Tuesday, February 4, 2014

லௌகீக ஞானம்


குறிப்பு 1: 


'முனைவர்' 'பேராசிரியர்' சாருநிவேதிதா தம் பள்ளியில் பயிலும் மாணாக்கர் நிர்மல் 
கூகுலில் தேடினால் எளிதில் கிடைக்கக்கூடியதான மிலோரெட் பாவிச்சின் நாவலின் 
பெண் பிரதியிலும் ஆண்பிரதியிலும் உள்ள வித்தியாசங்களை எனக்குச் சுட்டிக்காட்டி நான் தகவல் பிழை செய்ய நேரிட்ட போது மடக்கிவிட்டதாக பெருமிதம் அடைந்திருக்கிறார். பேராசிரியருக்கும் மாணாக்கருக்கும் கூகுல் தொடர்ந்து துணையிருக்க வாழ்த்துகள். பதினாறே வரிகளின் வித்தியாசத்தினால் ஒரே நாவலின் ஒரு பிரதி எப்படி பெண் பிரதியாயிற்று, இன்னொரு பிரதி எப்படி ஆண் பிரதியாற்று என்று கற்றுணர்ந்த மாணவர் விளக்கினால் நல்லது. மாணாக்கரின் இலக்கிய பிரயாசைக்கு பேராசிரியரும் மனமுவந்து உதவலாம்.
குறிப்பு 2: 


‘உன்னிடம் தவறாக நடந்துகொண்டதற்காக என்னை நானே விளாறிக்கொள்ள வேண்டும்’ என்று எழுதுகிற தருண் தேஜ்பாலுக்கு பதிலெழுதுகிற இளம்பெண் ‘ நீ என்னுடைய தந்தையின் நண்பனில்லையா (எனவே தந்தையின் ஸ்தானத்தில் இருப்பவனில்லையா) என்று சொல்லி உன்னிடம் எத்தனை முறை கெஞ்சினேன்’ என்கிறாள். 

தன் பிள்ளை-பிறர் பிள்ளை- ஊரார் பிள்ளை அனைவரும் சமம் என்பதே தன் ஞானம் என்று பறைசாற்றுகின்ற ஞானவான் சாருநிவேதிதாவுக்கு தருண் தேஜ்பாலால் பாதிக்கப்பட்ட பெண் தன் பிள்ளையாகக் கண்ணில் தெரியவில்லை. தொடர்ந்து தருண் தேஜ்பாலுக்கு ஆதரவு தெரிவித்து எழுதிக்கொண்டிருக்கிறார். ஏனெனில், ஷீரடி சாய் பாபாவின் அருள் கிடைத்து அவருடைய புத்தகம் ஆங்கிலத்தில் பிரசுரமாகிறதோ இல்லையோ தருண் தேஜ்பாலின் தயவு இருந்தால்தான் புத்தகம் ஆங்கிலத்தில் பிரசுரமாகும். இந்த ‘லௌகீக ஞானம்,’ சாருநிவேதிதா என்னுடைய ‘சாதனைகளாக’(-சம்பாதித்து வீடு கட்டியது, கல்யாணம் செய்துகொண்டது, பிள்ளைகளைப் பெற்று படிக்கவைப்பது, சர்வதேச பல்கலைக்கழகங்ககளில் பயிற்றுவிப்பது என) பட்டியலிட்டிருக்கும் லௌகீக வெற்றிகளை ஒப்பிடுகையில் மிகவும் உயர்ந்ததே. தன் படிப்பு, எழுத்து ஆகியவற்றின் மூலம் சாருநிவேதிதா அடைந்திருக்கும் இந்த லௌகீக ஞானாம்ருதசாகரத்தில் அவர் வாசகர்கள் இன்புற்று திளைப்பார்களாக. நிற்க.

மிலொரெட் பாவிச் எழுதிய ‘டிக்‌ஷனரி ஆஃப் கஸார்ஸ்’ 1988 ஆம் வருடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்தது. அந்த வருடமோ அதற்கு அடுத்த வருடமோ நடந்த குற்றாலம் கவிதைப் பட்டறையில் கவிஞர் பழமலை அவர்களுக்கு நான் ‘டிக்‌ஷனரி ஆஃப் கஸார்ஸ்’ நாவல் பற்றி ‘பாடம் எடுத்ததாக’ சாரு நிவேதிதா பிரசித்தமாக முன்பு எழுதியிருக்கிறார். 

இப்போது அவர் பாவிச்சின் நாவலை முப்பது வருடங்களுக்கு முன்னாலேயே -நாவல் ஆங்கிலத்தில் வெளிவருவதற்கு முன்பே-வாங்கிவிட்டதாக சொல்கிறார். அப்போது நான் பாலகன் என்றும் எழுதுகிறார். அப்படியெல்லாம் மாயங்கள் நம் உலகில் நடக்கும்தானே.

போகட்டும். இப்போதாவது நிர்மலோ அவருடைய ஞானத்தந்தையான சாருநிவேதிதாவோ ‘டிக்‌ஷனரி ஆஃப் காஸார்ஸ்’ நாவலின் ஆண் பிரதி பெண் பிரதி விவகாரத்தை விளக்கலாம். 

நண்பரே சாருநிவேதிதா நான் எதற்காக இதையெல்லாம் எழுத நேரிட்டதென்றால் நான் உங்களை முட்டாள் என்று எந்தக் காலத்திலும் சொல்லவில்லை என்பதை விளக்குவதற்காக. லௌகீகத்தில் தேர்ந்த நீங்கள் எப்படி முட்டாளாக இருக்க முடியும்? 

இதில் எங்கிருந்து வருகிறது படித்தவனின் சூதும் வாதும் என்பதினை அவரவர் புரிதலுக்கு விட்டு விடுகிறேன்.


குறிப்பு 3:

லட்சுமி மணிவண்ணனின் கவிதை ஒன்று;

"எனது பெண்ணைக் 
கண்டுபிடிக்க முடிவதில்லை
அவள் எல்லா பேருந்து 
நிலையங்களிலும்
என் கண்களில் படாமல் ஒளிந்து
கொள்கிறாள்
அவளைத் தேடிச் சலித்த கண்களில்
முலைகளும் பிருஷ்டங்களுமே 
படுகின்றன"

இந்த லட்சுமி மணிவண்ணனின் கவிதை சாருநிவேதிதாவிற்காகவே எழுதப்பட்டதோ?


குறிப்பு 4:

சதா சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. ஐந்து பக்க கட்டுரை ஒன்றாவது எழுதி எப்படி தருண் தேஜ்பால் -தாஸ்தயேவ்ஸ்கி, கஸான்ஸாகிஸ் ஆகியோருக்கு நிகரானவர் என்று சாரு நிறுவவேண்டும்

No comments: