Wednesday, June 27, 2018

ஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில

Albert Camus with his children
நான் வேறு யாரோ ஒரு ஆள் என
--
தன் ஆளுமையில் முழுமையாக கரைந்துவிட்டவர்களை அதுவே இறுதியானது என்று நம்புவர்களைப் பார்க்கும்போது எனக்கு பரிதாபமே ஏற்படுகிறது. அவர்கள் கற்பனை வழங்கக்கூடிய மிகப் பெரிய சுதந்திர வெளியை அனுபவிக்கத்தவறிவிடுகிறார்கள். ஒருவேளை தன்னிலிருந்து விடுபட்ட கற்பனை புனைவாசிரியர்களுக்கு மட்டுமே அமையும் அதிர்ஷ்டம் உள்ளதோ என நினைத்து தமிழ் புனைவுகளை வாசித்தால் சுயபுராணமும் சுயபுலம்பலும் சுயதம்பட்டமுமே எங்கும் நிறைந்திருக்கிறது. கவிதை பின்னே கேட்கவே வேண்டாம். முழுக்க முழுக்க சுய ஆராதனைதான்.  தன்னிலிருந்து முழுவதும் வேறுபட்ட, தன் ஆளுமைக்கு எதிரான கதாபாத்திரங்களை தாஸ்தோவ்ஸ்கியால் உருவாக்க முடிந்தது அதனால்தான் அவர் ஐரோப்பிய நாவல் இலக்கியத்தின் உச்சம் தொட்ட படைப்பாளி என்று மிகைல் பக்தின் எழுதினார். அதுவே உண்மையில் இலக்கியம் கற்றுத் தரும் மிக முக்கியமான பாடம் என்பதும் என் எண்ணம்.


அவலட்சண எதிர்காலவியல் கதைகள்
--
அறிவியல் புனைகதைகளில் வழக்கமாகக் காணப்படும் dystopian futureஐ எனக்கே எனக்காக அவலட்சண எதிர்காலமென மொழிபெயர்த்து வைத்திருக்கிறேன். உலகம் அழிவை நோக்கி செல்லாது, மாறாக, மேலும் மேலும் மேம்பட்ட மனித சமூகமாகவே மாறும் என்ற மார்க்சீய சிந்தனைக்கு எதிரானது இது என்பது மட்டுமல்ல மனித சமூகம் சீரழிந்து எதிர்காலத்தில் உலகம் அழிந்து போகும் என்பது பெரும்பாலான மதங்களின் நம்பிக்கையும் கூட. உலகம் அழிந்து போம் என்ற விரக்தி என்னிடத்தில் தோன்றும்போதெல்லாம் அவலட்சண எதிர்காலவியல் கதைகளை நான் எழுதத் தலைப்படுகிறேன். 'ஒரு துண்டு வானம்' கதை அப்படிப்பட்ட ஒன்று. எதிர்காலத்தில் எல்லாம் கார்ப்பரேட் மயமாகி சிறைச்சாலையும் தனியார் கார்ப்பரேட்டிடம் நிர்வாகம் கைமாறிவிடும்போது என்ன நடக்கும் என என் கதை விவரிக்கிறது. அந்தக் கதையில் கார்ப்பரேட்-அரசு தீக்கூட்டிணைவில் அரசியல் எதிரியாக நீட்ஷேவிய அழகியல்வாதி இருப்பான் என்று கணித்திருந்தேன். கதை எழுதி கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு இன்றைக்கு  கார்ப்பரேட்டின் (அரசின்) அரசியல் எதிரி சுற்றுச்சூழலியல்வாதியாக இருப்பான் என அறிகிறேன். நான் இப்போது எழுத நினைக்கும் அவலட்சண எதிர்காலவியல் கதைகள் எனக்கே மனக்கலக்கத்தை உண்டு பண்ணுகின்றன. நிகழ்கால சமிக்ஞைகளோ புனைவை விட கொடூரமாய் கண் சிமிட்டுகின்றன.

தோரோ, டாஃப்லர், லெவிஸ்டிராஸ்

ஆல்வின் டாஃப்லரின் (Alvin Toffler - Future Shock புத்தக ஆசிரியர்) Third Wave வெளிவந்தபோது அதை மிகவும் ஆர்வமாக வாசித்தவர்களில் நானும் ஒருவன். ‘மூன்றாம் அலை’ , எதிர்காலத்தில் உலகளாவிய பிரம்மாண்ட பொருளாதார அமைப்புகள் உடைந்து சிறு சிறு பொருளாதார அமைப்புகள் - ஜே.சி.குமரப்பா எழுதிய காந்திய தன்னிறைவு பெற்ற கிராம அமைப்புகள் போன்றவை- வலுப்பெறும், அவை புதிய வாழ்வியல் முறையாக மாறும் என்று பேசியது எனக்கு மிகவும் உவப்பானதாக இருந்தது. என்ன அழகான கனவு அது என்று இன்றும் தோன்றுகிறது. ஆனால் அப்படி சிறு அமைப்புகளின் தன்னிறைவு இனி சாத்தியப்படுமா, அதன் சாத்தியங்களை என் வாழ்நாளில் காண்பேனா என்றெல்லாம் இப்போது தன்னியல்பான தவிப்புகள் ஏற்படுகின்றன. காந்திய சிந்தனையின் பகுதியான தோரோவின் (Throreau) இயகையோடு ஒன்றிணைந்த வாழ்வு என்பதன் கனவு முன்பே தீய்ந்துபோயிருந்தது. இயற்கை அதனுடைய காட்டு விகாசத்தில் கொடூரமானது; அதை மனித வாழ்க்கைக்கு ஏற்றார்போல பண்படுத்தாமல் வாழ இயலாது என்பது பொதுப்புத்திக்கே எட்டக்கூடியதுதான். அதைப் பிரமாதமாக வார்த்தைப்படுத்தியவர் லெவிஸ்டிராஸே ஆவார். அமேசான் காடுகளில் இயற்கையின் விகசிப்புகளைப் பார்த்து மிரண்டுபோன லெவிஸ்டிராஸ் தெற்கு ஃபிரான்சில் இய்ற்கையும் பண்பாடும் சம அளவில கலந்துள்ள இடங்களே மனித வாழ்க்கைக்கு ஏற்றவை என்று எழுதினார். தோரோவின் wild nature பற்றிய அதீத கற்ப்னைகள் யாதார்த்தத்தில் செல்லுபடியாகதவை. இயற்கையை அழிக்காமல், அளவாக முறையாக பயன் படுத்துவதன் balance என்ன என்பதே மீண்டும் மீண்டும் எழுகின்ற கேள்வி. அதற்கு விடையாக தன்னிறைவு பெற்ற சிறு அமைப்புகளைத் தவிர வேறு விடைகளும் இப்போதைக்கு இல்லை. நமக்கு அப்படி ஒரு வாழ்விற்கான ஏக்கம் இருக்கிறதா, என்ன?

சார்த்தர்

சார்த்தரின் (Jean-Paul Sartre) பிறந்த நாள் இன்று. சார்த்தரின் Being and Nothingness என்னை வெகுவாக பாதித்த நூல்களில் ஒன்று. மாணவப் பருவத்தில் மீண்டும் மீண்டும் வாசித்தேன். தினசரி வாழ்க்கையின் விவரிப்புகளூடே எப்படி தத்துவத்தை எழுத முடியும் என்று கற்றுத்தந்த பேராசிரியர் அவர். அவருடைய ஏன் எழுதவேண்டும் என்ற கட்டுரை சமூகக்கடப்பாடுடைய எழுத்தாளனாய் ஒருவன் எழுத வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. இன்றைக்கும் மனம் துவளும் நேரங்களில் நான் வாசிக்கும் நீண்ட கட்டுரை. நான் அவருடைய critique of Dialectical Materialism நூலை முழுமையாக வாசித்தேன் என்று சொல்ல முடியாது. ஆங்கொன்றும் இங்கொன்றுமாய் பக்கங்களை பல முறை துண்டு துண்டாய் வாசித்திருக்கிறேன். சார்த்தர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை மறுத்து அறிக்கை விட்டது, திருமணம் செய்யாமலேயே சிமோன் தி பூவாவோடு சேர்ந்து வாழ்ந்தது, அல்ஜீரியப் போருக்கு எதிராக தெருவில் இறங்கி போராடியது, மே 68 மாணவர் போராட்டத்தில் பங்கேற்றது எல்லாம் என்னுடைய மதிப்பில் அவரை மிகவும் உயர்த்தியது. இருத்தலியல் பிரச்சனைகளை இலக்கியத்தின் தலையாய பிரச்சனைப்பாடாக பார்க்கவேண்டும் என்ற சார்த்தரின் கருத்தை நான் இன்றும் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். சார்த்தரின் தத்துவம் கவர்ந்த அளவு எனக்கு அவருடைய நாவல்களும் நாடகங்களும் கவரவில்லை. Nausea நாவலை என்னால் வாசிக்கவே முடியவில்லை. No Exit நாடகத்தில் வரும் -மிகுந்த கண்டனத்திற்குள்ளான வரி The other is hell - எனக்கு எந்த கண்டனங்களையும் வாசிப்பதற்கு முன்பாகவே கடும் ஒவ்வாமையை ஏற்படுத்தியது. பின்னாளில் சார்த்தர் அவ்வரிக்காக வருத்தம் தெரிவித்தாலும் என்னைப் பொறுத்தவரை அது ஒரு மாறாக்களங்கமாக அவரைப் பற்றி என்னிடத்தில் தங்கிவிட்டது. ஆல்பெர் காம்யு சார்த்தரை விட சிறந்த இலக்கிய எழுத்தாளர் என்பது என் எண்ணம் ஆனால் காம்யு சார்த்தர் அளவுக்கு தெருவிறங்கி பொதுநலன்களுக்காகப் போராடியவரில்லை. சார்த்தர் அல்ஜீரியாவுக்கு எதிரான போரில் ஃபிரான்ஸ் ஈடுபட்டதை எதிர்த்து தெருவில் நின்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். ஃபிரான்சுக்கு எதிராக சார்த்தர் பிரச்சாரம் செய்கிறார் அவரை கைது செய்யவேண்டும் என்று ஃபிரான்சின் அதிபராக இருந்த டிகாலிடம் சொன்னபோது டிகால் France cannot arrest its Voltaire என்று சொன்னாராம். It was one of the greatest moments in the history of Western civilisation.

சார்த்தரைப் பற்றி குறிப்பு எழுதிய இன்றைய மதியத்தில் அவருடைய முக்கியமான நூலான Saint Genet: Actor and Matyr பற்றி என்னுடைய அவதானத்தை எழுதாமல் விட்டுவிட்டேன். ஜெனேயின் Theif's Journal என்ற புத்தகத்தைப் பற்றிய சார்த்தரின் விரிவான விமர்சனமே புனித ஜெனே. சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுபவர், ஜெயிலுக்கு சென்றவர், ஓரினச்சேர்க்கையாளர் என்றெல்லாம் அறியப்பட்ட ஜெனேயை, ஜெனேயின் எழுத்திலுள்ள கவித்துவத்தை முதன்மைப்படுத்தி அவரை புனிதரெனவும் மேதையெனவும் சார்த்தர் நிறுவினார். மேதமை என்பதை பிறப்பின் அம்சமாகவோ, வரலாறு, கலாச்சார பின்புலம் ஆகியவற்றின் விளைபொருளாகவோ காணாமல் தன் சூழலை படைப்பூக்கத்துடன் எதிர்கொண்ட மனமாக சார்த்தரின் புனித ஜெனே நூல் எடுத்தியம்புகிறது. இந்த நூலின் முக்கியத்துவம் ஹெரால்ட் ப்ளூம் எழுதிய Genius என்ற நூலை வாசிக்கும்போதுதான் துலங்கும். ப்ளூம் எழுதுவது ஷேக்ஸ்பியர் போல உலக அளவில் வெகுவாக அங்கீகரிக்கப்பட்ட ஐம்பத்தி சொச்சம் இலக்கிய மேதைகளைப் பற்றி. அதுவும் எப்படி? யூத மத நூல்களில் கொடுக்கப்பட்ட மேதைகளுக்கான குணநலன்களை வைத்து ஷேக்ஸ்பியரும் மற்றவர்களும் மேதைகள் என ப்ளூம் விளக்குகிறாராம். பாயிண்ட் 1, பாயிண்ட் 2 என box ticking வேலையை செய்திருக்கிறார் ப்ளூம். ஷேக்ஸ்பியரின் மேதமை என்ன என்பது ப்ளூமின் லிஸ்ட் இல்லாமலேயே நமக்குத் தெரியாதா என்ன? ப்ளூம் ஒரு கற்றுச்சொல்லி; சார்த்தர் அசல் சிந்தனையாளர். அசல் சிந்தனையாளர்கள் சிந்தனை முறையையே மாற்றுகிறார்கள்; புதுப்பிக்கிறார்கள். கற்றுச்சொல்லிகள் தண்டி தண்டியான புத்தகங்களினால் கலாச்சார மேலாண்மையை நிறுவுகிறார்கள். அவர்களுடைய புத்தகங்களை எடைக்கு எடை போட்டு பேரீச்சம்பழங்கள் வாங்கி சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது.

வேளச்சேரியில் முகம் தெரியாமல் வாழ்ந்த இனிய நாட்களை இந்த மொட்டைமாடிக்கூட்டங்களுக்குச் சென்று உரையாற்றி நானே கெடுத்துவிட்டேன். முன்பெல்லாம் என் வீட்டைக்கூட என் மனைவியை வைத்து வெள்ளைக்கார அம்மா வீடு என்றோ என் பையன்களை வைத்து ருத்ரன் வீடு என்றோதான் அடையாளம் சொல்வார்கள். நானொருவன் இருப்பதே தெரியாது. இந்த மொ.மா.கூக்களுக்கு போனதிலிருந்து காலை நடையின் போது யாராவது ஒரு அம்மணியோ அம்மனனோ ( தன் மனதை முழுமையாக நம் மேல் கொட்ட விரும்புபவர்) கண்ணில் பட்டுத் தொலைத்துவிடுகிறார்கள். அவர்களுக்கு நான் காலை நடையின் போது என் வாழ்க்கையிலேயே முக்கிய வேலைகளான, பராக்கு பார்த்தல், யோசனையற்று சும்மா இருத்தல், நடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கிறேன் என்று தெரிவதில்லை. இன்றைக்கு பார்த்த அம்மணிகள் ஏதோ பிக்பாஸ் என்பதைப் பற்றி உரையாட விரும்பினார்கள். அது என்ன வஸ்து என்று கேட்டுவைத்தேன். அவ்வளவுதான். ஜெமோ/எஸ்ரா யுடூப் உரைகள் போல பிக் பாஸ் பற்றிய அத்தனை விபரங்களையும் பிளந்து கட்டிவிட்டார்கள். காதுகளெல்லாம் எரிகின்றன. Endlessly sulking. சனி நீராடலாம் என்று சளம்ப எண்ணெய் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.

ஜேஜேயை மற
--
Aeon வலைத்தளத்தில் அயன் ரேண்டை தத்துவ உலகம் கிஞ்சித்தும் மதிப்பதில்லை இருந்தாலும் அவருடைய நாவல்கள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும் என்றொரு கட்டுரை படித்தேன். சுந்தரராமசாமியின் ஜே ஜே சிலகுறிப்புகள் வெளிவந்த புதிதில் ஜேஜேயை அயன் ராண்டின் கதாநாயகர்கள் போலவோ என சந்தேகித்து ராகம் இதழில் நான் எழுதியது நினைவுக்கு வந்தது. ராண்டின் கதாநாயகர்களான ஹோவர்ட் ரோர்க் (The Fountainhead) ஜான் கால்ட் (Atlas Shrugged) இருவருமே படைப்பூக்கமிக்க தனியன்கள் அவர்கள் அரசாங்கம், சமூகம் ஆகியவற்றின் இயங்குவிதிகளுக்கு கட்டுப்படாதவர்கள். அவர்களை நீட்ஷேவிய அதிமனிதன் என யாரோ ஒரு மேதாவி எழுதித்தொலைக்க அதுவே பலரும் கிளிப்பிள்ளையாய் திரும்பச் சொல்லும் பழக்கமாகிருக்கிறது. உண்மையில் நீட்ஷேவிய அதி மனிதன் உலக இலக்கியங்கள் எதிலுமே தோன்றவில்லை என்பது என் அனுமானம். கூடவே அயன் ரேண்டின் அசட்டு சுயமோகிகளுக்கும் நீட்ஷேவிய அதிமனிதக்கும் சம்பந்தமில்லை. ஜிஜெக் (Slavoj Žižek) ராண்டின் பாத்திரங்களை ஆண் மைய கதையாடல்களின் நாயகர்கள் என வாசித்தது ஒத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஜேஜே பெண்களேயில்லாத ஒரு இலக்கிய உலகின் ஆண் நாயகன். வணிக உலகத்தை நிராகரிப்பவன், போலிகளை மறுக்ககூடியவன் தமிழ் சிற்றிலக்கிய உலகின் கலைஞன் என்ற பிரதிமையின் archetype. ஜேஜே சில குறிப்புகள் இன்று அதிகமும் வாசிக்கப்படாத நாவலாக இருக்கலாம். ஆனால் ஜேஜே என்ற பிரதிமையை இலக்கிய ஆசிரியர்களையும் அவர்களது படைப்புகளையும் அணுக தொடர்ந்து பலரும் பயன்படுத்தி வருவதாகவே தெரிகிறது. தனித்துவமிக்க கலைஞன் என்ற figure மிகவும் கவர்ச்சிகரமானதாக கதைவாசிப்பில் இருக்கலாம் ஆனால் அயன் ராண்டின் கதை கருத்தாக்கமாக மாறும்போது அது சுயநலமிகளைக் கொண்டாடும் அசட்டு சித்தாந்தமாகிறது. எனவேதான் தன்னளவில் தர்க்கமற்ற Virtue of sefishness ஐ ராண்டால் வெட்கமில்லாமல் எழுதமுடிந்தது; தத்துவ உலகமும் அவரைப் பார்க்க சகிக்காமல் முகத்தைத் திருப்பிகொண்டது. உண்மையில் மிகப்பெரிய கதாநாயக செயல் என்பது சமத்துவத்தை பேணுதலாகவும், தனித்த படைப்பூக்கத்தின் பொருட்டு எந்த சலுகையையும் கோராதிருப்பதிலேயும்தான் இருக்க முடியும். உயர் அதி மனிதனானாவன் -நீட்ஷேவிய சட்டகத்திலிருந்தும் கூட விடுபட்டு- சமூக பரிணாமவளர்ச்சியோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டவனாக/கொண்டவளாகத் தான் இருக்கமுடியும். அந்த வகையில் ஜேஜேயின் பிரதிமைகள் மறக்கப்படவேண்டியவையே.

கிரைப் வாட்டர் விளம்பரத்தில் காணப்படும் கைக்குழந்தை போல இருக்கும் சிலரின் புகைப்படங்களை ஃபோன் திரையில் காட்டி இவர்களெல்லாம் இப்போது எழுத வந்துள்ள இளைஞர்கள் தெரியுமா என்று என்னைச் சீண்டினார் இளங்கவி. (வேறெப்போது? எல்லாம் வேளச்சேரி மாலை நடையின்போதுதான்). நான் எழுத வந்த புதிதில் குற்றாலம் கவிதைப்பட்டறையில் பிரமிள் என்னைப்பார்த்து அமுல்பேபி என்று சொன்னார் அதனால் இந்த இளைஞர்களின் தோற்றத்தைப் பற்றி எல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன் என்றேன். தாடி, ஜிப்பா, சீவப்படாத கலைந்த கேசம், சோடாப்புட்டி கண்ணாடி, வாயில் அலட்சியமாகத் தொங்கும் சிகரெட்- அந்த எழுத்தாள இமேஜை இனி மியூசியத்தில் கூட பார்க்கமுடியாது போலிருக்கிறது. அதில் எனக்குக் குறையில்லை. என்ன, இன்னும் கொஞ்சம் வயதாகி வேட்டியும் சரிகை அங்கவஸ்திரமும் கோல்ட் ஃபிரேம் கண்ணாடியும் போட்டுக்கொண்டு நடந்தார்கள் என்றால் லேவாதேவிக் கடை கல்லாவிலிருந்து எழுந்து வந்தவர்களைப் போல இருப்பார்கள்.
-
" வினதா சொன்னாள், 'நடுக்கடலுக்குப் போ, அங்கே நிஷாதர்களின் நிலத்தைக் காண்பாய். அங்கே உனக்குத் தேவையான அளவிற்கு அவர்களை உண்ணலாம். அவர்களுக்கு வேதங்கள் தெரியாது. ஆனால் நினைவில் கொள்; ஒருபோதும் பிராமணணைக் கொல்லாதே, பிராமணன் என்பவன் தீ, கூர்மையான வாள், நஞ்சு. எந்தச் சூழ்நிலையிலும் பெருங்கோபத்திலும்கூட நீ பிராமணனைக் காயப்படுத்தக்கூடாது.' கருடன் இன்னும் தீர்க்கமாக கவனித்தான். அவன் கேட்டான்,' ஆனால் அம்மா, பிராமணன் என்றால் என்ன? எப்படிப் பிராமணனை அடையாளம் காண்பேன்?' கருடன் கறுத்த சுருண்ட பாம்புகளையும் ஒருவரையொருவர் வெறுக்கும் இந்த பெண்கள் இருவரையும் தவிர வேறு எதையும் பார்த்திருக்கவில்லை. அவன் தந்தை எப்படி இருப்பார் என்பது கூட அவனுக்குத் தெரியாது. பிராமணன்? என்னவாகத்தான் இருக்கும் அது என்று ஆச்சரியப்பட்டான் கருடன். வினதா சொன்னாள், 'உன் தொண்டையில் ஒரு எரிகொள்ளியை உணர்ந்தாலோ கொக்கியை விழுங்கியதுபோல உணர்ந்தாலோ அதுதான் பிராமணன்' கருடன் அவளையே நேரடியாகப் பார்த்தவாறு நினைத்துக்கொண்டான், 'ஆக விழுங்கினாலொழிய பிராமணன் யாரென்பதைச் சொல்ல இயலாது' ஆனால் அவன் ஏற்கனவே தன் சிறகுகளை விரித்துக்கொண்டிருந்தான், நிஷாதர்களை விழுங்குவதற்கான ஆர்வத்துடன்"
வாசித்துக்கொண்டிருக்கும் ராபர்ட்டோ கலாஸ்ஸோவின் நாவல் 'க' வில் -தமிழில் ஆனந்த், ரவி - பக்கம் 22-23-காலச்சுவடு பதிப்பகம்

Quine: If numbers were words, zero would be an irregular verb.
Tarski: "Zero is one" is a true sentence if and only if zero is one. Malevich: It is from zero that the true movement of being begins.
Hugo: Zero does not exist.
-

வேளச்சேரி இப்போதெல்லாம் மாலை நடைக்கு லாயக்கற்ற அபாயகரமான இடமாகிவிட்டது. முன்பெல்லாம் அசோகமித்திரன் சைக்கிளில் தென்படுவார். கையசைத்தால் சில சமயம் சைக்கிளிலிருந்து இறங்கி இரண்டு வார்த்தை அளவளாவிவிட்டுப் போவார். ஜெயந்தனைப் பார்த்தால் பேசிக்கொண்டே நடக்கலாம். இப்போதெல்லாம் இளம் கவிகளிடம் சிக்கிகொண்டுவிடுகிறேன். நடுரோட்டில் எழுநூறு பக்க நோட்டைக்காட்டி அங்கே அப்போதே வாசிக்கவேண்டும் என்று அடம்பிடிப்பார்களோ என்ற பாவனையில் பேசுவார்களா நமக்கு அஸ்தியில் ஜுரம் காணும். வேறு சிலரோ எனக்கு உலகத்திலேயே பிடிக்காத கேள்வியான உங்கள் நாவலை எப்போது முடிப்பீர்கள் என்று கேட்டு என்னை பதற்றத்துக்கு உள்ளாக்குவார்கள். என்னிடமும் சில குயுக்திகள் உண்டும். இளம்கவியை பார்த்தவுடனேயே நான் கவிதை விமர்சனம் எழுதினால் ஃபூக்கொ, தெரிதா என்றெல்லாம் வருகிறதா யார் படிக்கிறார்கள் என அலுத்துக்கொள்வேன். இன்றைக்கு மாம்பழ வண்டியைப் பார்த்து முகத்தை திருப்பி நின்றுகொண்டேன். கவி விடுவதாயில்லை. நீலம் மாம்பழம் ஒன்றை வாங்கி துளையிட்டு உறிஞ்சி சாப்பிட ஆரம்பித்தேன். அவருக்கும் ஒரு மாம்பழத்தைக் கொடுத்தேன். நீலம் கவிதையை மறக்கடிக்க செய்துவிட்டது. சாப்பிட்டு முடித்த உடனேயே அவர் சார் ஒரு உதவி என்றாரா எனக்கு பகீரென்றது. முடியாது என்றால் விடவா போகிறார்? சொல்லுங்கள் என்றேன். மொட்டைமாடிக்கூட்டத்தில் போன மாதம் உலகின் தலை சிறந்த முதல் வரிகள் என்ற தலைப்பில் பேசினீர்களல்லவா அதை நான் மிஸ் பண்ணிட்டேன். நீங்க தயவு செய்து அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த வரியை சொல்ல முடியுமா? சொன்னால் உடனடியாக வீட்டுக்குப் போய்விடலாமா. என்ன சார் நீங்க, நிச்சயமா. எனக்குப் பிடித்த முதல் வரி: I am pretty much fucked up.
-
வன்முறை, அபத்தம், அர்த்தமின்மை

மது என்ற அப்பாவி ஆதிவாசி இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டதைப் பற்றி கட்டுரை எழுதச்சொல்லி ஆங்கிப்பத்திரிக்கை ஒன்றிலிருந்து கேட்டார்கள் இரண்டு முறை எழுத உடகார்ந்தும் என்னால் எழுத இயலவில்லை. ஆதிவாசிகளையும் காடுகளையும் நாம் ராமாயண, மகாபாரத காலம் தொட்டு நடத்தி வரும் முறை, வெர்ரியர் எல்வினால் உருவாக்கப்பட்ட ஆதிவாசிகள் நலக் கொள்கை, ஆதிவாசிகளுக்கு காடுகளின் மேல் இந்திய சட்டம் சார்ந்து கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் அவை எவ்வாறெல்லாம் நடைமுறையில் ஏமாற்றப்படுகின்றன - என்பதையெல்லாம் விளக்கி வரலாற்றுபூர்வமான சமூகவியல் பார்வையில் மதுவின் மேல் நடந்த வனமுறைக்கான சூழல்களை rationalaise செய்து எழுதிவிட்டால் அந்த வன்முறையின் தன்மை என்ன என்று விளங்கிவிடுகிறதா? இது போலவே விழுப்புரத்தில் தலித் கும்பத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட வன்முறை நில அபகரிப்பு, நிலவுடமை, சாதிகளிடையேயான வன்முறை என பகுத்துக் காட்டிவிட்டால் இந்த வன்முறைக்கு எதிரான மனநிலையை உருவாக்கிவிடமுடியுமா?  சிரியாவில் நடக்கும் போர் புகைப்படங்களில் வெள்ளைப்பொதிகளாக வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் சடலங்களுக்குப் பின்னுள்ள வன்முறையை என்னவென்று புரிந்துகொள்ள? இந்த நிகழ்வுகளைப் பற்றி படிக்கும்போதெல்லாம் எழுத விழையும்போதெல்லாம் ஒருவிதமான திகைப்பும், திகிலும், அருவருப்பும், அவமானமுமே, கையாலாக கோபமுமே என்னை ஆட்கொள்கின்றன. I go blank in the face of a hermeneutic failure.  சகிக்க இயலாத அபத்தமும், அர்த்தமின்மையும் என்னைச் சூழ்கின்றன. காஃப்காவும், காம்யுவும், பெக்கட்டும் செய்ததும் போல வன்முறையின் அபத்தத்தை கூர்மைபடுத்திச் சொல்லும் படைப்புகளை எழுத முயற்சிக்கலாம். ஆனால் அவை யாருடைய மனசாட்சியை உலுக்கும்? நீட்டப்பட்ட துப்பாக்கிகளை எதிர்கொள்ளும் சிரியாவின் குழந்தையாய், கைகள் பிணைக்கப்பட்ட மதுவாய், முகம் சிதைக்கப்ப்ட்ட சிறுமியாய் நம் சுயத்தை சிதைத்துக்கொள்ளலாம். அப்போதும் அபத்தமே எஞ்சி விஞ்சி நிற்கும்.

துறவறத்தின் நிறுவனங்களும் சமூக அதிகாரமும்

ரமானுஜத்தின் ‘சந்நியாசமும் தீண்டமையும்’ நூலை வாசித்து முடித்தபோது, அந்த நூல் துறவறம் நிறுவனமயாகும்போது என்ன விதமான சமூக அதிகாரத்தை இந்திய சமூகத்தில் கைப்பற்றுகிறது, தீண்டாமை என்ன விதமான சமூக கையறுநிலைக்கு சில ஜாதிகளைத் தள்ளுகிறது என்ற வரலாற்றுப் பார்வையைக்கொண்டிருக்கவில்லை எனவே இது மிகவும் பிழைபட்ட நூல் என்ற எண்ணம் தோன்றியது. ராமனுஜத்தின் நூலை விமர்சிப்பதற்கான குறிப்புகளை எடுத்து முடித்த நேரத்தில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதியின் மறைவுச் செய்தி இன்று வந்தது. துறவறத்தை நிறுவனமயப்படுத்துவதற்கும் அதன் மூலம் சமூக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் இந்திய சமூகம் ஏன் அனுமதிக்கிறது துறவறம் ஏன் அதிகாரமற்ற நிலையாக மாறுவதில்லை என்ற கேள்விகளுக்கு காஞ்சி சங்கர மடத்தின் வரலாற்றையும் அதன் நடைமுறைச் செயலபாடுகளையும் ஆராய்வதன் மூலம் ஒருவர் ராமனுஜத்தின் புத்தகத்திற்கு முற்றிலும் புதிய கோணத்திலிருந்து எதிர் எக்கு எழுத முடியும். பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ மடங்களின் வரலாறுகளும் நமக்கு பல புதிய பார்வைகளை வழங்கலாம். ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா, ஶ்ரீரவிசங்கர் போன்ற உருவாக்கியிருக்கும் நிறுவனங்களும் நமக்கு துறவறம் கைப்பற்றும் சமகாலவரலாற்றினை நமக்கு சொல்லும். துறவறம் என புனிதப்படுத்தப்பட்ட மதக் கருத்தாக்கத்தின் ஒரு தளமே ஜாதீயம் அதை மட்டுமே வைத்து ஜாதீயக்கட்டுமானத்தை அணுகியிருப்பது ராமானுஜத்தின் பிழை; அது சமகாலாத்திய வரலாறுகளாலும் மானுடவியல் தரவுகளாலும் சரிசெய்யப்படவேண்டியது.

மு அருணாசலம் எழுதிய தமிழ் வரலாறு பதினாறாம் நூற்றாண்டு நூலில் ‘சைவ சந்நியாச பத்ததி’ என்ற நூலைக் குறிப்பிடுகிறார். அதில் சந்நியாசம் மேற்கொள்ளளும நெறி சைவர்களுக்கு கிடையாது என ஸ்மார்த்தர்கள் வாதிட்டதால் அதை எதிர்த்து இந்த வடமொழி நூல் இயற்றப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.சைவ மடங்களோ பதினைந்தாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் தோன்றிவிட்டன. அந்த விவாதங்களை கவனிக்கும்போது தனி மனித, ஜாதிய, குடும்ப நெறியாக அறியப்பட்ட சந்நியாசத்திற்கும் துறவின் அறமாக அறியப்பட்ட நியதிகளுக்குமான வேறுபாடுகள் முற்றிலும்  அழிந்துபோய்விட்டன என்ற முடிவுக்கு வரலாம். சங்கர மடங்கள் நிறுவப்பட்டபோதே இந்த வேறுபாடுகள் இல்லாமலாகிவிட்டன என்பதும் இன்னொரு வாதம்.  

மேலும் அஸ்வகோஷர் எழுதிய புத்த சரிதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாட்ரிக் ஓலிவில் (ராமானுஜம் தன்னுடைய புத்தகத்தின் வாதத்திற்கு உறுதுணையாக இருப்பதாக குறிப்பிடும் மூன்று கல்வியாளர்களில் ஒருவர்- மற்ற இருவர் வீணா தாஸ் மற்றும் சுந்தர் சருக்கை) அதன் முன்னுரையில் அஸ்வகோஷர் பார்ப்பன வேதாந்தியாக இருந்து பௌத்தத்தை தழுவியவர் எனவே அவர் புத்தரின் துறவறத்தை பார்ப்பன சந்நியாச நெறியாக வித்தியாசமின்றி முன்வைக்கிறார் என்று பனுவல் சான்றுகளோடு முன்வைக்கிறார். எனவே அஸ்வகோஷரின் காலமான ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்த வேறுபாடு இல்லை எனவும் யூகிக்கலாம்.


தாஸ்த்தோவ்ஸ்கி -கெட்ட செய்தி
-
தாஸ்தோவ்ஸ்கியை இப்போதெல்லாம் படிக்கையில் கடும் எரிச்சலே ஏற்படுகிறது. அதுவும் தண்டி தண்டியாய் வாங்கி வைத்திருக்கும் தமிழ் மொழிபெயர்ப்புகளை (கரமசோவ் சகோதரர்கள், அசடன்) பார்க்கும்போது பேசாமல் எடைக்கு எடை போட்டு பேரீச்சம்பழம் வாங்கிவிடலாமா என சம்சயம் உண்டாகிறது. பிரச்சினை மொழிபெயர்ப்புகளிலில்லை; தாஸ்த்தோவ்ஸ்கியிடம்தான். ஐரோப்பிய நாவல் இலக்கியத்தின் உச்சம் தாஸ்த்தோவ்ஸ்கிதான் என மிகைல் பக்தின் நிறுவியதில் என்ன ஓட்டை என மனம் ஆராயத்தலைப்படுகிறது. நபகோவ் தாஸ்தோவ்ஸ்கியின் நாடகீய கதை சொல்லலுக்கும் கிறித்தவ நோக்கிற்காகவும் சாடுவது சரிதான் என நான் மண்டையை ஆட்டிக்கொண்டிருக்கிறேன். இருபது வயதுகளில் விழுந்து விழுந்து படித்த தாஸ்த்தோவ்ஸ்கிக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் ஒவ்வாமை ஏன் என்பதற்கு என்னிடம் ஒரே ஒரு விளக்கம்தான் இருக்கிறது. தாஸ்தோவ்ஸ்கிக்கு வாழ்க்கையின் புதிர்களை புதிர்களாகவே அடர்த்தியாக்கத் தெரியவில்லை; அப்பா கரம்சோவ் போன்ற எதிர்மறைக் கதாப்பாத்திரமாகட்டும் மிஷ்கின் போன்ற களங்கமில்லா கதாபாத்திரமாகட்டும் அவர் அவர்களை ஒருவகையான இறையியலுக்குள் கொண்டுவந்துவிடுகிறார்; புதிர்கள் அவிழ்ந்துவிடுகின்றன. அதன் பொய்மை தாஸ்த்தோவ்ஸ்கியின் கடவுளைப் போலவே நம்மைத் தாக்கும்போது நாம் நிலைகுலைந்து போகிறோம். அந்த அடிநாத அல்லேலூயா ஆமோதிப்பை உதறிவிடும்போது தாஸ்த்தோவ்ஸ்கி நமக்கு கெட்ட செய்தியாகவே வந்து சேருகிறார்.

ஜோ (நானாக வைத்த  பெயர்) ஒரு தெருவோர தீர்க்கதரிசி. நீங்கள் அவரை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் முரசொலி மாறன் அமைத்த, பாதசாரிகள் தெருவைக் கடக்க உதவும் பாலத்தின் அருகில் பார்த்திருக்கலாம். ஜாடாமுடியும், தாடி மீசையுடன் அழுக்குத் தோள்ப்பையுமாக வதங்கிக் கிடப்பார். பாலத்தின் மேலேறி சிலசமயம் ஏதேதோ ஆரூடங்களை உரக்கக் கத்துவார். என்னுடைய அலுவலகத்திற்கு அருகிலுள்ள இடம் என்பதால் அவரை அடிக்கடி பார்க்க நேரிடும். ஒரு முறை என்னிடத்தில் பதினேழு ரூபாய் கேட்டார். கொடுத்தேன். அதிலிருந்து ஏதோ ஒரு எண்ணிக்கையில் பணம் கேட்பார். கூடுதல் குறைவாகக் கொடுத்தால் வாங்கமாட்டார். நாற்பத்தி ஒன்பது ரூபாய் என்றால் சரியாக நாற்பத்தி ஒன்பது தர வேண்டும் ஐம்பது ரூபாய் கொடுத்தால் வாங்கமாட்டார். அருகாமையிலுள்ள பீடாக்கடையில் வட இந்தியர் கூட்டம் அள்ளும்; கார்களை நிறுத்திவிட்டு பீடா வாங்குவார்கள். அவர்களுக்கு ஜோ ஒரு பெரிய ஜோதிடர், தீர்க்கதரிசி, மகான், மாயாவி, மந்திரவாதி என பலவிதமான நம்பிக்கைகளுண்டு. அவர்கள் நூறு, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையெல்லாம் அவருக்கு தருவார்கள் அவற்றையெல்லாம் வாங்கி அவர்களை நோக்கி வீசி எறிவார் அவர்கள் அவற்றை பயபக்தியுடன் பொறுக்கிக்கொண்டு போவார்கள். மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு அவருக்கு பங்க் கடையில் டீ வாங்கிக்கொடுத்து நானும் அவரோடு நின்று குடித்தேன். அதிலிருந்து அவருக்கு என்னிடத்தில் மேலும் நெருக்கம் உண்டானது என நான் நினைத்தேன். போன மாதம் என்னிடத்தில் மடித்த காகிதம் ஒன்றைக் கொடுத்து அதை வாசிக்கும்போது எனக்கு அட்டமாசித்தி கிடைக்கும் என்றார். அதன் பிறகு அவரை நான் பார்க்கவேயில்லை. இன்று அவர் இறந்துவிட்டதாக அறிந்தேன்.வருத்தமாக இருந்தது. அவர் கொடுத்த காகிதத்தைப் பிரிக்காமலேயே பத்திரமாக வைத்திருப்பதும் நினைவுக்கு வந்தது.
-
பெயரில் என்ன இருக்கிறது?

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு என்னுடையது போன்ற முழ நீளப் பெயர்களை வைக்கலாகாது என்றே சிபாரிசு செய்வேன். சிறு வயதில் என்னுடைய பெயரை எழுதுவற்குள் தாவு தீர்ந்துவிடும். வீட்டில் சுரேஷ் என்று கூப்பிடுவார்களா அதைச் சுருக்கி உன் பெயரென்ன என்று கேட்டால் சீ என்று சொல்வேன். சீ என்பது நல்ல பெயர் என்பதே எனக்கு இன்றைக்கும் என் அபிப்பிராயம். மத அடையாளங்களில்லை; நாணத்தோடும் சொல்லலாம் வெறுப்பாகவும் உமிழலாம் என பல உணர்ச்சிகளுக்கு இடம் தரக்கூடிய சப்தம். நீட்டியும் முழக்கலாம் குறுக்கியும் மிரட்டலாம். அம்மா இனிமையாக சீப்பா என்று கூபிடுவார்களா அதன் வாத்ஸ்லயத்திற்கு இணையான இசையொன்றை நான் கேட்டதில்லை. அர்த்தமற்ற ஒற்றை எழுத்துப் பெயரெனில் அதற்கான அடையாளத்தை பெயர்கொண்டவரின் வாழ்க்கை தனித்துவமாய் வழங்கிவிடும். அர்த்தமுள்ளதுதான் வேண்டும் என்றால் பூ,கோ என்று தமிழில்தான் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன!

மும்பையில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணி இந்தியாவின் அரசியல் நனவிலி கம்யூனிசத்தால் தாக்கம் பெற்ற விவசாயிகளும் பழங்குடி மக்களுமே என்பதை மீண்டுமொரு முறை நமக்கு உணர்த்துகிறது. நனவிலி வலிமை வாய்ந்தது; திடீரென மேலெழுந்து வந்து தன் இருப்பை அறுதி செய்ய வல்லது; அழிவில்லாதது. இந்திய அரசியலின் நனவாக இன்றைக்கு பாப்புலிசமும் கார்ப்பரேட் நலன்களையும் கூடவே அதன் ஊழல்களையும் கட்டிக் காப்பாற்றும் கடிகளின் ராணுவத்தன்மையும் சேர்ந்தமைகின்றன. இந்திய அரசியலின் நனவும் நனவிலியும் எதிரெதிர் துருவங்களாய் அமைந்திருப்பது நம் சமகாலம். இதில் கலைஞர்கள் அரசியல் நனவிலியோடுதான் தங்களை அடையாளப்படுத்திகொள்வார்கள்.

இயற்கையின் நியதி, காலத்தின் போக்கு ஆகியவற்றை அறம் என அடையாளப்படுத்துதல் தத்துவத்தில் பெரும் பிழை. உணவுச் சங்கிலியால் ஒன்றையொன்று தின்று வாழ்வதற்காகவும் வல்லவன் வாழ்வதற்கும் வலிமையற்றவன் வம்சாவழியற்று மறைந்து போவதுமாக் இயற்கை அமைக்கப்பட்டிருப்பது டார்வின் நமக்குக் கற்றுக்கொடுத்ததுதான்; ஆனால் அறம் இயற்கையின் நியதி ஒட்டி அமையலாகாது. இயற்கையின் நியதியை எதிர்த்தே மனித அறம் உருவாக்கப்படுகிறது; பின்பற்றப்படுகிறது.  அற விழைவு என்ற விழைவு செயலின்மைக்கு இட்டுச் செல்லாது அது மேம்பட்ட சமூகச் செயலுக்கே இட்டுச் செல்லும். இன்று ஜெயமோகன் வெண்முரசின் பதினேழாவது நாவலான ‘இமைக்கணத்தின்’ முதல் அத்தியாயம் தியானிகன் என்ற புழுக்கும் பிரபாவன் என்ற சிறு பற்வைக்கும் நடக்கும் உரையாடலாக தொடங்கியிருக்கிறது. கதை உணவுச்சங்கிலியின் கால ஓட்டத்தை அறம் என நிறுவுகிறது இது அடிப்படையில் பிழைபட்டது ஒருவகையான அசட்டு Ayn Randism. தவிர, இயற்கையைப் பற்றிய முழு அறிவும் கூட நமக்குக் கிடையாது என்பதும் கவித்துவ நோக்கு/ இலக்கிய பார்வை என்பது வேறு என்பதும் கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியவை. டார்வினிய வல்லவன் வாழ்வான் கோட்பாட்டைப் பற்றி ‘புலியும் மானும்’ என்று கவிதை எழுதிய ஶ்ரீஅரவிந்தர் வலிமையான புலிகள் அருகிவிட்டனவே பலகீனமான மான்கள் பல்கிப் பெருக்கியிருக்கின்றனவே என்று கேள்வி எழுப்பினார். அது ஒரு கவியின் பார்வை; மானுட யத்தனமான அற விழைவுக்கு வித்திடுவது. ஜெயமோகனின் பதினேழாவது நாவல் ஆரம்பிக்கும்போதே சறுக்கிவிட்டதே..

மண்ட்டோவின் பிரார்த்தனை
    —-
“அன்புள்ள இறைவனே, இந்த பிரபஞ்சத்தின் ஆசானே,
இரக்கமுள்ளவனே, கருணையுள்ளவனே!
பாவங்களில் மூழ்கிக்கிடக்கும் நாங்கள்
உன் அரியாசனத்தின் முன் மண்டியிட்டு
கடவுள் பற்று கொண்ட குலாம் ஹசன் மண்ட்டோவின்
மகனான, சாதத் ஹசன் மண்ட்டோவை உன்னிடம் அழைத்துக்கொள்ளுமாறு
மன்றாடி வேண்டிக்கொள்கிறோம்

அவனை உன்னோடு அழைத்துக்கொள் இறைவனே!
நறுமணங்களில் இருந்து விலகி தூய்மையற்றதைத் தேடி ஓடுகிறான்
பிரகாசமான சூரிய ஒளியை வெறுத்து குழப்பமான இருண்ட பாதைகளைத்
தேர்ந்தெடுக்கிறான் நிர்வாணத்தையும் அவமானமற்ற உணர்வுகளையும்
கண்டு பிரமித்துபோகும் அவன் நாணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து
அலட்சியப்படுத்துகிறான் இனிமையானதை வெறுத்து
கசப்பான பழத்தை ருசி பார்க்கத்
தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான்
குடும்பப்பெண்களை ஏறெடுத்துப் பார்க்காத அவன்
வேசிகளோடு இருக்கும்போது ஏழாவது சொர்க்கத்தில் இருக்கிறான்
தெளிந்த நீரோட்டத்தின் பக்கம் போகாதவன் சகதியில் நடக்க விரும்புகிறான்
மற்றவர்கள் அழும்போது அவன் சிரிக்கிறான்
மற்ற்வர்கள் சிரிக்கும்போது அவன் அழுகிறான்
பாவங்களால் கருமையாக்கப்பட்டிருக்கும் முகங்களை
அக்கறை கொண்டு கழுவி விட்டு உண்மையான
முகங்களைப் பார்க்க விரும்புகிறான்

உன்னை எப்போதும் நினைத்ததில்லை அவன்
ஆனால் சாத்தானை எப்போதும் பின்தொடர்ந்துகொண்டிருக்கிறான்
முன்பு ஒரு முறை உன் அதிகாரத்திற்கு
கட்டுப்பட மறுத்த அதே தேவதூதன்தான் அவன் “

-சாதத் ஹசன் மண்ட்டோ - தமிழில் ராமாநுஜம்

எஸ்.என். நாகராஜன் பேட்டியை ஆர்வமாக வாசித்தேன். அவரை நான் கோவை ஞானியின் வீட்டில்  சில முறை 1980 களில் சந்தித்திருக்கிறேன். முதல் சந்திப்பிலேயே எடுத்த எடுப்பிலேயே யாரவன் அல்தூசர் எனக்கு மார்க்சிசம் சொல்லிக்கொடுப்பதற்கு என்று பெருங்குரலில் சண்டையிடத் தொடங்கினார், நான் ஞானியின் அழைப்பின் பேரில் அல்தூசர் பற்றி உரையாற்றிவிட்டு வந்திருந்தேன். நாகராஜன் என் உரையைக்  கேட்க வந்திருக்கவில்லை அப்படியென்றால் எதற்காக என்னிடம் சண்டையிடுகிறார்  என் ஆச்சரியமாக இருந்தது. பின்னர் சில கூட்டங்களில் அவர் ஆவேசமாக பேசுவதைக் கேட்டு அவர் பேசும் பாணியே அதுதான் என தெரிந்துகொண்டேன். இண்டியன் சயன்ஸ் காங்கிரஸில் ( எனக்கு சம்பந்தமில்லாதது என் நண்பர்களுடன் கலந்துகொண்டது) நாகராஜன் பேசுவதைக் கேட்டபோது அவர் வேறொருவராக எனக்குத் தென்பட்டார். நம் (ஆழ்வார்கள் உள்ளிட்ட)சிந்தனைகளையும்  மார்க்சீயத்தையும் இணைக்கவேண்டும், அன்பு வழி, சூழலியல் ஆகியன குறித்து அவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக சொல்லி/எழுதி வருவதில் எந்த மாற்றமுமில்லை. அவருடைய அன்பு வழி என்பது மட்டும் ( காலம் இதழுக்கு அவர் கொடுத்த பேட்டியில்  மலையகத் தமிழர்களுக்கு ஏன் ஆயுதம் கொடுக்கப்படவில்லை என்ற அவருடைய கேள்வி உட்பட) எனக்கு என்ன என்று புரிந்ததே இல்லை.

வெகுஜன தமிழ் சினிமா politically correct நிலைப்பாடுகளை கதையாக்கி, காட்சிப்படுத்தி, உணர்ச்சிகரமாக்கி, நாடகீயமாக்கி (இதற்கு பெண்ணுடலை போகப்பொருளாக்குதல், பெண்ணை ஆணுக்கு தாழ்ந்தவளாக சித்தரித்தல் ஆகியன மட்டும் விதிவிலக்கு) கல்லா கட்டுவதில் தேர்ச்சி பெற்றது. சமூகத்தின் அரசியல் நனவிலிக்கு வடிகாலாக அமைந்துவிடுவதும் கூட. படம் பார்க்கையில் பொங்கிவிட்டு வீட்டுக்கு வந்து குப்புறப்படுத்து தூங்கிவிடலாம் பாருங்கள்.


கழுத்து வலி

கடைசியில் மருத்துவர்கள் என் கழுத்து வலிக்கு காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள். "சார், உங்களுக்கு உட்காரவே தெரியவில்லை." "வோ!" "கை வைத்த நாற்காலியில்தான் எப்போதும் உட்கார வேண்டும் ஆனால் முழங்கைகள் நாற்காலியின் கைகளில் அழுந்தக்கூடாது. முதுகுத்தண்டு நேராக இருக்கவேண்டும் ஆனால் நாற்காலியின் முதுகு கழுத்தளவு உயரமாக இருக்கக்கூடாது. முதுகுக்கு தலையணை பயன்படுத்தலாம் ஆனால் தலையணை மிருதுவாக இருக்கக்கூடாது. கால்களை உயரத்தில் வைக்கவேண்டும். மேஜைக்கடியில் சின்ன ஸ்டூல் போட்டுக்கொள்ளலாம். பார்ப்பதற்கு குத்த வைத்து உட்கார்ந்திருப்பது போல இருக்கக்கூடாது. நீண்ட நேரம் எழுதுவது படிப்பது என்றிருந்தால் நாற்காலியிலிருந்து எழுந்து இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை அண்ணாந்து கூரையைப் பார்க்கவேண்டும். வெண்முரசு படிக்கும்போது முகத்தில் ஒரு இறுக்கம் வருமே அதை அப்படியே தாடைகளில் இருத்தி தலையை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் இனிமேல் படிக்க மாட்டேன் படிக்க மாட்டேன் என்று தலையை மன உறுதி ஏற்படும் வரை ஆட்டவேண்டும்." "அவ்வளவுதானா?" "இது பேசிக் பயிற்சி. அடுத்த பயிற்சி அடுத்த வாரம்." சின்னப்பையன்: "அப்பா, அண்ணாவுக்கு ஒரு டவுட்." "என்ன?" "அப்பா உனக்குத்தான் கழுத்தே இல்லியே அப்புறம் எப்படி கழுத்து வலி?"

No comments: