Wednesday, August 13, 2014

ஆறு வார்த்தை கதைகளும் ஒரு வார்த்தை கவிதையும்

Narrative இலக்கிய பத்திரிக்கை ஆறு வார்த்தைகளில் மட்டுமே எழுதப்பட்ட கதைகளை பிரசுரத்திற்கு கோரியுள்ளது. மிகச் சிறிய வடிவங்களில் கதை, கவிதை எழுதப்படுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கின்றபடியால் அதுவும் இந்த வார்த்தைப் பெருக்கம் (சுனாமி?) நிறைந்த தமிழ் இலக்கிய காலகட்டத்தில் என்னுடைய ஆர்வம் ஒன்றும் அவ்வளவு against the grain இல்லை என்பதை Narrative பத்திரிக்கையின் அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது.  சில ஆறு வார்த்தை கதைகளுக்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக பின் வரும் கதைகள் கருதப்படுகின்றன.

For sale: Baby shoes, never worn.
—Ernest Hemingway

Longed for him. Got him. Shit.
—Margaret Atwood

Without thinking, I made two cups.
—Alistair Daniel

Revenge is living well, without you.
—Joyce Carol Oates

வில்லியம் ஃபாக்னர் ஒரு முறை சொன்னார் தோற்றுப்போன சிறுகதை ஆசிரியனே நாவலாசிரியன்; தோற்றுப்போன கவிஞனே சிறுகதை ஆசிரியன் என்று. குறுகிய வடிவத்தில் சாதிக்க இயலாதவன்தான் பெரிய வடிவங்களைத் தேடிச் செல்லும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறான்.  

ஆனால் ஃபாக்னர் அல்ல ஹெமிங்வேதான் ஆறு வார்த்தைகளினால் ஆன கதைகளை எழுதியவர்.

ஹெமிங்வேயையும் ஃபாக்னரையும் விட ஒரு படி தாண்டிச் சென்றார் மகானுபாவர் போர்ஹெஸ்; அவர் ஒர் வார்த்தையாலான கவிதையைத் தேடி சென்றவனைப் பற்றிய சிறுகதை எழுதினார். போர்ஹெஸின் ஒரு வார்த்தை கவிதையைத் தேடிச் சென்ற காதாபாத்திரம் நான்தான் என்று எனக்கு அடிக்கடி தோன்றும். அத்தனை அலங்காரங்களையும் துறந்து அத்தனை விவரணைகளையும் துறந்து மொழி நன்றாக பட்டைத் தீட்டப்பட்ட வைரம் போல ஜொலிக்கையில் மொழி அதன் தூய(?) வடிவத்தில் கவித்துவ தருணத்தை ஏற்படுத்துமானால் அதை மனிதர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள முடியுமானால் அது எத்தனை பெரிய சாதனையாக இருக்கும்! நான் minimalist poetryஐ என்னுடைய கவிதைகளுக்கான வெளிப்பாட்டு வடிவமாகத் தேர்ந்தெடுத்தது போர்ஹெஸின் கதாபாத்திரமாக என்னைத் தொடர்ந்து உணர்ந்ததால்தான் என்றால் யாராவது நம்புவார்களா?

காதலை, அனுபவித்த பேரழகினை, துக்கத்தினை, இசையை, கடவுளை, பெரும் கனவை, எல்லையின்மையினை ஒரே வார்த்தை கவிதையினால் நான் சொல்லக்கூடுமென்றால் அதைப் பிறரும் செய்ய நேரிடும் என்றால் இந்த உலகம்தான் எத்தனை சுபிட்சம் நிறைந்த இடமாக மாறிவிடும்.  மனித குலத்தின் மேல் இன்னும் என்னிடத்தில் அழியாமல் இருக்கும் நன்நம்பிக்கையும் அது சார்ந்த லட்சியவாதத்தினாலும் ஆனதே minimalist poetryஐ நான் தொடர்ந்து எழுத விழைவது.  

தமிழில் நான் இதுவரைக்கும் ஒரே ஒரு ஒரு வார்த்தை கவிதையைத்தான் கண்டுபிடித்திருக்கிறேன். வியக்கத்தக்க காப்பியமான மகாபாரதத்தினை தெருவில் நிகழ்த்தக்கூடிய, சமயாசந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பெரிய மரியாதையையும், கடும் இளக்காரத்தினையும் ஏற்படுத்தக்கூடிய, தத்துவமாகவும், நிகழ்த்துதலாகவும், சடங்காகவும், நாடகமாகவும், திருவிழாவாகவும், கொண்டாட்டமாகவும், தீமிதியையும், சன்னதத்தையும், புனர் வாழ்வினையும் ஒருங்கே கோரக்கூடிய “கூத்து” என்ற நிகழ்கலை வடிவமே, போர்ஹெஸின் கதாபாத்திரம் தேடிய ஒற்றை வார்த்தை கவிதை.


கூத்து. 

No comments: