Thursday, June 30, 2022

சொற்களின் கூடுகையில் எழும் திவ்யம்


 சொற்களின் கூடுகையில் எழும் திவ்யம்

——————————————————
தமிழ்வெளி பதிப்பகம் என்னுடைய ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ என்ற தலைப்பிலான கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளது. பக்கங்கள் 240 விலை ரூபாய் 240. ISBN 978-93-92543-01-2 புத்தக வடிவமைப்பு நேர்த்தியாக இருக்கிறது.
அச்சுப்பிரதியை ஃபோன் மூலம் வாங்க 91-9094005600 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். கிண்டில் மின் நூல் வாங்க https://www.amazon.in/dp/B0B461VJ6C
——————————————————————-
நூலுக்கான என் முன்னுரை
—-
இது என்னுடைய இரண்டாவது கவிதைத்தொகுதி. இந்தத் தொகுதியில் 2015 இல் நான் எழுதிய எட்டு பாகங்கள் கொண்ட ‘அனாதையின் காலம்’ நீள் கவிதையையும் உள்ளடக்கியது. அந்த நீள்கவிதையை 56 தனித்தனி கவிதைகளாக மேம்படுத்தி இந்தத் தொகுப்பில் இணைத்திருக்கிறேன். ‘அனாதையின் காலம்’ என்னுடைய வலைத்தளத்தைத் தவிர வேறெங்கும் பிரசுரமாகவில்லை. முதன்முறையாக அச்சு காண்பவை. இதர கவிதைகள் அனைத்தும் புதிதாய் கடந்த ஒரு வருடத்திற்குள் எழுதப்பட்டவை.
நான் என் மனதை சுத்திகரிப்பதற்கான ஒரு முறைமையாக கவிதை எழுதுதலை, பெருந்தொற்று காலத்தில் வீடடைந்து வேலை செய்யும் லயம் தப்பிய கடந்த இரண்டு வருடங்களில் கண்டுகொண்டேன். நான் பதின்பருவத்திலிருந்தே கவிதை எழுதுபவனாக இருந்தாலும்
கவிதையை எனக்குரிய வடிவமாக மீட்டெடுத்ததும் உறுதி செய்துகொண்டதும் சமீபத்தில்தான்.
ஒன்று போல இன்னொன்று இருப்பது என்னைத் தொடர்ந்து வசீகரிக்கிறது; அல்லது ஒன்று போல இன்னொன்று இருப்பதான பாவனையை, மாயையை வெளிப்படுத்துவது என்னிடம் ஒரு பதச்சேர்க்கையை வேண்டுகிறது. நான் அதை எழுதுகிறேன் கவிதை என்ற பெயரில். ‘போல’ என்றொரு சொல்லுக்குள் நான் சிக்கிக்கொள்வதிலும் அதன் எல்லைகளை உடைப்பதிலும் நான் முன்பும் ஈடுபட்டிருக்கிறேன். “கட்டுரை போல சிலவும்’ எனத் துணைத்தலைப்பிடப்பட்ட கட்டுரை நூலை எழுதியிருக்கிறேன். ‘மர்ம நாவல்’ என்றொரு சிறுகதை. “நாடகத்திற்கான குறிப்புகள்” என இன்னொரு சிறுகதை. இன்னொரு சிறுகதையில் கட்டுரைக்குள் மழை பெய்கிறது. வடிவங்கள் சேர்வதையும் கலைவதையும் அத்து மீறுவதையும் மத சிந்தனைகளின், தத்துவங்களின், பண்பாட்டுச் சூழல்களிலும் வைத்துப்பார்ப்பதை கர்மமும் மறுபிறவியும் பற்றிய நூல்கள் எனக்குச் சொல்லித் தந்தன. குறிப்பாக ஞானனாத் ஒபயசேகரெயின் (Gananath Obeyesekere) நூல் “Karma and Rebirth A cross cutural Study” - மறுபிறப்பு என்பதை பண்பாட்டுச் சூழல்களில் வைத்து விரிவாகவும் ஆழமாகவும் ஆராயும் நூல். மறுபிறவி என்பது மத, தத்துவ சிந்தனைகள் போலவே பண்பாட்டு சூழல்களாலும் உருவாக்கப்படுவது என வாதிடுவது. இந்த நூல் அதன் முந்தைய பிறவியில் அல்லது அடுத்த பிறவியில் Imagining Karma: Ethical Transformation in Amerindian, Buddhist, and Greek Rebirth என வழங்கப்படுகிறது. பல ஒன்றாய் கூடிவரும் கூடுகையின் திவ்யத்தையும் அது கலைந்து அடுக்கப்படும்போது உண்டாகும் மறுவடிவத்தையும் நான் பாடுகிறேன்.
இதில் அடிப்படையான கேள்வி என்னெவென்றால் ஒன்று இன்னொன்றின் சாயம் ஏற்கும்போது அது ஒரு moral universe-ஐ கண நேரமேனும் நமக்குக்காட்டித்தருகிறதா? ஆமென்றும் இல்லையென்றும், சந்தேகத்திற்குரியதென்றும், தெரியாதென்றும் என்னுடைய வெவ்வேறு கவிதைகள் சொல்கின்றன. அல்லது சொல்ல விழைகின்றன. இந்தப் பல்வேறு நிலைப்பாடுகளின்வழி என் வாழ்க்கையில் ஏற்பட்ட பல இழப்புகளையும் அவற்றால் ஏற்பட்ட துக்கத்தையும் நான் கடந்து வந்தேன். பௌத்த முறைப்படி நான் கற்றுக்கொண்ட தியானமும் அதன் வழி நான் எழுதிய இந்தக் கவிதைகளும் எனக்கு துக்க நிவாரணத்தையும் புத்துயிர்ப்பையும் அளித்தன.
அகத்தையும், அனுபவங்களையும் பிடிப்பதற்கு மொழிக்கு இருக்கும் ஆற்றல் என்ன? மொழியின் போதாமை என்ன?
எழுதிப்பார்த்து ஆழ் மனதை அறிதல் என்பதில் ஒரு வகையான அறிவுத்தோற்றவியலின் அதீத கற்பிதம் (epistemological fantasy) இருக்கிறது. என் அடையாள அட்டையில் உள்ள புகைப்படத்தை வைத்து நான்தான் என்று பிறர் அறுதியிடுவது போல அல்லது புகைப்படம் எடுத்த பின்னரே, கண்ணாடியின் முன் நின்ற பின்னரே என் முகம் எனக்கு அடையாளம் ஆவது போல எழுதி முடித்த கவிதை என்னை முழுமையாகக் காட்டுமா? இல்லை ஏதேனுமாவது சொல்லுமா? கவித்துவ பிரக்ஞையை கவிதை வெளிப்படுத்துமா? அகத்தையும், அனுபவங்களையும் பிடிப்பதற்கு மொழிக்கு இருக்கும் ஆற்றல் என்ன? மொழியின் போதாமை என்ன? இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிக்கொள்ளும்போது எனக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாயின. ஒரு கவிதையை எழுதி முடித்த உடனேயே நான் வேறொருவனாய் ஆகிவிடுகிறேன். என்னுடைய ‘நான்’ பிடிக்கு அகப்படாமல் தொடர்ந்து நழுவிக்கொண்டே இருக்கிறது. எனவே என்னையும் என் வாழ்க்கையும் தொடர்புறுத்தி இந்தக் கவிதைகளை வாசிப்பது உங்களுக்கு எந்த அர்த்தத்தையும் கூட்டாது. ஆகவே நீங்கள் இந்தக் கவிதைகளை நீங்கள் உங்கள் வாசிப்பு, உங்கள் வாழ்க்கைப் பின்புலம் ஆகியவற்றை வைத்து வாசித்து பொருள்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
நான் போர்ஹெஸ், ரில்கே, டி.எஸ்.எலியட், ஜோசெஃப் ப்ராட்ஸ்கி, ஓசிப் மாண்டெல்ஸ்டாம் ஆகியோரின் கவிதைகளை கடந்த முப்பதாண்டுகளில் பலமுறை வாசித்திருக்கிறேன். போர்ஹெஸிடமிருந்து கவிதை சிந்தனைக்குமான ஒரு வடிவம் என்பதைக் கற்றுக்கொண்டேன். எலியட்டிடமிருந்தும் ரில்கேயிடமிருந்தும் கவிதைக்கான தொனியே கவிதையின் இசைமையை தீர்மானிக்கின்றன என அறிந்துகொண்டேன். தொடற்பற்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை தொடர்புறுத்தும் முறைகளை ப்ராட்ஸ்கியும் மாண்டெல்ஸ்டாமும் கற்றுத்தந்தார்கள். இவர்களின் மேற்சொன்ன பாதிப்புகளோடு சங்க அகக்கவிதை, திருக்குறள், சைவ வைணவ பக்தி இலக்கியங்கள், குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் ஆகியவற்றின் பாதிப்புகளும் நனவற்ற நிலையில் என் கவிதைகளில் சேர்ந்திருக்கின்றன.
இந்தக் கவிதைகளை நான் எழுத எழுத அவற்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வந்தேன். அவற்றை வாசித்து உடனடியாக எனக்கு நீண்ட எதிர்வினைகளை பகிர்ந்துகொண்ட நண்பர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் ராஜேந்திரனின் நட்புக்கு இந்தத் தொகுதியை சமர்ப்பிக்கிறேன்.
தன்னுடைய கோட்டுச்சித்திரங்களை இத்தொகுதியில் செர்த்துக்கொள்ள தந்த நண்பர் மு.நடேஷ், அட்டைப்படத்திற்கு தன் ஓவியத்தை தந்துதவிய நண்பர் சி.டக்ளஸ் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
இந்தக் கவிதைகளில் சிலவற்றை ‘மணல்வீடு’ இதழில் பிரசுரித்த மு.ஹரிகிருஷ்ணன், நவீன விருட்சம் இணைய நாளிதழில் பிரசுரித்த அழகிய சிங்கர், இந்தத் தொகுதியை அழகுற உருவாக்கியிருக்கும் ‘தமிழ்வெளி’ சுகன் கலாபன், யுகாந்தன் ஆகியோருக்கும் என் நன்றிகள்.
என் மனைவி ஆங்கியோ, மகன்கள் ஶ்ரீருத்ரன் தெய்வக்குமார், யோகருத்ரன் அட்சிலியா நான் எழுதுவதற்கு வேண்டிய தனிமையைஅளித்தனர். அவர்களால் எனக்குக்கிடைக்கும் மன அமைதி என் பேறு.

No comments: