நண்பரொருவர் கேட்டுக்கொண்டதன் பேரில் 'அந்திமழை' இதழில் வெளியான இந்தக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்கிறேன். நன்றி 'அந்திமழை'. http://andhimazhai.com/news/view/mdm-20-05-2014.html
நிலவொளி எனும் ரகசிய துணை
|
உங்களுக்கு இன்மையை உணரும் அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இயற்கையின் பிரும்மாண்டத்தின் முன் நிற்கையில் அனுபவமாவது அது. பிரம்மபுத்திரா நதி சுழித்தோடுவதை பார்க்கும்போது, இமயமலையை நேபாளத்தில் வானில் விமானத்தில் பறந்தவாறு பார்க்கும்போது, மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு கோடை வானத்தைப் பார்க்கும்போது, கடற்கரையில் நின்றவாறு கடலின் விளிம்பு அடிவானத்தில் கோட்டினைத் தொடுவதை தரிசிக்கும்போது- என இயற்கை பிரம்மாண்ட உருக் கொள்ளும் இடங்கள் தோறும் மனிதன் இந்த பிரபஞ்சத்தில் எத்தனை சிறிய துளி என்ற நினைப்பு ஏற்படுமே அந்த நினைப்பினை ஒட்டி ஏற்படுகிற அனுபவமே நான் சொல்ல வருவது. இயற்கையின் பிரம்மாண்டத்தை, எல்லையின்மையினை உணரும் ஒவ்வொரு கணமும் தனிமையுணர்வும் விடுதலையுணர்வும் சேர்ந்து ஏற்படுவதை நான் பல முறை கவனித்திருக்கிறேன். அந்த அனுபவத்தினை இன்மையை உணர்தல் என்று பெயரிட விரும்புகிறேன்.
இன்மை என்பது வெறுமை அல்ல; அது புத்தனின் புன்னகை போல ஆசையோ துக்கமோ மகிழ்ச்சியோ இல்லாத சாந்தம். அனைத்தும் இயக்கத்தில் இருக்கின்றன; அனைத்துமே இயக்கமற்றும் இருக்கின்றன என அறிவது. இன்மையை உணர்தலை என் கனவுகளின் வழி மட்டுமே நான் சொல்ல முடியும் என்று நான் நினைப்பதுண்டு. என்னுடைய விசித்திர கனவுகள் அறிவியல் புனைகதைகளில் வரும் விண்வெளிப்பயணங்களாகவே சிறு வயதியலிருந்து இருந்திருப்பதை குறித்திருக்கிறேன். எல்லையற்ற வெளியில் இலக்கற்று பயணம் செய்தலை கனவாய் காண்பது சிறு வயதில் எனக்கு பயத்தை உண்டு பண்ணியிருக்கிறது. வளர வளர எல்லையற்ற வெளிகளில் நட்சத்திரங்ளோடு சஞ்சாரிக்கும் கனவுகள் வரவில்லையென்றால் துவண்டு விடுபவன் ஆனேன். எல்லையற்ற வெளி நனவுப் பிரக்ஞையின் தொடுதூரத்தில் இருப்பதாக எப்போது ஆனது என்று எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை. எல்லையற்ற பிரம்மாண்டம் என் அகத்தில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டது என்பது மட்டும் எனக்கு தெரியவந்தபோது பதின்பருவம் கடந்துவிட்டது. இன்மையின் இருப்பு என்று எழுதுவது முரண்பாடு என்றாலும் அதுதான் சரியான விவரிப்பு. நீட்ஷேயின் ஜரதுஷ்டிரன் அந்த தருணத்தினை மாசற்ற புலனுணர்வு விழிப்பு கொள்ளும் தருணம் என்று விவரிக்கக்கூடும்.
உண்மையில் இன்மையின் இருப்பினை (sensing the presence of emptiness) உணரும் தருணங்களை நீட்ஷேயும் பௌத்த கவிகளும் மட்டுமேதான் அதிகமும் எழுதியிருக்கிறார்கள். நீட்ஷேயும் பௌத்த கவிகளுமே இன்மையை உணரும் கணத்தில் துணை நிற்பது நிலவொளியே என்று எழுதியிருப்பதும் இன்னொரு ஆச்சரியகரமான ஒற்றுமையாகும். ஆனால் நீட்ஷேக்கும் பௌத்த கவிகளுக்கும் இடையில் இன்மையை அறுதி உண்மையாக உணர்வதில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.
இன்மையை உணரும் தருணம் நீட்ஷேக்கு பௌத்த கவிகளின் அனுபவம் போல அமைதியானதாக இருப்பதில்லை; கொந்தளிப்பின் உச்சகட்டங்களில் அதுவும் ஒன்று. துணையாக ஒளிரும் நிலவு பௌத்த கவிகளுக்குத் தரும் ஆசுவாசத்தை நீட்ஷேக்குத் தருவதில்லை. நீட்ஷேயின் ஜரதுஷ்டிரன் பேசுவான்:
“உணர்ச்சிவசப்படும் கபடவேடதாரிகளே, இந்த சிறிய உருவகக்கதையை உங்களிடம் சொல்கிறேன், ‘தூய அறிவு’ பற்றி உங்களிடம் பேசுகிறேன். நான் உங்களைக் காமம் மிகுந்தவர்கள் என்று அழைக்கிறேன்.
மண்ணுலகையும் மண்ணுக்குரியவற்றையும் நீயும் நேசிக்கிறாய். நான் உன்னை நன்றாகப் புரிந்துகொண்டேன்- ஆனால் வெட்கமும் மோசமான உளச்சான்றும் உள்ளது உனது காதலில்- நீ நிலவு போன்றவன்!
உனது உள்ளுயிர் மண்ணுலகத்துக்குரியவற்றின் மீது கண்டனம் செலுத்த வைக்கப்பட்டது, உனது குடல்கள் அவ்வாறல்ல; ஆயினும் அவையே உனது திடகாத்திரமான பகுதிகள்!
உனது குடல்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதால், இப்போது உனது உயிர் வெட்கப்படுகிறது, அதனுடைய சொந்த மானக்கேட்டைத் தவிர்ப்பதற்காக, அது குறுக்கு வழிகளின் ஊடாகவும், கிடப்பு வழிகளின் ஊடாகவும் செல்கிறது.
நாக்கு வெளியில் தொங்க, ஒரு நாயைப் போலல்லாமல் வாழ்வை உற்று நோக்குவதே எனக்கு மிக உயர்ந்த விஷயம். இவாறு தனக்குத் தானே பேசுகிறது உனது ஏமாற்றுகிற உள்ளுயிர்.
திமிரேறிய விருப்பத்துடன், அகங்காரத்துடன், பிறர் பொருள் பறிக்கும் பேராசையற்று, உடல் குளிர்ந்து வெளுத்து, ஆனால் போதையேறிய நிலவு விழிகளோடு மகிழ்ச்சியாக உற்று நோக்குகிறது”1
நீட்ஷேயின் தத்துவத்திலும் அதையொட்டி எழுந்த பின்நவீனத்துவ சிந்தனையிலும் இன்மையினை அறிந்தபின் உள்ள தருணங்கள் அதிகாரத்தினால் மட்டுமே நிரம்பியவை; அதிகாரங்களினால் ஆன வாழ்வியல் தருணங்களில் நன்மைக்கும் தீமைக்கும் அப்பால் செல்வதே சிறப்பானதாக இருக்க முடியும். அதை நோக்கியே மனித யத்தனங்கள் இருக்க வேண்டும். அதாவது அதி மனிதனாக உருவெடுப்பது மட்டுமே இன்மையினை அணுக்கமாக அறிந்தவர்களின் அடுத்த கட்ட செயல்பாடாக இருக்க முடியும் என்பது மேற்கத்திய சிந்தனையின் வாதமாக இருக்கிறது. பௌத்த முடிவுகளான காருண்யமும் அன்பும் என்ற இன்மைக்கு அப்பாலான கவித்துவ தருணங்களை வந்தடைவதற்கு மேற்கத்திய சிந்தனையில் இடமில்லை.
இந்த கீழைத் தேய வித்தியாசத்தினையே யாசுனேரி காவபட்டா தன்னுடைய 1968 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபெல் பரிசு ஏற்புரையினில் குறிப்பிட்டதாக நினைக்கிறேன். “Japan, the beautiful and Myself”2 என்று தலைப்பிட்டிருந்தாலும் அந்த உரை முழுக்க ஜப்பானிய இலக்கியத்தில் சந்திரனும் பனியும் எத்தனை ஆழமான குறியீடுகளாய் இருக்கின்றன என்பதை பற்றியதாகவே இருந்தது. காவபட்டா அதே உரையில் மியோஇ என்ற ஜென் குரு எழுதிய மூன்று கவிதைகளை குறிப்பிடுகிறார். மியோஇ 1173 இலிருந்து 1232 வரை வாழ்ந்து மறைந்த ஜென் கவி.
மியோஇயின் கவிதை
“மேகங்களிலிருந்து வெளிப்படும் குளிர்கால நிலவு எனக்குத் துணை
காற்று துளைக்கிறது, பனி குளிர்ந்திருக்கிறது”
என்பதினை மேற்கோள் காட்டும் காவபட்டா இந்தக் கவிதையில் மியோஇ நிலவினை தன் துணையாக அடையாளம் காண்பதைக் குறிக்கிறார்.
மியோஇயின் இன்னொரு கவிதையான
“நான் அந்த மலைக்கு அப்பால் போவேன். ஓ நிலவே நீயும் அங்கே செல்
ஒவ்வொரு ராத்திரியும் நாம் ஒருவருக்கொருவர் துணையாய் இருப்போம்”
என்பதினை மியோஇயின் அகத்தினுள் நிலவு துணையாய் சேர்ந்து கொண்டதற்கான அத்தாட்சியாய் கவனப்படுத்தும் காவபட்டா
மியோஇயின் மூன்றாவது கவிதையான
“என் இருதயம் ஒளிர்கிறது, தூயதோர் அகண்ட வெளிச்சம்
சந்தேகமேயில்லாமல் நிலவு இதைத் தன் ஒளியாகவே நினைக்கும்’
என்ற கவிதையில் மியோஇ நிலவொளியாகவே மாறிவிட்டதைச் சொல்கிறார். நிலவொளியின் சுத்தப் பிரகாசம் ஜப்பானிய மற்றும் கொரிய இலக்கிய மரபுகளிலும் பௌத்த கவிதையியலிலும் உச்சபட்ச ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது.
காவபட்டா தன்னுடைய நாவல்கள், குறிப்பாக நோபெல் பரிசுக் குழு உயர்வாகச் சொன்ன ‘ஓராயிரம் நாரைகள்’ நாவல் இன்மையை நோக்கி நகர்ந்து சூன்யவாதத்தினை முன்வைப்பதாக அமைகிறது என்ற விமர்சனத்திற்கு காவபட்டா சொன்ன பதிலாகவும் அவருடைய நோபெல் ஏற்புரையினை நாம் வாசிக்கலாம். பாலியல் மீறல்கள், அதீதங்கள் ஆகியன அடங்கிய தொனியில் சொல்லப்படும் காவபட்டாவின் நாவல்களில்- ‘ஓராயிரம் நாரைகள்’ மட்டும் என்றல்ல “தூங்கும் அழகிகளின் இல்லம்’. ‘அழகும் துக்கமும்’ ஆகிய நாவல்களில் கூட- பிரபஞ்ச இன்மையினை உணர்ந்து அனுபவிப்பதற்கு நிகரான அனுபவங்கள் வாசக அனுபவங்களாகின்றன. காவபட்டாவின் மேதைமை அந்த இன்மை அனுபவத்தினை தன் நாவல்கள் உருவாக்குகின்றன என்பதினை ஒரு படைப்பாளியாக அறிந்து வைத்திருந்ததும், அதைக் கீழைத் தேய மரபில் இடம் சுட்டி விளக்கியதும், மேற்கத்திய சூனியவாதத்திலிருந்து வேறுபடுத்திக்காட்டியதிலும் அழகு கொள்கிறது என்று சொல்லலாம்.
காவபட்டா ஜப்பானிய மரபு எனக் கொண்டாடும் பௌத்த மரபு கொரியாவுக்கும் சொந்தமானது. கொரிய பௌத்த குருக்களுள் ஒருவரான பான்ஷான் உருவாக்கிய நிலவு-மனம் என்ற பௌத்த சூத்திரம் கொரிய கவி மரபில் மிகவும் புகழ் பெற்றது. இன்மையை உணரும் மனம் நிலவொளியைத் துணையாகக் கொள்ளும்போது ஞானத்தின் பிரகாசத்தை நிலவொளி எப்படி ஒத்திருக்கிறது என்று பான்ஷான் விளக்கியது காருண்யத்தின் பிரகாசம் நிலவொளியே என்பதை கொரிய பௌத்த மரபில் நிலை நிறுத்தியது.
பான்ஷான் பௌத்த மாணவர்கள் கூடிய சபையில் இவ்வாறாகப் பேசினார்:
“எல்லா வகைகளிலும் நிலவொளி முழுமையானது அது ஆயிரக்கணக்கான திட்டங்களை விழுங்கிவிடுகிறது. நிலவின் பிரகாசம் பொருட்களை ஒளியூட்டுவதில்லை; பொருட்களின் இருப்பும் முக்கியத்துவம் பெறுவதில்லை. ஆனால் பொருட்களும் பிரகாசமும் தொலைந்தும் விடுவதில்லை. அந்த பிரகாசம் என்னவாக இருக்க முடியும்?”
பான்ஷானின் பேச்சு நிலவொளியை தன்னறிவின் ஞானமாகவும் கொரிய பௌத்த இலக்கியங்களில் விளக்கமளிக்கப்பட்டது. பௌத்த மதச் சடங்குகளில் முழு நிலவைக் கொண்டாடுதல் என்பது முக்கியமான சடங்காக கிழக்காசியா முழுக்க பரவலாக்கம் பெற்றுவிட்டது. பௌத்த சடங்குகளில் ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் குறியீட்டு அர்த்தங்கள் வழங்கப்பட்டன. ஒரு பௌர்ணமியிலிருந்து மறு பௌர்ணமிக்கு நகர்வது என்பது தன்னறிவின் முழுமையை நோக்கிய நகர்தலாக பௌத்த மரபில் நிலைபெற்றுவிட்டது.
கொரியாவையும் ஜப்பானையும் போல அல்லாமல் இந்தியாவில் தத்துவத்திலும் கலையிலும் முக்கிய குறியீடாக நம் சமகாலம் வரை வந்திருக்கும் நிலவின் திதிகளும் ஒளிர்வும் பழக்க வழக்கங்களிலும் ஜோதிடத்திலும் மறைந்திருக்கின்றன. கவிதையிலும் வெகுஜன பண்பாட்டுத்தளத்திலும் நிலவும் அதன் ஒளிர்வும் தேய்வழக்குகளாகி இருக்கின்றன. நிலவொளி என்று மட்டுமில்லாமல் இயற்கையின் அம்சங்கள் எல்லவற்றோடும் தனியாக அந்தரங்கமாக உறவு ஏற்படுத்திக்கொள்வதற்கான தத்துவங்களும் கலைகளும் நமக்குத் தேவை.
1 “ ஜரதுஷ்டிரன் இவ்வாறு கூறினான்” ஆங்கிலத்திலிருந்து தமிழில் ரவி, காலச்சுவடு பதிப்பகம் 2006 பக்கம் 166-167
No comments:
Post a Comment