Monday, June 13, 2022

சாகசப் பிழை- கவிதை- தனி நபர் நாடகம்

 சாகசப் பிழை- கவிதை- தனி நபர் நாடகம்

----

அது ஒரு குளிர்ந்த இரவின் சாகசப்

பிழை கலைத்துவிடலாமென்கிறான்

நீ ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறாய்

தெருவில் மழைநீர் சிறு குட்டைகளாகத்

தேங்கிக்கிடக்க, இரு நாய்கள் ஓடுகின்றன

எங்கே ஒடுகின்றன அவை? 

நீ இருக்கும் உணவகத்தின் அறைக்குள்ளே

பளபளக்கும் அலுமினிய புகைபோக்கிக்குக் கீழே

அடுப்பில் உரித்த கோழியை

வெட்டுகிறான் வெள்ளைத் தொப்பி அணிந்த

சமையற்காரன் கண்ணாடி அறைக்குள் எல்லோரும்

பார்க்கும்படி நிற்கிறான்  

நீ சாக்லேட் மடக்கிய தாளில் என்ன 

பொன்மொழி எழுதியிருக்கிறது என வாசிக்கிறாய்

“பிரபஞ்சம் முழுவதும் யாவும் 

தர்மத்தையே பேசுகின்றன”

உனக்கு மெலிதாக எதுக்களிக்கிறது

வயிற்றையும் நெஞ்சையும் நீவிக்கொள்கிறாய்

அவன் உனக்கு எலுமிச்சை சாறு

கொண்டுவரச் சொல்கிறான் 

அவன் உன் கைகளைப் பற்ற வருகையில்

அவற்றை விலக்கிவிடுகிறாய் 

அது இன்னும் ஆரம்பநிலைதான் 

அரைமணியில் ஆஸ்பத்திரியிலிருந்து 

வீட்டுக்கு வந்துவிடலாமென்கிறான் 

நீ மெதுவாக எழுந்து உன் கைப்பையை

எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்காமல்

பாதி உணவில்

உணவகத்தை விட்டு வெளியேறுகிறாய்

குடை வேண்டுமா வேண்டாமா என்பதாய்

வெளியே மழை தூறிக்கொண்டிருக்கிறது

நீ நனைந்தபடி இலக்கற்று நடக்கிறாய்

யாருக்கு சொந்தம் துளிர்க்கும் உயிர்க்கிளை

உனக்கா எனக்கா அரசுக்கா நிலத்துக்கா கடவுளுக்கா

நீ உனக்கே உனக்கில்லையா 

சிறிய வாலுள்ள மீன் குஞ்சு போல

அது நீந்துவதை நீ பார்த்திருக்கிறாய் எங்கே

வானில் ஒரு எரி நட்சத்திரம் 

விழுந்து மறைவதை பார்க்கிறாய் 

யார் தீர்மானிப்பது அதன் பிறப்பையும் இறப்பையும்

கிளிச் சீட்டு போல ஒன்றை 

உருவி எடுத்து அதை நீ உலகுக்குக்

கொண்டுவரத்தான் வேண்டுமா?

அவன் உன்னைப் பின் தொடர்ந்து வரவில்லையென

உறுதிப்படுத்திக்கொள்கிறாய்

அதனிடம் எப்படிக் கேட்பது

வரத்தான் விரும்புகிறாயா என 

சின்னஞ்சிறு நாய்க்குட்டியை அதன் காதைப்

பிடித்து நீ தூக்கியது உனக்கு நினைவுக்கு வருகிறது

இப்போது உன்னை யார் அப்படி

தூக்கியிருக்கிறார்கள் 

உனக்கு அதிரசம் சாப்பிடவேண்டும் போல இருக்கிறது

கோவில் பிராசாத கடைகளில் கிடைக்கும்

பழையதாய் எண்ணெய் ஊறிப்போய்

கறுத்தும் சிவத்தும் இருக்கும் 

எவ்வளவு தூரம் நடந்து வந்துவிட்டாய்

அந்த இரவின் மதுரமென உன்னுள் இறங்கிய

அந்தத் துளி எதைத் தொட்டு விழித்தது

இதமானது ஆனந்தமானது ஒளிர்வது எதுவோ

அதுவே என்னுள்ளும் விழித்தது

எனச் சொல்லிக்கொள்கிறாய் 

மழை அடித்துப் பெய்யத் தெருவில் 

சொட்ட சொட்ட நனைந்தவாறே நடக்கிறாய்

இது என்னுடையது இது என் முடிவு

இது இப்படியாகவே நடக்கும் என்றவாறே

முலைகள் சுரக்கும் பாவனையில் 

விம்மியவாறே


கடற்கரையோரக் கல்லறைக் கூரையில்  

தேங்கிய மழைநீர்

அலையடிக்கிறது

தானும் ஒரு கடல் என்ற நினைப்பில்

நாமெல்லோருக்குமே ஒரு கல்லறை தேவைப்படுகிறது

அதன் கூரையில் மழைநீர் தேங்கவேண்டும் என ஆசைப்படுகிறோம் 

அந்த தேங்கிய நீரை மற்றவர்கள் 

கண்ணாடி போல பாவித்து 

தங்கள் முகம் காணவேண்டும் என்று ஆசைப்படுகிறோம் ஆசைகளிலேயே மிகப்  பெரிய ஆசை

துக்கங்களில் பெரிய துக்கத்தைக்

கொண்டுவரும் ஆசை 

No comments: