தமிழ் அகத்தின் வரலாறே தமிழகத்தின் வரலாறாகும்; அந்த வரலாற்றினை கவிதைகளின் மூலமாக மட்டுமேதான் அறியமுடியும். உணர்ச்சிகரமான காரண காரியத் தொடர்ச்சியினை கதை சொல்லலிலும் கவிதை சொல்லலிலும் ஏற்படுத்தும்போது கதைக்களன் (plot) உருவாகிறது என்று போன பகுதியிலேயே குறித்தேன். சங்க அகக் கவிதை கதைக்களனுக்கு நிகரான பேச்சுக் களனை அடிப்படையாகக் கொள்கிறது. கவிதையை யார் பேசுகிறார்கள் (கூற்று), யாரை நோக்கிப் பேசுகிறார்கள் (முன்னம்) என்ற அந்தரங்கக் களனுக்குள் கவிதை கேட்பவனை அல்லது வாசிப்பவனை நிறுத்துகிறது. பக்தி கவிதையிலோ முன்னிலை எப்பொழுதுமே பரம்பொருள்தான் என்பதினால் வாசகனும் கவிக்குரலைப் போலவே பிறன்மையில் சரணடைய விழைபவன். பாரதியிடம் தோற்றம் பெறுகிற தன் அகம் நோக்கி பேசுகின்ற குரல் புதியது, நவீனமானது. சங்கக் கவிதையைப் போல, பாரதியின் கவிதையில் வாசகனின் இடம், வேறு இருவரின் அந்தரங்கத்தினுள் பங்கேற்கும் பார்வையாளனுடையது அல்ல; பக்திக் கவிதையைப் போல தன் உணர்ச்சியின் தீவிரத்தில் தன்னை ஒப்புக்கொடுக்கக்கூடிய இடமுமல்ல. பாரதியில் தன் அகத்தோடும் கடவுளோடும் பேசுகிற கவிக்குரலை கேட்கிறோம்.
பாரதிக்குப் பிந்திய நான்- நீ என்ற நவீன கவிதையின் உரையாடல் பேச்சுக்களனில் நகுலன் ஒருவரைத் தவிர்த்து ‘நான்’ கொஞ்சம் கொஞ்சமாக உயர்வானதாகவும் இறுக்கமுடையதாகவும் மாறியது. நகுலனில் நான்-நீ உரையாடல் களன் பெரும்பாலும் சமத்துவமுடையதாகவே இருக்கிறது. ஆனால் நகுலனின் கவிதைகளில் ‘நான்’ உடைந்து போவதையும் பல குரல்களில் பேசுவதையும் கேட்கிறோம். பேசப்படும் நபருக்கு பெயர் இருந்தாலும் கூட நகுலன் கவிதைகளில் ‘நீ’ பேசுவதற்கான நிமித்தம் மட்டுமே என்று ஆகிவிடுகிறது. நகுலனின் கவிதைகளில் ‘நீ’ ஒரு உப்புக்கு சப்பாணி இருப்பு என்றால் ஆத்மாநாமிடமோ ‘நானின்’ இருப்பும் கேள்விக்குரியதாய் மாறி விடுகிறது.
ஆத்மாநாமின் பின்வரும் கவிதை ‘நான் இல்லை’ என்றே முடிகிறது:
நான் இருக்கிறேன்
நான் இருக்கிறேன் என்பது
தெரியாமலே இருக்கிறேன்.
நான் இருப்பதைத்
தெரிந்துகொண்டபோது
நானும்நானும் இருந்தோம்.
உண்மையான நானும்
உண்மை போன்ற நானும்
பேசிப்பேசி
உண்மை போன்ற நானாய்
நானாகிவிட்டேன்.
உண்மையான நான்
அவ்வப்போது ஆவேன்
உண்மை போன்ற நான்
மறைந்திருக்கையில்
உண்மை போன்ற நான்
இல்லவேயில்லை என்று
உண்மையான நான் சொல்லும்
சரி என்று
உண்மை போன்ற நான்
ஆமோதிக்கும்.
இதனைக் கவனித்த நான்
உண்மையான நானும் இல்லை
உண்மை போன்ற நானும் இல்லை.
நான் மட்டும் இருக்கிறேன்
என்றுணர்ந்தேன்.
நான் மட்டும் இருக்கையில்
அமைதியாய் இருந்தது.
அமைதியாய் இருப்பதை
உணர்ந்ததும்
நான் வேறு ஆகி விட்டேன்.
நானும் வேறான நானும் பொய்.
நான் இல்லை.
ஆத்மாநாமின் கவிதை தன்னிருப்பினை முழுமையாக நிராகரிக்கிறதென்றால் சி.மணியிடம் வெளியில் தப்பிச்செல்ல வழியில்லாமல் மாட்டிகொள்ளும் தன்னிலையை அவதானிக்கிறோம்.
சி.மணியின் ‘அறைவெளி’
தப்பிவிட்டேன் என்று விழித்தேன்.
சுற்றும்முற்றும் பார்த்தேன். மேலே
வானம்; நான்கு பக்கமும் பூவிருள்
கூரை, சுவர்கள் எதுவும் இல்லை.
எல்லாப் பக்கமும் வழிகள் தெரிந்தன.
வெட்டவெளிதான் இது, அறை அல்ல
என்று சிலகணம் துள்ளியது என்மனம்.
மேற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
தெற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
வடக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
கிழக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
எழும்பிக் குதித்தேன் இடித்தது கூரை.
சுற்றும்முற்றும் பார்த்தேன். மேலே
வானம்; நான்கு பக்கமும் பூவிருள்
கூரை, சுவர்கள் எதுவும் இல்லை.
எல்லாப் பக்கமும் வழிகள் தெரிந்தன.
வெட்டவெளிதான் இது, அறை அல்ல
என்று சிலகணம் துள்ளியது என்மனம்.
மேற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
தெற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
வடக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
கிழக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்
எழும்பிக் குதித்தேன் இடித்தது கூரை.
சுந்தரராமசாமியின் (பசுவய்யா) கவிதையிலோ ‘நீ’ என்ற பிறன்மை முழுமையான கொடூரமாகி, நரகமாகிவிடுவதால் அதை எதிர்த்துப் போராடி தன்னை நிலை நிறுத்தி வென்று காட்டுவேன் பார் என்று சவால் விடுவது கவிதை என முன்வைக்கப்படுகிறது.
பசுவய்யாவின் 'சவால்'
நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.
வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மனவலியுண்டு.
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மனவலியுண்டு.
ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல பதுங்கல்.
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல பதுங்கல்.
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.
எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்.
அடிவானத்துக்கு அப்பால்.
பக்திக் கவிதையில் ‘நீ’யாக இருந்த கடவுள் பாரதியின் பக்தி கவிதைகள் அல்லாத நவீன கவிதைகளில் புகார்களையும் கோரிக்கைகளையும் ஏன் அதட்டல்களையும் (சொல்லடி சிவசக்தீ எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்) தன் அகம் நோக்கிய உரையாடல்களையும் பேசிப்பார்க்கக்கூடியவராகவே இருந்தார்.
சுகுமாரன்தான் தமிழ் நவீன கவிதையில் ‘மகாமசானத்தில் தெரியாதே என்று இறந்தார் என் கடவுள்’ என்று கடவுளின் இறப்பை முதலில் பிரகடனப்படுத்தினார் என்று என் நினைவு. அதன் பிறகு பசுவய்யாவின் கொடூர எதிரிக்கு நிகராக சாத்தானையும் பிசாசையும் தமிழின் நவீன கவிதையை தொடர்ந்து எழுதியவர்கள் ‘நீ’யாக மாற்றிவிட்டார்கள் எனலாம். உதாரணமாக மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் ‘நீ’ யாக இருக்கக்கூடிய சாத்தான்களையும் பிசாசுகளையும் நாம் அடிக்கடி சந்திக்கிறோம் . மனுஷ்யபுத்திரன் ‘சாத்தான்களோடு வாழ்வதற்கான எளிய பயிற்சிகள்’ கூட சொல்லித் தருகிறார். அவருடைய பிசாசுக்கவிதைகள் மூன்றில் ஒன்றினை வாசிக்கலாம்:
பிசாசுக்கவிதை- 3
இந்தப் பிரியத்தின்
நிமித்தம்
நான் உனக்காக எப்போதும்
மிக விநோதமான
மிக விலையுயர்ந்த
பதிலீடு செய்யமுடியாத
பரிசுகளையே தேர்ந்தெடுக்கிறேன்.
பிரியும்போது
திருப்பிக்கொடுக்கப்படும்
எந்தப் பரிசுகள்
வேட்டைக் கருவிகளாகுமோ
எவை பிசாசின் நிழல்களை உருவாக்குமோ
எவற்றிற்கு கனத்த பிணவாடை இருக்குமோ
அவற்றை மட்டுமே
இந்தப் பிரியத்தின் நிமித்தம்
உனக்காகக் கொண்டு வருகிறேன்.
தமிழ் அகத்தின் வரலாற்றினை மேற்சொன்ன தமிழ் நவீன கவிதைகளின் வழி பல்வேறு நிலைகளாகத் தொகுத்துக்கொள்வது நவீன கவிதைகளுக்குப் பிந்திய கவிதைகளையும் தற்கால கவிதைகளையும் அணுக வாசிக்க உதவியாக இருக்கும். இந்த இடத்தில் பவித்ரன் தீக்குன்னியின் ‘பின் நவீனத்துவம்’ என்ற கவிதையில் தன்-விசாரணை தோன்றியவுடனேயே தன்னைத் தாழ்த்தி ‘நீ’யை, பிறன்மையை முதன்மைப்படுத்துவதால் அது எப்படி பின் நவீனத்துவ கவிதையாகவும் இருக்கிறது என்பதை நாம் வாசித்ததை நினைவில் கொள்வது மேலும் உதவியாக இருக்கும்
-----------------------------------------------------------------
தொடரும்
1 மனுஷ்ய புத்திரன், “அதீதத்தின் ருசி” உயிர்மை வெளியீடு 2009
No comments:
Post a Comment