“பிரதமர் உரையாட விரும்புகிறார். தயாராகுங்கள். ஆடைகள் அணிந்திருத்தல் அவசியம்” கலியின் அடுக்குப் படுக்கையின் மேல் இருந்த தொடர்புஒலிபெருக்கியில் கன்ணனின் குரல் தொடர்ந்து ஒலித்தது. தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு முழித்த கலி தன் படுக்கையில் இருந்து மிதந்து இறங்கினாள். ஆஹ், ஒரு வழியாய் பூமியோடு தொடர்பு கிடைத்துவிட்டது!
“ரோஜர். வருகிறேன். கல்கி எங்கே?”
“வெளியே நடந்து கொண்டிருக்கிறாள். செய்தி அனுப்பிவிட்டேன். நீ வரும்போது வந்துவிடுவாள். வரும்போது வாயில் 7இல் அவள் திரும்பி வர உதவி தேவையா என்று பார்த்துவிட்டு வா”
“சரி”
கலிக்கு புவி ஈர்ப்பு விசை இல்லாமல் நிர்வாணமாய் தன் மார்புகள் குலுங்குவது பழக்கமாகியிருந்தது. ஆடையணிந்து அவற்றை இறுக்குவதற்கு அவளுக்கு வேண்டாவெறுப்பாயிருந்தது. தொளதொள பைஜாமாவையும் ஜிப்பாவையும் எடுத்து அணியப்போனவள் அவற்றை விட்டு விட்டு இரண்டே தாவலில் விண்கலத்தின் வால் பகுதியில் இருந்த டாய்லெட்டை அடைந்தாள். தொடைகளையும் கணுக்கால்களையும் டாய்லெட்டின் இருக்கையோடு இருந்த பிணைப்பான்களில் கட்டிவிட்டு உட்கார்ந்து சிறு நீர் கழித்தாள். சுத்தம் செய்யும் பொத்தானை அமுக்கியபோது ‘மலக்கிடங்கினை கழற்றி விடு, மலக்கிடங்கினை கழற்றிவிடு’ என்று சிவப்பு விளக்கு செய்தி பளிச்சிட்டது.
“கண்ணா, நாம் பயணம் கிளம்பி மூன்று மாதமா ஆகிவிட்டது? செப்டிக் டாங்க் கழற்றி விடு கழற்றி விடு என்கிறதே?”
“சீக்கிரம் வா பூமியோடு தொடர்பு கிடைத்துவிட்டது என்றால் என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ?” தொடர்ஒலிபெருக்கி வழி கத்தினான் கண்ணன்.
“கல்கி வெளியே நடந்துவிட்டு திரும்பியவுடன் டாய்லெட்டுக்குத்தான் ஓடிப்போவாள். அவளுக்காக டாய்லெட்டை தயார் பண்ண போனேன்”
“சரி. செப்டிக் டாங்க்கை கழற்றிவிடும்போது இடது பக்க விசைச்சுருள் வழி அனுப்பு. வலதுபக்க வழியில் அனுப்பினால் பக்கத்தில் மிதக்கும் பாறையில் மோதிவிடும். சீக்கிரம் வந்து சேர்”
“ரோஜர்”
கலி மீண்டுமொருமுறை காற்று உள்ளிளுப்பானால் டாய்லெட்டை சுத்தம் செய்யும் பொத்தானை அமுக்கினாள். சிறுநீர் குடிநீர் மறு சுழற்சி எந்திரத்திற்குச் செல்ல மீண்டும் சிவப்பு விளக்கு எரிந்தது. கலி விண்கலத்தின் இடது பக்க விசைச்சுருளைத் தேர்ந்தெடுத்து மலக்கிடங்கினை கழற்றிவிட்டாள். ‘காத்திரு’ என்று விளக்கு எரிந்தது. காத்திருக்கும் நேரத்தில் ஒரு காக்காய் குளியல் போட்டுவிடலாம் என்று குளியலறைக்குள் புகுந்தாள். குளியலறை என்பது நட்டுவாக்கில் நிறுத்தப்பட்ட குளியல் தொட்டி. கால்களையும் இடுப்பையும் பிணைப்பான்களில் கட்டிக்கொண்டு கலி கைக்குழாயில் தண்ணீரைப் பீய்ச்சியபோது நீர் கலியின் உடலைத் தொடாமல் அந்தரத்தில் மிதந்தது.
“கண்ணா, பாத்ரூமில் கீழிழுப்பு விசை வேலை செய்யவில்லை போல. தண்ணீர் மிதக்கிறது”
“கலி, தண்ணீரை உடனடியாக துண்டில் பிடித்து துடைத்துவிட்டு வா. தண்ணீரை மேலும் மிதக்க விடாதே. நாம் அபாயகரமான நுனியில் நின்றுகொண்டிருக்கிறோம்”
கண்ணனின் குரல் கலவரமாக இருந்தது. கலி கைக்குழாயை மூடிவிட்டு அடுக்கு பீரோவில் இருந்த துண்டை எடுத்து வீசி மிதந்துகொண்டிருந்த தண்ணீரை உறிஞ்சச் செய்தாள். கையளவு தண்ணீர் கலியின் துண்டு வீச்சுக்கு தப்பி சிறு குளமென களக் மொளக் என்று விண்கலத்தின் போக்கிற்கேற்ப பறந்து ஓடியது.
கலி ஈரத்துண்டால் தன்னைத் துடைத்துக்கொண்டு டாய்லெட்டை எட்டிப்பார்த்தாள். பழைய செப்டிக் டாங்க் நன்றாக பிளாஸ்டிக் பையில் பொதியப்பட்டு அண்டவெளியில் வீசுவதற்குத் தயாராக விசைச்சுருளில் வைக்கப்பட்டிருப்பதை மானிட்டர் காட்டியது. கலி ‘வீசு’ என்ற பொத்தானை அமுக்கினாள். விசைச்சுருள் செப்டிக் டாங்கினை சுழற்றி அண்டவெளியில் வீசியது. புது டாங்க் அதன் இடத்தில் இறங்கி தன்னிச்சையாய் உட்கார்ந்தது. மானிட்டரின் திரையில் பழைய டாங்க் விண்கலத்திற்கு எதிர்த்திசையில் சுழன்றோடுவது தெரிந்தது.
கலி பைஜாமாவையும் ஜிப்பாவையும் அணிந்துகொண்டு வாயில் 7ஐ நோக்கி மிதந்து சென்றாள். கல்கி விண்வெளியில் நடந்துவிட்டு வாயில் 1இல் உள் நுழைந்தாள். வரிசையாக உள்ள வாயில்களில் வாயில் 4 முதற்கொண்டு விண்கலத்திற்கு உள்ளாக அவளுக்கு விசேஷ உடைகள் தேவைப்படாது.
கல்கியின் முகம் அதீத வியர்வையில் நனைந்திருந்தது. உடல் கடுமையாகச் சூடேறியிருந்தது. பூமியின் நேரக்கணக்குப்படி கல்கி ஆறு மணி நேரம் பதினேழு நிமிடங்கள் விண்வெளியில் நடந்துவிட்டு திரும்பியிருந்தாள். அவள் அணிந்திருந்த சானிட்டரி நாப்கின் சிறுநீரினால் கனத்தது. வாயில் 4 தாண்டியதும் தலைக்கவசத்தையும் முகக்கண்ணாடியையும் கழற்றி பெருமூச்செறிந்தாள். அவள் முகத்தில் அரும்பியிருந்த வியர்வைத் துளிகள் அவள் முகத்தைவிட்டு கிளம்பி மிதந்து செல்வதை ஆச்சரியத்துடன் கவனித்தாள். அதே சமயம் கலி வாயில்கள் 7இலிருந்து 5 வரை திறந்தாள். குளியலறையிலிருந்து தப்பிய கையளவு நீர் வாயில் 4ஐ நோக்கி மிதந்து ஓடியது.
வாயில் 7இல் கல்கி நுழைந்தவுடன் கலி அவளுடைய விசேஷ ஆடைகளை அகற்ற உதவினாள்.
‘கண்ணனிடமிருந்து செய்தி கிடைத்ததா? பூமியோடு தொடர்பு கிடைத்துவிட்டது. பிரதமரோடு பேசப்போகிறோம்”
“இதோ சீக்கிரம் தயாராகிவிடுகிறேன்”
“ஈரத்துணியால் துடை. தண்ணீர் மிதக்கிறது. குளியலறையில் கீழிழுப்பு விசை வேலை செய்யவில்லை”
“நிச்சயமாக. கண்ணன் உன்னோடு பேசியதைக் கேட்டேன்”
கல்கி குளியலறை நோக்கி செல்ல யத்தனித்தபோது விண்கலம் இடி விழுந்தது போல குலுங்கியது.
“வாட் த ஹெல்!” என்று கண்ணன் ஒலிபெருக்கியில் கத்தினான். “வாயில் 4இல் அபாயம், வாயில் 4இல் அபாயம்” என்று விண்கலத்தின் பாதுகாப்பு கருவி அலறியது.
கல்கியும் கலியும் ஒருவரையொருவர் அணைத்து தங்களின் மிதக்கும் உடல்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டனர். அவர்கள் கண்ணாடி ஜன்னல் வழி வாயில் 4ஐப் பார்த்தபோது கல்கியின் வியர்வைத் துளிகளும் கையளவு தண்ணீரும் ஜன்னலில் மோதித் திரும்பி அந்தரத்தில் மீண்டும் ஒரே குளமாக சேர்ந்துகொண்டிருந்தன.
“கண்ணா, கையளவு தண்ணீர் மோதியா இந்த இடி முழக்கம்?”
“கைப்பிடி அளவு குளமா, கடலா?”
அந்தரத்தில் மிதக்கும் நீர்க் குட்டை மீண்டும் வாயிற்கதவை மோதச் சென்றுகொண்டிருந்தது.
“யோசிக்க நேரமில்லை. இன்னொரு மோதலை நாம் தாங்க முடியாது. வாயில்களைத் திற. நீர் வெளியேறட்டும்”
கலி சட்டென்று வாயில் 4ஐத் திறந்தாள். மோதல் தவிர்க்கப்பட்டு நீர் மிதந்து கடந்தது. அது திரும்பி உள்ளே வராமல் இருக்கும்படிக்கு கதவை அடைத்துவிட்டு கலி அடுத்த வாயிலைத் திறந்தாள். ஒவ்வொரு வாயிற்கதவும் திறக்கப்படுகையில் மிதக்கும் நீரின் வேகம் அதிகமாகிக்கொண்டிருப்பது போலத் தோன்றியது.
“நிறுத்து. இந்தத் தண்ணீர் வெளியில் போனால் என்னவாகும் என்று யாருக்குத் தெரியும்?”
“கல்கி கேட்பது நியாயம்தான். நான் ஐந்தாவது கதவையும் திறந்து விட்டேன்”
“ நீ வெளியில் நடந்து போனபோது எதுவும் விசித்திரமாகப் பார்த்தாயா?”
“நம் கலத்திற்குப் பக்கத்தில் பறக்கும் பாறை ஒரு விளிம்பினை, நுனியினை மறைக்கிறது. என்னால் அந்த் நுனியினைத் தாண்டி எட்டிப்பார்க்க முடியவில்லை. பாதி தூரம்தான் போனேன்”
“வேறு வழியில்லை. கல்கி, கலி, ஆறாவது வாயிலையும் திறவுங்கள்”
கல்கி சட்டென்று தன் சிறுநீர் நிரம்பிய சானிட்டரி நாப்கினைத் தூக்கி கதவைத் திறந்து வீசினாள்.
“என்ன செய்கிறாய் நீ?”
“மிதக்கும் தண்ணீரை நாப்கின் பிடித்துவிட்டதென்றால் அதை உறிஞ்சிவிடும். பெரிய அதிர்வோ அழிவோ இல்லாமல் தப்பி விடலாம்”
“சபாஷ். நல்ல சமயோசிதம்“
நாப்கின் மிதக்கும் நீரை நோக்கி விரைந்துகொண்டிருந்தது, வேறு வழியில்லாமல் ஏழாவது வாயிலை கலி திறந்தாள். நாப்கினால் நீரினைப் பிடிக்க இயலவில்லை. ஏழாவது வாயில் திறக்க, கைப்பிடியளவு நீர் கோடி சூரியப் பிரகாச ஒளியுடைய பொடிப்பொடி வைரக்கற்கள் என கரும் வெளியில் சிதற பூமியின் நீல நிற வளி மண்டலம் கணத்தில் தோன்றி பிரம்மாண்டம் பெற்று மீண்டும் மறைந்தது. பின்னாலேயே பறந்த நாப்கின் கரும் வெளியைத் தொட்டதுதான் தாமதம் கண்ணுக்குப் புலப்படாத வாயொன்று முழுங்கியது போல அது காணாமல் போக கரும் வெளி மீண்டும் அடர்ந்தது.
“உறைந்த நட்சத்திரம் ஒன்று சந்திரசேகர் விளிம்பில் இருக்கிறது. நாம் அதன் ஈர்ப்பு விளிம்பில் இருக்கிறோம். இன்னும் சிறிது எடை நட்சத்திரத்திற்குக் கூடினாலும் அது இறந்து கருந்துளையாகிவிடும். சாக இருக்கும் நட்சத்திரம் மேலும் எடைக்கான தாகத்தில் இருக்கிறது. தண்ணீர் அதை சாதித்துவிடும். இங்கே ஒரு மகாபிரளயம் நடக்கவிருக்கிறது”
கண்ணண் தொடர்ந்து ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டிருந்தான். கல்கி அவசரமாகக் குளியலறையில் ஈரத்துண்டினால் தன்னைத் துடைத்துக்கொண்டு உடை மாற்றிக்கொண்டு வந்தாள்.
---------------------------
மூவரும் விண்கலத்தின் தலைப்பகுதியில் இருந்த ஸ்டூடியோவில் ஆழுயர எலெக்டிரானிக் திரையின் முன் குழுமியிருந்தனர். இவர்களுடைய பிம்பங்கள் பூமியில் சென்றடைந்ததும் அங்கே செய்யப்படும் அறிவிப்பு இங்கே கேட்டது.
“ஆதிசேஷன் I ரிப்போர்டிங், ஆதிசேஷன் I ரிப்போர்டிங்”
கண்ணன் குழப்பமாக கலியையும், கல்கியையும் ஆதிசேஷன் யார் என்பது போல பார்த்தான். கலி மட்டும்தான் விண்கலத்திலிருந்த அத்தனை கையேடுகளையும் படித்திருந்தாள். கலி கண்ணனைப் பார்த்து ‘நம் விண்கலத்தின் பெயர் ஆதிசேஷன் ஒன்” என்றாள். கண்ணனுக்கு ஆசுவாசமாக இருந்தது. வழுக்கைத் தலையுடன் கோட் சூட் மனிதர் திரையில் தோன்றினார்.
“ ஹலோ என் பெயர் மகாலிங்கம். நான்தான் இப்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தலைவர். பிரதமர் இதோ வந்து கொண்டேயிருக்கிறார். என் அருகே இருப்பவர் பஷீர். இவர்தான் நீங்கள் விண்வெளிக்குச் செல்லும்போது தலைவராக இருந்தார். உங்கள் குடும்பத்தினர் எல்லாம் உங்களைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள்.”
பஷீர் முதியவராய் இருந்தார். இவர்களைப் பார்த்து அன்புடன் சிரித்தார். மூவருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. அவருக்குப் பின்னால் ஆறேழு வெள்ளைக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
கண்ணன் பொறுமையில்லாமல் இருந்தான்.
“ லுக் மிஸ்டர் மகாலிங்கம். நாங்கள் ஒரு நுனியில் இருக்கிறோம். நுனி என்றால் …. நுனி என்றால் ஒரு விளிம்பு. நாங்கள் விளிம்பு மனிதர்கள். இங்கே மகாபிரளயம் ஒன்று நடக்கவிருக்கிறது. டு யு கெட் வாட் ஐ ஆம் சேயிங்? “
பஷீர் கண்களை இடுக்கி சிரித்தார்.
“கொஞ்சம் அமைதியாகக் கேளுங்கள் கண்ணன். உங்களிடம் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. பிரளயமெல்லாம் சுலபத்தில் நடப்பதில்லை”
மகாலிங்கம் இடைமறித்தார்.
“கண்ணன், கல்கி, கலி நீங்கள் மூவரும் இந்திய தேசத்தின் மிகப் பெரிய சாதனையாளர்கள். ஆதிசேஷன் ஒன் விண்கலம் இந்திய விண்வெளித்துறையின் மிகப் பெரிய சாதனை. நாசாவின் ஆளற்ற வாயேஜர் விண்கலம் முப்பத்தாறு ஆண்டுகள் எடுத்து கிட்டத்தட்ட அடைந்த இடத்தைத் தாண்டி நட்சத்திர இடைவெளிப் பகுதியை நீங்கள் இருபதே ஆண்டுகளில் அடைந்துள்ளீர்கள். நீங்களும் ஆதிசேஷன் ஒன் விண்கலமும் காணாமல் போனதாக நாங்கள் அறிவிக்க இருந்தோம். நீங்களும் விண்கலமும் உயிர்ப்புடன் இருப்பதும் மீண்டும் தொடர்பு கொண்டதும் மிகப் பெரிய அற்புதம்”
“சார், இங்கே ஒரு பிரளயம் நடக்கவிருக்கிறது. மகாபிரளயம். நாங்கள் பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம்? நாங்கள் பூமிக்குத் திரும்ப நீங்கள் என்ன செய்ய இயலும்”
“உங்களுக்கு உதவி விண்கலம் தயாரிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் பிடிக்கும். இன்னொரு முப்பதைந்து ஆண்டுகளில் அது உங்களை வந்து அடையும். நீங்கள் பூமியிலிருந்து பல பில்லியன் மைல்களுக்கு அப்பால் இருக்கிறீர்கள்”
“ஆதிசேஷன் விண்கலம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?”
பஷீர் பதில் சொல்வது போல ஆரம்பித்தார்.
“ உங்களுக்குப் பிறகு 2006இல் நாசா மிஷெனில் விண்வெளிக்குச் சென்று திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு சென்றபோது தன் அந்தரங்கப் பொருட்களாக பகவத் கீதை, விநாயகர் சிலை, சமோசா ஆகியவற்றை எடுத்துச் சென்றார். நீங்கள் என்னென்ன பொருட்களை எடுத்துச் சென்றிருக்கிறீர்கள் என்று பாருங்கள்”
“ எங்களுக்குப் பிறகு என்றால், நாங்கள் எப்போது கிளம்பினோம்?”
“1993இல்”
“இப்போது பூமியில் என்ன வருடம்?
“2013”
இதோ பிரதமர் வந்துவிட்டார் என்ற அறிவிப்பு கேட்டபோது தொடர்பு அறுந்து போனது.
------------------
அவர்கள் தங்கள் உடல் உறுப்புகளை ஒருவர் மேல் ஒருவர் பொருத்தி விளையாடும் விளையாட்டினை விளையாடி முடித்திருந்தனர். தொடைகளையும் கால்களையும் இருக்கைகளோடு பிணைப்பான்களால் கட்டிக்கொண்டு மேஜையைச் சுற்றி நிர்வாணமாக அமர்ந்திருந்தனர். பூமி உரையாடலுக்குப் பிறகு மீண்டும் அவர்களுக்குத் தொடர்பு கிடைக்கவேயில்லை. வெளியிலோ மையிருள் மேலும் மேலும் அடர்ந்துகொண்டிருந்தது. ஆதிசேஷன் எங்கே எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று அவர்களால் அனுமானிக்க இயலவில்லை.
“எதை சாதித்தீர்கள் நீங்கள்?”
“நாம் உயிரோடு இருப்பதுதான் சாதனை”
“பஷீர் கொடுத்த குறிப்பு நம் ஞாபகங்களை உயிர்ப்பிக்கக்கூடும். நீ என்ன கொண்டு வந்தாய், கலி?”
கலி பூமியோடு பேசி முடித்த கையுடனேயே தான் கொண்டுவந்த அந்தரங்கப் பொருட்கள் என்னென்ன என்பதை தன் பெட்டியில் தேடி எடுத்திருந்தாள்.
“தங்கத்தில் செய்த ஶ்ரீசக்ரம், லலிதாசஹஸ்ரநாமம், நீர் நீக்கிய உலர்ந்த சர்க்கரைப் பொங்கல்”
“நீ என்ன கொண்டு வந்தாய் கல்கி?”
“ஒரு ஆடவனின் புகைப்படம், திருமந்திரம், வெண் குதிரை உருவத்தில் ஒரு பஞ்சுப்பொதி பொம்மை, ஒரு சாட்டை”
“சாட்டையா? ம்ஹ்ம்”
“நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று சொல்லவே இல்லையே கண்ணா?”
“என் டைரியில் ஒரு கவிதைத் தொகுப்பினை எடுத்து வைத்ததாய் குறிப்பு இருக்கிறது. ஆனால் என்ன ஏது என்ற விபரங்கள் இல்லை. கண்டுபிடித்தவுடன் சொல்கிறேன்.”
அவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு அருகிலிலிருந்த ஜன்னலின் வழி பார்க்கையில் கரும் வெளியில் நீர்த்தட்டான்களும் மின்மினிகளும் நிறைந்த தோட்டம் போல விண்வெளி விரிந்திருந்தது. கலி ஆதிசேஷன் விண்கலத்தில் இருந்த மொத்த கையேடுகள், காணொளி பதிவுகள், புகைப்படங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து தங்கள் வரலாற்றினை சொல்ல ஆரம்பித்தாள்.
“மகாலிங்கம் சொன்னது உண்மைதான். நாம் பூமி ஆண்டு 1993இல் ஆதிசேஷன் ஒன் என்ற விண்கலத்தில் இந்திய விண்வெளி நிலையமான திரிசங்கு நோக்கிப் புறப்பட்டோம். திரிசங்கில் தங்கியிருந்த நான்கு விண்வெளி விஞ்ஞானிகளை பூமிக்கு அனுப்பிவிட்டு நாம் அவர்களுக்கு பதிலாக திரிசங்கில் ஒரு வருட காலம் தங்கியிருந்து அதை பராமரிப்பது நம் வேலை. பூமி காலப்படி ஒரு மாதகாலம் திரிசங்கில் நாம் தங்கியிருந்தோம். நாம் பணி விடுவித்த விஞ்ஞானிகள் பத்திரமாக ஊர் திரும்பிவிட்டன்ர். திரிசங்கு தொடர்ந்து விண்வெளிக் குப்பைகளால் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. செயலற்று போன மீடியா செயற்கைக் கோள்களே குப்பைகளில் அதிகம். நாம் கதிர் வீச்சு வலை ஒன்றை பின்னி அதில் அத்தனை குப்பைகளையும் அள்ளி சுருட்டி பூமியின் வளி மண்டலத்தில் எறிந்தால் அவை எரிந்து அழிந்துபோகும் என்று திட்டமிட்டோம். அதற்காக திரிசங்கிலிருந்து ஆதிசேஷனில் நாம் ஏறிக்கொண்டு அதை வெடித்து விடுவித்தோம்.”
“ஆனால் ஆதிசேஷன் அதற்குரிய நீள்வட்டத்தில் விழவில்லை”
“சரியாகச் சொல்கிறாய். கரணம் தப்பி ஆதிசேஷன் விண்ணோட்டத்தில் விழுந்தது. விண்ணோட்டமோ ஒளியின் வேகத்துக்கு நிகராக ஓடிக்கொண்டிருந்தது. இரண்டே மாதத்தில் நாம் இங்கு வந்தபோது விண்ணோட்டத்தில் இருந்து வெளியில் விசிறப்பட்டோம். இங்கே நம் நினைவுகளின் தன்மை தள மாற்றம் அடைந்துவிட்டது. திரும்புவதற்கு வழியில்லை.”
“நினைவுகளின் தன்மையில் தள மாற்றம் என்றால் என்ன?”
“பூமிக் கணக்குப்படி கண்ணனின் மனம் கற்காலத்தில் நிலைகொண்டிருக்கிறது. கல்கி, உன்னுடையதோ எதிர்காலத்தின் நிர்ணயிக்க இயலாத புள்ளியில் இருக்கிறது. என் மனமோ இங்கே இப்போது என்றிருக்கிறது. பூமியில் நம் வாழ்ந்த அனுபவங்கள் அழிந்துவிட்டன. ஆனால் மொழிகளும் கணக்குகளும் பயன்படுத்தும் விதத்தில் தங்கியிருக்கின்றன”
“அது நல்லதுக்குதான். நினைவுகள் அப்படியே இருந்திருந்தால் குடும்பம் பற்றிய உணர்ச்சிகளில் நம்மை நாம் பறிகொடுத்திருப்போம்”
அவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தார்கள்.
“ இந்த விண்வெளியில் நடப்பதுதான் குதிரை சவாரி செய்வது போல எவ்வளவு இதமாக இருக்கிறது” என்றாள் கல்கி.
-----------------------
“பரிசோதனை பண்ணிப் பார்த்துவிடவேண்டியதுதான்” என்றான் கண்ணன்.
அவர்கள் மூவரும் கால்களை விண்கலத்தின் தரையோடு பிணைத்துக்கொண்டு, ஒருவரின் இடுப்பை மற்றவர் கைகளால் அணைத்து கோர்த்தபடி, ஜன்னல் வழியே விண்வெளியை பார்த்தவாறு அம்மணமாக நின்றிருந்தார்கள். அவர்கள் உடல்களின் துளைகளில் நீள் உறுப்புகளை பொருத்திப் பார்த்து விளையாடி அலுத்துவிட்டிருந்தனர்.
அவர்களின் முன்னே அந்த அபூர்வ விண்காட்சி விரிந்திருந்தது.
மத்தியில் அந்திம தருணத்தை சந்திக்கப்போகும் அந்த நட்சத்திரம் துவண்டு அமர்ந்திருந்தது. சுற்றி விதவிதமான நிறங்களில் நட்சத்திரத்திலிருந்து எழும் எரிவாயுக்கள் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு என்று பல வண்ணங்களில் சூழ்ந்து நீள்வட்டத்தில் கனன்றன. வித விதமான வடிவங்களில் அவை தோற்றமளித்துக்கொண்டிருந்தன. சில நீள்வட்டமாய் இருந்தன, சில உருளையாய் அமைந்தன. சில எரிவாயு உருளைகளுக்கு பச்சை விளிம்புகளும் அலைகளும் இருந்தன.
அந்த நட்சத்திர விண்காட்சியின் மத்தியில் மகாயோனி உயிர்ப்புடன் அடர்ந்திருந்தது.
“கைப்பிடி அளவு தண்ணீரா இதைக் கொண்டு வந்தது?”
“அது கைப்பிடி அளவு கடல்”
கலி தன்னிச்சையாக லலிதா சகஸ்ரநாமத்தை பாரயணம் செய்ய ஆரம்பித்திருந்தாள். ‘ககாரார்த்தா காலஹந்த்ரீ காமேசீ காமிதார்த்ததா காம ஸஞ்சீவினீ கல்யா கடினஸ்தன மண்டலா கரபோரூ கலாநாதா-முகீகச-ஜிதாம்புதா கடாக்ஷாஸ்வந்தி -கருணா கபாலி-ப்ராண -நாயிகா….’
----------------------
அவர்கள் தங்கள் செயல்திட்டத்தை ஆப்பரேஷன் ‘நீராலானது உலகு’ என்று பெயரிட்டனர். ஆதிசேஷனை மகாயோனியை நோக்கி திருப்பி செங்குத்தாக செல்லுமாறு திருப்பினர். கண்ணன் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கியது மட்டுமல்லாமல் அதை எழுதி பூமிக்குப் போகிறபோது போகட்டும் என்று அனுப்பினான். அங்கே நடக்கவிருக்கும் நட்சத்திரத்தின் மரணத்தை ஒட்டி கருந்துளை ஒன்று ஏற்படும். அது பிரபஞ்சத்தில் தன் எல்லைக்குட்பட்ட அனைத்தையும் உறிஞ்சி அழித்துவிடும். அதன் மறு எல்லையைப் பற்றி மனித அறிவுக்கு எதுவும் தெரியாது. ஆனால் அது புது பிரபஞ்சத்தையே சிருஷ்டிக்கலாம்.இந்திய விஞ்ஞானி சந்திரசேகரின் பெயரால் அறியப்படும் சந்திரசேகர் எடைஎல்லையை அடைந்துவிட்ட அந்த விண்மீன் தன் ஆகர்ஷண ஒளி எல்லையின் விளிம்பில் கையளவு தண்ணீரை உறிஞ்சி ஆவியாக்கியபோதே பிரும்மாண்டமாய் உக்கிரம் அடைந்துவிட்டது. ஆதிசேஷனிடத்தில் இருந்த ஒரு லாரி நீரையும் மகாயோனி நோக்கி பீய்ச்சி அடித்தால், ஆவியாகுதலில் எடை மேலும் கூடி கருந்துளை உண்டாகிவிடும்.
நீர் அகற்றப்பட்ட சர்க்கரைப் பொங்கலில் நீர் சேர்த்து கலி பரிமாறினாள். அவர்கள் மூவரும் அதை நிதானமாகச் சாப்பிட்டார்கள். கல்கி விண்வெளியில் நடப்பதற்கு உற்சாகம் கொண்டவள் போல காணப்பட்டாள். விண்கலத்தில் இருந்த மொத்த நீரையும் ஆதிசேஷனின் தலைப்பகுதியில் சேகரித்தனர். விசைச்சுருளை தயார்நிலையில் வைத்தனர். ஆதிசேஷனின் முன் குழாய் மூடியை கல்கியின் சாட்டையின் சுழற்றலுக்கு ஏற்ப திறக்கும்படி அமைத்தனர்.
“ ஆவுடையில் லிங்கம் பொருந்துவது போல ஆதிசேஷன் மகாயோனி நோக்கி செல்கையில் கல்கியின் சாட்டை சுழற்றலில் அவ்வளவு நீரும் பீய்ச்சி அடிக்க வேண்டும். ஆதிசேஷனை கருந்துளை அதிவேகமாய் முதலில் விழுங்கிவிடும். அதே சமயம் நாம் பக்கத்தில் மிதக்கும் விண்பாறையைப் போய் அடைந்திருப்போம்”
“அங்கேயிருந்து என்ன நடக்கிறது என்று பார்போமா என்ன?’
“யாருக்குத் தெரியும்? ஆலிலையில் மீண்டும் பிறப்போமோ என்னமோ”
அவர்கள் விண்வெளியில் நடப்பதற்கான விசேஷ ஆடைகளை அணியலானார்கள். விண்கலத்திலிருந்த ஆக்சிஜனை குழாய் வழி உறிஞ்சி உறிஞ்சி தங்கள் உடல்களிலிருந்த நைட்ரஜனை வெளியேற்றினர். முழு உடையும் அணிந்தபின் கலி எல்லா வாயில்களையும் திறக்க கல்கி வெள்ளைக் குதிரை ஒன்றில் ஆரோகணித்து பயணிப்பவள் போல முன் சென்றாள். அவள் பின்னாலேயே கலியும் கடைசியாக கண்ணனும் சென்றனர்.
அவர்கள் மூவரும் விண்கலத்திலிருந்து விடுபட வேண்டிய தூரம் வரை நடந்த பின் ஆதிசேஷனை முழுமையாகப் பார்த்தனர். விண்வெளியின் கோலாகலத்தில் பங்கேற்க தயாராக அது நின்று கொண்டிருந்தது.
“ஆமாம் கண்ணா நீ கொண்டுவந்த கவிதைத் தொகுதி என்னவென்று சொல்லவேயில்லையே?”
“நீர் அளைதல் 1993 வெர்ஷன்”
அவர்கள் தங்களை விண்கலத்திலிருந்து முழுமையாக விடுவித்துவிட்டனர். கல்கி சாட்டையைச் சுழற்றி ஆதிசேஷனின் முன் குழாய் மூடியைச் சட்டென்று திறந்தாள்.
No comments:
Post a Comment