Saturday, May 14, 2022

அரவான்/ நீள் கவிதை ஓரங்க நாடகம்

 —-

‘அரவான்’ எனும் என்னுடைய இந்த நீள் கவிதை ஓரங்க நாடகத்தை என்னுடைய முதல் நாடகமான ‘குதிரைக்காரன் கதை’யை தன்னுடைய நாடகவெளி பத்திரிக்கையில் பிரசுரித்தவரும், தொடர்ந்து நாடகங்களை இயக்கிக்கொண்டிருப்பவரும், தன்னலமற்று— நிகழ்த்தப்படும் நாடகங்களைப் பற்றியும் வெளிச்சம் படாத நிகழ்த்துகலை கலைஞர்களைப் பற்றியும் எழுதுபவருமான வெளி ரங்கராஜன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 

————————————-

அரவான்

——

ஒளியைக்கூட்டுங்கள் 

தலையை வெட்டுவதற்கான

நேரம் வந்துவிட்டது என யாரோ கத்துகிறார்கள்

நீ உன் நாடியை வெகுவாக உயர்த்தி 

என் பெயர் அரவான் என அறிவிக்கிறாய்

முப்பத்திரண்டு அங்கலட்சணங்கள் கூடிய

கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் சல்லியனையும் தவிர

இவ்வுலகில் முழுமையான ஆண் நான் ஒருவனே

நான் போர்ப்பலியாக மனமுவந்து சம்மதிக்கிறேன்

ஒரே வெட்டில் தலை வேறு முண்டம் வேறு

என்றாகவேண்டும் உயிர்த்திருக்கும் என் தலை

மீதியுடலை முப்பத்தியோரு துண்டுகளாக வெட்டும்

அதுவே ஈட்டி முனையில் குருட்சேத்திரப் போரை

பார்த்து நிற்கும் என்று நீ வீராவேசம் கொள்கையில 

எண்ணற்ற பறவைகள் சிறகடித்து எழுந்து

வானைக் கருமையாக நிறைக்கின்றன

நாகங்கள் புற்றுகள் நீங்கி சீறி நிற்கின்றன

நடுநடுங்கும் மேகங்கள் சிதறி ஓடுகின்றன

உன் தாய் உலூபியின் கோப விழிகளில்

நீர் நிறைய அவள் உன் தந்தை அர்ஜுனனை

வெறித்துப் பார்க்கிறாள்

நீ தோள்கள் தட்டி தொடைகள் தட்டி 

பலி வாளைத் தாம்பாளத்தில் தாங்கி நிற்பவனை

வா வா என்றழைக்கிறாய் நான் அரவான் என

மீண்டும் மீண்டும் மாரறைந்து அறிவிக்கிறாய் 

சொற்கள் கூடுமோ ஏழு புவனங்களும் அதிருமோ

கிண்கிணி மாலைகள் குலுங்குமோ

தேர்ச்சக்கரங்கள் புதையுமோ

குதிரைகளின் குளம்படிகள் குலையுமோ

யானைகள் அலறிப் பிளிறுமோ

காலம்தான் உறைந்து நிற்குமோ

இதோ அரவான் 

உங்கள் ஒவ்வொருவரின் மனசாட்சி, 

போரின் களப்பலி

எனச் சொல்லி இடைவெளி விடுகிறாய்

ஒளி உன் மேல் இன்னும் பரவவில்லை என்கிறார்கள்

நீ திகைத்து எழுந்து நிற்கிறாய்

எப்படி ஒவ்வொரு தடவையும் இதே இடத்தில் 

மனசாட்சியைச் சொன்னவுடன் ஒளி மங்குகிறது

ஹேய் யாரங்கே இதன் இயக்குனர்

ஏன் என்னை என் போக்கில் சுதந்திரமாய் 

நடிக்க விடமாட்டேன் என்கிறீர்கள் 

ஏன் என் மேல் உங்கள் திரைச்சீலை 

எப்போதுமே  இழுத்து மூடப்படுகிறது?

நான் கிருஷ்ணனோடு ஓரிரவு 

போகம் அனுபவித்தவன் என்பதாலா

இல்லை நான் உங்கள் போரை 

ஆதியோடு அந்தமாய்வெறித்து பார்த்த 

போர்க்குற்றங்களின் சாட்சி என்பதாலா

ஆஹ் நான் அந்த போக இரவைப் பற்றி

சொல்லத்தான் வேண்டும் 

எங்கும் நிறை பரப்பிரம்மம் 

மோகினியாய் எனை நாடி

மாயையைக் கவிழ்த்தது 

என்னுடல் மேல் மட்டும்தானா

நான் கேட்டதென்ன? 

ஒரே ஒரு பெண் அனுபவம்

கிடைத்ததென்ன? 

பிரபஞ்சத்தின் விஷ்ணுமாயை

மோகினியின் நாவு என்னுடலில் 

கூறிய வசியத்தின் கதைகள் எத்தனை 

ஒன்றுமில்லையில் கரைந்தேனா 

முடிவிலியில் கலந்தேனா- 

மோகனத்தின் கூந்தல் விலக்கி அவள்

புறங்கழுத்தில் முத்தமிட்டேன் 

ஒளி வெள்ளமாய் விரிந்தது ஒரு பாற்கடல்

ஆம், இப்போது நீங்கள் கேட்கிறீர்கள் 

கடலலைகளின் நடுவே ஒளிந்திருக்கும் மௌனத்தை

யாருக்கு யார் சாட்சி என்ற கேள்வியை

சரணடைந்தேன் உனை நான் என மார்புகளில்

குழைகையில் காப்பது எவர் தர்மம் என்ற நியாயத்தை

கேள்விகளும் நியாயங்களும்

மீறிய இசைவுகளில் கொஞ்சம் கொஞ்சமாய்

எனக்கு என்னை அடையாளம்

தெரியாமல் போய்க்கொண்டிருந்தது

கணங்கள் அவிழ அவிழ,நானென்று ஒன்று

உருவாகிக் கரையக் கரைய

இரு நாகங்கள் சீறி சீறி

காம உக்கிரத்தில் மேலெழும்பி

வால் நுனி நின்று பின்னிப் பிணைந்து

பிளவுண்ட நாக்குகளால்

ஒன்றோடொன்று துழாவி கண்ணாடிக்கண்களில்

வைர ஒளி வீசி வழுக்கு உடல்களின்

அம்மணம் காட்டி நிற்க

ஒரு நாகம் நழுவும் கணமெனில்

மறு நாகம் நானென்பதாக என நீ

சொல்லி முடிக்கையில் மூச்சு வாங்குகிறாய் 

ஆசுவாசம் கொள் யாரும் உன்னிடம் 

இன்னும் கேட்கவில்லை உன் அனுபவம்

பெண் அனுபவமா ஆண் அனுபவமா 

பால் பேதமற்ற அனுபவமா என 

என்ன சொல்வது எப்படிச் சொல்வது 

மோகினியின் நறுமணத்தை 

அதோ கூவாகத்தில் வண்டி வண்டியாய்

பூக்களைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள்

நான் இப்போதே வாசனைகளைப் பற்றி 

பேச ஆரம்பித்திருக்ககூடாது

அவர்கள் பூக்களலான சப்பரத்தை 

எனக்காகக் கட்டி முடிக்கும் வரை 

நான் காத்திருந்திருக்கவேண்டும்

அவசரப்பட்டுவிட்டேன்

வாசனைகள் அப்படித்தான் நம்மைப் பீடிக்கின்றன

தந்தையும் கடவுளும் உன்னிடம் வந்து 

நீ போர்ப்பலியாகவேண்டும் 

எம் வெற்றியின் பொருட்டு

என்று கேட்டால் நீ என்ன செய்வாய்?

வெற்றி தோல்வி என்பதை விடப் பெரிய 

விஷ்ணுமாயை உலகிலுண்டா கிருஷ்ணா? 

நான் என்னை முப்பத்தியிரண்டு துண்டுகளாய்

அங்கம் அங்கமாய் வெட்டி 

மாகாளிக்குப் படையலிட்டு 

என் தந்தைமார் வெற்றி வேண்டி 

முழுமையாய் சிதைந்தபின் நீ ஏன்

என் மோகினி விதவையாய்க் கதறி அழுதாய் கிருஷ்ணா?

எந்த நறுமணம் உன்னைப் பீடித்தது?

போருக்கு முன்பே என்னைக் களப்பலி கேட்ட நீ

எனக்கேன் ஒரு கீதோபதேசம் உரைக்கவில்லை? 

ஈட்டி முனையில் குத்திய தலையின்

விரிந்த விழிகளால்  குருட்சேத்திரத்தில்

நான் பார்த்ததுதான் என்ன?

சகோதரக் கொலையில் மலைமலையாய்

குவிந்த உடல்கள் நிணத்தின் வாடையில்

அழுகும் சதை கொத்தப் பறக்கும் வல்லூறுகள்

நீர்க்கடன் செய்ய நதிக்கரையெங்கும் 

குவிந்திருக்கும் மக்கள் கூட்டம்

உத்தரையின் வயிற்றில் தங்கிய ஒற்றைக் கர்ப்பம்

தவிர எதை உன்னால் காக்க முடிந்தது கிருஷ்ணா?

எந்த வெற்றியின் பொருட்டு

என்னைக் களப்பலி கேட்டாய் நீ?

என்ன!  

என் குரல் கம்முகிறதா? 

உணர்ச்சி தூக்கலாய் இருக்கிறதா?

எனக்கு நாடக நடிப்பிற்கான பயிற்சி இன்னும் போதாதா?

என்ன செய்ய வேண்டும் நான்?

நான் களப்பலி மட்டுமில்லைதானே

நான் போரின் அந்தம் வரை 

சாட்சியாய் நின்றவனும்தானே? 

நான் களப்பலி என்பது கிருஷ்ணன் தெரிவு

நான் போர் சாட்சி என்பது என் தெரிவு என்பது உண்மைதான்

கிருஷ்ணகூடுகைக்குப் பின்னும் 

எனக்கென்று ஒரு மனமும் 

எனக்கென்று ஒரு சொல்லும் 

எனக்கென்று ஒரு பிரக்ஞையும் இருக்கலாகாதா?

என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?

இந்த நாடகம் இயக்குபவரின் நெறியாழ்கையில்

சீரழிந்து கொண்டிருக்கிறது 

இல்லை நான் கிருஷ்ணனைச் சொல்லவில்லை

அவன் தான் நான்  களப்பலியாவதற்கு 

எனக்கு மூன்று வரங்கள்  தந்தானே

பெண் சம்போகம், வீர மரணம், இறுதிவரை

குருட்சேத்திரப் போரைப் பார்க்கும் கொடுப்பினை

ஆ என்னவொரு கொடுப்பினை

நீ களைப்படைந்திருக்கிறாய்

கூவாகத்தில் நடப்பதை கொஞ்சம் பார்

சித்திரையின் பௌர்ணமி பூரணம் கொள்ளப்போகிறது

லட்சோப லட்சம் பேர் மோகினிகளாய்

உனை மணம் புரிய வந்துகொண்டிருக்கிறார்கள்

நீ அப்படி பேதலித்து நிற்காதே

இந்த நாடகம் தாண்டியும் உனக்கொரு 

வாழ்க்கை இருக்கிறது

உனக்கான திரைச்சீலைகள் திறந்துவிட்டன

உனை மணம் புரிந்த இரவில் 

எத்தனை உடல்கள் கூடி முயங்குகின்றன

எத்தனை பால் பேதங்கள் அவற்றில்

உன் தலையை நீயே கொய்து

களப்பலி ஆனபின் எத்தனை மோகினிகள்

உன் விதவைகளாய் திரும்பிச் செல்கிறார்கள்

கிருஷ்ணமோகினி வேறு யாருக்காக அழுதிருக்கிறாள்?

சோர்வுறாதே மீண்டும் அந்த போக இரவினை

மனதில் கொள் 

துண்டுகளான உடலை ஆதிசேடனின் வழி 

உன்னை மீண்டும் காதற் சொற்களைக்

கூட்டுவது போலக் கூட்டினானே கிருஷ்ணன்

அதை நினைவு கொள்

நீ தடுமாறி எழுந்திருக்கிறாய் 

உன் குரல் கனிந்திருக்கிறது 

உன் சொற்களில் மதுரம் ஏறியிருக்கிறது

நீ மெதுவாகப் பேச ஆரம்பிக்கிறாய்

என் பெயர் அரவான்

போரில் நானொரு களப்பலி

போருக்கு நானொரு சாட்சி

இந்த எளிய சொற்கள் ஏதேனும் கதவுகளைத்

தட்டலாம் அல்லது திறக்கலாம்


No comments: