Wednesday, January 11, 2012

சிவாஜிராவின் சிவதனுசு


சிவதனுசு- தோல் பாவைபடத்தொடரை எழுதவேண்டும் என்ற நினைப்புடன் அலுவலகத்திலிருந்து வந்துகொண்டிருந்தபோது ராஜமாதாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. போனமாதம் அப்பாவின் நினைவு நாளைக்குக் கூப்பிடவேயில்லையே அண்ணண் என்ற ராஜமாதா மறைந்த தோல்பாவை நிழல் கூத்து கலைஞர் சிவாஜிராவின் மகள்; மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தானேயில் இப்பொழுது இருக்கிறாள். ஐந்து வருடங்களுக்கு முன்பு ராஜாமாதா என்னைப் பார்க்க வந்தபோது சிவாஜி ராவ் மறைந்து ஒரு வருடமாகிவிட்டது என்று அறிந்தேன். அவருடைய நினைவு நாள் என்ன என்று கேட்டு குறித்து வைத்துக்கொண்டேன். ஒவ்வொரு வருடமும் ராஜமாதாவை சிவாஜிராவின் நினைவு நாளன்று தொலைபேசியில் அழைப்பேன் ஏதாவது அளாவளாவிக்கொள்வோம். இந்த வருடம் வேலைப்பளு அதிகமாய் இருந்ததில் மறந்துவிட்டது.
மறந்துவிட்டேன் என யோசிக்காமல் சொல்லிவிட்டேன். ராஜமாதா பிடிபிடியென்று பிடித்துக்கொண்டாள். என்னைவிட பத்து வயதாவது வயதில் குறைந்தவள். ஆனால் என்னமாய் சண்டைபிடிக்கிறாள்! அப்பனுக்கு மகள் தப்பவில்லை என்றவுடன் கொஞ்சம் அமைதியானாள்.அப்பா உங்களுக்கு என்று எடுத்து வைத்திருந்த சிவ தனுசு பொம்மையை அனுப்பி வைத்திருந்தேனே கிடைத்ததா என்றபோதுதான் அவளுடைய தபால் தீபாவளியின்போதே வந்துசேர்ந்துவிட்டதும் ஞாபகம் வந்தது.
சிவ தனுசு, மிக அழகான தோல் பாவை. சிவாஜி ராவுக்கு மிகவும் பிரியமான பாவை. சிவாஜி ராவைப் பற்றி நான் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளில் நான் அவருக்கும் சிவ தனுசு பாவைக்கும் உள்ள உறவைக் குறிப்பிடவில்லையென்று நான் என் கட்டுரைகளின் சாராம்சத்தை மொழிபெயர்த்துச் சொன்னபோது சுட்டிக்காட்டியது நினைவுக்கு வந்தது. நான் எழுதாமல் விட்டதால்தான் அதை எனக்கென்று பரிசளித்தாரோ?
ஆரம்பத்தில், அதாவது எண்பதுகளின் இறுதியில் தோல்பாவைக் கூத்து பற்றிய ஆராய்ச்சியின் நிமித்தம் நான் சிவாஜி ராவை சந்தித்தபோது அவர் திருநெல்வேலியில் மேலப்பாளையம் தாண்டிய புற நகர்ப் பகுதியில் வசித்து வந்தார். சிறிய குடிசை அவர் வீடு. இரண்டு மனைவிகள். முதல் மனைவி நிரந்தர நோயாளியாய் எப்போதும் படுத்த படுக்கையாய் இருந்தார். இரண்டவது மனைவிக்கு மகள் ராஜாமாதா வயதுதான் இருக்கும்; மனைவி என்பது சிவாஜி ராவை அண்டியிருக்க ஒரு பாதுகாப்பான அடையாளம் மட்டுமே. அவரின் வீட்டைச் சுற்றி கரகாட்டக் கலைஞர்கள், பபூன் நடனமாடுபவர்கள் என நாட்டுப்புற கலைஞர்கள் பலரின் வசிப்பிடங்கள் இருந்தன. சிவாஜி ராவ், ராஜமாதா, அவருடைய இரண்டு மனைவிகள் சேர்ந்தது அவர்களின் பொம்மலாட்டக்குழு. வெள்ளைத்துணியால் கட்டி எழுப்பிய ஆளுயுர நிகழ்த்துப்பெட்டிக்குள் சிவாஜி ராவ் சிறு மனைப் பலகையில் உட்கார்ந்து கொள்வார். அவருடன் இருக்கும் இரண்டாவது மனைவி தோல் பொம்மைகளை எடுத்துக் கொடுத்து உதவி செய்வார்; அவர் கதை சொல்லி பாட்டுப்பாடி தோல்பாவைக்கூத்து நிகழ்த்தும்போது அவர் ஆமாம் ஆமாம் என்றோ கேள்வி கேட்டோ ஒத்துப் பாடுவார். திரைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் முதல் மனைவி டோலக்கு வாசிப்பார்; அவருடைய உடல் நிலை மோசமானபின்பு ராஜமாதா டோலக்கு வாசிப்பதாயிற்று. ராஜமாதா கூடவே சேர்ந்து பாடவும் சிவாஜிராவின் நகைச்சுவைக்கு ஏட்டிக்குப் போட்டியாகவும் ஏதாவது சொல்வாள். சிவாஜி ராவ் பத்து நாள் கூத்தாக முழு ராமாயாணமும் நிகழ்த்துவது கிராமங்களில் பிரசித்தம். அவருக்கு தமிழ் தவிர கன்னடம், மலையாளம், தெலுங்கும் தெரியுமாதலால் ராமாயணக் கூத்தினை அவர் தென்னிந்தியா முழுக்க நிகழ்த்தியிருக்கிறார். வீட்டில் அவர்கள் புழங்கும் தாய்மொழி மராத்தி. 
எண்பதுகளின் மத்தியிலேயே சிவாஜி ராவுக்கு நிகழ்ச்சிகள் கிடைப்பது குறைந்துவிட்டிருந்தது. மழை வேண்டி நிகழ்த்தப்படும் நல்லதங்காள் கதைக்குக் கூட கேட்பவர்கள் அருகிவிட்டிருந்தனர். ராமாயணக்கூத்து என்பதெல்லாம் பெயருக்குத்தான் என்று மாறிவிட்டிருந்தது. தோல்பாவைக் கூத்தின் கோமாளிகளான உச்சிக்குடுமியும், உளுவாத்தலையனும் அடிக்கும் லூட்டியே இரவு பதினோரு மணி வரை செல்லும்; அப்புறம் இடையிடையே சில ராமாயணக்கதைக் காட்சிகளும் கதைசொல்லலும் பிறகு சினிமாப் பாடல்களுக்கு ஏற்ப ராஜமாதாவின் நடனம் என்று சீக்கிரமே கிழக்கு வெளுத்துவிடும். சிவாஜிராவுக்கு தன் கலை இவ்வாறாக சிதிலமடைந்துவிட்டதே என்ற வருத்தம் உள்ளுக்குள் தீயாய் அவித்துக்கொண்டிருந்தாலும் வெளிப்பார்வைக்கு விட்டேத்தியாக எல்லாவற்றிலுமிருந்து விடுபட்டுவிட்ட தோரணையே இருந்தது. அவர் எப்பொழுதுமே தன் பாவைகளோடு பாவையாய் வேறொரு உலகத்தில் இருப்பதான பாவனையிலேயே இருந்தார். எல்லா எதிர்வினைகளும் அவரிடமிருந்து பாவைக்கூத்தின் போதுதான் வெளிப்படும். உயரமான ஒல்லியான போர் வீரன் போன்ற தேகம் அவருடையது. பெரிய முறுக்கு மீசையுடன் பெரிய அகலமான விழிகளுடன் மரக்கட்டைபோல முகத்தை உணர்ச்சியற்று வைத்திருப்பார். பல நாட்கள் குலைப்பட்டினி கிடந்து பழகிவிட்டதால் ஒரு வகை வைராக்கியமும் அலட்சியமும் முகத்தில் விரவியிருக்கும்.தொன்னூறுகளில் சிவாஜிராவும் அவர் குடும்பமும் சென்னைப்புற நகர்ப்பகுதிலுள்ள காட்டாங்கொளத்தூருக்குக் குடி பெயர்ந்துவிட்டனர். சென்னைத் தீவுத் திடலில் அரசுப்பொருட்காட்சி நடக்கும்போது சிவாஜிராவுக்கு பாவைக்கூத்து நிகழ்த்தும் வாய்ப்புகிடைத்து வந்தது. அரசுப்பொருட்காட்சி நிகழ்ச்சியில் ராமனும் சீதையும் கொக்கோகோலா குடித்துக்கொண்டே காட்டுக்குள் உலா போவதாய் கதை போய்க்கொண்டிருந்தது. சிவாஜிராவ் மிகவும் நொந்துபோயிருந்தார். இனி வாழ்நாளில் ராமாயணம் முழுமையாக நிகழ்த்தவே முடியாது போலிருக்கிறது, உச்சிக்குடுமி, உளுவாத்தலையன், பொருட்காட்சி அசட்டுத்தனம் என்றுதான் எஞ்சிய வாழ்வு கழியும் போலிருக்கிறது என்றார். ரிகார்ட் டான்ஸ் ஆடுவதற்கு பொருட்காட்சி எவ்வளவோ பரவாயில்லை என்றாள் ராஜமாதா.

சில மாதங்களுக்குப் பின் சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து உள் செல்லும் பாதையிலுள்ள தென்மேல்பாக்கம் என்ற கிராமத்தில் சிவாஜிராவுக்கு முழு ராமாயாணக் கூத்து பத்து இரவுகள் நடத்தும்படிக்கு ஏற்பாடு செய்துகொடுத்தேன். சிவாஜிராவின் குடும்பமிருந்த காட்டாங்குளத்தூரிலிருந்து தென்மேல்பாக்கம் பக்கமாகவும் இருந்தது. ராஜமாதா அந்த பத்து நாட்களும்தான் சிவாஜிராவ் மிகவும் சந்தோஷமாக இருந்த நாட்கள் என்று பின்னாளில் குறிப்பிட்டாள்.   நான் ஆறேழு இரவுகள் அவருடைய பாவைக்கூத்தை விடிய விடிய பார்த்தேன். நகைச்சுவைக் காட்சிகள் இயல்பாகவும், அளவாகவும், கதையோட்டத்தினை ஒட்டியும் இருந்தன. சிவாஜிராவுக்கு கம்பராமயாணம் தளபாடமாய் தெரிந்திருந்தது. ஒரு நாள் இரவு நிகழ்த்துத்துணிப் பெட்டிக்குள் போய்  அவர் பாவைகளை ஆட்டுவிப்பதைப் பார்த்தேன். பாவைகளை ஆட்டிக்கொண்டும் கதை சொல்லிக்கொண்டும் இருந்த சிவாஜிராவ் நான் சாதாரணமாகத் தெரிந்து வைத்திருந்த ஆளாய் இல்லை. ஒரு ஆவேச சந்தோஷத்தின் உச்சத்தில் களி நடனத்திலிருக்கும் கலைஞனாய் அவர் இருந்தார். சட்டை போடாத வெற்று மார்பில் சிவதனுசு பாவையை இறுக்கக்கட்டியிருந்தார். ஒவ்வொரு காட்சி மாற்றத்தின்போதும் சிவதனுசு பாவையைத் தொட்டுக்கொள்வதும் அதனோடு ரகசியமாய் உரையாடிவிட்டு கதையைத் தொடர்வதுமாய் இருந்தார். சிவதனுசு பாவையோடு என்னதான் செய்கிறீர்கள் என்று கேட்டு வைத்தேன் மறு நாள் காலையில். அதற்கு அவர் உடனடியாகப் பதில் சொல்லவில்லை.

காட்டாங்கொளத்தூரை சுத்தியிருந்த கிராமங்களில் அவருடைய கூத்துக்கு நிறைய தாம்பூலங்கள் வர ஆரம்பித்தன. நானும் சிவாஜிராவையும் அவருடைய குடும்பத்தினையும் அடிக்கடி சந்தித்து வந்தேன். சுத்துப்பட்டு கிராமம் ஒன்றில் அவர்கள் பாவைக்கூத்து நிகழ்த்தும்போதுதான் அவர்களுக்கு ஒரு போலீஸ்காரனால் தொந்திரவு வந்தது. ராஜமாதாவை போலீஸ்காரன் வம்பிழுக்கப்போக சிவாஜிராவ் போலீஸ்காரனை அடித்திருக்கிறார். போலீஸ்காரன் அவரை அடித்து லாக்கப்பில் நான்கு நாட்கள் வைத்துவிட்டான். இந்த சம்பவங்களெல்லாம் நடந்து முடிந்து ஒரு மாத காலம் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது. சிவாஜிராவை நான் சென்று பார்த்தபோது அவர்கள் மகாராஷ்டிரத்திற்கு இரண்டொரு நாளில் பயணப்பட இருந்தார்கள். சிவாஜிராவ் ஆடிப்போயிருந்தார். மராத்தியில் ஏதோ தனக்குத் தானே முணுமுணுத்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் தரையில் சிவதனுசு கிடந்தது. திடீரென்று சிவாஜிராவ் ‘அன்னிக்கு கேட்டில்லாடே இதோட என்ன பேசுகேன்னு இதுக்க கவுத்துல தர்ப்ப புல்ல அம்பாட்டு கட்டி விடுகேனாக்கும், அவனவன் அலறி ஓடுகானில்லியா’ என்று சொல்லிச் சிரித்தார். ‘மந்திரம் சொல்லி இல்ல விடுவாக’ என்றாள் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்த மனைவி. ‘பத்து நாள் ராமாயணஞ் சொல்லதுக்கும், போலீஸ்காரங்கிட்ட ஒத திங்கதுக்கும் தெம்பு வேண்டாமாடே தெம்பு?’

கடைசியாக சிவாஜிராவைப் பார்த்தது அவரையும் குடும்பத்தினரையும் மும்பைக்கு ரயிலேத்திவிடப் போனபோதுதான். ராஜமாதா அனுப்பித் தந்த சிவதனுசு பாவை கண்ணாடி ஃபிரேம் போட்டு வந்துவிட்டது. தர்ப்பைப் புல்லை அம்பாய் பாவித்து சிவதனுசின் நாணில் ஏற்றும் வித்தையை நான் இனிமேல்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.   3 comments:

Anonymous said...

Cinema destroyed some and TV completed it !! Sad.

Ganesh said...

நெஞ்சை நெகிழவைத்த கட்டுரை.

சரவண வடிவேல்.வே said...

சமீபத்தில் மு.ஹரிகிருஷ்ணன் முயற்சியில் வந்த 'விதைத்தவசம்' ஆவணப்படம் தோற்பாவை கலைஞரைப் பற்றி பேசுகிறது....