Wednesday, December 7, 2016

அனாதையின் காலம் | பகுதி 5 | அந்தரங்கத்தின் அகரமுதலி | நீள் கவிதை


அனாதையின் காலம் | பகுதி 5 | அந்தரங்கத்தின் அகரமுதலி | நீள் கவிதை


Still life - Vase with fifteen sunflowers 1888 Vincent Van Gogh


ஒளி நெறி: அந்தரங்கத்தின் அகரமுதலி
--
உனக்கு அது இன்னொரு ஊரின் பெயர்
சிந்துகின்ற பூக்களைக் கொண்ட துறை
எனக்கு அது என் பூர்வீகத்தின் தாய் மடி

அதன் உள் தோட்டத்தில் மா பலா தென்னை
எலுமிச்சை கொய்யா என கனி வர்க்கங்களும்
செம்பருத்தி நந்தியாவட்டை என பூவர்க்கங்களும்
வேலியில் படர்ந்த பசலைக் கீரையுமாய்
அதன் வேர்கள் பொருநையில் நீர் உறிஞ்சின

கம்பனையும் குறவஞ்சியையும் மெய்கண்டாரையும்
செம்பருத்தியையும் போலவே
அவை என்னுள் மடிந்துவிட்டன

ஆனால் ஒரு பவள மல்லி செடியிருந்தது
அது என் வீட்டெதிரில் தினமும் பூக்களை சொரிந்தது
அதன் உதிர்வுகளில் என்னைக் கடைசியாய் பார்த்த
கண்ணாடியின் தடயங்கள் இருந்தன

என் கால்களுக்கும் அவற்றின் வழிகளுக்கும்
இப்போது அப்பால் இருக்கிறது அந்தத் தெரு

இருந்தாலும்
தன்னிச்சையாய் சிந்துபூந்துறை என எழுதுகிறது என் கை
தன்னிச்சையாய் பவள மல்லியை நினைவின் பிறழ்வில் பன்னீர் புஷ்பம் என்றே
பாடுகிறது என் குரல்

எப்படியும் ஒரு பூந்துறையை நானுனக்கு கடத்திவிடுவேன்

--

 1

தங்க அரளி மொட்டினை நெற்றியில்
தட்டினால் சிதறும் சிறு சப்தத்துடன்
நான் உடைந்த கணத்தில்

எனைப் பார்த்த கண்ணாடிகள் ரசமற்று போகின்றன
நீயோ குழந்தைகள் பலிஞ்சடுகுடு விளையாடுவதை
ஜன்னல் வழியே பார்த்து நிற்கிறாய்

உன் முகத்தில் அரவிந்தமில்லை
ஆனாலும் நீ
இரவின் தோழமைக்காய் காத்திருப்பதாயில்லை

பிறர் துயர் அறியா ரசவாதம்
நம்மைக் குருடாக்க
நம் கைப்பையை நாம் ஆராய்வதாயிருக்கிறோம்

ஏதோ ஒரு வாராச் சொல்லின் ஒருமைக்காய்
நாம் காத்து நிற்கிறோம்
கணத்தின் கணம் நிரந்தரம் என்பதாக

உருப்பேதங்கள் உறமுறைகள் அழிய
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா
நீ எனைவிட்டு நீங்கியதை

நான் அறியாதிருக்கிறேன்

நடுவானில் சூரியன் தாம்பாளமாய் ஜொலிக்கிறான்
தன் போக்கில் நிகழும் தனிச் சம்பவமாய்

--
2


ஏதேனும் ஒரு வான் மூலையை
எப்போதும் கருமையாக்கும்
மேகங்கள் எங்குதான் இல்லை?

உண்மையில் மேகம் என்று
எதையும் அழைக்கலாம்

கம்பா நதி மண்டபத்தில்
உன் கண் கட்டி அடர்ந்திருக்கும்
நீலக்குவளை மலர்களை

நம் கண்ணாடிகளில் படிந்திருக்கும் புகைமூட்டத்தை
உன் கண்களடியில் அடர்ந்திருக்கும் தூக்கமின்மையின் கருவளையத்தை
நம்மிடையே இப்போது கனத்திருக்கும்  மௌனத்தை
வெட்கத்தினால் முன்பு நீ மறைத்த கட்கத்தினை

நீ பதறி விலகிய அரவாணியின் முகத்தினை
உன்னிடம் யாசித்த சிறுமியின் கைகளை
நடைபாதையில் உறங்கும் கிழவனின் கம்பளியை
நடுச்சாலையில் தூர் வாறும் பெண்ணின் தலைக்கட்டை

ஆசுவாசம் கொள்
கோபுரங்களையும் சூழும் மேகங்களுக்கு
வடிவமில்லை எனினும்
அடர்வதில்தான் அவற்றின் பொருண்மை
துணுக்காவதில் இல்லை

--
3

ஆகாயமும்
உன் புகழால் விரிந்திருக்கிறது

தூரத்து வன தேவதைகளும்
உன் வரிகளை இசைக்கிறார்கள்

தாழம்பூக் காடே
உன் வாசத்தில் தோற்றிருக்கிறது

தூசும் தும்பும் கூட
துலாபாரம் போலவே உன் எடை அறிந்திருக்கிறது

உன் கோபத்தின் எரிதழல்
எதையும் அவிக்கும்

உன் சொற்களின் கோர்வையில்
உலகம் உதிரும்

ஓசைக்கும் பொருளுக்கும்
நீ நூற்பதே திரை

உன் மௌனத்தின் மறை
உலகின் திரு

உன் புன்னகை
இப் புவனத்தின் புதிர்

ஆனால் நீ பாடுவதோ
உன் வலியை உன் அவமானத்தை

--
4

உன் நந்தவனத்தின் மாயையில்
பூத்திருக்கிறது ஒரு அபூர்வ மலர்
அது
சிவனுக்கு ஆகாத தாழம்பூ
லட்சுமிக்கு ஆகாத தும்பை
சரஸ்வதிக்கு ஆகாத பவளமல்லி
யாருக்கும் ஆகாத அடுக்கரளி
என  விலக்குதலின் அருள் மூலையில்
உன் போலவே நின்று
உலகு அறியா கருணையை தியானிக்கிறது
அதன் இதழ்கள் எல்லையற்று விரிகின்றன
அதன் மௌனம் தீவிழியாய் அனைத்தையும் ஊடுறுவிப் பார்க்கிறது
அதன் இருப்பில் அந்தி அதிர்ந்து அடங்குகிறது
அதன் ராம சோகம் முக்தியின் வெட்டவெளி
உந்தன் இறுதி பற்றுதல்
உன் நரம்புகளின் இசை அதிர்வு
உன் தனிமையின் நித்தியம்
--
 5

மார்கழியின் பனித்துளி
நள்ளிரவில்
மொக்கு கட்டும் செம்பருத்தியில்
விழுந்தது போல்
மாயையின் தொடுகையில்
விதிர்விதிர்க்கிறது உன் உடல்
அந்த அந்நியோன்யத்தில் சுடர்கிறது முழு நிலவு
நீ கரையும் தருணம் உன்னுள் சிறகு விரிக்கும்
பட்டாம்பூச்சியை பெயரிட நினைக்கிறாய்
ஓசையை வாய் கூட்டுகையில்
கைவிடுகிறது உன் கடைசிச் சொல்
அவ்வமயம் எட்டுவதில்லை
உன் கைமுகக்கண்ணாடி
அக்கணத்தில்
முகமற்று பெயரற்று சொல்லற்று
நிழலற்று கனவற்று நனவற்று
நீ துகள் துகளாய் சிதறி
எங்கும் வியாபிக்கையில்
உன் பௌதீகம் சிவம்
--
6

நாகலிங்கப் பூ தன் காலாதீதத்தில்
ஒரு மதியத்தை
உனக்கு அளிக்கிறது

நீ அப்போது ஒரு உடலை
காதலிக்க ஆரம்பிக்கிறாய்

மெல்லிய நாகப் படங்கள்
அல்லி வட்டம்
நரம்பு மீட்டல்

மைய லிங்கம் மௌனத்தின் பேரழகு
கவிதையில் மிளிரும்

இதழ் விரிப்பு
மனித பரம்பரையின் நினைவுச் சரம்
காலத்தின் எல்லையற்ற ஆழம்
உன் வருடலில் பீறிடும் நீட்சி

அதன்
நிசியின் நிலாவெளிச்ச
புலன் வெளி நீ அறியாதது
பிம்பப் பகலின்
புனைவே நீ அறிந்தது

மானுடத்தின் ஒளித்தூலம்
உன் கையில் மலராக விரிந்து
இதழ்களாக உதிர
மீண்டுமொரு வாசனையின் மாயையை
புனைவாக்கி ஓய்கிறாய்
--
7

புனைவின் அழகு
நினைவின் கழிவுகளில் முகிழ்த்ததாய்
கோலத்தின் நடுவே  மிளிர்கிறது
சாணத்தில் பொதிந்த 
பூசணிப் பூ
--
8

சத்தியம் பிராயசித்தம் பிரமை
குமிழி கானல் கண்ணாடி

குற்றம் தண்டனை விடுதலை
கூட்டல் கழித்தல் பூஜ்யம்

மாயை பாவம் புண்ணியம்
புலன் புனைவு நினைவு

உள்ளம் உட்புரி உனது
ருசு தீர்ப்பு நிபந்தனை

உருவகம் உன்மத்தம் பிரக்ஞை
அனுபவம் வெற்றி மகிமை

நீ செண்பகம் நான்
ஓயாத பூப்பின் ஆச்சரியம்
--
9

மல்லிகையை உன் வேட்கை
என பெயரிடுவதில்தான் உனக்கு எத்தனைத் தயக்கம்?
அதன் தூய்மையும்
அதன் களங்கமும் ஒன்று போலவே
உன்னை அச்சுறுத்துகிறது
உன் கற்பனையில் அது நாணத்தின் நறுமணம்
உன் பிரேமையின் யோனிக்கசிவு
உன் நனவின் புதைகுழி
நீயும் எல்லோரையும் போலவே
அதை எங்காவது நேர்ந்துவிட ஆசைப்படுகிறாய்
பாரமற்ற பறவையாய் அது
அனிச்சையாய் உனை விட்டு நீங்காதாவென ஏங்குகிறாய்
ஆனால்
ஆசிர்வதிக்கப்பட்ட கணமொன்றில்
மல்லிகையற்ற இரவு
மரணத்தின் அநாதி என உணர்கிறாய்.

--

No comments: