Sunday, September 18, 2022

கவிதை, நாடகம், குறிப்புகள்

 ஊற்றுக்கண்

—-

இதுவரை கூத்துப்பட்டறை நடிகர்கள் ‘அரவான்’ நாடகத்தை நான்கு பேர் நான்கு விதமாக நடித்துள்ளார்கள், ‘ஈரப்பதம்’ நாடகத்தை மூன்று பேர் மூன்று விதமாக நடித்திருக்கின்றனர். எட்டு நாடகங்களுக்குமே குறைந்ததாய் இரண்டு நடிப்பு வடிவங்கள் இருக்கின்றன. நேற்றைய ஒத்திகையில் மாணவர்கள் முற்றிலும் புதிய நடிப்பு விளக்கத்தை (acting interpretation) கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கான வண்டிச்சோடையை உண்டாக்கினர். நேற்று மகேந்திரன் ‘ஊஞ்சல் மண்டபம்’ நாடகத்தை என் ஆலோசனைகளின் பேரிலும் இயக்குனர் பிரேம்குமார் நடித்துக்காட்டியதை பின்பற்றியும் புத்தம் புதிய உடல்மொழியைக் காட்டி நடித்தது அபாரமான நாடகத் தருணங்களை உண்டாக்கியது. குரோட்டோவ்ஸ்கி நாடகப்பயிற்சிப் பள்ளியில் பல ஆண்டு காலம் பயின்ற ஒருவர் செய்து காட்டத்துணிவதை மகேந்திரேன் மூன்றே மாதங்களில் நுணுக்கமாகவும் நுட்பமாகவும் செய்து காட்ட முடிகிறது என்பது என்னைப் பொறுத்தவரை பேரதிசயங்களில் ஒன்று. அதற்கு இயக்குனராக இருக்கும் பிரேம்குமார் பல உடல்மொழிகளை லாவகமாகக் கையாளக்கூடிய versatile actor- ஆக் இருப்பதும் ஒரு காரணம். மாற்றொன்று கவிதை எனும் இலக்கியவடிவம் தன்னகத்தேக் கொண்டிருக்கும் ஊற்றுக்கண். 

——-


இன்று காலை 9.30 மணிக்கு லயோலா கல்லூரியில் ‘கவிதையிலிருந்து நாடகத்திற்கு’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறேன். ஆங்கில இலக்கியத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. லயோலா கல்லூரி லாரண்ஸ் சுந்தரம் ஹாலில்தான் நான் பிஹெச்டி மாணவணாக இருந்த போது வோலே சோயிங்காவின் Lion and the Jewl  நாடகத்தை லயோலா தியேட்டர் சொசைட்டிக்காக இயக்கி அரங்கேற்றினேன். இதே ஹாலில் இன்று உரையாற்றவிருப்பது அதுவும் நாடகம் பற்றி என்பது நினைவுச் சுழலில் என்னைத் தள்ளவிருப்பது. அப்போது என் கூட என் நண்பன் சாந்தன்.பி.அலெக்ஸாண்டர் இருந்தான். அலெக்ஸுக்கு எழுதிய கடிதமாகத்தான் என்னுடைய 

‘நாடகத்திற்கான குறிப்புகள்’ சிறுகதை இருக்கிறது. அலெக்ஸும் நானும் அஸ்வமேதா என்ற நாடக்குழுவைக்கூட ஆரம்பித்தோம். நான் சென்னை விட்டு எண்பதுகளின் இறுதியில் நீங்கிய பிறகு அலெக்ஸ் அந்த நாடகக்குழுவின் சார்பில் சில நாடகங்களை இயக்கி அரங்கேற்றினான்.  அவன் சாலை விபத்தொன்றில் மறைந்ததை நினைத்து நினைத்து நான் எத்தனை முறை வருந்தியிருக்கிறேன் என்று எனக்குத்தான் தெரியும். அவன் மிகப் பெரிய படகுக்கார் ஒன்றை வாங்கினான்; அதில்தான் என்னை சென்னையில் எல்லா இடங்களுக்கும் கூட்டிப்போவான். இன்றைக்கும் நான் தோரணையாக உட்கார்ந்திருக்க அலெக்ஸ்தான் என்னை அவன் படகுக்காரில் காரோட்டி அழைத்துச் செல்லவிருக்கிறான்; அவன் வாயில் பற்ற வைத்த சிகரெட் ஒன்று அலட்சியமாய் தொங்கி புகைந்துகொண்டிருக்கிறது. எப்போதும் போலவே.

தோற்பாவை நிழல்க் கூத்து கலைஞர் ஒருவருக்காக, பொம்மலாட்ட நிகழ்த்துதலுக்காக கம்ப ராமாயணத்தின் சுந்தர காண்டத்தை நவீன கவிதையாக எழுதுவதற்கான சாத்தியங்களைப் பற்றி இன்று காலை யோசித்துக்கொண்டிருந்தேன். தன்னம்பிக்கையற்ற, தன் பலம் அறியாத ஒருவர் (அனுமன்) தான் அன்பும், பிரேமையும், பக்தியும், கொண்ட பிறரொருவர் (ராமன்) பொருட்டு கடல் தாண்டும் அசகாயசூரத்தனத்தை செய்வது அதனால் வரும் இடர்பாடுகளை எதிர்கொள்வது வெற்றி பெறுவது என்பதெல்லாம் எத்தனை பேரழகு வாய்ந்தது எனத் தோன்றியது .  கடல் தாவு படலத்தில் கடவுள் வாழ்த்தில் வரும் ‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்’ என்ற ஒரு வரியை விரித்தாலே என்ன அழகான நவீன கவிதை உண்டாகும்! அதை பொம்மைகள் நிகழ்த்துவது எப்படியாக இருக்கும் என கற்பனை ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கோ கம்பன் கவிஞன், அவன் இயற்றிய ராமாயணம் கவிதை ஆனால் எல்லோருக்கும் அது அப்படியில்லையே

———

கவிச்சொல்லின் உடல்மொழி

கூத்துப்பட்டறையில் என் எட்டு கவிதா நாடகங்கள் மீண்டும் செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு மூன்று மாத கால நடிப்புப்பயிற்சி மாணவர்களால் நிகழ்த்தப்படுகிறது. ஜூலை 9 ஆம் தேதியன்று என் கவிதைகளை முதன் முறையாக கவிச்சொல்லுக்கு மட்டுமே நிகழ்த்திக்காட்டிய இந்த மாணவர்கள் இப்போது கவிச்சொல்லுக்கு மட்டுமின்றி ஒளி, வெளி, இசை, மௌனம், நடேஷின் கோட்டுச்சித்திரங்களாலும் ஓவியங்களாலும் ஆன அரூப மேடைச் சூழல் ஆகியவற்றுக்கு எதிர்வினை புரியும் உடல்மொழியை நிகழ்த்திக்காட்டும் முழுமையான நடிகர்களாக பரிணமிக்க இருக்கிறார்கள். முதல் முறை மாணவர்களின் நாடகங்களை கூத்துப்பட்டறையின் முழு நேர நடிகரான கலைச்சோழன் இயக்கியிருந்தார். இப்போது நிகழவிருக்கும் நாடகங்களை கூத்துப்பட்டறையின் இன்னொரு முழு நேர நடிகரான பிரேம்குமார் இயக்கியிருக்கிறார். ஜூலை 9 அன்று நடந்த நிகழ்த்துதல்களைப் பர்த்து இறுதியில் கருத்துரை வழங்கிய வெளி ரங்கராஜன், அஜயன் பாலா ஆகியோர் செப்டம்பர் 6 அன்று நடைபெறும் நாடகங்களிலும் கலந்து கொள்வது சிறப்பு. நானும் ஆகஸ்ட் 1 முதல் முழு நேர நடிகர்களோடும் முன்னர் இரண்டு வாரங்கள் இப்போது ஆகஸ்ட் 26 முதல் என் இந்த மாணவர்களோடு இடையறாது உழைத்து வருகிறேன்.  ஜூலை 9 ஆம் தேதி நடந்த நாடகங்களைப் பார்க்கவதவர்கள் அவற்றை யூடுபில் https://www.youtube.com/playlist?list=PLumlOa-y00Gi1WdMsN_qYR_7pQfNs2LUM பார்க்கலாம். இதிலிருந்து வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திய முழு நேர நடிகர்களின் நாடகங்களை இங்கே பார்க்கலாம் https://www.youtube.com/playlist?list=PLTmHsoyh7mz8H8yq8SQkSYp09WDoEEDjU 


மேற்சொன்ன இரண்டு நாடகங்களிலிருந்தும் வேறுபட்ட புதிய நடிப்பை, தனித்துவ உடல்மொழியை வெளிப்படுத்தும் நாடகங்களை மூன்று மாத கால நாடகப்பயிற்சி மாணவர்கள் நிகழத்தவிருப்பது பேரதிசயம். இந்த நிகழும் கலை அதிசயத்தில் கவிஞனாக, நாடக ஆசிரியனாக மட்டுமில்லாமல் நடிப்பைப் பயிற்றுவிக்கும் ஆசிரியனாகவும் கூத்துப்பட்டறை நடிகர்களோடு நான் பணியாற்றியிருக்கிறேன் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.


மேலும் பல சிறப்பு விருந்தினர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள், inmathi.com இணையதளம் நேரலையை ஒளிபரப்பவிருக்கிறது என அறிகிறேன். கூத்துப்பட்டறையின் முதல் அறிவிப்பு இங்கே.


——

ஒளி, ஓவியம், உடல், இசை, கவிதை- Mise en Scéne

————

கூத்துப்பட்டறையில் நிகழ்ந்த, நிகழவிருக்கும் என் கவிதா நாடகங்களில் ஓவியங்களையும் கோட்டுச்சித்திரங்களையும் எப்படிப்பயன்படுத்துவது என்பதற்கான ஒரு படைப்பூக்கத்தோடு கூடிய முறைமையை நடிகர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறேன். முதலில் நான்கு ஓவியங்களை மேடையின் இரு பக்கங்களிலும் பகுதிக்கு இரண்டு என பயன்படுத்தலாமென நினைத்தேன் ஆனால் மேடை சிறியதாகவும் விளக்குகளின் எண்ணிக்கை குறைவானதாகவும் இருந்ததால் இரண்டு ஓவியங்களை ஒரு நாடகத்திற்கு அதிகம் பயன்படுத்தினால் போதும் என்ற முடிவுக்கு வந்தேன். விதிவிலக்காக கார்த்தி நடித்த ‘ சாகசப்பிழை’யில் மூன்று ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓவியங்கள் நிகழ்த்தப்படும் கவிதையின் கருப்பொருளை ஒட்டியதாக இருக்கும்படி தேர்ந்தெடுக்கச் சொன்னேன். நடேஷின் ஓவியங்களில் இரண்டுவகையினை அடையாளப்படுத்தி பண்பியலான (abstract) ஓவியம் ஒன்றையும் உருவக வழக்கான ( figurative) ஓவியம் ஒன்றையும் பயன்படுத்தச் சொன்னேன். பின்னணியில் ஓடும் கோட்டுச்சித்திரங்களை கவிதை வரிகளுக்கு ஏற்ப இரண்டு வகையாகத் தேர்ந்தெடுக்கக் கற்றுக்கொடுத்தேன். ஒன்று சினிமா கோட்பாளர் ஐசன்ஸ்டைன் அமைத்துக்கொடுத்த montage இன்னொன்று ஆந்த்ரேய் தார்கோவ்ஸ்கி தன்னுடைய  sculpting in time புத்தகத்தில் விளக்கிய காட்சி அமைப்பு முறைமை. ஐசன்ஸ்டைனும்  தார்கோவ்ஸ்கியும் தங்களுடைய காட்சிப்படிமங்களுக்கான அணுகுமுறையை  ஜப்பானிய ஹைக்கூ கவிதையை வைத்து விளக்கினார்கள். 

"பழைய மடாலயம்

குளிர்ந்த நிலவு

ஓநாயின் ஊளை" 

"அமைதியான களம்

பறக்கும் பட்டாம்பூச்சி

தூங்கும் பட்டாம்பூச்சி"

ஆகிய கவிதைகள் ஐசன்ஸ்டைன் காட்சிப்படிமங்களை எதிரிணைகளாகவும் ஒன்று மற்றொன்றிற்கு வளம் சேர்ப்பதாகவும் சொன்ன கோட்பாட்டினை விளக்க ஏதுவாக இருக்கின்றன. 

தார்க்கோவ்ஸ்கியின் காட்சிப்படிமங்களோ ஒரே தளத்தில் இயங்குபவை; காலத்தின் நகர்வில் அர்த்த செறிவு பெறுபவை. Beyond the shot என்ற கட்டுரையில் தன்னுடைய பார்வைக்கு உகந்த ஹைக்கூ கவிதைகளாக இரண்டினை அவர் குறிப்பிடுகிறார்.

"அலைக்குள் நீண்டிருக்கும் தூண்டில்

மெலிதாக தீட்டப்பட்டிருக்கிறது

முழு நிலவின் ஒளியால்"

"பனித்துளிகள் விழுகின்றன

முள் நுனிகளை நோக்கி

சில அந்தரத்தில்"நான் அந்த ஹைக்கூ கவிதைகளை எடுத்து நடிகர்களுக்குக் கொடுத்து அந்த ஹைக்கூ கவிதைகளை மனதில் இருத்தி, என் கவிதை வரிகளையும் தங்களுக்கு வேண்டிய கோட்டுச்சித்திரங்கயும் ஒப்பிட்டு சித்திரங்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னேன்.  கவிதையின் வரிகள் உண்டாக்கும் அருவ மனநிலையை படைப்பூக்கத்தோடு உள்வாங்குவதற்கான ஒரு முறைமையாக வளர்த்தெடுக்கமுடியும். நடிகர்கள் பெரும்பாலும் ஓவியங்களையும் கோட்டுச்சித்திரங்களையும் representation ஆகவோ  illustration ஆகவோதான் முதலில் தேர்ந்தெடுத்தார்கள். அதாவது குதிரை கவிதை வரியில் வந்தால் உடனே குதிரை படத்தை கூடவே வைப்பது. இந்த சிந்தனை முறையை உடைப்பதற்கு நான் அரும்பாடு படவேண்டியிருந்தது. குதிரை என்று கவிதைவரியில்வந்தால் அதை வார்த்தையால் சொல்லி, உடலால் அபிநயத்து கூடவே சித்திரத்தையும் வைக்கவேண்டியதில்லை என்பதை ப்லவாறு விளக்கியபின் அவர்களின் தேர்ந்தெடுப்பு அர்த்த செறிவை நோக்கி நகர்ந்தது. இருப்பினும் நான் ஓவ்வொரு நாடகத்திற்கும் 15 கோட்டுச்சித்திரங்கள் என அவர்கள் தேர்ந்தெடுத்ததை மீண்டும் மீண்டும் சரிபார்த்து, அவற்றை ஓழுங்கு செய்வதற்கு அல்லது அதற்கான ஆலோசனைகளை வழங்க எனக்கு ஒவ்வொன்றுக்கும் பல மணி நேரங்கள் தேவைப்பட்டன. என்னுடைய அதிகாலைகளும், இரவுகளும் இதில் கழிந்தன. இது கூத்துப்பட்டறையில் தினசரி நாங்கு மணி நேரம் முதல் ஏழு எட்டு மணி நேரம் வரை செலவழித்து வீடு திரும்பியபின் செய்கிற வேலை என்பதால் என் உடல் தாங்கவில்லை என்பதே உண்மை. ஆனால் நாடக ஒத்திகைகளின்போதும் சரி, நிகழ்த்துதல்களின்போதும் சரி ஓவியம், கோட்டுச்சித்திரம், இசை, நடிகரின் உடல் மொழி, கவிதை வரி அனைத்தும் ஒளிபெற்றும் மங்கியும் கணம்தோறும் உருவாகி கரைந்து புதியதாய் அழகின் அபூர்வம் கொள்வதும் அதைப்பார்ப்பதும் துய்ப்பதும் அனந்தகோடி அனுபவம். 

 


நாடகத்திற்கான ஒளி அமைப்பும் அதற்கான நடிப்புப் பயிற்சியும்

கூத்துப்பட்டறையின் அரங்கத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஒளி அமைப்பு நாடகத்தில் முக்கியமான பங்கு வகிப்பது. கூத்துப்பட்டறைக்கு ஜூன் இறுதியில் நான் சென்றபோது அங்கே ஆறு விளக்குகளே இயங்கிகக் கொண்டிருந்தன. ஜுலை 9 நாடக நிகழ்த்துதல்களை மாணவர்கள் அந்த ஆறு விளக்குக்குகளோடுதான் நிகழ்த்தினார்கள். முழு நேர நடிகர்கள் என் நாடகங்களை நடிக்க ஆரம்பித்தபோது அரங்க காட்சி அமைப்பில் நடேஷின் கோட்டுச் சித்திரங்களையும் ஓவியங்களையும் சேர்க்க இந்த விளக்குகள் 6 விளக்குகள் போதவில்லை. பிரேம்குமார் கூத்துப்பட்டறையின் சேகர அறையிலிருந்த அத்தனை விளக்குகளையும் எடுத்து மாட்டினார். மொத்தம் 19 விளக்குகள் கிடைத்தன. அரங்கத்தின் பின்பகுதியில் கோட்டுச்சித்திரங்களை காட்டுவதால் அந்தப் பகுதியில் விளக்குகளின் ஒளி படாதமாறு இருக்குமாரும், முன்பகுதி மேடையை மூன்று கிடைக்கோட்டு பகுதிகளாகப் பிரித்து அவற்றில் ஸ்பாட் விளக்குகள் மட்டும் வரிசையாக இருப்பது போல அமைக்குமாறு நான் கேட்டுக்கொள்ள பிரேம்குமார் அவ்வாறே செய்தார். ஸ்பாட் விளக்குகளில் இரண்டு பக்கங்களில் வைத்திருக்கும் ஓவியங்களுக்காக ஒதுக்கப்பட்டன. ஸ்பாட் விளக்குகள் மேடையில் ஒளி பரப்பும்போது அவற்றின் ஓரங்கள் சிதைந்து ஒளி சிதறுவது அசிங்கமாக இருந்தது. பிரேம்குமார் விளக்குகளில் கறுப்புத் தாள்களைச் சுற்றி மேடையில் பரவும் ஒளிவட்டங்களில் ஓரங்கள் சிதைவதைத் தடுத்தார். Poor man’s telescopic spot light. காலடி விளக்குகள் இல்லை, fillers என அழைக்கப்படும் ஒளிநிரப்பிகளும் இல்லை. எனவே நிறைய blind spots  உருவாகியது; அவற்றில் நடிகர் நின்றால் முகம் ஏன் தோள் வரை கூட இருளில் மூழ்கும். நானும் பிரேம்குமாரும் மேடையில் விழும் ஸ்பாட்டின் ஒளிவட்டத்தில் நடிகர் மேற்பகுதியில் நின்றால் அது எப்படி காலடி விளக்கைப்போல செயல்படும், நடுப்பகுதி ஒளியை நடிகர் வாங்கவேண்டுமென்றால் அவர் எப்படி அரை நிலையில் நிற்க வேண்டும், உட்காரவேண்டும் அல்லது படுக்க வேண்டும், முன்பகுதி வட்ட இறுதியில் நின்றால் எப்படி முகத்தில் ஒளிபடும் என்பதை மீண்டும் மீண்டும் விளக்கிச் சொல்லிக்கொடுத்தோம். ஒரு கவிதை வரியைச் சொல்லிவிட்டு இன்னொரு கவிதை வரியை சொல்ல நடிகர் நடந்தால் அடுத்த ஸ்பாட் ஒளிக்குச் செல்ல நடிகர் எப்படி இசையின் நகர்வைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் விளக்கினேன்.  ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஆறு நாட்கள் நாடகவிழா தொடங்க இருந்த நிலையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஏற்பட்ட short circuit-டினால் ஒன்பது பத்து விளக்குகள் பொட்டித் தெறித்துவிட்டன. பிரேம்குமார் கடும் நெருக்கடியில் மீண்டும் விளக்குகளை நிர்மாணித்தார்; நான் தீர்மானித்திருந்த ஒளி அமைப்பு கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது ஆனால் பத்துவிளக்குகள்தான் இப்போது இருக்கின்றன. நிற விளக்குகள் கிடைத்தது கொஞ்சம் அதிர்ஷ்டம். மஞ்சள், நீலம், சிவப்பு விளக்குகளை நாடகத்தின் உணர்ச்சி நிலைகளுக்கேற்ப பயன்படுத்தலாம். ஓவியங்களுக்கான ஸ்பாட் விளக்குகளை மெலிதாக ஒளியூட்டினாலே போதும்; பிறபகுதிகளை ஒளியூட்டினால் ஓவியங்கள் அரை ஒளியில் மாயாஜாலம் கொள்ளும். அரங்கத்தின் தரை சிவப்பு நிறமாக இருப்பதால் ஒளிவட்டங்களிலிருந்து வரும் எதிரொளியை தவிர்க்கமுடியாது; இவை புகைப்படங்களில் சிவப்பு கோளங்களாக சிலவற்றில் அழகாக இருக்கும், பலவற்றைல் செயற்கையாகத் தெரியும் மேலும் பலவற்றில் பல்லிளிக்கும். பிரேம்குமார் மிகச்சிறந்த நாடக ஒளியூட்டுக்கலைஞர். அவரால் நடிகர்களின் நகர்வுகளுக்கு ஏற்ப ஓவியங்களையும் பொருட்களையும் நடிகர்களையும் பிரமாதமாக ஒளியூட்ட முடியும். ஒளி வாங்கி நடித்தல் மூன்றுமாத நடிப்புப் பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளில் ஒன்று. நாளை நடைபெறவிருக்கும்  எட்டு நாடகங்களில் ஒளி ஒரு கவிதாபாத்திரம் அதை இயக்குபவரும் பிரேம்குமார்.  இருப்பினும்ஊஞ்சல் மண்டபம்கவிதையில் வரும் வரியையும் நினைவில் கொள்வது நல்லது:

இந்த மேடை தவறுகள் மலிந்தது

மேடை எனும்போதே தவறுகள்

தன் போக்கில் வந்து கூடி விடுகின்றன”

——-


வாழைப்பூ

இன்று அதிகாலைக் கனவில் மூதாட்டி ஒருவர் ஒரு கூடை வாழைப்பூக்களை விற்க வர அவர் தலையிலிருந்து நான் அந்தக்கூடையை ஸ்லோ மோஷனில் இறக்கி வைக்கிறேன். நான் ஒரு கூடை வாழைப்பூக்களைப் பார்த்த பெரும் சந்தோஷத்தில் இருக்கிறேன். இது மட்டிப்பழத்தின் பூ, இது நேந்திரம்பழத்தினுடையது, இது கற்பூரவல்லி, இது செவ்வாழை இது குலை தள்ளிய வாழையின் நுனியிலிருந்து எடுத்தது இது குலைதள்ளாத வாழைப்பூ என ஓவ்வொன்றையும் பேரதிசயத்தைக்கண்ட ஆச்சரியத்துடனும் உவகையுடனும் விவரிக்கிறேன். மூதாட்டியின் கண்களில் பெரும் கருணை வாத்சல்யம் கொள்கிறது. நான் வாழைப்பூ ஒன்றை எடுத்து அதன் கூம்பு வடிவ இதழ்களை உரித்து உள்ளே கற்றையாக இருக்கும் சிறு பூக்களை வருடி அதன் மேலுள்ள கண்ணாடி உதடைப் பிரித்து இப்போதுதானே இதில் தேன் இருந்தது அது எங்கே எப்போது ஆவியாகிப் போயிற்று என மூதாட்டியிடம் வினவுகிறேன். அவள் தன் துளையிட்டுத் தொங்கும் நீண்ட காது மடல்களிகளின் பாம்படம் ஆட பழிப்பு காட்டுகிறாள். நான் கலவரமடைந்தவனாய் ‘ஈரப்பதம்’ கவிதா நாடகத்தில் வரும் ‘வடிவம் செயலைப் பிரதிபலிக்கிறது என்றாலும் அது பரிணாம வளர்ச்சியைச் சொல்வதில்லை’ எனப் பரிதாபமாகச் சொல்கையில் முழிப்பு தட்டிவிட்டது. நான் இப்போது எழுதி முடித்து திருத்திக்கொண்டிருக்கும் பதினோரு கவிதா நாடகங்கள், “இருந்தும், இல்லாமல் போவது”, வாழைப்பூவின் வடிவத்தைக்கொண்டது என எனக்கு பிரக்ஞை கூடியது. இப்படித்தான் இலக்கிய வடிவங்கள் என்னை வந்தடைகின்றன. 


—-

ஒரு கணம் நானென்று உருவாகி மறு கணம் நானென்பது ஏது என்பதாக

——

கனவில் வாழைப்பூக்களை இது நேந்திரம்பழத்தினுடையது, இது மட்டிப்பழத்தினுடையது இது செவ்வாழையுடையது எனப் பிரிக்கத்தெரிந்த எனக்கு நனவில், தினசரி அனுபவத்தில் இரண்டு வாழைப்பூக்களைக் காட்டினால் எது எந்த வகை வாழைமரத்தைச் சேர்ந்தது என சொல்லத் தெரியாது. அதுபோலவேதான் கவிதையினுள் இருக்கும் உணர்வுவெளியும் கனவின் மொழி போலவே இயங்குகிறது. நாடக நடிகர்கள் இந்த  கவிதாநாடகங்களின் வழி தாங்கள் நனவில் அறியாத உணர்வு நிலைகளை புரிந்துகொள்கிறார்கள்; அவை நம் சமகால சிக்கலான உணர்வு/உணர்ச்சிநிலைகளாக இருக்கின்றன; அவற்றை நடிப்பில் வெளிப்படுத்த  அவர்கள் புதிது புதிதாக உடல்மொழிகளை உண்டாக்கவேண்டியிருக்கிறது. அந்த உணர்ச்சிகளை அவர்கள் வெளிப்படுத்த அதன் அர்த்தம் நழுவிப்போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு கணம் நானென்று உருவாகி மறு கணம் நானென்பது ஏது என்பதாக கரைந்து கரைந்து நாடகம் நிகழ்கிறது. புதிய புதிய உடல்மொழிகளில் வெவ்வேறு வடிவங்களில் என் எட்டு கவிதா நாடகங்கள் நிகழ்த்திய கூத்துப்பட்டறையின் முழு நேர நடிகர்களுக்கும் 3 மாத கால நடிப்புப்பயிற்சி மாணவர்களுக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும். அவர்கள் பெரும் செல்வமும் அழியாப்புகழும் ஈட்டுவார்களாக.

—-

கடற்கரையோர கல்லறைக்கூரையில் தேங்கிய மழைநீர் அலையடிக்கிறது தானும் ஒரு கடல் என்ற நினைப்பில்

——

என்னுடைய முன்னாள் மாணவி ஒருவரின் அழைப்பின்பேரில் நேற்று நேரலையில் பெங்களூருவில் இருக்கும் நடனக்குழு ஒன்றிற்கு கவிதைகள் வாசித்தேன்.  சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட என் நாடகங்களில் ஒன்றானசாகசப்பிழையில் வரும்கடற்கரையோர கல்லறைக்கூரையில் தேங்கிய மழைநீர் அலையடிக்கிறது தானும் ஒரு கடல் என்ற நினைப்பில்என்ற வரியை மிருணாளினி தாமோதரன் நான் வாசித்து முடித்தவுடன் பத்து நிமிடங்கள் அபிநயத்து நடனமாடிக் காட்டியது அபாரமாக இருந்தது. சொக்கிப்போய் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். கவிதைகள் வாசித்து முடித்தபின் நிகழ்ந்த உரையாடலில் வாழைப்பூக்கள், ஒளி பரவும் சருமம், கண்ணிமைகளின் மன அசைவுகள், சச்சிதானந்த நிமிடங்கள், தொங்கு சீலைகளும் திரைச்சீலைகளும் கொசுவலைகளும்  என சில நாடகக்குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டேன். அவர்கள் என் புதிய கவிதாநாடகங்கள் சிலவற்றை நவீன நடனங்களாக நிகழ்த்துவதைப் பரிசீலிக்க விரும்புவதாகச் சொன்னார்கள். நீங்கள் எப்போதுமே இப்படித்தான் பேசுவீர்களா இல்லை உரைகளின்போதுதான் இப்படி கவிதையே பேச்சானது போல பேசுவீர்களா என ஒருவர் கேட்டார். அவர் அப்படிக் கேட்டபோது அவர் விழிகள் அகல விரிந்திருந்ததால் எனக்குப் பொய் சொல்ல மனம் வரவில்லை. 

——

குன்னிமுத்துக்களைத் துறந்தது

———


நான் சிறுவனாக இருந்தபோது சோழவந்தான் தென்கரை அருகே உள்ள ஆற்றங்கரையிலுள்ள அணைப்பட்டி அனுமார் கோவிலுக்குப் போனோம். கையால் பறிக்கலாம் என்ற அளவில் குட்டையான மாமரங்கள் காய்த்துக் குலுங்க அவற்றில் குன்னிமுத்து கொடிகளும் படர்ந்திருந்தன. ஆற்றங்கரை மணலில் மாமர நிழலில் கிடந்த குன்னிமுத்துக்களை நான் பெரும் ஆர்வத்துடன் சேகரித்தேன். அப்படி சேகரித்த குன்னிமுத்துகள் என்னிடத்தில் ஒரு கைப்பிடியளவு சேர்ந்திருந்தன; அவற்றை மற்றவர் கண்களில் படாமல் பத்திரமாக வைத்திருந்தேன். அவை என் கூடவே நேற்று வரை வந்துகொண்டே இருந்தன. லோபி காத்த செல்வம் போல அவற்றை என்றாவது எடுத்து கைவிரல்கள் வழி நழுவவிட்டு வேடிக்கை பார்ப்பேன். கறுப்பு சிவப்பு நிறங்கள் தவிர பச்சை, வெண்மை நிறத்தாலான குன்னிமுத்துக்களும் என்னிடம் இருந்தன. நேற்று திருவோணத்தன்று அந்தியின் பொன்னொளியில் என் குன்னிமுத்துக்கள் அனைத்தையும் வீட்டு மொட்டை மாடியில் தூக்கிக்கடாசினேன்; அவற்றை தண்ணீர்விட்டு மழைநீர் போகும் தண்ணீர் குழாய்கள் வழி பெருக்கித் தள்ளிவிட்டேன். ஒரு பெரும் பாரம் இறங்கியது போல இருந்தது. குன்னிமுத்துக்களைத் துறந்தபின் புத்தம்புதியவனாய் நான் மாறிவிட்டதாகத் தோன்றினாலும் நான் ஏன் அப்படிச் செய்தேன் என்பதற்கு என்னிடம் விளக்கங்கள் ஏதுமில்லை. கவிதைகள் எழுதிதான் கண்டுபிடிக்கவேண்டும். இப்போதும் என் கைவிரல்களின் வழியே குன்னிமுத்துக்கள் நழுவிக்கொண்டுதான் இருக்கின்றன.

நெற்றிச்சுட்டி

நெற்றிச்சுட்டி போன்ற சகலமங்கலங்களும் நிரம்பிய ஆபரண கவிதை வரி ஒன்றை எழுதிவிடவேண்டும் என்ற ஆவலுடன் இன்று காலை எழுந்தேன். வானம் மழைக்கான மூடாக்கு போட்டிருக்கும் அதிகாலைகளில்தான் இந்த மாதிரியான ஆசைகள் தோன்றுகின்றன. உண்மையில் எனக்கு ஆபரணங்கள் எதுவுமே பிடிக்காது என்று நினைத்திருக்கும்போது இல்லை உனக்கு நெற்றிச்சுட்டி பிடிக்கும், லோலாக்கு பிடிக்கும், ஜிமிக்கி பிடிக்கும் என்று இணைகுரல் ஒன்று சொல்லிக்கொண்டே வருகையில் சர்வாலங்காரபூஷிதையாய் ஒரு பேரழகுப் பெண்ணின் உருவம் மனக்கண் முன் எழுந்து வந்தது. 

இருட்டால் ஒக்கிட முடியாத

சதையின் காலத்தை

மகரந்த ஒளியின் தூசு

இறுக்கிக் கட்டிய ஆபரணமாக்குகிறது” என்றொரு வரியை ‘தூசு’ நாடகத்தில் எழுதியிருக்கிறேன். 


ஆபரணம் என்பதுதான் என்ன? சதையின் காலம் என்பது என் துணிபு. 


முழு வகிட்டையும் மறைக்காமல், நடு வகிட்டின் மத்தியிலிருந்து நெற்றி நோக்கி இறங்கும் நெற்றிச்சுட்டிகள் ஏன் இவ்வளவு அழகாய் இருக்கின்றன! அவற்றை அணியும் முகங்கள் கொள்ளும் வாத்சல்யத்தினை என்ன வார்த்தைகளால் விவரிப்பது! ஆவணியின் பௌர்ணமி நிலவு இன்றொரு நெற்றிச்சுட்டியாய் வானில் துலங்கும். 

————-

முருங்கை பிஞ்செடுத்திருக்கிறது

—-

எங்கள் வீட்டிற்கு எதிரே கட்டிடவேலை நடைபெறுவதால் மேலே இரண்டாம் தளத்திலிருந்து கட்டிடத்தை மறைக்கும்படியுமான கோணலான, ஓரங்கள் கிழிந்த மஞ்சள் படுதா ஒன்றை இறக்கியிருக்கிறார்கள்; அந்தப் படுதாவின் பின்னணியில் என் வாசலில் நிற்கும் முருங்கை மரத்தின் ஒரு கிளையில் பிஞ்சுக்காய்கள் தோன்றியிருக்கின்றன. முன்பொரு தை மாதத்தில் முருங்கை பற்றி இப்படி எழுதியிருக்கிறேன்.

தைமாத முருங்கை

தன் இலைகளையெல்லாம் உதிர்த்து

பூவெடுத்து குலுங்குகிறது

சீக்கிரமே காய்களால் நிறையும் கிளைகள்

முருங்கைக்கு

இலையிருந்தால் பூவில்லை

பூவிருந்தால் இலையில்லை

காயிருந்தால் பூவுமில்லை இலையுமில்லை 

ஆவணியிலும் முருங்கை காய்ப்பதை பதிவு செய்யவேண்டும் என நினைத்துக்கொண்டேன். மஞ்சள் படுதா பின்னணியில் நீட்டிய கிளையில் பிஞ்செடுத்திருக்க உதிர்ந்தது போக சொற்ப இலைகள் காலையின் சூரிய ஒளியில் மின்ன ஒரு முழுமையுறாத அரங்கக்காட்சி கதாபாத்திரமொன்றிற்குக் காத்திருக்கிறது. சட்டென்று முருங்கையின் சிறிய இலைகளின் சௌந்தர்யம் படுதாவின் ஓரம் வழி எட்டிப்பார்க்கும் கட்டிடத்தொழிலாளியின் முகத்தினால் செறிவாகிறது. ஒரு கோணத்தில் பார்க்கும்போது பிஞ்செடுத்த கிளை அவளுடைய முதுமை கூடிய முகத்தின் கீழ் நீண்டிருக்கிறது. அரங்கத்தின் காட்சிகளும் அசைவுகளும் கூட இப்படியே தன் போக்கில் முழுமையடைகின்றன.; மாறுகின்றன; புதுமையாகின்றன. பிஞ்சுமெடுக்கின்றன.

—-

மைதானம்

ஒரு சில நாட்களுக்கு முன்பு முருகபூபதி  கோவில்பட்டிக்கு பருவ மழை ஓய்ந்தபின் டிசம்பரில் வருமாறு அழைத்தார். அதிலிருந்து கோவில்பட்டிக்குப் போய் எத்தனை வருடங்கள் ஆயிற்று என அவ்வபோது எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.  நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது செண்பகவல்லி அம்மன் கோவிலுக்குப் பின்பக்கம் உள்ள மைதானத்தில் ஹாக்கி விளையாடியது, அங்கேயுள்ள பள்ளியில் பாட்டுப்போட்டியில்தாமரை பூத்த தடாகமடிபாட்டைப்பாடி எல்லோருடைய கேலிக்கும் ஆளானது என துண்டு துண்டாய் நினைவுகள் வந்த வண்ணம் இருந்தன. செண்பகவல்லி அம்மன் நல்ல உயரமான கம்பீரமான தேஜஸ்வியாய் மனதில் அப்படியே இருப்பது ஆச்சரியமாய் இருந்தது. செண்பகவல்லிஅம்மன் கோவில் மேடான பகுதியில் இருக்கும் அதிலிருந்து ஊருக்குள் செல்லும் அக்லமான படிக்கட்டில்  அமர்ந்து கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், நான் பேசிக்கொண்டிருந்ததும் நினைவுக்கு வந்தது. அந்த மைதானம் இன்னும் இருக்கிறதா அதில் இன்னும் ஹாக்கி விளையாடுபவர்கள் இருக்கிறார்களா. மைதானமே அங்கே யார் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கிறது 

ஓட்ட லாட்டு சைக்கிள்

என்னிடம் முன்பொரு காலத்தில் ஒரு ஓட்ட லாட்டு சைக்கிள் இருந்தது. அதை நான் மிகவும் நேசித்தேன். அதில்தான் நான் முக்கியமாக வயலின் வகுப்புகளுக்கு சென்று வந்துகொண்டிருந்தேன். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தும் மேற்கத்திய இசைத் தேர்வுக்கு என் இசை ஆசிரியர் என்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார். வயலின் பெட்டியை என் முதுகில் கட்டிக்கொண்டு இசை வகுப்புகளுக்கு சைக்கிள் மிதிக்கையில்  என்றாவது ஒரு நாள் நான் காதலிக்கும் பெண் உப்பரிகையில் நின்று தன் கூந்தலை வார நான் மழையில் நனைந்தபடி அவளுக்காக காதல் கீதங்களை அவள் வாசற்படியருகே நின்று வயலின் வாசிப்பேன் என நான்  என்னைக் கற்பனை செய்துகொள்வேன். உண்மையில் என் பிரியம் என் பழைய சைக்கிளின் மீதா அல்லது அதனை உபயோகப்படுத்தும்போது எனக்கு ஏற்பட்ட மனவெழுச்சிகள் மீதா என இப்போது சரியாகச் சொல்லத் தெரியவில்லை. இன்றைக்கு எனக்கு யாராவது எனது பழைய சைக்கிளை பரிசளித்தால் அதை நான்கு பேரீச்சம்பழங்களுக்கு காயலான்கடையில் போடத் தயங்கமாட்டேன்.  நாற்பது வருடங்களுக்கு முன் நான் பார்த்த நாடகம், நான் ரசித்த கவிதை அதிலிருந்து நான் இன்றுவரை நான் மாறவேயில்லை என்று பேசுவோரெல்லாம் இது போலத்தான் ஏதாவதொரு ஓட்ட லாட்டு சைக்கிளைக் கட்டிக்கொண்டு கெட்டிதட்டிப்போய் களிம்பேறி அதனால் தானுமொரு பழம்பெருச்சாளியாய் மாறிவிட்டதை உணராது இருக்கிறார்கள். 

—-

உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறதா?

பல வருடங்களுக்குப் பின் இங்கிலாந்திலிருந்து வந்திருந்த நண்பர் நித்தியானந்தனை நடேஷின் வீட்டில் பார்த்தபோது அவருடைய பிரமாதமான நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. ஒரு முறை ஆட்டோக்காரர் ஒருவர் வண்டிச்சத்தம் பேரம் பேசும்போது நான் அவ்வளவு தூரம் வந்து உங்களை இறக்கிவிட்டுவிட்டு தனியாக வரவேண்டுமே என்றார். நித்தி உடனடியாக நாமென்ன காதலர்களா ஒன்றாகவே போய்க்கொண்டிருப்பதற்கு நீங்கள் என்னை இறக்கிவிட்டபின் தனியாகப் போகத்தான் வேண்டும் என்றார். பேரம் பேசிய ஆட்டோக்காரருக்கே சிரிப்பு தாளவில்லை. 

இன்னொரு முறை மணிமேகலை பிரசுரம் வெளியிடும் புத்தகங்களின் தலைப்பு போல - மிக அதிகமான அளவு விற்பனையாவதற்கு வாய்ப்பு உள்ள புத்தகத் தலைப்பு எது என்ற பேச்சு வந்தது. நித்தி உடனடியாகஉங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறதா?’ என்ற தலைப்பைச் சொன்னார். எல்லோருக்குமே எப்போதுமே ஒரு மாதிரிதானே இருக்கும்? அதனால் அந்த தலைப்பைப் பார்த்து புத்தகத்தை அதிக அளவில் வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நிச்சயம் பெஸ்ட் செல்லர். 


கசக்கி எறியப்பட்ட தாள்கள்

-

எனக்கு அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதவேண்டும். ஒரு சொல் மற்றொரு சொல்லுக்கு இட்டுச் செல்ல அகத்தின் ஆற்றொழுக்கு இறுதியடைகையில் நான் பேருவகை அடையவேண்டும். அப்படித்தான் இப்போதும் பெரும்பான்மையான நாட்களில் நடக்கிறது. நான் தாள்களில் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் சில நாட்களில் மனதில் நிலவொளி தகிக்காத கணங்களில் அடித்தல் திருத்தல் வந்துவிட நான் அந்தத் தாளை அப்படியே கசக்கி எறிந்துவிட்டு புதிய தாளில் முதல் வரியை மீண்டும் எழுத ஆரம்பிப்பேன். என்னைச் சுற்றி கசக்கி எறியப்பட்ட தாள்கள் ஏகமாய் குப்பை கூளமாய் பித்திற்கும் ஞானத்திற்கும்  நடுவே நடுநடுங்கிக் கிடந்த நாட்களும் உண்டு. ஆனி முத்துக்கள் நிலவொளி இன்றி பிரகாசிப்பதில்லைதானே. ஸில்வியா ப்ளாத் இப்படித்தான் தன் கவிதா வெளிப்பாடுகளுக்காய் மரணதுன்பம் அனுபவித்திருக்க வேண்டும். பாதி எழுதி கசக்கி எறியப்பட்ட தாள்களும் ரகசிய சௌந்தர்யம் கொள்கின்றன என்பதை டக்ளசின் ஓவியங்களே எனக்குச் சொல்லித் தந்தன. டக்ளஸின் ஓவியங்களில் மணல், சகதி, கசக்கப்பட்ட தாள்கள், தேநீரின் கறைபடிந்த தாள்கள், மெலிந்து நடுங்கும் தாள்கள் என பலவற்றை அவர் அவற்றின் பொருளாய தன்மைக்காக (materiality) பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். அவற்றை டக்ளஸ் ஓவியங்களில் பயன்படுத்தும்போது அவற்றின் மேல் அவர் வன்ணங்களைப் பூசும்போது அவை அபாரமான இழைநயம் (texture) பெறுகின்றன. இந்த இழைநயத்தின் கலையழகு தன் ஷூவின் இணைகயிறையும் கூட இஸ்திரி போட்டு அணியும் இங்கிலாந்தின் சார்ல்ஸுகளுக்கு எதிரானது. டக்ளஸின் ஓவியங்களைப் பார்த்தபின் எனக்கு நான் கசக்கி எறிந்த தாள்களின் மேல் எனக்கு வாஞ்சை கூடியிருக்கிறது; அவற்றின் கசங்கல் மடிப்புகளில் ஒளிந்திருக்கும் மௌனங்கள் அழியா வசீகரம் பெறுகின்றன. 

ஒரு கவியின் பயோடேட்டா

நேற்று ஒரு கவியாக படிவமொன்றை நிரப்ப வேண்டிய நிர்க்கதிக்கு ஆளானேன். ஈட்டிய பட்டங்கள், வகித்த பதவிகள், வெளிவந்த நூல்கள், கலந்துகொண்ட கருத்தரங்குகள், பயிற்றுவித்த பல்கலைக்கழகங்கள் என நீண்டு கொண்டே போன குமாஸ்தா டம்பாச்சாரித்தனங்களுக்குப் பின் படிவத்தில் இருந்த ஒரு கேள்வி என்னைத் திகைக்க வைத்தது; அது கவியாக உன் சாதனை என்ன என்று கேட்டது. படிவத்தை நிரப்புவதை கைவிட்டுவிடலாமா என்று நினைக்கையில் அதை அனுப்பிய பெண்ணின் குரலில் இருந்த மெலிதான வெட்கமும் மென் நகையும் நிழலாட தொடர்ந்து எழுதினேன். நான் வெகுகாலம் மைல்கணக்கில் என்னைச் சுற்றி அடர்ந்திருந்த பனிப்பாறைகளின் நடுவே உறைந்திருந்தேன்; பனிப்பாறைகள் கண்ணாடி போல இருந்தபடியால் அவற்றின் உள்ளிருந்து உலகைப்பார்த்தபடியே லட்சம் கவிதைகள் புனைந்தேன் அவற்றை பனிப்பாறைகளின் நொசுநொசுப்பிற்கு தின்னக்கொடுத்துவிட்டு அயர்ந்திருந்தேன். ஏதோவொரு அன்பின் தொடுகையால் பனிப்பாறைகள் கீறலிட அவற்றை சிப்பம் சிப்பமாய் சொற்களால் உடைத்தேன் ஒரு சிப்பம் ஒரு கவிதை என்பதாக பாறைகளிலிருந்து வெளிவந்து கர்க்கலா, செரவணபெலகொலா ஆகிய இடங்களில் பரிநிர்வாணியாய் நிற்கும் கோமடேஸ்வரரைப் போல என் இதயத்தின் அந்தரங்க நாளங்கள் வெளித்தெரிய நின்றுகொண்டிருக்கிறேன். என் நிர்வாண நிற்றல் ஆனால் கோமடேஸ்வரரைப் போல சமண ராணுவ ஒழுங்கில் இல்லாமல் கோணல்மாணலாய் இருக்கிறது. அன்பின் பொருட்டே என் செய்கைகள் என்ற என் தீர்மானம் சிறுமைக்கும் கேவலங்களுக்கும் உட்படுத்தப்படுகையில் நான் என் சமநில இழந்து ஆங்காரம் கொண்ட சாதாரணன் ஆகிவிடுகிறேன். ஆக ஒரு கவியின் சாதனை என்றால் என்ன என்று எனக்குத் தெரியும் அதற்கு அருகாமையில் செல்வதும் மூன்று படி ஏறுவதும் ஏழுபடி சறுக்குவதுமாய் இருக்கிறேன். அப்படியென்றால் சாதனை என்று எதுவுமில்லை என்றுதானே அர்த்தமாகிறது? இப்போது நான்இருந்தும், இல்லாது போவதுஎன்ற என்னுடைய பதினோரு தொடர் கவிதாநாடகங்களைத் திருத்தி எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்படி இதற்கு முன்னால் நான் திருத்தி எழுதுவதில் ஈடுபட்டது கிடையாது. இந்தத் தலைப்புஇருந்தும், இல்லாது போவதுசார்த்தரின் Being and Nothingness புத்தகத்திற்குக் கடன்பட்டது. எனது பனிச்சிப்பம் கரைந்து நீராகி ஆவியாகையில் என்ன எஞ்சுமோ அதை வெற்று உள்ளங்கையில் பார்ப்பதான உணர்வுத் தெளிவினை ஒருவேளை சாதனை என அழைக்கலாம். இந்த இடத்தில் நான் உங்களுக்கு இன்னொன்றையும் சொல்ல வேண்டும். கவி என்ற தமிழ்ச்சொல்லிற்கு குரங்கு என்றொரு பொருளும் உண்டும். 


யானைப் பிளிறலோடு ஒரு அதிகாலை

பதினோரு வருடங்களுக்கு முன்பு காட்டு யானைகளைப் பிடித்து அவற்றைப் பழக்கும் ஜேனு குருபர்களின் வழக்காறுகளை சேகரிப்பதற்காக நாகர்ஹோலெ தேசியப்பூங்காவுக்குச் சென்றிருந்தேன். நாகர்ஹோலெ தேசியப்பூங்காவுக்கு உள்ளே காவிரியின் மேல் கட்டப்பட்ட  காபினி அணை இருக்கிறது; யானைகளைப் பழக்குவற்கான மையமும் இருக்கிறது. ஜேனு குருபர்கள் யானைப்பாகர்களாக மைசூர் தசரா விழாவிற்கு யானைகளை அழைத்துவருவதை பாரம்பரியமாகக் கொண்டவர்கள். ஹெச்.டி.கோட்டெயில் தங்கி வனத்தினுள் பல தடவை நான் களப்பணிக்காகச் சென்றிருக்கிறேன். அப்போது என் ஜேனு குருப நண்பன் சுகுமாரின் பராமரிப்பில் இருந்த குட்டியானை கோகிலா எனக்கு பழக்கமானாள். கோகிலா துறுதுறுவென இருப்பாள் அவளுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டால் தரையில் முகத்தையும் துதிக்கையையும் புதைத்து கோபத்தை வெளிப்படுத்துவாள். பொதுவாக வளர்ந்த பெரிய யானைகள் அப்படிச் செய்வதில்லை. கடந்த நாலைந்து நாட்களாக கோகிலா, இப்போது நன்கு வளர்ந்த யானை, தரையில் முகத்தைப் புதைத்துக்கொள்கிறாளாம். சுகுமாரின் யூகம் என்னவென்றால் அவள் யாரையோ தேடுகிறாள் என்பது. அவர் கோகிலாவோடு பழகிய எல்லோரையும் கூட்டிக்கொண்டு போய் அவளிடம் காட்டிவிட்டார் ஆனாலும் தரையில் முகம் புதைத்தல் நிற்கவில்லை. சுகுமாருக்கு என் ஞாபகம் வந்து என்னை இன்று காலை ஃபோனில் அழைத்தார். நான் ஃபோனில் கோகிலா கோகிலா என்று கத்த அங்கேயிருந்து அவள் சன்னமாக, பலவீனமாகப் பிளிறினாள். கோகிலா என்னைத்தான் தேடினாளா, அல்லது யாரையாவது தேடுவதால்தான் அப்படி அழிச்சாட்டியம் பண்ணுகிறாளா என்று உறுதியாகத் தெரியவில்லை. காலையிலிருந்து கைவேலைகளையெல்லாம் விட்டுவிட்டு ஜேனு குருபர் களப்பணியின்போது எடுத்த புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த வருட மைசூர் தசராவின்போது சுகுமாரையும் கோகிலாவையும் பார்க்க வருவதாகச் சொல்லியிருக்கிறேன்.  எனக்கு இப்போது கோகிலாவைத் தேடுகிறது. நான் என் மேஜையில் முகத்தைப் புதைத்துக்கொள்கிறேன். 

No comments: