Saturday, December 24, 2011

மூடன் விமலாதித்த மாமல்லன் வியப்பளிப்பதில்லை


தெரியாமல்தான் கேட்கிறேன் தெரியாமல்தான் கேட்கிறேன் என்று பொறுக்கி மொழியில் கூச்சலிடும் மாமல்லன் மூர்க்கன் மட்டுமல்ல மூடன் என்பது ‘ஆராய்ச்சியும் அகழ்வாராய்ச்சியும்’ என்ற அவரின் பதிவின் மூலமாக மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. நரிக்குறவர் மொழி அகராதியாலும் ஜேனு குறுபர் மொழி அகராதியாலும் சமூகத்திற்கு என்ன பயன் என்று தெரியாமல் கேட்கும் மாமல்லன் தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி பெறுவற்காக மட்டுமே தீட்டும் திட்டங்களில் அகராதிகள் தயாரிப்பும் ஒன்று என்று நினைத்துக்கொண்டு அவருடைய வழக்கமான பொறுக்கி மொழியில் எழுதுகிறார். நரிக்குறவர், ஜேனு குறுபர் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் இந்த அகராதிகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தப் பள்ளிகளில் போய்ப் பார்த்தால் இந்த அகராதிகளின் சமூகப் பயன்பாடு என்ன என்று தெரியவரும். நரிக்குறவர், ஜேனுகுறுபர் உள்ளிட்ட பல ஆதிவாசி மக்களின் மொழிகளுக்கு அகராதிகள் இல்லாதபடியால் மொழிகள் அழிந்து போகின்றன. அச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் தன் தாய்மொழியறிவுடன் மட்டுமே பள்ளிக்கு வருவதால் பிற பயன்பாட்டு மொழிகளை கற்றுக்கொள்ள முடியாத நிலை இருக்கிறது. பள்ளிப்படிப்பில் பின் தங்கும் ஆதிவாசிக் குழந்தைகள்  பள்ளிப்படிப்பை பாதியில் இதனால் நிறுத்திவிடுகின்றன. அகராதிகள் தயாரிக்கப்பட்டு நரிக்குறவர், ஜேனுகுறுபர் போன்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் அவற்றை விநியோகிக்கும்போது பிற பயன்பாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு கருவி கிடைக்கிறது. இதனால் அந்தக்குழந்தைகள் மேலும் படிப்பைத் தொடர ஏதுவாகிறது. மொழி அகராதிகளின் பயன்பாடு என்ன என்ற சிறிய அறிவே போதும் இந்த மாதிரியான அகராதிகளின்  சமூகப் பயன்பாடு என்ன என்று யூகிப்பதற்கு ஆனால் மாமல்லன்தான் மூடனாயிற்றே மனம் போன போக்கில் ஏசுகிறார். 
கருணை அடிப்படையில் தன் அரசாங்க வேலையைப் பெற்ற மாமல்லன் எனவே உழைப்பினால், திறனால், படிப்பறிவால் யாரும் எந்த வேலையையும் பெற்றிருக்கவும் முடியாது, வேலைகளில் தொடர்ந்து இயங்கவும் முடியாது என்று நினைக்கும் மாமல்லன், சென்டிரல் எக்சைஸ் இன்ஸ்பெக்டராக நீடிக்கும் மாமல்லன், தன் மேலதிகாரிகளை தன் ‘இலக்கிய தொடர்பினால்’ சரிக்கட்டும் மாமல்லன், அகராதிகளின் பயன்பாட்டை அறிவதற்கு நிறுவனத்தின் பொது வெளி கணக்கறிக்கையை பயன்படுத்துவதில் வியப்பில்லை. வரி ஏய்ப்பு (Tax evasion) வரி விடுபடல் ( missing sentence) இரண்டும் ஒன்று என்ற ரீதியில் தன் வேலையில் கற்ற நிபுணத்துவத்தையே இலக்கிய விமர்சனத்திற்கும் பயன்படுத்தி சிறு தகவல் பிழைகளை இலக்கிய உரைகளிலும் பிரதிகளிலும் கண்டுபிடித்து தன் பொறுக்கிமொழியில் குற்றப்பத்திரிக்கை எழுதி எழுத்தாளர்களை அவமானப்படுத்தி அதன் மூலம்  இணையத்தில் தன்னை ஒரு மல்லன் என நிறுவி வரும் மாமல்லனுக்கு ஒரு பிரதியின் பல்வகை வாசிப்பு தெரியாமல் போவதும் வியப்பில்லை; ஏனெனில் கணக்கறிக்கையும் இலக்கியப் பிரதியும் மூடன் மாமல்லனுக்கு ஒன்றுதானே.மேலும் உலகெங்கிலும் உள்ள தலைசிறந்த எழுத்தாளர்கள் இலக்கணப் பிழைகளோடும், தட்டச்சுப் பிழைகளோடும், தகவல் பிழைகளோடும் எழுதக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் பிழைகளை பதிப்பகங்களிலும் பத்திரிக்கைகளிலும் வேலை பார்க்கும் எடிட்டர்களே களைகிறார்கள். மெய்ப்பு திருத்துபவர்களும், எடிட்டர்களும் தங்கள் தொழிலினை இலக்கிய விமர்சனமாக முன் வைப்பதில்லை. இது உலக நிலவரம். தமிழ் எழுத்தாளர்களுக்கு எடிட்டர்கள் இல்லை. க்ரியா போன்ற ஒரு சில பதிப்பகங்களே தாங்கள் பிரசுரிக்கும் புத்தகங்களுக்கு எடிட்டர்களை நியமித்து, எழுத்தாளர்களுடன் கலந்தாலோசித்து, பல முறை மெய்ப்பு பார்த்து புத்தகங்களை வெளியிடுகிறார்கள்.  இது தவிர உலகெங்கிலும் ஒரு பிழை எழுத்தில் சுட்டிக்காண்பிக்கப்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய எழுத்தாளர்களோ, பதிப்பகங்களோ தயங்குவது இல்லை.
தன்னைப் போலவேதான் பிறரும் இருப்பார்கள் எனறு நம்பும் மூடனும் மூர்க்கனுமான மாமல்லன் நான் நம்பிக்கும் எனக்கும் எந்தெந்தச் சூழலில் உறவு ஏற்பட்டது என்று சொல்வதற்காக பிரமிளுக்கும் நடந்த வாக்குவாதத்தைச் சொல்லப்போக நான் ஏதோ இதன் மூலம் இலக்கிய அந்தஸ்து தேடுவதாய்  எழுதியிருப்பதும் வியப்பளிக்கவில்லை. ஏனெனில் அவர்தான் ஜெயகாந்தன் மாமல்லனை ‘தேவடியா பிள்ளை’ என்று திட்டியதையும், சுந்தர ராமசாமிக்குத் தான் புரொஜெக்டரோடு போய் ஆட்டோவில் இறங்கி படம் போட்டு காண்பித்ததை கமலா ராமசாமி எழுதியதையும் பிரசுரித்து, உணர்ச்சிவசப்பட்டு, கண்கலங்கி இணைய வாசகர்களிடம் நொள்ளை பிம்பம் கட்டமைப்பதற்கு முயன்றவர். அப்படித்தானே பிறரும் மாமல்லனுக்கு இருக்கமுடியும்? சினிமாப் பாடல்கள் வெளிவந்த வருடங்கள், கணக்கறிக்கைகள், தான் தொலைபேசி உரையாடல்களின் மூலம் துப்பறிந்த தகவல்கள் ஆகியவற்றை மட்டுமே நம்பும் மாமல்லனுக்கு பிரமிள் குற்றாலம் கவிதைப்பட்டறை சண்டையைப் பற்றி அவரே எழுதியிருக்கிறார் என்று தெரியப்போவதில்லை. அதை ‘லயம்’ காலப்பிரதீப் சுப்பிரமணியத்திடமல்லவா கேட்கவேண்டும் என்று மாமல்லனுக்கு தெரியாமல்போவதைப்பற்றி யாராவது ஆச்சரியப்படவா போகிறார்கள்? மாமல்லனுக்குத்தான் அவர் செய்தித்தாள்கள் மூலம் ஈழப்போராட்டம் பற்றித் தெரிந்துகொண்டவை அதில் நேரடியாக பங்குபெற்றவர்கள் சொல்வதைவிட முக்கியமானதாயிற்றே.
நானும் தெரியாமலேயே மாமல்லனிடம் சில கேள்விகள் கேட்டு வைக்கிறேன். சரி, நானும் நாகார்ஜுனனும் மேற்குலகின் சிந்தனைகளை தமிழுக்குக்கொண்டுவருபவர்கள். உங்கள் எழுத்துக்களின்படி நீங்கள் மண்ணின் மைந்தர்; ஆங்கிலம் முறையாகப் பயிலாதவர். இந்த மண்ணின் சிந்தனை, இலக்கிய மரபுகள் என்ன என்று அறிந்துகொள்ள நீங்கள் மேற்கொண்ட படிப்பு என்ன? பழந்தமிழ் இலக்கியம் கற்றீர்களா? இல்லை நாட்டுப்புற கலைகளை அறிய முயற்சி செய்தீர்களா? அப்படி முயற்சி செய்திருந்தால் விளிம்பு நிலை கானாப் பாடகர்கள் பாடுவது உங்களுடையதைப் போன்ற பொறுக்கி மொழியிலல்ல குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களின் அறுபடாத இலக்கியத் தொடர்ச்சி என்று தெரிந்திருக்கக்கூடும். அட, ஆர்.வி.ரமணியின் சுனாமிக்குத் தப்பிய கேமிராவை புளங்காகித்து எழுதும் நீங்கள் அவரின் மற்றொரு படமான ‘நீ எங்கே’ படத்தை பார்த்திருந்தால் நாடோடிகளாய், தன் குடும்பப்பெண்களை ரிக்கார்ட் டான்ஸ் ஆடவிடும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட தோல்பாவை நிழல் கூத்து கலைஞர்கள் ராமாயணத்தை ஜெயமோகனைவிட அதிகமாய் கரைத்துக் குடித்தவர்கள் என்று தெரிந்திருக்கக்கூடும். மேலும் ஆராய்ந்திருந்தால் தன் விளிம்பு நிலை சமூகத்தைப் பற்றி எழுதுகிற திருநங்கை பிரியா பாபு மாமல்லனின் பொறுக்கி மொழியை தன் புத்தகங்களை எழுதப் பயன்படுத்தவில்லை என்றும் தெரிந்திருக்கக்கூடும். விளிம்பு நிலை மனிதர்களின் மொழியும் பொறுக்கி மொழியும் ஒன்று என்று, இவ்வளவு தூரம் எடுத்துச் சொன்ன பிறகும், தொடர்ந்து சொல்லிவரும் மாமல்லன் படித்துப்பார்ப்பது நல்லது; படிப்பு என்பது மூடனான மாமல்லனுக்கு ஏறாது என்றாலும் கூட. 
ஆலென் கின்ஸ்பெர்க் ‘Howl’ என்ற கூச்சல் கவிதை எழுதியதும், நிர்வாணமாய் தெருவில் நின்றதும் வியட்நாம் போருக்கு தன் எதிர்ப்பினை தெரிவிப்பதற்காக. எதிர் கலாச்சாரம் பற்றி எழுதிய நாகார்ஜுனன் தன் புத்தக அட்டைப்படமாய் கின்ஸ்பெர்கின் படத்தை பிரசுரித்ததை எடுத்துப்போட்டு தன் பொறுக்கி மொழியினை நியாயப்படுத்தி தொப்பை குலுக்கும் மாமல்லனுக்கு வியட்நாம் போரும் தெரியாது, ஈழப்போரும் தெரியாது என்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
மாமல்லனுக்குத் தெரிந்ததெல்லாம் தமிழ் திரைப்படப்பாடல்களும் வடிவேலு நகைச்சுவையும்தான். வடிவேலுவின் ஜாதி என்ன  என்று யாரும் மாமல்லனுக்கு சொல்லிவிடாதீர்கள். மூடனிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச நகைச்சுவையும் போய்விடப்போகிறது. காவி அணிவது, இஸ்லாமிய குல்லா தரிப்பது போன்ற வடிவேலு நகைச்சுவைகளில் ஈடுபடும் மாமல்லன் நாளை கிறிஸ்துமஸ் ஆயிற்றே கின்ஸ்பெர்க் வெள்ளைக்காரனாயிற்றே அவனும் கிறிஸ்துமஸ்தானே கொண்டாடுவான், என்று கிறிஸ்துமஸ் கொண்டாட ஊர்வலம் கிளம்புவாராயின் அவருக்கு என் எளிய பரிசு: ஓர் மூடனின் தொப்பி.

Thursday, December 22, 2011

விமலாதித்த மாமல்லனின் பொறுக்கி மொழி


மேற்கண்ட கட்டுரையில் என்னை தன்னுடைய வழமையான பொறுக்கி மொழியால் அவதூறு செய்து எழுதியிருக்கும் மாமல்லன் அடிப்படையான விபரங்கள் அறியாமல் எழுதியிருக்கிறார்.
நான் தயாரிப்பில் ஈடுபட்டு பதிப்பித்த நரிக்குறவர் அகராதியும், ஜேனு குருபர் மொழி அகராதியும் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்றவை அல்ல; ஒரு பைசா கூட ஃபோர்டிலிருந்து வந்ததில்லை. நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் இந்த அகராதிகளை யார் வேண்டுமென்றாலும் வாங்கிப்பார்க்கலாம். இந்த அடிப்படை பொது விபரத்தினை அறிந்துகொள்ளாமல் மேற்கண்ட பதிவில் மாமல்லன் என்னை அவதூறு செய்வதன் காரணம் என்ன?
லும்பன் மொழியென்றால் என்ன என்ற உரையாடலில் லும்பன் மொழி என்பது பொறுக்கி மொழி என்று மொழிபெயர்க்கப்படவேண்டும் அது மாமல்லன் குறிப்பிட்டது போல விளிம்பு நிலை மக்களின் மொழி அல்ல, வட்டார வழக்குகளோ ஜாதீய வழக்குகளோ அல்ல என்று விளக்கி பொறுக்கி மொழி  வெகுஜன மொழியாக  தமிழில் எப்படி தோற்றம்பெற்றது என்பதை ஃபேஸ்புக், டிவிட்டர் உரையாடல்களின் போது மாமல்லனிடமும் உரையாடலில் பங்கேற்ற மற்றவர்களிடமும் சொன்னேன். பொறுக்கி மொழியிலேயே தன்னுடைய தவறான புரிதலை தொடர்ந்து முன் வைத்த மாமல்லன் பிராமணீய பிள்ளைவாளான நான் சென்னை வட்டார வழக்கினை இளக்காரமாகப்பார்ப்பதாகச் சொன்னார். நரிக்குறவர் மொழிக்கும், ஜேனு குறுபர் ஆதிவாசி அகராதி உள்ளிட்ட பல ஆதிவாசி மொழிகளுக்கும் அகராதி தயாரிப்புகளில் ஈடுபட்டவன் எப்படி வட்டார வழக்குகளை இளக்காரமாகப் பார்க்கக்கூடிய பிள்ளைவாளாவான் என்று திரும்பிக் கேட்டதற்கு மாமல்லன் மேற்கண்ட பதிவினை எழுதியிருக்கிறார். ஃபோர்ட் ஃபவுண்டேஷனிடமிருந்து பணம் வரவில்லை என்பது மட்டுமல்ல வெவ்வேறு மொழியியலாளர்களோடு சேர்ந்து  அகராதிகள் தயாரிப்பில் ஈடுபடுவதற்கு ஒருவனுக்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது, பணம் கொடுத்துவிட்டால் ஒருவனால் செய்துவிட முடியுமா, பணம் கொடுத்துச் செய்யச் சொன்னாலுமே தன் வாழ் நாளின் சிறந்த வருடங்களை எந்தவித எதிர் காலமோ, அங்கீகாரமோ இல்லாத இந்த மாதிரியான பணிகளில் யாரேனும் ஈடுபடுவார்களா என்பதையெல்லாம் ஒருவர் யோசித்துப்பார்க்கவேண்டும். இந்த உழைப்பிற்கு பின்னாலுள்ள நுட்பமான படிப்பறிவின் தேவையை, இலக்கியத்துறையில் செயல்படும் மாமல்லன், கேவலப்படுத்தினாரென்றால் அவரை என்னவென்று அழைப்பது? ஒரு எழுத்தாளனுக்கு எல்லா சிந்தனைத்துறைகளைப் பற்றிய அறிவு இருக்கவேண்டியதில்லை; ஆனால் சிந்தனைத்துறைகள் பற்றிய மரியாதை கூடவா இருக்காது?
கவிஞர் விக்கிரமாதித்யன் நம்பி என்ற என்னுடைய பதிவில் சினிமாப்பாடல்களை உதாரணம் காட்டியதில் ஆண்டுகள் தப்புத்தப்பாகிவிட்டதாம். இவர் கண்டுபிடித்துவிட்டராம். தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்  நான் நினைவிலிருந்து எழுதுகிறேன் என்று. இந்த மாதிரியான பாடல்வரிகளை இந்த மாதிரியான செய்திகளுக்கு தலைப்பாக வைப்பது போன்ற, இந்த மாதிரியான ஒலிகளை பயன்படுத்துவது போன்ற உதாரணங்களைக் கொடுத்து விளக்கினார் என்று எழுதினால் அவர் பேசிய வருடத்தில் இந்தப் பாடல்கள் திரைக்கு வரவில்லையே என்று மாமல்லன் எழுதினால் என்ன செய்வது?  உதாரணங்கள் கொடுப்பது நான். இந்தமாதிரியான உதாரணங்களைக் கொடுத்து நம்பி பேசினார் என்று எழுதினால் அந்த உதாரணங்களை விக்கிரமாதித்யன் நம்பியே கொடுத்தார் என்று எப்படி பொருள்படும்? யார் வேண்டுமென்றாலும் என் பதிவினைப் படித்துப்பார்க்கலாம்.  மேலும் உரை நடைகளின் வகைகளைப் பற்றிய விமர்சனங்கள் ஆயிரம் இருக்கலாம் ஆனால் யார் யார் எந்தெந்த உரை நடைகளின் உருவாக்கத்திற்கு பங்காற்றினார்கள் என்று சொல்லத்தானே வேண்டும்? ஒரு மொழியிலுள்ள பலவேறு வகை நடைகளையும் அவை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளையும் எப்படி ஆராய்வது?
விக்கிரமாதித்யன் நம்பி தன்னுடைய நிர்ப்பந்தத்தினால் தன் கவிதை மொழிக்கு சம்பந்தமில்லாத நேரெதிரிடயான வெகுஜன பத்திரிக்கை உரைநடை உருவாக்கத்தில் பங்குபெற்றார். கேள்வி நம்பியைப் பற்றி அல்ல. மேலும் அவர்கள் அந்த உரைநடையை உருவாக்கியதும் பயன்படுத்தியதும் ஊழல் அரசியல்வாதிகளையும், திரை மறைவு செயல்பாடுகளையும் அம்பலமாகுவதற்காக. இருப்பினும் நம்பிக்கு அப்படிப்பட்ட மொழி நடை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைப் பற்றிய அவதானம் இருந்தது. ஆனால் குறிப்பிட்ட வெகுஜனப் பத்திரிக்கை உரை நடையிலிருந்து உருவான பொறுக்கி மொழியை மாமல்லன் எதற்கெடுத்தாலும் பயன்படுத்துவதன் ‘நிர்ப்பந்தம்’ என்ன என்பதுதான் கேள்வி. 'சிறுமி கொண்டு வந்த மலர்', 'முடவன் வளர்த்த வெள்ளைப்புறாக்கள்' ஆகிய கதைகளை எழுதிய மாமல்லனா இது? இல்லை சுந்தர ராமசாமி இப்போது இருந்திருந்தால் மாமல்லன் வகைதொகையில்லாமல் பயன்படுத்தும் உரைநடையை ஆதரித்துதான் இருப்பாரா?
மாமல்லன் தன் பதிவில் கொடுத்திருக்கும் விக்கிரமாதித்யன் கவிதையில் உள்ள மொழியும், மாமல்லனின் பதிவிலுள்ள பொறுக்கி உரை நடையின் மொழியும் ஒன்றா? 


நாகார்ஜுனனின் புத்தக அட்டையை தன் பதிவில் கொடுத்திருக்கிறாரே மாமல்லன், பொறுக்கி மொழி நாகர்ஜுனன் கடுமையாக விமர்சிக்கும் அ-கலாச்சாரத்தின்பாற்பட்டது, எதிர்கலாச்சாரம் சம்பந்தப்பட்டதல்ல என்பது கூடவா தெரியவில்லை மாமல்லனுக்கு? இல்லை எல்லாருடைய சாமானமும் ஒன்றுதானே என்ற அ-கலாச்சார பதில்தானா அதற்கும்?
ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் மாமல்லனுக்கும் தகராறு இருந்தால் அதை எதற்கு இந்த விவாதத்தில் கொண்டுவருகிறார் மாமல்லன்?
கல்யாணராமனுக்கும் எனக்கும் நிகழ்ந்த டிவிட்டர் உரையாடல் முழுவதையும் மாமல்லன் ஏன் தன்னுடைய பதிவில் தரவில்லை?
தமிழ் உரை நடைகளின் வகைகள், அவற்றின் உருவாக்கம், பொருத்தப்பாடு, பயன்பாடு, ஆகியவற்றைப் பற்றிய ஆக்கபூர்வமான விவாதமும் உரையாடலும் மீண்டுமொருமுறை மாமல்லனின் பொறுக்கி உரை நடையால் திசை திருப்பப்பட்டிருக்கிறது. 

Saturday, December 17, 2011

கவிஞர் விக்கிரமாதித்யன் நம்பி


கவிஞர் விக்கிரமாதித்யன் நம்பி 
கவிஞர் விக்கிரமாதித்யனை நான் முதன் முதலில் 1985இல் சென்னையில் இலக்கு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த எழுபதுகளில் கலை இலக்கியம் என்ற சிறுபத்திரிக்கை கூட்டத்தில் சந்தித்தேன். திருச்சியில் என் நண்பர்கள் ரமேஷ்குமார், செந்தில், மனோகர் நடத்திய ராகம் இதழில் ஸில்வியா என்ற புனைபெயரில் நான் எழுதிய ஆறு சிறுகதைகள் பிரசுரமாயிருந்தன. என்னுடைய ஐந்து கதைகளுக்குப் பிறகு ஆறாவது இதழில் என் கதையோடு சாரு நிவேதிதாவின் ‘கிரிக்கெட்டை முன் வைத்து புத்தி ஜீவிகளுக்கு சொல்லிக்கொண்டது’ கதையும், தமிழவனின் சிறுகதையும் பிரசுரமாகியிருந்தது. நானும் ராகம் ஆசிரியர் குழுவில் இருந்தேன், விமர்சன கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என என்னுடைய பல எழுத்துக்களும் பிரசுரமாயிருந்தன. 
இலக்கு கூட்டம்தான் நான் பார்வையாளனாக, மாணவனாக, இளம் எழுத்தாளனாக பங்கேற்கும் முதல் கூட்டம். திருவல்லிக்கேணியில் ஏதோ ஒரு மண்டபத்தில் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. சி.சு.செல்லப்பாவின் கட்டுரை முதல் அமர்வில் முதல் கட்டுரை. சி.சு.செல்லப்பாவின் குரல் அடைத்துக்கொண்டிருந்தது; கர கரவென்று என்ன வாசிக்கிறார் என்றே யாருக்கும் பிடிபடவில்லை. விமலாதித்த மாமல்லன் எழுந்துபோய் செல்லப்பா நான் உங்கள் கட்டுரையை வாசிக்கிறேனே என்றார். செல்லப்பா நொடியில் அதை மறுத்துவிட்டார். கரகர லொட லொடா வென தொடர்ந்து வாசித்தார். சாரு நிவேதிதா துள்ளி எழுந்துபோய் மண்டபத்தின் வாசற்கதவை சுவரில் டொம் டொம் என்று அடித்தார். சாரு கதவை சுவரில் அடிக்க அடிக்க செல்லப்பா குரலை அதற்கு நிகராய் உயர்த்தி கர கர லொட லொடாவைத் தொடர்ந்தார். ஒன்றுமே நடக்காதது போல கூட்டத்தினர் செல்லப்பாவினை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். புதியவனான நான் வெல வெலத்துபோய் பக்கத்து இருக்கையில் பெரிய கருந்தாடியுடன், வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் காலை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த விக்கிரமாதித்யனிடம் அறிமுகம் செய்துகொண்டேன். விக்கிரமாத்தியனிடம் இப்படி கலாட்டா செய்கிறாரே பெரியவரை சாரு என்றேன் பம்மி பம்மி. நானும் மாமல்லனும் பண்ணாத கலாட்டாவா இது என்ன கலாட்டா என்றார் நம்பி.
பின்னர் இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு குற்றாலம் கவிதைப்பட்டறையில் நான் வாசித்த கட்டுரையைத் தொடர்ந்து பெரியவர் தருமு சிவராமு என்ற பிரமிளுக்கும் அமுல்பேபி எனக்கும் ஏற்பட்ட வாதம் குரல் உயர்த்திய வாய்ச்சண்டையாயிற்று. மறு நாள் அதிகாலை நான் தங்கியிருந்த விடுதி அறைக்குள் அதிரடியாக நுழைந்தார் விக்கிரமாதித்யன் நம்பி,’ டேய் பேராசிரியரே உனக்கு தருமு சிவராம் யாரென்று தெரியுமாடா‘ என்று கத்தியபடியே.  இவருக்கு எப்படி நெல்லை கல்லூரியொன்றில் நான் ஆசிரியராக பணியில் சேர்ந்தது தெரியும்  என்று அனுமானிப்பதற்குள் வசை மேல் வசை காற்றை நிரப்பியது. 
கவிதைப் பட்டறை முடிந்து ஓரிரு நாட்கள் சென்றிருக்கும். கல்லூரியில் இருந்தேன். வாட்ச்மேன் வகுப்பிலிருந்த என்னிடம் யாரோ ஒரு சாமியார் உங்களை உடனடியாகப் பார்க்கவேண்டும் என்கிறார், வாசலில் நிற்கிறார் கொஞ்சம் வந்து பார்த்துவிட்டு போங்களேன் என்றார். வகுப்பை பாதியில் விட்டுவிட்டு வாசலுக்குப் போய் பார்த்தால் நம்பி ஒரு தோளில் டிரங்குப்பெட்டியும், கையில் வேட்டி நுனியுமாய் அடங்கிய புயல் போல நின்றிருந்தார். கூட்டிக்கொண்டு போய் துறை அலுவலகத்தில் உட்காரவைத்தேன். வகுப்பு முடிந்து திரும்ப துறைக்கு வந்தபோது நம்பி எல்லோருக்கும் கவிஞராய் அறிமுகமாயிருந்தார். கால் மேல் கால் போட்டபடி ஸ்டைலாய் சிகரெட் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார்; என்னிடம் எனக்கு சன்மானம் வேண்டுமே என்றார். என்னிடத்தில் இப்போது காசில்லை கவிதை பற்றி ஒரு உரையாற்றுங்களேன் கல்லூரியில் சன்மானம் வாங்கித் தருகிறேன் என்றேன். கல்லூரி நிர்வாகம் கவிதை வேண்டாம் வேறு ஏதாவது பொருளில் பேசட்டும் என்று அனுமதி கொடுத்தது. அன்றைக்கு மதியமே நம்பி ‘தற்கால பத்திரிக்கைத் தமிழ்’ என்ற பொருளில் பேருரை ஆற்றுவது என்று ஏற்பாடாயிற்று. 
சுமார் அறுநூறு மாணவர்கள் கூடியிருந்த அரங்கில் நம்பியை அறிமுகப்படுத்தும்போது இன்றைய தமிழ் நவீன கவிதையில் முக்கியமான முதல் பத்து கவிஞர்களைச் சொல்லவேண்டுமென்றால் அதில் விக்கிரமாதித்யனின் பெயர் ஒன்றாகும் என்றேன். நம்பி என்னை பூனை போல தாடியை நீவிவிட்டபடியே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தார்.  
அன்றைக்கு நம்பி ஆற்றிய பேருரை நான் வாழ்நாளிலேயே மறக்க முடியாத உரையாகும். பின்னாட்களில் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களிலும் சரி, வெளியிடங்களிலும் சரி எத்தனையோ புகழ் வாய்ந்த கவிஞர்கள், தத்துவவாதிகள், இலக்கியவாதிகளின் உரைகளை கேட்டிருக்கிறேன் ஆனால் நம்பியின் உரைக்கு நிகரான ஒன்றினை இன்று வரை கேட்டதில்லை. அலட்சியமாக, உட்கார்ந்தபடியே, இயல்பான பேச்சுத் தமிழில்தான் நம்பி பேசினார். உண்மையின் ஒளிர்வு என்றால் என்ன என்று அந்தப் பேச்சில்தான் அன்றைக்கு அறிந்தேன்.  மிகை அலங்காரங்களும்  , ஜோடனைகளும் துறந்த நவீன கவிதைக்கு உதாரணமாய் நகுலனின் கவிதை வரிகளை மேற்கோள்காட்டி அவர் பேச்சு ஆரம்பித்தது. நவீன கவிதையை மட்டுமே எழுதுபவனுக்கு வாழ்வாதாரத்திற்கான வேலைகள் எதுவும் இல்லாதபடியால் அச்சுக்கோர்ப்பவர்களாகவும், மெய்ப்பு திருத்துபவர்களாகவும் செய்தியாளர்களாகவும் மட்டுமே பத்திரிக்கைத் துறையில் சேர வேண்டிய நிர்ப்பந்தத்தைக் குறிப்பிட்டு அந்தப் பத்திரிக்கைகளில் தான் நம்பும் நவீன தமிழ் கவிதையின் மொழிக்கு நேரெதிரான ஆவேசக்கூச்சல் மொழியினை தமிழ் பொது வெளி உரை நடையாக உருவாக்குவதற்கும், தான் அத்தகைய மொழியைப் பயன்படுத்தியே பத்திரிக்கை செய்திகளை உருவாக்க, எழுத நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Investigative journalism என்ற பெயரில் பல ஆவேசக்கூச்சல் பத்திரிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டு, பிரசித்தி பெற்றுவந்த காலம் அது. பல பத்திரிக்கைகளின் ஆரம்ப நிலைகளில் அவற்றின் உரை நடை உருவாக்கத்தில் தானும், அவர் நண்பர் துரை என்ற வித்யாஷங்கரும் பங்கேற்றதைச் சொல்லிய நம்பி, விஜய டி.ராஜேந்தரின் அடுக்கு மொழி, திரைப்பட பாடல்களை செய்தித்தலைப்புகளாய் வைப்பது, போலியான வேடிக்கையான தனித்தமிழ் என்று கலந்துகட்டி பொதுவெளியின் தமிழ் உரை நடை உருவானதாக மேலும் சொன்னார். அரசியல் தலைவி ஒருவரின் செயல்பாட்டினைக்குறிக்க ‘சண்டி ராணியின் திக்குமுக்கு தக்குத்தாளம்’ என்ற செய்தித் தலைப்பாய் வைத்தது, எம் எல் ஏ ஒருவரின் ஊழலைச் சொல்ல ‘அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ’ பாடல் வரியினைப் பயன்படுத்தியது என்பது போன்ற பல உதாரணங்களைக் கொடுத்து பத்திரிக்கை உரை நடையின் உருவாக்கத்தினை விவரித்தார். ‘சிக்கலை இடியாப்ப சிக்கலாய் மாற்றினார்’, ‘தமாசு’, ‘செம’, ‘ஆப்பு’, ‘சூப்பர்’, ஆகிய பிரயோகங்கள், ‘ஜாங்குஜக்கும்ஜக்கும்ஜக்கும்ஜா‘ போன்ற ஒலிகள் ஆகியற்றை மட்டுமே பயன்படுத்தி உருவாகிற பொது வெளியின் பத்திரிக்கைத் தமிழ் உரை நடை சிந்தனையை எப்படி மழுங்கடிக்கிறது, மொழி நுட்பம் அறியாத பயனாளர்களின் மொழி உபயோகத்தை எப்படிக் குறுக்குகிறது என்றும் நம்பி விளக்கிச் சொன்னார். வியப்பு, ஆச்சரியம், திகில், வெறுப்பு, ஆவேசம் ஆகிய உணர்ச்சிகள் அனைத்தும் ஒரு இருபது வார்த்தைகளில் பத்திரிக்கைத் தமிழ் உரை நடையில் குறுகிவிடுவதையும் அவற்றின் பயன்பாட்டிற்கு பழக்கப்பட்டு விடுபவர்களுக்கு தங்களின் சுய வாழ்பனுபவங்களை வேறுவகையில் வார்த்தைப்படுத்த முடியாமல் வாழ் நாள் முழுக்க பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் நம்பி எடுத்துச் சொன்னார்.
விதிவசம் என்று இந்த மாதிரியான பத்திரிக்கைகளில் வேலை செய்வது தனக்கு ஏற்படுத்தும் தாங்கவியலா மன உளைச்சலே தன்னைக் குடியை நோக்கித் தள்ளுவதாகவும் சொன்ன நம்பி குடிப்பதற்கு ‘கவர்’ தருகிற அரசியல்வாதிக்கு ஏற்ப பத்திரிக்கையாளனான தன் செய்தியின் நிறம் எப்படி மாறும் என்றும் தொடர்ந்தார். பாவ சங்கீர்த்தனமெனவும், வாக்குமூலமெனவும் அப்பட்டமாக எந்த ஒளிவு மறைவு இல்லாமல் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த விக்கிரமாதித்யனின் உரை மாணவர்களை உலுக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பகட்டில்லை, ரொமாண்டிசிசம் இல்லை, தன்னுடைய இமேஜ் பற்றிய கவலையில்லை என்று பேசிய விக்கிரமாதித்யன் நம்பி எவ்வளவு உயரிய கலைஞன் என்று அன்று நான் கண்டுகொண்டேன்; என் தந்தைக்கு நிகரான ஸ்தானத்தோடு அவருக்கும் எனக்குமிடையே நட்பு வேரூன்றியது.
உரை முடிந்த பிறகு கல்லூரி கொடுத்த சன்மானத்தோடு அவரை தங்கும் விடுதியில் விட்டுவிட்டு வீடு திரும்பினேன். எங்கள் வீடு நெல்லையில் அப்போது சிந்துபூந்துறையில் இருந்தது. இரவு மணி ஒன்றிருக்கும். எங்கள் வீட்டின் முன் தெருவில் ஏகமாய் சத்தம். தூக்கம் கலைந்து மாடி பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தேன். நம்பி நன்றாகக்குடித்துவிட்டு தெருவில் கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். ‘டேய் பேராசிரியப் புடுங்கி, வெளியே வாடா’ போன்ற வாசகங்களோடு  கடுமையான கெட்ட வார்த்தைகளும் அவர் வாயிலிருந்து சரமாரியாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன.  வேட்டி இடுப்பிலிருந்து நழுவிக்கொண்டிருந்தது. ‘என்ன விஷயம் நம்பி?’ என்றேன். ‘ஐந்தாவது நபர் யாருடா புண்டே?’ என்றார். எந்த ஐந்தாவது நபர் என்று தலையும் புரியாமல் காலும் புரியாமல் தூக்கக் கலக்கத்தோடேயே கீழே இறங்கி தெருவுக்கு வந்தேன். பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், விக்கிரமாத்தியன் ஆகிய நான்கு கவிஞர்கள்தானே, ஐந்தாவது நபர் யாரென்று நான் மதியம் -முதல் பத்து கவிஞர்களில் ஒருவர் என்று- அவரைப் பற்றிய அறிமுக உரையில் சொன்னதைக் குறிப்பிட்டு நம்பி கேட்கிறார் என்று நான் புரிந்துகொள்ளவே அரைமணி நேரம் ஆகிவிட்டது.
இன்னும் குடிக்க வேண்டும் என்று நம்பி படுத்த அவரோடு நான் புறப்பட்டுச் சென்றேன். இரவு இரண்டு மணிக்கு பாக்கெட் சாராயக் கடை கூட மூடிவிட்டது. நம்பி எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. பலகீனத்திலும் குடியிலும் உடல் தள்ளாடிக்கொண்டிருந்தது. அவர் பண்ணிய கலாட்டாவில் அவசரமாகச் சட்டையைப்போட்டுக்கொண்டு கிளம்பியதில் காசு வேறு எடுத்து வரவில்லை. கல்லூரியில் வாங்கிய சன்மானத்தை அவர் ஏற்கனவே தீர்த்து விட்டிருந்தார். திருநெல்வேலி ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் நம்பிக்குத் தெரிந்த டீக்கடை ஒன்றிருந்தது. அங்கே போய் ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்கக் கிளம்பினோம். அந்த டீக்கடையில் நல்ல வேளையாக நம்பி நண்பர் அங்கே இருந்தார்; ஆனால் கடையில் ஒரே ஒரு சுண்டல் பொட்டலம்தான் இருந்தது. அதை தானமாய் வாங்கி, பிரித்து முதல் கவளத்தை வாயில் போடப்போனபோது ஒரு பிச்சைக்காரர் ஐயா பசிக்குது என்று வந்து நின்றார். நம்பி தன் கையிலிருந்ததை அப்படியே அவரிடம் கொடுத்துவிட்டார். கைத்தாங்கலாய் நம்பியை அவர் விடுதியில் விட்டுவிட்டு வீடு திரும்பினேன். 


பசியிலும் போதையிலும் தரையில் படுத்து தூங்கிப்போயிருக்கிறார்.மறு நாள் நம்பி தங்கியிருந்த விடுதிக்கு நான் போனபோது நம்பியின் செருப்பு, கண்ணாடி, டிரங்குப்பெட்டியிலிருந்தவை எல்லாம் களவு போயிருந்தது. அவர் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து தென்காசிக்கு பஸ் ஏற்றிவிட்டேன். பஸ் புறப்படும்போது ‘போயிட்டு வாரேன் பிள்ளைவாள்’ என்று நம்பி என்னைப் பார்த்து கத்தியபோது பஸ்ஸே என்னைப் பார்த்து சிரித்ததுபோல பிரம்மை தட்டியது.
பிறகு நம்பியும் நானும் அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்கள் உண்டானது. சந்திக்கவில்லையென்றாலும் என்னையும் வண்ணதாசனையும் ஃபோனிலாவது அழைத்து நீங்கள் கலைஞனில்லை என்று சொல்லாவிட்டால் நம்பிக்கு பல குடி இரவுகள் நிறைவு பெற்றதாகாது. வந்து கலாட்டா செய்யும்போது ஏண்டா இவருடன் நட்பாக இருக்கிறோம் என்று மனம் கலங்கும். பல மாதங்கள் காணாவிட்டால் நம்பி எங்கே எங்கே என்று மனம் தேடும். 
சொல்லவொணா துயரத்திற்கு ஆட்பட்டு தமிழில் எழுதாமல் தனித்திருந்த காலங்களில் என்னைத் தேடி வரும் வெகு சில நண்பர்களில் நம்பி ஒருவராயிருந்தார். நேரடியாக என்றில்லாமல் ஜோதிடம், பரிகார வழிபாடு என்று ஆறுதலாய் ஏதாவது சொல்லிவிட்டுப்போவார். நான் கலைஞனில்லைன்றாலும் எழுத வேண்டும் என்பதை ஏதோ ஒரு வகையில் சொல்லிப்போவார். துக்க காலத்தின்போதும், முன்பும், பின்பும் அறுபடாத நட்பு அவருடன் மட்டுமே எனக்கு இருந்திருக்கிறது.
ஒரு நல்ல வசதியான வாழ்க்கை அமைந்திருந்தால் கம்பீரமும் தேஜஸும் நிறைந்த கவிஞராக அல்லவா விக்கிரமாதித்யன் நம்பி புகழ் பெற்றிருப்பார் என நான் நினைக்காத சந்தர்ப்பங்களே இல்லை. ‘நான் கடவுள்’ படத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது என்னதான் சினிமா என்றாலும், என்னதான் நடிப்பு என்றாலும் நம்பியை பிச்சைக்காரர் பாத்திரத்தில் பார்க்க என்னால் முடியவேயில்லை; ஆங்காரமான துக்கம் என் தொண்டையை அடைக்க கண்களில் நீர் மல்குவதை தவிர்க்கவே முடியவில்லை.
மாமல்லனோடு டிவிட்டர், ஃபேஸ்புக் கர்புர் உரையாடலின்போது நம்பியின் பேருரை ஞாபகம் வந்து இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். எழுத்தின் போக்கில் எங்கேயோ போய்விட்டது கட்டுரை.
சொல்லவந்தது இரண்டு விஷயங்கள்: 
ஒன்று நம்பிக்கும் எனக்கும் ஒரு பந்தயம் இருக்கிறது. நான் கவிதை எழுதிவிட்டேனென்றால், என் கவிதைகளும் அவர் பார்வையில் கவிதைகளாகத் தேறிவிட்டால் அவர் எனக்கு ஒரு பவுனில் மோதிரம் போடவேண்டும். ஷங்கர் ராம சுப்பிரமணியன் என் தளத்திலுள்ள கவிதைகள் சிலவற்றை நம்பியிடம் வாசித்துக்காட்டியதாக என்னிடம் சொன்னார். சமீபத்தில் என்னிடம் ஃபோனில் பேசிய நம்பியும் மோதிரம் போட ஒப்புக்கொண்டுவிட்டார். என் கவிதைத் தொகுதி மின் பதிப்பாய் வெளிவர இருக்கையில் இது எனக்கு இளமையை மீட்டெடுத்ததன் சந்தோஷமாயிற்று.
இரண்டு விக்கிரமாதித்யன் நம்பி தன்னுடைய எந்த இலக்கிய கட்டுரையிலும் சரி, கதையிலும் சரி, கவிதைகளிலும் சரி எனக்குத் தெரிந்தவரை ஆவேசக்கூச்சல் பத்திரிக்கைகளின் நடையைப் பயன்படுத்தியதில்லை.

Thursday, December 15, 2011

கொலைவெறி ரகசியம், தொடர்கிறது

கொலைவெறி ரகசியம் தொடர்கிறது


Sunday, December 11, 2011

திருவாளர் கும் கும் டும்திருவாளர் கும் கும் டும்கும் கும் டும்மும் மூன் மூனும் சிலசமயங்களில் முவும் இவர்களோடு சேர்ந்து செய்யும் சாகசங்கள்தான் திருவாளர் கும் கும் டும் படத்தொடர். மு குட்டிக்கதைகளோடு சேர்ந்து வாசிக்கவேண்டியது.Thursday, December 8, 2011

ஜுலியா கிறிஸ்தவாவின் 'கவித்துவ மொழியில் புரட்சி' பகுதி 3

"Mirror" from haberarts.com 


வடிவ ஒழுங்கு, செய் நேர்த்தி, கவிதா தர்க்கம் ஆகியவற்றின் உள்ளார்ந்த மற்றதாக கவிதையின் லயம், சப்தம், தொனி, பவனைகள், சைகைகள் ஆகியனவற்றை அடையாளப்படுத்தியதன் மூலமும், மற்றதினை பெண்மையின் குணனலன்களாக விவரித்ததன் மூலமும் கிறிஸ்தவா மொழிக்கும் மனிதனுக்குமான உறவையே தன்னிருப்பு கட்டமைக்கப்படுவதன் செயல்பாடாக மாற்றுகிறார். மேற்கத்திய தத்துவ பாரம்பரியத்தில் தன்னிலை-மற்றது ஆகியவற்றிற்கிடையிலுள்ள உறவு முக்கிய பங்கு வகிப்பதாக இருந்து வந்திருக்கிறது. தன்னிலை என்பது தன்னிருப்பாக கட்டமைக்கப்படக்கூடியது அதிலும் அந்த கட்டமைதல் மொழி மூலமாக நடைபெறுகிறது என்பதை சுட்டியது கிறிஸ்தவாவின் முக்கிய பங்களிப்பாகும்.
பல்கேரியாவில் பிறந்து ரஷ்ய உருவவியல் கோட்பாடுகளில் தேர்ச்சிபெற்றவராக ஃபிரெஞ்சு தத்துவ சூழலுக்குள் காலடி எடுத்து வைக்கும் கிறிஸ்தவாவுக்கு, ரஷ்ய உருவவியலை மிக முக்கியமான இலக்கிய கோட்பாடாக மாற்றி அமைத்த மிகைல் பக்தினின் தாக்கம் இருந்தது. பக்தினே தன்னிலைக்கும் மற்றவைக்குமான (Self and Other) உறவினை அறம் சார் உறவாக தாஸ்தாவ்ஸ்கியின் நாவல்களில் அடையாளப்படுத்தியிருந்தார். இலக்கியம், கலை ஆகியனவற்றை ஆசிரிய தன்னிலையின் வெளிப்பாடாக மட்டுமே பார்க்கப் பழகியிருந்த மேற்குலகிற்கு பக்தின் தாஸ்தாவ்ஸ்கியின் நாவல்கள் கலை உச்சத்தினை அடைவதற்குக் காரணம் அவை தாஸ்தாவ்ஸ்கியென்ற ஆசிரிய தன்னிலையின் வெளிப்பாடாக இல்லாமல் அவர் நம்பியிருந்த கிறித்தவ உலக நோக்கிற்கு நேர் எதிரான கதாபாத்திரங்களையும் கதைச் சூழல்களையும் கற்பனை செய்ய முடிந்தது என்று எடுத்துச் சொன்னார். அத்தகைய எதிர்மறை கதாபாத்திரங்களுக்கான ஜீவித நியாயத்தையும் அவரால் தன் நாவல்களில் எடுத்துச் சொல்ல முடிந்தது என்பது மற்றவையோடு உரையாடுகின்ற கற்பனை (Dialogic imagination) என்றும் பக்தின் விளக்கியிருந்தார். பலகீனர்களையும் பாவிகளையும் ரட்சியுங்கள் என்று உண்மைக் கிறித்தவரான தாஸ்தாவ்ஸ்கி தன் நாவல்களில் இறைஞ்சவில்லை; மாறாக அத்தகைய மனிதர்களுக்கும் உலகிருப்பிற்கான நியாயம் என்ன என்பதினை வெளிச்சொல்வதாகவே தாஸ்தாவ்ஸ்கியின் நாவல்கள் அமைந்திருக்கின்றன இந்த குணமே தாஸ்தாவ்ஸ்கியின் நாவல்களை ஐரோப்பிய நாவல் வரலாற்றிலேயே உச்சகட்ட படைப்புகளாக மாற்றுகின்றன என்றும் பக்தின் வாதிட்டார். தன் நியாயத்தைவிட பிறர் நியாயம் என்ன என்பதை புனவிற்குள் கொண்டுவருவதே கலை என்றும் தாஸ்தவ்ஸ்கியை முன்னிறுத்தி பக்தின் வாதிட்டார்.
பக்தினின் தன்னிலை- மற்றவை உறவு பற்றிய சிந்தனை, மொழி பற்றிய தத்துவம், இலக்கியக் கோட்பாடு என்று மட்டுமில்லாமல், மானிடவியல், சமூகவியல், அரசியல், காலனீய நீக்க சிந்தனைகள், அறவியல் என பல துறைகளிலும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. எட்வர்ட் சேடின் ‘ஓரியண்டலிசம்‘, உதாரணமாக, கீழைத்தேயத்தினை மற்றதாக ஐரோப்பிய சிந்தனை கற்பிதம் செய்கிறது என்று விளக்குகிறது. ஆனால் பக்தினின் சிந்தனையின் பல துறை தாக்கங்கள் அமெரிக்க இலக்கியக் கோட்பாட்டாளர்களும் தத்துவவாதிகளும் பக்தினை 1950-1960களில் கண்டுபிடிக்கும்வரை நிகழவில்லை.
கிறிஸ்தவா உள் நுழையும்போது இருந்த ஃபிரெஞ்சு தத்துவச்சூழலோ இருத்தலியலின் பாதிப்பினால் தன்ன்னிலையைக் கொண்டாடும் சிந்தனையாக இருந்தது. இந்த தன்னிலைக் கொண்டாட்டத்தின் மிக மோசமான வெளிப்பாடாகவே சார்த்தரின் மற்றவையெல்லாம் நரகம் என்ற வாசகம் விவாதத்திற்குள்ளாகியது. சார்த்தரின் ‘No Exit’ நாடகத்தில் வரக்கூடிய இந்த வாசகத்தினை காம்யூ, சிமோன் தி பூவா ஆகிய சிந்தனையாளர்கள் உடனடியாக கடுமையாக எதிர்த்தனர்; சார்த்தரே தன்னுடைய இந்த வாசகம் சார்ந்த தத்துவ நிலைப்பாடு தவறானது என்று ஒப்புக்கொண்டு எழுத்தாளனின் கடப்பாடு என்ன என்பதினை விளக்கும் கட்டுரைகளை பின்னர் எழுதினார். இருப்பினும்   தன்னிலையை விடுத்து மற்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தத்துவத்தையும், இலக்கிய கோட்பாட்டினையும் வளர்த்தெடுத்தது பின் நவீனத்துவ சிந்தனையாளர்களாலேயே சாத்தியப்பட்டது. லகானுக்கும் கிறிஸ்தவாவிற்கும் இந்த பங்களிப்பில் மிக முக்கியமான இடமிருக்கிறது.
மனிதனுக்கும் மொழிக்குமான எல்லா உறவுகளிலும் தன்னிலை-மற்றவையின் ஊடாட்டம் நிகழ்வதைக் கவிதையை முன்னிறுத்தி துல்லியமாக எடுத்துரைத்ததையே கிறிஸ்தவாவின் முக்கிய பங்களிப்பாக சொல்லலாம். ஆண்-பெண் என்ற ஆசிரியர்களின் பால் நிலை மீறி, இலக்கியம்- இலக்கியமற்றது என்ற பகுப்பு மீறி, பேச்சுமொழி- எழுத்துமொழி என்ற வேறுபாடு மீறி மேற்புறத்து ஒழுங்கும், அடிப்பரப்பு ஒழுங்கின்மையும் எல்லா மொழி வெள்ப்பாடுகளிலும் செயல்படுவதை கிறிஸ்தவா விளக்குகிறார். அதாவது மற்ற தத்துவவாதிகளும் மொழியியல் அறிஞர்களும் தன்னிலையை நிலைத்த ஒழுங்குடையதாகக் கருதும்போது கிறிஸ்தவா தன்னிலையினை தொடர்ந்த மொழி ஊடாட்டத்தின் மூலமாக தற்காலிகமாக கட்டமைக்கப்படுகின்ற தன்னிருப்புகளாகப் பார்க்கிறார். உருவாகியும், சிதைந்தும், ஒன்று சேர்ந்தும், பிளவுபட்டும் என மொழி ஊடாட்டத்திற்குத் தக்க தன்னிலை என்பது தன்னிருப்புகளின் தொகுதியாகாவே அறியப்படுகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கையென்பது பல தன்னிருப்புகளின் தொகுதிதானே தவிர நிலைத்த ஒரு தன்னிலை அல்ல.
கண்ணாடி நிலையிலிருந்து சிறிது சிறிதாக மொழியினைக் கற்றுக்கொள்ளும் குழந்தை மொழியின் வாக்கிய அமைப்பு, இலக்கணம் என்று அறிந்து பயன்படுத்தத் தொடங்கும்போது அந்த மொழி வாயிலில் கிறிஸ்தவா ஒரு விரிசலை அடையாளப்படுத்துகிறார். சசூரின் மொழியியலின்படி இதை விளக்கவேண்டுமென்றால் குறிப்பானுக்கும் குறிப்பீடிற்கும், சப்தத்திற்கும் அர்த்தத்திற்கும் உள்ள இடைவெளி என்று இந்த விரிசலைச் சொல்லலாம். விரிசல்களின் தொடர்ச்சியாகவே தன்னிலை (self) இயக்கம் பெறுகிறது.
தன்னிலை-மற்றவை என்ற எதிர் இருமையாக இதர தத்துவவாதிகள் கட்டமைத்ததை மொழி ஊடாட்டத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொண்டுவந்ததன் மூலம் தன்னிருப்பினை அரசியலுக்கான களனாகவும் கிறிஸ்தவா மாற்றிவிடுகிறார். தன்னிருப்பு (Subjectivity) மனத்தின் உள்ளார்ந்த தளத்திற்குள் எடுத்துச் செல்லப்படுவதால் அரசு, அதிகாரம், அடையாளப்படுத்தும் செயல்பாடு ஆகியனவும் மனம்-மொழி சார்ந்த மனத்தின் உள்ளார்ந்த செயல்பாடுகளாகிவிடுகின்றன. தன்னிருப்புகளின் தொகுதிகளாக தன்னிலையை கணிக்கும்போதே எந்தெந்த காலகட்டங்களில் என்னென்ன தொகுதிகள் உருவாகி கலைகின்றன என ஃபூக்கோவினால் வரலாறுகளை புது விதமாக எழுதமுடிந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. அரசும் அதிகாரமும் ஒருவனிடத்து மேற்பரப்பின் ஒழுங்காக தன்னிலையில் செயல்படுகிறதென்றால் அதன் மற்றதான எதிர் நிலை அரசு, அதிகார எதிர்ப்பும் அடிப்பரப்பில் செயல்படுவதாக இருக்கிறது. ஒரு சமூகத்தின் நீதியும்-குற்றமும், அறமும்-விகாரமும், எழுச்சியும் -வீழ்ச்சியும், ஒவ்வொரு தன்னிருப்பிலிருந்தும் கிளம்புவதாகவே ஒவ்வொரு வரலாற்றுக்கட்டமும் அமைவதாக இருக்கிறது. வெகுஜன தளத்திலிருந்து வரலாற்றினை ஒவ்வொரு குடிமகளின் தன்னிலைக்குமாக கிறிஸ்தவா நகர்த்தியது நீட்ஷேயிடம் தொடங்கி ஃபூக்கோ, தெல்யூஸ் என்று நீளும் தத்துவ பாரம்பரியத்தின் பகுதியாகும். கிறிஸ்தவா கவிதை வாசிப்பிலிருந்து இந்த இடத்தை அடைகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும் கிறிஸ்தவாவினுடையது ஆரம்ப கால பங்களிப்பாகும்.
கவிதை வாசிப்பு என்பது இதனால் தனியான, விசேஷமான வாசிப்பு செயல்பாடென்று மட்டும் கொள்ளலாகாது. ஒவ்வொரு பேசும் உடலின் மொழிச்செயல்பாட்டு சந்தர்ப்பத்திலும் கவிதை உள்ளார்ந்து இருக்கிறது. எழுதப்பட்ட கவிதை இந்த மொழிச் செயல்பாட்டு சந்தர்ப்பங்களை அழுந்தக்கூறி கவனத்தை ஈர்க்கிறது. கவிதை வாசிப்பே வாழ்தல்.
  

Tuesday, December 6, 2011

ஜுலியா கிறிஸ்தவாவின் ‘கவித்துவ மொழியில் புரட்சி’ பகுதி 2அலங்காரம், உவமை, உவமேயம், உருவகம், வடிவ ஒழுங்கு என்று மட்டுமே அறியப்படுகின்ற கவிதையின் உள்ளியக்கம் உள்ளபடிக்கு வெளிப்பாடுக்கான திணறல், உடலுயிரியின் உந்துதல்கள், மொழித்திறன் கற்பதற்கு முந்தைய சைகைகள், பாவனைகள், நிகழ்த்துதல்கள் என்றிருப்பதாக கிறிஸ்தவா கவிதையை வாசிக்கிறார். கவிதை வாசிப்பு என்பதை தாய் சிசு உறவாக கிறிஸ்தவா அனுமானிக்கின்றார் என்றே நான் பல காலமாக  புரிந்துவைத்திருக்கிறேன்; ஒப்புமையில் கவிதைப் பிரதி சிசு, வாசகி தாய். அந்தப் புரிதலுக்கு கிறிஸ்தவாவின் புத்தகத்தை திரும்ப வாசித்தது எந்த குந்தகத்தையும் ஏற்படுத்திவிடவில்லை என்பது எனக்கு பெரு மகிழ்ச்சியை அளித்தது. எந்த ஒரு நல்ல கவிதைக்குள்ளும் அள்ளி எடுத்து கொஞ்ச வாசகிக்கு ஒரு சிசு தன் உடல் பாவனைகளோடு காத்திருக்கிறது என்பதாகவே கிறிஸ்தவாவின் chora எனக்கு மனசிலாகிறது. ஆனால் வாசகிக்கு தாயின் கனிவும் சிசு மொழியின் புரிதலும் வேண்டுமே!
சிசுவின் மொழியற்ற மொழி மனோதத்துவத்தில் துல்லியமான அறிவியலின் சாத்தியப்பாட்டினை மறுக்கிறது; பொருளுணர்த்தும் பண்பு சிசு உடலின் பொருளாய தன்மையிலேயே இருக்கிறது என்பதை சுட்டுகிறது. கிறிஸ்தவா கவிதை வாசிப்பின் மூலம் முன் வைக்கின்ற மொழி பற்றிய தத்துவம் லகானிய உளப்பகுப்பாய்வு கோட்பாட்டிலிருந்து சிறிது மாறுபட்டது. லகான், தான் வேறு உலகு வேறு என்பதினை கண்ணாடியினை முதன்முதலில் பார்க்கும் குழந்தை அறிந்துகொள்வதிலிருந்தே பொருளுணர்த்தும் செயல்பாடு, அர்த்த உருவாக்க செயல்பாடு ஆரம்பிப்பதாகக் கூறுகிறார். தான் உலகிலிருந்து (தாயிடமிருந்து) பிரிக்கப்பட்டிருப்பதால் தன் இன்மையை, தன் முழுமையின்மையை கண்ணாடி நிலையில் உணரும் குழந்தைக்கு தன் பிம்பம் நோக்கி, புற உலகு நோக்கி உருவாகின்ற விழைவு ஆசையாய் உருவெடுக்கிறது. விருப்பு பல்கிப் பெருகி விரிகிறதே தவிர முழுமையான நிறைவேற்றத்தினை அடைவதில்லை. பூர்த்தியற்ற இறுதி நிலையினை காயடிக்கப்பட்ட நிலை என்றழைக்கிறார் லகான். கிறிஸ்தவா, லகான் கண்ணாடி நிலைக்கு முந்தைய தாய்-சிசு உறவினை தன் கோட்பாட்டிற்குள் கொண்டு வருவதில்லை என்று விமர்சிக்கிறார்.
அதாவது பிறப்பின்போதே பிரிதல் வன்முறையான நிகழ்வாக உடலுக்கு சம்பவித்துவிடுகிறது. ‘திகிலின் அதிகாரங்கள்’ (Powers of Horror) என்ற இன்னொரு புத்தகத்தில் இதை சுட்டிக்காட்டும் கிறிஸ்தவா தாயுடலின் அதிகப்படியிலிருந்து கழற்றிவிடப்பட்ட தருணத்திலிருந்தே பிரிவின் தாபமும் அது சார்ந்த பொருளுணர்த்தும் செயல்பாடும் ஆரம்பித்துவிடுகிறது என்கிறார். ஒழுங்குபடுத்தபட்ட குறியீட்டு பாங்கு மொழிக்குள் கண்ணாடி நிலைக்குப் பின் நுழைகின்ற குழந்தை தந்தையின் ஒழுங்கிற்கு பண்பாட்டு சீர்படுத்துதலுக்கு உட்படுகிறதென்றால் அதற்கு முன்பு தாயின் பால்காம்பும் அரவணைப்பும் கிடைத்தல் கிடைக்கப்பெறாமை என்ற குறிப்புணர்த்தும் ஒழுங்குக்குள் முயங்குகிறது. தாய் ஒழுங்கின் குறிப்புணர்த்துதல்கள் மொழிக்குள் உடல் உந்துதல்களாக உடல் ஆற்றல்களாக குழந்தை முழு மனிதனாக வளர்ந்தபின்னும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவற்றையே கவிதையில் அடிப்பரப்பில் இயங்கும் மொழி என்கிறார் கிறிஸ்தவா. கவிதையில் கவிதையாக இனம் காணப்படுவது இந்த அடிப்பரப்பு மொழியே. கவிதை பெண்வசமானது.
கிறிஸ்தவாவின் மொழிக்கோட்பாடு பெண்ணிய எழுத்தாளர்களால் பெண்ணுடலை, பெண் உடலின் உந்துதல்களை எழுதுவதே பெண்ணிய எழுத்து என்றும் எடுத்துச் செல்லப்பட்டது. முலை, யோனி, உதிரப் போக்கு என்றபடிக்கு வெற்றாக நிறைந்துவிட்ட எழுத்தும் பல மொழிகளில் உருவாகிவிட்டது. இந்த வகை எழுத்துக்கள் தாய்மையின் நிராகரிப்பில் உருவாகும் திகிலும் அதன் விளைவாக உருவாகிற நெருக்கடிகளாலான மொழி பற்றி கிறிஸ்தவா எடுத்துரைப்பதை பொருட்படுத்துவதில்லை. மேலும் உடலுறுப்புகளை எழுதுவது உடல் உந்துதல்களை எழுதுவது ஆகாது.
தாய் நிராகரிப்பின் தர்க்கமென்ன என்பதினைப்பற்றியும் கிறிஸ்தவாவின் ‘ கவித்துவ மொழியில் புரட்சி’  ‘திகிலின் அதிகாரங்கள்’  ஆகிய நூல்கள் பேசுகின்றன.

ஃபிராய்டிய தந்தையின் தண்டனைக்கு நிகரானது தாயின் நிராகரிப்பும் என்று காணும் கிறிஸ்தவா பொருளுணர்த்தும் செயல்பாடுகளிலுள்ள நெருக்கடிகளை மையப்படுத்தியே தன் சிந்தனையை முன் வைக்கிறார். இங்கே ஃபிராய்டிய தந்தை எனப்படுவது உயிரியல் தந்தை அல்ல மாறாக மொழி ஒழுங்கு, அதிகாரம், பண்பாட்டு விதிகள், மரபு ஆகியனவற்றின் குறியீடு என்று எப்படி புரிந்துகொள்கிறோமோ அது போல தாய் என்பதையும் தாயின் நிரகாரிப்பு என்பதனையும் பொருளுணர்த்தும் செயல்பாடுகளிலுள்ள எதிரொழுங்கு என்றே புரிந்துகொள்ளவேண்டும். தான் வேறு  உலகு வேறு என்று கண்ணாடி நிலையில் தன்னடையாளம் பெறும் குழந்தை மொழி ஒழுங்கினில் திறன் பெறும்போதே தன்னடையாளம் உறுதி பெற்றதாகவும் மாறுகிறது. தன்னடையாளம் உறுதி பெறுவது எங்கெல்லாம் விரிசல்விடுகிறது என்று கிறிஸ்தவா ஆராய்கிறார்.

தன்னடையாள மொழி ஒழுங்கு (எனவே ஃபிராய்டிய அர்த்தத்தில் தந்தையின், ஆணின் மொழி ஒழுங்கு) விரிசல்விடும் சொல்லாடல்கள் என கவிதை, தாய்மை, உளப்பகுப்பாய்வு ஆகியனவற்றை கிறிஸ்தவா அடையாளப்படுத்துகிறார்.

கவிதையின் சொல்லாடல் தன் பொருளுணர்த்தும் செயல்பாட்டிற்கு கவனத்தை ஈர்க்கிறது; அதன் கவன ஈர்ப்பு சப்தம், சொல்லாக்கம், லயம், கவிதையின் உத்தி என குறிப்புணர்த்தும் பாங்கினை (Semiotic) முன்னிறுத்தி, அதிலிருந்து குறியீட்டு பாங்கின் (Symbolic) ஒழுங்கினையும் எனவே அர்த்ததையும் உருவாக்க கோருகிறது. குறியீட்டு பாங்கு சார்ந்தே தன்னிருப்பு ஒருமையும் அடையாளமும் பெறுவதால் கவிதையின் சொல்லாடலும் அதன் கவன ஈர்ப்பும் தன்னிருப்பின் ஒருமையை கலைக்கின்றன. கவிதை, மொழி ஒழுங்கினால் உருவான வாசகனின் சுய அடையாளத்தை   கலைத்துவிடுகிறது; அப்படி கலைப்பதன் மூலம் சுயம் முழுமையானது, ஒருமையுடையது என்ற மயக்கத்தினை தற்காலிகமாகவேனும் விரிசல்காண வைத்துவிடுகிறது.

தாயுடல் - தாய், சேய் எனப் பிரியக்காத்திருக்கும் தன்னிருப்பு. தனக்குள்ளாகவே, தன்னிருப்புக்குள்ளாகாவே வேறொன்று பிரியவும் மற்றொன்றாகவும் காத்திருக்கிறது என்ற மனித மனக்கட்டமைப்பிற்கு தாயுடல் ஒரு வலுவான உருவகம். ஃபிராய்டிய, லகானிய உளப்பகுப்பாய்வு மொத்தமாகவே தனக்குள் இயங்கும் மற்றொன்றினை அடிப்படையாகக்கொண்டதுதான். மனித இனம், சமூகம் இரண்டிற்குமான இயங்குவிதிகளை தாயுடல், தாய்மை ஆகியவற்றை உருவகமாக்குவதன் மூலம் கிறிஸ்தவா விளக்குகிறார். ‘அன்பின் கதைகள்’ (Tales of Love) என்ற புத்தகத்தில் கிறிஸ்தவா தாயுடலை சட்டத்திற்கு புறம்பானவர்களுக்கான அறத்தின் உருவகமாக மாற்றுகிறார். இந்த அறம் சமூக தன்னிலைகளை மற்றவர்களோடு அன்பினால் பிணைக்கிறது, சட்டத்தினால் அல்ல.

கவிதையையும், தாய்மையும் போலவே உளப்பகுப்பாய்வும் சுய அடையாளத்திற்கு உள்ளாகவே ஆழ் மனத்தில் இயங்குகின்ற வேறொன்றினை வெளிக்கொணர்வதாக இருக்கிறது. உளப்பகுப்பாய்வு மனித நனவிலியில் இயங்கும் மற்றொன்றினை தொடர்ந்து பேசவைத்து பேசவைத்து விரிவாக்குவதன் மூலம் தன்னிருப்பை தனக்கான மற்றதுடன் உரையாட வைக்கிறது.
 


ஜூலியா கிறிஸ்தவாவின் ‘கவித்துவ மொழியில் புரட்சி’ பகுதி 1

Julia Kristeva photo from http://en.wikipedia.org/wiki/Julia_Kristeva

பேசும் உடலை கவிதையின் மொழிக்குள்ளும் கவிதையைப் பற்றிய சிந்தனைக்குள்ளும் எப்படி கொண்டு வருவது என்ற கேள்விக்கு புதிதாக விடையளித்ததன் மூலமாக மொழியியல், இலக்கிய விமர்சனம், மனோதத்துவம், பெண்ணியம் ஆகிய சிந்தனைத்துறைகளை முற்றிலும் புதியதாக்கியவர் ஜூலியா கிறிஸ்தவா. அவருடைய ‘கவித்துவ மொழியில் புரட்சி’ (Revolution in poetic language) என்ற நூலை சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் வாசித்தேன். கவிதை எழுத, வாசிக்க, விமர்சிக்க, அறிய, கிறிஸ்தவாவின் இந்த ஆரம்ப காலகட்ட நூல் எனக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும் என்று தோன்றியது.
1984இல் ஃபிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட ‘கவித்துவ மொழியில் புரட்சி‘ அதுவரைக்கும் மொழி பற்றியுள்ள தத்துவங்களை கேள்விக்குள்ளாக்குகிறது. கிறிஸ்தவாவே இது பற்றி  குறிப்பிடுகையில் ‘கருத்தின் வெளியுருவங்களே மொழி என்று சொல்லும் நம் மொழி பற்றிய தத்துவங்கள், ஆவணக்காப்பாளர்கள், தொல்லியலாளர்கள், பிண ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் எண்ணங்களே ஆகும்’ என்கிறார். அதாவது பேசும் மனித உடல்களையும், மொழியையும் அவற்றின் இயங்குதன்மையிலிருந்து பிரித்து நிலையானதாக எனவே செத்ததாக, ஆவணப்படுத்தக்கூடியதாக, 
மக்களிடமிருந்து பிரித்த மொழியினை ஆய்வுக்குட்படுத்தக்கூடியதாக பின் நவீனத்துவத்திற்கு முந்தைய மொழி பற்றிய மேற்கத்திய தத்துவம் இருந்தது. இதிலிருந்து முற்றிலும் விலகி கிறிஸ்த்வா, பேசும் உடல்களின் உந்துதல்களாலும், சக்தி வெளிப்பாடுகளினாலும் உருப்பெறும் மொழி பொருளுணர்த்துவது மட்டுமல்லாமல் அனுபவங்களையும் தன்னிருப்புகளையும் வடிவமைக்கிறது என்கிறார். மற்ற ஃப்ரெஞ்சு பின் நவீன சிந்தனையாளர்களான லகான், தெரிதா, ஆகியோரோடு சேர்த்து கிறிஸ்தவாவை வாசிக்கும்போது கிறிஸ்தவா மொழியை சகல மனித பொருளுணர்த்தும் செயல்பாடுகளின் அங்கமாகவே பார்க்கிறார் என்பது தெரியவரும். மொழியில் ஏற்படும் மாற்றங்கள் தன்னிருப்பு, தன் உடலோடு, மற்றவர்களோடு, பொருட்களோடு கொள்கின்ற உறவில் ஏற்படும் மாற்றங்களை கட்டமைக்கின்றன. மொழியின் சக்தியென்பது மனித உடலுயிரியின் சக்தி மொழிக்குக் கடத்தப்பட்டதால் உண்டாவதாகும். உடலுயிரியின் சக்தி உணர்ச்சி வெளிப்பாடுகளினால் அன்றி மொழிக்கு வேறெவற்றினால் கடத்தப்படக்கூடியதாகும்?
தினசரி நாகரீக மொழி உணர்ச்சி வெளிப்பாடுகளையும் அவற்றின் மிகைகளையும் மீறல்களையும் ஒடுக்கி ஒழுங்கிற்குகொண்டு வருகிறது. தொடர்புறுத்துதல்களின் அமைப்புகள் சமூக ஒழுங்கமைப்புகளாகின்றன. ஆனால் கலைகள், கவிதைகள், மதச் சடங்குகள், பல விதமான மத வெளிப்பாடுகள் உடலுயிரியின் மொழிக்கு தங்குதடையற்ற இடமளிப்பது மூலம் சமூக ஒழுங்கை கலைத்துப்போடுகின்றன. 
பொருளுணர்த்தும் செயல்பாடாக மொழியை நாம் கவனிக்கும்போது அதனுள்ளே இரண்டு இயங்கு தளங்களை அவதானிக்கலாம் என்கிறார் கிறிஸ்தவா; ஒன்று தெளிவான ஒழுங்குக்குட்பட்டது, மற்றொன்று தன்னிருப்பின் உந்துதல் சக்தியாகவோ, உணர்ச்சியாகவோ, வேறொன்றினைத் தூண்டக்கூடியதாகவோ வெளிப்படுவது. இந்த இரண்டு பாங்குகளையும் குறியீட்டுப்பாங்கு (Symbolic) குறிப்புணர்த்தும் பாங்கு (Semiotic) என்று கிறிஸ்தவா அடையாளப்படுத்துகிறார். 
குறிப்புணர்த்தும் பாங்கின் வழியாகவே உடலுயிரியின் சக்தி மொழிக்குள் இயக்கம் பெறுகிறது; அது வார்த்தைப்படுத்தப்படும்போது கூட வாக்கிய அமைப்பின் ஒழுங்கினை நிராகரிப்பதாக இருக்கிறது. இதற்கு எதிரிடையாக குறியீட்டுபாங்கில் மொழி ஒழுங்குக்குட்பட்டதாக இலக்கண சுத்தமாக இருக்கிறது. மேற்கத்திய மொழி பற்றிய தத்துவம் இந்த இரண்டு பாங்குகளையும் நனவு-நனவிலி, கலாச்சாரம்-இயற்கை, அறிவு-உணர்ச்சி என்ற எதிரிடை இருமைகளாக பார்ப்பதை மாற்றி கிறிஸ்தவா இவற்றை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்ததாகப் பார்க்கிறார்.
ஒழுங்கு, இலக்கணம் ஆகியவற்றிற்கு முந்தைய குறிப்புணர்த்தும்பாங்கினை, இன்னும் மொழியைக்கற்றுக்கொள்ளாத சிசு உடலுயிரியின் மொழியாக விரிக்கும் கிறிஸ்தவா,இதனை பிளேட்டோவிடமிருந்து கடன் பெற்ற சொல்லான chora என்ற பதத்தினால் அழைக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பினையொட்டி chora வை நாம் கருவறை என அறியலாம். உலகில் பிறந்தபின்னும்
கருவறையின் மொழியாக தன் முழு உடலாலும் தற்காலிக பொருளுணர்த்துதல்களால், வெவ்வேறு விதமான லயங்களோடு,  இயக்கம் நிரம்பியதாக, உடல் சக்தியின் வெளிப்படாக சிசு மொழி இருப்பதை சுட்டும் கிறிஸ்தவா ஒழுங்கின் மேற்பரப்பிற்குக் கீழே கவிதையில் இயங்கும் சிசுமொழியையே கவித்துவமொழியாக அடையாளம் காண்கிறார்.
பிளேட்டோவிடமிருந்து chora என்ற பதத்தினை கிறிஸ்தவா கடன் பெற்றாலும் அதை அப்படியே பிளேட்டோ பயன்படுத்தியதுபோல கிறிஸ்தவா பயன்படுத்துவதில்லை. பிளேட்டோவின் கருவறை எந்த கருத்தினாலும் நிரப்பப்படக்கூடியது. கிறிஸ்தவா அதற்குத் தன்னிச்சையான இயல்பு உண்டென்கிறார். வேறொன்றாவதற்கான உந்துதல், ஒரு ஆற்றல் மற்றொரு ஆற்றலுடன் உரையாடுவது, தாய்மையும் சிசுமையும் கொஞ்சிக் குலாவுவது, ஒன்றையொன்று அறிந்து கொள்வது, புரிந்துகொள்வது, தத்துவ அரசியல் நிலைப்பாடுகளுக்கு முந்தையது என்றெல்லாம் choraவை கிறிஸ்தவா விளக்குகிறார். தாயும் சிசுவும் ‘உரையாடும் மொழி’ ஒற்றை எழுத்தொலிகளால் ஆனதென்பதையும் கிறிஸ்தவா சுட்டத் தவறவில்லை.
[இந்திய தாந்திரிக மரபுகள், குறிப்பாக சாக்த மரபு சக்தி/தாய்/தெய்வ வழிபாட்டிற்காக உண்டாக்கிய மந்திரங்கள் ஒற்றை எழுத்தொலி மந்திரங்கள் என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட வேண்டும். பீஜாக்ஷர மந்திரங்கள் என இதர மந்திரங்களுக்குள் உள்வாங்கப்பட்ட சாக்த மரபின் கண்டுபிடிப்புகள் உடலாற்றலை வலுப்படுத்துபவனாகவும், உடலாற்றல் வெளியுலக ஆற்றல்களோடு லயப்பொருத்தம் காண வல்லமையுடையனவாகவும் கருதப்பட்டன. தாந்திரிகம் பற்றி எழுதும்போது இந்த சரடினை பின்னர்  எழுதுகிறேன்.]
அர்த்த உருவாக்கம் இலக்கணமாக முழுமைபெறாத நிலையில் உடல் சைகைகளாக, பாவனைகளாக,  நிகழ்த்துதல்களாக, ஆற்றல்களாக, பேசா மொழியாக, உடலின் மொழி கவிதையின் மேற்பரப்பிற்கு கீழே கவித்துவ மொழியாக இயங்குகிறது.
கிறிஸ்தவாவின் choraவை விளக்க மேற்கத்திய விமர்சகர்கள் ஜேம்ஸ் ஜாய்சின் யுலிசஸ் நாவலில் கடைசிப்பகுதியிலுள்ள மாலி ப்ளூமின் தனிப் பேச்சினை உதாரணம் கொடுக்கிறார்கள். அதற்கு நிகரான பத்தி தமிழிலிருந்து எடுக்க வேண்டுமென்றால் நாம் நகுலனின் நாவல்களிடத்தில்தான் எடுக்க வேண்டும். 

Monday, December 5, 2011

கடல் நீராடல்கடல் நீராட வந்த அழைப்பு
யாரிடமிருந்தென்று 
தெரியவில்லை
எனினும் 
ஓடும் ரயிலேறிய கிழவியென
தொடர் நீராடுகிறது 
புத்துயிர்ப்பு
இல்லாத கிழவியின்
நினைவில்

Friday, December 2, 2011

என் கவிதைத் தொகுதி- வெளியீடு


ஓவியம்: மாயமான் வேட்டை
["ஆழ்குழி நீர்
நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான்"மாரீசன் பற்றி கம்பன்]

எம்.டி.முத்துக்குமாரசாமியின் கவிதைகள்- தொகுதி 1

என்னுடைய இந்தத் தளத்தில் வெளிவந்த கவிதைகளோடு வேறு பல கவிதைகளும் சேர்த்து நூற்றுச் சொச்சம் கவிதைகள் “‘நீர் அளைதல்’ எம்.டி.முத்துக்குமாரசாமியின் கவிதைகள் தொகுதி 1” என்ற தலைப்பில் மின் பதிப்பாக இதே தளத்தில் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி வெளியாகும். ஓவியங்களும் உண்டு.  விருப்பமுள்ளவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட காலம் வரை இலவசமாகவும் அதன் பிறகு பதிவிறக்கம் செய்ய ஏதேனும் விலை கொடுக்க வேண்டும் என்றும் நிர்ணயம் செய்யவிருக்கிறேன். In Design-இல் புத்தக வடிவமைப்பு செய்வது எனக்கே தெரியுமாதலால் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஓட்டி வடிவமைத்து வெளியிடுவேன். iPad, Kindle, Sony book reader ஆகிய சாதனங்களில் வாசிக்கக்கூடிய கோப்புகளாகவும் கவிதைத்தொகுதியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மின் பதிப்பாக தொகுத்த பின் தொகுப்பிலுள்ள கவிதைகள் என்னுடைய பதிவுகளிலிருந்து நீக்கப்படும். கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து இதர படைப்புகளையும் இவ்வாறாகவே வெளியிடத் திட்டம்.

நான் தொகுதியாக்க நினைக்கும் கவிதைகள் இப்போது ஆங்கிலத்திலும், ஃபிரெஞ்சிலும் மொழிபெயர்ப்பாகிக்கொண்டிருக்கின்றன.

என்னுடைய ப்ளாக்கிற்கு நேற்றோடு ஒரு லட்சம் தாண்டி வாசகர்கள் வந்துள்ளனர் என்றும் பெரும்பாலும் கவிதைகளையே அவர்கள் படித்திருக்கின்றனர் என்றும் அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். வாசக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Wednesday, November 30, 2011

நீர் அளைதல்

குழந்தையின்
தளிர் விரல்கள் வீசிய
நீர்த் திவலைகள்
மார் தீண்ட
உயிர் கிளர்ந்து
வெளி நடக்க
அருளெனப் பொழிந்த
மழைத் தூறல்
உள் மன
போகமென
வெளி நிறைக்க
தடுத்தாட்கொள்ளும்
பொழிவாய்
ஆவேசமாய்
பெரிதாய்
பெய்யெனப் பெய்ய
இலக்கற்ற ஓடை
கலந்து சேறாய்
குழம்பி
செல் சேர்க்கையே
இடமென
அரண்டு புரண்ட
ஜலக்கிரீடை
மீனென நீயென வாவென
வாவாவென
நீருலகு நீந்த
நீந்த நீந்த
ஈர்த்த நீர்மை
நீர்த்த நீலம்
என்
நிறை கடலெனவே
உரையாடல்


பேட்டிக்கான சுட்டி: http://www.thesundayindian.com/ta/story/about-national-folklore-support-centre/61/1346/கவிஞர் ஷங்கர்ராம சுப்பிரமணியனோடு The Sunday Indian பத்திரிக்கைக்காக சமீபத்தில் நான் உரையாடியது பேட்டியாக "எட்டு கோடித் தமிழர்களின் தோல்வி" என்ற தலைப்பில் பிரசுரமாகியுள்ளது.
Tuesday, November 29, 2011

மயில் இறை இயல்

விரித்த தோகை
பெரியது எனவே
வான்கோழியல்ல 
மயில் என்றறிவார்
கடவுள்
ஆதலினால் கறிக்காகாது


Monday, November 28, 2011

நான், நீ, அதே


கடல் கன்னி கூறியது:

வையகமே
கண்ணாடியென்றால்
திரவ வானம் ஊசலாடுவது
ஒரு கடல்

திவலைகள் ஆகும்
கடற்கரைகளோ கோடி

நான், நீ, அதே
ஆழ்கடல் அதிசயங்களின்
நீல மர்மங்களின் 
இலவசங்கள்
எனினும்
மாயச் சுழல் சிக்கி
ஏதேனும் ஒரு
கரையேறிய பின்
வார்த்தைகளேயிருப்பதில்லை
நம் கதை சொல்ல
தன்னறிவு

நாடேது
காடேது
வீடேது
என
தனித்து
இருக்கையில்
அபத்த தொற்றுதலாய்
ஒரு குதூகலம்
கொடியென
பின்னிப் பிணைய
தனித்த மரத்திற்கு
அதுவே
தனித்துவமாயிற்றுSunday, November 27, 2011

நீர்க்கடன்


தோள் சுமந்த மட்பானையின்
முத்துளை நீரொழுக்கென
இழைகிறது
தூசு தட்டி எடுத்த 
அந்த பழைய ஓவியத்திலிருந்த
பெண் கை வயலின் இசை

பிறர் கேட்பதில்லை அதை 
வீடு திரும்பிய ஆள் நானென்று
அவர்களுக்குத் தெரிவதுமில்லை

பழைய இசைத் தட்டுகள்
பழைய நாவல்கள்
பழைய ஓவியங்கள் 
என என் வெளி நிறைக்கிறார்கள்
இங்கிதமற்று

நிறைவுறா
நினைவுகளின் நீர்க்கடன்
இசையினால் ஒழுக்காக
வெள்ளமாக அலைகளாக
பெருங்கடலாக
நீரால் அமைகிறது உலகு.

அந்தரத்தில் ஒரு வீடு

ஜேனு குருபர் பழங்குடியினரின் வீடு/மேற்குத் தொடர்ச்சி மலை

பழங்குடி பாடல்:


ஆடலழித்து
விளக்கஞ்சொல்லி
படைத்தலடக்கி
மூத்தான்
இளையான்
உயிரிழந்தான்
அஞ்சினான்
உண்டான்
உறங்கினான்
உறவினரோடு
பறவைகளும் வந்தமர
விருந்துண்ண வசதியாய்
அந்தரத்தில் ஒரு வீடு
தாயகப் பேறேயென
அடைந்தாயிற்று 
நேர்த்தியாய்
கற்பிதமாய்
எனினும்
ஏறிச் செல்ல ஏணியில்லை


Saturday, November 26, 2011

தெளிவற்ற கனவது
'கலை மான்' கோண்ட் பழங்குடி ஓவியம்/ஓவியர்: ரமேஷ் தேக்கம்உள் முகம் நோக்கி ஓடிய 
கலை மானுக்கு கொம்பு
விருட்சமாகவே விரிந்திருந்தது
விருட்சம் வனமாக
வனம் வானாக
வான் வளியாக
வளி மண்டலமாக
மண்டலம் மண்ணாக
மண் பொன்னாக
பொன் மானாக
மான் மாயமாக
மாயம் மீண்டும் மானாக
மயக்குகிறது மாரீசன் வித்தை

தாயேன் தாயேன் எனக்கென 
இறைஞ்சுகிறாள் சீதை

மான்கொம்பு மரமாவதில்லை
விருட்சம் வனமாவதில்லை
மரம் வெறும் மரம்
என்கிறான் இலக்குவன்

ராம பாணம் கிழித்த 
மாயை பொன்னாக
பொன் மானாக
மான் கொம்பாக
கொம்பு மரமாக
களவு போனாள்
மரம்மரம்மரம்மரம்
மரம்மரம்மரம்மரம்
என ஜெபித்த சீதை
Thursday, November 24, 2011

பொம்மைகள் வெறித்து நின்றுவிட்டனசாந்த்தால் பழங்குடி மர பொம்மைகள்/பொம்மலாட்ட மேடையில் நிற்கும் புகைப்படம்பொம்மைகள் வெறித்து நின்றுவிட்டன
வேறெதுவும் செய்வதிற்கில்லையெனவும்
குழந்தைகளுக்கு இனி ஏதுமில்லையெனவும்
அறிவிப்பு வெளியாகிவிட்டது

மரப்பொம்மைகள் என்பதினால்
மீண்டும் மரங்களாக்கலாம்
என்றொரு திட்டம்

எவரின் பிரதிமைகளோ இவையென
கூறி மூலங்களை உயிர்ப்பிக்கலாமென்பது
மறு திட்டம்

ஓரிரு நாள் அரசிகளாய் 
அரசுக்கட்டில் ஏற்றலாமேயென்பது
ஏகோபித்த திட்டம்

மர விறகாக்கி 
அடுப்பெரிக்கலாமென்பது
உடனடித் திட்டம்

புது பொம்மையாட்டியை
பயிற்றுவித்து
பொம்மைகளுக்கு 
அன்ன நடை பழக்கலாமென்பது
ஆனந்த திட்டமென்றால்
அன்னம் என்றொரு பறவையேயில்லையாம்
எல்லாமே பரட்டைத் தலை வாத்துதானாம்

என் புருவத்தில் முத்தமிட்டு கிளம்புகிறாய் நீ

தோல் பொம்மலாட்ட கோமாளி பொம்மை“ஆளற்ற அந்த கடற்கரையில்
தவிக்கும் நுரைகள் 
பாதங்களில் குமிழியிடும்

ஈரமற்ற கைவிரலிடுக்குகளின் வழி
நினைவற்ற பிடி மணல்
ஒட்டாமல் விழும் 

தூரத்து கப்பல்கள்
ஆழ்கடல் சேரும் குதூகலத்தில்
பாய் மரம் விரிக்கும்

என் புருவத்தில் முத்தமிட்டு கிளம்புகிறாய் நீ”

என்றெழுதி கோமாளி உனக்குத் தருவான்Wednesday, November 23, 2011

என்னை உற்று உற்றுப் பார்க்காதேஉடலில் பச்சை குத்துவதற்கான வடிவம்என்னை 
உற்று உற்றுப் 
பார்க்காதே

ஏன் உடைந்தாயெனெ
மீண்டும் மீண்டும் 
கேட்காதே

உன் பெயர் இதுதானேயென
சொல்லி சொல்லி
சிரிக்காதே

நீ இன்னும் உயிருடனா என 
கிள்ளிக் கிள்ளி
சோதிக்காதே

நீ எப்படி இப்படியென
மலங்க மலங்க
விழிக்காதே

உன் ரகசியம் நானறிவேன் என
சிணுங்கி சிணுங்கி
நிற்காதே

நம்
ஒரு பிடி சாம்பல்
கரைக்க சீறி வருகின்றன
பேரலைகள்

பாம்புப் பாடகன்ஒரிசா மாநில பாதசித்ரா ஓவியம்: பாம்பு மாலை அணிந்த பூரி ஜெகந்நாதர்( கவிதைக்கு பொருத்தமில்லாத ஓவியம். சும்மா)


இரட்டைப் பாம்புகள் 
பின்னி நிற்கும் என் 
மன விதானமெங்கும் 
ஒற்றைத் தலையாய்
இரு உடல் கூடுமிடும்
தொடு வானமெனவே
வசீகரிக்க
இரு உடல் பின்னும்
கணம் தோறும்
உயிரிசை வெளியாய்
விரியும் என்னுலகில்
கடல் நோக்கும்
ஒரு பாம்பின் 
உடல் தரிக்கும்
பாம்புப் பாடகன் 
நான் என்றாலும்
என்னிடத்திலில்லை மகுடி
ஊதும் உன் ஜீவ மூச்சு
Tuesday, November 22, 2011

ஒரு பூனையின் அந்தரங்க வாழ்க்கைகண்ணாடி ஜன்னலில்
முகத்தோடு முகம் தேய்த்து
காதோடு காது நக்கி
காதலாகி கசிந்துருகி
கட்டிலடிக் கூடலில்
குட்டிகள் ஏழாயிற்று

மரப்பெட்டி முதல் வீடு
அடுப்படி இரண்டாம் வீடு என
புகைபோக்கி வந்தடைகையில்
வீடும் ஏழாயிற்று

எலி துரத்தி ஒரு ஜென்மம்
பேயினைச் சீறி மறு ஜென்மமென
சோம்பல் முறித்து
கட்டில் கால் தேய்க்கையில்
விரய ஜென்மும் ஏழாயிற்று


கற்பிதம் பாதியில் நின்றுவிட்டபோது

அது எப்போது வரும் என்று தெரியாது
வரும்போது அறிவித்தல் இருக்காது
வருவதற்கான அறிகுறிகளும்
வராதாதற்கான அறிகுறிகளும்
ஒன்றெனவே பொய்க்கும்
எனினும்

அந்த மிருகத்தின் மின்னும் கண்களை
உற்றுப் பார்த்தவர் எங்கள்
தீர்க்கதரிசிகளாயினர்
காதலைப்போல் என்போர்
எங்கள் கவிஞராயினர்
போரைப்போல் என்போர்
எங்கள் அதிபராயினர்
தவித்திருந்தோர் குடிகளாயினர்
அந்த மிருகத்தைப்
பெயரிடத்தெரியாமல்
கற்பிதம் பாதியில் நின்றுவிட்டபோதுதான்
எல்லாம் உறைந்துவிட்டது
அடிவயிற்று வலியெனகெக்கெலி

வா போகலாமென
பிளவுண்ட நாக்கொன்று
அநாமதேயக் கைபோலவே
மெள்ள நீட்டுகிறது
தெற்குத் திட்டிவாசல்
திறவுகோலை
பெயரற்ற பறவைகளின்
ரெக்கையொலியெனவே
கோபுரம் நிறைக்கின்றன
திடீர் கெக்கெலிகள்
கோல் பற்றி
துளை பொருத்தி
வாயில் திறக்க
மூடிய ஒற்றை இமை
வெட்டிய மின்னலென
வெடித்து விழிக்க
எங்கும் நிறைகிறது
துணுக்காய் சிதறிய
கெக்கெலி முகக்
கண்ணாடிகள்