Sunday, June 23, 2013

எஸ்.சண்முகத்திற்கு 'மேலும்' இலக்கிய விருதுஎஸ்.சண்முகம் 


பெரிய படிப்பாளியும், சிறந்த விமர்சகரும், சிந்தனையாளருமான நண்பர் எஸ்.சண்முகத்திற்கு ‘மேலும்’ பத்திரிக்கை சார்பில் வழங்கப்படும் விமர்சகருக்கான இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதினை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பழந்தமிழ் இலக்கியம், நவீன உலக இலக்கியம், தமிழ் நாட்டு வரலாறு, நவீன தமிழ் இலக்கியம், தமிழ் நாட்டின் வெகுஜன பண்பாடு, மாற்று அரசியல் ஆகிய துறைகளில் சண்முகம் மிக நுட்பமான விபரங்களை அறிந்தவர், அந்த விபரங்களை தனக்கே உரித்தான பார்வை மூலம் புதிய புரிதல்களை உருவாக்கி சிந்தனையின் தளத்தினை மேலும் உயர்த்தக்கூடியவர்.  ‘வித்யாசம்’, ‘கல்குதிரை’, ‘சிற்றேடு’ ஆகிய இதழ்களில் அவருடைய முக்கியமான கட்டுரைகள் பிரசுரமாகியிருக்கின்றன. ‘பொம்மை அறை’ என்ற சண்முகத்தின் கவிதைத் தொகுப்பு ஒன்று தொண்ணூறுகளில் வெளியாகியிருக்கிறது. சண்முகத்தின் கட்டுரைகளின் தொகுப்பு ‘கதை மொழி’ இன்னும் அதிகமான கவனத்தைப் பெற்றிருந்தால் தமிழிலக்கிய விமர்சனத்தின் சொல்லாடல் நுட்பமாகியிருக்கும். தமிழவன், கோணங்கி ஆகியோரின் படைப்புகளை வாசித்து அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தியது, மா.அரங்கநாதனோடு பொருள் செறிந்த நீண்ட உரையாடலை நிகழ்த்தி அதன் மூலம் மா.அரங்கநாதனின் படைப்புகளுக்குப் பின் இயங்கும் சிந்தனையை வெளிக்கொணர்ந்தது, பல முக்கியமான உலக நாவல்கள் தமிழில் மொழிபெயர்ப்பாக மூலகாரணமாக இருந்தது ஆகியவற்றை எஸ்.சண்முகத்தின் முக்கிய பங்களிப்புகள் என்று நான் கருதுகிறேன். காவ்யா பதிப்பகம் வெளியீடாக வெளிவந்த ‘மௌனி இலக்கியத் தடம்’ கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சண்முகத்தின் கட்டுரை எனக்கு மௌனியை வாசிக்க மிகவும் உதவிகரமாக இருந்தது. ஜான் கேஜின் இசை நுணுக்கங்களைப் பற்றி சண்முகம் எழுதிய கட்டுரை என்னுடைய இசை ஈடுபாட்டின் திசைகளை நிர்ணயிப்பதாக அமைந்தது. ஜெயமோகனும் நானும் ஈடுபட்ட பாரதி விவாத்தைத் தொடர்ந்து  பாரதியின் பாண்டிச்சேரி வாழ்க்கை அவருடைய கவிதைகளில் நிகழ்த்திய மாற்றம் என்ன என்ற பிரமாதமான கட்டுரையை சண்முகம் 'சிற்றேடு' இதழில் எழுதியிருக்கிறார். சந்தர்ப்பம் வாய்க்குமென்றால் ராமலிங்க வள்ளலாரின் கவிதைகளைக் குறித்து சண்முகத்தோடு ஒரு உரையாடலில்/ விவாதத்தில் ஈடுபடவேண்டும் என்று எனக்கு ஒரு அவா உண்டு. சண்முகத்திற்கு ராமலிங்க வள்ளலாரின் கவிதைகளையும் பங்களிப்புகளையும் பற்றி தனித்துவமான பார்வை உண்டு.

தமிழனுக்கு என்று ஒரு சிந்தனை முறை இருந்ததா,  பழந்தமிழ் இலக்கிய வாசிப்பின் மூலம் அப்படிப்பட்ட தனித்துவ சிந்தனை முறையை கற்பிதம் செய்ய முடியுமானால் அந்த சிந்தனையின் இழைகள் என்னென்ன, அவை வரலாற்றின் கதியில் என்ன மாற்றங்களை அடைந்திருக்கின்றன, அவற்றை உலக இலக்கிய போக்குகளோடு நாம் எப்படி இணைத்துப்பார்க்க முடியும்  ஆகியன சண்முகத்தின்  எழுத்துக்களில் மைய சரடுகள் என்று நான் நினைக்கிறேன். 

அவருடைய விசாலமான படிப்பிற்கும், நுட்பமான பார்வைக்கும் சண்முகம் இன்னும் ஏராளமாக எழுதியிருக்கமுடியும்; எழுதியிருக்கவேண்டும். தொண்ணூறுகளில் அவருக்கு ஏற்பட்ட முதுகுத்தண்டுவட பிரச்சினை ஒன்றினால் சண்முகத்திற்கு அதிகம் எழுத இயலாதபடிக்கு ஆகிவிட்டது என்று அறிந்தேன். வதவதவென்று எழுதிக்குவித்தும் எந்தவிதமான பங்களிப்புகளும் செய்யாமல் போய்விட்ட பல எழுத்து இயந்திரங்கள் மத்தியில் சில மைய கட்டுரைகளை எழுதியதன் மூலம் இலக்கிய வாசிப்பை நுட்பப்படுத்திய எஸ்.சண்முகம் தமிழ் இலக்கிய பரப்பில் மிகவும் முக்கியமானவர். 

சண்முகத்தின் புகைப்படம் ஒன்றினைப் பார்த்து -அந்த அல்டஸ் ஹக்ஸ்லி போன்ற ஒல்லியான ஈர்க்குச்சி உருவம், இறுக்கமாக கீழிறங்கியிருக்கும் தாடையும் உதடுகளும், எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகம்- இவர் படு சீரியசான ஆசாமி போலும் என்று நான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். நிஜத்தில் சண்முகம் சிரிக்க சிரிக்க பேசக்கூடியவர், ஒரு விவாதத்தை அழகாக மேலெடுத்துச் செல்லக்கூடியவர், சங்கோஜி, தன்னை முன்நிறுத்திக்கொள்ளத் தெரியாதவர், ஒரு வகையில் அப்பாவி என்பது பழகியவர்களுக்குத் தெரியும்.

‘மேலும்’ பத்திரிக்கை எஸ்.சண்முகத்திற்கு விமர்சகருக்கான இலக்கிய விருதினை வழங்கி தன் கௌரவத்தை உயர்த்தியிருக்கிறது. ‘மேலும்’ பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் நான் ஒரு காலத்தில் இருந்தேன் என்பது உண்மைதான். அந்தப் பத்திரிக்கைக்கும் அது வழங்கும் பரிசுகளுக்கும் எனக்கும் எந்த சங்காத்தமும் இப்போது கிடையாது என்பதினை மகிழ்ச்சியோ வருத்தமோ இல்லாமல் தெரிவித்துக்கொள்கிறேன். 

No comments: