தமிழ் சினிமா என்ற எந்திரம் கலக்கித் துப்பிய இன்னொரு பிம்பக் குவியலாய் மணிரத்னத்தின் ‘கடல்’ வெளிவந்திருக்கிறது. லூயி புனுவலின் ‘நஸ்ஸரீன்’ என்ற படத்தின் மூலக்கதை மணிரத்னத்தின் ‘கடல்’ என்று அரசல் புரசலாகக் கேள்விப்பட்டிருந்ததால் படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என்று ஆர்வமாயிருந்தேன். லூயி புனுவல் என்னுடைய ஆதர்ச சினிமா பட இயக்குனர்களுள் ஒருவர். அவருடைய ‘விருதியானா’ ராஜீவ் மேனனால் சக்கை எந்திரமொன்றில் சுழற்றி ‘மின்சாரக் கனவாக’ தமிழில் வந்தது எனக்கு என்றுமே ஆச்சரியமளிக்கக்கூடிய பிம்ப நிகழ்வு. ஈயடிச்சான் காப்பி ரக தமிழ்த் திரைப்படங்களை விட இந்தப் பிம்பக்குடுவைக் கலக்கல் ரக படங்கள் எனக்கு மிகவும் ஈர்ப்புடையனவாய் இருக்கின்றன. இயக்குனர்களும் கதாசிரியர்களும் ‘இந்தியத்தன்மை’, ‘தமிழ்த்தன்மை’, ‘பொதுவெளியின் பார்வையாளன் ரசனை’ ஆகியவற்றை எப்படிக் கணிக்கிறார்கள் என்பதை இந்தவகை பிம்பப்பிரதிகள் காட்டிக்கொடுத்துவிடுகின்றன. தமிழ் சினிமாவின் மூலப்படங்கள் எவை எவை அவற்றை தமிழ் சினிமா எப்படி சப்பி நெளித்து சூடு வைத்து தமிழனுக்குக் கொடுக்கிறது என்பதை ஆராய ஈயடிச்சான் காப்பி முதற்கொண்டு, ‘இன்ஸ்பிரேஷன்’ வரை உள்ள இந்த பட்டியலை அடிக்கடி ஒப்பு நோக்குவேன். நீங்களும் பார்க்கலாம் http://www.imdb.com/list/-vrlQwkSUhY/
லூயி புனுவலின் நஸ்ஸரீன் மணிரத்னத்தின் சேற்றுக் குட்டையான ‘கடலில்’ ஒற்றை அடுக்கு மட்டுமே வேறு பல அடுக்குகளும் இணைக்கப்பட்டுள்ளன என்பது எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. ஆனால் தமிழ் சினிமா எந்திரத்திற்கு ஒரு காதல் கதை வேண்டும், பாடல்கள் வேண்டும், நல்லவன்- கெட்டவன், கடவுள் -சாத்தான் என்று தெளிவாக தனித்தனியாக பிரிந்து இருக்கின்ற ஞானப்பழமும் (அரவிந்த சாமி), அழுகிய பழமும் (அர்ஜுன்) வேண்டும் சுபத்தில் முடிகிற உச்சகட்டம் வேண்டும் வேறு என்ன செய்வார்கள் தோத்திரம் பாடும் பாவிகள் என்று மனதினை தேற்றிக்கொண்டேன்.
மிகையுணர்ச்சிகளின் பீதாம்பரமான ஜெயமோகன் கதாசிரியர். படம் ஆரம்பித்த முதல் பத்து நிமிடங்களிலேயே இரண்டு மிகையுணர்ச்சி பின்னணிக் கதைகள் படு வேகமாய் தலைப்புகளோடு தலைப்புகளாகச் சொல்லப்பட்டுவிடுகின்றன. ஒன்று கதையின் நாயகன் (கௌதம் கார்த்திக்) கடலோர மீனவர் கிராமம் ஒன்றில் பாலியல் சேவையாளராகிய தன் தாயின் மரணத்திற்கு பின் பல் வேறு உதாசீனங்களுக்கும், அவமானங்களுக்கும் ஆட்பட்டு அனாதையாயும் பொறுக்கியாகவும் பதின்பருவத்தை அடைவது. இந்தப் பின்னணிக் கதையில் சிறுவன் இன்னும் கதையின் நாயகன் கௌதம் கார்த்திக்கின் பிம்பரூபத்தை அடைவதில்லை. பின்னணிக் கதையின் பின்னணி இசையாக ஏ.ஆர்.ரஹ்மானின் கைவண்ணத்தில் உருவான ‘மகுடி மகுடி’ என்ற உற்சாகமான பாடல் வருகிறது. ஏசுவுக்கு தோத்திரம் பல முறை படத்தில் சொல்லப்படுவதன் புண்ணியத்தினால் என்றுதான் நான் நினைக்கிறேன் தாயின் கால் சவப்பெட்டிக்கு வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும்போது மண்வெட்டியால் உடைத்து பொண்வண்ணன் அண்டு கோ பிணத்தை அடக்கம் செய்யும்போது இந்த உற்சாகப் பாடல் பின்னணி இசையாய் வருவதில்லை. அனாதைப் பிணங்களை மீனவ சமூகம் இப்படியா அடக்கம் செய்யும் என்ற கேள்வியும் நம் மனதில் எழுவதில்லை. ஏசுவுக்கு தோத்திரம். சிறுவன் ‘அம்மா அம்மா’ என்று அலறுவது மணிரத்னத்தின் அஞ்சலி படத்தில் ‘எந்திரி அஞ்சலி எந்திரி அஞ்சலி’ என்று ஒரு அலறல் வருமே அது போல நீடிக்குமோ என்ற என் பீதியை ‘மகுடி மகுடி’ உற்சாகப்பாடல் நீக்கி என்னை அமைதிப்படுத்திவிட்டது. மிகையுணர்ச்சியின் எல்லை கதாசிரியருக்கும் இயக்குனருக்கும் தெரியுமோ தெரியாதோ இசையமைப்பாளருக்கு தெரிந்திருக்கிறது அவர் தன் பெயரைக் கெடுத்து காப்பாற்றியிருக்கிறார்.
இன்னொரு பின்னணிக் கதை ஞானப்பழமான நல்ல பாதிரி அரவிந்தசாமிக்கும் அழுகியபழமான கெட்ட பாதிரி அர்ஜுனுக்கும் வெட்டுப்பழி குத்துப்பழி உருவாவதைச் சொல்கிறது. மில்ஸ் அண்ட் பூன்ஸ் நாவல்கள் படமானால் ஹீரோவாகப் போடலாம் என்பது போல இருந்த அரவிந்தசாமி இந்த ஞானப்பழம் பாதிரி கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி வயதாகியிருக்கிறார். கெட்ட பாதிரி அர்ஜுன் பென்ணொருத்தியோடு கெட்டகாரியத்திற்காக கூட பார்த்து, ஞானப்பழம் திருச்சபை பெரியவர்களிடம் போட்டுக்கொடுத்து அவரை வெளியே அனுப்பிவிடுகிறது. அர்ஜுன் சாத்தானாகிவிடுகிறாராம் அதன் பிறகு. அதாவது தமிழ் சினிமா எந்திரம் கதநாயகனாகவும் வில்லனாகவும் மாறி மாறி காட்டி நம் மனதில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கும் உள்ளூர் ரௌடி தான் சாத்தான். மிஸ்டர் சாத்தானை இதைவிட யாரும் கேவலப்படுத்தியிருக்க முடியாது. பிணத்தின் காலை மண்வெட்டியால் உடைத்து சவப்பெட்டிக்குள் அலட்சியமாக இருத்தினானே அவனிடம் சாத்தானின் சாயல் இருக்கிறது என்று சொன்னாலாவது நம்பியிருக்கலாம். கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு துப்பாக்கியால் டப் டப் என்று சுடும் அர்ஜுன் சாத்தான் என்றால் அது சாத்தானுக்கே பெரிய அவமானம்.
ஞானப்பழம் பாதிரியும் சர்ச்சை கூட்டி மெழுகி ஒரு குட்டி ஃபிரிட்ஜ் போல இருக்கும் டேப்ரிகார்டரில் கிராமத்தில் குரல்களைப் பதிவு செய்ததைத் தவிர ஏதும் நல்ல சேசு காரியம் செய்ததாகத் தெரியவில்லை. பொறுக்கி சிறுவனையும் கன்னத்தில் நாலு அறைவிட்டுதான் பணிய வைக்கிறது ஞானப்பழம். பையன் வளர்ந்த பிறகு அவனோடு பைக்கில் சுற்றுவது சேசு காரியமா என்றும் தெரியவில்லை. ஞானப்பழம், பாதிரி அர்ஜுனின் தந்திரத்திற்கு பலியாகி சிறைக்கு செல்லும்போது நமக்கு ஞானப்பழத்தின் மேல் எந்த பரிதாபமும் ஏற்படுவதில்லை. பின்னால் வரும் காட்சிகளில் ஞானப்பழம் எப்படி இவ்வளவு சீக்கிரம் ஜெயிலிலிருந்து வெளியே வந்தது என்று வியப்பே ஏற்படுகிறது.
இதற்கிடையில் அபரிதமான உடல் எடையுடன் வெள்ளை ஆடை மட்டுமே அணிந்த கதாநாயகி அறிமுகம். ஸ்லீவ் லெஸ் எல்லாம் அணிந்த வெள்ளை ஆடை செவிலியாம். அவருக்கு ஐந்து வயதுக்கு மேல் மனம் வளர்ச்சியடையாமல் ஸ்தம்பித்து விட்டதாம் ஆனால் மகப்பேறெல்லாம் பார்ப்பாராம். மற்ற மீனவர்களுக்கெல்லாம் கைவிரல் நகத்தில் அழுக்கு இருக்கிறது என்று சொல்லி விட்டு கதாநாயகன் கௌதம் கார்த்திக்கை மகப்பேறு பார்க்க கிராமத்தில் குடிசைக்குள் கூட்டிப்போகிறார். பெண்கள் பெரியவர்களெல்லாம் வெளியே நிற்கிறார்கள். கௌதம் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் நீச்சல் குளத்தில் பொழுதுபோக்கிற்கு மீன் பிடிக்கிறவர் போல. ‘அடியே எங்கே கூட்டிப் போறெ’ என்று சித் ஶ்ரீராம் உருகி உருகி பாடும் காட்சியில் துளசி டிசைனர் சேலை கட்டிக்கொண்டு பாசி மணியெல்லாம் அணிந்து இடுப்பை நோக்கி முக்கோணமாய் வளைந்த இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு பூதகி போல நிற்கிறார். பூதகி நடனத்தில் எங்கே நீ கூட்டிபோறே அடியே என்று கேட்டு கதாநாயகன் பாடும்போது அவன் மேல் நமக்கு கழிவிரக்கம் பிறக்கிறது.
எசகுபிசகாய் கௌதம் அர்ஜுனுடன் சேர்ந்து விடுகிறார். நிறைய குட்டிக் கரணங்கள் படகுகளிடையே ஓட்டம் சாட்டம். நிறைய கண்ணாடிகள் வேறு உடைகின்றன. என்னடே பெகளெம் என்றால் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. ஏதோ சாத்தான் காரியமாம். கதாநாயகன் தன் அப்பா என்று நம்பும் செட்டி பார்னபாஸ் என்ற கதாபாத்திரத்தை சாத்தான் அர்ஜுன் ஐந்து புல்லட்களால் துளைத்து கொன்றுவிட கதாநாயகன் செட்டியின் உடலை கையால் தாங்கி இல்லிக்கண்களில் நீர் வழிய வாய் கோணி கதறி அழுகிறான். மற்ற படங்களானால் உடனேயே அர்ஜுன் சாத்தானை கதாநாயகன் பிரித்து மேய்ந்திருப்பான். ஆனால் அவன் அதற்கு மேல் எதுவும் செய்வதில்லை. அர்ஜுனின் அடியாள் என்பதினால் சும்மா கதறி அழுதுவிட்டு செட்டி வீட்டில் துஷ்டி அறிவிப்பதோடு பேசாமல் இருந்து விடுகிறானா இல்லை அப்போதே ஞானப்பழ குருவின் துணையில்லாமலேயே தூய அன்பினை தரிசித்துவிட்டானா என்று நமக்கு ஏற்படும் குழப்பத்திற்கு இயக்குனரோ கதாசிரியரோ பொறுப்பில்லை. எல்லா கதாபாத்திரங்களின் எல்லா நடவடிக்கைகளுக்கும் அவர்களா ஜவாப்தாரி?
‘நெஞ்சுக்குள்ளே உமை முடிஞ்சிருக்கேன்’ பாட்டைக் கேட்டு சொக்கிப் போய் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரியில் வேறு அதைக் கேட்டு மயங்கி படத்தில் காட்சிபடுத்துதல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்திருந்தீர்களென்றால் அதற்கும் நீங்களேதான் பொறுப்பு. படத்தில் பாட்டு பின்னணியில் ஓடிக்கொண்டிருக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள் கதாபாத்திரங்கள். பாட்டும் காதில் சரியாய் விழுவதில்லை பேசுவதும் சரியாய் கேட்பதில்லை. ‘கடல்’ படத்தின் டிரெய்லரில் காட்டப்பட்டதாகச் சொல்லப்படும் உதடோடு உதடு பொருந்திய முத்தக்காட்சியை இந்தப்பாடல் காட்சியில் வைத்து கதாபாத்திரங்களின் வாயை அடைத்திருக்கலாம். பாட்டை நாம் நன்றாகக் காது கொடுத்து கேட்டிருக்கலாம். முத்தக் காட்சியால் இளைய சமுதாயம் எப்படி சீரழிந்து போகிறது என்று ஞாநி moral instruction வகுப்பு எடுக்க ஃபேஸ்புக், டிவிட்டர் என்று களேபரமாகியிருக்கும். இலவச விளம்பரத்தினால் படம் இன்னும் ஓடியிருக்கும்.
ஆரம்ப, கடைசி டைட்டில்கள் காட்டும்போது இரண்டு பாட்டு, பின்னணி இசையாக இரண்டு பாட்டு என்று போய்விட இரண்டு பாட்டுக்கள்தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு வேளை என் கணக்கு தப்போ என்னமோ. தமிழ் சினிமா ரசிகனை சக்கையாக ஏமாற்றிவிட்டார்கள். கொடுத்த ஆஸ்காரை திரும்பப் பிடுங்கச் சொல்லலாமா என்பது போல ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை கர்ண கொடூரமாய் இருக்கிறது. பல காட்சிகளில் பேசாமல் இயற்கையான சப்தங்களையும் வசனங்களையும் மட்டும் வைத்திருந்தாலே போதுமே சாமி என்று உள் மனம் கத்துகிறது. இது போலவே ‘அன்பின் வாசலிலே’ என்ற பாட்டு எப்போது வந்தது எப்படிப் போனது என்று யாருக்கும் தெரியவில்லை. ஒரே திருஷ்டி பரிகாரம் ‘மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்’ பாடல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் மட்டும்தான்.
கூட்டிக் கழித்து கதையின் multiple plots, தொடர்ச்சி விட்டுப்போன கதைப் போக்கு எல்லாம் ஒரு வழியாய் தெரியவரும்போது கடுமையாய் மண்டையிடி வந்து விடுகிறது. அவ்வமயம் பார்த்து கதாநாயகன் அரவிந்தசாமியை குருவே என்று விளித்து என் மூலமாய் எதைப் பார்க்க நீ நினைத்தாய் என்று விளம்புகிறான். அரவிந்தசாமி டீ போடுவதில் மும்முரமாய் இருப்பது சரிதான் என்று நமக்குப் படுகிறது. யோசிப்பதற்கான தருணம் என்று ஒரு கண இளைப்பாறுதல் கூட இல்லாமல் கிளைமேக்ஸ் வந்துவிடுகிறது. சாத்தான் அர்ஜுன் தன் மகளான கதாநாயகியை நடுக்கடலில் மோட்டார் சிறு கப்பலில் இருந்து தள்ளிவிட்டு கொன்று விடுகிறார் என்று காட்டப்படுகிறது. அர்ஜுனை அரவிந்தசாமியும் கௌதமும் அடித்து நொறுக்குகின்றனர். அர்ஜுனை ஒற்றைக்காலில் சுருக்குக் கயிறில் மாட்டி அந்தரத்தில் தூக்கி கடலில் முக்குகின்றார் அரவிந்தசாமி. நல்ல பாதிரி தோத்துட்டார் போ என்று இருக்கையைவிட்டு எழுந்திருக்க நினைக்கையில் கௌதம் அர்ஜுனை காப்பாற்றிவிடுகிறார். அர்ஜுன் தான் என்னதான் சாத்தான் என்றாலும் தன்னால் தன் மகளை கொல்ல முடியவில்லை என்கிறார். Anti Climax. ஓ எல்லோருமே நல்லவர்கள் என்று ஒரு முடிவுக்கு வருகிறோம். கதாநாயகி ஆஸ்பத்திரியில் பயந்து நடுங்கி கைகால் இழுத்துக்கொள்ள கட்டிலில் கிடக்கிறாள். கதாநாயகன் கட்டிப்பிடித்து அவளைத் தேற்றியவுடன் இழுத்துக்கொண்ட கை சரியாகி கதாநாயகனின் கை விரலை க்ளோசப்பில் தொட அன்பு என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது.
அர்ஜுனைக் கடலில் முக்கி கொல்லப்பார்த்தோமே என்ற ஓர்மையே இல்லாமல் அரவிந்தசாமி பாடிக்கொண்டே முன் செல்ல ஏதோ ஒரு கிறித்துவ திருவிழா ஏகப்பட்ட விளக்கு அலங்காரங்களுடன் நடக்கிறது. இறுதி டைட்டில்கள் ஓடுகின்றன. படம் ஒரு வழியாய் நல்லபடியாம் முடிந்துவிட்ட திருப்தியுடன் பிதா, சுதன், ஆவியின் பெயராலே ஆமென் என்று தோத்திரம் கூறி வெளியே வருகிறோம்.
எதற்கும் லூயி புனுவலின் படத்தையும் பார்த்து வையுங்கள். இந்தக் கதைக்கருவினை masters எப்படி அணுகுவார்கள் என்று ஒரு பிடி கிடைக்கும்.
லூயி புனுவலின் படத்திற்கான சுட்டி http://www.youtube.com/watch?v=joGGitsS05k
7 comments:
அருமை. வயிறு குலுங்க சிரிக்க வைத்தது விமர்சனம். கடல் ஒரு கடலை என்று சன்டீவி பாணியில் சொல்லிவிட வேண்டியதுதான். ஹா ஹா.
கடல் கதை சொல்லிகளைப் பார்த்து அலை கொட்டி சிரிக்கும்.
விமர்சனம் அருமை.
//ஓ எல்லோருமே நல்லவர்கள் என்று ஒரு முடிவுக்கு வருகிறோம். கதாநாயகி ஆஸ்பத்திரியில் பயந்து நடுங்கி கைகால் இழுத்துக்கொள்ள கட்டிலில் கிடக்கிறாள். கதாநாயகன் கட்டிப்பிடித்து அவளைத் தேற்றியவுடன் இழுத்துக்கொண்ட கை சரியாகி கதாநாயகனின் கை விரலை க்ளோசப்பில் தொட அன்பு என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது.// ஹா ஹா ஹா... அன்புக்கு மட்டும் இத்தகைய சக்தி எதுவும் இல்லையென்றால், அப்றம் எப்டி தமிழ்ப்படங்கள் பார்ப்பதாம்!
Brilliant humour in virtuoso language!
BTW, am I the only one who is seeing an eerie similarity of this review with some of Payon's reviews? (to see what I mean, check out 'Boss Engira Baskaran').
//விஸ்வரூபம் படத்தில் பூஜாகுமார் (கமல் மனைவி) பார்வையாளனின் பிரதிநிதி; படம் முழுக்க முட்டாள் வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்.//
உங்கள் இந்த ட்விட்டர் பதிவு, விஸ்வரூபம் பட விமர்சனத்தை மிகவும் எதிர்பார்க்க வைத்து விட்டது. எழுதுவதாக உத்தேசமா?
விஸ்வரூபம் பற்றிய சலசலப்பு குறைந்தபின் எழுதலாம் என்று எண்ணம்.
Viswaroopam's vimarsanam, that we await from you, will be a real Viswaroopam on the State of Affairs.
We await.
Anbudan,
Srinivasan.
Post a Comment