூதாட்டம், விதி ஆகியவற்றின் மேல்  சுப்பிரமணி வைத்திருந்த நம்பிக்கையால் உருவானது என்று சொல்லலாம்.

திருநெல்வேலி ஜங்ஷனில் நன்னாரி சர்பத் விற்றுக்கொண்டிருந்தவனெல்லாம் நான்கடுக்கு மாளிகை கட்டியது எப்படி? எல்லாம் லெக்கினாதிபதி அருள். மூலைக்கு இரண்டு அல்வாக் கடை இருந்தும் ஒரே கடையில் போய் அத்தனை கூட்டமும் சாரச் சரிய நிற்பதேன்? புதன் அருளால் கிடைத்த ஜன வசியம். பண்ணையார் குடும்பத்தில் பிறந்த சங்கரவேலு கோட்டிக்காரனாய் திரிவது ஏன்? நீசமடைந்த சந்திரனின் கொடுப்பினை. இது போல பலவாறாக சுப்பிரமணி தனக்குள்ளே பேசிக்கொள்வான். ஆச்சியின் நிம்மதியான திருப்திதான் எந்த கிரகத்தின் சதி என்று அவனுக்கு விளங்கவேயில்லை. ஆச்சி மிகப் பெரிய அதிர்ஷ்டக்காரி என்று முதலில் நம்பிய அவன் அவள் கையால் நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, பொங்கல் பம்பர், அஷ்டலட்சுமி என்று பல லாட்டரி டிக்கெட்டும் வாங்கிப் பார்த்தான். பெருத்த நஷ்டம் ஏற்பட்டதுதான் மிச்சம். தாயக்கட்டம் விளையாடினால் கூட ஆச்சியின் காய்கள் கிடந்து தெவங்கும். காய்கள் கொத்துப் பட்டால் திகையவே திகையாது. ஒரு சிவராத்திரி கண் விழித்து விளையாடினாலும் ஆச்சி ஒரு காய் கூட பழமேற்ற மாட்டாள். ஆனால் ‘காலமென்ன’ என்று முணுமுணுத்துக்கொண்டே கட்டைகளை சங்கரவேலு உருட்டினானென்றால் விருத்தமாய்க் கொட்டும். முதலில் பழம் போவான். மற்றவர்களின் காய்களை நிசாரமாய்க் கொத்தித் தள்ளிவிடுவான். தன் ஜாதகத்தின் தசாபுத்திக்கேற்ப கிரகங்களைக் குளிப்பாட்டி தன் எதிர்காலத்தை சுபிட்சமாக்க முடியுமென நம்பிய சுப்பிரமணியின் வாரந்திர அர்ச்சனை போன்ற செயல்களை கல்யாணி ஆச்சி, சங்கரவேலு ஆகியோரின் இயல்பான வாழ்க்கை ஏதோ ஒரு விதத்தில் அர்த்தமற்றதாக மாற்றிக்கொண்டிருந்தது. தன்னுடைய செயல்களின் அர்த்தமற்ற தன்மையில் விளைந்த சோகத்தை மறப்பதற்கே ஆச்சியின் வாழ்க்கை அபத்தமானது என்ற பொருள்பட பேசி ஆச்சியை சுப்பிரமணி நோகடித்து வந்தான் என்று விளக்கம் சொல்ல இடமிருக்கிறது. ஒரு வேளை இப்படிப்பட்ட விளக்கங்கள் எல்லாமே பொய்யோ என்னவோ யார் கண்டார்கள்? ஒரு வேளை சுப்பிரமணி ஆச்சியின் மேல் உண்மையான கரிசனத்தினால் அவளைத் துன்புறுத்துகிறோம் என்ற உணர்வேயில்லாமல் இப்படியெல்லாம் பேசி வந்திருக்கலாம். உண்மைக்குத்தான் எப்பொழுதுமே பல பரிமாணங்கள் உண்டே?

தன் திருவிழாப் பெருமைகள் சுப்பிரமணியிடம் தோற்றுவிட்டதைத் தொடர்ந்து ஆச்சி தன் சமையல் திறனைப் பற்றி வளவளக்க ஆரம்பித்தாள். இந்தப் பெருமையின் அவல முடிவு சங்கரவேலு தலையில் போய் முடியும் என்று அப்போது யார்தான் நினைத்திருக்க முடியும்? இட்லிக்கடைக்குக் கூட்டமே தன்னுடைய சமையல் திறனால்தான் என்று ஆச்சி அளந்து கொட்டியதை சுப்பிரமணி அந்த நேரம் சகித்துக்கொண்டிருக்கலாம் அவன்தான் பிசாசுப் பையல் ஆயிற்றே! சும்மாவா இருப்பான். அவன் நிதானமாக எப்படி இரவு நேரத்தில் வேறு கடைகள் இல்லாததால் ஆச்சி கடைக்குக் கூட்டம் வர நேர்கிறது என்பதை விளக்கிச் சொன்னான். ஆச்சியின் கைத்திறமையை பாராட்டுகிறவர்கள் அனைவருமே துட்டு ஒழுங்காகத் தராதவர்கள் என்பதையும் அவன் திட்டவட்டமாக நிரூபித்தான். இச்சம்பவத்திற்கு மறுநாள் ஆச்சி முற்றிலுமாக நிதானமிழந்தாள். என்ன செய்கிறோம் என்ற ஓர்மையே இல்லாமல் ஒரு நாள் மதியம் சின்ன தவறு ஒன்றிற்காக சங்கரவேலுவை விறகுக்கட்டையால் அடி அடியென்று அடித்துத் நொறுக்கித் தள்ளிவிட்டாள். ஆச்சியின் கோபத்தையே அறியாத சங்கரவேலு ‘காலமென்ன காலமென்ன’ என்று கதறி அழுதான். சுப்பிரமணிதான் ஆச்சியிடமிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. அப்போதும் அவன் ஆச்சியை வாழ்க்கைல நீ என்னத்த கண்ட என்று திட்டினான். மனம் வெம்பி ஆச்சி நொறுங்கிப் போனாள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஆனாலும் ஆச்சி விடவில்லை. சாப்பிட வருகிறவர்களிடம் சரியான பாக்கித் தொகையைக் கொடுக்காமல் சுப்பிரமணி ஏமாற்றுகிறான் என்று ஒரு நாள் கூச்சலிட்டாள். சுப்பிரமணி பதிலுக்கு கத்தினான். விவகாரம் பெரிதாகிவிட போலீஸ், லஞ்சம், கேசு, அடிதடி என்றாகிவிட்டது. முழு வியாபாரத்தையும் ஏறக்கட்ட வேண்டியதாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு வாரத்தை அவர்கள் அரை வயிற்றுக் கஞ்சியுடனும் பட்டினியோடும் கழிக்க வேண்டியதாயிற்று. பசி பொறுக்காத சுப்பிரமணி எரிச்சலின் உச்சகட்டத்தில் இருந்தபோது ஆச்சி சங்கரவேலுவிடம் அளக்க புதுப்பெருமை ஒன்றைக் கண்டுபிடித்தாள். 

“ஏலேய் சங்கரவேலு, அரளில எத்தன அரளி உண்டு தெரியுமாலே? நா சொல்லுதன் கேள். வெள்ளரளி, வெள்ள அடுக்கரளி, செவ்வரளி, செவ்வடுக்கரளி, கஸ்தூரி அரளி, ஆத்தரளி, வெள்ளக்காசரளி, சிவப்புக்காசரளி, தங்கரளி, சிறு தங்கரளி, மலையரளின்னுட்டு அரளி பதினோரு வகை. அரிசி எத்தன உண்டு தெரியுமா? “புழுங்கலரிசி, பச்சையரிசி, கறுப்பு நெல்லரிசி, மட்டை நெல்லரிசி, மலை நெல்லரிசி, அருணாவரிசி, உலுவாவரிசி, ஏலவரிசி, கார்போக அரிசி, விளவரிசி, வெட்பாலை அரிசி… கடச்சரக்கு என்னவெல்லாம் தெரியுமா? இஞ்சி, ஏலம், கடுகு, சாதிக்காய், நீர்வெட்டிமுத்து, ரோசாமொட்டு, வெந்தயம், அதிமதுரம், காசுக்கட்டி, கோரோசனை, மஞ்சள், லவங்கப்பத்திரி …..” பட்டியல் நீண்டு கொண்டே போனது. தூக்கமின்மையால் சிவந்த கண்களோடு தலைவிரி கோலமாய் உட்கார்ந்திருந்த ஆச்சி பட்டினியால் கரகரத்த குரலில் தொடர்ந்து விதவிதமான பட்டியல்களை அடுக்கிக்கொண்டே போனாள். வாழ்வின் அந்தி முற்றத்தில் தனக்குத் தெரிந்த பட்டியல்களையெல்லாம் வாரி இறைத்துவிட்டு அடங்கிவிட வேண்டும் என்ற வெறியில் அவள் பேசுவது போலத் தெரிந்தது.

முதலில் போனால் போகிறது என்றிருந்த சுப்பிரமணி நேரம் ஆக ஆக பொறுமையிழந்தான். பக்கத்து வீட்டிலிருந்து சுடலையாண்டியை கூட்டி வந்து ஆச்சியின் பட்டியல்களை விட நீண்ட பட்டியல்களை மனப்பாடமாக ஒப்பிக்க வைத்தான். சுடலையாண்டி நாலாங்கிளாஸ்தான் படிக்கிறான். கெட்டிக்காரப் பயல். ஆச்சி முதலில் மனம் தளரவில்லை. ஆனால் சுடலையாண்டி உரங்களின் வீரியத்திற்கேற்ப ஓங்கி வளரும் விதவிதமான வாயில் நுழையாத ஆங்கிலப் பெயர்கள் கொண்ட அரிசி வகைகளை அடுக்கியபோது ஆச்சிக்கு புறவுலகம் விளங்கிக்கொள்ள இயலாததாய்ப் போயிற்று. சுடலையாண்டி கூறிய அரிசி வகைகள் பயிரிடப்படும் முறைகளை அறிய  ஆச்சி பிரம்மப் பிரயத்தனம் செய்தாள். ரசாயன உரங்களின் தன்மையை அவளுக்கு யாராலும் விளக்க இயலவில்லை. அவளுக்குப் புரிந்ததெல்லாம் பயிருக்கு அடிக்கிற பூச்சிக்கொல்லி மருந்தெல்லாம் விஷம் என்பதுதான். சுப்பம்மாள் மகள் பாப்பா அந்த விஷத்தைக் குடித்துதான் செத்துப்போனாள் என்பது கைலாசபுரத்தில் பிரபலமான கதை.

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப்பின் கடையைத் திறந்தபோது எல்லாமே சுமுகமாக நடக்கும்போலத்தான் இருந்தது. ஆனால் ஆச்சிக்குத் திடீரென்று இளகிவிட்டது. கடையில் நல்ல கூட்டம். ஆச்சி திடீரென்று விஷ அரிசி விஷ இட்லி என்று கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டாள். கடைத்தெருவெங்கும் ஒரே களேபரமாகிவிட்டது. 

இனிமேல் திருநெல்வேலி ஜங்ஷனில் கடை வைத்து பிழைக்க முடியாது என்றாகிவிட்டது நிலைமை. சுப்பிரமணி தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டான். புயலடிப்பதற்கு நான்கு நாட்கள் முன்பு இச்சம்பவம் நடந்த இரவில்தான் ஆச்சிக்கு அந்தக் கனவு மீண்டும் வந்தது. 

அந்த விசித்திர கனவையும் விவரித்துதான் ஆக வேண்டும். தங்க அரளிப்பூக்களைப் போல சூரியன் பிரகாசித்துக்கொண்டிருக்கிற முன் மாலை நேரம். சங்கரவேலு தன் விகார இளிப்புடன் சூரியனை மறைத்து மேற்கு நோக்கி ‘காலமென்ன காலமென்ன‘ என்று நடந்துகொண்டிருக்கிறான். அவன் காலடியில் முன்பொரு காலத்தில் மூன்று போகம் விளைந்த வயற்காடு நெருஞ்சிமுள் தோட்டமாய் விரிந்து கிடக்கிறது. நெருஞ்சி முள்புதர்களைச் சுற்றித் தேள்களும் பூரான்களும் கருநாகங்களும் மண்டிக்கிடக்கின்றன. சூரியனை நோக்கி தலைவிரிகோலமாய் தன்நிர்வாணம் மறைக்க நாதியற்று சங்கரவேலு ‘காலமென்ன காலமென்ன‘ என்று ஓலமிட்டு ஓடுகிறான். ‘விஷம் பூக்கும் காலமடா‘ சங்கரவேலு என்கிறாள் ஆச்சி. இவ்வாறு கதறி கதறி அழுதுகொண்டே சங்கரவேலுவை அடி அடியென்று அடிக்கிறாள். சங்கரவேலு கெஞ்சுகிறான். அழுகிறான். அவன் உடலெங்கும் ரத்தம் பீறிடுகிறது. ஆச்சி விடுகிறாளில்லை. திருவிழாக்கள் காணாத சுடலைகளின் பீடங்களின் வழி அவர்கள் ஓடுகிறார்கள். ‘சீவனுள்ள மேகம் ஒண்ணு தரையெறங்கிக் கூத்தாடும்‘ என்று வீறிடுகின்றன சுடலை பீடங்கள். ‘விழு தாயம்‘ என்று சொக்கட்டான் உருட்டுகிறான் சுப்பிரமணி. அவன் நெருஞ்சி முட்களையெல்லாம் டிராக்டரினால் உழுது போடுகிறான். உடைமர விதைகளை எல்லா இடங்களிலும் அவன் தூவத் தூவ ஆச்சி கழி கொண்டு சங்கரவேலுவை அடிக்கிறாள். ‘விஷம் பூக்கும் காலமடா சங்கரவேலு‘ என்று தொடர்ந்து அழுகிறாள். ஆச்சி இக்கனவின் நடுவில் பலமுறை எழுந்து எழுந்து உட்கார்ந்தாள். சங்கரவேலு படுத்திருக்கும் இடத்திற்குப் போய் போய் பார்த்துவிட்டு வந்தாள். பெரும் குரலெடுத்து சில நேரம் கேவிக்கேவி அழுதாள். ஏன் எதற்கு என்று அவளுக்கு எதுவுமே விளங்கவில்லை. கனவு அவளை விடவில்லை. தீக்கனவின் தீராத வேதனை அவளை கடுஞ்சுரத்தில் தள்ளியது. சுடலைமாடசாமி அவளை இட்லி அவிக்க வேண்டாம் என்று சொல்லியதுதான் இக்கனவின் பொருள் என்று அவள் உறுதியாக நம்பினாள். சுப்பிரமணியும் சங்கரவேலுவும் அவள் நம்பிக்கையை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும் அவள் எதிர்பார்த்தாள். 

புயலடித்தபின் இரு வாரங்கள் அவள் பிடிவாதமாய் எந்த வேலையும் செய்ய மறுத்துவிட்டாள். கடைசி ஒரு நாள் எதுவுமே பேசாமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தி வேளையில் குத்த வைத்த வாக்கிலேயே கண்மூடாமல் மரித்துப் போனாள் கல்யாணி ஆச்சி. வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறி அழுத சுப்பிரமணிதான் கொள்ளி வைத்தான். சங்கரவேலு ‘காலமென்ன காலமென்ன‘ என்றபடி இன்னும் திருநெல்வேலி ஜங்ஷனில் திரிந்துகொண்டுதான் இருக்கிறான். 


-------------------------------------------------------------------------------------------------

குறிப்பு: ஸில்வியா என்ற புனை பெயரில் நான் எழுதிய இந்தக் கதை தமிழ் ‘இந்தியா டுடே‘ இதழில் 1990 இல் வெளிவந்தது. பிறகு பல தொகுப்புகளில் நான் அறிந்தும் அறியாமலும் சேர்க்கப்பட்டு விரிவான வாசக தளத்தினை இந்தக் கதை எட்டியிருக்கிறது. காவ்யா பதிப்பகம் வெளியிட்ட பேராசிரியர் முனைவர் சு.சண்முகசுந்தரத்தினால் தொகுக்கப்பட்ட ‘நெல்லைச் சிறுகதைகள்’  தொகுப்பில்  இக்கதை பிரசுரமாகியிருக்கிறது. ‘நெல்லைச் சிறுகதைகள்’ தொகுப்பு முதல் பதிப்பு  2000 ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு 2011 ஆம் ஆண்டிலும் வெளிவந்திருக்கிறது. ‘நெல்லைச் சிறுகதைகள்' தொகுப்பினை எனக்கு அனுப்பித் தந்து இந்தக் கதையை இங்கே வெளியிட உதவி செய்த நண்பர் சண்முகசுந்தரத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். 


Friday, December 28, 2012

தேவதேவனுக்கு விருது என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்


தேவதேவனுக்கு இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது கொடுக்கப்பட்டதால் இந்த விருதின் கௌரவம் மேலும் உயர்ந்திருப்பதாக எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.  ஜெயமோகனும் அவருடைய விஷ்ணுபுரம் விருது அமைப்பின் நண்பர்களும்  தேவதேவனுக்கு சிறப்பாக விழா எடுத்தமைக்காக என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேவதேவனுடைய வலைத் தளத்தில் அவருடைய கவிதைகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவருடைய சமீபத்திய கவிதைகளில் பின் வரும் மூன்று கவிதைகளும் நான் குறித்து வைத்தவை.நான் வாய் பேசத் தொடங்கியதுமே
கீழ்வானிலே உதித்த விடிவெள்ளியை
அழகுதேவதை வீனஸை
எந்த ஒரு விண்மீன் வழிகாட்டலுமின்றிக்
காணக் கிளர்ந்தவர்கள் போல்
ஓடோடியும் வந்து
எத்தனை காதலுடன்
உன் இரு கைகளாலும்
என் கைகளைப் பற்றி
உருகி நின்றாய் என் தெய்வமே!

திடீரென்று உன் கண்களிலே
ஒரு சந்தேகம், கலக்கம்.
பற்றி நின்ற ஒரு கையை மெல்ல விடுத்து
என் தோளோடு தோளாய் மெல்ல நெருங்கி
அக் கைகளால் என்னை ஆரத்தழுவியபடியே
தொட்டுத் தடவித் தட்டிக் கொடுக்கும் பாவனையில்
எனது முதுகுப் பரப்பில் எதையோ
உன் விரல்கொண்டு தேடுகிறாய்.

என் தகுதியின்மையைக்
கண்டுபிடித்துவிட்டவன் போல்
என்னைத் துயருக்குள் தள்ளிய
என் விலக்கம் கண்டு
விம்மினேன், என் தெய்வமே!

இன்று சின்னங்கள் பலப்பலவாகி
எங்கும் பரவிநிற்கும்
உன் தீண்டலும் தீண்டாமையும்
என்னைச்சுடும்
எக் குற்றங்களையும் மன்னித்துவிடும்
காதற்பெருக்கின்
அழிவிலாப் பேரனுபவமன்றோ
என் தெய்வமே!
பாரதி,
உனக்குத் தெரியாதோ இது?
மானுடனாய்ப் பிறந்தது ஒரு பிறப்பு.
தோளில் மாட்டிக் கொண்ட பூணூலால்
நம்மை அசிங்கப்படுத்திக் கொண்டது
இன்னொரு பிறப்பு.
இதிலே
எல்லோருக்கும் பூணூல் மாட்டி-
அது நடவாது என அறிந்தே-
எல்லோரையும் நீ உயர்த்துவதாய்க்
கிளம்பியதன் அடியில் இருக்கும்
கயவாளித்தனமான பசப்பு
தேவையா பாரதி?
நம்மை மற்றவர்கள் அறிந்து கொள்ளுமுன்
நம்மை நாமே அறிந்து தெளிந்திருந்தால்
எவ்வளவு நன்றாயிருக்கும்?
ஆனால் இன்று ’தர்மாவேச’த்துடன்
இந்தியர்களனைவரையும்
இந்துக்களாக்கும்
’உயர்ந்த இதயங்களி’லெல்லாம்
வெட்கமின்றி வீற்றிருக்கிறாயோ
தேசிய மகாகவி பாரதி?மனசாட்சியற்றுத் தாழ்ந்த மக்களும்
கலைகளிலே ஜொலிக்கமுடியும் என்றால்
என்ன பொருள் தாயே?
கலைச் சித்தாந்தங்களைத் தமக்கேற்ப வளைத்து
வகுத்துக் கொள்வோம் என்பதுவா?

வெண்டாமரை மலரில்
உனக்கு முன்னே வீற்றிருக்கும்
போதிசத்துவரையா கேட்கவேண்டும்?

அன்பு
உயிர்மை
மீமிகை உணர்ச்சிப் பெருக்குக்கான
தூய்மை – இவற்றொடு
தர்மத்துடனும்
தாகத்துடனும்
துக்கத்துடனுமான
முழுவாழ்வுடன்
தொடர்பேயில்லாத கலைகளைக் குறித்துக்
கவலைப்படவும் தகுமோ, சொல்?

ரொம்ப ரொம்ப ரொம்பக் குறைவாகவே
கலைஞர்களில் கலைஞர்களை
நான் பார்த்திருக்கிறேன் தாயே,
என் வாணாளில்

Wednesday, December 26, 2012

சில்வியா எழுதாத கதை “மு என்ற இராமதாசு” | சிறுகதை


“மு என்ற இராமதாசு” என்ற சீர் மிகு கதையை சில்வியா என்ற அய்ரோப்பிய அம்மையார் பெயருடையவர் திருவள்ளுவர் ஆண்டு 2043 மார்கழித் திங்கள் எழுதினார் என்பது கெட்டியான சமக்காளத்தினால் வடிகட்டிய பொய். இந்தப் பரியை நரியாக்கிய படலம் முத்துக்குமாரசாமி என்ற புலவரால் இயற்றப்பட்ட சிற்றிதழ் ஓத்து ஒன்றில் புறனடைத் தகவலாகக் கொடுக்கப்பட்டு அதுவே உருசியன் மொழிபெயர்ப்புக்குள்ளாகி அதிலிருந்து சப்பானிய பாசைக்குச் சென்று மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறது. இப்படி தொடர்ந்து நீரில் உப்பைச் சேர்த்துக்கொண்டே போனால் மண்ணூறல் எடுவித்த நீரினை யார்தான் உலகுக்குக் காட்டுவது என்ற குமுகாய அக்கறையினால்தான் இந்த உலத்தத்தினை திண்ணைப் பள்ளி வழக்கின்படி இடுகிறேன்.

“மு என்ற ராமதாசு” புனைவு பழைய வைணவத் தொன்மம் ஒன்றில் மீனவப் பெண்ணாக சீதேவித் தாயார் தோற்றரவம் எடுக்க  சௌரிராசப் பெருமாள் அவரைக் கைத்தலம் பற்ற மீனவனாய் ஊருலவுத் திருமேனி கொண்டு செல்லும் நிகழ்வினையும்  இராமதாசு என்ற வழுக்கைத் தலை முதியவர் தான் கல்லூரி மாணவராய்  இருந்தபோது தனக்குப் புரையில்லாத திருமகள் ஒருவரின்பால் பொருந்தாக் காமத்தின்பால் ஈர்க்கப்பட்டு சிற்றுந்து ஒன்றில் சென்ற நிகழ்வின் நினைவலைகளையும் இணைக்கிறது. 

இதற்கு ஓத்து எழுதுகிற புலவர் முத்துக்குமாரசாமி இராமதாசு வேடம் தாங்கியிருக்கும் மு உண்மையில் கம்ப நாடன் இயற்றிய ஒப்பிலா இராமகாதையின் தலைமகனே உலகளந்த உத்தமனே இராமபிரானே என்று விளம்புகிறார். இந்தத் தலை கீழ் வவ்வலுக்கு திருகு தாளப் பெருமானன் முத்துக்குமாரசாமி “இல்லாரும் இல்லை, உடையாரும் இல்லை மாதோ!” என்ற கம்பனின் வரியையும் “ அத்தேவர் தேவர் அவர் தேவரென்றிங்ஙன், பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே, புத்தேதுமில்லாதென் பற்றரப் பற்றி நின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பி” என்ற மாணிக்கவாசகர் பாடலையும் கொண்டு கூட்டி பொருள் சொல்கிறார். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் என்ன முடிச்சு என நல்லுள்ளங்களில் வினா எழுமா எழாதா? இதைத்தான் பரியை நரியாக்கிய படலம் என்று முன்னிகையில் குறித்தேன். ஆவுடையாருக்கு நாமம் சாற்றுதலும், எம்பெருமானின் ஊருலவுத் திருமேனிகளுக்கு உத்திராக்கம் அணிவிப்பதுமே தன் கடன் பணி செய்து கிடப்பது என்று இறும்பூதியிருக்கிறாரோ புலவர் முத்துக்குமாரசாமி? அய்யா! ஒரு கண்ணால் தில்லை கனகசபாபதியின் நடனம் மறு கண்ணால் கோவிந்தசாமியின் கிடந்த திருக்கோலம் என்ற சிதம்பரத் திருக்காட்சி தற்கால இலக்கியப் பனுவலுக்கு திறனாய்வு ஓத்து எழுத ஒத்து வருமோ?

 முதலில் மீனவ பத்மினி நாச்சியாரைப்  பார்க்க மீனவ சரமும் (கைலி), கறுப்புக் கண்ணாடியும், கழுத்தில் வண்ணக் கைக்குட்டையும் அணிந்து மீனவக் குமுகாயத்தினர் சுற்றிக் கும்மாபம் போட மாசித் திருவிழாவின்போது சௌரிராசப் பெருமாள் ஊருலா போவதையும் சிற்றுந்தில் கறுப்புக் கண்ணாடி அணிந்து சீன்சு கால்ச்சட்டை அணிந்து குப் குப் என ரயில் வண்டி போல புகை விட்டுச் செல்லும் மு என்ற இராமதாசினையும் ஒப்பிடுவதே இமாலயக் குற்றம்.  இந்த முவன்னா ராவன்னாவைப் பார்த்தா பாடுவாள் எவளும் ‘கைத்தலம் பற்றக் கனா கண்டேன் தோழி’ என்று? 

பொய்யுரைப் புலவர் முவன்னா குவன்னா சாவன்னா இதற்குக் காட்டும் தருக்கம் என்ன? சமசுகிருதத்தை தெருமுனை சிற்றங்காடியில் தேத்தண்ணீர் வாங்குவதற்குக் கூட பயன்படுத்துபவர் அல்லரா அவர்? வேத காலத்திற்கு சென்றுவிடுகிறார். பாற்கடலைக் கடைந்தபோது ஆலாகால விசம் தோன்றியதே அதை உருத்திரன் இனிப்புருண்டை விழுங்கியது போல விழுங்கினாரே அப்போது உருத்திரனை பாத்திரமாகக் கொண்டு உண்மையில் விடமருந்தியவர் திருமாலே என வைணவ உரையாசிரியர்கள் சாத்தமுது படைத்திருக்கிறார்களாம். அது சாத்தமுதா திருக்கண்ணமுதா என்ற குடுமிப்பிடிச் சண்டை இப்போது வேண்டாம். இதை வைத்து முவன்னா குவன்னா சாவன்னா என்ன சில்லடிக்கும் வேலையை செய்கிறார் என்று பார்ப்போம். விடமருந்தி கண்டம் கருத்த உருத்திரனே திருமாலாகிவிட்டபடியால் அதே தருக்கத்தின்படி மீனவப் பாத்திரம் தரித்த சௌரிராசப் பெருமாளே மீனவன் என்று வாதிடுகிறார். எங்கே போய் முட்டிக்கொள்வது? இதைத்தான் கேட்பார் செவி சுடு கீழ்மை என நம்மாழ்வார் சுட்டினரோ? வானிலிருந்து நிலம் நோக்கிப் பொழிகிறது மாரி என்றால் விழுந்த துளி சலமே மாரி, வான் என்று எதிர் ஓத்து எழுதுகிறவரிடம் எங்களுக்கெல்லாம் காதுகுத்தி நெடுநாட்கள் ஆகிவிட்டன என்று மட்டுமே மறுமொழி தரஇயலும்.

கறுப்புக் கண்ணாடி அணிந்த இராமதாசு கதையில் மீனவப் பெண்ணுடன் கடற்கரையில் கலவி கொள்ளுமிடத்தே அந்த மீனவப் பெண் அப்பப்ப கிருட்டிண கிருட்டிண அம்மம்ம இராம இராம என்று ஒலியெழுப்புகிறாள். அய்ரோப்பிய இலக்கியங்களிலோ அய்ரோப்பிய நாரீமணிகள் உயர் குதிகுளம்பு சப்பாத்துக்கள் அணிந்த தங்கள் கால்களை உயரத் தூக்கி சேசுவே சேசுவே என்று ஒலியெழுப்புகிறார்களாம். கலவியின்போது அய்ரோப்பிய நாரீமணிகள் தங்கள் சப்பாத்துக்களை களைவதில்லை என்பதை 219 புறனடைகள் கொடுத்து நிறுவுகிற முவன்னா குவன்னா சாவன்னா இராமதாசு கதைப் பனுவலில் வரும் மீனவப்பெண்ணும் தன் மிதியடியை கலவியின் போது கழற்றவில்லை என்ற வெள்ளிடைமலை தகவலை உற்று நோக்கச் சொல்கிறார். அப்பப்ப அம்மம்ம என்று நாமே கத்தத் தோன்றுகிறதல்லவா? ஆனால் இந்த ஒரே ஒரு  பனுவல் உள்க் குறிப்பினை வைத்து மட்டுமேதான் இக்கதையின் ஆசிரியர் வெளி நாட்டு இலக்கியம் பயின்ற சில்வியா அம்மையார் என்ற முடிவுக்கு வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. மிதியடி கழற்றா கலவி என்பதுதானே அவருடைய கட்டுரைத்  தலைப்பு? என்னவொரு நெஞ்செழுத்தம்! என்னவொரு தலைக்கனம்! இந்த அம்மம்ம அப்பப்ப உரைக்கு ஆச்சு செல்லம்மா ஆச்சு என்ற ஆண்குரல் மூச்சிரைப்பினை சேர்க்கவில்லை என்று எதிர் எக்கு வைக்கும் புலவர்காள் மடல்களை யான் விரிவஞ்சி தவிர்த்தனன்.

குழம்பி ஒரு மிடறு தேத்தண்ணீர் மறு மிடறு எனக் குளகம் எழுதும் புளுகன் தற்காலத் திணைக்குறிப்புகள் தருகிறேன் பேர்வழி என சிற்றுந்தில் செல்லும் இராமதாசு காணும் கவின் காண் காட்சிகளில் வரும் மஞ்சள் நத்தி மலர்களை வேங்கை மலர்கள் என திரிப்பதன் உள் நோக்கம் என்ன? சங்கப் பாடலிலே குறிஞ்சிக் கலியினிலே  குன்றுகளிலிருந்து கொட்டும் அருவியில் நிறைந்திருக்கும் வேங்கை மலர்களைக் கண்டால் யானைகள் இரண்டு திருமகளின் மேல் நீரைச் சொரிவது போல இருக்கிறது என்றொரு குறிப்பு வருகிறது. நன்று. இதை எல்லோராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள் போல சிவந்த பொன்போன்ற நிறத்தவனாய் சீராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர் என்ற ஞானசம்பந்தர் பதிகத்தோடு இணைப்பதன் தேவை திருமகளே எரியொடு ஆடிய ஈசனின் பெண் வடிவே என நிறுவுவதற்குத்தானே?  இதற்குத்தானே மஞ்சள் நத்தி மலர்கள் வேங்கை மலர்களாய் மாறின? அய்யா முத்துக்குமாரசாமி பெருமகனாரே மாலுக்கு மூத்தவன் ஈசன்  அவனே முழு முதற் கடவுள் என நிறுவி என்ன கண்டீர்? 

புற சமயிகளான நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் என ஞானசம்பந்தர் அதே திருச்சிராப்பள்ளி பதிகத்திலே பாடுகிறாரே அவர்கள் வைணவ சைவ சண்டைகளைப் பார்த்து, கேட்டு எள்ளி நகையாடுவதற்கான நொறுக்குத் தீனி வழங்கியது அன்றி என்ன சாதித்தீர் நீர்? தற்கால இலக்கியத் திறனாய்வு ஓத்து எழுதுவதற்கு மரபிலக்கிய புறனடைகள் எதற்கு என தமிழ்க்குரவர் கேட்டே ஆக வேண்டிய சூழல் சூல் கொண்ட மேகமாய் நம் தலைகளின் மேல் உலவுகிறது.

ஒரே இதழ் அச்சாக்கம் பெற்று பிறகு காணாமல் போன ‘வைரசு’ என்ற இலக்கிய சிற்றேடே “மு என்ற ராமதாசு” கதையினை வெளியிட்டிருக்கிறது. வேறு எந்த பொத்தகங்களையும் வைரசு வெளியிட்டதாகவும் தகவல் இல்லை. இப்படிப் பெயர் கொண்ட இலக்கிய ஏட்டில் வெளிவரும் கதைகளுக்கு கிருமி நாசினியாய் திறனாய்வு எழுதுவதே சாலப் பொருந்தும். அதைச் செய்தாரா குதிரையிட்டது எத்தனை முட்டையெனெ கணக்கு எழுதும் மீயென்னா தெயென்னா முத்துக்குமாரசாமி என்றும் பார்த்து விடுவோம். 

இராமதாசு ஓட்டிச் செல்லும் சிற்றுந்தின் இலக்கம் த. நா. கஎகூஅ என்று முதல் பத்தியில் வருகிறது. இராமதாசு சௌரிராசப் பெருமாளாகவும் செல்லம்மா செம்படவ நாச்சியாராகவும் உருவு மாறி சீவாத்மா பரமாத்மாவோடு வருணம் மேயும் பெருமணல் உலகில் கலக்கின்ற பத்தியிலே தூரத்திலே நிற்கிறது அந்த சிற்றுந்து. இங்கே நான் எந்த முன்னூகத்தையும் முன்னிறுத்தவில்லை. பனுவலினுள் உள்ள சான்றுகளை மட்டுமே குவி ஆடி கொண்டு காண்கிறேன். அங்கே காணப்படுகிற இலக்கமோ த.நா. ககூஎஅ இராமதாசு முதல் பத்தியில் உதைத்து  எழுப்பி, சீழ்கை ஓலி எழுப்பி, மஞ்சள் நத்தி மலர்களைக் கம்பு தோறும் கண்டு களித்து தன் செம்படவத் தலைவியைக் காணத் துள்ளி வந்த சிற்றுந்து வேறு கடைசியில் கடற்கரையில் நிற்கின்ற சிற்றுந்து வேறு! வந்தவர் கதைத் தலைவன் இராமதாசுதானா என்ற அய்யம் எழுகிறதல்லவா? அங்கேதான் இருக்கிறது சூக்குமம். கடற்கரைக்கு வந்து சேர்ந்து தலைவியோடு கலந்த தலைவன் இராமதாசு அல்லன். செம்படவக் குமுகாயத்தினைச் சேர்ந்த கட்டிளம் காளை. பொருந்தும் காமம். தலைவனும் தலைவியும் ஒரே குமுகாயத்தினர் என்பதை சிற்றுந்தின் இலக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி என விளம்பிவிடுகிறது. எனவேதான் ‘மு என்ற ராமதாசு” கதையை சீர் மிகு கதையென கணித்தேன். செந்நாப்புலவன் நுதலியது தமிழ். காமாலைக் கண்ணர்கள் விரிக்கும் வஞ்சக வலை தாண்டி சூக்குமம் வெளிப்படும் விதத்தினை ஈண்டு காணும் தமிழ்கூறும் நல்லுலகம். இப்போது சொல்லுங்கள் எழுதியது சில்வியாவோ கில்வியாவோ என்ற வெளிநாட்டு அம்மையாராய் இருக்க இயலுமா? கண்டிப்பாய் இது உள்ளூர் சரக்குதான். சஞ்சலம் கொள்ளற்க. முதல் முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில் பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே எனக் கூறி அமைகிறேன். தெளியட்டும் முத்துக்குமாரசாமியின் சிந்தை. 

Saturday, December 22, 2012

மர்ம நாவல் | சிறுகதைஅறிவின் எல்லையைத் தேடிச் சென்ற மு. பைத்தியம் பிடித்துக் காணாமல் போனதும் அதற்காக விசனப்பட்டதும்.
நாபிக்கொடித் தரையில் ஊசலாட கிடுகிடுவென வளர்ந்த வெந்தாடிபூமியைத் தீண்ட அப்போதுதான் ஜனித்த ஆண் குழந்தையொன்று பனிக்காற்றின் வேகத்திற்கெதிரான தளிர் நடையில் திருநெல்வேலியில் அதிகாலை மூன்று மணி முப்பது நிமிடம் மூன்று நொடிக்குக் காணப்பட்டது. திரும்பிய வெளியெங்கும் வெள்ளையடிக்கப்பட்டச்சுவர்கள் கருங்கண்ணாடியாய் நிற்க சாக்கடைகளில் மல நாற்றம் ஸ்தூலமான அம்மணங் காட்ட அக்குழந்தை கண் உள் இறங்கிய, பற்கள் முன்நீண்ட, வயிறு உப்பிய விகார பிம்பமானது. அல்வாவைப் பார்த்த பட்டிக் காட்டானாய் நாபிக்கொடியில் ரத்தம் காய்வதற்கு முன் பிம்பத்தை நோக்கி நீண்ட கரங்களின் யத்தனிப்பில் மு.மு. என்ற சொல் ஊடக வெளியை நிரப்ப நான் பிறந்தேன். மு. வாகிய நான் பாலுக்காக முலைவற்றிய தாயை ஏக்கக்கண் கொண்டு ரொப்பிய போது தந்தையென்பவனது சுக்கிலப் பையின்கண், யான் வந்தமைந்த கணப்போது தொடங்கி, தாயென்பவளது சோணிதப்பையின் கண் சென்றடைந்த கணப் போதிற்கு முன் கணப்போது வரையுமாக என்னாலொறுவாறு அளவிடப் பட்ட கோடி ஒன்பது லட்சத்தறுபதினாயிரங் கணப்போது பரியந்தம் எவ்வகைத் தடைகளும் வாராதபடி பகுதிப் பேரணுவிற் கிடந்த என் அகத்தினும் புறத்தினும் அருவாகியும், உருவாகியும் சவித்தன் முதலியவின்றி அன்போடும் அருளோடும் பாதுகாத்திருந்த எதற்கு நன்றி சொல்வதென்று குழம்பிப்போய் கள்ளம் பெற்றேன். இந்த இந்தியத்துணைகண்டத்தில் முலைப்பால்லில்லாமல் சாகும் இருபது மில்லியன் குழந்தைகளின் நானும் ஒருவனல்ல என்ற மிகப்பெரிய ஆசுவாச உணர்வு ஒன்று போதாதா நான் நன்றி சொல்வதற்கு? ஆனால் யாருக்கு எதற்கு நன்றி சொல்வதென்று தான் தெரியவில்லை. கள்ளம் பெற்ற நான் சக சிறுவர்களின் உதவியினால் குரூரம் பெற்றேன். முதலில் தவளை நாய் ஆகியவற்றில் துவங்கலாம். தவளையைக் கை கால் வேறாகப் பிய்த்து கயிறுகளில் கட்டி ஆளுக்கொன்றாகப் பிடித்துக் கொண்டு சிந்துபூந்துறையின் தெருக்களில் வெறிபிடித்தவன்போல கத்திக்கொண்டே ஓடுவதில்தான் என்னவொரு ஆனந்தம்! கடைசியில் அதை ஒரு பைத்தியச் சிறுவன் மேலோ அல்லது விதவைக் கிழவியின் மேலோ வீசியெறிய வேண்டும். சைத்தன்களா என்று அவர்கள் ஏசுவதை காதுகுளிரக் கேட்கவேண்டும். பின்னர் நாய். நல்ல கூர்மையான ஜல்லிக் கல்லாய் இருந்தால் நல்லது அதன் வெள்ளை வயிற்றிலோ புட்டத்திலொ  ணங்கெண்று பட வேண்டும். நாய்களை விட என்னொத்த சிறுமிகள் மாட்டிக் கொண்டால் அதில் கிடைக்கும் பேரானந்தம்…… ஆஹா இதை விடப் பெரிய வீடுபேறென்றும் உளதோ தாண்டவக்கோனே? தெருவுக்குத் தெரு இங்கு சாக்கடைச் சுத்தம் செய்து மலம் கலந்த அழுக்கைக் குவித்து வைத்திருப்பார்கள். வருகின்ற சிறுமியின் மூஞ்சியில் டக்கென்று எடுத்து வீசிவிட வேண்டும். நாய்க்குப் பொறந்தவனே, அவனே இவனே என்ற சொற்கள் காற்றைத் தங்கள் வாசனையினால் நிரப்பும். சைவத் தேனொழுகும் தமிழ்ச் சொற்கள் செத்தாந்தம் வளர்த்த ஊரய்யா இது. மலத்தை மலத்தால் வெல்வோம். மலச்சாக்கடையிலேயே புரள்வோம் களிப்போம் கூத்தாடுவோம். கொண்டாடுவோம் குழந்தைப் பருவத்திலேயே தத்துவநோக்கு பெற வேறு ஒரு ஸ்தலம் உண்டா இவ்வுலகில்? தேனோழுகும் தமிழ்ச் சொற்கள் மையம் கொடுத்தன. ஸார்வாள், மன்னிக்கனும் ஸார்வாள் உங்களை தேடித்தான் வந்திகிட்டுருந்தேன். எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லை ஸார்வாள் அதான் வரமுடியலை. தயவுசெய்து மன்னிச்சுக்கிடுங்க ஸார்வாள். சத்தியமா இனிமே அப்படிச் செய்யமாட்டேன் திருடின பொருளைத் தந்துருவேன் ஸார்வாள். போதாதா இவை? ஆறு வயதில் ஐந்து பவுன் சங்கிலியைத் திருடியபின் போலீஸ் நிலையத்திற்கு போகாமல் சுற்றிக் கொண்டிருந்த போது, பயிற்சி செய்த வார்த்தைகள் வாழ்நாள் பூராவும் பயன்படும்போல. மனமூர்க்கம் பெற்றுவெட்டால் போதும் எந்த சந்தர்ப்பத்திலும் இவற்றையே சொல்லித்தப்பி விடலாம். மு. பெரிய ஆளய்யா என்ற எழுத்தாளர் உலகம் என்னை புகழ்ந்ததற்குக் காரணம் இதே வார்த்தைகள்தான். ஆம் இதே வார்த்தைகள்தான். கள்ளம், குரூரம், மூர்க்கம், மும்மலங்கள் பதிபசு பாசம் மும்மலங்கள். மலங்களை வெல்வோம் நாங்கள். இப்படியெல்லாம் எழுதிக் கொண்டிருக்கும் போதே என்னை பற்றித்தான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேனே என்ற சந்தேகம் வாசகா உனக்கு வரலாம். இல்லை இல்லை இல்லை. ஏனெனில் ஏழு வயதிலிருந்து இருபத்தியேழு வயது வரை இருபது வருடங்கள் நான் என்ன செய்தேன் என்று எனக்கு நினைவில்லை பிம்பங்களின் யத்தனிப்பில்நான்பிறந்ததால் ஏராளமான பிம்பங்களின் தொகுப்பாக நான் இருந்தேனாம். எம். ஜி.ஆர். கருணாநிதி இந்திரா காந்தி ஷோபனாரவி மாளவிகா கபாடியா ராஜீவ்காந்தி கபில்தேவ் பட்டோடி நவாப் கோல்ட்கஃபே ராணி டீச்சர் மனோகர் ரமேஷ்குமார் பேபி லூஸ்மோகன் பாமா பூமா ரகுனாதன் பாத்திமா சுஜாதா ஸ்வர்ணலதா ஜெயலலிதா பண்ருட்டி பிரபாகரன் என ஏதேதோ பெயர்களும் பிம்பங்களும் என்னைக் கட்டமைத்தன. நான் அவனானேன் அதுவானேன் அவளானேன் அவர்களானேன். மு. இக்காலத்தில் தான் எழுதியவற்றிலெல்லாம் தான் ஆணா பெண்ணா என்று தெரியவெல்லை என்று அரற்றியிருப்பதை பல விமர்சகர்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். “பிம்பங்களைப் புணரமுடியதுஎன்று மிகப்பெரிய உண்மையைக் கண்டுபிடித்தவன் போல அவன் தெருக்களில் கூவிக் கூவிக் சென்றதை பல கோடித் தமிழர்கள் தொலைக் காட்சியில் கண்டு களிப்பெய்தனர். இந்தக் கால கட்டத்தில் தனக்கு நிகழ்ந்தவற்றையெல்லாம் மறந்துவிட்டதாக மு.கூறுவதுதன் குற்றவாளிக்காலத்தை மறைப்பதற்கான உத்தி என ஒரு போலீஸ்காரரும் பிம்பப்பால்வினை நோய் என ஒரு மருத்துவரும் கூறுகின்றனர். ஒரு வேளை நாம் மு.வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கவிலையோ என்னமோ. என்னடா இது ஒரே மர்மமாக இருக்கிறது? யாருடையது வரலாறு தான் தமிழக புண்ணிய பூமியில் இதிலிருந்து மாறுபட்டது? ஆஹாங் அதுதான் வார்த்தைவரலாறுகண்டு கொண்டான் மு. வரலாற்றைவலியாக, ஒழுங்கின்மையாக, அதிகாரத்திற்கான மனிதப் புழுக்களின் போராட்டமாக, சங்கடமாக, மொழியாக, பெண்குறியாக, கண்ணாடியாக, பாம்பாக, வியர்வையாக, ஸ்கலிதமாக, வெறுமையாக, நிழலாக, மைப்புட்டியாகஎன சரியாக 14 விஷயங்களாக வரலாற்றை மு. உணர்ந்து கொண்டான். நினைவற்றுத் திரிந்த நாட்களில் தன் பெயரை திடீரென முநீயாண்டி என்ற முழுமையாகக் கூறி எல்லாவற்றையும் திரும்பவும் பெயரிட வேண்டும் என்ற தெருக்களில் எல்லாம் கரித்துண்டால் எழுதிப் போட்டானாம். இருபத்தியேழு வதில் நினைவு வந்தபோது நாவல் எழுதுவதுதான் தனக்கென்று சபிக்கப்பட்டது என்று கூறிய மு. தனக்குள்ளாகவே ஒடுங்கிப்போனான். நாவலின் உண்மையான எதிரிகள் கதைக்களம், கரு, வலைப்பின்னல், கதாபாத்திரம், பின்புலம் என்ற கண்டுகொண்ட அவன்தரிசனத்தின் முழுமை அல்லது அமைப்பு மட்டுமேதான் 20ஆம் நூற்றாண்டில் எஞ்சிநிற்க முடியும்என்று தன்னுடைய மர்ம நாவலைத் துவக்கியிருக்கிறான். “பேய்கள், பூதங்கள், குற்றவாளிகள், சபிக்கப்பட்ட தனியர்கள் ஆகியயோர் மெலோடிராமாவையும் பலஹீனத்தையுமே வெளிப்படுத்துகிறார்கள். அவர்களிடம் உள்ள ஒரே பயங்கரம் என்னவெனில் தங்களுடைய கனவிலும் தனிமையைக் கண்டு பயந்து போவதுதான். ஆனால் ஒரு பாலைவனம் அல்லது பொய்யாக அமைக்கப்பட்ட ஜவுளிக்கடைகளின் முகப்பு தோற்றங்கள், முப்பரிமாண போஸ்டர்கள், தொடர்ந்து பிம்பங்களை வாந்தியெடுக்கும் தொலைக்காட்சி, பிம்பங்களின் அசைவிற்கேப நடனமாடும் எலும்புக்கூடு மனிதர்கள், இவர்களின் குசுப்பண்பாடு, நீதி வரையறைகள், சவத்தன்மை, உள்ளும் வெளியும் விரவியிருக்கும் வெறுமை. இதுவே தமிழகத்தின் இருபதாம் நூற்றாண்டுப் பயங்கரம். இதில் சிக்கிக்கொள்ளும் மனிதன் உடலுக்கு ஒருநிழலின் அந்தஸ்து கூட கிடையாதென்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டிக்குப் போய்க் கொண்டிருக்கும் அவலம். நமது வரலாற்றிற்கு எதிரான மனோ சக்தி எங்கே எங்கே? ஓ என் நகர மக்களே கேளீர்! உயிர்ப்புடன் தொடர்ந்து இவ்வுலகில் இருப்பது எப்படி என்று நாமனைவரும் சேர்ந்து ஆராய்ச்சி செய்வோம். தாடி முளைத்த குழந்தைகள் நமக்கு வேண்டாம். பிம்பங்களிலிருது விடுபடல் அவசியம். வரலாற்றிற்கு எதிரான மனோ சக்தி எங்கே? வரலாறு, ஒருங்கமைப்பு, குறியீட்டு வரையறை, சமிக்ஞை விதிகள் அனைத்திற்கும் கூட்டாகச் சேர்ந்து நாம் எப்படி எதிர்ப்பினைக் காட்டுவது? குறைக்க முடியாத இடைவெளியை, வெறுமையை எதைக் கொண்டு நிரப்புவது? ஆடு பாம்பே விளையாடு பாம்பே பாம்பின் இடைவிடா எழுச்சியால் மட்டுமே அடங்கியிருக்கிறது உயிர்ப்பு என்ற பேச்சினை அவனுடைய நாவலில் வரும் கதாபாத்திர நிழலொன்று சொல்வது உண்மையில் மு.வினுடைய கூற்றுதான் என விமர்சகர்கள் எழுதியிருக்கிறார்கள். வரலாற்றின் பிடியிலிருந்து விடுபட பெளதீகம் மட்டுமே பயன்படும் என்று உணர்ந்த மு.முப்பத்தி மூன்று வயது வரை பெளதீக ஆராய்ச்சியில் ஈடுபட்டான், இப்பிரபஞ்சம் முழுமையுமே பதினான்கு பரிமாண சக்தியினால் ஆளப்படுவதாகவும், நாம் நான்கை மட்டுமே (அகலம், நீளம், கனம், காலம்) பார்ப்பதினால் மீதி பத்தையும் உணர்வதில்லையென்றும் இப்பதினான்கு பரிமாணங்களின் இயக்கமே வரலாறு என்றும் மு.கண்டுபிடித்துக் கூறியுள்ளான். ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன், நீல்ஸ்போர் போன்றோர் கண்டறிய இயலாத இயற்கையின் அடிப்படை சக்திகளையும் அவற்றின் ஒருங்கிணைவையும் மு. எளிதாக அவிழ்த்துட்டதாக விஞ்ஞானிகள் நோபல் பரிசுக்கான சிபாரிசுக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்கள். மு.வின் பெளதீகக்கோட்பாடுபூமாலைக் கோட்பாடுஎன்றழைக்கப்படுகிறது. உதாரணமாக பதினான்கு வளையங்களால் ஆன ஒரு சங்கிலி இணைப்பு இன்னொரு பெரிய சங்கிலியில்  வளையமாக இருப்பதைக் கற்பணை செய்து பாருங்கள். அது இன்னொன்றில் அது மற்றொன்றில் எனத் தொடர்ந்து பதினான்கு சங்கிலிகளை மனதில் கொண்டு வாருங்கள் இதுவே பிரபஞ்சம். இவற்றின் தொடர்ந்த ஒருங்கிணைந்த போக்கினால்தான் பிரபஞ்சம் இயங்குகிறது. வரலாறு நகர்கிறது. கணிதத்தின் மூலம் தன் பெளதிக கோட்பாட்டை நிரூபித்த மு.அப் பதினான்கு சக்திகளை பின்வருமாறு பெயரிட்டான்; 1.புவிஈர்ப்பு விசை 2. Quantum mechanics சொல்கிற வலிமையான சக்தியும் பலஹீனமான சக்தியும். 3 திருநெல்வேலி இரட்டையடுக்கு மேம்பாலம் 4.காலம் 5. வான்கோவின் அறுக்கப்பட்ட காது 6. எலக்ட்ரோமேக்னடிக் சக்தி 7. எர்நெஸ்டோ சேகுவேராவின் துண்டாடப்பட்ட கைகள் 8. திருநெல்வேலியின் வெக்கையும் புழுக்கமும் 9.பெண்குறி 10. பிம்பங்கள் 11.இன்னபிற அல்லது முதலியன 12. அர்த்தங்கள் 13. திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டிஇன்டெல்லக்சுவல்ஸ்’ 14. பூஜ்யம் அல்லது வெறுமை அல்லது தமிழ். “இப்பிரபஞ்சத்தையே திருநெல்வேலி கோவில்பட்டி இன்டெலக்சுவல்ஸ் தான் நகர்த்தி செல்கிறார்கள் என்பதில் துளியும் ஐயப்பாடு எழும்ப முடியாது ஆனால் பூஜ்யத்தையோ வெறுமையையோ தமிழர்களால் புரிந்துகொள்ளவே முடியாதுஎன்று தன் மர்ம நாவலில் எழுதிய மு. அப்படைப்பில் பக்கத்திற்குப் பக்கம் வெறுமை அல்லது வறுமையைக் குறிக்கும் வட்டமொன்றை வரைந்து வரைந்து காட்டியிருக்கிறான். நாம் மூன்றாம் உலக நாடொன்றில் இருக்கிறோமென்பதை வலியுறுத்த தொடர்ந்து மூன்று என்ற எண்ணை அவன் பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. பூஜ்யத்துடன் சிலஉரையாடல்கள் என்ற அத்தியாயத்தில்கட்டுரைகள், ஆய்வுகள், வாழ்க்கைக் குறிப்புகள் ஆகியவற்றை மட்டுமே நாம் எழுதவேண்டும். கழுத்து வியர்வையில் சகதிக்காடாய் மாறிவிட்டது. கிழக்கு ஐரோப்பியா நாட்டின் குளிரும் இதமான சுற்றுச் சூழலும் நமக்கு என்றுதான் வாய்க்கபோகிறதோ. இந்த எழுத்துப் புழுக்கத்திலிருந்து விடுபட வேண்டும்என்று எழுதப்பட்டிருக்கிறது. இதை படித்த பட்டி இன்டெல்லக்சுவல் சுந்தரராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகளை காப்பியடித்துவிட்டான் மு. என அபத்தம் உதிர்த்தார், parody, forgery, திரும்ப ஜெ.ஜெ.- யை எழுதுகிறான் என்றெல்லாம் கூச்சல் போட்டார்கள். மு. தான் எந்த எருமை மாட்டின் மீதும் வெற்றிலைச்சாற்றினைத் துப்பவில்லை என்றான். உண்மையாக எழுதுகிறானா, கிண்டலா, குரங்கு சேஷ்டையா என மு வின்  மர்மநாவலை கடைசிவரை அனுமானிக்க முடியவில்லை. நாபகோவ், போர்ஹெஸில் ஆரம்பித்து பார்த்தல்மே, பார்த், கூலர், பிஞ்ச்சன், ஹாக்ஸ் வரை யாரை பற்றியும் இக்கேள்வி எழுந்ததில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அர்த்தங்களை துறந்துவிட்ட குறிப்பான்களைக் கடல்மடையென மடை கடலென மட கடலென கடமடவென வெனகனவென மனனன கணணதினன திறந்து விடு விட்டான் சுட்டான் தின்னான் மு. ஹெ. செ! மானுடா உனக்கு எப்படியட அர்த்தம் சாத்தியமாயிற்று? நான் சோப் வாங்கினால் கூட போஃபார்ஸ் துப்பாக்கியும் வாங்கி விடுகிறேனாமே எப்படி சத்தியம் இது! சாத்தியம் சத்தியம் மத்திமம் கத்திமம் ரத்திமம் ரத்தம் ரத்தம் ரத்தம் குடிபருகு தின் உறிஞ்சு சீரழி தனி மனித மனப் புரட்சி ஜே கிருஷ்ணமூர்த்தி, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, வான்கோவின் அறுபட்ட காது சேகுவேராவின் துண்டாடப்பட்ட கைகள் இதற்கெல்லாம் பதில் சொல்லய்யா கிருஷ்ணமூர்த்தி கெடுத்தியே தமிழை ஜே.ஜே. ஜோஸஃப் கெல்லர் ஜான் தி கில்லர் இருபது மில்லியன் குழந்தைகள் பாலில்லாமல் சாகிறதாமே தனி மனித புரட்சி பூஜ்ய தளத்தை அடைய தூய அனுபவம் தேவை. அமைப்புகளை மறந்து விடு பூஜ்யமே உனக்கோர் நமஸ்காரம் பிம்பங்களின் மூலபிம்பமே நீயே கடவுள் உன்னையே துதிப்போம். கற்பின் நாயகன் நீ, அணையாஜோதி நீ, பெண்குறிகளின் நாயகன் நீ, உன் காலத்தில் வாழ என் நிழலுருவம் என்ன தவம் செய்ததோ. என் நிழலின் பிம்பத்தின் பிம்பத்தினை இந்தத் திருநெல்வேலி மேம்பாலத்தில் பதிவு செய்ய என்னை அனுமதித்த நீயல்லவோ என் நாயகன். ராட்சசக் கண்ணாய் அமர்ந்திருக்கும் இந்த மேம்பாலத்திலிருந்து சிறு பிள்ளையின் மூத்திரக் கண்ணீராய் ஓடும் தாமிரபரணி மண்ணின் தஹிப்பு வானம் அறியா காலம். அர்த்தம் துறந்து ஓடு. என்ன நடக்கிறது இலங்கை அறியாதே வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்  கண்ணனின் சூழ்ச்சி புத்தனின் மெளனம் டி.வி.யில் மகாபாரதம் ஆரம்பித்துவிட்டது. ப்ரூட்டி விளம்பரம் மாளவிகா கபாடிகா கார்த்திக் கல்யாணம் செய்து கொண்டது யாரை ஜீவகாருண்யம்உடலின் தசைகளெல்லாம் பசியில் திகுதிகுவென்று பற்றி எரியும்போது எது அதை அவிக்கிறதோ அதுவே ஜீவகாருண்யம். காலை உணவு முசுமுசுக்கீரை தூதுவளைக்கீரை அரைப்படி சுண்டக் காய்ச்சிய பால் நித்திய ஒழுக்கம் பகலில் தூக்கம் கூடாது. சுக்கிலத்தை வீணில் விடக்கூடாது உயிரை வீணில் விட்டுவிடலாம். இன்னொருவர் உயிரை விடச்செய்யலாம். பத்துகோடி ரூபாய் கடத்தல் ஹெராயின் பிடிப்பட்டது. நாம் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருந்தாலே அதாவது வெந்ததை தின்று விதி வந்தபோது சாவோம் என்றிருந்தாலே நமது பொருளாதாரத்தினால் வல்லரசுகள் இன்னும் லாபம் பெறுகின்றனவாமே. பிம்பத்தின் நாயகனே என்னடா இது அர்த்தம். என்னால் முடியும் தம்பி. ஜாதி உன்னால் முடியும் தம்பி இது நம்ம ஆளு கண்ணை மூடி பவித்திரம் கொள். ஏலேய் பார்த்தல்மே இங்கே வா cheerful nihilism என்று ஏதோ சொல்கிறயாமே நீ என்னவாக்கும்லே அது? கொஞ்சம் சொல்லேன். ஏழா உனக்குத்  தெருயுமாழா இவனுகளுக்கெல்லாம் வேர்களேகிடையாது. பனையேறத் தெருயுமா கள்ளு குடிக்கத் தெரியுமா பருத்திக்காடு தெரியுமா கரிசல் மண் தெரியுமா. குறைந்தபட்சம் மதினிகளையாவது தெரியுமா என்னலே கத கட்றானுக, கேக்கறதுக்கு நாலுபேரு. ஸார்வாள் மன்னிக்கனும். சத்தியமா நாளக்கி உங்கள வந்து பார்த்துவருவன்போல்க்லோர், இன்னாலே அது! இவன்களுக்கு ரூட்ஸ் இல்லமா ரெளடித்தனம் தெரியுமா இவன்களுக்கு யார் எழுதினார்கள் இது வரை மு. வைப் பற்றிய கதையல்லவா கேட்டுக் கொண்டிருந்தோம். பூமால காணாமப் போய்ட்டான்மா, பைத்யம் புடிச்சுருச்சா அவனுக்கா அவன் காணாமப் போய் எவ்ளோவ் நாளாச்சின்ற நீ. அவனுக்குத்தான் அவராண்ட சொல்லி கானாப் பாட்டு பாடக் இட்டாந்தேன். அந்தாள் இன்னா இன்னாவோ பேசிக்கிறான். நல்ல சாராயம் ஊத்திகினு வன்ட்டான் போல தென்றல் இனிது வீசிக் கொண்டிருந்த அந்தக் காலை பொழுதினில் ஷர்மிளா தன் ஜீன்ஸ் பாண்டை சரி செய்து கொண்டே வெளியே எழுந்து நடந்தாள். இந்த ரமேஷுக்காகத் தான் எவ்வளவு நேரம் காத்துக்கிடப்பது. பாவம் ஒன்றுமறியாத பேதை அவள். இல்லையென்றால் தனது புஷ்டியான மார்புகளும், செழித்து வளர்ந்த பின்பாகங்களும் எந்தவொரு ஆண் மகனின் மனதையும் சுண்டியிழுக்கும் என்பதை அறியாதல்லவா தடங் தடங்கென்று ந்டை பயிலுகிறாள். நாடு முழுவதும் உள்நாட்டுக் கலகம் நடைபெறும்போது ஒரு அரசியல் தலைவன் உட்கார்ந்திருப்பது என்பது சக்கரத்துடன் இருக்கும் கிருஷ்ணன் பகவத் கீதையை குருஷேத்திரத்தின் நடுவே பாடுவதற்கு ஒப்பானதாகும். ‘புதிய’ சொற்பிரயோகம் எவ்வளவு சீக்கிரத்தில் கவர்ச்சியடைந்துவிடுகிறது. சிறிதளவு மாற்றியமைக்கப்பட்ட சொற்பிரயோக முறையைக்கொண்டு அடிப்படையான தத்துவஞானப் பிரச்சனைகளையும் அடிப்படையான தத்துவஞானப் போக்குகளையும் ஒருக்காலும் அகற்றிவிடமுடியாதென்பது எவ்வளவு சீக்கிரம் தெரிந்து விடுகிறது என்பதற்கு ஓஸ்ட்வால்டின் சக்தியியல் ஒரு நல்ல உதாரணமாகும். எப்படியாவது கதை சொல்லாமல் இருந்தால் சரி. தொடற்சியற்றவைகளே நமக்கு வேண்டும். திரும்பத் திரும்ப சொன்னதையேத் திரும்பச் சொன்னால் போச்சு. அது என்ன பிறகு? இது புத்தகமல்ல. இது ஏச்சு, மண்ணைவாரித் தூற்றுதல், Character assassination சாதாரண அர்த்தத்தில் இது புத்த்கமல்ல. நீண்ட நாட்களாகக் காத்திருந்து அவமானப்படுத்துதல். கலை என்று சொல்லப்படுவதின் மேல் காறி உமிழப்பட்ட எச்சில். கடவுளின் வேட்டியை அவிழ்த்து விடப்பட்ட உதை. மனிதன், விதி, காலம், அழகு, காதல், அனைத்தின் மேலும் வீசப்பட்ட அலட்சியம் outrage, atrocity, வட்டங்கள் அவற்றின் மையங்கள். நீ குரலழிந்து போகையில் நான் தொடர்ந்து பாடுவேன். உன் நாற்றமடிக்கும் பிணத்தின் மீது நின்று பாடுவேன். உனக்குப் புரியவே கூடாது. உனது புரிதல்களுக்கு தொடர்ந்து சவால்களை முன் வைப்பேன். கதறி அழு. குற்றமற்றதனமை கொண்ட மாருதி கார்கள் அவற்றில் வளைய வரும் இளம் கன்னிகள். ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள். Fashion Shows. நெல்சன் மண்டேலாவுக்கு கறுப்பு உடைகளில் கன்னிகளின் அஞ்சலி. ஆவணக்காப்பகங்களும் பெண்களும். எல்லோருமே எப்படி கர்ப்பம் தரித்தார்கள்? அளவு நிலை பண்பு நிலையாக மாற்றமடையும். அணு எடையின் அளவு நிலையே அவைகளின் பண்புநிலையை நிர்ணயிக்கிறது என்பதும் தற்போது நாம் அறிந்த விஷயம். கூடான் குளமும் பேரழிவும், உண்மையான பண்பு நிலை மாற்றம். வெறுமையை  வெளியிலும் கொண்டு வருவோம். மீண்டும் பௌதீகம். மீண்டும் பூமாலை. பொதுவாக உதாரணமாக, ஒழுங்குமுறை, சட்டம், நோக்கம் முதலிய மனித சமூகப் பிரயோகங்களையும் கருதுகோள்களையும் நாம் அவை சம்பந்தப்பட்ட மட்டில் உபயோகித்தாலும், நம்முடைய மொழித் தன்மை காரணமாக அப்படிச் செய்வது அவசியமாக இருந்தாலும் அந்த இயற்கை மட்டுமே எத்தகைய மனித சமூக ரீதியான அளவையையும் கையாள முடியாத ஜீவன். எல்லாம் அமைதியாகிவிட்டது வெறுமைக்குத் தனிமை கிடையாதா என்ன? அலுப்பு தட்டாதா என்ன? வெறுமை வெறுமையைப் புணர்ந்தால் வெறுமையே எஞ்சும். ஏதாவது பிறக்காதா? நிழலுருவம் மனித கர்ப்பம் தாங்காதா? சூரிய ஒளியின் கடுமை குறையும், பைத்தியம் தணியும். பூமி தொடர்ந்து நம்மை இழுத்துப் பிடித்து வைத்திருக்கும். கிரேக்க ஒலிம்பிக் வீரனைப் போல எழுந்து ஆடி வெளியை ஆட்கொள். ஊடகத்தில் குறியாய் மாறி ஆங்காங்கே அர்த்தம் சிதைந்து தன்னளவில் அர்த்தமற்று வாழ். சூன்யம் நிரம்பி வழியும். பதினான்கு பரிமானங்களையும் எல்லோரும் காண்பர். Total disintegration. Total formlessness. இதைப் பதிவு செய்ய வேண்டிய அவலம். இன்னபிற முதலியன. அட டொனால்ட் பார்த்தல்மே நீர்தானா ஐய்யா வில்லன்.  மர்ம நாவல் யுகம் இடையறாது நீளும். ஆனால் எவனாவது ஒருவன் வரலாற்றின் எதிர்ப்பாளனாக மாறி கடைசி பக்கங்களைக் கிழித்தெடுத்து அர்த்தம் தவிர்ப்பான். இன்னபிற முதலியன ஆகியவை ஆகும் ஆனால் இன்னபிற முதலியன ஆகியவை ஆகும் ஆனால் இன்னபிற பிற. பிற.


குறிப்புகள்
  1. ‘அஸ்வமேதா’ என்ற இலக்கிய சிற்றிதழில், collage வடிவத்தில் எழுதப்பட்ட இந்தக்கதை 1987 அல்லது 1988 இல் முதலில் பிரசுரம் ஆனது. பின்னர் 1990இல் ‘கர்நாடக முரசு’ தொகுப்பில் பிரசுரமாகியது. லதா ராமகிருஷ்ணனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2007 இல் பெங்குவின் தொகுதியாக வெளிவந்த The Tenth Rasa என்ற தொகுப்பில்  இந்தக் கதை இடம்பெற்றுள்ளது. ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  2. 1987 அல்லது 1988இல் ஈழப் போராட்டம் பற்றி திருநெல்வேலியில் நடந்த சிறு கூட்டமொன்றில் நான் உறையாற்றினேன். அந்த உரையில் ஈழப் போராளிக்குழுக்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி பயிற்சி அளித்து வருவதாக வெளிவந்த செய்திகளைச் சுட்டிக்காட்டி இது காந்தீய தார்மீகமற்ற செயல் என்று கடுமையாக விமர்சித்தேன். கூடவே இலங்கை அரசுக்கு பௌத்த அறம் என்று ஒன்று இருக்கிறதா என்று விமர்சித்தும் பேசினேன். ஈழத்து தமிழ் மாணவர் ஒருவருக்கு என் உரையைக் கேட்டு மிகவும் கோபம் வந்துவிட்டது. (அவர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை) அவர் அதன் பின்னர் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். அந்த மாணவரை நான் என் நண்பராகவே நினைத்திருந்தபடியால் எனக்கு அந்த முறிவு மிகுந்த வருத்தத்தைத் தருவதாக இருந்தது. அதைத் தொடர்ந்து உலகமே ஒரு அபத்தம், non sense என்று தோன்றிய உணர்வில் ‘மர்ம நாவல்’ கதையை எழுதினேன். 
  3. Collage கதை ஆனபடியால் 90 சதவீதம் கதை வெவ்வேறு நூல்களிலிருந்து, செய்தித்தாள்களிலிருந்து, விளம்பரங்களிலிருந்து, பாக்கெட் நாவல்களிலிருந்து, அறிவியல் நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட வாக்கியங்களால் கோர்க்கப்பட்டது. இரண்டு இலக்கிய நூல்களிலிருந்தும் வரிகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன ஒன்று ராமலிங்க வள்ளலாரின் நித்ய ஜீவ ஒழுக்கத்திலிருந்து தினமும் சாப்பிட வேண்டிய கீரை வகைகள் இத்யாதி குறித்த வரிகள். இன்னொன்று ஹென்றி மில்லரின் Tropic of Capricorn இல் வரும் A kick in the pants of god என்ற வரி அதை நான் கடவுளின் வேட்டியை அவிழ்த்து விடப்பட்ட உதை என்று இந்தக் கதையில் சேர்த்திருக்கிறேன். 
  4. இந்தக் கதையில் காணாமல் போகும் மு கதாபாத்திரத்தை திரும்ப பல கதைகளில் கொண்டுவந்திருக்கிறேன். என்னுடைய குட்டிக் கதைகளில் மு மைய கதாபாத்திரம்.
  5. போனவருடம் ஜெர்மனியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் இந்தக் கதையைக் குறிப்பிட்டுப் பேசிய ஒரு ஆய்வாளர் எமெர்ஜென்சிக்குப் பிந்திய  இந்தியப் பொருளாதார தாராளமயமாக்கலுக்கு முந்தைய காலகட்டத்தின் உளச்சிக்கலைக் காட்டும் கதை என்று வாசித்தார். அக்கறையுடன் கேட்டுக்கொண்டேன்.
  6. இதுவரை இக்கதை பிரசுரமானபோதெல்லாம் நடுவில் பக்கத்திற்கு பக்கம் ஒரு வெற்று  வட்ட வடிவம் வரவில்லை. ஒரு டைமண்ட் வடிவமே வந்திருக்கிறது. இப்போது இணையத்தில் அதுவும் வரவில்லை.