Thursday, February 9, 2012

பராக்கு பார்த்தது: அழகுக்குறிப்புகள் 2

 பராக்கு பார்த்தது: அழகுக்குறிப்புகள் 
(Embellishments)
சாகாமல் பிழைத்து கிடப்பதால் நான் நானாகியதும் பராக்கு பார்த்ததும் பதிவுக்கு வந்த முதல் வாசக கடிதம் 'பிரச்சினை' என்பதற்குப் பதிலாக 'பிரச்சினைப்பாடு' என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கலாம் என ஆலோசனை சொல்கிறது. Problematic என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மொழியாக்கமாக பிரச்சினைப்பாடு என்ற பதத்தை பயன்படுத்தினால் உத்தேச தத்துவப்பிரச்சினைகளின் தொகுப்பு என்ற கருத்து உடனடியாகப் புலப்படுமாம். இப்படி மொழியாக்க வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு கால்களை கப்பையாக விரித்துக்கொண்டு கவட்டையை எக்கி எக்கி காட்டி எத்தனை பேர்தான் நடனமாடக் கிளம்பியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இல்லை நான் தான் இவர்களுடைய கப்பைக்கால் கும்மியடி நடனங்களுக்குள் சிக்கிக்கொள்கிறேனா என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் கலைச்சொல்லாக்கங்களில் வார்த்தைகளை உடும்புபிடியாய் பிடித்துக்கொள்வது தமிழாசிரியர்களின் ஏகபோகமாய் இருந்தது. இப்போது இணையப் பொதுவெளியின் மகாத்மியமாகியிருக்கிறது.
இன்னொரு கடிதம் Kiss my country ass என்ற இசை ஆல்பத்தை அனுப்பிக் கொடுத்து 'குண்டியில் முத்தமிடு', 'நடு விரலை உயர்த்திக் காட்டு' ஆகிய மேற்கத்திய சைகைகளையும் எழுதுவேனா என கண் சிமிட்டிக் கேட்கிறது. எழுத வேண்டுமானால் எழுத வேண்டியதுதானே என்று பதிலுக்கு கண் சிமிட்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய என்று தெரியவில்லை. எழுத்திலுள்ள, சிந்தனையிலுள்ள சைகைகளையும், பாவனைகளையும் வெளிக்கொணர்ந்து எழுதுவது ஒருவகை அகழ்வாராய்ச்சி; அதற்குத் தேவையான துண்டு துணுக்குகள் மேற்புறத்திலேயே கிடைத்துவிட்டால் கட்டைவிரலை உயர்த்திக்காட்டுவதற்கு பயன்படத்தான் செய்யும்.
இந்த இரண்டு கடிதங்களுக்கும் பதிலளிக்காமல் நேரடியாக இமானுவேல் காண்ட் பராக்கு பர்த்திருப்பாரா என முதல் வாக்கியத்தை எழுதவிருந்தேன். காண்ட் பராக்கு பார்த்திருக்க  வாய்ப்பேயில்லை என்றே தோன்றுகிறது. வெளி நிகழ்வுகள் புலன்களுக்குள் சேகரமாகிற அதே வேகத்தில் அவருடைய உள் மனக்குரலும் பேசிக்கொண்டேயிருக்கிறது. உள்மனக் குரலின் சளசளப்பினால் எம்.வி.வெங்கட் ராமின் 'காதுகள்' கதாநாயகன் போல சதா காண்ட் அவஸ்தைப்பட்டிருப்பாரோ? காண்ட்டிற்கு அகச் சமிக்ஞைகள் வெளியுலக ஊடாட்டத்தை சாத்தியப்படுத்துவது மட்டுமல்லாமல் தன்னை மீறிய கற்பித தளத்தோடும் பாலம் அமைக்கின்றன. ஹைடெக்கருக்கு இந்த உள்மனப் பேச்சு இடம் காலம் இல்லாமல் சாத்தியமாவதில்லை. தன்னிருப்பு காலத்தோடு கொள்ளும் உறவு உடலின் எல்லைகளைச் சுட்டுகிறது. நான் நானாகுதல் இலக்கும் திசையும் நிர்ணயிக்கப்பட்ட பயணமாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இந்த நகர்வுகள் ஒரு கதை சொல்லலை வா வாவென்று மர்மமாக அழைக்கின்றன. கதை சொல்லல் நாடகீயமாகிறது. நாடகம் காரண காரியத் தொடர்பினை அறுதி செய்கிறது; காரண காரியத் தொடர்பினை  கற்பித வெளிக்குள் தள்ளிவிட்டால் அனுபவ சேகரத்திற்குக் குந்தகம் விளைந்துவிடும். ஜான் கேஜின் புகழ் பெற்ற 4.33 (மௌனத்தைக் கேட்டல்) என்ற மேற்கத்திய இசைக் கச்சேரியைப் போல; திரை விலகிவிட்டது, இசைக்கலைஞர்கள் அவர்கள் இருக்கைகளில் வந்து அமர்ந்துவிட்டார்கள், இசை நடத்துனரும் வந்து விட்டார். ஆனால் ஒன்றுமே நடப்பதில்லை நான்கு நிமிடங்களுக்கு எதுவுமே நடப்பதில்லை. நிச்சலனம். பேரமைதி. கச்சேரியின் அந்த குறிப்பிட்ட இசைக்கோவை முடிந்துவிட்டதாக நடத்துனர் அறிவித்து மேடையில் நடந்து வந்து தலைவணங்கி கைதட்டல்களை ஏற்றுக்கொள்கிறார். மௌனத்தைக் கேட்டபடியே முழு வாழ்க்கையும் கடந்து செல்வதும் நடக்கக்கூடியதுதானே. இமானுவேல் காண்ட்டினால் ஜான் கேஜின் 4.33 கச்சேரியை ஒரு நிமிடம் கூட கேட்டிருக்க முடியாதென்று மேஜையைக் குத்திச் சொல்லலாம். பராக்கு பார்த்தலில் மௌனத்தைக் கேட்டலுக்கு முக்கிய இடமிருக்கிறது. ஆதியாகமப் தோத்திரப்பாடல் வரி I am a stranger on earth என்று இருக்கிறதல்லவா பராக்குப் பார்க்கும்போது முணுமுணுக்க ஏற்ற வரி அதுதான்.
நான் நானாகுதல் மௌனமாகக் கழியும் பயணமாய் பரிணமிக்க இருப்பது ஒரு வாய்ப்பென்றால், ஒன்றோடொன்று தொடர்பற்று நகரும் கணங்களாகவும் இருப்பது இன்னொரு வாய்ப்பு. இளையராஜா இசையமைத்த ‘கொத்துமல்லிப்பூவே, புத்தம் புது காற்றே’ பாடலில் பாடல் வரியைத் தொடர்ந்து துணி துவைக்கும் சப்தம் வருவது போல.  தொடர்பற்ற கணங்களிடையே ஒரு லயத்தினை  இசை உருவாக்குவது போல கணங்களிடையே லய இசைவும், காரண காரியத் தொடர்ச்சியும் இருப்பதான மயக்கம் நிகழ்வியலாக மனசிலாகிறது.
புதுமைப்பித்தனின் வள்ளிநாயகம் பிள்ளைக்கும், ந.முத்துசாமியின் ‘செம்பனார் கோவிலுக்குப் போவதெப்படி?’ சிறுகதை நாயகனுக்கும், அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் திரைப்படத்தில் முற்றத்தில் மேயும் மாட்டை விரட்ட சகோதரியைக் கூப்பிடுபவனுக்கும் எந்தப் பயணமும் சித்திப்பதில்லை. காலம் வரலாறாகிவிட்டதாலா? காலம் தன்னிருப்போடு மனித சமூக பெரு வரலாற்றுக் கதையாக உறவாடும்போதுதான் செயலும் நகர்வும் பயணமும் எனவே செயலின்மையும், நகர்வின்மையும்  உறைதலும் சாத்தியமா? நான் நானாகும் பயணம் வெறுமனே  கோமாளித் தொப்பியை அணிவது எப்படி? என்ற காரியம்தானா?
   
-தொடரும்-

No comments: