Tuesday, May 1, 2012

ஊடுருவிப் பார்த்தல் 19

நாங்கள் தங்கியிருந்த வன விடுதி


முயலை அடித்த சம்பவத்திற்குப்பின் ரீபாங்கிடமும் அவருடைய குடும்பத்தினருடனும் எனக்கு ஏற்பட்டிருந்த அன்னியோன்யம் கோடைமழையென வெறித்துவிட்டிருந்தது. சோக்கோவிடம் எனக்கு ஏற்பட்டிருந்த ஒரு தகப்பனின் வாஞ்சை மியாவ் நகரை அடைய நாங்கள் எடுத்துக்கொண்ட ஆறு மணி நேர பயணத்தில் காணாமல் போயிருந்தது. என் மன விலகலைப் பொய்த்தூக்கத்தின் மூலம் நான் மறைத்திருந்தாலும் அவர்களுக்கு என் ஆவலாதி தெரிந்திருக்கவேண்டும் என்றே விரும்பினேன். சோக்கோ என்னை கேலியுடனும் கிண்டலுடனும் அணுகியது எனக்குப் பிடித்திருந்தது. சரியான வயதில் எனக்கு ஒரு மகள் பிறந்திருப்பாளென்றால் அவள் சோக்கோவைப் போல இருந்திருப்பாள் என்று என் நாட்குறிப்பில் எழுதியிருந்தேன். அலுவலகத்திற்குக் கிளம்பிக்கொண்டிருக்கையில் மேஜையில் ஏறி என் சட்டைப்பித்தான்களோடு விளையாடியபடியே அப்பா எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கிற குழந்தையாக சோக்கோவையும் ரீபாங்கின் இடத்தில் என்னையும் வைத்து என் கற்பனை விரிந்திருந்தது. அடித்த முயலின் கறியை நினைத்து சப்புகொட்டும் சோக்கோ என் கற்பனைக்கு ஒவ்வாத அரக்கியாய்த் தெரிந்தாள். காப்பிப்பொடியின் குழம்பிபோல மனதில் வெறுப்பு அண்டியது. கிய்னாமும்  டானியலும் அதிகம்     பேசிக்கொண்டிருந்தார்கள். மெவாங் ஓவின் மகள்களும் சோக்கோவும் சிறு சிறு பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர். என்னருகில் உட்கார்ந்திருந்த ரீபாங் நன்றாகத் தூங்கிவிட்டிருந்தார். 

மியாவ் நகரில் வன இலாக்காவின் விருந்தினர் விடுதியில் இரவு தங்க ரீபாங் ஏற்பாடு செய்திருந்தார். நான் என்னுடைய அறைக்கு உடனடியாகச் சென்றுவிட்டேன். என்னைச் சுற்றி இருப்பவர்களுடன் எனக்கு மன விலகல் ஏற்படுவதும் நான் எனக்குள்ளே உட்சுருங்கி போவதும் எனக்குப் பழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்த முறை என்னிடத்தில் எந்த நியாயமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. முயல் அவர்களுக்கு இரை, அதை நான் பார்ப்பது போலவேதான் அவர்களும் உயிராகப் பார்க்கவேண்டும் என்று நினைப்பது அடிப்படையில் தவறானது என்பது மட்டுமில்லை காட்டுக்குள் இந்த கூட்டத்தோடு எப்படிப்போவது என்றும் எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. பயணத்தின்போது போட்ட கள்ளத்தூக்கத்தினால் அலுப்பு அதிகமாய் இருந்தது.  மின்சாரமில்லாத வன விடுதியில் விதவிதமான சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. முயல்கறி சமைக்க ஆரம்பித்துவிட்டார்களோ? குழந்தைகளோடு பேசினால் மனம் தேறும் போலிருந்ததால் ஃபோனைத் தேடினேன். பேட்டரியின் சக்தி இறங்கியிருந்தது. போச்சுடா. அத்துவானக்காட்டில் மன இறுக்கத்தோடு மாட்டவேண்டும் என்பது எந்த இருவாட்சிக்கான நேர்த்திக்கடனோ? 

முன்னிரவில் மெதுவாக என்ன நடக்கிறது என்று பார்க்கலாமா என்று கதவைத் திறந்தபோது ஏற்றிய மெழுகுவர்த்திகளோடு என் சக நாகர்கள் மூலைகளெல்லாம் எதையோ தேடிக்கொண்டிருந்தனர். ரீபாங் கதவை முழுமையாக திறந்துவிட்டு கட்டிலில் ஏறி நின்றுகொள் என்று கத்தினார். கிய்னாம் என்னை அறையினுள்ளே தள்ளினான். கட்டிலில் ஏறி நின்று கொண்டேன்.  ரீபாங் இருளை ஊடுருவிப்பார்ப்பவராக அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தார். மேவாங் ஓவின் மகள்களும் நடுக்கூடத்தில் கிடந்த நாற்காலிகளின் மேல் ஏறி நின்றுகொண்டிருந்தனர். ரீபாங் முத்துவின் அறையில்தான் என்றார். என்ன என்ன தேடுகிறீர்கள் என்றேன் இன்னும் விபரம் அறியாமல். விடுதிக்குள் பாம்புகள் நுழைந்துவிட்டன என்றான் டானியல். ரீபாங் சோக்கோவை டாட்டியை மீட்டச் சொல்லிவிட்டு என் அறைக்குள் நுழைந்தார். சோக்கோ டாட்டியை மீட்டிய விதம் புதுமையாய் ஆனால் நாரசமாய் இருந்தது. நரம்புகளிலும் தோலிலும் ஒரு விதமான கூசும் சிலிர்ப்பினை உண்டு பண்ணுகிற சத்தம் அது. ரீபாங் நான் ஏறி நின்றுகொண்டிருந்த கட்டில் காலின் அருகே குனிந்து இருளில் துளாவி ஒரு நாலடி நீள பாம்பினைப் பிடித்து வெளியில் எடுத்தார். டானியல் மெழுகுவர்த்தியைக் காட்டியபோது ரீபாங்கில் கையில் பாம்பு விறுவிறுவென்று சுற்றி அவரைக் கொத்த சீறியது. சோக்கோ ஒரு துணியை பை போல குழித்துக்காட்ட கிய்னாம் ரீபாங் கையில் சுற்றிய பாம்பினை அவிழ்க்க முயற்சித்தான். பாம்பு இன்னும் வலுவாகச் சுற்றியது. டானியல் தன் கையிலிருந்த மெழுகுவர்த்தியை என்னிடம் கொடுத்துவிட்டு அவனும் கிய்னாமுடன் சேர்ந்து ரீபாங் கையிலிருந்து பாம்பை அவிழ்த்து எடுக்க  பாம்பு வாலைச் சுழற்றி அடித்தது. பாம்பின் சீற்றத்தையும் கண்களையும் பிளவுண்ட நாக்கையும் அவ்வளவு அருகில் பார்த்த நான் கை நடுங்கி மெழுகுவர்த்தியைத் தவறவிட்டேன். கட்டில் மேலிருந்த போர்வையில் மெழுகுவர்த்தி விழ போர்வை தீப்பற்றிக்கொண்டது. ரீபாங் ஏதோ கத்தினார். பாம்பு அவரைத் தீண்டிவிட்டதோ என்று நான் நினைத்தேன். பின்னால் அவர் பாம்பைக் கொன்றுவிடாதீர்கள் என்று அவர் கத்தியதாக பின்னர் அறிந்தேன். கிய்னாம் நிமிடத்தில் தீயை அணைத்து மெழுகுவர்த்தியை தன் கையில் எடுத்துக்கொண்டான். நாலைந்து நிமிட போராட்டத்திற்குப் பின் பாம்பை ரீபாங்கும் டானியலும் எடுத்து சோக்கோ தாயாரித்திருந்த துணிப்பைக்குள் திணித்துவிட்டனர். சோக்கோ துணியை பாம்பை அடக்கிய மூட்டையாகக் கட்டிவிட்டாள். ரீபாங் இன்னொரு பாம்பு இருக்கிறது என்று சொல்ல நான் பயத்தில் உறைந்தேன்.

இரண்டாவது பாம்பு என் அறைக்குள்ளிருந்த குளியலறையில் இருந்தது. டானியலிடம் பாம்பு மூட்டையை கொடுத்துவிட்டு சோக்கோ டாட்டியில் அந்த நாரச சப்தத்தை மீண்டும் எழுப்பினாள். ரீபாங்கும் கிய்னாமும் குளியலறைக்குள் மெழுகுவர்த்தியுடன் சென்றனர். இந்த முறை ரீபாங் பாம்பினை இரண்டு கைகளினாலும் பிடித்து விட்டார். சுலபமாக துணியினுள் கட்டிவிட்டனர். கிய்னாமும் டானியலும் பாம்புப்பொதிகளைத் தூக்கிக்கொண்டுபோய் பாம்புகளை பத்திரமாக விடுதிக்கு வெளியிலிருந்த மரங்களிடையே விடுவித்துவிட்டு வந்தனர்.

பயந்திருப்பாய் ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு படு இல்லையென்றால் தூக்கம் வராது என்றார் ரீபாங். நடுக்கூடத்தில் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தோம். வீட்டிற்குள் வரும் பாம்புகள் இறந்தவர்களின் ஆன்மாக்கள் என்றாள் சோக்கோ. வீட்டிற்குள் வரும் பாம்புகளை பத்திரமாக வெளியில் விட்டுவிட வேண்டும் என்றொரு நம்பிக்கை பொதுவாக எல்லா காடு வாழ் ஆதிவாசிகளிடமும் இருப்பதாக சோக்கோ மேலும் சொன்னதை மற்றவர்கள் எல்லோரும் ஆமோதித்தனர். அரிசிக்கள் உள் இறங்க இறங்கவே எனக்கு பயம் குறைய ஆரம்பித்தது. என் அறையில் பிடித்த பாம்புகள் விஷப்பாம்புகள் என்பது தெரிய வந்தபோதே அவர்கள் என்னைக் காப்பாற்றியிருக்கின்றனர் என்று உறைத்தது. அப்பா இருளை ஊடுருவிப் பார்த்துவிடுவார் என்று சோக்கோ சொன்னபோது ரீபாங் அதை மறுத்தார். ஊடுருவிப் பார்ப்பது என்றால் இருளில் ஊடுருவிப்பார்ப்பது என்று அர்த்தமாகாது என்ற ரீபாங் காட்டில் வாழும் எவருக்கும் இருளில் பார்ப்பது பாம்பு அருகாமையிலிருப்பதை நுகர்வது எல்லாம் சர்வ சாதாரணமான விஷயங்கள். ஊடுருவிப் பார்ப்பது வேறு என்ற ரீபாங் அது என்ன என்று அப்போது விளக்கவில்லை. 

முத்துவுக்கு காடு, காடுகளில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை பற்றிய எல்லா ரொமாண்டிக் எண்ணங்களும் இப்போது காணாமல் போயிருக்குமே என்றான் கிய்னாம். நீ முயலை அடித்தபோதே முத்துவுக்கு காட்டு வாழ்க்கை பற்றிய எல்லா கற்பிதங்களும் தகர்ந்து விட்டன என்ற ரீபாங் அப்போது முத்துவின் முகம் போனபோக்கைப் பார்க்கவேண்டுமே நீ என்றார். நான் எதுவும் சொல்லாமல் அரிசிக்கள் கோப்பையை வாயில் கவிழ்ப்பதில் மும்முரமாய் இருந்தேன். எப்போது என் முக மாற்றங்களை கவனித்தார் ரீபாங்? அவ்வளவு வெளிப்படையாக  உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதாகவா இருக்கிறது என் முகம்? இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் அல்லவா நாம் என்ற டானியலை நோக்கி சே சே நாம் காடுகளை அழிப்பவர்கள், விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடும் காட்டுமிராண்டிகள் என்று கெக்கெலி கொட்டினாள் மெவாங் ஓவின் மகள். தலைமுறை தலைமுறையாய் காட்டில் வாழ்ந்து பார்த்தால் தெரியும் காட்டு வாழ்க்கை என்றால் என்ன என்றான் டானியல். 

மெவாங் ஓவின் மகள்கள் எங்களுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தனர். அரிசிச்  சோறும் ஏதேதோ துணைக்கறிகளும் இருந்தன. பல்வகை 
உணர்ச்சிகளுக்கு ஆளானவனாய் நான் அதிகம் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். வன விடுதியை வந்தடைந்த போது இருந்த மன விலகல் இப்போது இல்லை என்பதில் சிறிது மகிழ்ச்சி கூடியிருந்ததது. உப்புக் கரிப்பு அதிகமாய் இருந்த அந்தத் துணைக்கறி முயல் கறியாய் இருந்திருக்கக்கூடுமோ என்று இப்போது அந்த நாளை நினைவு கூர்ந்து எழுதும்போதுதான் தோன்றுகிறது.

——————————————————————————————————

தொடரும் 

No comments: