Monday, November 5, 2012

என்ன செய்ய?நேற்று நள்ளிரவுக்கு மேல் வாசல் அழைப்பு மணி ஒலிப்பது கேட்டது. வாசலில் ரமா(பெயர் மாற்றியிருக்கிறேன்)வின் தந்தை பதற்றத்துடன் நின்றிருந்தார். பெரியவருக்கும் எனக்கும் காலை நடை செல்லும்போது பார்த்து பரஸ்பரம் புன்னகைக்கும் பழக்கம். நான் வசிக்கும் தெருவின் கோடியிலுள்ள சந்தில் சிறு போர்ஷனில் அவரும் அவர் கடைசி மகளும் குடியிருக்கின்றனர். “ரமா இன்னும் வீட்டுக்கு வரல என்ன செய்ரதுனு தெரில ஒங்க வீட்ல லைட் இருந்துச்சு அதான் கூப்டேன்” பெரியவர் பதற்றமாகவே பேசினார். வீட்டிற்குள் அழைத்து மேலும் விபரம் கேட்டேன்.

ரமா தி.நகர் பகுதியிலுள்ள பெரிதும் சிறிதுமில்லாத ஜவுளிக்கடை ஒன்றில் கடந்த இரு மாதங்களாக வேலை பார்க்கிறாள். ஆயத்த உடை பிரிவில் விற்பனையாளர். காலை பத்து மணிக்கு கடைக்குப் போனால் தினமும் இரவு பத்துமணிக்குத்தான் வீட்டிற்கு வருவாள். இன்று மணி பன்னிரெண்டாகியும் வீடு திரும்பவில்லை. அவள்  கைபேசிக்கு அழைப்பு மணி போய்க்கொண்டேயிருக்கிறது. ஜவுளிக்கடை தொலைபேசி எங்கேஜ்ட் ஆகவே இருக்கிறது. என்ன செய்ய? அவர் கொடுத்த எண்களை நானும் ஒரு முறைக்கு இரு முறை சுழற்றினேன். அதே நிலைமைதான். பெரியவருக்கு தொலைபேசியில் பேசமுடியாதது மேலும் பதற்றத்தை அதிகரித்தது. போலீசுக்கு புகார் சொல்லும் அளவுக்கு ஏதேனும் விபரீதமா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. தி.நகரில் பெரியவருக்கு சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா என்று கேட்டேன். அவர்கள் எல்லோரும் நெல்லூர் அருகிலுள்ள கிராமத்தில் இருக்கிறார்களாம். மூத்த மகள்களின் குடும்பங்கள் குண்ட்டூரில்.

ரமாவுக்கு நான் அறிமுகமில்லை. அவள் தொலைபேசி எண்ணையும், அவளுடைய கடை முகவரியையும் வாங்கிக்கொண்டு தி.நகர் போய் நேரில் பார்த்து வரக் கிளம்பினேன். நான் தி.நகர் போக அவர் மகள் இங்கே வந்துவிட்டால்? நீங்கள் இங்கேயே இருந்து பார்த்து ரமா வந்தால் எனக்கும் சொல்லுங்கள் என்றால்  பெரியவருக்கு என்னை அனுப்பிவிட்டுத் தனியாக இருக்க அவருடைய பதற்றம் விடுவதாயில்லை. இருந்தாலும் வேறு வழியில்லை. நான் என் மனைவியிடம் சொல்லிவிட்டு கிளம்பும்போது மணி ஒன்றரை ஆகிவிட்டிருந்தது. பெரியவருக்கு நான் தொடர்ந்து தொலைபேசியில் ரன்னிங் கமெண்டரி சொல்வதாய் ஏற்பாடு.

கார் ஓட்டி பல வருடங்களானாலும் ஆபத்துக்கு பாவமில்லை என காரைக் கிளப்ப முயற்சித்தேன். கிளம்புவனா என்றது. பெரியவரின் கண்களில் கண்ணீர் தளும்பிவிட்டது; உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஆட்டோ இந்நேரத்தில் கிடைப்பது துர்லபம். டாக்சியைக் கூப்பிட்டேன். வர அரை மணி நேரமாகும் என்றார்கள். காத்திருக்கும் நேரத்தில் மீண்டும் தொலைபேசி எண்களை சுழற்றினோம். பயனில்லை.

ரமா பட்டப்படிப்பு முடிக்கவில்லை. அவளுக்கு மாதம் 6500 ரூபாய் சம்பளம். பிடித்தம்போக 5700 சொச்சம் கையில் தருவார்கள். பிஎஃப், இஎஸ்ஐ. உண்டு.  சனி, ஞாயிறு தவிர்த்த வேறொரு நாளில் வார விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். இப்போது போல தீபாவளி பண்டிகை காலங்களில் வார விடுப்பு கிடையாது.  காலையில் எழுந்து பெரியவருக்கும் சேர்த்து சமைத்து வைத்துவிட்டு, மதிய உணவு டப்பா எடுத்துக்கொண்டு காலையில் போனாளென்றால் மாலை ஏழு மணிவாக்கில் பசி வயிற்றைக் கிள்ளும். ஐந்து ரூபாய்க்கு வாங்கும் டைகர் பிஸ்கட் பாக்கெட் மூன்று நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும்.  ரமாவுக்கு ரத்த சோகை. மெலிந்து வெடவெடவென்று இருக்கிறாள். விடுமுறை நாள் முழுக்க பேயடித்தது போல தூங்குவாள். நான் கொடுத்த காப்பியைக் குடித்துக்கொண்டே பெரியவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

இரவு 2.20க்கு டாக்சி வந்தது. பெரியவரை வீட்டிற்கு வெளியே நாற்காலி போட்டு அமர்த்திவிட்டு கிளம்பினேன். தி.நகரில் ரமா வேலைபார்க்கும் ஜவுளிக்கடை ஷட்டர்களெல்லாம் இறக்கிவிட்டு சாத்தியிருந்தது. பெரிய பூட்டுக்கள் வேறு. என்ன செய்ய?  கடை பூட்டியிருக்கிறது என்று பெரியவருக்கு சொல்லலாமா வேண்டாமா? போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்விட வேண்டியதுதானா? டாக்சி டிரைவருக்கும் விஷயம் தெரியும். ஆட்கள் கடைக்குள்ளே இருக்கிறார்களா என்று ஷட்டரை நானும் டிரைவரும் உலுக்கிப் பார்த்தோம். பெரியவர் ரன்னிங் கமெண்டரிக்காக கைபேசியில் அழைத்தார். இருங்கள் கூப்பிடுகிறேன் என்றுவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டேன்.   இப்படித்தான் சார் போன மாசம் என்று ஆரம்பித்த டிரைவரை எதுவும் மேலும் பேச விடாமல் தடுத்தேன். பெரியவரின் பதற்றம் என்னையும் தொற்றிக்கொண்டது. சாலை பெரும்பாலும் வெறிச்சோடியிருந்தது. மீண்டும் கடை எண்ணையும், ரமா எண்ணையும் எதற்கும் இருக்கட்டுமே என்று கடை வாசலில் இருந்தே அழைத்தேன். பலனில்லை. டிரைவர் காரில் போய் உட்கார்ந்துகொண்டார். அவர் கதையை கேட்காத கடுப்பு. மீண்டும் ஷட்டரை தனியாக உலுக்கிப் பார்த்தேன். இரவு காவலாளி கூடவா கிடையாது?


டாக்சியில் ஏறி திரும்ப சைதாப்பேட்டை வரை வந்தாயிற்று. பெரியவரின் கைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை. கடை காம்பவுண்ட் முழுக்க சுற்றிப்பார்க்கவில்லை ஒரு வேளை பின்புறம் வாசல் இருந்தால் அதையும் பார்த்துவிட்டல்லவா வந்திருக்கவேண்டும்?! டாக்சியை மீண்டும் கடைக்குத் திருப்புங்கள் என்றேன். ‘நைட்ல டபுள் சார்ஜ் சார்’ முணுமுணுப்போடு டிரைவர் காரைத் திருப்பினார்.

கடைக்குப் பின்பக்கம் பேஸ்மெண்ட்டில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. கதவருகே தூங்கிக்கொண்டிருந்த காவலாளியை எழுப்பினேன். புதிதாய் தீபாவளிக்கென்று வந்திருக்கும் ஜவுளியில் விலைப் பட்டி ஒட்டிக்கொண்டிருக்கிறார்களாம். ரமாவும் உள்ளேதான் இருக்கிறாளாம். அப்பாடா. தீபாவளிக்குத் தீபாவளி இப்படித்தானாம். அதிகாலை நான்கு மணிக்கு கார் சொல்லியிருக்கிறார்களாம் கடை நிர்வாகமே எல்லோரையும் அவரவர் வீடுகளில் விட்டு விடுமாம். பரம சந்தோஷம், ஆனால் ரமாவைப் பார்க்காமல் நகரமாட்டேன் என்றேன். காவலாளி தான் மட்டும் உள்ளே போய் ரமாவையும் அவளுடைய மேலாளரையும் அழைத்துவந்தார்.

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த பதற்றம் வெடித்து விட்டது. இப்படியா ஆட்களை வேலை வாங்குவீர்கள், அப்படியே வேலை வாங்கினாலும் முன் கூட்டியே சொல்ல மாட்டீர்களா, ஃபோன் அடித்தால் எடுக்க மாட்டீர்களா- காச்சு மூச்சு என்று கத்துவதற்கு எனக்கா சொல்லித் தரவேண்டும்? கடை மேலாளர் பொதுவாக என்னிடமும் ரமாவிடமும் யார் சார் நீங்க என்றார்; ரமா இவர் யாருன்னு எனக்குத் தெரியாது சார் என்றாள் தீர்மானமாக.

பெரியவரை தொலைபேசியில் அழைத்தேன். பெரியவரின் எண் எங்கேஜ்டாக இருந்தது! ரமாவையே அவள் அப்பாவிடம் பேசிப்பார்க்கச் சொல்லுங்கள் என்றதற்கு பணியாளர்களின்  கைபேசிகளெல்லாம் கடைக்குள்ளே அனுமதிக்க மாட்டோம் எல்லாம் பணியாளர்கள் டைனிங் ஹாலில் உள்ள  பெட்டியில் வைத்து பூட்டிவிடுவோம் என்று காவலாளியும் மேலாளரும் மாறி மாறி சொன்னார்கள். அதனால்தான் என்னாலும் பெரியவராலும் ரமாவைத் தொடர்புகொள்ள முடியவில்லையாம், முடியாதாம்.  நீங்கள் உண்மையிலேயே ரமாவின் அப்பா அனுப்பி வேளச்சேரியிலிருந்து வந்திருக்கலாம் சார் ஆனால் முன்னே பின்னே தெரியாத ஆளோடு எங்கள் லேடி ஸ்டாஃபை அனுப்ப முடியாது என்று மேலாளர் ஒரே போடாய் போட்டார்.

அதிகாலை நாலேகால். பெரியவர் கைபேசி தொடர்ந்து எங்கேஜ்டாக இருந்தது. நான் டாக்சியில் ஏறும்போது கடை ஏற்பாடு செய்திருந்த டாடா சுமோவில் ரமாவும் ஏறுவதை கவனித்தேன். வீட்டு வாசலில் நாற்காலியில் பெரியவர் தூங்கிப் போயிருந்தார். அவரை எழுப்பி ரமா கடை ஏற்பாடு செய்த காரில் வருவதை தெரிவித்தேன். அவர் கடையின் இன்னொரு தொலைபேசி எண்ணை அழைத்திருக்கிறார் அது ஃபேக்ஸ் லைனுக்குப் போயிருக்கிறது. இணைப்பைத் துண்டிக்காமலேயே பெரியவர் கண் அயர்ந்திருக்கிறார். என்ன செய்ய?

டாக்சிக்கு அறு நூற்றுச் சொச்சம் அழுதுவிட்டு, பெரியவரோடு நடந்து அவர் வீட்டு வாசலில் ரமாவுக்காக காத்திருந்தபோது அடுத்த இருபது நிமிடங்களில் ரமா சுமோவில் வந்து இறங்கிவிட்டாள். அப்பாவும் மகளும் தெலுங்கில் உரக்க பேசிக்கொள்கையில் நான் விடைபெற்று வந்துவிட்டேன்.

இன்று காலை எழுந்திருக்க மணி பத்தாகிவிட்டது.  அலுவலகம் வர தாமதமாகும் என்று ஃபோனில் தெரிவித்தேன். நேற்றிரவு நடந்ததெல்லையாம் ஒரு பரபரப்பு வெகுஜன எழுத்தாளன் எப்படியெல்லாம் ஒரு சிறுகதையாகவோ அல்லது ஜவுளிக் கடை பணியாளர்கள் பற்றிய கட்டுரையாகவோ எழுதியிருப்பான் என்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பெரியவர் பெயரைக்கூட கேட்டுக் கொள்ளவில்லை இன்னும்.

நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது பெரியவர் வந்து கொடுத்துவிட்டுப்போனார் என்று சிறு கிண்ணத்தைக் காட்டினாள் மனைவி. என்னவென்று பார்த்தேன். ஆந்திரா கோங்கூரா சட்னி. நேற்று இரவு எக்ஸ்டிரா வேலை நான்கு மணி வரை பார்த்ததற்கு ரமாவுக்கு முப்பது ரூபாய் பேட்டாவாம். கோங்கூரா சட்னி சுள்ளென்று உள் நாக்கில் உறைக்க கண்ணில் நீர் கட்டியது.1 comment:

Unknown said...

வாழ்க வளமுடன் !