Sunday, September 4, 2011

ஜிக்மெ லிங்பாவின் ரகசிய சுயசரிதை

சிக்கிமின் தலைநகரான காங்டாக்கிலுள்ள திபெத்தியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 2000 ஆம் ஆண்டு போயிருந்தபோதுதான் ஜிக்மெ லிங்பாவின் பெயரை முதன் முதலாக அறிந்தேன். பௌத்த தத்துவ அறிஞர்களான நாகார்ஜுனனுக்கும் தர்மகீர்த்திக்கும் இடையில் நடந்த கடிதப்போக்குவரத்தை அப்போது நான் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன். காங்டாக் திபெத்தியல் நிறுவனத்திலிருந்த பழம் ஓலைச்சுவடிகளை இது சம்பந்தமாய் பார்க்கவேண்டியிருந்தது.  என் பயணத்தோழிக்கு நான் இப்படி பௌத்த மடாலயம் பௌத்த மடாலயமாய் நேபாளம், பூட்டான் என்று சுற்றி காங்டாக் வந்தபோது பௌத்தம் பற்றியே பெரும் அலுப்பு தட்டியிருந்தது. காங்டாக்கிலிருந்து திபெத்திற்கு ஜீப்பில் பயணம் செய்யலாம் என்றும், ‘திபெத்திய இறந்தவர்களின் புத்தகத்தின்’ செவ்வியல் பதிப்பில் நம் கற்பனைக்கேற்றவாறு தோற்றம் கொள்ளும் சமவெளி ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும், அதை நாம் எப்படியும் போய் பார்த்துவிடலாமென்றும் சொல்லி அவளைக்கூட்டி வந்திருந்தேன். சிலுக்குரியிலிருந்து காங்டாக்கிற்கு இரவு பஸ்ஸில் பயணம் செய்தபோது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கி தூங்கி என் தோளிலும் மடியிலும் விழுந்தவாறே நான் சொன்ன கதைகளை அரைகுறையாய் கேட்டுக்கொண்டுவந்தாள்.  என் பயணத்தோழி சீன நடிகை யாவோ சென் போலவே அசப்பில் இருப்பாள். எனவே எல்லா பௌத்த மடாலயங்களிலும் இளம் துறவிகள் நான் கேட்ட தகவல்களையெல்லாம் என் தோழியின் பொருட்டு வாரி வழங்கிக்கொண்டிருந்தனர்.  நான் இரவுப்பேருந்தில் சொன்ன கதைகளில் என் தோழிக்கு திபெத்திய சமவெளியில் வைரமும் வைடூரியமும் கொட்டிக் கிடக்குமாம் என்பது மட்டுமே காதில் ஏறியிருந்தது.  திபெத்தியல் நிறுவன ஓலைச்சுவடிகளிலே வைரச் சமவெளிக்கான வரைபடம் கிடைக்குமோ என்று என் தோழி தேடிக்கொண்டிருந்தாள்.  அவள்தான் அகிலோகேஷ்வர் ஐம்பொன் சிலைக்கு நேர் எதிரில் கண்ணாடிப் பெட்டகத்தில் வைக்கப்பட்ட ஓலைச்சுவடியை எனக்குச் சுட்டிக் காண்பித்தாள்.


ஜிக்மெ லிங்பாவின் ரகசிய சுயசரிதையின் ஒலைச்சுவடியின் பிரதி அது. அந்த ஓலைச்சுவடியில் இருந்த ஒரு சிறு  ஓவியம் என் கவனத்தை கவர்ந்தது. பௌத்த பெண் தெய்வங்கள் பலரும் நிர்வாணமாக ஒரு பௌத்த துறவியை இச்சைத் துன்புறுத்துதல்களுக்கு ஆளாக்கிக்கொண்டிருந்தனர்.  ஓலைச்சுவடிகளின் காப்பாளர் திபெத்திய லாமாக்களின் ஒரு பிரிவினரான மஞ்சள் தொப்பியருக்கு அது தியானத்திற்கான முக்கிய கையேடு என்றார். மஞ்சள் தொப்பியரையும் சிவப்புத்தொப்பியரையும் வகைபிரிக்க நான் அறிந்தே இருந்தேன்.  ஒரு பதினேழு வயது ரிம்போச்சே சீன அரசாங்கத்தின் பிடியிலிருந்து தப்பி திபெத்திலிருந்து இந்தியாவுக்கு ஓடி வந்த கதையை நீங்கள் சில பல வருடங்களுக்கு முன் செய்தித்தாள்களில் வாசித்திருப்பீர்கள். அவர் மஞ்சள் தொப்பி பிரிவினரே. ஜிக்மே லிங்பாவின் ரகசிய சுய சரிதையை சிவப்புத் தொப்பி பிரிவினர் வாசிப்பதில்லை.

பெண் தெய்வங்களின் நிர்வாண ஓவியங்களை வைத்து தியானம் செய்வது எனக்கு மிகவும் உவப்பான காரியமாகப் பட்டது.  அந்த ஓவியங்களை வைத்துக்கொண்டு மதுரை சோமு போல உருகி உருகி ‘என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை’ என்று திபெத்திய மொழியில் பாடுவார்களோ என்று நினைத்தேன்.  என் வடகிழக்குப் பயணத்தோழிக்கு மதுரை சோமுவின் முருகன் பாடலின் மகத்துவத்தை விளக்குவதற்குள் டங்குவார் அறுந்துவிட்டது. வைரச்சமவெளியின் வரைபடம் அந்த ஓவியங்களுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதுதான் ரகசியம் என்று ஒப்புக்கு சொல்லி வைத்தேன். ஆண் கடவுளர்களின் நிர்வாண ஓவியங்கள் தியானத்திற்கு இல்லையா என்றாள்.  குறி விரைத்த கால பைரவனின் ஓவியம் ஒன்றை கண்டுபிடித்து அவளுக்குப் பார்க்கக்கொடுத்தேன். நெடுநேரம் கால பைரவனை தொழுதுகொண்டிருந்தாள் சுவாரசியமாக.

வைரச்சமவெளி பற்றிய ஆசையில் அவளும், புது வகை பௌத்த தியான முறை பற்றிய ஆர்வத்தில் நானும் மறு நாள் காங்டாக்கிலிருக்கும் மஞ்சள் தொப்பியரின் மடாலயத்திற்கு சென்றோம்.  தூரத்தில் கஞ்சன்ஜங்கா சிகரம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. சிகரத்தை நோக்கி சிவ சிவா இந்த புது தியான முறையாவது எனக்கு சித்தியாகவேண்டும், தினசரி ஐம்பது பக்கங்களாவது கவித்துவமாக எழுதும் பாக்கியம் வேண்டும் என்று வேண்டி சங்கல்பம் செய்துகொண்டேன்.  குழந்தைத் துறவிகள் மடாலயத்தருகிலிருந்த மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். என் பயணத்தோழி குழந்தைத் துறவிகளை புகைப்படம் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தாள்.  திபெத்திய மடாலயங்கள் பெற்றோரை மதரீதியாக வசப்படுத்தி தங்களின் குழந்தைகளை மடத்திற்கு அர்ப்பணிக்கும்படி நிர்ப்பந்திக்கின்றன என்ற சீன அரசின் பிரச்சாரம் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. என் பயணத்தோழி இங்கே கால்பந்து ஆடுபவனில் எவன் மைத்திரேய புத்தனோ என்றாள். எனக்குத் தூக்கிவாரிபோட்டது. இவள் லேசுப்பட்டவள் இல்லை போலும்! அவள் கேமராவில் புகைப்படங்களை பரிசோதித்தோம். இவன் தான் அவன் தான் மைத்திரேய புத்தன் என்று பந்தயம் கட்டிக்கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அவள் எல்லோருமே மைத்திரேய புத்தன்கள்தான் அசடே என்றாள். என்னுடன் பயணம் செய்துகொண்டிருந்தவள் மஞ்சுஶ்ரீயின் அம்சமோ?

மடாலயத்திற்கு வருவதற்கு முன்பே ஜிக்மெ லிங்பா பற்றி மேலும் தெரிந்துகொண்டிருந்தேன். நவீன திபெத்திய புத்தமதத்தின் சிற்பியான லிங்பா ரகசியமாக தன் சுயசரிதையை எழுதிக்கொண்டிருந்தார். தன்னிலையும் சூன்யம், புறநிலையும் சூன்யம், வாழ்வு என்பது கணம்தோறும் தொடர்பற்று நீள்வது என்ற கருத்துக்களை போதிக்கும் பௌத்த சமயம் சார்ந்த ஒருவர் அகம் நோக்கிய விசாரணையாக சுயசரிதை எழுதியிருப்பது ஒரு முரண்பாடாகவே எனக்குப்பட்டது.  அதுவும் சுயசரிதை முழுக்க பாலியல் ஆசைகளின் பெருக்கத்தையும் நுட்பத்தையும் கொண்டுள்ள நூல் எப்படி தியானத்தின் மையபிரதியாக இருக்க முடியும்?

இரவு உணவுக்கு நாங்கள் அழைக்கப்பட்டிருந்தோம். மாமிச வகைகளும் ரொட்டிகளும் வேகவைத்த காய்கறிகளும் என்று மடாலயத்தில் இரவு உணவு அமர்க்களப்பட்டது. என் பயணத்தோழி வெளுத்துக்கட்டிக்கொண்டிருந்தாள்.  நான் நீராவியில் வேகவைத்த மரக்கறி மோமோவையும் கோதுமை ரொட்டிகளையும் சாப்பிட்டுவிட்டு சுத்த பத்தமாக இருந்தேன். சாப்பிட்டபின் மடாலயத்தின் தலைமை பிக்குவை சந்தித்தோம். பழுத்த பழமாய் இருந்தார். நான் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளையெல்லாம் என் தோழி மொழிபெயர்க்க அவர் நிதானமாக கேட்டுக்கொண்டேயிருந்தார். ஆசையை வெல்வது அவ்வளவு எளிதா என்றார் ஒரு முறை. ஹிந்து தாந்த்ரீகம் தெரியாதா உனக்கு என்றார் இன்னொரு முறை. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த எங்கள் உரையாடலில் எனக்கு அவர் மேல் மரியாதை ஏறிக்கொண்டே போனது.  அவருடைய இடுங்கிய கண்களில் கேலியும் குதூகலமும் மாறி மாறி ஒளிர்ந்ததாக எனக்கு பட்டது.  எல்லா வெறுப்புகளையும் வென்றவனே தூய அன்பினை அறிகிறான் என்றார். தலாய்லாமா பற்றிய பேச்சு வந்தபோது அவருடைய அலமாரியில் எத்தனை ரே பென் கறுப்புக் கண்ணாடிகள் இருக்கின்றன என்று தெரியுமா உனக்கு என்றார். அவரிடம் கண்ணாடிகளைக் காட்டினால் அவற்றை வேண்டாம் போ என்று அவரால் சொல்லமுடியுமா என்று கேட்டார்.  பாலியல் ஆசைகளைப் பற்றி பேச்சு திரும்பியது. தன் குறியை தன் குதத்தில் செருகிக்கொண்ட பிக்குவின் கதை பாலியில் எழுதப்பட்ட வினயா பிரதியில் இருக்கிறதே படித்திருக்கிறாயா என்றார். சொல்லுங்களேன் என்றதற்கு அவர் சொன்ன கதையைக் கேட்டு என் தோழிக்கு முகம் சிவந்து போயிற்று. மொழிபெயர்க்க மறுத்துவிட்டாள்.

இரவு சுமார் பத்து மணிக்கு அந்த சடங்கு தொடங்கியது. வெண்கலத் தாம்பாளம் போலிருந்த அந்த   திபெத்திய ‘காங்’கில் மர உருளையால் இடிக்க, சிறு சிறு மத்தளங்களை குச்சிகளால் பிக்குகள் தட்டி தாள லயமேற்ற, எகத்தாளம் போன்ற கருவிகள் முழங்க ஜிக்மே லிங்பாவின் சுய சரிதையிலிருந்து மிகவும் ஆபாசமெனக் கருதப்படகூடிய ஒரு பகுதி ஓதப்பட்டது. பிக்குகள் எல்லோரும் அதைத் திரும்பி ஓதினர். எல்லோருக்கும் கொஞ்ச நேரத்திலேயே அருள் வந்துவிட்டது. எல்லா பிக்குகளின் உடல்களும் முன்னும் பின்னும் ஆட வாத்தியக் கருவிகளின் வேகமும் சீராக அதிகரித்தது. தமிழ் நாட்டு ஆவேசங்கள் போல இல்லை அவை. உச்சத்தை சீராகச் சென்று தொட்டபின் அந்நிலையிலேயே தொடர்ந்து பல மணி நேரம் இருந்தார்கள்.  வெள்ளி முளைப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே எங்கள் அறைகளுக்கு நாங்கள் திரும்பிவிட்டோம்.

எதையோ தேடி வந்து எதையோ பார்த்தது போன்ற குழப்பமான மனோநிலையிலேயே சிலுக்குரிக்கு   இரவு பஸ்ஸைப் பிடித்தோம். வைரச் சமவெளிக்கு நாம் கண்டிப்பாகப் போகத்தான் போகிறோம் என்றேன். பிரம்மபுத்திரா நதிமுகத்தைத் தேடி இமயமலையைச் சுற்றிக்கொண்டு போனால் வைரச்சமவெளி வந்துவிடும் தெரியுமா என்றேன். என் தோழிக்கு எந்த உரையாடலிலும் நாட்டமில்லாதது போலத் தோன்றியது.  மலையிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தோம். பொத்தாம்பொதுவில் யாருக்கோ சொல்வது போல அந்த தலைமை பிக்கு பெரிய ஞானி தெரியுமா என்றேன். என் தோழி உடனடியாக விழிப்படைந்து ஹலோ அந்த பிக்கு என் பின் பாகத்தில் கிள்ளினான் தெரியுமா உனக்கு என்றாள்.

நீண்ட நேரம் ஜன்னல் வழியே மலைப்பாதையையும் தூரத்தில் மினுங்கும் விளக்குகளையும் பார்த்துக்கொண்டே வந்தேன். ஒரு சிறு கேவலோடு என் தோழியை அருகே இழுத்து இறுகக்கட்டிக் கொண்டு தூங்கிப் போனேன்.


கதைகள் போல கட்டுரைகளும் கட்டுரைகள் போல கதைகளும் நான் எழுதுவதால் நான் சொல்லும் தகவல்களில் எது உண்மை எது கற்பனை என வாசகர்கள் குழம்புவதாக எனக்கு தெரியவந்துள்ளது. எனவே சொல்லிவிடுகிறேன்: ஜிக்மெ லிங்பா உள்ளபடியே வாழ்ந்த திபெத்திய பௌத்த துறவி. அவருடைய ரகசிய சுயசரிதையைப் பற்றிய மிக முக்கியமான ஆய்வு நூலை ஜேனட் கியட்ஸோ என்ற ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியை எழுதியுள்ளார். அந்த நூலை கீழ்க்காணும் சுட்டியில் காணலாம். http://tinyurl.com/42m9vfw

No comments: