Sunday, February 8, 2026

ஆலெய்ன் பாத்யூவின் (Alain Badiou) Rhapsody for the theatre

 



ஆலெய்ன் பாத்யூவின் (Alain Badiou)  Rhapsody for the theatre தத்துவத்திற்கும் நாடகத்திற்கும் இடையிலான மிகப் பழமையான உறவையும் அந்த உறவில் இருக்ககூடிய சிக்கல்களை நுட்பமான மறு விசாரணைக்கு உட்படத்தக்கூடிய முக்கியமான நூல். கிரேக்க நகர அரசுக்கும் (Greek city state) துன்பியல் நாடகங்களுக்கும் (tragedies)  இருக்கக்கூடிய உறவை Poetics இல் அரிஸ்டாட்டில் விளக்கியதிலிருந்து மேற்கத்திய தத்துவத்தில் நாடகம் ஆய்வுக்குரிய முக்கிய கலைவடிவமாக இருந்து வருகிறது. பார்வையாளானை கிரேக்க  நாடகக் கதாநாயகனோடு அடையாளம் காணவைக்கக்கூடிய துன்பியல் நாடக வடிவம்  அவன் கிரேக்கா நகர அரசில் அடிமையாக இருப்பானேயென்றால் அவன் தன் அவல நிலையின் சோகங்களை நாடக அனுபவத்தில் மீண்டும் வாழ்ந்து தன் அடிமை நிலையை ஏற்றுக்கொண்டவனாக  நாடகம் முடிந்தவுடன் தன் தினசரி வாழ்க்கைக்குத் திரும்புவான். பார்வையாளன் கிரேக்க நகர அரசில் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவனாக இருந்தால், தன் கதாநாயக நிலை என்பது தொடர்ந்து கடவுளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவதுதான் என்பதை உணர்ந்து அடிமைகளை அடக்கி வாழும் தினசரி வாழ்க்கைக்குத் திரும்புவான். அரிஸ்டாட்டில் உருவாக்கிய இந்த நாயகனோடு அடையாளம் கண்டுகொள்ளும் செயல்பாடு நாடகம் எனும் கலை வடிவத்தைப் பற்றியும் அதன் நீட்சி வடிவமான சினிமாவைப் பற்றியும் எண்ணற்ற தத்துவ சிந்தனைகளையும் உருவாக்கியுள்ளது. 


பெர்டோல்ட் பிரெக்ட் அரிஸ்டாட்டிலிய துன்பியல் நாடகத்தில் பார்வையாளன் நாயகனோடு அடையாளம் கண்டுகொள்ளும் வடிவத்தை உடைத்தார். அவருடைய காப்பிய அரங்கில் பார்வையாளன் உணர்ச்சி பூர்வமாக பார்வையாளனாக மட்டும் இருக்காமல் சிந்திக்கக்கூடியவனாக மாறுவதற்கு உண்டான   விலகல் கதை உத்திகளைக் கொண்ட கதை சொல்லல் வடிவத்தை அறிமுகப்படுத்தினார். 


ஜெர்சி க்ரோட்டோவ்ஸ்கி நாடகம் நாடக நடிகனின் உடலை அடிப்படையாகக் கொண்ட மொழியையும் வடிவத்தையும் கொண்டது என்று வாதிட்டார். அவருடைய நாடகங்களில் நடிகனின் உடல் சொற்களால் வெளிப்படுத்த இயலாத சிக்கலான உணர்ச்சிகளை பார்வையாளனுக்குக் கடத்தியபோது அரசு கடந்த யதார்த்த வெளிகள் புலப்படத் தொடங்கின. 


ஆலெய்ன் பாத்யூ தன் நூலில் நாடகக்கலை அரசினை மறைமுகமாகவோ நேரடியாக ஆதரிக்கும் வடிவமாக இல்லாமல் வரலாற்றின் மிகப் பெரிய நிகழ்வுகளை (Event) இடையீடு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்று வாதிடுகிறார். நிகழ்வுகள் என்பது பாத்யூவின் சிந்தனையில் ஃப்ரெஞ்சுப் புரட்சி, மே 68 மாணவர் புரட்சி போல வரலாற்றில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தவை. மக்கள் ஒன்று கூடி தெருவிறங்கிப் போராடியதால் உண்டான சிந்தனை, சமூக மாற்றங்களையே பாத்யூ நிகழ்வுகள் எனக் குறிப்பிடுகிறார். மக்கள் பெருந்திரளாய் கூடுகிற அத்தனை சந்தர்ப்பங்களும் நிகழ்வுகள் என்றழைக்கப்படுவதற்குத் தகுதியானவை அல்ல. 


சிறிய மணிமொழிகளாலும்,  நாடகம்-தத்துவ சிந்தனை இரண்டுக்குமான சர்ச்சைகளாலும் நிறைந்த ஆலெய்ன் பாத்யூவின் நூல் அரசின் கருத்தியல் பிடியில் (ideological entrapment of state) அகப்படாத மேடை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைப் பற்றிப் பேசுகிறது.  





No comments: