Friday, November 4, 2016

அனாதையின் காலம் | பகுதி 2 | மருள் தோற்றங்கள் | நீள் கவிதை

அனாதையின் காலம் | பகுதி 2 | மருள் தோற்றங்கள்


Strong Dream - Paul Klee 1929

-->


ஒளி நெறி : எள்ளுப் பூ
----
நனைந்த தென்னங்குரும்பைகளின் நடுவே
சூரிய ஒளிக்கு ஏங்கி
பூத்திருக்கிறது ஒற்றை எள்ளுப்பூ
முலைகள் விம்மி கூந்தல் விரித்து
தரையில் படுத்திருக்கும் பெண்ணின்
நாசி போல

கன்ணில் பூ விழுந்தவனுக்கு
சாறு பிழிய
பறித்து செல்கிறான் ஒருவன்

யாரோ ஒருவனின்
கண் வழி
ஒளி அறிகிறது
எள்ளுப் பூ
--
1
சகல சலனங்களையும் நிறுத்திவிட்ட
பரிசுத்த ரகுநந்த பக்குவி
தன் சாவை தானே
அகக் காட்சிப்படுத்தி
பார்த்ததாவது;

கரு மேகம் கலைகையில்
வெட்கி வெளிப்பட்டு
அந்தகாரம் காட்டும்
கீற்று நிலா நுனி

ப்ளீஸ் கால் மீ பேபி
என்றவாறே உதிர்ந்து தரை தொடா
அந்தரத்தில் விரியும் நடுநிசி
பிச்சிப்பூ

புணர்ந்த குறி ஊன்றி நிற்க
 உச்சம் தொடும் முன்
கணத்தில் சுழிக்கும்
உதடு

பிடரி மயிர் சிலுப்புதலில்
நீர்த் திவலைகள் காற்றேக
ஓடும் நிலையில் உறையும்
குதிரை

பாடைக்கு வீசிய பூவிதழ்களின்
சாலை செவ்வந்தி மஞ்சள்
நடுவே தனித்துக் கிடக்கும்
வாடாமல்லி

--

வியாபார நிமித்தம்  செல்லும்
கடவுளின் அவசரத்தோடு ரகுநந்தன்
சுழல் மச்சுப்படிகள் ஏறியது உன்
சரிதைக் குறிப்பற்று மூளியாய்
நிற்பதாய் நீ முனகியதும் உறுமியதும்
யார் அறிவார் பெண்ணே யார் அறிவார்

மனித உரு ஓளி அச்சு
அலை அலையாய் படிக்கொரு நினைவு உதிர
மேலேறிச்  சென்றபோது
மையோ, மரகதமோ, மறிகடலோ,
மழைமுகிலோ, ஐயோ இவன் வடிவமென
எதைக்கூறுவாய் பெண்ணே எதைக்கூறுவாய்

ஒளி அச்சை சிலை சிலையாய்
வடித்த போதும் அது கல்லாய்
இரும்பாய், மலையாய், காற்றாய்,
உன் உடலாய், உயிராய், உன் மூச்சாய்
மட்டுமே உயிர்த்ததென பெண்ணே
யார் சொல்வார் யார் சொல்வார்

உன் உள்ளுடல் வாசம்
இருள் படிக்கட்டென்று உணர்ந்தபோதும்
உன் உந்திச் சுழி மிதித்தே
உன்னி ஏறிய பாதம்
அனந்தகோடி பிரகாசம் கலந்ததென
பென்ணே யார் கண்டார், யார் கண்டார்
--
 3

அதிகாலைச் சூரியன் மெல்லிய
முனகலைப் போல மேலெழும்போது
ஒரு கப் ஊற வைத்த வெந்தயம்

பின்னர் இடது கை நாளிதழ் பிடிக்க
வலது கை இடது விலா அழுத்த
மும்மலம் அகற்றும் பாவனை

ஷவருக்கடியில் சாய் பாபா மந்திரம்
காலையுணவு இரண்டு இட்டிலி
½ கப் சாம்பார்

அலுவலகப் பயணம் சஷ்டி கவசம்
உட்கார்ந்த இடத்தில்
உலுத்துப்போவதுதான் வேலை

மதிய உணவு உப்பிலா கஞ்சி
முளை கட்டிய பயறு குலதெய்வ அருள்
வெள்ளரிப் பிஞ்சு நாலு துண்டு

இரவுக்கு ஓட்ஸ் கஞ்சி
½ கப் வேக வைத்த முசுமுசுக்கீரை
முண்டக்கண்ணி அம்மன் துணை

ரகுநந்த பக்குவி
தன் நித்திய கரும விதியில்
திளைக்கிறான் அவ்வபோது கனைக்கிறான்

ஆனால் கசந்த தன் நாவைச் சுழற்றி
அண்ணம் தொட்டு குமுறுவதில்லை

ஒருக்களித்து படுத்தால் வரும்

முழங்கை வரை நெய் வழியும்
சர்க்கரைப்பொங்கல் கனவாய் ஒரு
சாந்தி மந்திரம்

--
4

வீடு திரும்புவற்கான பாதையில்
இருள் சூழ்ந்துவிட்டது
பசியடங்கிய வயிறு போல
எங்கும் மௌனம் கவிந்துவிட்டது
இனியெங்கும் செல்வதிற்கில்லை
ஆதலால்
சொற்களின் நினைவுகளில்
மகரந்தங்களை யாசிக்கிறாய்
ஏதோ ஒரு கூடுதலில்
லயம் கூடுமென நினைக்கிறாய்
ஏதோ ஒரு ஒடுங்குதலில்
உத் கீதம் எழுமென நம்புகிறாய்
ஏதோ ஒரு அபத்தம் பற்றுகையில்
அழகு விகசிக்குமென ஏங்குகிறாய்
உன் ஆழ் மனக் குகையில்
விடாது சொட்டும்
நீர்த்துளிகளுக்கு
கண் என்றும்
மீன் என்றும்
சிறகென்றும்
பெயரிடுகிறாய்
கண் ஒளியாக
மீன் கடலாக
சிறகு வானாக
உன் ஈடு
வீடு பேறாகிறது
--

5

உன் புகைப்படத்தை புனிதமாக்க
சிந்திய புன்னகை நீ
அமர்ந்திருந்த பலகணி
எந்நேரமும் உடையக்கூடுமெனவோ
உன் முன்னே இருந்தது சிதிலத்தின்
சுவர் எனவோ உன் கருந்தோல்
சுமக்கும் பாரம் கைவிடப்பட்ட
நெடுஞ்சாலை நாயெனவோ
யாருக்கும் சொல்வதில்லை
இவ்வாக்கியங்களை சேர்த்தும்
பிளந்தும் படிப்பது போல உன்
புன்னகையையும் சிறிது ஒக்கிட்டிருக்கலாம்
உதடுகளைக் கோணாமல் உன்
மருத்துவனின் வரவேற்பறை நாற்காலி போல
நேராக பளபளப்பாக வைத்திருக்க வேண்டும்
கண்களை இன்னும் குறுக்கி
யுனெஸ்கோ போஸ்டர் குழந்தையின் சாயல்
வருவதை தவிர்த்திருக்க வேண்டும்
பெருமூச்சையும் ரகுநந்த உன் கழுத்து
வலியையும் சாதுர்யமாய் மறைத்து
நகரத்தின் கருநீலக் கண்ணாடி கட்டிடம் போல்
நின்றிருக்க வேண்டாம்
உன் வாழ்க்கையும் அசலெனச் சொல்ல
--
6

உன் வாழ்க்கையும் அசலெனச் சொல்ல
நீ அமர்ந்திருந்த பலகணி
எந்நேரமும் உடையக்கூடுமெனவோ

உன் கருந்தோல் சுமக்கும்
யுனெஸ்கோ போஸ்டர் குழந்தையின் சாயல்
சிதிலத்தின் சுவர் எனவோ

யாருக்கும் சொல்வதில்லை
உன் புகைப்படத்தை புனிதமாக்க
நீ சிந்திய புன்னகை

கைவிடப்பட்ட
இவ்வாக்கியங்களை சேர்த்தும்
பிளந்தும் படிப்பது பாரம்

பெருமூச்சையும் ரகுநந்த உன் கழுத்து
வலியையும் சாதுர்யமாய் மறைத்து
உதடுகளைக் கோணாமல்

சிறிது ஒக்கிட்டிருக்கலாம்
நெடுஞ்சாலை நாயெனவோ
நின்றிருக்க வேண்டாம்

கண்களை இன்னும் குறுக்கி
நேராக பளபளப்பாக வைத்திருக்க வேண்டும்

நகரத்தின் கருநீலக் கண்ணாடி கட்டிடத்திலுள்ள
மருத்துவனின் வரவேற்பறை நாற்காலி
வருவதை தவிர்த்திருக்க வேண்டும்
-
7

கதவுகளை நீ விரும்பவில்லை
அவை எவற்றையோ திறக்கின்றன

படிகள் உனக்கு பிடிக்காது
அவை  மேலேயோ கீழேயோ செல்கின்றன

முடிச்சுகளை நீ ஆராதிக்கிறாய்
அவற்றை அவிழ்த்தபின் ஏதும் இருப்பதில்லை

நீந்தும் மீன் கடல் நனவு கொள்வதில்லை
பறக்கும் பறவை வான் நனவு கொள்வதில்லை
என்பதோர் முடிச்சு
-
8

நெட்டிலிங்க மரத்தை
தொட்டியில் வளர்ப்பவனும்
உள்ளாடைகளை
மொட்டைமாடியில் உலர்த்துபவனும்
அறிவதில்லை

விரிவுலகில்
நீரென்று ஓடினால் அது
கடலொன்றில்தான்
சங்கமிக்குமென்பதை

காலச்சுழிப்பில்
கடும்புலிகள் அழிந்துபோம்
மெல்லிள மான்களும்
முயல்களும் நீடித்திருக்கும்

நுட்பத்தில் சிலிர்க்கும்
முயல் காதும்
மான் காதும்
மூன்றாம் நபரின்
இதயத் திரை

அத் திரை விலகலின்
தரிசனம் நோக்கி
நகர்கிறது வரலாறு
-
9

நொறுங்கிய உன் பிரக்ஞையில்
ரகுநந்த
பொருநை எங்கோ ஓடிக்கொண்டிருக்கிறாள்
வற்றாத ஜீவ நதி அவள்
சிந்துபூந்துறை வடக்கு வீதியின்
ஒற்றைப் பன்னீர் புஷ்ப மரத்தடியில்தான்
 அவள்  கடல் சேரும் முத்துக்களை
உன் காலடியில் கொட்டியதாக
கவி பாடினான் காளிதாசன்
சல சலக்கும் பொருநை
கடல் தேடுவதாய் நள்ளிரவில்
நகர வீதிகளில் அலைகிறாய்
தேங்கிய நீரெல்லாம் ஒளிரும் நிலவு
பொருநையோடு நகருமென்பதாகவே
உனக்குள் உன் உயிரென நீ
உருவேற்றிக் கொள்கிறாய்
எந்த இரவும் போதுவதில்லை
இழந்த நிலத்தை இரு முறை
கனவு காண
எந்த நிலமும் உன் நிலமல்ல உன் மனம்
என உருவெளி முகம் பொருந்த
பொருநே
மீண்டுமோர் சந்திரோதயம்
மீண்டுமோர் மருள் தோற்றம்
உன் பிம்பம் உன் அபினி
--


No comments: