நான் சமையலறைப் பக்கம் வெந்நீர் வைக்கக்கூட எட்டிப் பார்த்ததில்லை என்றாலும் எனக்கு சமையல் குறிப்புகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். மெய்யியல் நூல்களும் அப்படித்தானே எழுதப்படுகின்றன? ‘ஆவக்காய்: ஒரு தெலுங்கு சாகசக் கதை’, ‘கொரிய முழுக்கோழி சமைப்பதெப்படி, சாப்பிடுவதெப்படி: காவியம்’ ஆகிய எழுதப்பட்ட குறிப்புகளும் எழுதப்போவதாக மட்டுமே சொன்ன ‘பஞ்சாபிய கரம் மசாலா, ஒரு நாடோடிப்பாடல்’ ஆகியனவும் எனக்குப் புகழையும் புதிய வாசகர்கள் பலரையும் சம்பாதித்துத் தந்திருக்கின்றன. பல Yummie Recipes broadcast channels என்னை நட்சத்திர எழுத்தாளனாக எழுதும்படி வரவேற்றிருக்கின்றன. ஃபேஸ்புக் வேறு "உன்னிடம் இப்படி ஒரு திறமை இருந்திருக்கிறதே, இதை வைத்துக்கொண்டா குறுந்தொகைக்கு உரை எழுதி நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறாய்" எனக் கடிந்துகொள்கிறது.
உண்மையில் என் சுயசரிதை உணவுப் பதார்த்தங்களின் நினைவுகளால் நிரம்பியதுதான். கண்ணை மூடினால் எனக்கு முதல் முத்தத்தை விட வள்ளியூரில் சாலையோர குடிசை உணவகத்தில் எப்போதோ சாப்பிட்ட மென்பஞ்சு இட்லிதான் நினைவுக்கு வருகிறது. அதே வள்ளியூர் இட்லி போல பஞ்சு பஞ்சாய் இட்லி செய்ய இட்லி மாவு அரைக்கும்போது அதில் நான்குக்கு ஒன்று என்ற வீதத்தில் ஜவ்வரிசியை ஊற வைத்து சேர்க்கவேண்டும் என்று ஒரு குறிப்பு படித்தேன். அப்படியெல்லாம் இஷ்டத்துக்கு கவிதை எழுதுவது போல எதையும் எதோடு சேர்த்தும் உச்ச அழகினை சமையல் குறிப்புகளில் உருவாக்க முடியாது. நனவிலிக்கும் சந்தர்ப்பங்களின் வசக்கேடுகளுக்கும் கவிதையில் இருக்கும் பிரம்ம முகூர்த்தங்கள் சமையலிலும் எனவே சமையற் குறிப்புகள் எழுதுவதிலும் இல்லை.
ஒரு முறை ஆக்டேவியா பாஸ், சர்ரியலிசத்தின் பிதாமகரான ஆந்த்ரே ப்ரெத்தோனைப் பார்க்கப்போனார். பாரீஸில் தன்னுடைய அறையில் எழுதிக்கொண்டிருந்த ப்ரெத்தோன் பாஸை வெளியில் உட்கார வைத்துவிட்டார். ப்ரெத்தோன் ஆவேசமாக எழுதுவதை பாஸ் பார்த்துக்கொண்டிருந்தார். ப்ரெத்தோன் எழுதி, திருத்தி முடித்துவிட்டு வெளியே வந்து பாஸுடன் சாப்பிடப் போனபோது பாஸ் "நீங்கள் என்ன எழுதிக்கொண்டிருந்தீர்கள்" என்று கேட்டார். "நான் ஆட்டோமேட்டிக் எழுத்தை பயிற்சி செய்துகொண்டிருந்தேன்" என்று ப்ரெத்தோன் பதிலளித்தார். "ஆனால் நீங்கள் அடிக்கடி அடித்து திருத்துவதைப் பார்த்தேனே" என்று பாஸ் ஆச்சரியத்தோடு வினவினார். அதற்கு ப்ரெத்தோன் "நான் வேண்டிய அளவு ஆட்டோமேட்டிக் எழுத்து ஆட்டோமேட்டிக்காகக் கைகூடி வரவில்லை" என்று பதிலளித்தார். நனவற்றது என்பதற்கும் கூட நனவின் அளவு என்று ஒன்று வேண்டியிருக்கிறது என்பது என்ன ஒரு நகை முரண்!
நனவற்றது ஆச்சரியகரமாகச் சேர்ப்பதன் அழகு திகைக்க வைக்கக்கூடியது. சார்ல்ஸ் சிமிக்கின் (Charles Simic) கீழ்வரும் கவிதை வரிகளை வாசியுங்கள்:
“அவன் சில காகிதங்களைக் கிழிக்கிறான்
காடு
கிசுகிசுக்கிறது
தொலைபேசிப் புத்தகம்
ஒரு குழந்தையின் இதயம்
எலிக்கு ஒரு வளை இருக்கிறது
கச்சேரி பியானோ
தன் கள்ளமின்மையை இழந்துவிட்டது
என் தாயின் துஷ்டி ஆடை.”
இப்படிப்பட்ட கவிதா சேர்க்கைகளில் உருவாகும் அர்த்தம் பலவகைப்பட்டாதாகவும் வாசக கற்பனையை விரிவுபடுத்துவதாக இருப்பதையும் வாசிக்கலாம். இது போல ஜேம்ஸ் டாட்டேயின் (James Tate) “சக்கர நாற்காலி வண்ணத்துப்பூச்சி”, பில் நாட்டின் (Bill Knott) ‘ரேசர்பிளேடு சேர்ந்திசை’ போன்ற சேர்க்கைகளும் திகைக்கவைக்ககூடியவை. இவற்றில் வாசக மனதைச் சுரண்டி, கன்னத்தைக் கிள்ளி, காதைத் திருகி பணிய வைக்கக்கூடிய நனவின் தந்திரங்கள் இல்லை.
நனவின் தந்திரங்கள் என்பவை எண்ணற்றவை என்பதையும் அவற்றில் சிலவற்றையேனும் இங்கே சுட்டிக்காட்டுவதும் அவசியம் என்று நினைக்கிறேன். வட்டார வழக்கு சொற்களைக் கையாண்டு வாசக மனதில் பிராந்திய உணர்வைத் தூண்டுவது, "அது எவ்வளவு அழகு தெரியுமா" என சுய ஆராதனையில் வாசகனை ஈடுபடச்செய்வது இந்த நனவின் தந்திரத்தில் தலையாயது. கூடவே ஜாதிய உணர்வு, "நம் தெருமுக்குக்கடை தேநீர் எப்படி உலகிலேயே உயர்ந்தது தெரியுமா" என்ற பீற்றல், குடும்ப உறவுகளை முன்வைத்து பேசி அவையே உயர்ந்த லட்சியங்கள் என்று அளப்பதும் வாசக மனதின் தெரிந்த செண்டிமெண்டுகளைச் சுரணடும் நனவின் தந்திரங்கள். பின்னே மழை, காதல், பெண்ணழகின் கவர்ச்சி நெகிழ்தல்கள், உருகுதல்கள், "நான் கவிஞன் தெரியுமா" என்ற சோக நாடகம் ஆகிய தந்திரங்களைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அனைவருக்கும் அவை தெரிந்தவைதான்.
நனவற்றதையும் சந்தர்ப்பங்களின் தற்செயல்களையும் எழுத்தில் அனுமதிப்பது நாம் அறியாதவற்றிற்கான அழைப்பிதழ்; அது படைப்பின் சுதந்திரத்தை முழுமையாகக் கோருவது. சமையலோ பரிசோதித்து அறிந்ததின் தெரிந்ததின் அனுபவ விநியோகம். அங்கே முதல் ஆதி கண்டுபிடிப்பே முக்கியம். ஆவக்காய் ஊறுகாய்க்கு மாங்காயைக் கொட்டையோடு சேர்ந்து வெட்டவேண்டும் என்று கண்டுபிடித்தது போல; அல்லது குருவாயூர் பால் பாயாசத்தில் பச்சை ஏலக்காயை சேர்க்கவேண்டும் என்று பாலகிருஷ்ண நாக்கினால் கண்டுபிடித்தது போல; அல்லது மீன் வறுவலில் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு அமிர்தம் என்பதைக் கண்டுகொண்டது போல. சமையலில் அனைத்துமே முதல் கண்டுபிடிப்புகளின் பவித்திரங்களால் நிரம்பியது. பின்னர் வருவது அனைத்தும் திரும்பச் செய்தல்கள்தான். நனவின் கண்டுபிடிப்புகள் அதிர்ஷ்டங்களினால் கண் சிமிட்டி ஆசீர்வதிக்கப்படுபவை; நனவற்றதன் அழகோ அதி சுதந்திரத்தின் அணைப்பினால் கூடி வருவது.
நனவுக்கும் நனவற்றதற்கும் இடையே ஒரு நிலை இருக்கிறது. அது மனப்பிரம்மைகளால் ஆனது. நான் சமீபத்தில் எழுதிய கவிதையொன்றில் சூறாவளியின் கூடுகட்டி முட்டைகளிட்ட புறாவொன்றைத் திரும்பிப் பார்க்கும்போது அதன் குஞ்சுகளை அவற்றாலும், அவற்றின் அலகுகளாலும், அவற்றின் இறகுகளாலும் எண்ணி ஒவ்வொரு முறை எண்ணும்போதும் வேறு வேறு எண்ணிக்கை வருவதாகவும் எழுதியிருந்தேன். அதை அடூர் கோபாலகிருஷ்ணனின் அனந்தரம் படத்தில் வரும் சிறுவன் குளத்தின் படிக்கட்டுகளை எண்ணுவதற்கும் ஒப்பிட்டிருந்தேன். அத்திரைப்படத்தில் படத்தின் கதாநாயகன் அஜயனுக்கு நிஜம் எது பொய் எது, கனவு எது கற்பனை எது யதார்த்தம் எது என்று தெரியாமல் குழம்பிவிடுகிறது. தாஸ்தோவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளின் கதாநாயகன் அப்படிப்பட்டவன்தான்; கென் கேசியின் ‘One who flew over cuckoo’s nest’ இன் கதாநாயகனும் அப்படிப்பட்டவனே. ஹருகி முராகமியின் நாவல்களிலும் சிறுகதைகளும் மனப்பிரம்மமையின் வழி சொல்லப்படுபவைகளாகவே இருக்கின்றன. எனது கவிதைகளின் இந்த அம்சத்தையே அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விமர்சனம் எழுதிய ஸ்டெஃபி புர்சோவா ‘Hallucinations as Epistemic Doubt” என்று குறிப்பிடுகிறார்.
எனது புறாக்குஞ்சுகளை எண்ணும் கவிதை,
“சூறாவளியின் அழிவை
எதிர்த்து வென்ற
ஒற்றை அலகின் மிகுதி
உயிரோசையின் இனிமை”
என்று முடிகிறது. இதில் சொல்லப்படும் உயிரோசையின் இனிமை பிரம்மையானாலும் உண்மையானால் எவ்வளவு அழகு, அதேசமயம் அது பிரம்மையின் பொய்யானால் அது எவ்வளவு பெரிய துயரம். இரண்டில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சொல்வது கவிதையின் விதி.
என்னை நனவில் தொடர்ந்து இருத்திக்கொள்ளவே சமையல் குறிப்புகளை தொடர்ந்து எழுத விரும்புகிறேன். சமையலின் முதல் கண்டுபிடிப்புகளை எழுதி எழுதி நனவுபூர்வமாகவே அடைந்துவிடலாமென்றும் நம்புகிறேன். சமையற் குறிப்புகளுக்கு என்று சாகித்ய விருதுகள் என்று ஏதும் இல்லாவிட்டாலும் கூட.
இப்போது எனது நினைவிலுள்ள வள்ளியூர் சாலையோர குடிசைக் கடை ஆச்சியின் மென்பஞ்சு இட்லியை, இட்லிக்கு மாவரைக்கும்போது நான்குக்கு ஒன்று என்ற வீதத்தில் ஜவ்வரிசி சேர்த்தால் திரும்பச் செய்துவிடலாம் எனப் பிரம்மையடைகிறேன்.

