குஸ்டாஃப் மெஹ்லருடைய ஐந்தாவது சிம்ஃபொனியில் வாத்தியக்கருவிகளின் இசைக்குப் பிறகு இடையில் மாட்டுக்கழுத்தில் மாட்டியிருக்கும் மணிகள் குலுங்கும் ஓசை வரும். ஐந்தாவது சிம்ஃபொனிக்குப்பிறகு மெஹ்லரின் இசைக்கோவைகளில் இவ்வாறாக ‘உயர்ந்த சப்தங்களையும்’, ‘தாழ்ந்த சப்தங்களையும்’ அடுத்து அடுத்து ‘இசைத்து’ நாடக முரணை உருவாக்குவது அவருடைய முறைமைகளில் ஒன்றாகிவிட்டது. இது மேற்கத்திய இசையில் எதிர்ப்புள்ளிகள் (counterpoints) எனப்படும் தன்னளவில் சுதந்திரமான வேறுபட்ட டியூன்களை ஒன்று மாற்றி ஒன்று இசைப்பதற்கு ஒப்பானது. எதிர்ப்புள்ளிகளால் அதிகமும் ஆன இசைக்கோவைகளும் மெஹ்லரால் ஐந்தாவது சிம்ஃபொனிக்குப் பிறகு இயற்றப்பட்டன.
தமிழ்த் திரைஇசையில் இளையராஜா இசையமைத்த பல பாடல்களில் இசையையும் தினசரி சப்தங்களை மாறி மாறி கோர்வைப்படுத்தி பாடலுக்குள்ளாக நாடக முரணை நிகழ்த்தியிருப்பதைக் கேட்கலாம். “கொத்து மல்லிப் பூவே, புத்தம் புது காற்றே வாசம் வீசு, வந்து வந்து ஏதோ பேசு” என்ற பாடலில் துணிதுவைக்கிற ஓசை இடையில் வரும். “ராக்கம்மா கையைத் தட்டு” பாடலில் “ஜாங்குஜக்கும்ஜக்கும்ஜக்கும் ஜா” என்ற ஓசையும் “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்” என்ற தேவாரமும் மாற்றி மாற்றிக் கோர்வையாக்கபட்டிருக்கும். “சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி செல்லம்மா பேசவும் தோணுதடி” பாடலில் கிழவி வெற்றிலை இடிக்கிற சப்தம், புகையிலை அதக்குகிற ஓசை, பல சிறார்கள் ஒரு சிறுவனின் தலையில் தட்டுகிற ஓசை என பல சப்தங்கள் பாடலுக்குள் வரும். இந்த ‘உயர்ந்த’ இசை, ‘தாழ்ந்த’ தினசரி சப்தங்கள் இவற்றை சமன்படுத்தாமல் ஒன்றுக்கொன்று எதிராக இளையராஜா பயன்படுத்துவதால் நாடகீய முரண் நமக்கு அனுபவமாகிறது.
கவிதையில் ஒரு சீரிய வரிக்கு அடுத்தாற்போல தினசரி பேச்சுமொழி ஒன்றை இணைத்து நாடகீய தருணங்களை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் டி.எஸ்.எலியட். அவருடைய ‘பாழ்நிலம்’ நீள்கவிதையில் பிருகாதாரண்ய உபநிடதத்திலிருந்து மேற்கோளும் வரும் Jug jug to dirty ears என்று புணர்ச்சியைக் குறிக்கும் கொச்சையும் வரும்.
நாடகத்தைப் பொறுத்தவரை, எதிரிணை கவிதா வரிகளுக்கு ஒரு நடிகன் நடிக்கப் பழகுவதற்கு முன்பு சிறு சிறு ஒலிகளுக்கு எப்படி எதிர்வினை புரியவேண்டுமென நடிகன் நடிக்கப்பழகவேண்டும். என்னுடைய கவிதைகளில் நிறைய சிறு ஒலிகளை எழுதியிருக்கிறேன். சரியாக அடைக்க மறந்த குழாயிலிருந்து நீர் சொட்டுவது, பாத்திரங்கள் கை தவறி விழுவது, ஈனஸ்வரத்தில் திறக்கும் கதவுகள், விசை குறைந்து சுற்றும் மின்விசிறி, சீனக் குழல் காற்றிசைப்பான்கள் எழுப்பும் குமிழொலி, கோவில்மணியோசை என பல சப்தங்களை எழுதியிருக்கிறேன். அவை அனைத்துமே பிரேமைகளை, hallucinatory effectsஐ உருவாக்க கவிதைகளில் வந்திருக்கின்றன. இவை தவிர இசை அகவய அனுபவமாவதையும் ஒரு நடிகனால் நடித்துக்காட்ட முடியவேண்டும். இசை அகவயமாவது பற்றி நான் எழுதிய கவிதைகளில் இரண்டு நாடகப்பயிற்சிக்கு உதவக்கூடும்.
———
டாகர் சகோதரர்களின் துருபத்
——
டாகர் சகோதரர்களின் துருபத்
மெல்லிய மொழி முந்திய
கொஞ்சும் சப்தங்களாக
கேவல்களாக ஒலிக் கசங்கல்களாக
துணுக்கொலிகளாக
அவ்வொலிகளுக்கிடையேயான
மதுர மௌனங்களாக
என் மனதில் அடியாழத்திலொரு
கர்ப்பகிரக மணற்கேணி
தொட்டு தோண்டத் தோண்ட
ஊறும் நீர்த்தாரையில்
பருகியும் களித்தும் திளைத்தும் குளித்தும்
இதோ இதோ நஸீர் ஜாகிருத்தீன்
இதோ இதோ நஸீர் ஃபய்யாஸுத்தீன்
என ஒரு சோதர மென் இழை
இன்னொரு சோதர என் இழையில் நெசவாக
என்னுள் நிரம்பித் தழும்புகிறது
நள்ளிரவில் ஒரு
அமிர்தகலசம்
————
சுபின் மேத்தா நடாத்திய
—-
சுபின் மேத்தா நடாத்திய
ஷோப்பெய்னின் இரவின்
இசைக்கோவைகளை என்றோ பரிசளித்தாய்
இன்றும் கூட
சுபின் மேத்தாவின் கையசைவுகளில்
நீச்சல் குளத்தில் குழந்தை தவறவிட்ட
ஒரு கரடி பொம்மை நீரில்
மூழ்கிக்கொண்டிருக்கிறது
அதிரகசியம் எனவும்
பரமானந்தம் எனவும்
அதனை சூரியக்கதிர்கள்
நீர்மூழ்குதலிலும்
பின் தொடர்கின்றன
பொம்மையின்
நிலைத்த கண்களிலும் அரவணைக்க
விரித்த கைகளிலும்
பகல்கள் இரவுகளின் ஏக்கங்களாக
அது கனவின் லயமெனவே
அமிழ்கிறது பளிங்கு நீலத்தில்
பெரிய புசுபுசு பட்டிழை
உன் தழுவுதலின் கதகதப்பு
நீரடி ஒளித்துகள் தரைவிரிப்பில்
என் பரிநிர்வாணம்
——
Chopin’s Nocturnes
No comments:
Post a Comment