பண்பாட்டு தேசியவாதத்தின் விசித்திர கற்பனைகளும், அபத்தங்களும், அபாயங்களும் நிறைந்த கட்டுரை ஒன்றினை 'சங்குக்குள் கடல்-தேசமென்னும் தன்னுணர்வு' என்ற தலைப்பில் ஜெயமோகன் தன் தளத்தில் பிரசுரித்துள்ளார். ஜெயமோகனின் இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள் http://www.jeyamohan.in/?p=38716 இது அவர் சுதந்திர தினத்தன்று திருப்பூரில் ஆற்றிய உரையாம்! 'மீனுக்குள் கடல்' கவிதைத் தொகுதியை எழுதிய பாதசாரி தன் கவிதையின் தலைப்பு சங்குக்குள் ஓலமிடும் கடலாக ஜெயமோகனால் மாற்றப்பட்டிருப்பதை அறிந்து நெஞ்சில் அடித்துக்கொண்டு விம்மியிருக்க வேண்டும்.
'நம்முள் உறையும் வரலாறு எது? தேசம் எது?' என்று வீராவேசமான கேள்விகளை எழுப்பி தனக்கு தன்னுணர்வு வெகு இளமையிலேயே தோன்றிவிட்டதாக அறிவிக்கும் ஜெயமோகன் -அதாவது மூன்று வயதில்!- தன்னை தன் பெற்றோர் திருவிதாங்கோடில் உள்ள குடும்ப வீட்டிற்கு அழைத்துச் சென்று குடும்பக்கோவிலில் நீலியைக் காண்பித்ததை முதல் தருணமாகக் குறிக்கிறார். இரண்டாவது தன்னுணர்வு தருணம் ஆறு வயதில் அவருடைய தமக்கை நீலியால் பீடிக்கப்பட்டு சன்னதம் கொண்டு ஆடியதைப் பார்த்தபோது ஜெயமோகனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இருக்கட்டும். இரண்டாவது தருணத்தை ஏற்படுத்திய இடம் இன்னும் விசேஷமானது ஏனென்றால் அது மேலாங்கோட்டு நீலி நின்ற இடம் அங்கே பல நடுகற்கள் இருக்கின்றன. நீலியை ஆதி தாயாக, தாய் தெய்வமாக வர்ணிக்கும் ஜெயமோகன் நீலியை வனத்தின் தெய்வம், நீல கேசி என்று நீட்டிப்பது மட்டுமல்ல தொல்கபிலர் பாடிய குடைவரை எழுதிய தொல்தமிழ்ப்பாவையே நீலிதான் என்றும் ஒரு போடு போடுகிறார்.
இங்கே சில கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.
நீலி தாய் தெய்வ வழிபாட்டினைச் சேர்ந்தவளா?
சமணத்திற்குள் 'புகுந்தவளாக' ஜெயமோகனால் குறிக்கப்படுகின்ற நீலியும், பழையனூர் நீலி, கள்ளியங்காட்டு நீலி, போன்ற நீலிகளும் ஒரே நீலிதானா?
நீலி கதைகள் நீலியைப் பற்றி என்ன சொல்கின்றன?
'நீலிக்கண்ணீர் வடிக்காதே' என்று போலியாகக் கண்ணீர் வடிப்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் பேச்சு வழக்கு இருக்கிறதே ஆதி தாய் தெய்வமா நீலிக் கண்ணீர் வடிக்கக்கூடியவள்?
நண்பர்களே ஜெயமோகன் ஒன்றும் வழக்கொழிந்து போய்விட்ட நீலி வழிபாட்டினைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவில்லை. பல்வேறு நீலி கதைகள் வில்லுப்பாட்டில் தென் மாவட்டங்களில் இன்றும் பாடப்படுகின்றன.
சு. சண்முக சுந்தரம் 'பழையனூர் நீலி கதையை' புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். பார்க்க http://tamilhindu.secretstories.org/t56580-topic
பார்பரா ஷூலர் என்ற ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அருகே உள்ள பழவூர் என்ற கிராமத்தில் நடைபெறும் இசக்கியம்மன் வழிபாட்டினையும் நீலி கதைப் பனுவல்களையும் ஆராய்ந்து ஆயிரம் பக்க ஆய்வு நூல் ஒன்று எழுதியிருக்கிறார். பார்க்க http://www.sai.uni-heidelberg.de/abt/IND/publikation/pub_pdf/schuler09.pdf
திருவாலங்காடு தல வரலாறு, திருவாலங்காட்டிற்கு அருகிலுள்ள பழையனூர் கிராமத்தில் நீலியினால் பெரும் அழிவுக்கு ஆளாக்கப்பட்டு தீப்பாய்ந்து இறந்து போன வேளாளர்களின் கதையைச் சொல்கிறது. பழையனூர் நீலி கதையையும் திருவாலங்காடு தல புராணத்தையும் சுருக்கமாக வாசிக்க விரும்புபவர்கள் கீழே நான் தந்திருக்கும் சுட்டிகளில் அவற்றை வாசிக்கலாம்.
நீலி கதைகளின்படி நீலி தாயல்ல, பேய். நீலி என்ற பேய் குல அழிவினை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக அவளுக்கு பிரீதி செய்யும் பொருட்டு கொடை விழாக்களும் கிராம வழிபாடுகளும் செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே படித்தானவை அல்ல.
இந்த இடத்தில் சில பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். ஒரு நாள் நான் திருவாலங்காடு கோவிலுக்குச் சென்று அங்குள்ள காரைக்காலம்மையார் பஞ்சலோக சிலையை பார்த்து வரலாமென்று கிளம்பிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் விக்கிரமாதித்யன் என்னைப் பார்க்க வந்தார். அவரும் திருவாலங்காடு வருவதாக சொல்ல, மேலும் எங்களோடு வருவதற்கு விருப்பமுள்ள வேறு நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவாயிற்று. கடைசியில் நான், விக்கிரமாதித்யன், இளையபாரதி, நடேஷ் எல்லோருமாய் திருவாலங்காட்டையும் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள வேறு கோவில்களை பார்த்து வரலாம் என்று கிளம்பினோம். திருவாலங்காட்டு கோவிலில் பழையனூர் நீலி கதைக்கும் கோவிலுக்கும் உள்ள தொடர்பினைப் பற்றி விசாரித்தேன். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செட்டி ஒருத்தனின் மனைவி நீலி. செட்டி விலைமாதுகளிடம் செல்லும் பழக்கம் உடையவன். அதை அவன் மனைவி நீலி கண்டித்ததால் நீலியை செட்டி கொன்றுவிட்டான். கொலை செய்யப்பட்ட நீலி பேயாக மாறி செட்டி பழையனூருக்கு அருகிலுள்ள காட்டின் வழி பயணம் செய்துகொண்டிருந்தபோது அவனைக் கொல்ல முயற்சி செய்தாள். ஆனால் செட்டியிடம் ஒரு மந்திர வாள் இருந்ததால் நீலியால் அவனை எதுவும் செய்ய முடியவில்லை. நீலி உடனே ஒரு அழகிய இளம் பெண்ணாக உருவெடுத்து கைக்குழந்தையுடன் தோன்றினாள். செட்டி பழையனூரை அடைந்தபோது நீலியும் இளம்பெண்ணாக பின்னாலேயே குழந்தையுடன் தொடர்ந்து வந்து சேர்ந்தாள். பழையனூரில் இருந்த எழுபது வேளாளர்களிடம் நீலி தன் கணவன் தன்னையும் தன் குழந்தையையும் சேர்த்துக்கொள்ளாமல் தன்னிடமுள்ள வாளினால் விரட்டி விடுகிறான் என்று நீலிக்கண்ணீர் வடித்து புகார் செய்தாள். வேளாளர்கள் செட்டியை நீலியுடன் சேர்ந்து இருக்கும்படி சொன்னார்கள். செட்டி நீலி ஒரு பேய் அவளுடன் தன்னால் சேர்ந்து இருக்க முடியாது என்று வேளாள்ர்களிடம் முறையிட்டான். ஆனால் பழையனூர் வேளாளர்கள் வணிகனின் பேச்சை நம்பாமல் நாங்கள் எழுபது பேர் இருக்கிறோம் பார்த்துக்கொள்கிறோம் என்று வாக்களித்து அவனை நீலியுடன் இரவு தங்குமாறு செய்தனர்; அவனுடைய மந்திர வாளினையும் அவனிடமிருந்து பறித்து வைத்துகொண்டனர். அதுவரைக் கள்ளக் கண்ணீர் வடித்த நீலி கள்ளப்புன்னகையோடு செட்டியோடு சென்று அன்றிரவு அவனைக் கொடூரமாகக் கொன்றுவிட்டாள். மறு நாள் செட்டி கொலையுண்டதை அறிந்த வேளாளர்கள் தாங்கள் வாக்களித்தபடி செட்டியைக் காப்பாற்ற முடியவில்லையே என்று வருந்தி 69 பேர் தீப்பாய்ந்து மாண்டனர். குலம் முழுவதும் நாசமாய்ப்போனது. பல்லாண்டுகளுக்குப் பின் தப்பிபிழைத்த ஒருவரால் குலம் தழைக்க அந்தக் குலமரபினர் திருவாலங்காடு ஈசனுக்கு தங்கள் வயற்காடுகளில் விளைந்த முதல் நெல்லை படைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது பழையனூர் நீலி கதையின் ஒரு வடிவம்; இக்கதைக்கு சிறு சிறு வேறுபாடுகளுடன் பல வடிவங்கள் இருக்கின்றன. நீலி செட்டியைக் கொலை செய்வதற்கு சகல நியாயங்களும் இருக்கின்றன. ஆனால் பழையனூர் வேளாளர்களின் அழிவுக்குக் காரணமாக அவள் ஏன் இருக்க வேண்டும்?
சிலப்பதிகார கண்ணகி கதையிலும் கண்ணகி கோவலன் கொலையுண்டதற்கு பாண்டிய மன்னனை அழித்தது நியாயமானது; ஆனால் மதுரையை முழுக்க எதற்காக எரித்து அழிக்கவேண்டும்? கேரளத்தில் மன்னார் பழங்குடியினர் மத்தியில் கோவலன் கதை வாய்மொழிக் கதையாக இன்றும் சொல்லப்பட்டு வருகிறது. கோவலன் மன்னார் பழங்குடியினருக்கு மூதாதையாகக் கருதப்படுகிறவன். மன்னார் பழங்குடியினர் கோவலன் கதையை சன்னதம் கொண்டாடி தன் மூதாதையரின் சந்நிதியில் சொல்லிச் சொல்லி கண்ணகி மதுரையை எரித்தது என்ன விதத்தில் நியாயம், கோவலன் சந்ததியினர் ஊர் விட்டு ஊர் ஓடுபவர்களாக மாறியது எந்த விதத்தில் நியாயம் என்று தங்கள் குலச் சடங்குகளின்போது இன்றைக்கும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய பிரார்த்தனையும் குல நாசம், பொதுவான பேரழிவு மீண்டும் நிகழ்ந்துவிடாமால் இருக்க வேண்டும், நீலியின் தாக்கத்திற்கு கண்ணகித்தாயார் மீண்டும் ஆட்படாமல் இருக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது.
திருவாலங்காட்டு கோவிலில் குல நாசத்தின் நினைவுச் சின்னங்களாக வேளாளர்கள் தீப்பாய்ந்த மண்டபமும் அதில் யாகம் வளர்த்து வேளாளர்கள் தீப்பாய்வது போல உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன; அவற்றுக்கு எதிரில் சாட்சி பூதேஸ்வரர் சந்நிதியும் தீப்பாய்ந்த இடமும் உள்ளன. பழையனூர் வேளாள மரபினரும் பிற்காலத்தோரும் அறியும் வகையில் “கூழாண்டவர் கோத்திரம் சாதாசேர்வை” என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோவிலின் முன் வாயிலில் உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற்படியாக வைத்துள்ளனர். அந்தக் கல்லின் முன்னால் நின்று ஒருவர் நீலியின் கதையைச் சொல்ல நாங்கள் கேட்டோம். கேட்டுக்கொண்டிருந்த இளையபாரதிக்கு வியர்த்து கொட்டிவிட்டது. அவர் மிகுந்த பதற்றத்திற்கு உள்ளானார். கோவிலிலிருந்து உடனடியாகக் கிளம்பிவிடவேண்டும் என்று எல்லோரையும் துரிதப்படுத்தினார். எனக்கு இளையபாரதியின் பதற்றம் புரிபடவில்லை. குல நாசக் கதையினை கேட்கும் எவருக்கும் இந்தப் பதற்றம் உண்டாகக்கூடியதே நீங்கள் மரபிற்கு வெளியே இருக்கிறீர்கள் இளையபாரதி மரபுக்குள்ளே இருக்கிறார் என்று விக்கிரமாதித்யன் பிறகு என்னிடம் விளக்கம் சொன்னார்.
பின்னாளில் பலசமயங்களில் நீலி வில்லடி கதைகளைக் கேட்கச் சென்றபோது, நீலியின் ஒரு வடிவமான இசக்கியம்மன் கதை வில்லடிப்பாட்டுகளைக் கேட்டபோதெல்லாம் நீலி அவளுடைய அழிக்கும் சக்தியின் பொருட்டே வழிபடப்படுகிறாள் தாய் தெய்வமாக அல்ல என்று தெரிந்து கொண்டேன். முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள இசக்கியின் சுடுமண் சிற்பங்களில் பல தன் வாயில் அப்போதுதான் பிறந்த சிசுவை தன் வாயில் வைத்து கோரைப்பற்களால் கடித்துக்கொண்டிருப்பதான பல சிற்பங்கள் இருக்கின்றன. வாயில் சிசுவை வைத்து எந்த தாய் தெய்வமாவது கடித்துக்கொண்டிருக்குமா ஜெயமோகன்?

நீலி கோவில்களின் அருகே நடுகற்கள் காணப்படுவது இயல்புதான். தட்சிண பீடபூமியில் நடுகற்கள் எதற்காக நடப்பட்டிருக்கின்றன? பாளயங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிபுரிந்த கேசவராஜின் முனைவர் பட்ட ஆய்வேடு நடுகற்களைப் பற்றியது. அவருடைய ஆய்வேடு சொல்கிறது விபத்தில் அகால மரணம் அடைந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள், கொலையுண்டவர்கள், போரில் மரணமடைந்தவர்கள் ஆகியோரின் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன; குலதெய்வமாகவும் பின்னாளில் வழிப்படப்பட்டன என்று. மூதாதையருக்கும் இறந்து போனவர்கள் அனைவருக்கும் நினைவுக்கற்கள் எழுப்பும் பழக்கம் பெருங்கற்களின் காலத்தில் உலகம் முழுவதும்-ஐரோப்பா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, மைய ஆசியா என இந்திய நிலப்பகுதி தவிர- பரவியிருந்தது. வரலாற்று காலகட்டத்திற்கு முந்தையது எனக் குறிக்கப்படும் பெருங்கற்களின் காலம் உலகம் முழுவது பரவியிருந்ததை http://www.megalithic.co.uk சுட்டியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கிறித்தவ கல்லறைகளில் மறைந்தவர்களின் பெயர் பொறித்த கற்களை நடும் வழக்கம் நினைவுக்கற்களின் மரபின் நீட்சியேயாகும்.
ஒரு பண்பாட்டு வெளிக்குள்ளாகவே நீலி கதை மற்றும் வழிபாட்டுக்கு இரு வேறுபட்ட உணர்வெழுச்சிகள் (ஒன்று ஜெயமோகனுடையது இன்னொன்று இளையபாரதியுடையது) இருக்கும்போது, நடுகற்கள்/நினைவுகற்கள் உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும்போது, நீலி கதையையும் வழிபாட்டினையும் நடுகற்களையும் வைத்து வரலாற்று தேசியத் தன்னுணர்வு புராதனமாக இருப்பதாக ஜெயமோகன் எப்படி கதைக்க முடியும்? தவிர ஆங்கில ஆய்வாளர்கள் ஆராய்ந்த குகை ஓவியங்களையும் நீலி வழிபாட்டினையும் வேறு ஜெயமோகன் தொடர்புபடுத்தி தன்னுடையது ஆய்வுக்கட்டுரை என்ற மயக்கத்தினையும் நீலி தாய் தெய்வ வழிபாட்டிற்கு ஒரு இடையறாத தொடர்ச்சி இருப்பதுபோலவும் காட்டிக்கொள்கிறார். அவர் ஏதேனும் ஒரே ஒரு குகை ஓவியத்தையாவது தன் வாதத்திற்குப் பொருத்தமாகக் காட்டமுடியுமா?
ஆதிகாலத்திலிருந்து தொடரும் தாய்தெய்வ வழிபாடு ஒன்றினை தேசத் தன்னுணர்வோடு இணைக்கும் ஜெயமோகனின் கற்பிதம் அழகானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் அது உண்மையானதும் அல்ல தர்க்கபூர்வமானதும் அல்ல சான்றுகள் உடையதும் அல்ல. வர்ஜீனியா வுல்ஃபின் Orlando நாவலின் கற்பனையை ஒத்தது. நாவலுக்கு உதவும்; வரலாற்று ஆராய்ச்சிக்கு உதவாது.
ஜெயமோகனின் தர்க்க பிழைகள் என்னென்ன?
முதலில் அவர் தன்னையே எல்லாவற்றிற்கும், எல்லோருக்குமான அளவுகோலாகக் கருதிக்கொள்கிறார். தன் யூகங்கள் உண்மையானவையா என்று சோதித்து கூட அவர் பார்ப்பதில்லை. உதாரணமாக தன் குடும்பக் கோவிலின் நீலி கதை என்ன என்று அவர் தன் பெற்றோரையோ தமக்கையையோ கேட்டிருக்கலாம். அல்லது அவர் பெரிதும் மதிக்கக்கூடிய நாட்டுப்புறவியல் அறிஞரான ஏ.கே.பெருமாளிடம் விசாரித்திருக்கலாம்.
இரண்டாவதாக இந்த குழந்தை ஜெயமோகன் படு dangerous fellow ஆக இருக்கிறான்; வேறொரு உரையில் குழந்தை ஜெயமோகன் ஆசாரி ஒருவர் பூணூல் போட்டிருப்பதை பார்த்துவிடுகிறான் ஆகவே வளர்ந்த ஜெயமோகன் அந்தக் காலத்தில் எல்லா சாதியினருமே பூணூல் போட்டிருந்தார்கள் என்ற, முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிடுகிறார். மூன்று வயதில் ஆறு வயதில் அடைந்த பார்த்த அனுபவங்களையெல்லாம் வரலாற்று தேசாபிமான தன்னுணர்வு என்று வளர்ந்த ஜெயமோகன் குறிப்பிடுவாரேயென்றால அவர் வளர்ச்சியடைந்தது உண்மைதானா என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.
பண்பாட்டு தேசியவாதத்தின் தர்க்கப் பிழை சாவர்க்கரிடம் ஆரம்பிக்கிறது. சாவர்க்கர்தான் முதன் முதலில் ஹிந்து எனப்படுவது மதமல்ல, பண்பாடு என்று கூறி பண்பாட்டு தேசியவாதத்தினை உருவாக்கினார். ஒரு தேசத்திற்குள்ளாக பல்வேறு வகைப்பட்ட வேறுபாடுகளை பண்பாட்டு தேசியவாதம் தன்னுடைய பலமாக அங்கீகரிப்பதற்கு பதிலாக ஒரு ராட்சசத்தனமான ஒருமையை தேசப் பிரஜைகள் அனைவரின் மீதும் திணிக்கிறது. சாவர்க்கரின் ஹிந்து பண்பாட்டு தேசியவாதம் இஸ்லாமியரையும், கிறித்தவர்களையும் இந்திய தேசத்திற்கு பண்பாட்டு தேசியவாதத்தின் மூலம் எதிரிகளாக உடனடியாகக் கட்டமைத்துவிடுகிறது. பண்பாட்டு தேசியவாதத்தை புராதனமாகக் காட்ட விழையும் ஜெயமோகனுக்கும் ஒரு எதிரி தேவைப்படுகிறார். அந்த எதிரியை பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கவாதிகளை சுட்டிக்காட்டி ஜெயமோகன் தன் கட்டுரையில் உருவாக்குகிறார். பிரிட்டிஷ் காலனீய ஆதிக்கத்தின் கொடுமைகள் பொதுத்தளத்தில் இன்னும் அறியப்படாததாகவே இருக்கின்றன என்பதும் காலனீய ஆதிக்கத்தின் ஈவு இரக்கமற்ற கொடுமைகள் மேலும் மேலும் வெளிவர வேண்டும் என்பதும் உண்மைதான். ஆனால் காலனீய ஆதிக்கத்தின் கொடுமைகள் இந்திய நிலப்பகுதியில் சாதி அமைப்பு இல்லாமலிருந்தால் சாத்தியப்பட்டிருக்குமா என்பதையும் நாம் கூடவே சேர்த்து அறிந்து கொள்ளவேண்டும். ஜெயமோகன் உதாரணம் காட்டும் பிரிட்டிஷ் கால இந்திய பஞ்சங்களில் பட்டினியால் மடிந்தவர்கள் ஏன் கீழ்ச் சாதியைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருந்தார்கள் என்றும் நாம் கேட்கவேண்டும். அப்படிக் கேட்கும்போதுதான் என்ணிக்கையில் குறைந்த ஆங்கிலேயரின் காலனீய கொடுங்கோலாண்மை என்பது இந்திய நிலப்பகுதியின் வன் கொடுமையான சாதி அமைப்பாலேயே சாத்தியமானது என்பது புலனாகும். சாதிய அமைப்பைச் சார்ந்த குல உணர்வுகளை புராதன வரலாற்றுத் தேசிய தன்னுணர்வு என்று கூறுவதன் மூலம் நாம் தொடர்ந்து காலனீயத்திற்கு உட்பட்டவர்களாக இருப்போமேயன்றி காலனீய கொடுமைக்கும் தொடரும் காலனீய மனப்பான்மைகளுக்கும் எதிரானவர்களாக மாறமாட்டோம்.
வரலாற்று தேசத் தன்னுணர்வு எனப்படுவது புத்திபூர்வமானது; உணர்வுபூர்வமானது அல்ல. இன்று இந்தியதேசம் எதிர் நோக்கி இருக்கும் சிக்கல்கள் எண்ணற்றவை அவற்றை தீர்ப்பதற்கு தீர்க்கதரிசனங்களோடு கூடிய திட்டங்கள் தேவை. தேசம் என்பது நிலப்பகுதியல்ல; மக்கள். தேச நலன் என்பது பெருவாரி மக்களின் நலனும் அமைதியான நல்லுறவுகளுடன் கூடிய வாழ்வே என்பதுதான் வரலாற்று தேசத் தன்ணுணர்வு உண்டாவதற்கான முதல் தொடக்கப்புள்ளி. அந்தத் தொடக்கப்புள்ளியிலிருந்து தேவைப்பட்டால் நம்மால் ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்‘ என்றும் முழங்கமுடியவேண்டும். அப்படி மக்களின் நலன்களை முன்னிறுத்தும் சிந்தனை யாவும் கற்பிதமான புராதன குலத் தன்னுணர்வினை தேசத் தன்னுணர்வாக எடுத்தியம்பும் ஜெயமோகனின் கட்டுரையை நிராகரிக்கவே செய்யும்.
ஜெயமோகனின் கட்டுரையில் அவர் ஆதிச்சநல்லூர், அதிராமபட்டிணம், ஹரப்பா என தொல்லியல் களன்களை ஒற்றையடியில் இணைப்பதன் அபத்தம் குறித்து தனிக்கட்டுரைதான் எழுத வேண்டும்.
ஜெயமோகனின் கட்டுரையில் அவர் ஆதிச்சநல்லூர், அதிராமபட்டிணம், ஹரப்பா என தொல்லியல் களன்களை ஒற்றையடியில் இணைப்பதன் அபத்தம் குறித்து தனிக்கட்டுரைதான் எழுத வேண்டும்.
No comments:
Post a Comment