Sunday, March 25, 2012

ஆரத் தழுவுதல் 14Terhumy fest
டெர்ஹுமி திருவிழாவின்போது

தூசு படிந்த இருள் மூலைகளிலும், கட்டில்களுக்கடியிலும், நீண்ட நாள் திறக்கப்படாத அலமாரிகளுக்கும் போய், கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்துகொள்ளும் சிறார்களுக்கு மட்டுமே காதில் கேட்கும் விசித்திர ஒலி எனக்கு அந்த காட்டெருமைத் தலை பொம்மையை ஆரத் தழுவியபோது என் காதுகளுக்குள் ஒலித்ததாக நினைவு. மோனோ ரீபாங் அவருடைய சன்னதத்திலிருந்து வெளிவந்துவிட்டிருந்தார். அவர் அங்கமி நாகர்கள் அந்நியர்களுக்கு வழங்கும் மிகப் பெரிய கௌரவத்தை எனக்கு வழங்கியிருக்கிறார் என்று நான் பின்னரே அறிந்தேன். தன்னினத்தவன், அந்நியன் என்ற பாகுபாட்டினை மிகவும் கறாராகப் பேணக்கூடிய ஆதிவாசி சமூகங்களுள் ஒன்று அங்கமி நாகர் சமூகம். எனக்கும் ரீபாங்குக்கும் இடையில் நட்பு வளர்ந்ததாலும், நெருக்கமானதினாலுமேதான் அவர்கள் சமூகத்தின் தன்னினத்தவனாக அங்கீகரிக்கப்பட்டேன் எனலாம்.

ரீபாங்கினை திருவிழா அல்லது சடங்குச் சூழல் இல்லாத சந்தர்ப்பங்களில் சந்திக்க நேர்ந்தால் அவர் ஒரு அங்கமி நாகா இன மாந்தரீகர் என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஜீன்ஸ், டீ ஷர்ட், போலி அடிடாஸ் ஷூ சகிதம் ஹோண்டா மோட்டார்சைக்கிளில் வலம் வரும் ரீபாங் மற்ற சந்தர்ப்பங்களில் சாதாரண நவீன நகர் வாழ் நாகர்கள் போலத்தான் இருப்பார். நானுமே முதன் முதலில் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது என்னடா இது ஒரு வங்கி குமாஸ்தாவைக் காட்டி மாந்தரீகர் என்கிறார்களே என்றுதான் நினைத்தேன். அங்கமி நாகர்களின் தோற்றத் தொன்மங்கள், அவை நிகழ்த்தப்படும் விதம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும் கற்றுக்கொள்ளவும் வந்திருக்கிறேன் என்று நான் அவரிடம் சொன்னபோது அவருடைய சீன இல்லிக் கண்களில் ஆச்சரியம் மின்னல் வெட்டியது. ரீபாங்கின் இல்லிக் கண்களில் அகண்ட கோல விழிகளில் மட்டுமே வெளிப்படுத்த முடியும் என நான் நினைத்துக்கொண்டிருந்த சோகம் சாதாரணமாகக் கப்பியிருந்ததை நான் உடனடியாக கவனித்தேன். இரண்டாந்தர பாடகர்களின் கண்களில் மட்டுமே கப்பியிருக்கும் சோகம் அது; சங்கீதத்தின் உன்னதம் எது என்று அறிந்திருந்தும் அதை அடைய முடியாமல் பல வருட சாதகத்திலும் கை நழுவிப் போன உச்சத்தைப் பற்றிய கவலையிலும் ஏக்கத்திலும் உருவாகிற சோகம் அது. அங்கமி நாகர்களின் ரகசிய உலகின் சக்திகளை எவ்வளவு சுலபமாக நான் கேட்கிறேன் என்று எனக்குத் தெரியுமா என்ற ரீபாங் அவர் அந்த உலகை எனக்குக் காண்பித்துக் கொடுத்தால் கைமாறாக நான் என்ன தருவேன் என்றும் வினவினார். சற்று திகைத்த நான் ஏதோ நினைப்பில் என் தோள் பைக்குள் கை விட்டபோது பல நாட்களுக்கு முன் கோவிலில் கிடைத்த நீலக் குவளை மலர்களின் சருகுகள் என் கையில் சிக்கின. அந்த நீலக் குவளை மலர் சருகுகளை எடுத்து கைகளில் சங்கல்பத்திற்கு பொதிவது போல பொதிந்து அவர் காலடியில் சமர்ப்பித்தேன். இந்த சருகுகளின் சமர்ப்பணமன்றி வேறெதுவும் கொடுப்பதற்கு என்னிடம் இல்லையென்றேன். ரீபாங் புன்னகைத்தார்; அவர் கண்களும் சேர்ந்து புன்னகைத்ததால் அவர் என் ஆராய்ச்சிக்கான அனுமதியை வழங்கிவிட்டார் என்று நினைத்தேன்.

கௌஹாத்தி நகரில் நண்பர்கள் என்னை சுக்ரேஷ்வரர் கோவிலுக்கு கூட்டிச் சென்றபோது பிரசாதமாகக் கிடைத்தவை அந்த நீலக்குவளை மலர்கள்; சருகுகளாகத் தோள்பையில் தங்கிவிட்டிருக்கின்றன. ரீபாங்க்குக்கு அந்த சருகுகள் வேறொரு நினைவினை கிளர்த்தியிருந்தன என பின்பு என்னிடம் சொன்னார். அவர் தந்தையின் பாடையில் போடப்பட்ட மலர்களில் நீலக் குவளை மலர்கள் அவர் தந்தையின் முகத்தை மறைத்திருந்ததாம்; நான் அவர் காலடியில் சமர்ப்பித்த சருகுகள் அவருக்குத் தன் தந்தையின் முகத்தைக் காட்டியதாம். ரீபாங் அன்றே என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று ஏழு தள யதார்த்தங்களைப் பற்றி எனக்குச் சொன்னார். என்னுடைய சொந்த ஊர் நாகர்கோவில் என்பதை அறிந்தபோது அவர்கள் நாகர் இனத்தவர் என்பதிற்கும் என் ஊர்ப் பெயருக்கும் தொடர்புள்ளதோ என்றும் அவர் ஆராயத் தயங்கவில்லை. இந்த மாதிரியான தொடர்புறுத்துதல்கள் தர்க்கமற்றவை, தற்செயலானவை, நோக்கமற்றவை, என்று அவருக்கு நான் எடுத்துச் சொன்னேன். தற்செயல் என்று உலகத்தில் ஏதுமேயில்லை எல்லாமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டவை என்று ரீபாங் சொல்வாரென்று நான் எதிர்பார்த்தேன். விதியையும், மதத்தையும் நம்புபவர்கள் பொதுவாகக் கொண்டிருக்கக்கூடிய உலகப் பார்வை அது. ரீபாங் சொன்ன பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எது தற்செயல் எது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்று அறியும் வல்லமை ஹார்ன்பில் பறவைகளுக்கே உண்டு, ஹார்ன்பில் பறவைகளோடு எனக்கு ரீபாங்கை சந்திப்பதற்கு முன்பே உரையாடலும் 'இதர பரிவர்த்தனைகளும்' உண்டா என்று கேட்டார் அவர். எந்தப் பறவையோடும் எந்தப் பரிவர்த்தனையும் எனக்கில்லையே என்றேன் பரிதாபமாக. ஹார்ன்பில் பறவைகளோடு பேசத் தெரியாமல் இருந்த மொரூசாவிற்கு என்ன ஆயிற்று என்று தெரியுமில்லையா என்றார் ரீபாங். யாரது மொரூசா என்றேன் நான் ஆர்வமாக.


-----------------------------------------------------------


மொரூசா கிடிமா⁠1 என்ற கிராமத்தில் வசித்து வந்தான். பணக்காரனும் அழகனுமான மொரூசா பெரிய போர் வீரனும் கூட. அவனுடைய வீரத்தின் புகழ் எல்லா திசைகளிலும் பரவியிருந்தது. மொரூசாவுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. கிடிமாவில் வாழ்ந்த அத்தனை யுவதிகளும் அவன் புகழுக்கும் வீரத்திற்கும் ஈடாகவில்லை. மொரூசாவிற்குமே தனக்கு வரவேண்டிய மனைவி எப்படியிருக்க வேண்டும் என்று பல கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் இருந்தன. மொரூசாவின் உறவுப் பெண்கள் அவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திருமண வயதில் சுத்துப்பட்டிலுள்ள அத்தனை பெண்களையும் பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு மெஹுவியூ என்றொரு அழகான பெண் பக்கத்து கிராமத்தில் இருப்பதாகவும் அவள் மொரூசாவுக்கு ஏற்றவளாக இருப்பாள் என்றும் துப்பு துலங்கியது. மொரூசாவின் உறவினர்கள் மெஹுவியூவினைப் பார்த்து அவளிடமும் அவள் பெற்றோரிடமும் மொரூசாவை மணப்பதற்காக சம்மதம் வாங்கினர்.

சம்மதம் பெற்றபின் இருவருக்குமான திருமண நிச்சயத்திற்கான நாளும் திருமண நாளும் குறித்தார்கள். மொரூசாவிடம் ஆனால் மெஹுவியூ எந்த கிராமத்தில் வசிக்கிறாள் என்று அவன் உறவினர்கள் சொல்லவில்லை. நிச்சயதார்த்தத்திற்கு முதல் நாள் மொரூசா தலை வெட்டிக்கொணரும்⁠2 வேட்டைக்குப் போக விரும்பினான். தன்னுடைய மணப்பெண்ணுக்கு நிச்சயதார்த்ததின் போது தான் எவ்வளவு பெரிய வீரன் என்று நேரடியாகக் காட்டவேண்டும் என்று அவனுக்கு ஆசையாய் இருந்தது. நிச்சயதார்த்தத்தின்போது ரூப்ரி⁠3 விருந்து அளிக்கவும் தலை கொய்தல் நல்ல சந்தர்ப்பத்தை அளிக்கும் என்றும் மொரூசா நினைத்தான்.

மொரூசா தலை கொய்தல் வேட்டைக்குச் சென்ற நாளன்று போய் எதிரி போர் வீரர்கள் எவரும் அவனுடைய கண்ணில் துரதிருஷ்டவசமாக படவேயில்லை. மொரூசா பக்கத்து கிராமங்களில் நுழைந்து தேட ஆரம்பித்தான். கிராமங்களில் குழந்தைகளே விளையாடிக்கொண்டிருந்தார்கள். குழந்தைகளைக் கொல்ல மொரூசாவிற்கு மனமில்லை. வீடு வீடாக மொரூசா புகுந்து தேட ஆரம்பித்தபோது ஒரு வீட்டில் இளம் பெண்ணொருவள் வீட்டு வேலை செய்வதில் மும்முரமாயிருந்தாள். தலை கொய்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே குறியாயிருந்த மொரூசா சற்றும் யோசிக்காமல் அவள் தலையை வெட்டினான். முடியைக் கொத்தாகக் கையில் பிடித்து அவளின் அரிந்த தலையை தூக்கிக்கொண்டு வெற்றியின் களிப்புடன் கிடிமாவிற்குள் அவன் நுழைந்தான்.

கிடிமாவின் ஜனம் முழுக்க ரூப்ரி விருந்துக்காகக் கூடிவிட்டது. மறுநாள் காலை வரை அவர்கள் விருந்துண்டு களித்தனர். நிச்சயதார்த்த நேரம் நெருங்கியபின்னரும் அனைவரும் வந்து சேர்ந்த பின்னரும் மணமகள் மட்டும் வரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே மொரூசாவுக்குத் தான் தலை கொய்து வந்தவளே தான் மணக்கவிருந்த மெஹுவியூ என்று தெரிய வந்தது.

--------------------------------------------------------

மொரூசாவின் கதையைச் சொல்லிய ரீபாங் மொரூசா அழுதானா, கலங்கினானா, தான் தவறிழைத்துவிட்டோமே என்று பிராயசித்தம் தேடினானா என்ற என் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லவில்லை. வீரன் என்ற வெட்டிப் பெருமிதத்தின் விளைவு அப்படிதான் இருக்கும் என்பதை எடுத்து சொல்வதற்காகவே மொரூசாவின் கதை அங்கமி நாகர்களிடையே சொல்லப்படுகிறது என பிற நாகர் இன நண்பர்கள் எனக்குச் சொன்னார்கள். ஆனால் ரீபாங் அந்த மாதிரியான கேள்விகளையெல்லாம் எதிர்கொள்ளவேயில்லை. அவரைப் பொறுத்தவரை மொரூசா ஹார்ன்பில்லிடம் பேசியிருக்க வேண்டும்; எந்த மடையனாவது ஹார்ன்பில்லிடம் பேசாமல், குறிப்புகள் பெற்றுக்கொள்ளாமல் தலை கொய்யப் புறப்படுவானா, என்ன?

நான் மெதுவாக நாகர் இனத்தவரிடையே இன்னும் மனிதத்தலை கொய்து வேட்டையாடும் பழக்கம் இருக்கிறதா என்று விசாரிக்கலானேன்.

-------------------------------------------------------------------------------------------

ஆத்தாடி மாரியம்மா பாடலுக்கான வேப்பிலை நடனம் முடிந்து தமிழர்களின் பண்பாட்டில் வீரமும், காதலும் அடிப்படையானவை, மையமானவை என்று ஒலிபெருக்கியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பொம்முவும் பொக்குவும் என்ன செய்கிறார்கள், அவர்களுக்கு பசிக்கிறதா என்று கேட்டுவரலாம் என்று மேடையின் பின்புறம் சென்றேன். பொக்கு கராத்தே உடையில் இருந்தான். பொம்மு பந்தள மகாராஜாவுக்கு என்று விசித்திரமான சிவப்புத் தலைப்பாகையை அணிந்து நின்று கொண்டிருந்தான். ஸ்னோ வைட் மேடையேற இன்னும் பல நிகழ்ச்சிகள் காத்திருக்க வேண்டும் என்றார் ஆசிரியை. பயல்கள் நிறைய நொறுக்குத் தீனி சாப்பிட்டவாறே குஷியாக இருந்தனர். பொக்குவின் அருகில் கருத்த பெண் குழந்தையொன்று ஸ்னோ வைட் வேஷத்தில் நின்று கொண்டிருந்தாள். பொம்மு அவளை எனக்கு ஆர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தான்; அவன் அண்ணன் இளவரசனாக அந்தக் குழந்தையைத்தான் முத்தமிட்டு உயிர்பிப்பானாம். கருப்பு ஸ்னோ வைட் என்னைப் பார்த்து கையாட்டி சிரித்தாள். இருக்கைக்குத் திரும்பி வந்து மீண்டும் காத்திருக்கலானேன்.

------------------------------------------------------------------------------


வெட்டி வீரப் பெருமிதம் துன்பத்தில் முடிந்தது எனக்கு அங்கமி நாகர் கதைகளை சேகரிக்க வேண்டுமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. நல்ல அங்கமி காதல் கதை ஏதேனும் சொல்லுங்களேன் ரீபாங் என்றேன். ஹார்ன்பில் பறவைகளை வேறு எதற்காகவெல்லாம் நாம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் நான் கேட்கத் தவறவில்லை. ரீபாங் சோஓ என்பவனின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

சோஓ செகுமா கிராமத்தைச் சேர்ந்த இளைஞன். டெர்ஹூபோடூ மெரிமா கிராமத்தைச் சேர்ந்தவள். ஒரு நாள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது சோஓவும் டெர்ஹூபோடூவும் சந்தித்தனர். முதல் சந்திப்பிலேயே அவர்களிடையே காதல் அரும்பிவிட்டது. அன்றைக்கே அவர்கள் தங்களுடைய கிராமங்களுக்குத் திரும்பிப் போய் மணம் புரிந்து கொள்ள தங்கள் பெற்றோரிடம் அனுமதி கேட்டனர். அவர்களின் பெற்றோர் அவர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது மட்டுமில்லாமல் அவர்கள் இனிமேல் சந்திப்பதற்கும் தடை விதித்தனர். செகுமாவும், மெரிமாவும் எதிரி கிராமங்களாக காலம் காலமாக இருந்து வருவதினாலேயே இந்தத் தடை. சோஓவுக்கும் டெர்ஹூபோடூவுக்கும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருக்க முடியவில்லை. தடைகளை மீறி அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க ஆரம்பித்தனர். அவர்கள் முதன் முதலில் சந்தித்த இடத்தருகே இருந்த பெரிய பாறையொன்றின் கீழ் அவர்கள் சந்திப்பது வழக்கமாயிற்று. ஒரு நாள் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் சந்திப்பதாக அவர்களிடையே ஒப்பந்தம். சோஓவை அவனுடைய பெற்றோர் பிடித்து வைத்துக்கொள்ள டெர்ஹூபோடூ காத்திருந்து காத்திருந்து சலித்துப் போனாள். தான் ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட அவள் அழுக ஆரம்பித்தாள். அவள் கண்ணீரினால் அவள் அருகே இருந்த பெரிய இலை ஒன்று நிறைந்துவிட்டது. மாலையில் அவள் தன் கிராமத்திற்கு திரும்பிவிட்டாள். அவள் போன பிறகு பாறையடிக்கு வந்த சோஓ அவள் கண்ணீரால் நிரம்பிய இலையைப் பார்த்தான். டெர்ஹூபோடூவை பல முறை கத்தி கத்தி அழைத்து சோஓ கதறினான். கடைசியாக அவள் வந்தபோது சோஓ கண்ணீரால் நிரம்பிய இலையை எடுத்து அந்தக் கண்ணீர் அனைத்தையும் குடிப்பதைப் பார்த்தாள். ஆனாலும் அவனை சந்திக்காமலேயே டெர்ஹூபோடூ தன் கிராமத்திற்குத் திரும்பிவிட்டாள். அவள் திரும்பி நடந்தபோது அவள் கூடவே சோஓவின் மாடு ஒன்றும் அவளைப் பின் தொடர்ந்து போனது. காதலியின் கண்ணீரைக் குடித்ததால் சோஓவின் உடல் அதீத ஒளியுடனும் அழகுடனும் மின்னத் தொடங்கியது. தன் மாடு போன பாதையை வைத்து டெர்ஹூபோடூவின் கிராமத்தைக் கண்டடைந்த சோஓ நெல் குத்திக்கொண்டிருந்த டெர்ஹூபோடூவையும் அவள் தாயையும் பார்த்தான். டெர்ஹூபோடூ அவனுடைய மாடு நின்ற தொழுவத்தைச் சுட்டிக் காட்டினாள். தன் மாட்டினை அழைத்துக்கொண்டு சோஓ தன் கிராமத்திற்கு திரும்ப யத்தனித்தபோது டெர்ஹூபோடூவின் தாய் யாரந்த அழகிய இளைஞன் என்று கேட்டாள். டெர்ஹூபோடூ அவன்தான் தான் காதலிக்கும் இளைஞன் என்று பதிலளித்தாள். அந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை.

அவர்கள் இருவரும் வேறு வேறு நபர்களைத் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகள் பெற்றுக்கொண்டனர். சோஓ டெர்ஹூபோடூ ஆகியோரின் வயல்கள் அருகருகே இருந்தன. சோஓவின் பையன் கண்ணீரினால் அழகும் ஒளிர்வும் பெற்ற சோஓவைப் போலவே பேரழகனாய் இருந்தான். அவன் ஒரு நாள் விளையாடிக்கொண்டிருந்தபோது பக்கத்து வயலுக்குப் போய்விட்டான். குழந்தைப் பையனைப் பார்த்த டெர்ஹூபோடூ யார் நீ என்று விசாரித்து அவன் சோஓவின் குழந்தை என்று அறிந்தாள். நீ உன் அப்பாவைப் போலவே பேரழகனாய் இருக்கிறாய், ஆனால் உன் அப்பனைப் போல் வார்த்தை தவறுகிறவனாய் வளர்ந்துவிடாதே என்று சொல்லி அவள் தன் கழுத்தில் போட்டிருந்த நெக்லெசைக் கழற்றி அவனிடம் கொடுத்து அனுப்பினாள்.

சோஓவின் கதையை என்னோடு சேர்ந்து கேட்ட நாகர் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் உற்சாகம் பிடிபடவில்லை. அவர்கள் பிரமாதமான கதையினைக் கேட்ட லயிப்பில் இருந்தனர். ரீபாங் மிக அழகிய கதை ஒன்றை சொல்லிவிட்ட பெருமிதத்தில் இருந்தார். நான் பையப்பைய ஐயா இது என்ன பிரமாதமான கதை என்றேன். சோஓ அவன் காதலியின் கண்ணீரைக் குடித்தானா இல்லையா என்றனர் இளைஞர்கள்; டெர்ஹுபோடூ தன் நெக்லெசை தன் காதலனின் பையனுக்குக் கொடுத்தாளா இல்லையா என்றனர் யுவதிகள். டெர்ஹூபோடூவின் கிராமத்திற்கு வழி காட்டியது சோஓவின் மாடுதான் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றார் ரீபாங்.

------------------------------------------------------------------------------------------------

தொடரும்1 அங்கமி நாகர்கள் மட்டுமே வசிக்கும் கிராமம்
2 Head hunting practice of Naga tribes. எதிரிகளைப் போரில் வென்று அவர்களின் தலையைக் கொய்து வெற்றிச் சின்னங்களாகக் கொண்டுவரும் பழக்கம் நாகர்களிடையே பழங்காலத்தில் இருந்தது,
3 ரூப்ரி விருந்து வெட்டிக்கொணர்ந்த தலைகளோடு வெற்றியைக் கொண்டடாடும் நாகர் விருந்துகளுள் முக்கியமானது.

No comments: