Thursday, August 14, 2014

அதிகமும் பாடல்பெற்ற விலங்கினம்



பூனைகளை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் பூனைகளின் புகைப்படங்களை விரும்பிப் பார்க்கிறேன்; சேகரித்து வைக்கிறேன். பிம்பமாகின்ற பூனைகளிடத்தே ஏதோஒரு மனித வசீகரம் அமைதியாவதாக எனக்கொரு எண்ணம் எப்பொழுதுமே உண்டு. அதனால்தான் கவிதைகளில் பூனைகள் அதிகமும் உலக இலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன. ‘பூனைக் கவிதைகள்’ என்றொரு தொகுப்பு கொண்டு வந்தால் அதுதான் உலக விலங்குகளிலேயே மிகவும் அதிகமாக பாடல் பெற்ற விலங்கினமாக இருப்பது தெரியவரும். டி.எஸ். எலியட் மட்டுமே எத்தனை பூனைக் கவிதைகள் எழுதியிருக்கிறார்! லண்டன் வீட்டுக் கூரைகளின் மேல் உரசிச்செல்லும் அதிகாலைப் பனியைப் பார்த்தால் கூட அவருக்கு கால்களை உரசும் மஞ்சள் பூனையோடுதான் ஒப்பிடத் தோன்றும். 

அல்டஸ் ஹக்ஸ்லி


பூனைகள் எழுத்தாளர்களின் கற்பனையை ஆக்கிரமிப்பதற்கான காரணம் அல்டஸ் ஹக்ஸ்லி எழுதிய வாக்கியத்தின் மூலம் எனக்குத் தெளிவாகியது. “காதலோடு தொடர்ந்து வசியப்படுத்த நினைக்கும் மனைவிப்பூனையின் முன்னால் நேரடியாக கொட்டாவி விட்டு தன்னுடைய பேரலுப்பினை ஆணவத்துடன் தெரியப்படுத்தும் சியாமிஸ் பூனையின் தைரியம் எந்த மனிதனுக்கும் வாழ்நாளில் வராது” என்று ஒரு முறை எழுதினார் ஹக்ஸ்லி. பூனைகளின் பாவனைகளைப் போல மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளை அவற்றின் போதாமைகளை சொல்லக்கூடிய வேறு வகை வெளிப்பாடுகள் நமக்குக் காணக்கிடைப்பதில்லை. 

சாமுவேல் பெக்கெட்


சாமுவேல் பெக்கெட் ஒரு சிறு கூடை நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் இரு பூனைகளை உற்று நோக்கும் புகைப்படம் ஒன்றினை பல மாதங்கள் என் கணினி திரை புகைப்படமாக வைத்திருந்தேன். பூனைகளை பிடிக்காத எனக்கே உற்று நோக்குவதற்காக என்றே ஒரு பூனையை வளர்க்கலாமா என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. பெக்கெட்டின் கதாபாத்திரங்களாகிய மர்ஃபியும் வாட்டும் பூனைகளை உற்று நோக்கியதால் உருவானவர்களே என்று என்னுள் விமர்சனக்குறிப்பொன்று ஓடிக்கொண்டே இருக்கும். 

எஸ்ரா பவுண்ட்


எஸ்ரா பவுண்டின் மூன்று பூனைகள் அவருடைய காலத்தில் மிகவும் இலக்கிய பிரசித்தி பெற்றவை. உலகப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் பவுண்ட் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டபோது அவரோடு அவருடைய மூன்று பூனைகளும் நீதிமன்ற விசாரணையை சந்தித்தன என்றொரு பேச்சு உண்டு.

போர்ஹெஸ்


போர்ஹெஸ் தன்னுடைய பூனையை ‘அலெஃப்’ என்ற அவருடைய முடிவின்மையின் பெயரால்தான் அழைத்திருக்கவேண்டும்; முடிவின்மை அது பாட்டுக்கு சோம்பல் முறித்துக்கொண்டிருக்க இவர் பாட்டுக்கு தன் அக தியானத்தில் ஈடுபடுபவராக இருந்திருக்க வேண்டும். 

சார்த்தர்


சார்த்தர் எழுதும்போது பல சமயங்களில் தன் பூனையினை ஒரு கையால் அணைத்துக்கொண்டுதான் எழுதுவார் என்று வாசித்திருக்கிறேன். அது உண்மையாக இருக்கமுடியாது என்றே நான் நினைப்பேன் ஏனென்றால் பூனையுடன் கூட அவ்வளவு அன்னியோன்யமாக உணர்ந்தவர் எப்படி அந்நியமாதலைப் பற்றி எழுதியிருக்க முடியும்? 

சார்ல்ஸ் புயுக்கோவ்ஸ்கி


ஒருவேளை, பூனைகள் எதுவுமே சொல்வதில்லையோ? பூனைப்புகைப்படங்கள் அத்தனையுமே ஏதோ ஒரு வைகையில் அபத்தமானவைதானோ? சார்ல்ஸ் புயுக்கோவ்ஸ்கி தன் பூனையுடன் இருக்கும் புகைப்படத்தினையும் அவர் எழுதியிருக்கும் ஒரு பூனை கவிதை வாசித்தலோடு இணைத்துப் பாருங்கள். 
The History Of One Tough Motherfucker
by Charles Bukowski (last verse)
I shake the cat, hold him up in 
the smoky and drunken light, he’s relaxed he knows… 
it’s then that the interviews end 
although I am proud sometimes when I see the pictures 
later and there I am and there is the cat and we are photo- 
graphed together. 
he too knows it’s bullshit but that somehow it all helps.

ஏதோ ஒரு வகையில் உதவியாக இருந்தாலும் இந்த பூனை புகைப்படவிவகாரமே அபத்தம்தான் என்று தோன்றும்.  

ஸ்ல்வியா ப்ளாத்


ஸில்வியா ப்ளாத் சிறுமியாக தன் கையில் பூனையுடன் நிற்கும் புகைப்படத்தையும் அவருடைய “And I a smiling woman. 
I am only thirty. 
And like the cat I have nine times to die” என்ற வரியினையும் படிக்கும்போது புயுக்கோவ்ஸ்கி சொல்கிற அபத்தம் உறுதிப்படும். 

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா


இருந்தாலும் நான் பூனை வளர்க்க நேரிட்டாலோ அல்லது பூனையை ஒரு காதாபாத்திரமாக ஏதேனும் ஒரு படைப்பில் உலவ விட்டாலோ நான் என் பூனைக்கு ஜார்ஜ் பெர்னார்ட் ஷா என்றுதான் பெயர் சூட்டுவேன். ‘பிக்மாலியனும்’ ‘’ஆப்பிள் கார்ட்டும்’ எழுதிய அவரே பூனைகளின் தந்திர ‘உலகப் பார்வையை’ இலக்கியத்தில் வெளிப்படுத்தியவர்.


நகுலனின் பூனைகள் பற்றி எழுத கை துறுதுறுக்கிறது. ஆனால் நான் எழுதப்போவதில்லை. எழுதுவானேன் எழுதி நண்பர் பேயோனுக்கு ‘சேவ் நகுலன்’ போல ‘சேவ் நகுலனின் பூனை’ என்றொரு கவிதை எழுத சந்தர்ப்பம் கொடுப்பானேன். 


No comments: