Saturday, December 27, 2025

பெயரிலி

 இந்த வருடம் செப்டம்பர் மாதம் எனக்கு பௌத்த தியானம் சொல்லிக்கொடுத்த துறவி கேங்டாக் நகரில் இவ்வுலகு நீங்கினார்.  எனது தந்தைக்குப் பிறகு என்னைக் கடந்த இருபத்தைந்து வருடங்களாக அரவணைத்துக்கொண்டவர். நண்பர்களின் மறைவு உண்டாக்கும் மனக்கலக்கத்தைப் போல அவருடைய மறைவு துக்கத்தை எனக்கு உண்டாக்கவில்லை. அவருக்கு வயது தொண்ணூறைத் தாண்டியிருந்தபடியால்  அவர் பறந்து செல்வது (உதிர்வது அல்ல) தவிர்க்க இயலாதது என்பதை எனக்கும் அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கும் வலுவாக அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மனவலிமை குன்றியவனாக நான் இருந்தேன். தியானம் தவிர அவர் எனக்குக் கற்பித்தவைகள் ஏராளம். அவற்றில் முதன்மையானது அடையாளங்கள் அனைத்தையும் துறந்து வாழ்தல். ஒவ்வொரு மனித வாழ்வும் தனித்துவமானது எனவே பெரிய ஜனத்திரளில், தாவர, ஜீவ சங்கமத்தில் நாமும் ஒரு துளி எனவே மற்ற ஜீவ ததும்புதல்களுக்கு நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்களோ உயர்ந்தவர்களோ அல்லர். ஜீவ அலை ஒன்று எழுந்து அடங்குவதில் நாம் சின்னஞ்சிறு துளியாகப் பங்குபெறுகிறோம் என்ற எண்ணம் நம்மை விட்டு என்றும் நீங்கலாகாது.  மரம், செடி, கொடி,  மிருகங்கள், பறவைகள், பொருட்கள், மனிதர்கள் என எல்லாவற்றோடும் நமக்கு ஏற்படும் உறவுகள், தற்காலிகமான ரயில் பயண உறவாக இருந்தாலும் சரி, நீண்டகால உறவாக இருந்தாலும் சரி  அவை முக்கியமானவை, நமது கவனத்தையும் ஆழ்ந்த மன விழிப்பையும் absolute faith ஐயும் கோருபவை. பற்றுதலை அல்ல. கலை, இலக்கியம், தத்துவம், தர்க்கம் அனைத்தும் உண்மையை அறிவதற்கான கருவிகள்.  உண்மைக்காக மட்டுமே ஒருவன் போராட வேண்டும்; அப்படிப் போராடினால் கர்ம வினை சேகரமாகாது.  பெயரிலியாகவும் ஏதிலியாகவும் தன்னை அறிவித்துக்கொண்டு வாழ்ந்த அவரைப் பற்றிய ஒரு நாவலை நான் வரும் வருடங்களில் எழுதக்கூடும்.


No comments: