காதலும் அதன் பிற பிசாசுகளும்: காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் கவித்துவ உச்சம்
——
எம். டி. முத்துக்குமாரசாமி
—-
காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் நாவல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த நாவல் “காதலும் அதன் பிற பிசாசுகளும்” (Love and its other demons). அதுவே மார்க்வெஸ் தன் கவித்துவ உச்சத்தைத் தொட்ட நாவல் என்றும் நான் பலமுறை எழுதியிருக்கிறேன். 1982ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு மார்க்வெஸுக்கு வழங்கப்பட்ட பிறகு, அவருடைய “ஒரு நூற்றாண்டுத் தனிமை’ (One Hundred Years of Solitude) நாவலும் அவருடைய மாய யதார்த்த நடையும் உலகப் புகழ் பெற்றன. 1994ஆம் ஆண்டு வெளிவந்த “காதலும் அதன் பிற பிசாசுகளும்” நாவலில் அவருடைய நடை, அவருடைய கூரிய வாசகர்கள் மட்டுமே நுட்பமாக அவதானிக்கக்கூடிய வகையில் ‘ஒரு நூற்றாண்டுத் தனிமை’யிலிருந்து பலவாறு மாறுபட்டு, கச்சிதமாகவும் அளவானதாகவும் மாறியிருந்தது.
இந்த நாவலை மார்க்வெஸ் எழுதுவதற்கான தொடக்கம் அக்டோபர் 26, 1949 அன்று நிகழ்ந்தது. அவர் அப்போது நிருபராக வேலை செய்துகொண்டிருந்த பத்திரிகையின் ஆசிரியர், நூற்றாண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த கிளாரிசன் கன்னியர் மடம் இடிக்கப்பட்டு அங்கே ஒரு ஐந்து நட்சத்திர விடுதி அமையவிருக்கிறது என்றும், அதைப் பார்த்து அங்கே எதுவும் செய்தி கிடைக்கிறதா என்று பார்த்துவர அவரை அனுப்புகிறார். அங்கே கன்னியர் மடத்தின் கல்லறைகள் உடைக்கப்பட, மார்க்வெஸ் எழுதுகிறார், “உயர் பீடத்தின் மூன்றாவது மாடத்தில், நற்செய்திகள் வைக்கப்பட்டிருந்த பக்கத்தில் ஆச்சரியம் காத்திருந்தது. மண்வெட்டியின் முதல் அடியிலேயே கல் உடைந்தது, செம்பின் அடர் நிறத்தில் உயிருள்ள கூந்தல் அருவி போல் கல்லறையிலிருந்து வழிந்தது. ஃபோர்மேன், தொழிலாளர்களின் உதவியுடன், முடி முழுவதையும் வெளிக்கொணர முயன்றார். மேலும் அவர்கள் எவ்வளவு முடியை வெளியே கொண்டு வந்தார்களோ, அவ்வளவு நீளமாகவும் அடர்த்தியாகவும் அது தோன்றியது. இறுதியில் ஒரு இளம் பெண்ணின் மண்டை ஓட்டில் ஒட்டிக்கொண்டிருந்த கடைசி இழைகள் தோன்றின. அந்த மாடத்தில் சில சிதறிய எலும்புகளைத் தவிர வேறு எதுவும் மிச்சமில்லை. உப்புப் படிவுகளால் அரிக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட கல்லில், குடும்பப்பெயர்கள் இல்லாத ஒரு கொடுக்கப்பட்ட பெயர் மட்டுமே படிக்க முடிந்தது: சியர்வா மரியா டி டோடோஸ் லாஸ் ஏஞ்சலஸ். தரையில் பரப்பப்பட்ட அந்த அற்புதமான கூந்தல் இருபத்திரண்டு மீட்டர், பதினோரு சென்டிமீட்டர் நீளமிருந்தது.” இந்த சியர்வா மரியா என்ற 12 வயது சிறுமியை கதாநாயகியாக வைத்து, பதினெட்டாம் நூற்றாண்டின் காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த கொலம்பியா நாட்டின் கரீபியன் கடற்கரை நகரைக் களமாகக் கொண்டு மார்க்வெஸ் எழுதிய நாவலே “காதலும் அதன் பிற பிசாசுகளும்” ஆகும்.
இந்த நாவலின் நிலப்பகுதியை நாம் ஏற்கெனவே ‘ஒரு நூற்றாண்டுத் தனிமையில்’ மார்க்வெஸின் கற்பனையால் புனையப்பட்ட வசிப்பிடமாக, ‘மக்கேண்டோ’ என்ற பெயரில் வாசித்திருக்கிறோம். அந்த உண்மை நகரின் பெயர் அரகடாகா.
காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் 1927 மார்ச் 6 அன்று, வெப்பமண்டல கொலம்பியாவின் வடக்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய வாழைப்பழத் தோட்ட நகரமான அரகடாகாவில் பிறந்தார். வாழைப்பழத் தோட்ட நகருக்கு ரயில் முதன்முதலாக வரும் கதையை ‘ஒரு நூற்றாண்டு காலத் தனிமையில்’ நாம் வாசித்திருக்கிறோம். அவரது தாய், லூயிசா சாண்டியாகா மார்க்வெஸ் இகுவாரான், சியரா நெவாடாவைக் கடந்து கிழக்கில் உள்ள காட்டு குவாஜிரா இந்தியப் பிரதேசத்தில் தோன்றிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை, கர்னல் நிக்கோலஸ் மார்க்கேஸ், ஆயிரம் நாட்கள் போரில் (1899-1902) லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளுக்கு இடையே நடந்த போரில் ஒரு முன்னாள் தோழரைக் கொலை செய்த பின்னர், அரகடாகாவிற்குக் குடியேறியவர். கார்சியா மார்க்வெஸ் பிறந்தபோது, அவரது தாத்தா, நகரத்தின் முன்னணி நபர்களில் ஒருவராக இருந்தார், இருப்பினும் லிபரல்கள் அந்தப் போரில் தோல்வியடைந்திருந்தனர். மறுபுறம், அவரது தந்தை, காப்ரியல் எலிஜியோ கார்சியா, மேற்கில் உள்ள பொலிவார் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தந்தியாளராக (Telegraphist) இருந்தார். இந்தப் பிரதேசம் கொலம்பிய இந்திய கலாச்சாரத்தை விட ஆப்பிரிக்க-கொலம்பிய கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்தது.
நாவலில், கொலம்பிய இந்தியத் தாயான பெர்னாடாவின் நிராகரிப்பினால் கறுப்பின அடிமைகளால் அரவணைத்து வளர்க்கப்படும் சியர்வா மரியா, ஆப்பிரிக்கர்களின் மொழிகளைப் பேசுகிறாள்.
காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் ஒரு வயதுக்கு குறைவான கைக்குழந்தையாக இருந்தபோது, இளம் தம்பதியரான அவர் பெற்றோர், அவரைத் தாத்தா-பாட்டியிடம் விட்டுவிட்டு, தங்கள் இரண்டாவது குழந்தையான லூயிஸ் என்ரிக்குடன், மாக்டலேனா ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள மற்றொரு கரீபியன் கடற்கரை நகரமான பாரன்குவிலாவிற்குக் குடியேறினர். ஏழு வயது வரை, மார்க்வெஸ் தனது தாயையும் தந்தையையும் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பார்த்தார்; அவர்களை மறந்துவிட்டார்: அவர்களின் இடத்தை அவரது தாத்தா கர்னல், அவரது பாட்டி டிரான்குவிலினா, பல மாமிகள் மற்றும் பணியாளர்கள் குழு எடுத்துக்கொண்டனர்.
நாவலில் சியர்வா மரியா கிட்டத்தட்ட இதே போன்ற பல கலாச்சார கறுப்பினச் சூழலில் வளர்கிறாள்.
மார்க்வெஸின் பாட்டி சொன்ன புராணக்கதைகளும் அரகடகா பிரதேசத்தின் இரண்டு வரலாற்று நிகழ்வுகளும் மார்க்வெஸின் படைப்புகளில் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. ஒன்று, ஆயிரம் நாட்கள் போர், இதில் அவரது தாத்தா ஒரு வீரப் பொறுப்பை ஏற்றிருந்தார்; இரண்டாவது, 1928 டிசம்பரில், யுனைடெட் ஃப்ரூட் கம்பெனியின் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை கொலம்பிய இராணுவம் சியனாகாவில் படுகொலை செய்தது. அப்போது மார்க்வெஸ் பதினெட்டு மாத வயதுடைய குழந்தையாக இருந்தார்.
அவரது பாட்டியின் தாக்கமும் மார்க்வெஸின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கது; அவரது உலகக் கண்ணோட்டம் கத்தோலிக்க நாட்டுப்புறக் கதைகளும் உள்ளூர் மூடநம்பிக்கைகளும் கலந்த ஒரு கலவையாக இருந்தது. அதே கண்ணோட்டத்தை இந்த நாவலில் வரும் கன்னியர் மட கன்னிகாஸ்திரீகளும் அந்த மடத்தின் மடாதிபதியும் கொண்டிருக்கின்றனர்.
1948 ஏப்ரலில், கொலம்பியாவின் மிகவும் கவர்ச்சிகரமான அரசியல்வாதியான லிபரல் பாப்புலிஸ்ட் ஜார்ஜ் எலியேசர் கைடானின் படுகொலையைத் தொடர்ந்து நடந்த அசாதாரண கிளர்ச்சியான ‘பகோடாசோ’வால், ‘வியோலென்சியா’ எனப்படும் கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அறிவிக்கப்படாத உள்நாட்டுப் போர் தொடங்கியது. பல்கலைக்கழகம் மூடப்பட்டது, கார்சியா மார்க்வெஸ் தன் சொந்த கடற்கரைப் பிரதேசமான, பழைய காலனிய நகரமான கார்டகேனாவிற்கு, அதன் இப்போது மங்கிவிட்ட பிரமாண்டத்திற்குத் திரும்பினார். அங்கு அவர் சமீபத்தில் நிறுவப்பட்ட லிபரல் செய்தித்தாளான ‘எல் யுனிவர்சல்’-இல் நிருபராகப் பணியில் சேர்ந்தார். இந்தக் கடற்கரை நகரமான கார்டகேனாவில்தான் ‘காதலும் அதன் பிற பிசாசுகளும்’ நாவலின் கதை நடக்கிறது. கார்டகேனா உண்மையில், கொலம்பியாவின் தலைநகரான பொகோடாவில் பல்கலைப் படிப்பை முடித்திருந்த மார்க்வெஸுக்கு மிகவும் பாரம்பரியமாகவும், பழமைவாதப் பிடியில் சிக்கியிருந்த நகரமாகவும் தோன்றியது.
1982இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை வெல்லும் வரை மார்க்வெஸ் தனது புனைகதைகளில் அதிகாரம், தனிமைப்படுத்தப்பட்ட வரலாறு, அரசியல் வன்முறை ஆகிய கருப்பொருள்களில் கவனம் செலுத்தியிருந்தார். அதன் பிறகு, அவரது வெளிப்படையான அரசியல் போராட்டத்திலிருந்து விலகுவதை சுட்டும் விதமாக, அவர் தனிப்பட்ட உறவுகளைப் பற்றி, குறிப்பாகக் காதலைப் பற்றி எழுதுவதற்குத் திரும்பினார். இது அவரது முந்தைய படைப்புகளில் பெரும்பாலும் மையப்படுத்தப்டாத ஒரு கருப்பொருளாக இருந்தது. 1985இல், அவர் தனது மிகவும் பிரபலமான “காலராவின் காலத்தில் காதல்” (Love in the Time of Cholera) நாவலை வெளியிட்டார். இது 1920களில் அவரது பெற்றோரின் நாடகத்தனமான காதல் பற்றிய கதைகளால் ஓரளவு ஊக்கமளிக்கப்பட்ட ஒரு வரலாற்று நாவலாகும். இதன் மூலம், அவர் நோபல் விருதால் தன்னுடைய படைப்பாற்றல் எந்த முடிவுக்கும் வந்துவிடவில்லை என நிரூபித்தார்.
மார்க்வெஸின் நாவல்களான “காலராவின் காலத்தில் காதல்”, “காதலும் அதன் பிற பிசாசுகளும்”, “முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட மரணத்தின் கதை” ஆகியவை அதிகாரப்பூர்வமாக ஒரு காதல் முத்தொகுப்பு (trilogy) இல்லை. ஏனெனில் அவை ஒரு ஒருங்கிணைந்த கதைப்பின்னலுடன் தொடராக எழுதப்படவோ அல்லது விற்பனை செய்யப்படவோ இல்லை. இருப்பினும், அவற்றின் பொதுவான கருப்பொருள்கள் இணைந்து இருப்பதால், வாசகர்களும் அறிஞர்களும் இவற்றை ஒன்றாக விவாதிக்கின்றனர்:
“முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட மரணத்தின் கதை” (1981): இது முதன்மையாக ஒரு காதல் கதை இல்லை என்றாலும், இதில் பயார்டோ சான் ரோமான், அஞ்சலா விகாரியோ, கொலை செய்யப்பட்ட சாண்டியாகோ நாசர் ஆகியோரின் ஒரு வகையான காதல் முக்கோணம் உள்ளது. இந்த நாவல் கௌரவம், துரோகம், சமூக எதிர்பார்ப்புகளின் விளைவுகளை மையமாகக் கொண்டு, காதலை ஒரு சோகமான துன்பியல் நிகழ்வுகளின் தூண்டுதலாகச் சொல்கிறது.
“காலராவின் காலத்தில் காதல்” (1985): இது காதலின் புரிந்துகொள்ள முடியாத தன்மையை விரிவாக ஆய்வு செய்கிறது. இதில் ஃபிளாரன்டினோ அரிசா, ஃபெர்மினா டாசா மீது கொண்டிருக்கும் வாழ்நாள் காதல், பல தசாப்தங்களை உள்ளடக்கியது. இது காதலின் நீடித்த தன்மை, வயதாகுதல், சமூகக் கட்டுப்பாடுகளின் தன்மை, மீறல் ஆகியவற்றை ஆராய்கிறது.
“காதலும் அதன் பிற பிசாசுகளும்” (1994): சியர்வா மரியா என்ற இளம் பெண்ணுக்கும், பாதிரியார் கயெடெனோ டெலௌராவுக்கும் இடையேயான தோல்வியடைந்த காதல் கதையை ஆராய்கிறது. இது மூடநம்பிக்கை, மதம், காலனிய அடக்குமுறை ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்டது. காதல் தீவிரமானது ஆனால் சோகமானது; தேவாலயம், சமூகப் பாகுபாடு போன்ற வெளிப்புற சக்திகளால் காதல் சிக்கலாவதைச் சொல்கிறது.
மார்க்வெஸின் காதல் நாவல்களில் காஃப்காவின் செல்வாக்கு மிகவும் அதிகம், ஆனால் அதை மார்க்வெஸின் விசேஷமான நடையால் உடனடியாகக் கண்டுபிடிக்க இயலாது. தனிமை, பிறப்பும் இறப்பும், இயற்கை-சகமனிதர்-கடவுள்-தன்னிலை ஆகியவற்றிலிருந்து அந்நியமாதல், தனிநபர் ஆன்மிகத்துக்கான தேடல், தனிமனித சுதந்திரம் என்றால் என்ன என்ற கேள்வி, காதலின் அருமை, சரித்திரத்தின் அபத்தம் என்பதாகிய இருத்தலியல் பிரச்சனைகள் இருவருக்குமே பொதுவானவை. காஃப்காவின் எழுத்து முறை நுட்பமானது; அருவமானது; நீதியற்ற உலகில் தன்னுடைய உணர்கொம்புகள் அடித்து நொறுக்கப்படுவதையும், தான் எப்பொழுதும் ஏதேனும் ஒரு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதையும் மையமாக வைத்து கதை சொல்வது; அடங்கிய தொனியாலானது. மார்க்வெஸின் நடை அலங்காரமானது, விசேஷமானது, அதிசய சம்பவங்களால் பீடிக்கப்படுவது; தூலமான சம்பவங்களின் வழி கதை சொல்வது, உச்ச ஸ்தாயி தொனியாலானது. காஃப்கா ஒரு அருவ ஓவியர் என்றால் மார்க்வெஸ் ஒரு இம்ப்ரஷனிச ஓவியர்.
இருப்பினும், காஃப்காவின் ஒற்றைக் கதையே மார்க்வெஸின் நடையையும் உலகப்பார்வையையும் தீர்மானிப்பதாக இருந்தது. பல பேட்டிகளில், மார்க்வெஸ் தான் காஃப்காவின் ‘உருமாற்றம்’ சிறுகதையை முதன்முதலாக வாசித்தபோது, அதில் கிரெகர் சாம்சா ஒரு பூச்சியாக உருமாறுவதைப் படித்து ஒரு சிலிர்ப்புக்கு உள்ளானதாகவும், “இப்படியெல்லாம் எழுதலாம் என்றால் நான் எப்போதோ இப்படியெல்லாம் கதைகள் எழுதியிருப்பேனே” என்று சிறுகதைகள் எழுத ஆரம்பித்ததாகவும் சொல்லியிருக்கிறார். காஃப்கா எழுதிய ஒரே மாய யதார்த்த வரி உண்டென்றால் அது ‘உருமாற்றம்’ கதையின் ஆரம்ப வரிதான்.
காஃப்காவிய அருவ அபத்தம், மார்க்வெஸிடம் சம்பவங்களின் வழி நடந்தேறுகிறது. மார்க்வெஸின் அனைத்து நாவல்களையும் வைத்து இதை விளக்கலாம் என்றாலும், ‘காலராவின் காலத்தில் காதல்’ நாவலில் இதற்கான உதாரண காஃப்காவிய அபத்த சம்பவங்கள் பல இருக்கின்றன. நாவலில் ஃபிளாரன்டினோ அரிசாவும் ஃபெர்மினா டாசாவும் பதின்பருவ காதலர்களாக இருக்கிறார்கள். கடிதங்கள் எழுதியும் சந்தித்துமாய் காதல் உன்மத்தத்தை அடைகிறது. ஃபெர்மினாவின் தந்தை காதலர்களைப் பிரிப்பதற்காக அவளை வேறு ஊருக்கே அனுப்பிவிடுகிறார். அப்படிப் பலவந்தமாய்ப் பிரிக்கப்படுகையில், ஃபெர்மினா தன் நீண்ட கூந்தல் சடையை வெட்டி, தன் காதல் பரிசாக அரிசாவுக்கு அனுப்புகிறாள்.
“காதலும் அதன் பிற பிசாசுகளும்” நாவலில், பிறந்ததிலிருந்து வெட்டப்படாத சியர்வா மரியாவின் பொன்னிறக் கூந்தல், கலப்பினத்தவரின் காட்டியல்பு, அடக்கப்பட்ட அரசியல் நனவிலி ஆகியவற்றின் குறியீடாக வருகிறது.
அரிசா, ஃபெர்மினாவுக்குத் தன் காதல் கடிதங்களைத் தந்தி மூலம் அனுப்பிக்கொண்டே இருக்கிறான். பல வருடங்களுக்குப் பிறகு ஊருக்குத் திரும்பும் ஃபெர்மினாவைப் பார்க்க நகரச் சந்தைக்கு வந்து, அவளை எதிர்பாரா மகிழ்ச்சியில் ஆழ்த்த விரும்பும் அரிசா, அவளைத் தூரத்திலிருந்து கவனிக்கிறான். ஃபெர்மினாவை நெருங்கி அவள் காதுகளில் அவர்கள் இருவருமே அறிந்த அவளின் செல்லப்பெயரால் அழைக்கிறான். திரும்பிப் பார்க்கும் ஃபெர்மினா, அடுத்த நொடியே அரிசாவை ‘நான் உன்னைக் காதலிக்கவில்லை’ என நிராகரிக்கிறாள்.
அதன் பிறகு, தன் கூந்தல் சடை உட்பட, தான் அரிசாவுக்குக் கொடுத்த அத்தனை பரிசுப் பொருள்களையும் திரும்ப வாங்கிக்கொள்ளும் ஃபெர்மினா, உடனடியாகவே டாக்டர் ஜுவனெல் உர்பினோவை மணமுடித்துவிடுகிறாள். ஃபர்மினா ஏன் அரிசாவை நிராகரித்தாள் என்பதற்கு நாவலில் எந்த விளக்கமும் தரப்படுவதில்லை. நாமாக அது ஒரு காஃப்காவிய அபத்தம் என்று பொருள் கொள்ள வேண்டியதுதான்.
“காதலும் அதன் பிற பிசாசுகளும்" நாவலில், இளம் கதாநாயகியான சியர்வா மரியாவின் அப்பாவித்தனத்தை, ஒரு அரசியல் உருவகமாக விளக்கலாம். இது கிறிஸ்தவ/ஐரோப்பிய காலனியத்திற்கு எதிரான கொலம்பிய அப்பாவித்தனத்தின் குறியீடாக இருக்கிறது. 18ஆம் நூற்றாண்டு காலனிய கொலம்பியாவைப் பின்னணியாகக் கொண்ட இந்த நாவல், சமூக, மத, கலாச்சார அடக்குமுறைகளைச் சித்தரிக்கிறது. சியர்வாவின் அப்பாவித்தனம், காலனியத்தால் அழிக்கப்பட்ட உள்ளூர் கலாச்சாரத்தின் உருவகமாகவும், நிறுவன கிறிஸ்தவத்தின் அரக்கத்தனத்தால் அடக்கப்பட்ட உண்மையான மனித உணர்ச்சிகளின் குறியீடாகவும் இருக்கிறது. சியர்வா மரியா என்ற குழந்தைப் பெண் இந்த நாவலில் அனுபவிக்கும் நெஞ்சை உலுக்கும் துயரங்கள், காஃப்காவின் நாவலில் என்ன ஏது என்று அறியாதபடிக்கு குற்ற விசாரணைக்கும் அருவ வன்முறைக்கும் உட்படுத்தப்படுவதற்குச் சற்றும் குறைந்ததில்லை. சியர்வாவுக்கும், கயெடானோவுக்கும் இடையிலான காதல், காலனித்துவ அடக்குமுறையை மீற முயலும் ஒரு உருவகமாகவும் பார்க்கப்படலாம். இவர்களின் காதல், மதப்பற்று, சமூகக் கட்டுப்பாடு ஆகியவற்றால் தடைசெய்யப்பட்ட காதலாகிறது. இது உள்ளூர் மக்களின் இயல்பான வாழ்க்கை முறையை ஐரோப்பியர்கள்/கிறிஸ்தவர்கள் தடைசெய்ததை ஒத்தது. கயெடானோ, ஒரு கிறிஸ்தவ பாதிரியாராக இருந்தாலும், சியர்வாவின் அப்பாவித்தனத்தால் ஈர்க்கப்படுகிறார். இது, ஐரோப்பியர்கள் உள்ளூர் கலாச்சாரத்தின் அழகை உணர்ந்தாலும், அவர்களின் மதப்பற்று அதை அழித்ததைச் சொல்வதற்கான கலவையான உணர்ச்சியைப் பதிவு செய்வதற்கான அடித்தளமாகிறது. சியர்வா மரியாவின் வீட்டில் வேட்டை நாய்கள் சதா உலவிக்கொண்டும் குரைத்துக்கொண்டும் இருக்கின்றன.
இவற்றையெல்லாம் விட, மார்க்வெஸ் இந்த நாவலில் தலைசிறந்த கதைசொல்லியாக மிளிர்கிறார் என்பதே முக்கியமானது. அளவாகவும், நுட்பமாகவும் பயன்படுத்தப்பட்ட மாய யதார்த்த நடை, செய்தியைச் சொல்லும் பத்திரிகையாளரின் விலகலான பார்வை, கொலம்பியாவின் வெப்பமண்டலக் கடற்கரையும் அதன் கட்டிடங்களும் -குறிப்பாக அதன் கன்னியர் மடம்- நாவலில் கதாபாத்திரங்கள் போலவே வருவது, நாவல் முழுக்க உள்ளோடும் அபத்த நகைச்சுவை, இதனுள்ளாகப் பொதித்து வைக்கப்பட்ட நிறைவேறவே இயலாத காதல் என, மீண்டும் சொல்கிறேன், இந்த நாவல் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தன் கவித்துவ உச்சத்தில் எழுதிய படைப்பு.
No comments:
Post a Comment