Wednesday, April 17, 2013

அஞ்சலி: பாடகர் பிரதிவாதி பயங்கரம் ஶ்ரீனிவாஸ்பி.பி.ஶ்ரீனிவாஸ்பல இலக்கிய நண்பர்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருப்பது போலவே பாடகர் P.B.ஶ்ரீனிவாஸ் அவர்களை நானும் டிரைவ் இன் வுட்லேண்ட்ஸில் சந்தித்திருக்கிறேன், பழகியிருக்கிறேன். அவர் மரணமடைந்த செய்தியைப் படித்து மிகவும் துயரம் அடைந்தேன். தமிழ் பண்பாட்டு வரலாற்றில் ஒரு முக்கியமான cultural  icon அவர். 

1985இலிருந்து 1987 வரை நான் தமிழ் சினிமா ஆராய்ச்சி மாணவனாக சென்னையில் வசித்துக்கொண்டிருந்தேன். சினிமா ஆராய்ச்சியை தலை முழுகிவிட்டு நாட்டுப்புறவியலுக்கு மாறிவிடலாம் என்று முடிவு செய்திருந்த 1987ஆம் வருடமே பி.பி.ஶ்ரீனிவாஸுடன் பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. டிரைவ் இன் வுட்லேண்ட்ஸில் கையில் ஹிட்ச்காக் ஆன் ஹிட்ச்காக் என்ற பெரிய புத்தகத்துடன் ஶ்ரீனிவாஸ் அவர்கள் வழக்கமாக அமரும் மேஜைக்கு பக்கத்து மேஜையில் அமர்ந்து நண்பர் ஒருவரின் வருகைக்காக காத்திருந்தேன். புத்தகம் A4 சைசைவிட பெரிய புத்தகம் என்பதால் எல்லோர் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருந்தது. புத்தக அட்டையில் ஹிட்ச்காக் தன்னுடைய கொய்யப்பட்ட தலையை தன் கையில் ஏந்தி நிற்பது போன்ற புகைப்படம். ஶ்ரீனிவாஸ் அவர்கள் என்ன புத்தகம் என்று விசாரித்தார். அதைத் தொடர்ந்து அறிமுகமும் உரையாடலும் நீடித்தது. நான் சினிமா ஆராய்ச்சியை விட்டு விட்டு நாட்டுப்புறவியல் ஆராய்ச்சிக்கு மாறப்போவது அந்த சமயம் என்னை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. அதைப்பற்றியே அவருடனும் பேசினேன். அது நல்ல முடிவு என்று அவர் என்னிடம் சொன்னது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. Semiotics of Tamil cinema  என்ற என் ஆராய்ச்சித் தலைப்பைக் கேட்டுவிட்டு திரைப்பட பாடல்களையும் பாடல் காட்சிகளையும் எப்படி ஆராய்வீர்கள் என்று அவர் வினவினார். குறியியல் ஆய்வு பலவகைப்பட்டது அவற்றில் கலாச்சார சமிக்ஞைகளை ஆராய்வது ஒரு வகை. கலாச்சார சமிக்ஞைகள் திரைப்பட பாடல்களிலும்  பாடகர்களின் குரல்களிலும் எப்படி வெளிப்படுகின்றன என்று ஆராய்வது என்னுடைய இலக்கு என்று பதில் சொன்னதாக நினைவு. ஆனால் நான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அவருக்கே அத்தகைய ஆய்வுக் கட்டுரை ஒன்றினை எழுத நேரிடும் என்று நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

ஶ்ரீனிவாஸின் குரலை, அவர் பாடிய திரைப்படப்பாடல்களை அவை நம் பண்பாட்டுக்கு அளித்திருக்கும் கொடையை எப்படி புரிந்து கொள்வது? மென்மையான ரொமாண்டிக் குரல் பி.பி.ஶ்ரீனிவாஸுடையது என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. கள்ளமும், கபடமும் இல்லாத குரலும் கூட. சி.எஸ்.ஜெயராமனின் குரலைப் போல anarchyஇன் துள்ளல்களும் கரடுமுரடும், பிசிறுகளின் அழகும் இல்லாத குரல். “நிலவுக்கு  என் மேல் என்னடி கோபம்? நெருப்பாய் எரிகிறது ” என்ற பாடலைக் கேட்டே எதிரே நிற்பது நிலவல்ல நிலவென உருவகிக்கப்படும் பெண்தான் என்று உடனடியாக யூகித்து விடலாம். கோபம் கொண்ட பெண்ணை சமாதானம் செய்யும் தொனியிலேயே அந்த முழுப்பாட்டையும் பாடியிருப்பார் ஶ்ரீனிவாஸ் துளியும் அதில் ஒரு சீண்டல் இருக்காது. ஶ்ரீனிவாஸின் இன்னொரு நிலவுப் பாடலான “நிலவே என்னிடம் நெருங்காதே  நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை”   சோகமும் சிருங்காரமும் கலந்த பாடல். இரண்டு பாடல்களிலுமே சோகம் கட்டுக்கு மீறி ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’ பாடல் போலவோ அல்லது ‘எங்கே நிம்மதி?’ பாடல் போலவோ கண்ணீரும் கம்பலையுமாய் தறி கெட்டு விடுவதில்லை. ஶ்ரீனிவாஸின் குரல் எராளமான நாடக பாவங்களையும் உணர்ச்சிகளையும் கொட்டுவதில்லை; அது ஒரு சீரான உரையாடல்த்தன்மையுடையதாய் அளவானதாய் இருக்கிறது. ‘ரோஜா மலரே ராஜகுமாரி’  என்ற குதூகலத்தன்மை கொண்ட பாடலாய் இருந்தாலும் சரி ‘தென்னங்கீற்று ஊஞ்சலிலே’ என்ற பாடலாய் இருந்தாலும் சரி உணர்ச்சி மிகுவதில்லை; வார்த்தைகள் சிதைவதில்லை; அதன் ஓட்டம் தடைப்படுவதில்லை. உணர்ச்சிகளின் நுண் தளங்கள் மென்மையாகச் சுட்டப்படுகின்றன; விரிக்கப்படுவதில்லை. 

பி.பி.ஶ்ரீனிவாஸின் அடிக்குரல் கனத்ததாய் வெளிப்பட வாய்ப்பிருந்தாலும் அவர் அதனை அபூர்வமாயும் பயன்படுத்தியதில்லை. ‘கண்ணாலே பேசிக் கொல்லாதே’ பாடல் கனத்த குரலுக்கான சிறந்த சந்தர்ப்பம். கண்டசாலாவோ ஏன் ஏ.எம்.ராஜாவோ கூட அதை நழுவ விட்டிருக்க மாட்டார்கள். ஆனால் நன்றாக உற்றுக் கேட்டால் கனத்த குரலைப் பயன்படுத்தாத கலைக்கட்டுப்பாடு ஶ்ரீனிவாஸிடம்   எந்த அளவுக்கு கலை முழுமையடைய உதவுகிறது என்பது தெரிய வரும். அவருடைய இதர பாடல்களைக் கேட்கும்போது இது  இன்னும் நுட்பமாக தெரியவரும். ‘காலங்களில் அவள் வசந்தம்’ பாடல் மென்மையும் கட்டுப்பாடும் அழகின் மெருகுகள் என்பதை உணர்த்தும். ‘என்னருகே நீயிருந்தால்’ பாடல் ஶ்ரீனிவாஸினால் மட்டும்தான் அணுக்கத்தின் குதூகலத்தை வெளிப்படுத்தும் பாடலாகிறது என்று அடித்துச் சொல்லலாம். 'அனுபவம் புதுமை' பாடலை அவரைத் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் பாடல் விரசமாகியிருக்கும்.

நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’, ‘மயக்கமா கலக்கமா’ ஆகிய பாடல்கள் நெஞ்சு வெடித்து கதறி அழத் தகுந்த பாடல்கள். ஶ்ரீனிவாஸ் அந்த உணர்ச்சிப் பெருக்கினை ஒரு ஆற்றொழுக்கிற்குக் கொண்டு வந்திருப்பார். என்னுடைய நண்பர் காந்தி பாலசுப்பிரமணியன் இன்றைக்கும் டாஸ்மாக் பார்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல் ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்’ பாடல்தான் என்றார்; அந்தப் பாடலைக் கேட்டு கண்ணீர் தாரை தாரையாய் வழிய அழுபவர்கள் ஏராளமாம். ஆனால் பாடலோ தன் சீரொழுங்கினில் இருந்து குலையாதது. உதடுகள் துடிக்க வார்த்தைகள் வெளிவராமல் காட்சியிலேயே வெளிப்படுத்தும் ஆழ் உணர்ச்சியின் தன்மையினது.

பி.பி.ஶ்ரீனிவாஸின் கலையின் கலாச்சார மூலங்கள் யாவை சமிக்ஞைகள் யாவை என்பதினை அறிய அவர் பாடியுள்ள இதர பக்தி பாடல்களையும் கேட்க வேண்டும். குறிப்பாக பி.பி.ஶ்ரீனிவாஸ் பாடிய முகுந்த மாலை, ஶ்ரீ மல்லிகார்ஜுன ஸ்தோத்திரம் ஆகியனவற்றைக் கேட்கவேண்டும் . குலசேகராழ்வார் இயற்றிய முகுந்த மாலையை ஶ்ரீனிவாஸ் ‘பாடியிருக்கிறார்’ என்று விவரிப்பது தவறானது ஒதுதலுக்கும், உச்சாடனத்திற்கும், பேசுவதற்கும் இடைப்பட்ட ஒன்று அது. அதிலும் ‘நாமாமி நாரயண பாத பங்கஜம், கரோமி நாராயண பூஜனம் சதா, வதாமி நாரயண நாமம் நிர்மலம், ஸ்மாராணி நாரயண தத்வம் அவ்யயம்‘ என்ற முகுந்த மாலையின் புகழ் பெற்ற பத்தியினை ஶ்ரீனிவாஸ் ‘பாடுவதை‘ கேட்பவர்களுக்கு அவருக்கு உணர்ச்சியை கட்டுக்கோப்புடன் கையாளும் திறன் வைணவ பக்தி மரபிலிருந்து வருவது புலப்படும். பக்தியின் உச்சத்தில் ஆவேசத்தில் சாமியாடிவிடுகின்ற பக்தியல்ல இது. பரம்பொருளுடன் இணைவதற்கான தாபம் உள்ளார்ந்த ஆற்றொழுக்காய் மாறிவிட்ட நிலையில் இவ்வுலக அன்பாக, உரையாடலாய் விகசிக்கின்ற பாங்கு, பாவனை, சகஜம்.   ஸ்வாதித் திருநாளின் கீர்த்தனைகளில் நாம் கேட்கும் கட்டுக்கோப்பான உணர்ச்சியின் வெளிப்பாடு. பதம் பாடுதலின் நீட்சி.
தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ, யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர், தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர், ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே” என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பாடுவாரே அந்த உணர்ச்சி பீறிடல் ஆற்றுப்படுத்தப்பட்டதன் வடிவம். ஏன் பாரதியின் கண்ணம்மா பாடல்களில் உள்ளார்ந்த அமைதியுடன் இருக்கின்ற பக்தி/காதல் இல்லையா? ‘காற்று வெளியிடை கண்ணம்மா” பாடலை ஶ்ரீனிவாஸ் பாடும்போது அது பேரழகுடன் ஒலிக்கவில்லையா?
‘பிரதிவாதி பயங்கரம்’ என்ற வைணவ பட்டத்தை இயல்பாக எற்கத் தகுந்தவரே ஶ்ரீனிவாஸ். பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பய தீட்சிதர் என்ற வேதாந்த அத்வைதிக்கும் ராமானுஜர் தத்துவப்பள்ளியின் வழி வந்த துவைதி தொட்டச்சாரியாருக்கும் ஏராளமான விவாதங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நிலப்பகுதிகளின் பக்தியும் தத்துவமும் வரலாறுகளாய் சங்கமிக்கும் களன்கள் அப்பய தீட்சிதருக்கும் தொட்டாச்சாரியாருக்கும் இடையில் நடந்த விவாதங்கள் எனலாம். தொட்டச்சாரியார் சோளிங்கரை நிர்மாணம் செய்தார். அவர் வழியினரான, திருப்பதி ஏழுமலையானுக்கு பாடப்படும் வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றிய அன்னங்காச்சாரியார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். அவருடைய தர்க்க புலமையையும், வாதத்திறமையும் அங்கீகரித்து ‘பிரதிவாதி பயங்கரம்‘ என பட்டம் கொடுக்கப்பட்டது. பின்னாட்களில் வைணவ பெரியார் பலருக்கும் ‘பிரதிவாதி பயங்கரம்‘ என்பது குடும்பப் பட்டமாய் வழங்கப்படுவதாயிற்று.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் என்று இரண்டாயிரம் பாடல்களுக்கும் மேல் பாடிய, ஆந்திரா காக்கிநாடாவில் பிறந்து, தமிழிலும் தெலுங்கிலும் புகழ் பெற்று சதா கன்னடத்தில் கவிதை எழுதிக்கொண்டிருந்த, வைணவத்தில் தோய்ந்த பி,பி.ஶ்ரீனிவாஸ் ஒரு உண்மையான பிரதிவாதி பயங்கரம்.
1994 அல்லது 1995 இல் என்று ஞாபகம். ‘புதிய பார்வை‘ பத்திரிக்கையில் ‘பத்மநாபனின் கூடு‘ என்ற என் சிறுகதை பிரசுரமாகியிருந்தது. கோணங்கி சமீபத்திய ‘கல்குதிரை‘ இதழில் இக்கதையை குறிப்பிட்டு எழுதியிராவிடில் எனக்கு இந்தக் கதையும் அது தொடர்பான சம்பவங்களும் நினைவுக்கே வந்திருக்காது. அந்தக் கதை வெளிவந்த இதழுடன் வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் உட்கார்ந்திருந்தேன். பி.பி.ஶ்ரீனிவாஸ் அவர்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்தேன். கலர் கலராக பல பேனாக்களை வைத்து அவர் எழுதிக்கொண்டிருந்தார். கூர்க் தலைப்பாகையும் நாமமும் அவருடைய தெளிவான அடையாளங்களாகியிருந்தன. வா என்று கையசைத்துக் கூப்பிட்டார். பேச்சு என் கையிலிருந்த இதழையும் அதில் பிரசுரமாகியிருந்த என் கதையையும் நோக்கி திரும்பியது. என்ன கதை என்று விசாரித்தார். மூளை வளர்ச்சி குன்றிய ஒருவன் பிரமாதமான பாடல் வரிகளை (கவனிக்க கவிதை வரிகளை அல்ல) சொல்லுவது பற்றிய கதை என்றேன். எங்கே உன் கதாபாத்திரம் சொல்லும் நல்ல வரி ஒன்றைச் சொல் பார்க்கலாம் என்றார். “என் ஆத்மாவைக் கரைத்து உன் விழிகளுக்கு அஞ்சன மை தீட்டவா?” என்று வாசித்துக்காட்டினேன்.  அவர் அவ்வரியினை மெதுவாகப் பாடிப்பார்த்தார், என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
இன்று எனக்கு ‘பத்மநாபனின் கூடு‘ கதைப்பிரதி கிடைக்குமானால் அதை பிரதிவாதி பயங்கரம் ஶ்ரீனிவாஸ் அவர்களுக்கு மனப்பூர்வமாக சமர்ப்பணம் செய்வேன்.


---------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு: இக்கட்டுரையை பாதி எழுதிருக்கையில் நண்பர்கள் காந்தி பாலசுப்பிரமணியனும், பாலாஜி ஶ்ரீனிவாசனும் என் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களோடு இக்கட்டுரையின் போக்கினை விவாதித்தபோது அவர்கள் எனக்குத் தந்த விபரக்குறிப்புகளால் இந்தக் கட்டுரை செழுமை பெற்றது. அவர்களுக்கு என் நன்றி.   
6 comments:

kalapria said...

/பி.பி.ஶ்ரீனிவாஸின் அடிக்குரல் கனத்ததாய் வெளிப்பட வாய்ப்பிருந்தாலும் அவர் அதனை அபூர்வமாயும் பயன்படுத்தியதில்லை.
உணமைதான்./ எம்.ஜி.ஆர் அவருக்காக சில பாடல்களுக்குபி.பி ஸ்ரீனிவாஸைப் பாட வைத்தாகச் சொல்வார்கள்.மன்னாதி மன்னபடத்தில் அச்சம் என்பது மடமையடா என்று டி.எம்.எஸ் முழங்கினாலுமதில் வரும் “ நீயா நானா யார் நிலவேஇங்கு நிம்மதி இழந்தது யார் நிலவேஎன்ற பாடலை ..பி.பி.ஸ்ரினிவாஸ்பாடவேண்டுமென்று சொன்னாராம். அதே போல, பால் வண்ணம் பருவம் கண்டு...(பாசம்)
இங்கே வா, இங்கே ஒரு ரகசியம்..( காதல்வாகனம்பாடல்களுக்கும் அவரது தெரிவு பி.பி.எஸ். என்றும் சொல்வார்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான பல பாடல்கள்... ரசித்த விதத்தை ரசித்தேன்... அறியாத தகவல்களுக்கும் நன்றி...

நல்லதொரு கட்டுரைக்கு வாழ்த்துக்கள் பல...

Krishnan said...

PBS குரலை ரசிப்பதை போல் உங்கள் பதிவை ரசித்தேன்.

ஜமாலன் said...

அருமையான பதிவு. //‘என்னருகே நீயிருந்தால்’ பாடல் ஶ்ரீனிவாஸினால் மட்டும்தான் அணுக்கத்தின் குதூகலத்தை வெளிப்படுத்தும் பாடலாகிறது என்று அடித்துச் சொல்லலாம். 'அனுபவம் புதுமை' பாடலை அவரைத் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் பாடல் விரசமாகியிருக்கும்.// இந்த வரிகள் நானும் யோசித்திருக்கிறேன். பல பாடல்கள் அவரால் மட்டுமே பாட முடிந்தவை. அதான் அவரது தனித்தன்மை. தமிழ் கலாச்சாரத்தில் நவீனத்துவமான ஒரு சோகபாவத்தை உருவாக்கிய ஒரு முக்கியமான கரலின் ஆளுமைக்கு சொந்தக்காரர் அவர்.

ஜமாலன் said...

அருமையான பதிவு. //‘என்னருகே நீயிருந்தால்’ பாடல் ஶ்ரீனிவாஸினால் மட்டும்தான் அணுக்கத்தின் குதூகலத்தை வெளிப்படுத்தும் பாடலாகிறது என்று அடித்துச் சொல்லலாம். 'அனுபவம் புதுமை' பாடலை அவரைத் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் பாடல் விரசமாகியிருக்கும்.// இந்த வரிகள் நானும் யோசித்திருக்கிறேன். பல பாடல்கள் அவரால் மட்டுமே பாட முடிந்தவை. அதான் அவரது தனித்தன்மை. தமிழ் கலாச்சாரத்தில் நவீனத்துவமான ஒரு சோகபாவத்தை உருவாக்கிய ஒரு முக்கியமான கரலின் ஆளுமைக்கு சொந்தக்காரர் அவர்.

Anonymous said...

பிரமாதமான கட்டுரை எம்.டி.எம்., ரோலான் பார்த்தின் image, music, text புத்தகத்திலுள்ள கட்டுரைகளுக்கு நிகரான தரத்துடன் கூடிய கட்டுரை. அன்புடன் பார்த்திபன்