Saturday, September 24, 2011

எழுதும் தன்னிலைக்கு என்ன பெயர்?


நான் எழுத ஆரம்பித்தபோது எனது சிறுகதைகளுக்கான புனைபெயராக ஸில்வியா என்று வைத்துக்கொண்டேன். சில்வியா அல்ல ஸில்வியா. ‘சி’ என்ற அட்சரத்தை உச்சரிக்கும்போது நுனி நாக்கு மேல் நோக்கி சிறிதாக வளைந்து மேல் அண்ணத்தைத் தொடுவதில் உள்ள சிறு வன்முறை எனக்கு பிடிக்கவில்லை. மாறாக, பற்களை நோக்கி மெலிதாக நாக்கு நீள காற்று மென்மையாக வெளியேறும் ஸி யின் உச்சரிப்பு பொருத்தமானதாகப்பட்டது. ஆண் எழுத்தாளர்கள் பலரும் பெண் புனைபெயர்களில் எழுதுவது போன்ற தெரிவு அல்ல இது. ஒரு அழகான மென்மையான சக்தி வெளியேறும் சப்தம் என்றே ஸில்வியா என்னை வசீகரித்தது. இந்தப் பெயரை பெண்களுக்கு மட்டுமேதான் சூட்டவேண்டும் என்ற உலக நடைமுறை எனக்கு ஏற்புடையதாகவும் இல்லை. மாலதி மைத்ரியிடம் உரிமம் அல்லது அங்கீகாரம் பெற்றுதான் பெண் புனைபெயர்களைச் சூட்டிக்கொள்ளவேண்டும் என்ற விதியும் அப்போது இல்லை; ஏனெனில் அந்தக் காலத்தில் மாலதி மைத்ரி எழுத வந்திருக்கவேயில்லை.

என் பெற்றோரிட்ட பெயர் சர்வ சாதாரணமாக நான் எழுதும் சிறு கட்டுரைகள் அளவுக்கு நீளமாக இருப்பது வேறு புனைவு எழுதும் தன்னிலைக்குப் பெயராகக் கொள்வதா என்ற மனத்தடங்கலை ஏற்படுத்தியது. என் பெற்றோரிட்ட பெயர் என் தாத்தாவின் பெயர் (இனிஷியலோடு அப்படியே வந்துவிட்டது) என்பதால் குடும்பப்பெயர் சுரேஷ். நாகர்கோவிலில் சுரேஷா என்று கூப்பிடுவார்கள். ஆச்சி தன் கணவன் பெயர் முத்துக்குமாரசாமி என்பதால் கண்ணா என்று கூப்பிடுவார்கள். குடும்பத்தில் பேரப்பிள்ளைகள் பெருத்து முத்துக்குமாரசாமிகள் அதிகமானபோது நான் பெரிய கண்ணன் ஆகிவிட்டேன். குழந்தையாக இருந்தபோது இந்த பல பெயர் குழப்பத்திலிருந்து விடுபட்டு உன் பெயர் என்ன என்று கேட்டால் சுரேஷைச் சுருக்கி சீ என்பேன். அம்மாவுக்கு சீ ரொம்ப பிடித்துப்போய்விடவே சீப்பா என்று செல்லமாகக் கூப்பிடுவார்கள். சீப்பா என்ற புனைபெயரில் எஸ்.வி.ராஜதுரை நடத்திய இனி இதழ்களில் தமிழ் காமிக்ஸ் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறேன். சீ என்பதையே புனைபெயராய் வைத்துக்கொள்ளலாம் என்று பலமுறை தோன்றினாலும் சோ என்பவரின் நீட்சி போல தொடர்புபடுத்தப்படும் என்பதால் கைவிடவேண்டியதாயிற்று. என் குழந்தைகள் இருவரும் ஒருநாள் தற்செயலாக விளையாட்டாக சீப்பா என்று கூப்பிட்டபோது ஏதேதோ ஞாபகங்கள் தாக்க நிலைகுலைந்து போனேன். குழந்தைகள் இருவரையும் மடியில் இருத்தி இனிமேல் என்னை அப்படிக் கூப்பிடாதீர்கள் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டேன்.

எனக்குப் பிரியமான பெயரான ஸில்வியாவையுமே இவ்வாறாகவே கைவிட வேண்டியதாயிற்று. முதலில் ஸில்வியா என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேனே தவிர புனைவு எழுதும் தன்னிலையான ஸில்வியாவை முழுமையாக அறிந்தேன் என்று சொல்லமுடியாது. திட்டம் போட்டு ஆண்டறிக்கைகள், கல்விப்புல கட்டுரைகள், திரைக்கதைகள் எழுதுவது போல புனைவினை நான் எழுதியதில்லை எழுதப்போவதுமில்லை. புனைவும் அதன் தர்க்கமும் வடிவமும் எங்கேயெல்லாம் கூட்டிச் செல்லுமோ அங்கேயெல்லாம் புதிது புதிதாய் கண்டுபிடித்தவாறே போகத்தயாராக எப்போதுமே இருக்கிறேன். ஸில்வியாவை அறிவது கைக்கொள்வது என்பது புனைவு எழுதுவதின் என் அந்தரங்க நோக்கங்களில் ஒன்றாகும். எழுதியவரைக்கும் எனக்கு ஏகப்பட்ட ஆச்சரியங்கள் காத்திருந்தன. வெளிப்பாடுக்காக போராடும் தன்னிலையின் தவிப்பு உலக அவலங்களிலேயே மிகவும் உக்கிரமானது என்பது பிரதான ஆச்சரியம். அழகும் அபத்தமும் மௌனமும் மாறி மாறி கூடி வர கூடி வர மறுக்க திக்கித் திண்டாடி போதும் போ என்று ஆயாசத்தில் விழுவது வழக்கமாகிப்போனது. எழுதி பிரசுரித்ததை விட பிரசுரிக்காமல் விட்டது, அழித்தது, மறந்தது, கைவிட்டது  அதிகமாகிக்கோண்டே போனது. முழுமையாக மனத்தில் உருப்பெற்றது எழுத்தில் கைவரப்பெறாமல் நழுவிக் கரைந்துபோகும் தருணங்கள் கூடிக்கொண்டேபோனது. ஸில்வியா என்ற என் எழுதும் தன்னிலையின் பெயர் ஸில்வியா ப்ளாத்தின் வாழ்க்கையோடு (படைப்புகளோடு அல்ல) அமானுஷ்ய தொடர்பு கொள்கிறதோ? என்னவொரு பயம்! பயம் பீதியாக இனந்தெரியாத பதற்றம் ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டது. வயது ஏற ஏற இந்தப் பதற்றத்தைத் தாங்கிக்கொள்ளும் வலு உடலுக்கோ மனதிற்கோ இல்லை என்பது தெளிவாகிவிட்டது. எனவே சில பல வருடங்களாகவே ஸில்வியா என்ற பெயரைக் கைவிட்டுவிட்டேன். இருந்தாலும் ஸில்வியா என்ற பெயரில் எழுதிய மைத்ரேயி என்ற சிறுகதையை மட்டும் மறுபிரசுரம் செய்யவேண்டும் என்று எண்ணமிருக்கிறது. அக்கதை கோணங்கி நடத்திய கல்குதிரை இதழில் பிரசுரமானது. பிரசுரத்தில் அச்சுப்பிழைகள் மலிந்திருந்தன. பிழை திருத்திய வடிவத்தைப் படிக்கவேண்டும் என்பதே அவா.

எம்.டி.முத்துக்குமாரசாமி என்ற பெயரே புனைவெழுத்துக்கும் போதும் என்ற சமரசத்திற்கு ஒரு வழியாக வந்துவிட்டேன். கட்டுரைகளில், கடிதங்களில், இணையத்தில், நேர்பேச்சில் என்னை யாரேனும் ஸில்வியா என்று குறிப்பிடும்போது யார் யாரோ என்னை சீப்பா என்று அழைப்பதுபோல இருக்கிறது. அப்படிக் குறிப்பிடுபவர்கள் எல்லோரையும் என் மடியில் இருத்தியா அப்படிக்கூப்பிடாதீர்கள் என்று கெஞ்ச முடியும்?

No comments: