Thursday, June 18, 2026

ஜேம்ஸ் ஜாய்ஸின் “யுலிசஸ்”: பிரசுர வரலாறும் பிரசவ வேதனைகளும்




ஜேம்ஸ் ஜாய்ஸின் “யுலிசஸ்” நாவலுக்கு தீர்மானமான, ஜாய்ஸ் எழுதியதன், பிழைகளற்ற இறுதிவடிவம்  இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். “யுலிசஸ்” நாவலின் பிரசுர வரலாறு பல பிரசவ வேதனைகளால் நிரம்பியது என்றாலும் அதன் இறுதி வடிவம் ஜாய்ஸ் என்ற மேதையின், கலைநுட்பப் பிழைகளால் ஆனது. பிழைகளே மனிதத்தன்மை கொண்டவை; துல்லியம் எந்திரங்களுக்கே சாத்தியமாவது. துல்லியத்தின் பெயரால் சத்தியம் செய்யும் கடையர்கள் எந்திர மூளை கொண்டவர்கள்; கலையின் செயல்பாடு அறியா மூடர்கள் என்பதே “யுலிசஸ்” நாவலின் பிரசுர வரலாறு நமக்குக் காட்டித்தரும் பாடம்.

“யுலிசஸ்” நாவலின் பிரசுர வரலாற்றில் அடங்கியுள்ள சிக்கல்களை நாம் புரிந்துகொள்ள ஜாய்ஸ் இந்த நாவலை எப்படி வடிவமைத்துள்ளார் என்று அறிவது அவசியமாகும்.  ஜாய்ஸ் முதலில் யுலிசஸை தன்னுடைய 1906 “டப்ளைனர்ஸ்” சிறுகதைத் தொகுதியில் சேர்ப்பதற்கான இன்னொரு சிறுகதையாகத்தான் கற்பனை செய்திருந்தார். ஆனால் அந்த சிறுகதை வளர்ந்து வளர்ந்து 2,65,000, சொற்களும் பதினெட்டு அத்தியாயங்களும் கொண்ட மாபெரும் கலைப்படைப்பாக இறுதி வடிவத்தை எட்டியது. “யுலிசஸ்” நாவல் 1904 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டது. ஜூன் 16 இன்றளவிலும் ஜாய்ஸின் வாசகர்களால் நாவலின் மைய கதாபாத்திரமான லியோபோல்ட் ப்ளூமின் பெயரால் “ப்ளூம்ஸ் டே” ( Doomsday என்பதற்கான சிலேடையும் கூட) என்று கொண்டாடப்படுகிறது. நாவலில் லியோபோல்ட் ப்ளூம் அயர்லாந்தின் தலைநகரான டப்ளின் நகரத்தில் செய்தித்தாள் விளம்பரப் பக்கங்களை விற்கும் விற்பனையாளன்; அவனுடைய மனைவி மாலி ப்ளூம் அவனுக்கு விசுவாசமாக இல்லாத பேரிளம் பெண். லியோபோல்ட் ப்ளூமுடனும் இன்னும் பலருடனும் ஊடாடும் ஸ்டீபன் டெடலாஸ் கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் விடா முயற்சியில் இருப்பவன். ஸ்டீபன் டெடலாஸை நாம் ஏற்கனவே ஜாய்ஸின் முதல் நாவலான “Portrait of an Artist as a Young Man “ நாவலில் சந்தித்திருக்கிறோம். இந்த மூவரும்தான் நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள்.

ஜாய்ஸ் “யுலிசஸ்” நாவலின் வடிவத்தை ஹோமரின் செவ்விலக்கிய  கிரேக்க காப்பியமான “ஒடிசி”யின் வடிவத்தைப் பின்பற்றி கட்டுத்தளர்வற்ற முறையில் அமைத்திருந்தார். லியோபோல்ட் ப்ளூம் ஹோமரின் வீர காப்பியத்தின் தலைமகனாகிய யுலிசஸை அடியொற்றிய நவீன சமகால மனிதன்; ஸ்டீபன் டெடலாஸ் ஹோமரின் காப்பியத்தில் வரும் யுலிசஸின் மகன் தெலிமாக்கூஸ். ஒரே வித்தியாசம் ஜாய்ஸின் நாவலில் ஸ்டீபன் ப்ளூமின் சொந்த மகனல்ல; தலைமுறை வித்தியாசத்த்தினால் மகன் போலக் கருதப்பட வேண்டியவன். மாலி ப்ளூம் ஹோமரின் காப்பியத்தில் வரும் யுலிசஸின் மனைவி பெனிலோப்பி. ஜாய்ஸ் தன்னுடைய நாவலை ஹோமரின் காப்பியத்தில் வரும் முக்கிய சம்பவங்களை அடியொற்றி பதினெட்டு அத்தியாயங்களாகவும் அவற்றை மூன்று பெரும் பாகங்களாகவும் பிரித்திருக்கிறார். 

மகனாகிய தெலிமாக்கூஸ் தந்தை யுலிசஸ் தன் கடற்பயணங்களிலிருந்து திரும்பி வராதபடியால் தனது தாய் பெனிலோப்பிக்கு மறுமணம் செய்ய பண்டைய கிரேக்க வழக்கப்படி சுயம்வரம் நடத்த முயற்சி செய்து கிரேக்க மூப்பரிடம் ஆலோசனை பெறுகிறான். அப்போது பலரும் யுலிசஸ் காலிப்ஸோ தீவில் சிறைப்பட்டு உயிரோடு இருக்கிறான், எந்த நேரமும் திரும்பி வரலாம். பெனிலோப்பிக்கான சுயம்வர அறிவிப்பு வெளியானால் அதைக் கேள்விப்படும்  யுலிசஸ் தன் மனைவிக்காக எப்படியும் சிறையிலிருந்து தப்பித் திரும்பி வந்துவிடுவான் என்று  தெரிவிக்கின்றனர். ஜாய்ஸின் முதல் பாகத்தில் ஸ்டீபன் டெடலாஸ் பக் முல்லிகன் முதலோரை சந்திக்கிறான். கலைஞனாகும் முயற்சியில் இருக்கும் அவனை அயர்லாந்திலிருக்கும் மற்ற இளைஞர்களைப் போலவே செயலின்மை எனும் பாரிச நோய் தாக்கியிருக்கிறது அதிலிருந்து விடுபடுவதற்காக தனது தொலைந்து போன ஞானத்தந்தையை அவன் தேடிக்கொண்டிருக்கிறான். 

“யுலிசஸ்” நாவலில் ஜாய்ஸ் ஹோமரின் காப்பியத்துக்கு நிகராக உருவாக்கிய இணைவடிவம் நேரடியாகக் குறிப்பிடப்படுவதில்லை. ஜாய்ஸ் தன்னுடைய நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் இந்த இணைவடிவத்தைக் குறிப்பிடப் போக அது பிரபலமாகி “யுலிசஸ்” நாவலில் வாசிப்பை செழுமையுறச் செய்தது.

“யுலிசஸ்” நாவலின் இரண்டாம் பாகத்தில் லியோபோல்ட் ப்ளூம் டப்ளின் நகரின் தெருக்களில் யுலிசஸ் கடற்பயணங்களில் அலைவுற்றதைப் போலவே அலைவுறுகிறான். ப்ளூம் ஒரு ஈமச்சடங்கில் கலந்துகொள்கிறான், புனைபெயரில் ஒரு காதல் கடிதத்தை எழுதி வாங்கிக்கொள்கிறான், கடற்கரைக்கு சென்று அங்கே தூரத்தில் பார்க்கும் இளம்பெண்ணைப் பார்த்து கரமைதுனம் செய்கிறான், பரத்தையர் விடுதி ஒன்றுக்குச் செல்கிறான். ஜாய்ஸின் நடை இந்த அலைவுறும் பகுதியில் இசைக்கோவைகளைப் போலவும் பிரம்மையில் கரையும் மொழி போலவும் பலவிதமாக இருக்கிறது. 

மூன்றாவது பகுதியில் காப்பியத்தில் கிரேக்கத்தில் கரையொதுங்கும் யுலிசசைப் போல ப்ளூம் தனது வீட்டுக்குத் திரும்பி, மனைவி மாலியை அடைகிறான். அதற்கு முன்பாக ஸ்டீபனும் ப்ளூமும் சந்திக்கிறார்கள். 

இந்த பதினெட்டு அத்தியாயங்களை ஜாய்ஸ் ஏழுவருடங்களாக 1914 இலிருந்து 1921 வரை எழுதினார். முதல் உலகப் போரின் கொடுமைகளிலிருந்து தப்பிப்பதற்காக இந்த ஏழு வருடங்களில் ஜாய்ஸும் அவரது மனைவி நோராவும், சுயமாகத் தங்களை நாடு கடத்திக்கொண்டவர்களாக ஜூரிக்கிலும், பாரிஸிலும் வாழ்ந்தார்கள். இப்படி நாடுகடத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததால் ஜாய்ஸ் “யுலிசஸ்” நாவலை   1909 இல் எழுதிய  அகரவரிசை நோட்டுப்புத்தகங்களில் பல கிடைத்தன; சில தொலைந்து போயின. இப்படித் தொலைந்து போன நோட்டுப்புத்தகங்களே பிற்காலத்தில் ஒரு நிச்சயமான “யுலிசஸ்” பதிப்பைக் கொண்டுவருவதற்கு இயலாமல் போனதற்கான காரணங்களாகவும் ஆகிவிட்டன. 

மார்ச் 1919 இலிருந்து டிசம்பர் 1920 வரை “யுலிசஸ்” நாவலின் சில  பகுதிகள்  நியுயார்க் நகரிலிருந்து வெளிவந்த இலக்கிய சஞ்சிகையான The Little Review இல் வெளிவந்தன. இது எஸ்ரா பவுண்டின் முயற்சியால் சாத்தியமானது. ஹெச்.ஜி.வெல்ஸ் போன்ற மிக முக்கியமான எழுத்தாளர்கள் இலக்கிய இதழில் பகுதி பகுதியாக ஜாய்ஸின் “யுலிசஸ்” வெளிவருவதை ஆதரித்தார்கள். இந்தப் பகுதிகள் வெளிவந்தபோது ஜாய்ஸின் உரைநடையில் இருந்த வெளிப்படையான பாலியல், மத எதிர்ப்பு, உடலின் கழிவுச் செயல்பாடுகள் பற்றிய வெளிப்படையான விவரணைகள் கடுமையான அரசாங்க எதிர்ப்பினை எதிர்கொண்டன. அஞ்சல் சலுகை “யுலிசஸ்” நாவலின் பகுதிகளை பிரசுரித்த சஞ்சிகைக்கு நிறுத்தப்படது. The Literary Review இன் பிரதிகள் முச்சந்தியில் எரிக்கப்பட்டன. 1920 ஆம் ஆண்டு New York Society for the Suppression of Vice என்ற அமைப்பு இலக்கிய சஞ்சிகையின் மேலும் வழக்குத் தொடர்ந்தது: “யுலிசஸ்” நாவலுக்கு சட்டரீதியான தடை கோரப்பட்டது. 1921 இல் நடந்த நீதிமன்ற விசாரணையில் “யுலிசஸ்” நாவலுக்கு ஆபாச தடைச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டது; சஞ்சிகையின் ஆசிரியர் மார்கரெட் ஆண்டர்சன் அபாராதம் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்.

ஜாய்ஸ் நியுயார்க் நகர நீதிமன்றத் தீர்ப்பால் மனமுடைந்து போனார். போதாக்குறைக்கு அனைத்து முக்கிய பதிப்பகங்களும் “யுலிசஸ்” நாவலைப் பிரசுரிக்க மறுத்துவிட்டன. இந்த நிலைமையில் 1922ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனி என்ற பதிப்பகத்தை நடத்திவந்த புலம்பெயர்ந்த அமெரிக்கரான ஸில்வியா பீச் “யுலிசஸ்” நாவலைப் பதிப்பிக்க முன்வந்தார். ஸில்வியா பீச்சின் பதிப்பகம் அப்போது  புதிதாகத் தொடங்கப்பட்டதாக இருந்தது; மேலும் அவருக்கு தனிப்பட்ட முறையில் பதிப்புத் துறையில் எந்த அனுபவமும் இருக்கவில்லை. அவர் ஆனால் நூல்களுக்கான தணிக்கை, தடை ஆகியவற்றைக் கடுமையாக எதிர்க்கக்கூடியவராக இருந்தார்.   அதனாலும் அவர் “யுலிசஸ்” நாவலை வெளியிட விரும்பினார். 

ஸில்வியா பீச் டிஜோன் நகரில் வசித்த அச்சகத்துறையில் மாஸ்டர் என்று பெயர் வாங்கிய மௌரிஸ் டாரண்டியரைத் தொடர்பு கொண்டு “யுலிசஸ்” நாவலின் அச்ச்சாக்கத்தை அவரிடம் ஒப்படைத்தார். டாரண்டியர் 22 பிரெஞ்சு மொழி அச்சுக்கோர்ப்பவர்களை வேலைக்கு அமர்த்தி நாவலை அச்சுக்கோர்த்தார்.

பிரெஞ்சு மொழி அச்சுக்கோர்ப்பாளர்கள் ஆங்கில நாவலை அச்சுக்கோர்ப்பதில் உண்டாக்கிய பிழைகளை ஜாய்ஸ் அந்தப் பக்கங்களை மெய்ப்பு பார்த்த முறை பிழைகளை அதிகரிக்கக்கூடியதாக இருந்தது. ஜாய்ஸ் ஒரு பக்கத்தை மெய்ப்பு பார்த்து திருத்தும்போது நாவலை மேலும் விரிவாக்கி எழுதக்கூடியவராகவும் இருந்தார். கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் ஜாய்ஸ் பத்திலிருந்து பதினைந்து முறை அச்சுகோர்த்த பக்கங்களைக் கேட்டார். ஜாய்ஸின் கண் பார்வை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததால் பிழைகள் மேலும் மேலும் அதிகமாயின. 

1922 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் தேதி ஜாய்ஸின் நாற்பதாவது பிறந்த நாளின் போது “யுலிசஸ்” நாவல் வெளியானபோது அதில் 2000 முதல் 5000 வரை பிழைகள் இருந்ததாகக் கணிக்கப்பட்டது. ஆங்கிலம் தெரியாத பிரெஞ்சு மொழி அச்சுக்கோர்ப்பாளர்களால் இறுதி செய்யப்பட்ட நாவலோடு பதிப்பாளர் பின்னர் ஒரு சிறு நூலளவுக்கு பிழைத்திருத்தம் பட்டியலை வைக்க நேர்ந்தது. ஓராயிரம் பிரதிகளே அச்சிடப்பட்ட “யுலிசஸ்” முதல் பதிப்பு சுலபத்தில் விற்றுத் தீர்ந்தது. எர்னஸ்ட் ஹெமிங்வே, டபிள்யூ.பி.யேட்ஸ், ஜெர்ட் ரூட் ஸ்டீன் போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் நாவலை உடனடியாக வாங்கிவிட்டார்கள்.  நீதிமன்றத் தடை நாவலுக்கு இருந்தபடியால் நாவலைப் படிப்பதற்கான பொதுமக்கள் ஆர்வமும் அதிகமாக இருந்தது. 

இதனால் ஹாரியட் ஷா வீவர் என்ற பிரித்தானிய பதிப்பாளர் தன்னுடைய ஈகோயிஸ்ட் பதிப்பகம் மூலமாக “யுலிசஸ்” நாவலை 2000 பிரதிகள் பாரிஸில் அச்சடித்து பிரித்தானியாவுக்குக் கொண்டுவர முயற்சி செய்தார். உள்ளாடைகளுக்கும் பைபிள் என்ற மேற்புற அட்டைக்குள்ளாகவும் வைத்து “யுலிசஸ்” நாவல் பிரித்தானியாவுக்குள் கடத்திவரப்பட்டது. ஆனால் அவை பெரும்பாலும் பிரித்தானிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு எரியூட்டி அழிக்கப்பட்டன. 

சாமுவேல் ரோத் என்ற அமெரிக்க இதழாளர் 1926 ஆம் ஆண்டு அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்றில் கள்ளத்தனமாக “யுலிசஸ்” நாவலின் ஆபாசங்கள் நீக்கப்பட்ட பிரதியினை ஜாய்ஸின் அனுமதி பெறாமல் தொடராக வெளியிட்டார். ஜாய்ஸுக்கு மதிப்பூதியம் எதுவும் இதற்காகத் தரப்படவில்லை என்பது மட்டுமல்லாமல் இந்த புனிதமாக்கப்பட்ட பிரதி அமெரிக்க சந்தையில் ஆயிரக்கணக்கில் விற்றது. எஸ்ரா பவுண்டின் முன்னெடுப்பில் நூற்றி அறுபதுக்கும் அதிகமான எழுத்தாளர்கள் கையெழுத்திட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் சாமுவேல் ரோத்தின் “யுலிசஸ்” பதிப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இன்றும் சாமுவேல் ரோத்தின் பதிப்பும் சந்தையில் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. 

1932 இல் ஸில்வியா பீச்சின் முன்னெடுப்பில் ஒடிசி பதிப்பகம் ஜாய்ஸின் நண்பரும் “யுலிசஸ்” நாவலின் ஆய்வாளருமான ஸ்டூவர்ட் கில்பெர்ட்டைப் பதிப்பாசிரியராகக் கொண்டு உண்மையான நாவலின் பதிப்பைக் கொண்டுவந்தது. இந்தமுறை ஜாய்ஸ் மெய்ப்பு பார்க்கவில்லை; அவர் தன்னுடைய “ஃபென்னிகன்ஸ் வேக்” நாவலை எழுதுவதில் மும்முரமாக இருந்தார்; மேலும் அவருடைய மகள் லூசியா சித்தப்பிரமைக்குள் வீழ்ந்துகொண்டிருந்தபடியால் ஜாய்ஸ் அவளைக் கவனிப்பதிலும் நேரத்தைச் செலவழித்துக்கொண்டிருந்தார். 

1933 இல் “யுலிசஸ்” நாவலை அமெரிக்காவில் சட்டத்திற்கு விரோதமாக வாசிப்பது ஒரு முடிவுக்கு வந்தது.  ராண்டம் ஹவுஸ் பதிப்பகத்தை ஆரம்பித்த பென்னெட் செர்ஃப் 1934 ஆம் ஆண்டு “யுலிசஸ்” நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்தார். “யுலிசஸ்” நாவல் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டிருந்தபடியால் பிரதி கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் புதிய  வழக்காகியது.  புதிதாக வழக்கை விசாரித்த நீதிபதி “யுலிசஸ்” நாவலில் ஆபாசம் எனக் கருதப்பட்ட பகுதிகள் வாசகரிடத்தே ஆபாச நடவடிக்கையோ அல்லது பாலியல் தூண்டுதலையோ ஏற்படுத்தவில்லை எனத் தீர்ப்பளித்து நாவலுக்கான தடையை நீக்கினார். ராண்டம் ஹவுஸ் தடை நீக்கத்தைத் தொடர்ந்து நாவலைப் பதிப்பிதது ஆனால் அப்படி பதிப்பித்த பிரதி சாமுவேல் ரோத் பதிப்பித்த கள்ள நூலினை அடியொற்றி இருந்தபடியால் ஏராளமான தவறுகள் இருந்தன.

1936 இல் இங்கிலாந்தில் மிக அழகாக எரிக் கில்லினால் வடிவமைக்கப்பட்டு போட்லி ஹில் பதிப்பகத்தினரால் அச்சிடப்பட்ட “யுலிசஸ்” நாவலில் புதிய பிழைகள் ஏற்கனவே இருந்த பிழைகளோடு சேர்ந்துவிட்டன. 1941 இல் ஜாய்ஸ் மறைந்தார். 1960, 1961 ஆகிய ஆண்டுகளில் ராண்டம் ஹவுஸும் போட்லி ஹில் பதிப்பகமும் “யுலிசஸ்” நாவலின் பிழைகள் திருத்தப்பட்ட புதிய பதிப்புகளை வெளியிடுவதாக அறிவித்தன. அப்படி வெளிவந்த பதிப்புகளே இன்றைக்குத் தரமான பதிப்புகளாக கல்விப்புலத்தாரால் வாசிக்கப்பட்டாலும் அவற்றிலும் நாலாயிரத்துச் சொச்ச பிழைகள் இருந்தன.

1977 இல் ஜாய்ஸின் எஸ்டேட்டும் கார்லண்ட் பதிப்பகமும் இணைந்து ஹன்ஸ் வால்டர் காப்லர் என்ற ஜெர்மானிய அறிஞரை பொது எடிட்டராக நியமனம் செய்து நிச்சயமான பிழையில்லா “யுலிசஸ்” நாவலின் பிரதியைக் கொண்டு வரச் சொன்னார்கள். காப்லர் எழு ஆண்டுகள் உழைத்து யுலிசஸின் கிரிடிகல் எடிஷனை  1984 இல் கொண்டு வந்தார். 

காப்லர் ஜாய்ஸின் நாவலிலுள்ள பிழைகளை நீக்கக் கையாண்டவழியை "continuous manuscript text” என்றழைத்தார். அவருடைய முறை ஜாய்ஸின் கைப்பிரதிகள், திருத்திய பிரதிகள் இவற்றில் ஏதாவது ஒன்றை இறுதியானதாக எடுத்துக்கொள்ளாமல் எல்லாப் பிரதிகளிலிருந்தும் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்வதாக இருந்தது. காப்லரின் பதிப்பு ஜாய்ஸை நுணுக்கமாக வாசித்து வந்த பல வாசகர்களுக்கு பல அதிர்ச்சிகளை அளிப்பதாக இருந்தது. 

மிக மோசமான அதிர்ச்சி நாவலின் மைய கதாபாத்திரமான ஸ்டீபனின் கலாவேட்கையோடு தொடர்புடையதாக இருந்தது. நாவலின் ஒன்பதாவது அத்தியாயத்தில் ஸ்டீபன் இறந்துவிட்ட தன் தாயாரின் நினைவோடு போராடுகையில் உலகின் அனைத்து மனிதர்களுக்கும் தெரிந்த ஒற்றைச் சொல் என்ன என்று கேட்பான். அது காப்லருக்கு முந்தைய பதிப்புகளில் அந்த ஒற்றைச் சொல என்ன என்பது முழு நாவலும் சொல்வது ஆனால் வெளிப்படுத்தாது எனவே அது ஒரு புதிர் என்பதாக இருந்தது. காப்லர் முந்தையப் பதிப்புகளிலிருந்து நீக்கப்பட்ட இரு பத்திகள் என இரண்டைக் கண்டுபிடித்து அவற்றை தன்னுடைய பதிப்பில் சேர்த்துவிட்டார். 

காப்லர் தன்னுடைய பதிப்பில் ஸ்டீபனின் தாயார் சொல்லாமல் விட்ட வார்த்தை உண்மையில் அன்பு அதாவது காமம் என்ற அர்த்தத்தில் என பதிப்பித்திருந்தது ஜாய்ஸின் வாசகர்களிடையே பெரும் அதிர்ச்சியை இதனால் உண்டாக்குவதாக இருந்தது. "Do you know what you are talking about? Love, yes. Word known to all men. Amor vero aliquid alicui bonum vult unde et ea quae concupiscimus…". என்று சேர்க்கப்பட்ட வாக்கியம் தாமஸ் அக்வினாஸுக்குக் கடன்பட்டது. தாமஸ் அக்வினாஸ் தன்னுடைய Summa Contra Gentiles என்ற புத்தகத்தில் உண்மையான அன்பு என்பதை பிறருக்கு நல்லதை விழைவது  என்று அதை உடற்பசியாகிய காமத்திலிருந்து வேறுபட்டதாக விளக்குவது காப்லரின் பதிப்பில் காணாமல் போய் உடற்பசியான காமத்தை, அன்பை விடுத்து  ஒற்றை வார்த்தையாக ஸ்டீபனின் தாய் அவனுக்கு சொல்வதாக  மாறிவிட்டது. காப்லரின் பதிப்புக்கு முன்னுரை எழுதிய ரிச்சர்ட் எல்மேன் காப்லரின் பதிப்பு “யுலிசஸ்” நாவலின் கதையாடலையும் அதன் சம்பவங்களையும்  வாசிக்கும் முறையையுமே மாற்றிவிட்டது  என்று எழுதினார். 

மேலும் காப்லர் ஜாய்ஸின் நாவலின் முந்தைய பதிப்புகளிலிருந்த பல நிறுத்தற்குறிகளை நீக்கிவிட்டார். 

காப்லர் பதிப்பின் வெற்றி சிறிதுகாலமே நீடித்தது. 1985 ஆண்டு ஜான் கிட் என்ற இளம் அறிஞர் நியுயார்க்கில் நடந்த Society for Textual Scholarship கூட்டத்தில் காப்லர் பதிப்பின் போதாமைகளைச் சுட்டிக்காட்டினார். காப்லர் கைப்பிரதிகளை நேரில் காணாமல் ஃபோட்டோகாப்பி எடுக்கப்பட்ட ஜாய்ஸின் கைப்பிரதிகளைக் கொண்டு தன் பதிப்பை உருவாக்கினார் என்பது முதல் குற்றச்சாட்டு. ஃபோட்டோக்காப்பியில் ஓரங்கள் மடங்கியிருக்க, தூசு படிந்த கறைகள் எழுத்துக்களை மறைத்திருக்க, காப்பியே மங்கிப்போயிருக்க எனப் பல குறைகளால் பல தவறுகள் காப்லர் பதிப்பில் உருவாயின.  ஜாய்ஸ் ஓரங்களில் தன்னுடைய அச்சுகோர்ப்பவர்களுக்கென்று எழுதிய குறிப்புகளைக் காப்லர் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது ஜான் கிட்டின் இரண்டாவது குற்றச்சாட்டு. ஜாய்ஸ் சில சொற்களுக்கு கிருத்திருவமான விதத்தில் எழுத்துக்ளைப் பயன்படுத்தினார்; சில சொற்களைச் சேர்த்தெழுதி புதிய சொற்களைக் கண்டுபிடித்தார். இவற்றையெல்லாம் காப்லர் நீக்கி சாதாரண அகராதி சொற்களாக மாற்றிவிட்டார் என்பது மூன்றாவது குற்றச்சாட்டு. 

இத்தகையக் குற்றச்சாட்டுகளால் காப்லரின் பதிப்பு பொலிவிழந்து போக சந்தையில் பழைய பதிப்புகள் மீண்டும் சுற்றுக்கு வர “யுலிசஸ்” நாவலுக்கு எப்போதுமே பல பதிப்புகள் சந்தையில் கிடைக்கும் நிலை உருவாகிவிட்டது. 

காப்லர் பதிப்பு உண்டாக்கிய ஏமாற்றம் ஜாய்ஸின் வாசகர்களை வெகுவாக பாதித்தது. 1997 இல் ஜாய்ஸின் பிறந்த நாளான பெப்ரவரி 2 ஆம் நாளன்று டானிஸ் ரோஸ் என்ற ஐரிஷ்காரர் “யுலிசஸ்” நாவலை எல்லோரும் தந்த கோபுரத்தில் ஏற்றி வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் நாவலோ சிக்கலான அமைப்பையும் பலவிதமான நடை பரிசோதனைகளையும் கொண்டிருக்கிறது எனவே எல்லோருக்கும் புரியும் விதத்தில் வாசகர் பதிப்பு கொண்டுவருவதாகச் சொல்லி புதிய பதிப்பினைக் கொண்டுவந்தார். டானிஸ் ரோஸ் ஜாய்ஸின் நாவலில் கிட்டத்தட்ட 10, 000 சொற்களை மாற்றிவிட்டார். ஜாய்ஸின் வாசகர்களும் ஜாய்ஸின் பேரனும் ஜாய்ஸின் எஸ்டேட்டின் நிர்வாகியான ஸ்டீபன் ஜேம்ஸ் ஜாய்ஸும் கொதித்து எழுந்துவிட்டார்கள். ஸ்டீபன் ஜேம்ஸ் ஜாய்ஸ் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு வழக்கமான காப்புரிமை சம்பந்தப்பட்டது என்பதைக் காட்டிலும் முக்கியமாக ஒரு எழுத்தாளன் உருவாக்கிய அழகியல் ஒருமையை சிதைப்பதற்கு வேறு யாருக்கும் உரிமை கிடையாது என்பதாக ஸ்டீபன் ஜாய்ஸின் வாதம் அமைந்தது. நீதிமன்றம் டானிஸ் ரோஸின் பதிப்பைத் தடை செய்தது. டானிஸ் ரோஸின் வழக்கை “யுலிசஸ்” நாவலை எல்லோருக்கும் புரியும்படியான வாசகப் பிரதியை உருவாக்கி அதில் வியாபார வெற்றியை ஈட்டுவதற்கான ஆசைக்கும் “யுலிசஸ்” நாவலை அதன் அழகியல் கட்டுக்கோப்பு குலையாமல் காப்பாற்ற நினைக்கும் கல்விப்புலத்தாருக்கும் இடையிலான   மோதல் என்றும் பார்க்கலாம். 

இருபத்தியோராம் நூற்றாண்டில் “யுலிசஸ்” நாவலை பிழையில்லாமல் கொண்டுவருவது என்ற இலட்சியம் கைவிடப்பட்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆக்ஸ்ஃபோர்ட் உலக கிளாஸிக்குகள் வரிசையில் வெளிவந்த “யுலிசஸ்” நாவலைக் கொண்டுவந்த எடிட்டர் ஜெரி ஜான்சன், அதன் 1922 ஆம் ஆண்டு வெளிவந்த ஷேக்ஸ்பியர் அண்டு கம்பெனி வெளியிட்ட பிரதியை அப்படியே வெளியிட்டு அதில் விரிவான ஆய்வுக்குறிப்புகளையும், விமர்சனப்பார்வைகளையும் சேர்த்து வாசிப்பை நுட்பமாக்கும் வேலையைச் செய்தார். 2015 இல் அல்மா கிளாசிக்ஸ் பதிப்பகம் வெளியிட்ட பதிப்பிற்கு சாம் ஸ்லொட்டே எடிட்டராகப் பணிபுரிந்தார். அவர் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த ஒடிசி பதிப்பக வெளியீட்டிற்கு ஆய்வுக்குறிப்புகள் சேர்த்தார்.

“யுலிசஸ்” நாவலின் நூற்றாண்டு விழா பதிப்பிற்கு கேம்பிரிட்ஜ் பல்கலைப் பதிப்பகம் 1922 முதல் பதிப்பினை அடிப்படைப் பிரதியாக எடுத்துக்கொண்டு  அதோடு விரிவான விமர்சனக் கட்டுரைகள், ஆய்வுக்குறிப்புகள் சேர்த்து வெளியிட்டது.

நவீன உலக இலக்கிய வரலாற்றில் ஜாய்ஸின் நாவலுக்கு இணையான பதிப்பு வரலாறு கொண்ட வேறொரு நாவல் இல்லை. வழக்குகள் முதல் ஆங்கிலம் தெரியாத அச்சுக்கோர்ப்பாளர்கள் நாவலுக்கு அச்சுக்கோர்த்தது வரை என இந்த உச்சம் தொட்ட கலைப்படைப்பு கடந்து வந்த பாதைகள் ஒருவரைத் திகைத்து மலைத்து நிற்க வைத்துவிடக்கூடியதாக இருக்கிறது. ஒருவேளை ஜாய்ஸின் தன்னிகரற்ற படைப்பான “யுலிசஸ்” தொடர்ந்து வாசகர்ளை கவர்ந்து இழுத்துக்கொண்டே இருப்பதற்கு அதைச் சுற்றியுள்ள சர்ச்சைகளும் காரணமாக இருக்கலாம்.

Wednesday, June 17, 2026

பிரார்த்தனையும், தியானமும், ஜராதுஷ்டிரனின் மனக்குகை நிழலும்


கிறித்தவம், இஸ்லாம், யூத மதம் ஆகியன பிரார்த்தனையை அடிப்படையாகக் கொண்ட மதங்கள்; பௌத்தமும் சமணமும் தியானத்தை வழிமுறையாகக் கொண்டவை. இந்து மதத்தில் பல வழிகளும் தரிசனங்களும் இருப்பதால் பிரார்த்தனைக்கும் தியானத்துக்கும் நீரோடைகள் தனித்தனியாகவும் இரண்டும் கலந்தும் ஓடுவதாகவும் இருக்கின்றன. 

பிரார்த்தனை என்பது வெளியே இருக்கும் கடவுளோடு ஓர் உரையாடல்; வழிகாட்டுதலுக்கும், நன்றியறிதலுக்கும், உதவி கோரியும் எழும் மனதின் கூக்குரல். தியானம் மௌனமான ஒன்றுதல். தற்கணத்தோடும் ஒன்றலாம். கூர்ந்த கவனிப்பில் தூய உணர்வாக மனமற்றும் மலரலாம். 

பிரார்த்தனை கடவுள்-யாசகன் என்ற இருமையை  தன்போக்கில் உறுதி செய்வது.  தியானம் இருமையை அழித்துத் துலங்குவது. பிரார்த்தனைக்கு அசையா நம்பிக்கை அத்தியாவசியம். தியானம் உள்ளெழும் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் கவனிப்பதில் சூட்சுமம் கொள்கிறது. எனவே நம்பிக்கையற்றோ நம்பிக்கை கடந்தோ, பல நம்பிக்கைகளையும் உள்வாங்கியோ தியானிக்கலாம். பிரார்த்தனை மாற்றத்திற்காகவோ விளைவுகளுக்காவோ மனுப் போடுவது; தியானம் ஆசைகளையும் விளைவுகளையும் விட்டுவிட்டு அமைதியையும் சுற்றி இருப்பதோடு சமாதானத்தையும் நிலைபேறாக்கிக்கொள்வது.

நவீன, சமகால மனிதனுக்கு இரண்டிலும் ஈடுபடத் தடையாக இருப்பது சந்தையின் முச்சந்தியில் கைவிளக்கோடு கடவுளின் இறப்பை அறிவித்த நீட்ஷேயின் ஜராதுஷ்டிரன்; அவனுடைய நிழல் நம் மனக்குகைகளில் நீண்டு கிடக்கிறது. அறிவியலின் வழிகளுக்கும் புலன்களின் நிரூபணங்களுக்கும் ஜராதுஷ்டிரனின் நிழல் படர்த்திய மனம் ஏங்கித் தெவங்குகிறது. ஃப்ராய்டுக்கு  பிரார்த்தனை என்பது கருவினை நோக்கி பின்னோக்கி செல்லுதல்; கருவாக சுருண்டு கிடந்த நினைவில் அம்மாவையோ அப்பாவையோ அழுது அழிச்சாட்டியம் பண்ணி அழைத்தல். ஜூலியா கிறிஸ்தவாவுக்கு பிரார்த்தனையின் அடம் மொழிக்கு முந்தையது; தாயை நோக்கியது தந்தையை நோக்கியது. தந்தை என்பவர் தாமதமாகத்தான் வருவார். 

எப்படியிருந்தாலும் விதியின் ஓநாய்ப் பற்கள் உங்கள் அந்தரங்க உறுப்பைக் கடித்து சவைக்குமென்றால் ஜராதுஷ்டிரனின் நிழல் காணாமல் போய்விடும். 

அப்போது தத்துவத்திற்குத் தெரியாதது கவிதைக்குத் தெரிந்துவிடும். கவிதை, கவிதையின் பேசுகுரல் என்ற  மூன்றாம் நபர் மூலம் அறிக்கையிடும், அறுதியிடும்; நோயாளி உயிரோடுதான் இருக்கிறார், பிரபஞ்சம் ஆனால் அக்கறையற்று இருக்கிறது என்று. மேற்கத்திய காற்றே, மேற்கத்திய காற்றே , பெத்லஹேம் எனும் சிறு நகரமே என்று மில்டன் ஒளியை அழைக்க ஒரு பெருநரைக் கண்டுபிடிப்பது இப்படித்தான். ஜான் கீட்ஸ் இப்படித்தான் ஒரு கிரேக்க பூச்சாடியை நோக்கிப் பேசி அழகும் உண்மையும் ஒன்று என்று உலகுக்கு அறிவித்தான். காளிதாசன் மேகத்தை தூதுவிடலாம் என்று கற்றுத்தந்தான். பிரார்த்தனை என்பது காதலை நோக்கிய தவிப்பும்தானே. குமாரசம்பவம் எனும் அற்புதம் கைகூடிவிடலாம். கம்பன் தன் சுந்தரகாண்ட வரி ‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்’ என்று  கண்டுகொண்டதால்தான் காப்புச் செய்யுளிலேயே சரணடைந்து விடுகிறான் ஒரு உலக அறிவிப்போடு. ஆனால் கம்பனின் அந்த அறிவிப்பு உலகோருக்குத்தானே தவிர அலகிலா விளையாட்டுடையோனை நோக்கிய பேச்சு அல்ல. “‘சரண் எனக்கு யார்கொல்?” என்று சானகிதான் அழுது சாம்புகிறாள். “அரண் உனக்கு ஆவென்; வஞ்சி! அஞ்சல்!” என்று அருளின் சொற்களை அவளுக்குக் கனிந்து அளிப்பது சடாயு: ஒரு பறவை. 

கவிதை இவ்வாறாக யாரை நோக்கி, எதை நோக்கி  நிர்க்கதியைப் பேசினாலும் அது பிரார்த்தனையாக உய்வடைந்துவிடுகிறது. அப்போது ஜராதுஷ்டிரனின் கைவிளக்குக்கு ஏதேனும் புலப்பட்டுவிடுகிறது. 

பேசுவதைக் கேட்பதற்கு யாருமே எதுவுமே இல்லாமல் போகும் அடர் இருள் சூழ்ந்த நிலை ஒன்று இருக்கிறது. அனாதைத்தன்மை அநாதியாகும் இடமது. கவிதை தன் மொழியையும் இழக்கையில் இலக்கணமற்று மூழ்கும் காரிருள். நீட்ஷே, பைத்தியக்காரன், இதனால்தான் இலக்கணத்தை நம்புவோர் கடவுளை நம்புவோரே என்று  அறிவித்தான்.

காரிருளில் மூழ்கும்போது எழுத்துக்கூட்டலாம் தயவு செய்து என்று. அப்படிக்கூட்டும் எழுத்தை கேட்பது காரிருளாகக் கூட இருக்க வேண்டாம். தயவு செய்து என்ற இரு சொல் மந்திரம் எழுத்து எழுத்தாய் கூட்டப்பட்டால் ஜ்வாலை வெடித்து பெரு நெருப்பாய் பரவி, பிரார்த்தனையும் தியானமும் ஒன்றாக பிரபஞ்சம் ஒளிமயமாகிவிடும். 

 

சிட்டுக்குருவிகளும் வெட்டுக்கிளிகளும்


வானம் நிறைக்கும் வெட்டுக்கிளிகள், கிழக்கு ஆப்பிரிக்காவில் பயிர்களைத் தாக்கித் தின்று அழிக்கும் வீடியோவைப் பார்த்தேன். கிழக்கு ஆப்பிரிக்கா இதனால் கடும் பஞ்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதே போல் ஒரு நிலைமை சிட்டுக்குருவிகளால் மாவோவின் சீனத்தில் ஏற்பட்டதாக முன்பு படித்திருக்கிறேன். மாவோவின் சீனம் உடனடியாக சிட்டுக்குருவிகளை ஏகத்துக்கும் அழித்துவிட்டது. சிட்டுக்குருவிகள் பயிர்களை மட்டும் அழிக்கவில்லை அவை வெட்டுக்கிளிகளையும் சாப்பிட்டு வந்தன என்பது வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு ஆபத்து வந்தபோது தெரியவர சீனா பழைய சோவியத் யூனியனில் இருந்து இரண்டரை லட்சம் சிட்டுக்குருவிகளை இறக்குமதி செய்து சூழலியல் ஒருமையை மறு நிர்மாணம் செய்தது. நிற்க.

--

சூழலியல் ஒருமை மனிதர்களுக்கும் பொருந்தும். இப்போது லட்சக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் நகரங்கள் நீங்கி தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று விடும்போது மனித சூழலியல் ஒருமை உடனடியாகக் குலைவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. கட்டிடத் தொழில், சுத்தம் சுகாதாரம், வீட்டு வேலை, சாலைப் பணிகள், இன்னும் கணக்கிலடங்கா பணிகள் வேலைக்கு ஆட்கள் இல்லாததால் நின்று போவதற்கும் நிர்மூலம் ஆவதற்கும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இனி ஊருக்கு சென்றவர்கள் திரும்ப நகரங்களுக்கு வருவார்களா என்பதும் கேள்விக்குரியதே. இது கிராமப்பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான அரிய சந்தர்ப்பமாகக்கூட அமையக்கூடும். அதே சமயத்தில் நகரங்களின் வளர்ச்சி விகிதம் குறைந்து வேறு வகை பொருளாதார ஒழுங்கு உருவாவதற்கான வாய்ப்பும் உண்டாகலாம்.    அந்த புதிய ஒழுங்கில் கிராமம்/நகரம் வேறுபாடற்ற டிஜிட்டல் பரவல், உயர்கல்வி வாய்ப்புகள், தொழில் நுட்பப்பரவல், universal minimum wage, அனைவருக்குமான மருத்துவம் மற்றும் சுகாதார வசதி ஆகியவற்றுக்கான முன்னுரிமை முக்கியமானதாக மாறலாம்

--

கோவிட் பெருந்தொற்று காலத்தில் தொழிலாளர்கள் சாரை சாரையாக தமிழ்நாடு நீங்கிச் சென்றபோது எழுதியது 

திக்குவாய், குரல்போலி, கவிதை, மொழிபெயர்ப்பு


திக்குவாய் என்பது வெறும் பேச்சுக்குறைபாடு அல்ல. குரல்போலி என்பது வெறுமனே நகலெடுப்பது அல்ல. அன்றாட வாழ்வில், இந்தச் செயல்கள் பலவீனமாகவும் கேளிக்கையாகவும் பார்க்கப்படலாம்—ஒன்று இயலாமையின் வெளிப்பாடு, மற்றொன்று கேலியின் வடிவம். ஆனால், கைல்ஸ் தெலூஸின்  தத்துவப் பார்வையின் வழியே காணும்போது, திக்குவாயும் குரல்போலியும் சக்திவாய்ந்த, தீவிரமான செயல்களாகத் தங்களை வெளிப்படுத்துகின்றன. அவை மொழி சார்ந்த 'விடுபடு கோடுகள்' (lines of flight), ஒழுங்கமைக்கப்பட்ட பேச்சின் அதிகார வரைபடத்திலிருந்து தப்பித்து, ஒரு குரல் என்னவெல்லாம் செய்யக்கூடும் என்ற அறியப்படாத நிலப்பரப்பிற்குள் நுழையும் முயற்சிகள்.

நாம் முதலில் சரளமாகப் பேசக் கற்றுக்கொள்கிறோம். "சாதாரண" பேச்சு என்பது ஒரு நிலப்பரப்பாக்கப்பட்ட (territorialized) செயல்; அது இலக்கணம், தொடரியல்,  சமூக எதிர்பார்ப்புகளால் வடிவமைக்கப்படுவது. அது அர்த்தத்தைக் கடத்தும் ஒரு கருவி, உலகின் தேவைகளால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு செயல்பாடு. அது, சீராகச் செயல்படும் ஒரு குரலாக தன்னைக் காட்டிக்கொள்கிறது.

திக்குவாய் இந்த ஒழுங்கமைப்பைத் தகர்க்கிறது. இது குரலை நிலப்பரப்பற்றதாக்குதல் (deterritorialization) ஆகும். ஒருவர் திக்கும்போது, அவர் பயனளிக்கும், சரளமான பேச்சிலிருந்து உடைந்துபோகிறார். வார்த்தைகளுக்குப் பதிலாக ஒலிகள், மௌனங்கள்,  தசை இறுக்கங்கள் வெளிப்படுகின்றன. வாய், நாக்கு, மூச்சு ஆகியவை தெளிவான சொற்களை உருவாக்கும் கருவிகளாக மட்டும் இல்லாமல், அழுத்தத்தின், மீண்டும் மீண்டும் வரும் தடையின், மௌனத்தின் களங்களாக மாறுகின்றன. இது பேச்சிலிருந்து அர்த்தத்தைப் பிரித்து, அதன் உடல்சார்ந்த, மூலப்பொருளான ஒலிகளை வெளிப்படுத்துகிறது. இது சரளமான பேச்சின் ஆதிக்கத்திலிருந்து ஒரு விடுபடு கோட்டை வரைகிறது.

இந்த தருணத்தில், திக்குபவரின் வாய், தெலூஸும் கட்டாரியும் “உறுப்புகளற்ற உடல்" (Body without Organs ) என்று அழைத்ததின் ஒரு வடிவமாகிறது. இங்கு, பேச்சை உருவாக்கும் உறுப்புகள், அர்த்தத்தை உருவாக்கும் தங்களின் ஒரே நோக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, மொழிக்கு முந்தைய தூய உணர்வுத் தாக்கத்தை (affect) வெளிப்படுத்துகின்றன. இது மொழிக்கு எதிராகப் போராடும் உடலின் ஓசை; நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பேச்சின் பின்னிருக்கும் உடல் உழைப்பை இது அம்பலப்படுத்துகிறது.

திக்குவாய் என்பது மொழியின் அமைப்பிலிருந்து ஒரு விடுபடு கோடாக இருந்தால், குரல்போலி என்பது மற்றொருவரின் குரலை நோக்கிய ஒரு விடுபடு கோடு. பாரம்பரிய சிந்தனை அசலை உயர்த்தி, நகலைத் தாழ்த்துகிறது. ஆனால் தெலூஸ் இதைத் தலைகீழாக மாற்றுகிறார். அவர் சாயலை (simulacrum)—அதாவது அசலே இல்லாத ஒரு நகலை, தனது சொந்த வித்தியாசத்தை உறுதிப்படுத்தும் ஒரு செயல்திறனை—கொண்டாடுகிறார்.

இந்த வகையில், குரல்போலி என்பது ஒருவரின் குரலை அப்படியே நகலெடுப்பது அல்ல. அது வெறும் குரல்வளப் பயிற்சி. உண்மையான குரல்போலி என்பது ஆகுதலின் (becoming) ஒரு செயல். ஒருவர் மற்றொருவரின் குரலைப் போலப் பேசும்போது, அவர் அந்த நபரின் குரலின் உணர்வுத் தாக்கங்களான  ஏற்ற இறக்கங்கள், வேகம், தாளம் அதன் தனித்துவமான அதிர்வுகள் ஆகியவற்றைத்  தொடுகிறார்: அவர் அந்த நபருடன் ஒரு கூட்டிணைவிற்குள் (assemblage) நுழைகிறார். இது அந்த நபராக இருப்பது அல்ல, மாறாக, குரலின் வழியாக பிற-ஆகுதல் (becoming-other). இது ஒரு குரலின் தனித்துவமான பாணியை, அதன் வேகங்கள் மற்றும் மெதுவான இயக்கங்களைப் பற்றியது.

குரல்போலி செய்யும் செயல், ஒருவரின் சொந்தக் குரலை, பேச்சின் தோரணையை நிலப்பரப்பற்றதாக்குகிறது. அது தனது குரலை மற்றொரு இருப்பு முறையுடன் அல்லிப்பரவல் போல (rhizomatically) இணைக்கிறது. குரல்போலி செய்பவர், "அந்தக் குரல் எப்படி ஒலிக்கிறது?" என்று கேட்பதில்லை, மாறாக, "அந்தக் குரலின் வழியாக என்ன சக்திகளும் உணர்வுகளும் கடந்து செல்கின்றன?" என்று கேட்கிறார். இதன்மூலம், நிலையான சுயம் என்பது கரைந்து, குரல் என்பது ஒரு எல்லையற்ற சாத்தியக்கூறுகளின் வெளி என்பதை நிரூபிக்கிறார்.

திக்குவாயும் குரல்போலியும் மொழி மற்றும் அடையாளத்தின் மீதான சோதனைகள். அவை ஒரு நிலையான, சாராம்சமான சுயம் என்ற கருத்தைச் சவாலுக்குட்படுத்துகின்றன. மொழி என்பது ஒரு பலவீனமான, உடல்சார்ந்த அமைப்பு என்பதையும், அது உடையும்போது அதன் அடியில் உள்ள தீவிரமான சக்திகளை வெளிப்படுத்தும் என்பதையும் திக்குவாய் காட்டுகிறது. சுயம் என்பது ஒரு தன்னிறைவான  முழுமை அல்ல மாறாக குரல் வழியாக நாம் உள்ளே நுழைந்து வெளியேறக்கூடிய ஒரு தற்காலிக வடிவம் என்பதை குரல்போலி காட்டுகிறது.

இந்த எளிமையான செயல்களில், குரல் ஒரு ஆய்வகமாக மாறுகிறது. அது தனது சொந்தப் பழக்கங்களிலிருந்து தப்பிக்கிறது, தனது சொந்த வடிவத்தைக் கரைக்கிறது, தனக்கு  வெளியில் இருப்பவற்றுடன்  கூட்டணிகளை உருவாக்குகிறது. இரண்டும் சேர்ந்து ஒரு அடிப்படை தெலூஸிய  உண்மையை வெளிப்படுத்துகின்றன: நாம் யாராக இருக்கிறோம் என்பதால் வரையறுக்கப்படவில்லை, மாறாக நாம் என்னவாக ஆகிக்கொண்டிருக்கிறோம் என்பதாலேயே வரையறுக்கப்படுகிறோம். எந்த நேரத்திலும், நாம் நமது தாளத்தை மாற்றலாம், ஒரு புதிய குரலை மேற்கொள்ளலாம்,  ஒரு புதிய இருப்பு முறைக்குள், ஒரு விடுபடு கோட்டில் பயணிக்கலாம் என்பதற்கு இவை நினைவூட்டல்கள்.

திக்குவாய் என்பது சரளமான பேச்சின் ஒழுங்கைத் தகர்க்கிறது. கவிதையும் அதையே செய்கிறது. அது சாதாரண உரைநடையின் இலக்கண விதிகளை, வாக்கிய அமைப்புகளைத் தகர்த்து, மொழியைப் புதிய வழிகளில் ஒழுங்கமைக்கிறது. இது ஒரு திட்டமிடப்பட்ட, கலைப்பூர்வமான ‘திக்குவாய்' பேச்சு.

திக்குவாயில் காணப்படும் தன்னிச்சையான வார்த்தை மீள்வுகளும் (repetitions), இடைவெளிகளும் (pauses), கவிதையில் ஒரு கலை வடிவமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சொல்லை அல்லது வரியைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமும், வரிகளுக்கு இடையில் மௌனத்தை உருவாக்குவதன் மூலமும் கவிஞர்கள் தீவிரமான உணர்ச்சிகளை உருவாக்குகிறார்கள்.

கவிஞர்கள் பெரும்பாலும் தன் சொந்தக் குரலில் பேசுவதாக எடுத்துக்கொள்வது   தமிழில் நிலைபெற்றுவிட்ட தவறான பார்வை.  கவிஞர்கள்   'கவிக்குரலை' அல்லது 'கவிதை ஆளுமையை' (persona) உருவாக்குகிறார்கள். அதன் மூலமாக குரல்ப்போலிகளைக் கொண்டு பேசுகிறார்கள். கவிதை என்பது மொழியை அர்த்தங்களைக் கடத்தும் ஒரு கருவியாக மட்டும் இல்லாமல், புதிய உணர்வுகளையும், யதார்த்தங்களையும் உருவாக்கும் ஒரு பரிசோதனைக் களமாக இருக்கிறது;  அது சொற்களின் வழியாக 'ஆகுதலின்' கலையாக விளங்குகிறது. 

மொழிபெயர்ப்பிலும் இந்த கவிதாதன்மைகள் செயல்படுகின்றன. ஒரு மொழிபெயர்ப்பின் முக்கிய நோக்கம், மூல மொழியின் (source language) அர்த்தத்தை இலக்கு மொழியில் (target language) சரளமாக மாற்றுவதே என்று பொதுவாகக் கருதப்படுகிறது.  மேற்சொன்ன  'சாதாரண பேச்சை'ப் போன்றது.

ஆனால், ஒரு மொழிபெயர்ப்பாளர் வேண்டுமென்றே ஒருவித 'திக்குவாயை' உருவாக்க முடியும். மூல மொழியின் வாக்கிய அமைப்பையும், அதன் தனித்துவமான சொற்களையும், கலாச்சாரக் கூறுகளையும் அப்படியே இலக்கு மொழியில் கொண்டுவர முயலும்போது, அந்த மொழிபெயர்ப்பு இலக்கு மொழியில் சற்று அந்நியமாக, திக்கித் திக்கி ஒலிக்கும்.

 இந்த 'திக்குவாய்' மொழிபெயர்ப்பு, இலக்கு மொழியின் இலக்கண, வாக்கிய மரபுகளை (territory) மீறுகிறது. இது வெறும் அர்த்தத்தைக் கடத்துவதைத் தாண்டி, மூல மொழியின் 'உடல் உழைப்பை', அதன் ஓசை மற்றும் வடிவத்தின் தனித்துவத்தை வாசகருக்கு உணர்த்துகிறது. இது இலக்கு மொழியின் சரளத்தன்மையிலிருந்து ஒரு 'விடுபடு கோடு' (line of flight) ஆகும். வாசகரை வசதியாக உணர வைப்பதற்குப் பதிலாக, நீங்கள் ஒரு அயல் படைப்பை  வாசிக்கிறீர்கள் என்று அது நினைவுபடுத்துகிறது.

ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒரு படைப்பை மொழிபெயர்க்கும்போது, அவர் அந்த மூல ஆசிரியரின் குரலை நகலெடுக்கிறார். இது வெறுமனே  சொற்களை இன்னொரு மொழியில்  மாற்றுவதல்ல.

 சிறந்த மொழிபெயர்ப்பாளர் மூல ஆசிரியராகவே 'ஆக' (becoming) முயற்சிக்கிறார். அவர் அந்த ஆசிரியரின் நடை, லயம், சிந்தனை முறை  உணர்வுத் தாக்கங்களை (affect) உள்வாங்கிக் கொள்கிறார். அவர் அந்த ஆசிரியருடன் ஒரு 'கூட்டிணைவிற்குள்' (assemblage) செல்கிறார்.

 இதன் விளைவாக உருவாகும் மொழிபெயர்ப்பு, மூலத்தின் சரியான நகல் அல்ல; அது ஒரு புதிய மொழியில் நிகழ்த்தப்படும் மூலத்தின் 'சாயல்'. அது மூல ஆசிரியரின் குரலை ஒரு புதிய உடல் (மொழி) கொடுத்து உயிர்ப்பிக்கிறது.

சுருக்கமாக, ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் இந்த இரண்டு பாதைகளுக்கும் இடையில் ஒரு முடிவை எடுக்கிறார்: மூல மொழியின் அந்நியத்தன்மையை தக்கவைக்க ஒருவித 'திக்குவாயை' உருவாக்குவதா? அல்லது மூல ஆசிரியரின் குரலை உள்வாங்கி ஒரு முழுமையான 'குரல்போலியை' நிகழ்த்தி, இலக்கு மொழியில் இயல்பாக ஒலிப்பதா?  இந்தத் தேர்வு மொழிபெயர்ப்பின்  தொழில்நுட்பப் பிரச்சனை  என்பதைத் தாண்டி, மொழிபெயர்ப்பை படைப்புப்பூர்வமான, தத்துவார்த்தமான செயலாகப் பார்க்க உதவுகிறது. 

“This Almost-Unfolding “ என்ற கவிதையில் முன்பு எழுதியிருக்கிறேன், 

“You’re not done.  

Even here,  

you stretch,  

not with limbs,  

but with memory.  

The tree feels nothing,  

but the soil shifts.  

There’s still a need,  

a pull,  

to become again.

But the becoming  

is no longer yours.  

It’s the hunger of the ground.” 

Tuesday, June 16, 2026

பூவும் பாதமும்: பற்றுதலும் பற்றின்மையும்

"பாதம் பற்றிய பூ" கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை

----



ஒரு கவிதைத் தொகுப்பின் தொடக்கம் எழுதப்பட்ட முதல் வரியில் அமைவதில்லை; மாறாக, அது ஒரு நீடித்த கேள்வி நனவில் வேரூன்றும் தருணத்தில் நிகழ்கிறது. “பாதம் பற்றிய பூ” என்ற இந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை, அந்தக் கேள்வி ஒரு எளிய, கவனிக்கப்படாத சித்திரத்திலிருந்து எழுவதாக இருக்கிறது: உதிர்ந்த மலரும், கடந்து செல்லும் பாதமும், ஒன்றோடு ஒன்று சேர்ந்துகொள்ளும் அந்தச் சிறிய, கவனிக்கப்படாத தருணம். இந்த நூல், அந்த ஒட்டிக்கொள்ளும் கணத்தில் வாழ்வதற்கான ஒரு முயற்சி; நாம் கடந்துவிட்டதாக நம்பிய பின்னரும் நம்முடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நினைவுகள், நிலக்காட்சிகள், துயரங்கள், தற்செயலான கருணையின் கணங்கள் போன்றவற்றை வெளிப்படுத்தும் ஒரு கவிதையியலை உருவாக்குவதற்கான முயற்சி. இது, ஒருவன் தன்னை ஆழமாக ஆனால் மென்மையாக அந்நியப்பட்டதாக உணரும் ஒரு உலகிற்குச் சாட்சியாய் இருப்பதன் அர்த்தத்தைக் கண்டறியும் ஒரு தேடல்.


"பாதம் பற்றிய பூ" என்ற தலைப்புக் கவிதை, இத்தொகுப்பின் மைய தரிசனமாகவும் அதன் கவிதைக்கான கோட்பாடாகவும் விளங்குகிறது. அக்கவிதை ஒரு மனப்பழக்கத்தின், ஆன்மாவின் அனிச்சைச் செயலின் அமைதியான அவதானிப்புடன் தொடங்குகிறது:


"உதிர்ந்ததை விலக்குதலும்

மலர்ந்ததை கைக்கொள்வதும்

மனப்பழக்கம்”


இது பயன்பாட்டின் தர்க்கம்; முன்னோக்கிய இயக்கத்தின் தர்க்கம்; உயிர்ப்புடன் இருப்பதை வைத்துக்கொண்டு தேய்ந்ததை உதறிவிடும் ஒரு வாழ்க்கையின் தர்க்கம். ஆயினும், இந்தக் கவிதையும், உண்மையில் இந்த முழுத் தொகுப்பும், இந்தப் பழக்கத்தை எதிர்ப்பதிலேயே தங்கள் நோக்கத்தைக் கண்டடைகின்றன.


இந்தத் தர்க்கத்திற்கு எதிராக, சிறிய, உதிர்ந்த, முக்கியமற்றதாகத் தோன்றும் ஒன்றின் நிலைத்திருத்தலை இந்தத் தொகுப்பு முன்வைக்கிறது. பாதத்தில் ஒட்டிக்கொள்ளும் சிறிய வேப்பம்பூ ஒரு அமைதியான கிளர்ச்சியின் செயல். அது கவனத்தைக் கோரவில்லை; அதன் இருப்பு ஒரு தற்செயல் நிகழ்வு, ஒரு எச்சம். நீங்கள் அறியாத வரை மட்டுமே அது உங்களுடன் பயணிக்கிறது:


"நீங்கள் கவனிக்காதவரைக்கும்

கவனித்தால் நீங்கள் உதறிவிடுவீர்கள்தானே”


இந்த ஒட்டிக்கொள்ளும் செயல், அமைதியான, கவனச்சிதறலான ஒரு தருணத்தில் மட்டுமே கவனிக்கப்படும் இந்த நிலை, இந்தக் கவிதைகளின் முதன்மையான அக்கறைகளாக மாறியிருக்கின்றன. அவை, இந்தச் சிறிய வேப்பம்பூக்களைப் போன்றவை. அவை வாசகரின் நனவில் தங்களை இணைத்துக்கொள்ள முயல்கின்றன; பெரிய பிரகடனத்தின் வலிமையுடன் அல்ல, ஆனால் நீடித்த ஜீவனுடன் கூடிய சித்திரத்தின் அல்லது பாதி நினைவிலிருக்கும் ஒரு உணர்வின் நுட்பமான நிலைத்தன்மையுடன். அவை ஒரு கணத்தின், ஒரு நிலக்காட்சியின், ஒரு குறிப்பிட்ட ஒளிச்சாய்வின் எச்சங்கள். இக்கவிதையின் இறுதிப் பத்தி ஒரு முடிவல்ல; அது ஒரு நம்பிக்கையின் பிரகடனம்; இந்தத் தொகுப்பு கட்டமைக்கப்பட்டுள்ள அடித்தள நம்பிக்கை:


“சின்னஞ் சிறியதில் பென்னம் பெரியதும்

பென்னம் பெரியதில் சின்னஞ் சிறியதும்

இருப்பதை நீங்கள் உணரும்போது

எனக்கு ஆரோக்கியம் திரும்பிவிடுகிறது

என் வரிகள் செயற்கையாய் மாறிவிடுகின்றன. “


அற்பமானதில் ஆழமானதையும், தனித்துவமானதில் பிரபஞ்சத்தன்மையையும் உணரும் செயலில் ஒரு முழுமையை, ஒருவித ஆன்ம ஆரோக்கியத்தைக் கண்டடைவதில்தான் இத்தொகுப்பின் மைய இலட்சியம் உள்ளது: இந்த உணர்தல் நிகழும் கணத்தில், கவிதையே இரண்டாம்பட்சமாகி, "செயற்கையாகி" விடுகிறது, அதன் வேலை முடிந்துவிடுகிறது.


இந்தக் குறிப்பிட்ட பார்வை, கைவிடப்பட்ட, விளிம்புநிலையில் உள்ளவற்றின் மீதான இந்த கவனம், ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் இருந்து பிறக்கிறது. "பால் வடிதல்" கவிதையில், என் எழுத்தைப் பற்றிய அவதானிப்பை நான் ஒப்புக்கொண்டு வலியுறுத்த விரும்புகிறேன்:


"ஒரு அனாதையின் கண்கொண்டே

நான் எல்லாவற்றையும் பார்ப்பதாய்

நீ சொல்வது உண்மைதான்”


இந்த "அனாதையின் கண்" அனுதாபத்திற்கான ஒரு வேண்டுகோள் அல்ல, குறுகிய அர்த்தத்தில் ஒரு சுயசரிதை ஒப்புதல் வாக்குமூலமும் அல்ல. அது ஒரு கவிதை நிலைப்பாட்டின் விளக்கம். அது பற்றற்ற, ஆனால் ஆழ்ந்து கவனிக்கும் ஒரு பார்வை; அது கைவிடப்பட்ட நிலைகள், பலவீனமான நிலையற்ற அழகு ஆகியவற்றுக்கான உணர்கொம்புகளைக் கொண்டது.


இந்தக் கண்ணோட்டம், அய்யனார் சன்னதியின் அடிவாரத்தில் உள்ள "சிதிலமடைந்த மண் குதிரைகளை" நோக்கியும், தன் தோப்பில் தனியாக நிற்கும் பால் வடியும் இலுப்பை மரத்தின் மீதும், இத்தொகுப்பு முழுவதும் பரவியிருக்கும் துயரம் தோய்ந்த கவனிப்பின் தொனியையும் விளக்குகிறது.

அனாதையின் கண் உலகில் ஒரு நிலையான வீட்டையோ அல்லது பாதுகாப்பான இடத்தையோ கருதிக்கொள்வதில்லை; அது உலகைத் தற்காலிகத் தங்குமிடங்கள் எனவும் கண நேரத் தொடர்புகளின் தொகுப்பாகவும் பார்க்கிறது.



இந்தத் தொகுப்பின் தத்துவார்த்த, உணர்ச்சிகரமான கவலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் தேவைப்பட்டது, அல்லது ஒருவிதமான வடிவமற்ற தன்மை தேவைப்பட்டது. "பாதம் பற்றிய பூ" கவிதைகளின் வடிவங்கள், தம் உணர்ச்சிகளாலேயே தங்களை வடிவமைத்துக் கொண்டவை.


வடிவத்திற்கும் தத்துவத்திற்கும் இடையிலான இந்த உறவு "தெரு உருகிக்கொண்டிருக்கிறது" என்ற கவிதையில் மிகத் தெளிவாக ஆராயப்படுகிறது. கவிதை, டேனிஷ் தத்துவஞானி சோரென் கீர்க்ககார்டை நினைவுகூர்ந்து தொடங்குகிறது:


"சோரென் கீர்க்ககார்ட் பதற்றத்தை

சுதந்திர உணர்வின் தலைசுற்றல்

என வருணிப்பார் என்பது

உங்களுக்குத் தெரியும்தானே?”


இந்த வரி, இத்தொகுப்பின் ஒட்டுமொத்த வடிவ உத்திகளுக்கான தத்துவத் திறவுகோல். "சுதந்திரத்தின் தலைசுற்றல்”—நம்பிக்கை, யதார்த்தம் ஆகியவற்றின் அடித்தளங்கள் அகற்றப்படும்போது எழும் திகிலூட்டும், மயக்கமூட்டும் உணர்வு—அதுவே இந்தக் கவிதைகள் நிகழ்த்த முற்படும் நிலை. இந்தச் சுதந்திரத்திற்கான விலை, நம் கால்களுக்குக் கீழே உள்ள நிலமே நழுவுவது போன்ற உணர்வு என கவிதை தொடர்கிறது:


“நம் காலடி மண் நழுவுவதை

விலையாகக் கொடுக்கவேண்டும்”


பின்னர் கவிதை இந்தச் சரிவை வெளிப்படுத்துகிறது. பழக்கமான தெரு உருகிச் சரியத் தொடங்குகிறது. சரளைக் கற்களை விழுங்கிய சிட்டுக்குருவிகள் மெதுவாக தலைகீழாக விழுகின்றன. பழ வண்டியிலிருந்து பழங்கள் உருண்டு, "இரத்த சதைக்கோளங்கள் போல அந்தரத்தில் மிதக்கின்றன", திடமான கட்டிடங்கள் கூட "நெய் போல / மணல் மணலாய் வழுகுகின்றன”. இது வெறும் வருணனைச் சித்திரம் அல்ல; இது ஒரு அக, இருத்தலியல் நிலையின் புறவயமாக்கல். திடமான உலகம் அதன் ஒத்திசைவை இழந்துவிட்டது, ஏனெனில் அதை ஒன்றாக வைத்திருந்த அகக் கட்டமைப்பு கரைந்துவிட்டது. கவிதையின் வடிவம் இந்தச் சிதைவைப் பிரதிபலிக்கிறது. வரிகள் நீண்ட, உரைநடை போன்ற, மூச்சுத்திணற வைக்கும், தடுக்க முடியாத வேகத்துடன் ஒன்றோடொன்று விழுகின்றன. தொடரியல் நெகிழ்வானது, திரண்டு வருவது, வாசகருக்குப் பேச்சாளரின் மனக்குழப்பத்தைப் பிரதிபலிக்கும் ஒரு திசைதிருப்பல் உணர்வை உருவாக்குகிறது. கட்டமைப்பு உருகுவதை விவரிக்கவில்லை; அதுவே உருகுதலாக இருக்கிறது.


வடிவச் சுதந்திரத்திற்கும் முழுமையான வடிவமற்ற தன்மைக்கும் இடையிலான இந்த மெல்லிய கோட்டைப் பற்றிய எனது சொந்தப் பதற்றங்கள், "இப்படியாக அல்லது இப்படித்தான்" என்ற கவிதை சார்ந்த உரைநடைப் பகுதியில் ஒப்புக்கொள்ளப்படுகின்றன. "பறத்தலில் உறைதல்" கவிதையின் ஒரு வரியின் உரைநடை வடிவத்தில் இரண்டு முற்றுப்புள்ளிகளைக் கண்டறிந்தபோது ஏற்பட்ட எனது "கவலை"யைப் பற்றி நான் சிந்திக்கிறேன். இந்தச் சிறிய இலக்கணக் கவலை, கவிதைக்கும் உரைநடைக்கும், வடிவமைக்கப்பட்ட வடிவத்திற்கும் குழப்பமான சரிவிற்கும் இடையிலான எல்லையைப் பற்றிய ஆழமான பதற்றத்தை வெளிப்படுத்துகிறது. இந்த வடிவ நிச்சயமற்ற தன்மையை, ஜெர்மானிய மகாகவி ஃபிரெட்ரிக் ஹோல்டர்லினின் பிற்கால ஆண்டுகளில் இருந்த "தொன்மமயக்கத்துடன்" நான் தொடர்புபடுத்துகிறேன். இந்த வடிவமற்ற தன்மையுடனான உறவு, ஒரு ஆழமான ஆன்மீக அல்லது இருத்தலியல் நெருக்கடியின் அறிகுறி என்று கூறலாம். தொடரியல் சிதைவு, ஒரு வகையில், ஒரு உலகின் சிதைவு. பழைய ஒழுங்குகள்—அவை கவிதை, மதம், அல்லது சமூகம் சார்ந்தவையாக இருந்தாலும்—இனி செல்லுபடியாகாதபோது, கவிஞன் அந்தத் தலைசுற்றும் சுதந்திரத்தில் பயணிக்க வேண்டியுள்ளது; கவிதைகள் அந்த அபாயகரமான பயணத்தின் தடயங்களைத் தாங்கி நிற்கின்றன.


எனவே, இந்தக் கவிதைகளின் வடிவப் பரிசோதனை, மேலோட்டமாக ஒரு "நவீன" பாணியை அடைவது பற்றியது அல்ல. இது யதார்த்தத்தை ஒரு நிலையற்ற, நெகிழ்வான, ஆழ்ந்த அகவய அமைப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு திட்டமிட்ட முயற்சி. முடிவு, நிலையான பொருள் ஆகியவை தருகின்ற ஆறுதலை கவிதைகள் தொடர்ந்து எதிர்க்கின்றன. வாசகரை கவிதைகளின் பேசுகுரலின் அதே இருத்தலியல் "தலைசுற்றலை" அனுபவிக்க கட்டாயப்படுத்துகின்றன.


"மாற்று வாழ்வுகளின் ஆடி"யில் உள்ள ஆடி இந்தச் செயல்முறைக்கு ஒரு சரியான உருவகம். அது சுயத்தின் நிலையான பிரதிபலிப்பை வழங்கவில்லை, மாறாக வாழப்படாத சாத்தியக்கூறுகளின் ஒரு "சுழல்வட்டத்தை", நிகழ்காலத்தை அச்சுறுத்தும் மாற்று வாழ்க்கைகளின் ஒரு தொடர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆடி அல்ல, அதைச் சிதறடிக்கும் ஒன்று. அதே போன்று, இந்தக் கவிதைகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட யதார்த்தத்தின் நிலையான பிரதிபலிப்புகளாக இருக்க வேண்டும் என்பதற்காக எழுதப்படவில்லை. அவை உணர்தல், நினைவு ஆகியவற்றின் சாத்தியக்கூறுகளின் பல்பிரபஞ்சத்திற்கான நுழைவாயில்கள்.

இத்தொகுப்பின் நவீனத்துவம், கவிதைகளின் வடிவத்தைப் பயன்படுத்தி ஒரு ஒற்றை, புறவய யதார்த்தம் என்ற கருத்தையே கேள்விக்குட்படுத்துவதில் எழுச்சிபெறுகிறது. அது நனவை, உலகைக் கவனிக்கும் ஒரு நிலையான புள்ளியாக இல்லாமல், அது உணரும் உலகை தீவிரமாக உருவாக்கும் ஒரு தொடர்ச்சியான, பெரும்பாலும் குழப்பமான ஓட்டமாக முன்வைக்கிறது.


இத்தொகுப்பு, இயற்கையை பரந்த, அறநெறியற்ற, இறுதியில் அக்கறையற்ற சக்தியாக முன்வைக்கிறது. மனித இருப்பின் நிலையற்ற நாடகம் அரங்கேறும் அமைதியான, பெரும்பாலும் கொடூரமான மேடையாக, இத்தொகுப்பில் இயற்கை வாசகர்களுக்குப் புதிதாக அறிமுகமாகக்கூடும்.


"காலைப் பொழுதில்", கிண்டி தேசியப் பூங்கா அருகே ஒரு மானைச் சந்திப்பது காதல் உணர்விற்கான சந்தர்ப்பமாக அமையவில்லை. அந்த மான், ஆழ்ந்த மௌனத்தின் ஒரு பாத்திரம், அதன் கண்கள்


"மௌனத்தையே உயிர்வாழ்வதற்கான உத்தியெனக்

கற்றறிந்தவற்றின் நிசப்தத்தைத் தாங்கியுள்ளன”.


அதன் இருப்பே காலைக் காற்றில் அலைவுறும் ஒரு கேள்வியை எழுப்புகிறது: அது எதையாவது எதிர்பார்த்துக் காத்திருக்கிறதா, அல்லது வெறுமனே வாழ்வை சகித்துக்கொண்டிருக்கிறதா? மானின் அமைதியான சகிப்புத்தன்மை அதைச் சுற்றியுள்ள இயற்கை நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிறது. உதாரணமாக, வானம்,

"தன்னை வெறுமையாக்கிக் கொள்ளும்போது,

அதைச் சத்தமின்றிச் செய்கிறது”.


இயற்கையின் பெரும் நிகழ்வுகள்—வானம் தெளிவடைவது, ஒரு உயிர் நிலைத்திருப்பது ஆகியன — ஆரவாரமின்றி, ஒரு மனித சாட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் நிகழ்கின்றன.


இயற்கையின் அக்கறையின்மை என்ற இந்தத் கருப்பொருள் "நாணல்கள் அறிந்தது" கவிதையில் மேலும் கலக்கமூட்டும் முடிவுக்குத் தள்ளப்படுகிறது. இங்கே, சதுப்பு நிலத்தின் நிலக்காட்சி, மெதுவான நுகர்வு, சிதைவு ஆகியவற்றுக்கான அண்டவியல் செயல்முறைக்கான உருவகமாகிறது. கவிதை "கொடுமை என்று தோன்றும் அளவுக்குக் கூர்மையானது" என்ற உண்மையைச் சொல்கிறது.


“அமைதி சமாதானம் அல்ல,

நிசப்தம் கருணை அல்ல”


ஆகிய வரிகள், இயற்கையில் ஆறுதலையோ அல்லது தார்மீக ஒழுங்கையோ காண முயலும் எந்தவொரு முயற்சிக்கும் நேரடியான மறுப்பாக இருக்கின்றன. சதுப்பு நிலம், "பிரபஞ்சம் தன்னை முடிவில்லாமல் உண்கிறது" என்பதற்கான ஒரு இடம். மேலும் நாம், மனிதர்கள், இந்தச் சுழற்சியின் ஒரு பகுதி மட்டுமே என்பதால் "தயக்கமின்றி விழுங்கப்படுகிறோம்”.


கவிதையின் பேசுகுரல் இந்த முடிவற்ற, அறநெறியற்ற சிதைவுச் செயல்பாட்டில் ஒரு வெறும் சாட்சியாக, ஒரு "அலைவுறுபனாக" நிற்பதோடு முடிகிறது.


இந்தத் தொகுப்பு இயற்கையின் உள்ளார்ந்த வன்முறையிலிருந்து விலகிச் செல்லவில்லை, பெரும்பாலும் அதற்குள் ஒரு கலக்கமூட்டும் அழகைக் காண்கிறது.


"நீல கண்ட அறிக்கை" என்ற கவிதை, இயற்கை அழகை தெய்வீக அருளுடன் சமன்படுத்தும் மரபார்ந்த போக்கைச் சிதைக்கிறது. நீலகண்டன் (நீலக் கழுத்துடையவன், சிவபெருமானின் ஒரு பெயர்) என்று அழைக்கப்படும் பறவை தெய்வீகத்தின் சின்னமாக இல்லாமல், "சிறு பூச்சிகளை ஈவு இரக்கமில்லாமல் வேட்டையாடும்" ஒரு இரக்கமற்ற உயிரியாக விவரிக்கப்படுகிறது. அது தன் இரையைத் துன்புறுத்தி, காற்றில் தூக்கிப் போட்டுவிட்டு உண்கிறது. இந்தச் செயலைப் பார்ப்பது "தெய்வாம்சம் கூடிய சௌந்தர்யத்தை தரிசிப்பது" என்று கவிதை ஒரு சிலிர்ப்பூட்டும் அவதானிப்பை முன்வைக்கிறது, இதன் மூலம் தெய்வீகத்தை ஒரு சாதாரணமான குரூரத்துடன் சமன்படுத்துகிறது.


இதேபோல், "பூந்தேன் உறிஞ்சுதல்" கவிதையில், கரிச்சான் மற்ற உயிரினங்களை விரட்ட பருந்தின் குரலைப் போல போலியாகக் கத்தி ஏமாற்றுகிறது, பின்னர்


"சாவகாசமாய்க் கீழிறங்கி

பூந்தேன் உறிஞ்சுகிறது”.

இந்தக் கவிதைகளில் இயற்கை, உத்தி, வன்முறை, அறநெறியற்ற உயிர்வாழ்வின் ஒரு மண்டலம் மட்டுமே. எனக்கு இயற்கை மனித ஆன்மாவிற்கான ஒரு கிராமியப் புகலிடம் அல்ல.


இந்தக் கவிதைகளில் புற உலகம் அக்கறையற்ற இயற்கையின் ஒரு அம்சமாக இருந்தால், அக உலகம் சமமான சிக்கலும் அபாயகரமான நிலப்பரப்பாகவும் இருக்கிறது. இத்தொகுப்பு, நமது சுயம், யதார்த்த உணர்வைக் கட்டமைக்க நாம் பயன்படுத்தும் திறன்களான நினைவு, நனவு, உணர்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குகிறது. அவற்றை நம்பமுடியாதவை, குரூரமானவை, இறுதியில், ஒரு கனவைப் போல நெகிழ்வானவை என்று கண்டடைகிறது.


நினைவின் நெருக்கடி "காலைப் பொழுதில்" மிகவும் கடுமையாக வெளிப்படுத்தப்படுகிறது. தனது தந்தை ராபர்ட் பிரௌனிங்கை மேற்கோள் காட்டியதை நினைவுகூர்ந்த பிறகு, கவிதையின் பேசுகுரல் நினைவின் தன்மையைப் பற்றிச் சிந்தித்து, நினைவு கொடூரமானது என்ற முடிவுக்கு வருகிறது. அதன் குரூரம் அதன் ஆழ்ந்த போதாமையில் உள்ளது:


"அது உனக்கு பொருட்களின்

வடிவத்தை மட்டுமே தருகிறது,

அவற்றின் சாரத்தை

ஒருபோதும் தருவதில்லை”


கடந்த காலம் நமக்கு ஒரு வெற்று ஓடாக, அவற்றின் அசல் உணர்ச்சி வாழ்க்கையிலிருந்து வறண்டுபோன வடிவங்களாகவும் வார்த்தைகளின் தொகுப்பாகவும் மட்டுமே அணுகக்கூடியனவாக இருக்கின்றன. உணர்வும் சாரமும் என்றென்றைக்குமாக இழக்கப்படுகின்றன. இந்த நெருக்கடி இத்தொகுப்பு முழுக்க விரவியிருக்கிறது.


"அப்பா சொன்னது" கவிதையில் தந்தையின் நீண்ட காலத்திற்கு முந்தைய எச்சரிக்கை—"கடல் நோக்கி / எப்போதும் ஓடக்கூடாது” என்பது—ஒரு விதியின், ஒரு வடிவத்தின் நினைவு. கவிதையின் பேசுகுரல் வார்த்தைகளைச் சரியாக நினைவில் வைத்திருக்கிறது. ஆனால் கடலின் உண்மையான, திகிலூட்டும் சாரம் அந்த நினைவில் அடங்கவில்லை. அது ஒரு நிகழ்கால, தொடர்ச்சியான யதார்த்தம். "கடல் அழைக்கிறது / கடல் அழைக்கிறது” என்று வலியுறுத்தும் ஆழ்ந்த, அகக் குரல், ஆடைகளைக் களைந்து அதை நோக்கி ஓடத் தூண்டும் ஒரு பகுத்தறிவற்ற, அடக்க முடியாத உந்துதல். நினைவு நேர்த்தியான எச்சரிக்கையை வழங்குகிறது, ஆனால் யதார்த்தம் ஒரு குழப்பமான, ஆதிகால, ஆழ்ந்த தனிப்பட்ட அழைப்பாக இருக்கிறது. அதை நினைவால் விளக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இயலவில்லை.


நினைவு கடந்த காலத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு குறைபாடுள்ள கருவியாக இருந்தால், நனவு நிகழ்கால சுயத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு நிலையற்ற அடித்தளமாகும்.


இத்தொகுப்பு ஒற்றை, ஒத்திசைவான அடையாளம் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் கரைந்து போகச் செய்கிறது. "மாற்று வாழ்வுகளின் ஆடி" கவிதையில் பழைய வீட்டில் காணப்படும் ஒரு தூசி படிந்த ஆடி, கவிதையில் பேசுபவரின் தற்போதைய முகத்தைப் பிரதிபலிக்கவில்லை, மாறாக சாத்தியமான, வாழப்படாத வாழ்க்கைகளின் தலைசுற்றும் தொடர்ச்சிகளைப் பிரதிபலிக்கிறது. இந்தக் கனவு போன்ற தர்க்கம் படைப்பின் செயலுக்கே நீட்டிக்கப்படுகிறது. "மறக்கப்பட்ட ஆதியாகமத்தின் மணித்துளிகள்" ஒரு படைப்புப் புராணத்தை ஒரு வரலாற்று அல்லது நேரியல் நிகழ்வாக அல்ல, மாறாக குழப்பமான உளவியல் பயணமாக விவரிக்கிறது. ஆறு மாதுளை விதைகள் ஆறு வெவ்வேறு, தர்க்கமற்ற உலகங்களுக்கான நுழைவாயில்களாகின்றன: இது பிரபஞ்சத்தின் ஆதியாகமம் அல்ல, மாறாக ஒரு நனவின் ஆதியாகமம்; வேறுபட்ட, கனவு போன்ற துண்டுகளிலிருந்து ஒன்றாக இணைக்கப்பட்டது. கவிதையின் முடிவில் பூனைக்குட்டிகளின் பிறப்பு, இந்த உள் உலகங்கள் வழியான பயணத்தின் உச்சக்கட்டமாகும்.

இறுதியில், இந்தத் தொகுப்பு "யதார்த்தம்" என்பது ஒரு கொடுக்கப்பட்ட, புற உண்மை அல்ல, மாறாக மொழி, நினைவு, உணர்தல் ஆகிய பலவீனமான கருவிகள் மூலம் தீவிரமாக, தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்படும் ஒன்று என்று முன்வைக்கிறது. யதார்த்தத்தில் வேரூன்றிய சொற்கள், யதார்த்தத்தைப் போலவே ஒரு மாயத் தோற்றத்தையும் உருவாக்க வேண்டும்.


இந்தத் தொகுப்பின் இறுதி இலட்சியம், அதன் கருப்பொருள் கவலைகளையும் வடிவ உத்திகளையும் ஒருங்கிணைத்து, விளிம்புநிலைகளில் வாழக்கூடிய கவிதை மொழியை உருவாக்குவதாகும். இது வாசல்களுக்கான ஒரு மொழி: இருப்புக்கும் இல்லாமைக்கும், அர்த்தத்திற்கும் அர்த்தமற்ற தன்மைக்கும், பகலுக்கும் இரவுக்கும், வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான வெளிகளுக்கானது. கவிதைகள் இடைவெளிகளில் வாழ்கின்றன.

இதுதான் ஒரு கவிஞனாக நான் எனக்கு அமைத்துக்கொண்ட பணி: நிலையற்றதற்கு ஒரு தற்காலிகப் பெயரை வழங்குவது, கரைந்து போவதற்கு ஒரு வடிவத்தைக் கொடுப்பது, அதன் மறைவாலேயே வரையறுக்கப்படும் ஒன்றைப் பற்றிப் பேசுவது. "திரும்பிப் பார்த்தல்" கவிதை இந்த நேர நிலையைத் தெளிவாகக் கூறுகிறது, நிகழ்கணத்தின் தன்மையை ஒரு நிரந்தர வாசலாக வரையறுக்கிறது:


“இப்போது என்பது எப்போதுமே

அந்திப்பொழுதுதான்”


அந்தி, அந்த இடைப்பட்ட நேரம், இந்தக் கவிதைகளின் இயல்பான காலநிலை. அவை அதன் அரை-ஒளி, அதன் தெளிவின்மை, அதன் ஒரு முடிவின் அமைதியான உணர்வு, அதுவே ஒரு தொடக்கமாகவும் இருக்கிறது என்ற அவதானம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. 


அத்தகைய நிலையற்ற, நிச்சயமற்ற தன்மையின் முகத்தில், இத்தொகுப்பு பெரிய தத்துவ அமைப்புகளின் அல்லது ஆழ்நிலை ஆன்மீகத் தப்பித்தல்களின் ஆறுதலை வழங்கவில்லை. கடவுள்கள், தோன்றினால், ஒன்று அக்கறையற்றவர்களாக அல்லது குரூரமானவர்களாக இருக்கிறார்கள். ஒரு அமைதியான கருணை, ஏற்றுக்கொள்வதில், சிறுமையில், ஒரு தீவிரமான, பௌதிக, தொட்டுணரக்கூடிய உலகிற்குத் திரும்புவதில் கண்டுபிடிக்கப்படுகிறது.


"சிறுமை" கவிதையில் அது "உன்னை சிறியதாக்கிக் / கொள்ளும் கலை" என அறிவிக்கப்படுகிறது. அதனால் விழுந்த சிட்டுக்குருவியின் துயரத்தை உங்கள் மார்பில் ஒரு கண்டம் பிளப்பதைப் போலவும், முதல் மழைத்துளியின் மகிழ்ச்சியை உங்கள் தொண்டையில் ஒரு பெருங்கடல் எழுவதைப் போலவும் உணர முடிகிறது.

"பாதங்களில் உணர்தல்", அக, புற நிலப்பரப்புகள் வழியான ஒரு பயணத்திற்குத் தேவையான முடிவாகச் செயல்படுகிறது. தெரு உருகிய பிறகு, ஆடி உடைந்த பிறகு, நினைவு குரூரமானது என்று நிரூபிக்கப்பட்ட பிறகு, என்ன மிஞ்சுகிறது? கவிதை, இறுதி "முடிவு" வானத்திலோ அல்லது ஒரு மலை உச்சியிலோ காணப்படவில்லை, மாறாக ஒருவனின் பாதங்கள் பூமியில் படும் எளிய, ஆழ்ந்த, பௌதிக உணர்வில் உள்ளது என்று வலியுறுத்துகிறது:


“இறுதியாக,

நன்றியுணர்வுடன்,

உன் மனிதப் பாதங்கள்,

உறுதியான, ஆரவாரமற்ற,

முற்றிலும் அற்புதமான

தரையைத் தொடுவதை

உணர்வதில் உள்ளது.”


“பாதம் பற்றிய பூ”, இறுதியில், பெரிய நம்பிக்கை அமைப்புகளின் சரிவிற்குப் பிறகும் நிலைத்திருக்கக்கூடிய ஒரு சிறிய நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இது தொட்டுணரக்கூடிய, கணநேர, விளிம்புநிலை, சிறியவற்றின் மீதான ஒரு நம்பிக்கை. பிரபஞ்சம் அதன் அக்கறையின்மையை வெளிப்படுத்திய பிறகும், பாதத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு மறக்கப்பட்ட மலருக்கு—ஒரு அர்த்தமுள்ள, ஒருவேளை புனிதமான செயல் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை.

 

உள்ளங்கை நிறைத்த பவளமல்லி


இன்று பூஜைக்கு வீட்டுக்கு வந்த மலர்களில் கையளவு பவளமல்லி இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது. திருநெல்வேலியில் சிந்துபூந்துறையில் என் அம்மாவின் வீட்டுக்கு முன்னால் இருந்த வீட்டு வாசலில் ஒரு பவளமல்லி மரம் நின்றிருந்தது; தினசரி காலையில் அது பூச்செறிந்து தரையில் அந்நாளின் நறுமண வட்டத்தை எனக்காக வரையறுத்திருக்கும். பவளமல்லி இரவில் பூப்பது என்றொரு பேச்சு இருந்தாலும் அது முன்னிரவில் மலர்வது என்பதே உண்மை. அது பிரம்மமுகூர்த்ததில் மலர்வதால்   சமஸ்கிருதத்தில் பிரம்மதர்ஷன் புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. இன்று அது என் உள்ளங்கை நிறைத்திருக்கிறது. 

பவளமல்லியின் காம்பு செந்நிறத்தில் இருப்பதால் இது பழந்தமிழ் இலக்கியத்தில் சேடல் என்றழைக்கப்படுகிறது. கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் வரும் நீண்ட பூக்கள் பட்டியலில் சேடலும் ஒன்று. சிலப்பதிகாரத்தில் மதுரை மாநகரைக் காவல் காக்கும் பூதங்களில் ஒன்று கழுத்தில் பவளமல்லி மாலை அணிந்திருக்கிறது. நச்சினியார்க்கினியரைப் பின்பற்றி உ.வே.சா. சேடலை பாரிஜாதம் எனத் தன் உரையில் குறித்திருக்கிறார். 

சிவாகம விதிகள் பெண்கள் கழுத்தில் பவளமல்லியை அணியக்கூடாது என்று சொல்கின்றன. சீர்காழி, திருநாரையூர், திருக்கடிகை, திருக்கோட்டாறு, திருக்களர், தென்குரங்காடு துறை, மரக்காணம் ஆகிய ஊர்களிலுள்ள  சிவாலயங்களில் பவளமல்லி தலமரமெனப் படித்திருக்கிறேன்; பார்த்ததில்லை. 

நடந்தாய் வாழி காவேரி என்று நீங்கள் என்னைப் போல காவேரியின் ஓட்டத்தைபின்பற்றி காவேரி டெல்டா கிராமங்களில் நடந்து பார்த்திருந்தீர்கள் என்றால் பல இடங்களில் பவளமல்லி காடாய் செறிந்திருப்பதைப் பார்த்திருக்கலாம். தி.ஜானகிராமனும், சிட்டியும் சேர்ந்து எழுதிய இதே தலைப்புள்ள கட்டுரையில் தியாகராஜருக்கு இந்தக் காவேரியின் வழித்தடம்தான் அவருடைய கீர்த்தனைகளில் தூய்மை, பக்தி, நியாயமான கோபங்கள், அலுப்பு, ஏக்கம் ஆகியவற்றிற்கான முதல் இசைச்சுழிப்புகள் என்பதைக் குறிப்பிட்டிருப்பார்கள். 

தியாகராஜரின் நீலாம்பரி ராகத்தில் அமைந்த ‘என்னக மன்ஸுகு ரானி’ என்ற கீர்த்தனையில் வரும், ‘தாமரை, மல்லிகை, துளசி, இருவாட்சி, பவளமல்லி ஆகிய மலர்கொண்டு தொழாத கரங்களெதற்கோ? கரங்களெதற்கோ? இக்குடும்பமெதற்கோ?’ என்ற வரியை அவர் காவேரிக்கரை பவளமல்லிக்காடுகளை நேரடியாகப் பார்த்து அனுபவித்துதான் எழுதியிருக்கமுடியும். 

பவளமல்லியின் நறுமணம் நூறடிக்கு வீசும் என்பார்கள். மூவடுக்கிதழிகளாக வகைப்படுத்தப்படும் தாவரங்களின் மலரும் பூக்களின் குணமது. புராணக்கதையொன்றில் கிருஷ்ணன் சத்தியபாமாவின் முற்றத்தில் பவளமல்லியை நட்டு வைக்க அது வளர்ந்து ருக்மணியின் வீட்டு முற்றத்தில் பூக்களை சொரிகிறது; மணமோ இருவருக்கும் வீசுகிறது.

சிந்துபூந்துறை வீட்டு மாடியில் நின்று நானும் அம்மாவும் பவளமல்லி மரம் பூக்களைச் சொரிவதை கண் விழித்ததும் முதன்முதலாய்ப் பார்ப்போம். ஶ்ரீவைகுண்டத்தில் ஆண்டாளும் அப்படித்தான் கண்  விழிக்கிறாள். 

என் உள்ளங்கை நிறைத்திருக்கும் பவளமல்லியில் மலர்ந்த இந்த தினம் பொன்னுடைத்து.

---


Monday, June 15, 2026

ஓராயிரம் நிலவுகளில் ஒன்று வெளியே காய்வதில்லை: காவபட்டாவின் மாஸ்டர்பீஸ் ‘பனி தேசம்’



ஐந்து வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை ஐந்நூறு வார்த்தைகளில் சொல்வது ஆபாசம். ஒரு தூரிகைத் தீற்றல், முழு உருவத்தையும் கற்பனைக்கு விட்டுவிட வேண்டும். சாயத்தை அள்ளிப் பூசினால், கல்யாண வீடுகளில் நகைக்கடை போலப் பட்டுப்புடவை சரசரக்க வளையவரும் பெண்களைப் போலப் பார்க்கவே கண்கள் கூசும். இவ்வாறு எளிமையின் அழகியலைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். என்றாலும், பாஷோவின் ஹைக்கூக்களிலும் காவபட்டாவின் நாவல்களிலும் எளிமை சாதிக்கும் நுட்பமும் தீவிரமும் உண்டு. மொழிச்சிக்கனம் அழகை எப்போதுமே கூட்டிக்கொண்டிருக்கிறது என்பதை நிரூபிப்பது போல இந்த உரையை ஆரம்பிப்பதே பொருத்தமாக இருக்கும்.

காவபட்டா தன்னுடைய நோபல் பரிசு ஏற்புரையை, ‘ஜப்பானிய இலக்கியத்தில் பனியும் நிலவும்’ என்றே தலைப்பிட்டிருந்தார். பாஷோவின் ஓராயிரம் நிலவுகளைச் சுட்டிக்காட்டும் காவபட்டா, பாஷோவின் பல ஹைக்கூக்களில் நிலவு வெளியே காய்வதில்லை என்கிறார். சங்க அகப்பாடல்களைப் பற்றித்தான் காவபட்டா பேசுகிறாரோ என்ற சந்தேகம் நமக்கு வலுக்கிறது.


அகவெளியில் காயும் நிலவின் மெல்லிய கிரணங்களை ஒரு வரியில் சொல்ல, அதன் அதீதம் பீடிக்கும் வாசகனுக்கு உன்மத்தம் ஏறும். முழு நாவல்களையுமே பல நூறு ஹைக்கூக்களின் தொகுதி போல எழுதும் காவபட்டா, பாஷோவின் அகவெளிக் கிரணம் ஏற்படுத்தும் உன்மத்தத்தை, மெல்லிய சித்திரமாய்த் தீட்டப்படும் கிமோனோவின் ஒற்றை முடிச்சு, புறாக்குஞ்சு போல விம்மும் ஒற்றை முலை, கண்ணாடியில் தெரியும் பாதி முகம், கூந்தலில் செருகியிருக்கும் சிறு கிளிப், கழுத்துப்பட்டியில் (scarf) இருக்கும் நாரை, சிறு பாதங்களின் மென்மையான நடை , வண்ணக்குடை என்பனவற்றின் மூலம் ஏற்படுத்திவிடுகிறார். படித்து முடித்தபின், ஒவ்வொரு நாவலும் உயர் கவித்துவப் பாலியல் வெளியாக விரிகிறது.


வீணாகிவிட்ட அழகின் துக்கம், அதனால் ஏற்படும் தனிமையின் துயரம் ஆகியவையே காவபட்டாவின் முதன்மையான கருப்பொருள்களாக அவருடைய நாவல்களில் எழுச்சி பெறுகின்றன. இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் ஜப்பானியரான காவபட்டா, இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார்.


ஒசாகாவில் ஜூன் 11, 1899-ல் பிறந்த காவபட்டாவின் குழந்தைப் பருவம், இழப்புகளின் பட்டியலாக இருந்தது. சீனக் கவிதைகளில் ஆர்வமுள்ள அவரது தந்தை, ஒரு மருத்துவர், காவபட்டாவுக்கு இரண்டு வயதாக இருந்தபோது இறந்துவிட்டார். ஒரு வருடம் கழித்து அவரது தாயும் இறந்தார். அவரது தாய்வழித் தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட அவர், பின்னர் ஏழு வயதில் தனது பாட்டியையும், ஒன்பது வயதில் தனது ஒரே சகோதரியையும் இழந்தார். பதினைந்து வயதிற்குள், அவரது கடைசி நெருங்கிய உறவினரான தாத்தாவும் இறந்துவிட, அவர் அனாதையானார். இந்தத் தொடர்ச்சியான மரணங்கள் அவரது மனதிலும், அதன் விளைவாக அவரது இலக்கியப் படைப்புகளிலும் நீண்ட நிழலைப் படர்த்தியது என்பதில் ஐயமில்லை. அவரது நாவல்களில் பரவியிருக்கும் ஆழ்ந்த தனிமை உணர்வும், வாழ்க்கையின் நிலையாமைப் பற்றிய கூர்மையான விழிப்புணர்வும் இந்த ஆரம்பகால இழப்பு அனுபவங்களிலிருந்து ஊற்றெடுக்கின்றன எனலாம். பிற்காலத்தில், காவபட்டா தனது நெருங்கிய நண்பரான எழுத்தாளர் யூக்கியோ மிஷிமா உட்படப் பலருக்கு இரங்கற்பாக்களை எழுதினார். அவரது வாழ்க்கை இவ்வாறாக, அவரை மீண்டும் மீண்டும் துக்கம் அனுசரிப்பவரின் பாத்திரத்தில் இருத்தியிருந்தது.


துயரத்தில் மூழ்குதல், ஒரு குறிப்பிட்ட உணர்திறன் முறையை, ஒரு ‘அனாதையின் பார்வையை’ காவபட்டாவின் எழுத்துக்களில் வளர்த்தது எனலாம். இது இருப்பின் நிலையாமை, அழகின் பலவீனம், பிரிவின் தவிர்க்க முடியாத தன்மை ஆகியவற்றை, கூர்மையான கருப்பொருள்களாக காவபட்டாவின் எழுத்தில் மாற்றின. அத்தகைய பார்வை, காவபட்டாவே தன் படைப்புகளை ‘இரங்கற்பாக்கள்’ என்று அழைக்கும்படிக்குக் கூர்மையாக இருந்தது. சுமார் இருபது வயதில், காவபட்டா திருமணம் செய்துகொள்ள விரும்பிய இளம் பெண்ணான ஹட்சுயோ இடோவால் கைவிடப்பட்டார். இந்த அனுபவம், காதல்,  மகிழ்ச்சி ஆகியவற்றை அடைவது குறித்த அவரது அவநம்பிக்கையான அணுகுமுறைகளை வலுப்படுத்தியிருக்கலாம்.

காவபட்டாவின் முறையான இலக்கியக் கல்வி, டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. அங்கு அவர் 1920-ல் சேர்ந்தார்; ஆரம்பத்தில் ஆங்கில இலக்கியத் துறையிலும், பின்னர் ஜப்பானிய இலக்கியத்திற்கும் மாறி, 1924-ல் பட்டம் பெற்றார். இந்தக் காலகட்டத்தில், அவர் ஜப்பானிய இலக்கியத்தின் முன்னோடி நவீனத்துவ எழுத்து இயக்கத்தில் ஒரு முக்கியமான எழுத்தாளரானார். எழுத்தாளர் ரிச்சி யோகோமிட்சு போன்ற பிற ஜப்பானிய நவீனத்துவ எழுத்தாளர்களுடன் இணைந்து காவபட்டா, அக்டோபர் 1924-ல் ‘புங்கெய் ஜிடாய்’ ("கலைக் காலம்") என்ற இலக்கிய இதழை நிறுவினார். இந்த இதழ், ஜப்பானிய நவீனத்துவ இலக்கியத்தின் முதன்மை முகமாக மாறியது.


காவபட்டா 1925-ம் ஆண்டு ஒரு கட்டுரையில், வழக்கமான இலக்கணத்தின் சிறையிலிருந்து தப்பிக்கக்கூடிய ஒரு புதிய எழுத்து முறையை ஆதரித்தார். இது, உணர்வுகள், உணர்ச்சிகள், நினைவுகளின் தொகுப்பாக நவீன எழுத்து இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. இந்தக் நவீனத்துவக் கோட்பாடு, காவபட்டாவுக்குக் கதை வடிவங்களை உளவியல் ஆழத்துடன் பரிசோதனை செய்வதற்கான ஒரு கட்டமைப்பை வழங்கியது.


இருப்பினும், மேற்கத்திய நவீனத்துவத்துடனான இந்த ஈடுபாடு, ஐரோப்பியப் பாணிகளின் வெறும் சாயலைக் காவபட்டாவிடம் ஏற்படுத்தவில்லை. மாறாக, அவரை ஒரு தனித்துவமான ஜப்பானிய நவீனத்துவத்தை நோக்கிய பாதையை உருவாக்க அனுமதித்தது. அவரது பிற்காலப் படைப்புகள், குறிப்பாக ‘பனி தேசம்’, நவீனத்துவ நுட்பங்களான உளவியல் உள்நோக்கு, துண்டு துண்டான அத்தியாயக் கதை அமைப்பு போன்றவற்றை, ஆழமாக வேரூன்றிய பாரம்பரிய ஜப்பானிய அழகியல் கொள்கைகளான ‘மோனோ நோ அவாரே’ (பொருள்களின் பரிதாபம்), ‘யூஜென்’ (மர்மமான ஆழம்) ஆகியவற்றுடன் அவர் திறமையாக இணைப்பதைக் காட்டுகின்றன.


‘பனி தேசம்’ நாவல் எழுதப்பட்ட காலம், ஜப்பானில் இராணுவவாதமும் இரண்டாம் உலகப் போரும் தீவிரமடைந்த காலகட்டமாகும். முக்கியமாக 1935-லிருந்து 1941 வரை ‘பனி தேசம்’ தொடர்கதையாகப் பல பத்திரிகைகளில் வெளிவந்தது. அதன் இறுதி வடிவம் 1948-ல் வெளியிடப்பட்டது. இரண்டாம் உலகப் போர் தன் எழுத்தின் மேல் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட காவபட்டா, போருக்குப் பிந்தைய ஜப்பானில் இரங்கற்பாக்களை மட்டுமே எழுத முடியும் எனக் குறிப்பிட்டார். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட துக்கங்களும், போரின் விளைவுகளான வரலாற்றுக் காலமும் ஒன்றிணைந்தன. காவபட்டா அந்தக் காலத்தின் இராணுவவாத ஆர்வத்தில் பங்கேற்க மறுத்து, போருக்குப் பிந்தைய அரசியல் சீர்திருத்தங்களில் சிறிதும் ஆர்வம் காட்டாமல், நேரடி அரசியல் ஈடுபாட்டிலிருந்து பெரும்பாலும் விலகியிருந்தாலும், அவரது பொருள் தேர்வு அந்தக் காலத்தின் பின்னணியில் விளக்கப்படக்கூடியதாகவே இருக்கிறது. போரின் வெளிப்படையான சித்தரிப்புகளை விட, ‘பனி தேசத்தின்’ தொலைதூர, தனிமைப்படுத்தப்பட்ட உலகம், அதன் கெய்ஷாக்களின் வாழ்க்கையில் அவரது கவனம் ஆகியவை, அந்தக் காலகட்டத்தில் நிலவிய கடுமையான அரசாங்கத் தணிக்கையைச் சமாளிப்பதற்கான ஒரு வழிமுறையாக இருந்திருக்கலாம். மேலும், சில விமர்சகர்கள், தனது புனைகதைகளில் போரிலிருந்து வேண்டுமென்றே விலகிச் செல்வதன் மூலம், காவபட்டா ஒரு வகையான செயலற்ற எதிர்ப்பில் ஈடுபட்டார் என்றும், தேசியவாதக் கூச்சலுக்கு மத்தியில் அழகியல் சிந்தனைக்கும் மனித உணர்ச்சிக்குமான ஒரு இலக்கிய இடத்தைப் பாதுகாத்தார் என்றும் குறிப்பிடுகின்றனர். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் தோல்விக்குப் பிறகு, 1948-ல் ‘பனி தேசத்தின்’ இறுதிப்படுத்தல், ஒருவேளை எப்போதும் இருந்திருக்கக்கூடிய இரங்கற்பாத் தொனியை, பேரழிவு இழப்புடன் போராடும் ஒரு தேசத்தின் கூட்டு மனநிலையுடன் எதிரொலிப்பதாக மாற்றியது.


1968-ம் ஆண்டில், காவபட்டா இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றபோது சர்வதேச இலக்கிய அங்கீகாரத்தின் உச்சத்தை அடைந்தார். இந்த மரியாதையைப் பெற்ற முதல் ஜப்பானிய எழுத்தாளர் ஆனார். நோபல் குழு, அவரைக் கூர்மையான உணர்திறனுடன் ஜப்பானிய மனதின் சாரத்தை வெளிப்படுத்தும் அவரது கதைசொல்லும் திறனுக்காகப் பாராட்டியது. இந்தத் திறனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்புகளில் ‘பனி தேசம்’, ‘ஓராயிரம் நாரைகள்’, ‘பழைய தலைநகரம்’ ஆகிய நாவல்கள், குழுவால் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டன.


காவபட்டாவின் நோபல் சொற்பொழிவு, அவரது கலைக் கோட்பாட்டின் ஆழ்ந்த வெளிப்பாடாக இருந்தது. அதில், அவர் ஐரோப்பிய இலக்கிய மரபுகளிலிருந்து வேண்டுமென்றே தன்னைத் தூர விலக்கிக் கொண்டார். அதற்குப் பதிலாக, இடைக்கால ஜென் துறவிகளின் ‘டங்கா’, ‘ஹைக்கூ’ போன்ற பாரம்பரிய ஜப்பானியக் கவிதை வடிவங்களுடனும், ஜென் பௌத்தத்தின் பரந்த தத்துவ நீரோட்டங்களுடனும் தனது ஆழ்ந்த ஆன்மீக, அழகியல் உறவை வலியுறுத்தினார். அவர் "வெறுமை" என்ற அழகியலை மேற்கத்திய சூனியவாதமாக அல்ல, மாறாகக் கிழக்கின் ஆன்மீக அடித்தளமாக முன்வைத்தார். இந்தச் சொற்பொழிவு, ‘பனி தேசம்’ உட்பட அவரது படைப்புகளை உயிரூட்டும் பார்வையைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதது. அவருக்கான நோபல் பரிசு, ஜப்பானிய இலக்கியத்திற்கு முன்னோடியில்லாத உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. அவரது தனித்துவமான உரைநடையும் இந்த சர்வதேசப் பாராட்டுகளின் மையத்தில் இருந்தது.


காவபட்டாவின் வாழ்க்கை ஏப்ரல் 16, 1972 அன்று ஜப்பானின் ஜூஷியில் முடிவுக்கு வந்தது. எரிவாயு நச்சுப்படுத்தலால் ஏற்பட்ட அவரது மரணம் தற்கொலை என்று பரவலாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அவரது விதவை ஹிடேகோ உட்படச் சில நெருங்கிய நண்பர்கள் இது தற்செயலாக நடந்திருக்கலாம் என்று வாதிட்டனர். 1970-ல் மிகவும் சடங்கு ரீதியான தற்கொலை செய்துகொண்ட அவரது நண்பர் யூக்கியோ மிஷிமாவின் மரணம், அவரை ஆழமாகப் பாதித்தது. காவபட்டா எந்தக் குறிப்பையும் விட்டுச் செல்லவில்லை. அது உண்மையில் தற்கொலையாக இருந்தால், அவரது நோக்கங்கள் தெளிவாகத் தெரியவில்லை.


அவரது மரணத்தின் புதிரான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், காவபட்டாவின் இலக்கிய மரபு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. எண்ணற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது படைப்புகள், மனித உணர்ச்சிகளின் நுட்பமான சித்தரிப்பு, அவற்றின் ஆழ்ந்த அழகியல் உணர்திறன், ஜப்பானியப் பாரம்பரியம், நவீனப் பிரக்ஞை இரண்டுக்குமான தனித்துவமான இணைவு ஆகியவற்றிற்காக உலகளவில் படிக்கப்பட்டும் ஆய்வு செய்யப்பட்டும் வருகின்றன. அவரது இலக்கிய முத்திரைகளில் ஜென் பௌத்தத்தின் ஆழ்ந்த செல்வாக்கு, குறிப்பாகத் தனிமை மூலம் அடையப்படும் நுண்ணறிவு, ஹைக்கூவின் ஆன்மா, அதன் சொற்சிக்கன வெளிப்பாடு, சூசகம், கற்பனையைத் தூண்டும் காட்சிப்படுத்துதல்கள் ஆகியவற்றிற்காக உலக இலக்கியத்தில் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுகின்றன. காவபட்டாவின் பாத்திரங்கள் பெரும்பாலும் தொலைதூரத் தனிமையாளர்களாக, உலகை ஒரு துக்ககரமான கூர்மையுடன் கவனித்து, அழகு, தனிமை, வாழ்க்கையின் துயரமான நிலையாமை ஆகியவற்றைப் பற்றி ஒளி வீசும் தருணங்களைத் தரக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.


‘பனி தேசம்’ நாவல், பல்வேறு இலக்கிய இதழ்களில் வெளியிடப்பட்ட, தளர்வாக இணைக்கப்பட்ட சிறுகதைகள், அத்தியாயங்களின் தொடராகத் தொடங்கியது. ஜனவரி 1935-ல் ‘ஒரு மாலைக் காட்சியின் கண்ணாடி’ வெளியீட்டுடன் இந்தப் பயணம் தொடங்கியது. இது ஷிமாமுரா, கோமாகோ ஆகிய மையப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியது. இதழின் காலக்கெடு காரணமாகத் தனது அனைத்துப் பொருட்களையும் இந்த முதல் பகுதியில் பொருத்த முடியாததால், காவபட்டா கதையை ‘ஒரு வெண்ணிறக் காலையின் கண்ணாடி’யில் தொடர்ந்தார். இது சிறிது காலத்திற்குப் பிறகு மற்றொரு இதழில் வெளியிடப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில், மேலும் தவணைகள் தோன்றின: 1935-ன் பிற்பகுதியில் "கதை" அல்லது “கதை”, "டோரோ", "வீணான முயற்சிகள்"; 1936-ல் “மிஸ்காந்தஸ் மலர்”, அதைத் தொடர்ந்து 1936, 1937 ஆகிய ஆண்டுகளில் ஆறாவது, ஏழாவது கதைகளைக் காவபட்டா வெளியிட்டார். இந்தப் பகுதிகள் சேகரிக்கப்பட்டு 1937-ல் ‘யுகிகுனி’ என்ற முதல் புத்தகப் பதிப்பாக வெளியிடப்பட்டன. இந்த ஆரம்பகாலத் தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. 1937-ம் ஆண்டு வெளிவந்த பதிப்பில் காவபட்டா, ‘பனி தேசம்’ நாவலின் புனைவுலகத்தை விரிவுபடுத்தினார். 1939, 1940 ஆகிய ஆண்டுகளில் இதழ்களில் மேலும் இரண்டு அத்தியாயங்களை வெளியிட்டார்.  1946, 1947 ஆகிய ஆண்டுகளில் மேலும் திருத்தங்கள் செய்தார். எட்வர்ட் சீடென்ஸ்டிக்கரின் செல்வாக்குமிக்க ஆங்கில மொழிபெயர்ப்பு, அடுத்தடுத்த சர்வதேசப் பதிப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘பனி தேசத்தின்’ உறுதியான பதிப்பு, இறுதியாக 1948-ல் வெளியிடப்பட்டது. இதற்குப் பிறகும், கோமாகோ, யோகோ ஆகிய பாத்திரங்களுக்கு இடையேயான தெளிவற்ற உறவைத் தெளிவுபடுத்த மற்றொரு அத்தியாயத்தைச் சேர்ப்பது பற்றிக் காவபட்டா சிந்தித்தார், ஆனால் இறுதியில் அதைக் கைவிட்டார். இந்தச் சிக்கலான, நீட்டிக்கப்பட்ட வெளியீட்டு வரலாறு, நாவலின் அமைப்பு, சூழல், அதன் நீடித்த செல்வாக்கு ஆகியவற்றுடன் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ளது.


‘பனி தேசம்’ நாவலின் இந்தத் துண்டு துண்டான உருவாக்கம், ஒரு ஒருங்கிணைந்த பார்வையின் பற்றாக்குறையைக் குறிப்பதற்குப் பதிலாக, அதன் பாத்திரங்கள், கருப்பொருள்கள் மற்றும் ‘பனி தேசத்தின்’ சூழல் ஆகியவற்றின் மேல் தொடர்ந்த தியானத்தை அதன் ஆசிரியருக்கும் வாசகர்களுக்கும் ஏற்படுத்தின. இந்தச் செயல்முறை, காவபட்டாவுக்கு அர்த்தங்களை அடுக்கடுக்காக வைக்கவும், அவரது தனித்துவமான காட்சிப்படுத்துதல்களைச் செம்மைப்படுத்தவும், ஒரு நீண்ட காலத்திற்கு உளவியல் நுணுக்கங்களை ஆழப்படுத்தவும் அனுமதித்தது. இந்த மெதுவான அணுகுமுறையால், நாவலில் தீர்க்கப்படாத உணர்ச்சிகள், தனிமைப்படுத்தப்பட்ட வெப்ப நீரூற்று மலைக் கிராமத்தின் காலத்தின் மெதுவான ஓட்டம் ஆகியவற்றை பிரதிபலிப்பதாக மாறின. காவபட்டாவின் படைப்புகளில் அடிக்கடி குறிப்பிடப்படும் சிறப்பியல்பான முற்றுப்பெறாத உணர்வு, இந்த நாவலில் உச்சம் பெற்றது. மேலும், காவபட்டாவின் தொடர் தியானம், நாவலை ‘ரெங்கா’ (இணைக்கப்பட்ட வசனக் கவிதை) போன்ற பாரம்பரிய ஜப்பானியக் கலை வடிவங்களுடன் சீரமைப்பதாகவும், அங்கு ஒரு படைப்பு முன்கூட்டியே திட்டமிடப்படாமல், அடுத்தடுத்து வாழ்க்கை போலவே காலப்போக்கில் விரிவதாகவும் அமைந்தது.


‘பனி தேசம்’, காவபட்டாவின் தலைசிறந்த படைப்பு என்று குறிப்பிடுவது தற்செயலான விமர்சனக் கருத்தொற்றுமை அல்ல. மாறாக, அதன் ஆழ்ந்த கலைச் சாதனைகள், அதன் புதுமையான கதை அணுகுமுறை, அதன் நீடித்த செல்வாக்கு, ஜப்பானிய இலக்கியத்தை உலகளாவிய முக்கியத்துவத்திற்குக் கொண்டு வந்ததில் அதன் குறிப்பிடத்தக்க பங்கு ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது. நாவலின் புகழ், அதன் ஆரம்பகால வரவேற்பு முதல் நோபல் குழுவின் அங்கீகாரம், வாசகர்கள், விமர்சகர்கள் மீது அதன் நீடித்த செல்வாக்கு வரை பல காரணிகளின் சங்கமத்திலிருந்து உருவாகிறது.


‘பனி தேசத்தின்’ உயர் இலக்கிய அந்தஸ்திற்கு நாவலின் பல முக்கிய அம்சங்கள் பங்களிக்கின்றன.


நாவல் மூன்றாம் நபரில் எழுதப்பட்டிருந்தாலும், புறநிலை என்பதற்கு நேர்மாறான ஒரு உலகக் கண்ணோட்டத்தை அது அளிக்கிறது. வாசகர், ஷிமாமுராவின் அகநிலை உணர்வுகள் மற்றும் அவரது மாயைகள் மூலம் உலகை அனுபவிக்கிறார். இந்த அணுகுமுறை, அந்தக் கால ஜப்பானிய நாவல் எழுத்தில் முன்னோடியில்லாதது.


நாவலின் எழுத்துப்பணியின் நுட்பமான அழகு, அதன் ஓவியம் போன்ற காட்சிகளின் சித்தரிப்புக்காகத் தொடர்ந்து பாராட்டப்படுகிறது. இந்தக் கலைத்திறன், ‘யதார்த்தம் இல்லாத’ ஆனால் அழகான கற்பனையாக வாசகரை ஈர்க்கும் ஒரு உலகத்தை உருவாக்குகிறது. நாவலின் உரைநடை, அதன் துல்லியம், சொற்சிக்கனம், தொனியின் சூசகம் ஆகியவற்றில் ஹைக்கூவைப் போன்றதாக இருக்கிறது. அங்கு கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காவபட்டாவின் சொற்சித்திரங்கள், சிக்கலான உணர்ச்சிகளையும் சூழல்களையும் வாசக மனதில் தூண்டுகின்றன.


‘பனி தேசம்’ நாவல் ஒரு குறிப்பிட்ட மலைதேசக் கிராமத்தில் நிகழ்ந்தாலும், அது உலகளாவிய மனித அனுபவங்களை ஆராய்கிறது. மனிதத் தொடர்புக்கான ஏக்கம், காதலின் வலி, தனிமை உணர்வு, வீணடிக்கப்பட்ட ஆற்றல், அழகுடன் ஏற்படும் காவிய மோதல் ஆகியவற்றின் சித்தரிப்புகள், நாவலை வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியில் உள்ள வாசகர்களுடன் ஆழமாக எதிரொலிக்க வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடுக்கின்றன.


வெளிப்படையான சித்தரிப்புகளை நாடாமல், தீவிரமான சிற்றின்பம்  காமப் பதற்றம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் காவபட்டாவின் உரைநடைத் திறன், அவரது அதிநவீனக் கலைத்திறனின் ஒரு அடையாளமாகும். பேசப்படாதவை, சூசகமாகப் பரிந்துரைக்கப்பட்டவை, சூழல் சார்ந்தவை அனைத்தும் வாசகரின் கற்பனையைத் தூண்டும் ஒரு சக்திவாய்ந்த ஆசையின் அடிநாதத்திற்குப் பங்களிக்கின்றன.


‘பனி தேசத்தில்’ மனித உறவுகள் தெளிவற்ற தன்மையால் நிறைந்திருக்கின்றன. அழகு, துக்கத்துடன் பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டிருக்கிறது. நிலப்பரப்பே உணர்ச்சி, இருத்தலியல் நிலை ஆகியவற்றின்  ஆழ்ந்த குறியீடாக மாறும் ஒரு நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட கதை உலகை  வெளிப்படுத்துகிறது.


‘பனி தேசத்தின்’ உணர்ச்சி மையம், அதன் மூன்று முக்கியப் பாத்திரங்களான ஷிமாமுரா, கோமாகோ, யோகோ ஆகியோருக்கு இடையிலான சிக்கலான, இறுதியில் நிறைவேறாத உறவுகளில் உள்ளது. தொலைதூர வெப்ப நீரூற்றுக் கிராமத்தின் பேரெழிலின் பின்னணியில் அவர்களின் தொடர்புகள், தனிமை, மனித உறவுகளின் மழுப்பலான தன்மை ஆகியவற்றின் துயரமான சித்திரத்தை நாவல் வரைகிறது.


பற்றற்ற அழகியலாளரும் மெய்நிகர் தேடலும் கொண்ட கதாநாயகனான ஷிமாமுரா, டோக்கியோவிலிருந்து வரும் ஒரு ஓய்வுநேர மனிதர். திருமணமானவர்,  மனைவி குழந்தைகளுடன் டோக்கியோவில் வாழ்பவர்.  ‘பனி தேசத்திற்கு’ ஓய்வெடுக்கவும், தனது திருமணத்தின் வெறுமை.அவரது டோக்கியோ வாழ்க்கை முறை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கவும் வருகிறார். அவர் பார்த்திராத பாலேவைப் பற்றி எழுதும் ஒரு சோம்பேறித்தனமான மூன்றாம் தர எழுத்தாளர் என விவரிக்கப்படுகிறார். இது, வாழும் யதார்த்தத்தில் அவரது பற்றின்மையையும், கலை, அழகு ஆகியவற்றிற்கு அறிவுசார்ந்த, இரண்டாம் நிலை அனுபவத்திற்கான அவரது விருப்பத்தையும் உடனடியாக நிறுவுகிறது. நாவல் முழுவதும், ஷிமாமுரா முதன்மையாக ஒரு பார்வையாளராக இருக்கிறார். அவர் வாழ்க்கையையும் உறவுகளையும், குறிப்பாகக் கோமாகோவுடனான தனது உறவை, ஒரு அழகியல் கண்ணோட்டத்தில் பார்க்க விழைகிறார். அவர் எந்தவொரு வழக்கமான அர்த்தத்திலும் யாரையும் காதலிக்க இயலாதவர். அவரது பாசங்கள் சீரற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் இருக்கின்றன. மெய்நிகர் மீதான அவரது மோகம், நாவலின் புகழ்பெற்ற தொடக்கக் காட்சியில் ரயிலில் சுருக்கமாகக் காட்டப்படுகிறது. அவர் யோகோவின் உடல் இருப்பால் அல்ல, மாறாக ரயில் ஜன்னலில் அவளது பிரதிபலிப்பால் கவரப்படுகிறார். இது ஷிமாமுராவின் நேரடி மனித அனுபவத்திலிருந்து தன்னை அழகியல்மயமாக்குவதற்கும் தூர விலக்குவதற்கும் உள்ள போக்கை கச்சிதமாக உள்ளடக்கியுள்ளது. அவர் கனவு போன்ற, இறுதியில் அருவமான அழகுக்கு ஈர்க்கப்படுகிறார். இந்த அழகியல் பற்றின்மை, இருப்பினும், ஒரு உளவியல் பற்றாக்குறையிலிருந்து வருகிறது. அவரது தீவிர அழகியல் பாராட்டுதலின் தருணங்கள், பெரும்பாலும் அவரைத் தன்னுணர்வற்ற, கொடூரமான செயல்களுக்கு இட்டுச் செல்கின்றன. கோமாகோவால் அவர்களின் சாத்தியமற்ற எதிர்காலத்தையும், அவருக்கான மற்றொரு கெய்ஷா அனுபவமாக அவளது இறுதி வகைப்படுத்தலையும் ஷிமாமுராவின் சொற்கள் உறுதிப்படுத்துவதாக அவள் உணர்கிறாள். இந்த உணர்தல், அவளை அடிக்கடி நிலையிழக்கச் செய்கிறது. ஷிமாமுராவுக்கு கோமாகோவின் பெரும் உணர்ச்சிப் பிழம்பான காதல் புரிவதில்லை. அவர் தன்னுடைய உணர்ச்சிப் பற்றாக்குறையுடனேயே யோகோவினால் அடிக்கடி ஈர்க்கப்படுபவராக இருக்கிறார்.


ஷிமாமுராவைப் போலல்லாமல், கோமாகோ தீவிரமான, நேரடி உணர்ச்சிப் பிழம்பின் வடிவம். அவள் ஷிமாமுரா மீது ஆழமாகவும் உண்மையாகவும் காதல் கொள்கிறாள். இது ஒரு கெய்ஷாவிடம்  எதிர்பார்க்கப்படும் தொழில்முறைப் பற்றின்மையை மீறும் ஒரு காதல். கெய்ஷாவின் தொழில் என்பது உணர்ச்சிச் சிக்கல் இல்லாமல் பொழுதுபோக்குத்  தோழமையை வழங்குவதாகும். ஷிமாமுரா மீதான அவளது காதல் ஒரு வீணடிக்கப்பட்ட முயற்சி; ஆனால் தூய்மையானது, தன்னலமற்றது, அனைத்தையும் உட்செரிப்பது. ஆயினும்கூட, ஷிமாமுராவின் உணர்ச்சியற்ற தன்மை, அவரது தற்போதைய திருமணம், அவர்களின் சந்திப்புகளின் உள்ளார்ந்த நிலையாமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால், கோமாகோவின் காதல் இறுதியில் பயனற்றது. தியாகங்களால் நிறைந்த கோமாகோவின் வாழ்க்கையில் இந்தக் காதல் இன்னொன்று. அவள் தனது இசை ஆசிரியரின் மகனான யூக்கியோவின் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த கெய்ஷாவானவள் அவள். அவருக்கும் அவளுக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதாக வதந்தி, கிராமத்தில் பரவியது. அவளது தொழிலின் கடுமையான யதார்த்தங்களை மீறி, அவள் அக வாழ்க்கையைப் பராமரிக்கப் பெரும்பாடு படுகிறாள். விடாமுயற்சியுடன் ஒரு நாட்குறிப்பை வைத்திருக்கிறாள். தனது தனிமைப்படுத்தப்பட்ட மலைக் கிராமத்தில் சாமிசென் பயிற்சி செய்கிறாள். ஷிமாமுரா அவளது முயற்சிகளின் தூய்மையையும் தீவிரத்தையும் அங்கீகரிக்கிறார்; ஆனால் அத்தகைய தொலைதூர அமைப்பில் அவை இறுதியில் வீணடிக்கப்படுவதாகவும், சிதைவுக்கு விதிக்கப்பட்ட ஒரு அழகு என்றும் உணர்கிறார். அவளது உணர்ச்சிவசப்பட்ட இயல்பு, அதிகமாகக் குடிக்கும் அவளுடைய போக்கு, அவளுடைய பதப்படுத்தப்படாத, வடிகட்டப்படாத நேர்மை ஆகியவை ஷிமாமுராவின் ஒதுங்கிய, பெரும்பாலும் கொடூரமான பற்றின்மைக்கு ஒரு தெளிவான மாறுபாட்டை வழங்குகின்றன.


கோமாகோவிடமிருந்து வேறுபட்ட, வேறொரு வகை அழகியாக யோகோ இருக்கிறாள். நோய்வாய்ப்பட்ட யூக்கியோவை விடாமுயற்சியுடன் கவனித்துக்கொள்ளும் அவள், ஷிமாமுராவுக்குக் கிட்டத்தட்ட ஒரு தெய்வ தரிசனம் போல அறிமுகமாகிறாள். தூய்மையான, இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட அவளுடைய குரல், சோகம் தாக்கும் அளவுக்கு அழகாய் இருக்கிறது. யோகோ, நாவல் முழுவதும் ஒரு புதிரான நபராகவே இருக்கிறாள். கோமாகோவுடனான அவளது உறவு தெளிவாக வரையறுக்கப்படவில்லை; அவ்வுறவு யூக்கியோவின் மரணத்திற்குப் பிறகு மிகவும் பதற்றமானதாக மாறுகிறது. நாவலின் முடிவில் கிடங்குத் தீயில் அவளது திடீர் வியத்தகு மரணம், ஒரு சக்திவாய்ந்த குறியீட்டு நிகழ்வாகும். இது அழகில் உள்ளார்ந்த அழிவுகரமான ஆற்றல், நிலையாமையின் இறுதி வெற்றி ஆகியவற்றுக்கு ஒரு நினைவூட்டலாகச் செயல்படுகிறது. ஒரு விதத்தில், காவபட்டா யோகோவின் மரணத்தின் மூலம் அவளது தூய்மையைப் பாதுகாக்கிறார்; கெய்ஷா வாழ்க்கையில் கோமாகோவுக்குக் காத்திருக்கும் தவிர்க்க முடியாத சிதைவிலிருந்து யோகோவைக் காப்பாற்றுகிறார். யூக்கியோ மீதான யோகோவின் தன்னலமற்ற பக்தி, அவளுடைய புனிதத்தையும் புதிரையும் மேலும் அதிகமாக்குகிறது. யோகோவின் பாத்திரம், ஜப்பானிய அழகியலான நிலையாமையின் அழகை உணர்த்துவதாய், நம் மனதில் சதா நிழலாடிப் பேரெழில் கொள்கிறது.


காவபட்டாவின் உரைநடை மிகவும் கவித்துவமானது. ‘பனி தேசம்’ பல நூறு ஹைக்கூக்களின் தொகுப்பைப் போல எழுதப்பட்டு மிளிர்கிறது. ஜப்பானிய அழகியலில் மர்மமான ஆழம் (‘யூஜென்’) எனக் குறிப்பிடப்படும் சௌந்தர்யம், காவபட்டாவின் சின்னஞ்சிறு வாக்கியங்களால் ஆன உரைநடைக்குள் ஒளிந்திருக்கிறது.

 

மெஃபிஸ்டோ (சாத்தான்) குமாஸ்தாவாகிவிட்டான்


நவீனத்துவ இலக்கியத்தின்  புலம்பல்—கடவுளின் இறப்பைக் குறித்து துயரமும் மகிழ்ச்சியும் கொள்ளும் அந்தச் சலிப்பூட்டும் புகார்—ஒருவிதமான தவிர்க்க முடியாத வற்புறுத்தலுடன் மீண்டும் என் உரைநடையிலும் கவிதையிலும் ஊடுருவும் போலத் தோன்றுகிறது.  இக்காலத்தில், மெஃபிஸ்டோபிலஸை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதாக இல்லை.  அதிகாரம், அறிவு, செல்வம் அல்லது காதல் வெற்றிகளுக்காக ஒருவரின் ஆன்மாவை விற்கும் நேரடியான வர்த்தகம் காலாவதியாகிப் போய்விட்டது  உம்பர்ட்டோ எக்கோ  "அசிங்கத்தைப் பற்றி" (On Ugliness) என்ற நூலில் குறிப்பிடுவது போல, சாத்தானின் முந்தைய "களங்கமற்ற அசிங்கம்" என்பது  நவீன இலக்கியத்தின் “இல்லறப்படுத்துதலால்’ படிப்படியாக அரிக்கப்பட்டுவிட்டது.  

கிறிஸ்டோஃபர்  மார்லோவின் நாடகமான  “டாக்டர் ஃபாஸ்டஸில்” நான் மெஃபிஸ்டோவின் வக்கிரமான வசீகரம் என்று நினைவுகூர்வதை—அந்த மகிழ்ச்சியூட்டும் விதத்தில் தெளிவாகத் தெரியும்  கோரவுருவத்தை—எக்கோ வெறும் "அடையாளம் காணக்கூடிய அசிங்கம்" என்று குறிப்பிடுகிறார்.  அந்தத் தெளிவு இப்போது தொலைந்துவிட்டது. நமது பரிதாபத்திற்குரிய சாத்தான், கதேயின் உருமாற்றும் கற்பனைக்கு ஆட்பட்டான்—ஒரு கருப்பு நாய், ஒரு  நீர்யானை, இறுதியில் அலைந்து திரியும் அறிஞர், ஒரு புத்திஜீவி என மிகவும் சூழ்ச்சிமிக்க வேடத்தில் வெளிப்பட்டான்: ஆயினும், கதேயின் கற்பனாவாதப் புரட்சியாளன், மேலும் அமைதியற்ற ஒரு நவீனத்துவத்திற்கான முன்னிகை  மட்டுமே.

எக்கோ, "நவீன உலகில் சாத்தான்" என்ற  அத்தியாயத்தில் சாதாரணத்தை நோக்கிய சாத்தானின் சரிவைப் பற்றி விவரிக்கிறார். இந்த மாற்றத்தின்  உண்மையான சிற்பிகள் என  தாஸ்தோவ்ஸ்கி, பாதலேர், மான், வாலெரி— ஆகியோரை சாத்தானிய உருமறைப்பின் "நால்வர் குழு” எனக் குறிப்பிடுகிறார்.

 தாஸ்தோவ்ஸ்கி, இருளின் இளவரசன் மீது, இவான் கரமசோவின் மாயத்தோற்றத்தை,  இழிந்த, நடுத்தர வர்க்க அபிலாஷைகளைச் சுமத்தினார். இவான் கரமசோவ் ஒரு தந்தையும் கூட. ஒரு ஒட்டுண்ணி.  தீமையை தன் அகமாக  உள்ளீர்த்துக்கொண்டவன்.  பாதலேர், அவனை நாடுகடத்தப்பட்டவர்களின் இளவரசன் என்று மறுவடிவமைத்தார்; அவன் மாநகர சலிப்பையும் அழகியல்மயப்பட்ட சிதைவையும் காதில் ஓதினான். 

தாமஸ் மான்,  டாக்டர் ஃபாஸ்டஸில், சாத்தானியத்தை பயமுறுத்தும் வகையில் சாதாரண உருவங்களாக—ஒரு தரகன், ஒரு தந்திரமான அறிவாளி—என வடிவம்கொடுத்தார். அவர்களின்  சாத்தானுடனான ஒப்பந்தம் என்பது மேதைமைக்கு ஈடாகக் கொடுக்கப்பட்ட  ஆன்மீகப் பால்வினை நோயாக இருந்தது.  வாலெரியின் நிறைவு செய்யப்பட்டாத  "Mon Faust", தூய, முரண்நகையான அறிவின் மெஃபிஸ்டோவை முன்வைத்தது.

அவர்கள் நால்வரும்  சேர்ந்து, சாத்தானிடமிருந்து கொம்புகளையும் கோரப்பற்களையும் நாடகீயத்தன்மையையும் பறித்துவிட்டனர்.  அதன் பிறகு சாத்தானாக நம்மிடத்தில் எஞ்சுவது   சந்தேகம், இழிந்த பக்கத்து வீட்டுக்காரன், கண்ணாடியில் தெரியும் நமது  பிம்பம் என தீமையின் சாதாரண முகங்கள் மட்டுமே. 

ஹன்னா அரென்ட், அந்த நூற்றாண்டின் படுகுழியைக் கவனித்து, இந்த பரிணாம வளர்ச்சிக்கு  பிற்சேர்க்கையை  தீமையின் சர்வ சாதாரணத்தன்மை (the banality of evil) எனப் பெயரிட்டார். யூத இனப்படுகொலையை நிறைவேற்றிய  அடால்ஃப் எய்ச்மேனிடம், அவர் மில்டனின் விழுந்துவிட்ட தேவதையையோ அல்லது மார்லோவின் குதூகலமான, ஆன்மாவை விலைக்கு வாங்கும், தீயவனையோ  காணவில்லை, மாறாக பதவி உயர்வுகளில் வெறி கொண்ட ஒரு குமாஸ்தாவின்  பேயுருவையே கண்டார். தீமையிடம்  எஞ்சியிருந்த உளவியல் பிரம்மாண்டமும் கூட பறிக்கப்பட்டு, சிந்தனையற்ற குமாஸ்தா  செயல்பாடாக ஆரெண்ட்டிடம் அது சுருங்கிவிட்டது.  

உண்மையாகவே திகிலூட்டும் நவீன சமகாலத்திய  மெஃபிஸ்டோபிலஸ், கதேயின் புத்திசாலித்தனத்துடனோ அல்லது தாஸ்தோவ்ஸ்கியின் காதாபாத்திரங்களின்  இழிநிலையுடனோ இயங்குவதில்லை, மாறாக நரகத்தின் கோப்புக் கிடங்குக்குள் இருக்கும் குமாஸ்தாவைப் போல  சாதாரணத்தன்மையுடன் இயங்குகிறான். நரகமானது பயமுறுத்தும் வகையில் சாதாரணமாகவும் நடுத்தர வர்க்கமாகவும் மாறிவிட்டது. இலக்கியத்தில் அவன் அதே careerist ஆக இருக்கிறான். ஆள் பிடிக்கிறான். குழைந்து நெளிந்து பரிசுகளை வெல்லுகிறான். தன்னை அங்கீகரிக்கவில்லை என்று புலம்புகிறான். சுய சாதிக் கூட்டத்தை தன் பின்னால் சேர்த்து வைத்துக்கொள்கிறான். தனக்குத் தெரியாதவற்றைப் பற்றி ஆணித்தரமாகப் பேசுகிறான். Personality cultஇல் சேர்ந்து வழிபட்டு மேலே மேலே போவதாக கற்பனை செய்கிறான். 

ஹருகி முரகாமி எழுதிய '1Q84'-ல் மட்டுமே அந்தப் பழைய பயங்கரத்தின் ஒரு கண நேர, கோரமான காட்சியைப் படித்தேன் —ஒரு ஒப்பந்தக் கொலையாளி,  பிளாஸ்டிக் பையால் ஒருவனை மூச்சுத் திணறடிக்கும்போது ஷேக்ஸ்பியரையும் செகாவையும்  மேற்கோள் காட்டுகிறான்.  இல்லறப்படுத்தப்பட்ட சமகால  திகில் நிலப்பரப்பில் இது  காலத்துக்கு ஒவ்வாப் பிழை.

நவீனத்துவவாதியின் கடவுள் இறந்துவிட்ட புகார் சொல்லும் தொனியை ஏற்றுக்கொள்வது, கட்டளைகளை விடாமுயற்சியுடன் பின்பற்றும் ஒரு நடுத்தர வர்க்க குமாஸ்தாவை போன்ற  சாத்தானிடம் ஆன்மாவை நேரடியாக விற்பதைவிட, அந்தத் தரங்கெட்ட வர்த்தகத்தில் ஈடுபடுவதை விட, மிகக் குறைந்த ஆபத்தைக்  கொண்டிருக்கிறது. 

Sunday, June 14, 2026

குறைபட்டுக்கொள்ளாது துன்பத்தை ஏற்றமைகிற தத்துவ நோக்கு (Stoicism) : சிட்டியம் நகரைச் சேர்ந்த ஜீனோ


ஜீனோ என்ற பெயரை சுஜாதாவின் கதைகளில் நாய்க்குட்டியின் பெயராக நீங்கள் வாசித்திருக்கக்கூடும். ஜீனோ (Zeno) ஒரு கிரேக்க தத்துவஞானி. அவர் உருவாக்கிய குறைபட்டுக்கொள்ளாது துன்பத்தை ஏற்றமைகிற தத்துவ நோக்கு (Stoicism) இன்றைக்கு தேர்தலில் தோற்றுப் போய் புலம்பிக்கொண்டிருக்கும் கட்சிகளுக்குத் தேவைப்படுவது. 


கற்பனை செய்து பாருங்கள். உலக சரித்திரத்திலேயே மோசமான திங்கட்கிழமை உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்துவிட்டது. உங்கள் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிவிட்டது. ஜீனோவுக்கு அதுதான் நிகழ்ந்தது. பண்டைய கிரேக்கத்தில் விலை மதிப்பில்லாத பழுப்பு சாயத்தை ஏறிக்கொண்டு சென்ற ஜீனோவின் கப்பல் கடலில் மூழ்கிவிட்டது. மூழ்கிய கப்பலிலிருந்து ஏதிலியாக ஏதென்ஸின் கடற்கரையில் ஒதுங்கிய ஜீனோ அழவில்லை, கடவுளை சபிக்கவில்லை,  தன்னுடைய நனைந்த தளராடையை நினைத்து மனம் வெம்பவில்லை அவர் அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு, தன் கப்பல்களைப் பறிகொடுத்தவர்களுக்கு ஆசுவாசத்தை வழங்கும் தத்துவத்தைக் கண்டுபிடித்தார். 


ஏதிலியாக ஏதென்ஸ் நகரில் சுற்றிக்கொண்டிருந்த ஜீனோ எந்தவொரு ஏதிலி புத்திஜீவியும் செய்யக்கூடிய காரியத்தைத்தான் செய்தார்; புத்தகக்கடை, புத்தகக்கடையாக ஏதென்ஸ் முழுக்க ஏறி இறங்கினார். ஜீனோஃபோன் (Xenophon) எழுதிய நினைவுக்குறிப்புகள் (Memorabilia) அவர் கண்ணில்பட்டது. சாக்ரட்டீசைப் பற்றி ஜீனோஃபோன் எழுதியிருந்ததைப் படித்த ஜீனோவுக்கு அவரைப் போல ஒருவரை ஏதென்ஸில் எங்கே தேடிக்கண்டுபிடிப்பது என்று வியந்தார். 


அந்த சமயம் பார்த்துத்தான் ஜீனோவின் வழியில், வாழ்க்கையில் தீப்ஸ் நகரைச் சேர்ந்த கிரேட்டஸ் குறுக்கிட்டார். கிரேட்டஸ் எதைப்பற்றியும் நல்ல அபிப்பிராயம் சொல்லாத தத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர்.  Cynics சமூக விதிகள் எல்லாவற்றையும் நிராகரிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்; தெருவில் வாழ்ந்தார்கள்; மினிமலிச வாழ்க்கை வாழ்ந்தார்கள்; தெருவில் போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லொரையும் பார்த்து நாய் போல குரைத்தார்கள். Cynic என்ற சொல் கூட  நாயைக் குறிக்கும் கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து வந்தது. 


கிரேட்டசைக் தன் குருவாக ஜீனோ ஏற்றுக்கொண்டார். ஜீனோவுக்கு நாய் போல குரைக்க வரவில்லை அவருடைய சுபாவம் கண்ணியமான வார்த்தைகளை கூச்சத்துடன் வெளிப்படுத்துவதாக இருந்தது. கிரேட்டஸ் ஜீனோவின் கூச்சத்தைப் போக்க அவர் தலையில்  பருப்பு சூப் தளும்பும் பானையை ஏற்றி ஏதென்ஸின் வீதிகளில் நடக்கச்சொன்னார். சூப் சிந்தாமல் நடக்க வேண்டும்.  கிட்டத்தட்ட நாரதர் கையில் நீர் நிறைந்த கோப்பையைக் கொடுத்து பிரபஞ்சம் சுற்றி வரச்சொன்னபோது அவர் எத்தனை முறை நாராயண மந்திரத்தை மனதில் நிறுத்தினார் என்றொரு கதை நம்மிடம் இருக்கிறதல்லவா அதே போன்ற கதைதான் ஜீனோவின் வாழ்க்கை சம்பவம். சினிக்குகள் நல்ல ஆசிரியர்கள். ஜீனோ தலையில் சூப் பானையை சுமந்து ஏதென்ஸின் வீதிகளில் நடந்து சென்றபோது அவருடைய கால் சராய் அவிழ்ந்துவிட்டது. கிரேட்டஸ் அந்த நேரம் பார்த்து ஜீனோவின் தலையிலிருந்த பானையை உடைத்துவிட்டார், கால்களின் வழியே சூப் வழிய ஜீனோ நடுத்தெருவில் அம்மணமாக நின்றார்.


பருப்பு சூப் சம்பவம் ஜீனோவுக்கு, மூழ்கிய கப்பலை விட ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத்தந்தது. உன் கட்டுக்குள் என்ன இருக்கிறதோ அதைப் பற்றி மட்டும் கவலைப்படு. உன்னை ஒரு ஆபாச எழுத்தாளன் தன்னுடைய திடக்கழிவு சொற்களால் வன்மத்துடன் தாக்குகிறானா நீ என்ன செய்ய முடியும்?  உன் கட்டுக்குள் அது இல்லையல்லவா அதை உதாசீனப்படுத்தி நீ போகிற போக்கில் போ. 


ஜீனோவுக்கு சினிக்குகள் பொருளுலகை நிராகரித்ததும் அவர்கள் நற்குணத்துக்கும் நன்னடத்தைக்கும் கொடுத்த முக்கியத்துவமும் பிடித்ததிருந்தாலும் அவர் பொதுவெளியில் தன் கால் சராயை அணிந்திருக்கவே விரும்பினார். தனக்கென ஒரு சிந்தனைப் பள்ளியை உருவாக்கினார்.


பிளேட்டோவைப் போல அக்கடெமி  அமைக்கும் அதிர்ஷ்டமெல்லாம் ஜீனோவுக்கு வாய்க்கவில்லை. அவர் ஏதென்ஸின் தெருவில் வர்ணமடிக்கப்பட்ட சுவரின் கீழ் நீன்று தன் போதனைகளைத் தொடங்கினார்.

தன்னுடைய தத்துவத்தை ஒரு கோழி முட்டைக்கு ஒப்பிட்ட ஜீனோ தர்க்கம் முட்டையின் ஓடு என்றும், பிபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிவது முட்டயின் வெள்ளைக் கரு என்றும், எப்படி ஒரு நல்வாழ்க்கையை வாழ்வது என்ற அறம் முட்டையின் மஞ்சள் கரு என்றும் உருவகித்தார். 


நற்பண்பே (virtue) இவ்வுலகில் நிலையான செல்வம் என்று ஜீனோ போதித்தார். பொருட்செல்வம், ஆரோக்கியம், புகழ், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் என எதுவுமே நற்பண்புகளைப் போல தன்னளவிலேயே நல்லவை அல்ல. தீமை என்பது கெட்ட குணம் மாத்திரமே. கப்பலே மூழ்கினாலும் உன்னுடைய நற்பண்பை யாரும் உன்னிடமிருந்து எடுத்துவிட முடியாது என ஜீனோ போதித்தார். 


ஜீனோவுக்கு இப்பிரபஞ்சம் தெய்வீக நெருப்பு ஒன்றினால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தது. ஆகையால்  இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வை வாழ ஜீனோ வலியுறுத்தினார். 


உணர்ச்சிகளற்ற ரோபோக்களாக வாழும்படி ஜீனோ போதிக்கவில்லை ஆனால் அனாவசிய கோபம், பதற்றம், அடுத்தவர் மேலான நியாயத் தீர்ப்புகள் ஆகியவற்றால் ஒருவர் மனதில் உண்டாகக்கூடிய பதற்றங்களையும் கோப தாபங்களையும் உதாசீனம் செய்து மகிழ்ச்சியையும் அமைதியையும் மனம் நிறைத்து வாழ ஜீனோ போதித்தார். 


கப்பல் மூழ்கி ஏதிலியாகக் கரை சேர்ந்தவரை ஏதென்ஸ் அவருடைய ஞானத்திற்காகவும் போதனைகளுக்காவும் கௌரவித்தது. அவருக்கு ஏதென்ஸ் நகரின் குடியுரிமையை வழங்கியது. ஆனால் ஜீனோ தனது நகரம் தான் பிறந்த சிட்டியம் மட்டுமே என ஏதென்ஸ் நகர குடியுரிமையை ஏற்க கண்ணியமாக மறுத்துவிட்டார். 


எழுபத்தி இரண்டு வயது வரை வாழ்ந்த ஜீனோ ஒரு நாள் பள்ளியிலிருந்து வரும்போது கால் தடுக்கி விழுந்து தன் பெருவிரலை உடைத்துக்கொண்டார். துன்பியல் நாடக வசனமாகிய “ நானே வருவதாக இருக்கும்போது நீ எதற்குக் கூப்பிடுகிறாய்?” என்பதை மேற்கோளாகச் சொன்ன ஜீனோ பெருவிரல் உடைந்த நிலையிலேயே மூச்சடக்கி உயிர் நீத்தார். 









 

Saturday, June 13, 2026

ரொமாண்டிக் நாவல்களின் பலிகடா: மதாம் பொவாரியின் கள்ளக்காதல்கள் அல்லது The Semiotics of Adultery: Roland Barthes Reads Flaubert


ரோலாண்ட் பார்த் குஸ்டாவ் ஃப்ளாபெரை  (Gustave Flaubert) ப்ரெஞ்ச் இலக்கியம் தனது செவ்வியல் காலத்திலிருந்து நவீனத்துவ யுகத்துக்கு மாறியதைக் கட்டியங் கூறிய எழுத்தாளர் என்று வாசித்தார்.  பார்த்தின் வாசிப்பில் யதார்த்தவாதத்தின் மரபான கருத்துக்கள் செயலிழக்கும் வகையில் ஃப்ளாபெரின் நடையே நவீனத்துவ பனுவலை படைக்கக்கூடியதாக இருந்தது. 1968 இல் எழுதப்பட்ட L’effet de réel என்ற கட்டுரையில் பார்த் காற்றழுத்தமானி Un Cœur Simple என்ற சிறுகதையில்  யதார்த்த விளைவினை வாசகரிடத்தே உண்டாகுவதற்காகக் விவரிக்கப்படுகிறதே அல்லாமல் யாதர்த்ததையே பிரதிபலிப்பதற்காக சொல்லப்படுவதில்லை, கதையை நகர்த்திச் செல்வதற்கும் காற்றழுத்தமானியின் விவரிப்பு உதவுவதில்லை என்று வாதிட்டார்.  பார்த்தை வாசித்தபோது சுந்தரராமசாமி ஒரு முறை லாசராவின் சிறுகதைகள் எப்படி அவற்றில் விவரிக்கப்படும் பொருட்களால் பழமையில் சிக்கித் தவிக்கின்றன என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது . சுந்தரராமசாமி சொல்வார் லாசராவின் கதைகளில் கிணறுதான் இருக்கும், தண்ணீர்க் குழாய் இருக்காது, குத்துவிளக்குத்தான் சுடர் விடும்  மின்விளக்கு  எரியாது என்று. பார்த் சொல்வது சுரா லாசராவைப் பற்றி சொல்வது போன்றதுதான் ஆனால் நேர் எதிரான விலைவை வாசகரிடத்தே உண்டாக்குவது. லாசராவின் கதைகளில் பொருட்கள் பழமையின் சூழலை ‘யதார்த்தமாகக்’ கட்டமைக்கின்றன என்றால் பார்த்தின் அவதானத்தின்படி ஃப்ளாபெரின் கதைகளில் பொருட்கள் நவீன சூழலைக் கட்டமைக்கின்றன. கதைகளில் பொருட்கள் பொருட்களாக இல்லை; மொழியாக இருக்கின்றன.


ஃப்ளாபெர் உருகங்களையும், உவமைகளையும் மிக அதிகமாகப் பயன்படுத்துபவர். நம்முடைய திருச்செந்தாழை போல. இன்றைக்கு அப்படி அதிகப்படியான உவம, உவமேயங்களை, உருவகங்களை உரைநடையில் பயன்படுத்துவது நல்ல உரைநடையாக இன்று மேற்குலகில் கருதப்படுவதில்லை. பார்த்தோ ஃப்ளாபேரின் உவம உவமேயங்கள் அலங்காரங்களல்ல அங்கதங்கள் என்று வாசிக்கிறார். ஒரு கதாபாத்திரத்தின் உள்ளார்ந்த ஆசையை நேரடியாக விவரிப்பதற்கு பதிலாக வெளியே இருக்கும் மந்த யதார்த்தத்திற்கும் உள்ளே கொழுந்துவிட்டெரியும் ஆசைக்கும் இடையிலான வலி நிரம்பிய இடைவெளிகளை ஃப்ளாபெரின் உவம உவமேயங்கள் நிரப்புவதாக பார்த் வாசிக்கிறார். மீண்டும் இருப்பது மொழிதானே தவிர யதார்த்தமல்ல.  


பார்த்தைப் பொறுத்தவரை ஃப்ளாபெரின் தலைசிறந்த படைப்பான ‘மதாம் பொவாரி’ உள்ளூர் பிரபுக்களுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு படுத்து எழுந்திருப்பது பற்றிய நீதி உபதேசக் கதையல்ல மாறாக மொழியை யதார்த்தமாகப் புரிந்துகொண்டதன் விளைவைப் பற்றிய ஆழமான தத்துவ எச்சரிக்கை. எம்மா பொவாரிக்கு விருப்பம் கள்ளக் காதலின் மேல் அல்ல அவள் இள்மையில் படித்த ரொமாண்டிக் நாவல்களில் மொழியால் சித்தரிக்கப்பட்ட காதல் என்ற கருத்தின் மேல்.  பொவாரியின் கள்ளக்காதல்கள் வாசிப்பினால் உண்டான இலக்கியப் பிழைகள். நமக்கு ரமணி சந்திரணையும், லட்சுமியையும், மில்ஸ்  அண்ட் பூன்ஸையும், டன் டன்னாக எழுதிக்குவிக்கப்படும் சரித்திர நாவல் குப்பைகளையும் வாசிப்பதால் உண்டாகும் இலக்கியப் பிழைகள் என்ன என்பது கண்கூடாகத் தெரிவதில்லை. சினிமா பார்ப்பதால் உண்டாகும் அரசியல் பிழைகள் மட்டுமே நமக்குக் கண்கூடாக வரலாறாகின்றன. பிழைகள் பிழைத்து நல்லது நடக்குமானால் அது பிம்பம் அருளிய கொடை. அபத்தம் பற்றி அழகு விகசித்ததன் தற்செயல். வரலாற்றின்  கருணை.


ஃபபெர்டினாண்ட் சசூர் சொல்லியதை தமிழில் பலப்பத்தாண்டுகளாகத் திரும்பத் திரும்பச்சொல்லி இப்போது இலக்கிய வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கக்கூடியதுதான் மொழிக்குறி (linguistic sign) என்பதற்கு இரணடு பாகங்கள் இருக்கின்றன; குறிப்பான் (signifier), குறிப்பீடு (signified) 


எம்மா பொவாரி தான் ரொமாண்டிக் நாவல்களில் படித்த குறிப்பான்களான, வெல்வெட் மேலங்கிகள், நள்ளிரவில் எழுதப்படும் ரசம் சொட்டும் காதல் கடிதங்கள், நிலவொளியில் விடப்படும் ஆழ்ந்த பெருமூச்சுகள் ஆகியவற்றை சேகரித்தால் போதும் தான் விரும்பிய குறிப்பீடான உணர்ச்சிகரமான காதல், சலிப்பூட்டும் வாழ்க்கையிலிருந்து விடுதலை, ஆகியன கிடைத்துவிடும் என்று. ஆனால் அவளுக்குக் கிடைப்பதென்னவோ மெலியோரை முறைகேடாகப் பயன்படுத்துகிற ஒரு வியாபாரியின் மீளாக் கடன். எம்மா பொவாரிக்கு என்ன தஎரிவதில்லை என்றால் குறிப்பான்களுக்கும், குறிப்பீடுகலுக்கும் இடையில் இருப்பதே உண்மையான கள்ள உறவு. உம்பர்ட்டோ எக்கோ தன்னுடைய “ரோஜாவின் பெயர்” நாவலில் எழுதிக் காண்பைத்தது போல. நாவலில் வரும் கிறித்துவ மடலாயம் என்ற குறிப்பான் ஆன்மீகத்தைக் குறிப்பீடாகக்கொள்ளாமல் கொலைகளைக் குறிப்பீடாகக் கொண்டிருப்பது போல . ரோஜாவின் பெயர் ரோஜா என்ற மலரைக் குறிப்பிடாமல் வரலாற்றில் உள்ளீடற்று வெற்றுக் கூடாய் ஆகிவிட்டது போல. 


ஆனால் எம்மா பொவாரியும்தான் என்ன செய்வாள்? அவளுடைய கணவனான சார்ல்ஸ் பொவாரியுடன் அவளுடைய வாழ்க்கை ஒன்றும் துன்பங்கள் நிறைந்ததல்ல. சார்ல்ஸ் நல்ல மனிதன்; அவனை நம்பலாம். ஆனால் அவனோடு ரொமாண்டிக் மெழுகுவர்த்தி டின்னர் என்பது உருளைக்கிழங்கை சத்தம் போடாமல் உண்டு செரிப்பதுதான்.  பாவம் எம்மா பொவாரி அவளுக்கென்ன தமிழ் சினிமா பிம்பங்களா இருந்தன கனவு காண்பதற்கும், கட்டிப்பிடித்துத் தூங்குவதற்கும். கிடைத்ததெல்லாம் ரொமாண்டிக் நாவல்கள். அவற்றின் குறிப்பான்கள் சதி செய்துவிட்டன. உண்மையான குறிப்பீடுகள் வேறாய் இருந்துவிட்டன. பாவம் எம்மா பொவாரி நம் பரிதாபத்திற்குரியவள்.  மொழி இன்னொரு மொழியையே கட்டமைக்கிறது யதார்த்தத்தை அல்ல என்று அறியாதவள்.