Saturday, May 18, 2013

நான் ஆட்டோகிராஃப் போட்ட முதல் சந்தர்ப்பம்


வளர வளர எல்லாம் கோப்பரமாகிவிடும் என்பதற்கு டெல்லி விமான நிலையம் ஒரு எடுத்துக்காட்டு. முந்தா நாள் ராஞ்சியிலிருந்து டெல்லி வந்து விமானம் மாறி சென்னை வர வேண்டும். வேறு வேறு ஏர்லைன்ஸ் என்பதினால்  பெட்டியை சேகரித்துக்கொண்டு மீண்டும் புதியதாய் உள் நுழைந்து பாதுகாப்பு சோதனைக்கு உட்பட வேண்டும். டெல்லி வந்திறங்கினால் ஏரோபிரிட்ஜ் வேலை செய்யவில்லை. விமானத்திலிருந்து பஸ் சௌகரியமாய் ஊர்கோலமாய் பதினைந்து நிமிடங்கள் பயணம் போய் நிலையத்தில் இறக்கிவிட்டது. பட்டை ஐந்தில் உங்கள் பெட்டி வரும் என்றார்கள் அப்புறம் பட்டை ஆறு அப்புறம் ஒன்று என்று ஒரு வழியாய் அங்கேயும் இங்கேயும் ஜனம் அலைந்து திரிந்து தங்கள் பெட்டிகளை எடுத்தது. எனக்கோ இன்னும் அரை மணி நேரம்தான் அடுத்த விமானத்திற்கு இருந்தது. பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அடுத்த டெர்மினலுக்கு பதினைந்து நிமிடம் பஸ் பயணம் என்றார்கள். அடுத்த டெர்மினலில் மூச்சு வாங்க போய் உள் நுழைய இருக்கையில் ‘சார் நீங்கள் தவறான பெட்டியை தூக்கிக்கொண்டு போய் விட்டீர்கள் என்று ஃபோனில் கூப்பிட்டு சொன்னார்கள். அப்போதுதான் பெட்டியைப் பார்த்தேன் என்னுடைய பெட்டி போலவே அச்சு அசலான இன்னொரு பெட்டி. ஃபோனின் மறு முனையில் ஒரு இளம்பெண் காச்சு மூச்சென்று கத்திக்கொண்டிருந்தார். அவரிடம் மெதுவாக என் நிலைமையை விளக்கினேன். அவர் என் டெர்மினலுக்கு வந்து என் பெட்டியை கொடுத்துவிட்டு அவர் பெட்டியை வாங்கிச் செல்ல முடியுமா என்று கேட்டேன். வேறு வழி, வந்து தொலைகிறேன் என்று கத்தினார் இளம் பெண். Fucking moron என்று மறு முனையில் அவர் வேறெங்கோ பார்த்து திட்டுவதை காது குளிர கேட்டேன். அந்த சந்தர்ப்பத்திலும் எங்களூர் மின்சார வாரியத்தை பெயர் சொல்லிக் கூப்பிட்டீர்களா மேடம் என்று கேட்கத் தவறவில்லை.

என் விமானத்தின் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் போய் பெட்டி மாறிவிட்ட கதையைச் சொல்லி எனக்கு விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி சீட்டு வாங்க இன்னும் கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றேன். எனக்காக பதினைந்து நிமிடம் அதிகம் கால அவகாசம் தருவதாகவும் அதற்கு மேல் என் பொறுப்பு என்று தயவு பண்ணினார்கள். 1D டெர்மினலில் லிஃப்ட் பகுதில் காத்திருப்பதாக இளம்பெண்ணிடம் சொன்னேன். அவர் நான் மேலே வந்து விட்டேன் மேலே வாருங்கள் என்றார். மேலே ஓடிப்போய் இந்த அற்றத்திலிருந்து அந்த அற்றம் வரை தேடியும் ஆளைக் காணவில்லை. அவர் விமான நிலையத்தின் வருகை பகுதிக்குப் போயிருக்கிறார். நானோ விமான நிலையத்தின் வெளியேற்ற நுழை வாயிலில் காத்து நின்றேன். அந்த இளம்பெண் நான் இப்போது லிஃப்ட் பகுதியின் கீழ் தளத்திற்கு வந்துவிட்டேன் கீழே வாருங்கள் என்றார். கீழே திரும்பி ஓடிப்போனேன். அங்கே அந்த பஞ்சாபி இளம்பெண் கடும் கோபத்துடன் நின்றிருந்தார். அவரிடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்டு அவர் பெட்டியை கொடுத்துவிட்டு என் பெட்டியை வாங்கினேன். பெட்டிகளைக் கைமாற்றும்போது அவர் சார் நீங்கள் முத்துக்குமாரசாமிதானே என்றார். ஆமாம் என்றேன் தயக்கமாக. என்னை நினைவில்லை, நான் உங்களை சண்டிகரில் பேட்டி எடுத்திருக்கிறேன் என்றார். ஆமாம் போன வருடம் SAARC எழுத்தாளார்கள் மாநாட்டுக்காக சண்டிகர் போனபோது அவர் என்னை சண்டிகர் ஆங்கில நாளிதழுக்காக பேட்டி எடுத்தது நினைவுக்கு வந்தது. பரவாயில்லையே ஞாபகம் வைத்திருக்கிறீர்களே என்றேன். உங்களை மறக்க முடியுமா சார் எப்படி சிரிக்க சிரிக்க பேட்டி கொடுத்தீர்கள். உங்களைப் போல இன்சொல்லும், அழகும், கருணை உள்ளமும் கொண்டவர்களைக் கண்டால் எனக்கு நகைச்சுவை உணர்வு பீறிட்டுவிடும் என்று நன்றி தெரிவித்தேன். என்னுடனேயே லிஃப்டில் ஏறி நுழைவாயில் வரை வந்து வழி அனுப்பி வைக்க கூடவே வந்தார். உங்கள் ஆங்கில நாவல் எப்போதுதான் வெளியாகும் என்றார். மூன்றாவது முறையாக எடிட் செய்துகொண்டிருக்கிறேன் இந்த வருடமோ அல்லது அடுத்த வருடமோ என்று அலுத்துக்கொண்டேன். நுழைவாயிலில் கைகுலுக்கி விடைபெறும் தருணத்தில் இந்தப் பெட்டியில் உங்கள் ஆட்டோகிராஃப் போட்டுத்தாருங்கள் சார் பின்னால் நீங்கள் புக்கர் பரிசெல்லாம் வாங்கி பெரும் புகழ் பெறும்போது நான் இந்தப் பெட்டியை வைத்து ஒரு கட்டுரை எழுதுவேன் என்றார். அவர் கொடுத்த ஸ்கெட்ச் பேனாவால் என் முழுப்பெயரையும் கையொப்பமிட்டு கீழே மின்சார வாரியம் என்று மேற்கோள்களில் குறித்தேன்.

சென்னை விமானத்தை சரியான சமயத்தில் பிடித்துவிட்டேன். வீட்டுக்குள் நுழையும்போது வழக்கம்போல குறைந்த அழுத்த மின்சாரத்தினால் விசிறிகளெல்லாம் மெதுவாக சுற்றிக்கொண்டிருந்தன. வெக்கை அள்ளி வீசியது. Fucking moron  என்ற பதச்சேர்க்கையை தமிழாக்கம் செய்யத்தான் எத்தனை பெயர்கள்! ஒரு துணை அகராதியே போடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

No comments: