சங்கீத நாடக அகாடமியின் மையக்குழு உறுப்பினராக நான் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன். என்னுடைய நியமன பணிக்காலத்தில் மேதகு அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார். சங்கீத நாடக அகாடமி மட்டுமல்லாமல் சாகித்ய அகாடமி, லலித் கலா அகாடமி ஆகியவற்றிற்கும் மைய பொதுக்குழு தலைவராக இருப்பவர் இந்திய ஜனாதிபதி ஆவார். ஒவ்வொரு வருடமும் பரிசளிப்பு விழாக்களை ஒட்டி அகாடமிக்களின் மையக்குழு கூட்டமும் நடைபெறும். பரிசளிப்பு விழா, தேர்ந்தெடுப்பிற்கான கூட்டம் இரண்டையும் ஒட்டி ஜனாதிபதி விருந்தளிப்பார். அந்த விருந்தினை மையக்குழு உறுப்பினர்களிடமிருந்து கருத்துக்களை நேரடியாகக் கேட்டுத்தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பமாகவும் ஜனாதிபதி பயன்படுத்திக்கொள்வார்.
நான் சங்கீத நாடக அகாடமியின் மையக்குழு உறுப்பினராக பணியாற்றிய ஐந்து ஆண்டுகளின் போது யுவபுரஸ்கார் விருதுகள் நிறுவப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் பரிசளிப்பு விழாக்களை பார்க்க பரிதாபமாக இருக்கும். பரிசு பெற தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மிகவும் முதுமையடைந்தவர்களாக இருப்பார்கள். பரிசு பெறுவதற்காக சிலரை நோயாளிப் படுக்கையில் வைத்தே தூக்கி வருவதை நான் பார்த்திருக்கிறேன். வேறு சிலர் மறைந்துவிட்டிருப்பார்கள். அவர்களுடைய வாரிசுகள் வந்து சம்பந்தமில்லாத முக பாவங்களோடு பரிசுகளை வாங்கிச் செல்வார்கள். வருடாந்திர பரிசுகள் மட்டுமே ஓரளவு விழாவுக்குரிய தோரணையுடன் மகிழ்ச்சியாக இருக்கும். தேர்வுக்குழு விவாதங்களின் போது இன்னார் முக்கியமான கலைஞர், அவருக்கு மிகவும் வயதாகிவிட்டது, இந்த வருடம் பரிசினைக் கொடுத்துவிட்டால் நல்லது, அடுத்த வருடம் என்ன நடக்குமோ தெரியாது என்ற வாதத்தினைக் கேட்கும்போது வயிற்றை பிசையும். மறு கேள்வி கேட்காமல் உறுப்பினர்கள் கையை உயர்த்தி முன்வைக்கப்பட்ட பெயருக்கு பரிசு கொடுக்க வாக்களித்துவிடுவார்கள். ஒரு முறை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அத்தனை வயசாளிகளுக்கும் ஒட்டும் மொத்தமாக ஒரே வருடத்தில் பரிசளித்துவிட்டால் என்ன என்றொரு யோசனையை முன் வைத்தார். பரிசு எனப்படுவது உரிய வயதில் திடகாத்திரமாக இருக்கும் போது வழங்கப்பட்டால்தான் பரிசு பெற்றவர் ஊக்கமடைந்து மேலும் பங்களிப்பாற்றுவார், பரிசுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் என்று வாதிட்டார். நாங்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தோம்.
மத்திய வயதில் இருக்கும் கலைஞர்களுக்கு, இள வயதில் இருப்போருக்கு அகாடமி விருதுகளும் பரிசுகளும் அளிக்கப்படவேண்டும் என்று மேதகு ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களிடத்து அந்த ஆண்டு விருந்திற்கு கூடியபோது கோரிக்கை விடுத்தோம். அதன் பிறகு உரையாற்றிய மேதகு அப்துல் கலாம் அவர்கள் தன்னுடைய தயாரிக்கப்பட்ட உரையிலிருந்து விலகி இள வயதினருக்கும் மத்திய வயதினருக்கும் அகாடமி விருதுகள் வழங்கப்படவேண்டும் என்பது உறுப்பினர்களின் அவா மட்டுமல்ல தன்னுடைய விருப்பமும் கூட என்று தெரிவித்தார். சொல்பவர் ஜனாதிபதி என்பதால் அவருடைய பேச்சே அரசாங்க ஆணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த வருடமே யுவ புரஸ்கார் விருதுகள் மூன்று அகாடமிக்களிலும் ஒன்றன் பின் ஒன்றாக நிறுவப்பட்டன.
இன்று சாகித்திய அகாடெமியின் யுவ புரஸ்கார் விருது அபிலாஷின் ‘கால்கள்’ நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கும் செய்தியினை வாசித்தபோது மேதகு ஜனாதிபதி அப்துல் கலாமின் உடனடி செயலாற்றும் பண்பும், அவர் அறிவித்த நிகழ்ச்சியும் நினைவுக்கு வந்தன.
அபிலாஷுக்கு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment