Wednesday, April 3, 2013

தல யாத்திரை: திருக்கண்ணமங்கை




கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் உலக உருண்டையை நான்கு முறை சுற்றி வந்துவிட்டேன். நாற்பத்து மூன்று நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். இந்தியா முழுவதும் நாட்டுப்புற கலை சேகரிப்பிற்காகவும் கருத்தரங்குகளுக்காகவும் சதா பயணம் செய்தவாறு இருக்கிறேன். ஒவ்வொரு பயணமும் ஏராளமான புகைப்படங்களையும் பயணக்குறிப்புகளையும் என்னிடம் சேகரமாக்கியிருக்கின்றன. ஆனாலும் அந்த பயணங்களைப் பற்றியெல்லாம் எழுதி பிரசுரிக்காமல் இந்த சிறு பயணத்தின்போது பார்த்த கோவில்களைப் பற்றி மட்டும் விடாப்பிடியாக எழுதி பிரசுரம் செய்வானேன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எகிப்தின் பிரமிடுகளையும், நைல், மிஸ்ஸிஸிபி நதிகளையும், திபெத்திய மடாலயங்களையும், நேபாளத்தில் விமானத்தில் பறந்து பார்த்த இமயமலைத் தொடரையும், ஐரோப்பா முழுக்க தேடித் தேடி பார்த்த இசை நாடகங்களையும், அமெரிக்காவின் தேசிய இயற்கை பூங்காக்களையும்  பற்றி எழுதாமல் திருவாரூர் பல்கலைக்கு சென்ற இடத்தில் பார்த்த தலங்களைப் பற்றி தொடர்ந்து எழுதுவானேன்?  இத் தலங்களைப் பற்றி எழுதுதல் என்பது எனக்கு ஒரு வகையான வீடு திரும்புதலை பதிவு செய்வதாக இருக்கிறது; சில நினைவுகளின் பவித்திரத்தை காபந்து செய்கின்ற அதே வேளையில் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான யத்தனமாகக் கூட இந்த தல யாத்திரைக் கட்டுரைகள் இருக்கலாம்.

அப்பாவுடன் ஶ்ரீரங்கத்தில் எண்பதுகளில் கேட்ட ஒரு கதாகாலட்சேபத்தில் முதன் முறையாக திருக்கண்ணமங்கை பற்றி சொல்லக் கேட்டேன்.  பாகவதர் திருக்கண்ணமங்கையை எழு அமுதங்கள் நிறைந்த ஊர் என்று வருணித்தார். அப்பா ஆத்திகராக மாறிக்கொண்டிருந்த காலம் அது. அவருக்கு  விமானம், மண்டபம், ஆரண்யம், ஸரஸ்ஸு, க்ஷேத்ரம், ஆறு, நகரம் ஆகியவற்றை அமுதங்கள் என்று வருணிப்பது பிடித்தமானதாக இருந்தது. திருக்கண்ணமங்கை என அம்பிகையின் பெயரால் அந்த ஊர் அழைக்கப்படுவதும் அப்பாவுக்கு உவப்பானதாக இருந்தது. ஒரு நாள் போய் வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்; ஆனால் கடைசி வரை போகவேயில்லை. அம்பாளை தாயார் என்றழைக்கச் சொல்லிக்கொடுத்தவர்கள் வைணவர்கள்தான் என்று அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். வேதவல்லி, அபிஷேகவல்லி என்றெல்லாம் ஒப்புக்கு சமஸ்கிருத பெயர்கள் இருக்க கண்ணமங்கை என்றெல்லாம் மகாலஷ்மியை அழைப்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று அடிக்கடி வியப்பார். திருநின்றவூரில் மகாலஷ்மிக்குப் பெயர் ‘என்னைப் பெற்ற தாயார்’ என்று திருநின்றவூர் போய்வந்தபின் அப்பாவிடம் கூறியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்படியே திருக்கண்ணமங்கைக்கும் போய் வந்திருக்க வேண்டியதுதானே என்று அவர் கேட்கத் தவறவில்லை.



“பண்ணினை, பண்ணில் நின்ற பான்மையை, பாலுள் நெய்யினை, மால் உருவாய் நின்ற விண்ணினை” என்ற திருமங்கையாழ்வாரின் பாசுர வரிகள் திருக்கண்ணமங்கை திருமாலைக்கண்டு பாடியவை. நான் ஶ்ரீரங்கத்தில் கேட்ட கதாகாலட்சேபத்தில் திருமங்கையாழ்வாரைப் பற்றி பாகவதர் கூறிய கதைகளும் எனக்கு நன்றாக நினைவிருந்தன. திருமங்கை ஆழ்வார்தான் திருமாலை அதட்டியவர். திருமழிசையில்  உன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொள் என்றவுடன் தான் படுத்திருந்த ஆதிசேடனை பாயாகச் சுருட்டிக்கொண்டு ஆழ்வார் பின்னாலே போனார் திருமால். திருக்கண்ணமங்கையிலோ திருமங்கையாழ்வார் பாடிய பாசுரம் பக்தவத்சலப்பெருமாளுக்கு புரியவில்லையாம்; என்ன புரியவில்லை உனக்கு என்று திருமங்கையாழ்வார் அதட்டியவுடன் யோசித்துக்கொண்டிருக்கிறேன் என்றாராம் பெருமாள். இத்தனைக்கும் என் மேல் பாட்டுப் பாடு பாட்டுப்பாடு என்று பின்னாலேயே போய்  திருமங்கையாழ்வாரிடம் பகவான் கேட்டு வாங்கிய பாட்டு. புரிவில்லையென்றால் என்னிடத்தே சிஷ்யனாக வாரும் என்கிறார் திருமங்கையாழ்வார். அதன் பொருட்டே பெருமாள் பெரியவாய்ச்சான் பிள்ளையாக அவதரிக்க அவருக்குக் கற்றுக்கொடுப்பதற்காகவே திருமங்கையாழ்வார் நம்பிள்ளையாக  அவதரித்ததாக கதைகள் இருக்கின்றன. இந்த முன் ஜென்ம தொடர்புபடுத்துதல்கள் நம்பிள்ளையும் , பெரியவாய்ச்சான் பிள்ளையும் பிறந்த நட்சத்திரங்களையும் மாதங்களையும் கொண்டு உண்டாக்கப்படுகின்றன. கிருஷ்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணியில் பெரியவாய்ச்சான் பிள்ளையும்,  திருமங்கையாழ்வார் பிறந்த கார்த்திகை மாதம்  கார்த்திகை நட்சத்திரத்தில் நம்பிள்ளையும் பிறந்தனர். 

இந்தக்கதை எங்கேயும் பிரசுரமாகியிருக்கிறதா இல்லை வாய்மொழிக்கதையாக மட்டும்தான் நீடிக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் பகவானுக்கும் கவிபக்தனுக்குமான உறவு இக்கதைகளின் வழி சாமான்யப்படுத்தப்படுகிறது. இவ்வளவு அணுக்கமாக குடும்ப, நட்பு, காதல் உறவுகளாக சாமான்யப்படுத்தப்பட்ட உறவு கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் வேறெந்த பண்பாட்டிலும் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. 



கிருஷ்ண ஆரண்யம் என்றழைக்கப்பட்ட காடு இன்று எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை;  கோவில் குளம் திருமகள் இங்கே தோன்றியிருக்கமுடியும் என்று நம்பும் வகையிலேயே சுத்தமாக இருக்கிறது; வெகு அழகான குளம். கோவிலும் படு சுத்தமாக இருக்கிறது. ஶ்ரீதேவி பூதேவித் தாயார்களோடு அருள்பாலிக்கும் பெருமாள் உண்மையிலேயே பெரிய பெருமாளாக நின்ற கோலத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறார். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் மூலஸ்தானத்திற்குப் பக்கத்தில் போனவுடன் சட்டென்று உலகளந்த பெருமாளின் பிரம்மாண்டம் ஆட்கொள்ளும்; அது போலவே திருக்கண்ணமங்கை பக்தவத்சலரும். தியானமொன்றில் ஒளி பீறிட கிடைத்த சௌந்தர்யத்தினை சிற்பி பக்தவதசலராகவும் ஶ்ரீதேவியாகவும் பூதேவியாகவும் வடித்திருக்க வேண்டும். அவ்வளவு அழகு! திருக்கண்ணமங்கையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று சும்மாவா பாடினார் திருமங்கையாழ்வார்?

பிரகாரத்தை சுற்றி வந்தபின் மீண்டும் மூலஸ்தானத்திற்கு போய் நீண்ட நேரம் கிருஷ்ணனைப்பார்த்து நின்றேன். அப்பாவுக்கு இங்கு வரக் கொடுத்து வைக்கவில்லையே என்று தோன்றியது. தேவர்கள் தேனீக்களாக அங்கே சுற்றிகொண்டு கிருஷ்ணணின் திவ்ய தரிசனத்தில் ஆழ்ந்து இருப்பதாகவும் தேன் கூடு ஒன்றிற்கு தீபராதனை காட்டப்படுவதாகவும் குருக்கள் சொன்னார். மூலஸ்தான சிலைகளை வைத்து தமிழகத்தின் கலை வரலாறு எழுதப்படுமென்றால் அதில் திருக்கண்ணமங்கை சிலைகள் முதன்மையானதாக இருக்கும் என்றேன் அவரிடம். கண்கள் பிரகாசமாக உப்பிலியப்பனையும் அப்படியே பார்த்துவிடுங்கள் என்றார். இல்லை திருவாரூர் சாயரட்சைக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அப்பா திருக்கண்ணமங்கை வரவேண்டும் என்று பல முறை ஆசைப்பட்டார் என்ற கதையை அவரிடம் சொன்னேன். அப்பா என்ன நட்சத்திரம் என்று வினவினார். புனர்பூசம் என்று சொல்லி முடிப்பதற்குள் ராமன் நட்சத்திரம் என்றார். அவர் சொல்ல வந்ததன் தர்க்கம் எனக்கு புரிந்த மாதிரியே இருந்தது. 






3 comments:

Venkatesan Chakaravarthy said...

நல்ல பதிவு. நம்பிள்ளை, பெரிய வாச்சான் பிள்ளை கதை இதற்கு முன் நான் கேட்டதில்லை. சுவாரஸ்யமாக உள்ளது. "மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள்" திருமங்கை மன்னன் பெருமாளை அதட்டியதில் வியப்பேது!

ஒரு சிறு திருத்தம். திருமாலை "பைநாக பாய் சுருட்டிகொள்ள" கட்டளை இட்டது திருமழிசை ஆழ்வார். அவர் சொன்னபடி கேட்டு நடந்தவர் காஞ்சீபுரம் திருவெஃகா தலத்தில் எழுந்தருளி இருக்கும் யதோத்தகாரி பெருமாள். தமிழில் "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்". இப்படி ஆழ்வாரும், அவர் பின்னே பெருமாளும் ஊரை விட்டு பிரிந்து சென்று ஓர் இரவு இருந்த இடம் "ஒரிருக்கை". காஞ்சிபுரம் அருகில் உள்ளது. இந்நிகழ்வின் நினைவாக இப்போதும் ஆண்டிற்கு ஒருமுறை இத்தலத்து பெருமாளும், திருமழிசை பிரானும் ஒரிருக்கை செல்லும் விழா நடைபெறுகிறது.

இது குறித்து இணையத்தில் தேடிய போது இப்பக்கம் கிடைத்தது. மேற்சொன்ன கதையை விளக்கமாக கூறுவதோடு கோவிலின் புகைபடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

http://enthamizh.blogspot.in/2012/07/blog-post_26.html

திண்டுக்கல் தனபாலன் said...

புரிகிறது...

யாத்திரை தொடர வாழ்த்துக்கள்...

Sri Srinivasan V said...

Sir,
I am eagerly looking ahead to your writing on Tiruvaaroor Sayarakshai.
Thank you.
Anbudan,
Srinivasan. V.