Wednesday, November 16, 2016

அனாதையின் காலம் | பகுதி 3 | வாசனைகள் | நீள் கவிதை
அனாதையின் காலம் | பகுதி 3 | வாசனைகள் | நீள் கவிதை 


M.Natesh ‘Desert River’ (2006); acrylic on unprimed canvas; 3.5 feet x 2 feet-->


ஒளி நெறி: மௌனம் ஒளியா? இருளா?
--
நாக்கற்ற காண்டாமணி
முகூர்த்தத்துக்கு அசைகிறது
வழமை போல

திரட்டுப்பால் கிண்டுவதை
தூரத்தில் சுவாசிக்கிறது
தொழுவத்து பசு

தாழம் பூ காட்டுக்குள்
தனியாக பூத்திருக்கிறது
வாசமற்ற வாடாமல்லி

சொக்கட்டான் சோழி குலுக்கலில்
விழுந்தால் தாயம்
விழாவிட்டால் பழம்

மௌனம் ஒளியா? இருளா?
ஆசையின் விசை அறியுமா
இசை ஆகுமா?

---
1
சிவப்பு உன்னைத் துரத்துகிறது ரகுநந்த
காய்ந்த கிளையின் கடைசி இலை
உதிர்வாய் அவள்
கையசைத்து சென்ற போது
பார்த்திருந்த நீ
அவளுடைய ரவிக்கையில்
மாதுளை நிறம் கண்டாய்

ஒரு குவளை நீரையும்
ஒரு கவளம் சோற்றையும்
கையில் ஏந்தி காகங்கள்
தன் உள்ளலகின் செம்மை
காட்டாதாவென
காத்து நிற்கிறாய்

உன் தோட்ட பதியன்களில்
செம்பருத்தி மொக்கவிழ்க்க
செம்போத்துகள் உம் கொட்ட
காற்றில் கலந்து நின்ற காருண்யம்
கோசலா கோசலாவெனக் கூவுவதாய்
பிரேமை கொள்கிறாய்

உன் தூங்கா கண்களில்
ஓடும் செவ்வரிகளில்
மௌனத்தின் இழைகள்
நினைவின் சித்திரங்களை
தைப்பதாய்
நனவு அழிகிறாய்

கை தவறிய மைப்புட்டி
காகிதத்தில் கருவறைக்
குருதியெனவே படர்வதாய்
அன்றாடப் பதற்றத்தில்
ஆழ்கிறாய்

புன்னைக் காயல் கழிமுகத்தில்
பொருநை கடலில் கலக்கும்
அடிவானம் எல்லையற்றதான
பாவனையில் உன் அகத்தே
வெம்மையில்
செவ்வானாய் விகசிக்க
அதில் ஒன்றி கரைய
அதை நோக்கி
ஓடுகிறாய்
--
2
கர்ப்ப இருளின்
நிர்மாலியங்கள் சொரியும்
கல்யாண தீர்த்தத்தில்
பனிப்படலம் கவிந்திருக்கிறது

விரகத்தின் குங்கிலிய
புகை நடுவே
மாரீசமற்ற மானின்
பிருஷ்டம் ஒளிர்ந்திருக்கிறது

பொருநை தன் வளையல்களை
குலுக்க எங்கோ ஒரு
சாருமதி ராகம்
கார்த்திகை மாத கிருஷ்ண பட்ச இரவாகிறது

அருவமாய் அந்நியமானவள்
உருவாய் எங்கேனும்
பிரசன்னத்தின் பூ முகமாய்
புலரியாகாளோவென இறைஞ்சுகிறாய்


பூ என உதடு பிதுக்குகிறாய்
--
3

நிலவே நிலவே
சொல்லின் உயிர்த்தாது
எங்கே கூட்டிச் செல்லும் சொல்வாயோ
எப்படிச் சிதையுமென அழுவாயோ

சொல்லின் கதிக்கேற்ப
பஞ்சந்தாங்கியில்
உழக்காய் கிளம்பி குற்றாலமாய்க் கொட்டி
சுடலைமாடசாமிக்கு மூலப் பீடமெடுத்த
சீவலேப்பேரியில் சிற்றாறு
கயற்றாறைத் தொலைத்ததென்ன
பொருநையின்
முக்கூடல் இருகூடல் ஆனதென்ன

பொருளின் ஸ்திதிக்கேற்ப
பூமி பிளந்தோடிய
வராக நதி
தன் கடனா வை
சந்திக்காமல் விட்டதென்ன
திருப்புடைமருதூரில்
பொருநையின்
முக்கூடல் இருகூடல் ஆனதென்ன

சொல்லும் பொருளும்
மண்ணும் மணியும்
மனோன்மணியும்
சித்திரத்தின் கண் விழிப்பு
இழந்தனவோ
உயிர்த்தாது தொலைத்தனவோ
எம் நயினார் பாடிய
பள்ளும் பொய்யோ

நிலவே நிலவே
முக்கூடலில் மூழ்குகையில்
உன் கண்கள் எதைப்பார்க்கும்?

--
4

அவர்கள்
உன் வாழ்வில்
ஒரு சோக நாடகத்தை
ஓராயிரம் பாம்புக்கண்களோடு
பார்க்க விரும்புகிறார்கள்

நீ கதறி அழும்போது
அவர்களுடைய
இலவச ஞெகிழிக்
காகிதங்களாலான அன்பை
தெரிவிக்க காத்திருக்கிறார்கள்

உன் சங்கு பூ முகத்தில்
கடல் சேரா பொருநை
தயங்கி நிற்பதை
கரை சேரா ஆத்மாவென
கணித்து களித்திருக்கிறார்கள்

நீ
கரையோர ஈச்சப்பனைகள்
தெரியாதே எனக் கைவிரித்து
நிற்பதைத் தெரிந்திருக்கிறாய்
அறியாக் கோபுரங்களை
மேகத் திரள்கள் சூழுமாறு
புன்னாகவராளியில்
மனம் கசந்து பாடுகிறாய்

பல்லாயிரம் நீர்க் கால்களோடு
பேரண்ட கருடன் போல
மேகச் சிறகுகள் அசைத்து
அவர்கள் கண்கள் கூச
சராசரங்கள் குலுங்க
இடி மின்னல்கள் முழக்கி
விம்மி வெடிக்கிறது
பெரு மழை
கைவிடப்பட்ட எவர் பொருட்டும்

அனைவரையும் நனைக்கும்
மழை மழை மழையெனெக்
குதூகலித்து
இழந்தவையெல்லாம்
பூ முகத்தை புனித நீராக்குகையில்
கடல் சேரும்
யௌவனம் ஏற்கிறாள் பொருநை
--
5

வல்லயத்தின் வெண்கல மணிகள் குலுங்க
செருப்பு மாடசாமிக்கு காணிக்கையாக்கிய
உன் தந்தையின் ஒற்றைச் செருப்பணிந்து
ஜடாமுடிகள் அகாலத்தில் அலைய
கண்கள் தீப்பிழம்பாய் ஜொலிக்க
நினைவுகளின் பாறைகளை
சங்கிலியால் தகர்த்து
ஏழேழு ஜென்ம வரிசைக் கற்களை
சிதைத்து சரித்து
திருக்குறுங்குடியில் கிளம்பி
களக்காடு மலை தாண்டி
தென் பொதிகை மலை ஏறி
சொரிமுத்தையன் கோவிலில்
மணி முழுங்கி மரத்தடியில்
மலைப் பளிங்கனாய்
உன் குடி மூப்பனாய்
நிற்கிறான் சங்கிலி பூதத்தான்
யாரிவன் யாரிவன் எனக் கேட்பாயோ
அமிர்த பாலா சட்ட நாதா சங்கிலி பூதா எனத் தொழுவாயோ
காரையாற்றின் கசங்களுக்கு காவலாய் விடுவாயோ
ஏதெங்கிலும்
நாளாந்தம் நடுவெயிலில் அவன் நிற்பது அவன் நிலத்தில்
--


அதோ அந்த எஸ்டிடி பூத் அருகேதான்
ஒரு கிழவியின் பாம்படம் பறித்து
இன்னொரு கிழவியின் மகளுக்கு
சீதனம் தந்தான்
ஜம்புலிங்கம்

இதோ இந்தக் காதலர் பெயர் பொறித்த
பொதிகையின் பாறையில் மல்லாக்க கிடந்துதான்
வானத்து நட்சத்திரங்களை
எண்ணினான்
ஜம்புலிங்கம்

இங்கே பஸ் நிறுத்துமிடத்தில்தான்
அவன் ஆன்மா
அவன் உடலை விட்டுப் போவதை
கண்ணெதிரே பார்த்து நின்றான்
ஜம்புலிங்கம்

அங்கே அடகுக் கடையில்
காதறாக் காதுகளின் பாம்படங்கள்
பாடம் படிப்பதை ஆவியாய்
அறிந்து கொண்டான்
ஜம்புலிங்கம்

சொல்லின் மந்திரக்கோல்
தொட்ட பிசுக்காகவும்
தொடாத பிசுக்காகவும்
தன் கதையில் நீடிக்கிறான்
ஜம்புலிங்கம்
--
 7

பஃருளி யாற்றுடன்
பன்மலை யடுக்கத்து
குமரிக் கொடுங் கடல் கொள்ள
என வாசிக்கையில்
பேரழிவின் காட்சி ஒன்று உன்
அகக் கண்ணில் எழுமா?

நீர்க்குமிழியொன்றின்
சிறு நுரை முகிழ்ப்பை
நீ காணும் போதெல்லாம்
நினைவில் சீறி வந்த பேரழிவின்
பிரசன்னத்தை பார்ப்பாயா?

மா தருக்களின் இலைகளூடே
காற்று  சலசலக்கும்போதெல்லாம்
இவை ஏன் தொன்மங்களை
ஓயாது நூற்கின்றனவென
சலித்துக் கொள்வாயா?

யாளிவாய் கல்பந்தை
மனதால் தொட்டு
உருட்டிவிட்டு
பேரழிவின் புதிர் போல
இன்னொரு விளையாட்டு இதுவென
கடந்து செல்வாயா?

எத்தனை கபாடபுரங்களை
கடல்கொண்டாலும்
எத்தனை தனுஷ்கோடிகள்
தான் அழிந்தாலும்
மீன் கண்ணிக்கு
இன்னொரு மதுரை என
வாளாவிருப்பாயா?
--
8

ஆழ்வார் திருநகரியில்
வேப்ப மரங்கள் பூக்களால்
வர்ஷித்து சாலையை மஞ்சள்
படுகையாக்கியிருக்கின்றன
உன் வெற்றுப் பாதங்களை
பதித்து மேலே நடந்து செல்கிறாய்
பாதங்களில் ஒட்டிய பூக்களை உதறும்போது
படுகையில் பதிந்த உன் காலடிச்சுவடுகளை
கவனிக்கிறாய்

பாதம் பற்றிய பூவும்
படுகையில் பதிந்த பாதமும்
உன் மனனே

ஆழ்வார் திருநகரியில்
காய்த்துக் குலுங்கும்
எலுமிச்சை மரங்களை
சிறுவனொருவன்
உலுக்குகிறான்
சிதறும் பழங்களை
மெதுவாய் பொறுக்கி
கையில் கிடைத்த பழங்களையும்
மரத்தில் தொங்கும் காய்களையும்
கவனிக்கிறாய்

கையில் கிடைத்த கனியும்
மரத்தில் தேங்கிய காயும்
உன் மனனே

ஆழ்வார் திருநகரியில்
ஆதிசேஷனாகிய இலக்குவன்
புளிய மரமாய் நிற்கிறான்
அதன் பிலத்தில்தான்
நம் ஆழ்வாரை
மதுரத்தின் கவி ஆழ்வார்
குருமுகம் கண்டார் எனும்
கதை கேட்கிறாய்

கேட்ட கதையும்
பெற்ற பொலிவும்
உன் மனனே 
--
 9

திருச்செந்தூர்

நாழிக் கிணற்றில்
தாம்புக் கயிறு சகடையில் இறங்கி
தண்ணீர் சேர்ந்தும் சத்ததில்
பொருநை ஓடும்
அடியாழ திசையொன்று திறக்கிறது

உனக்கு குறி சொல்லும்
குறத்தியின் மஞ்சள் பூசிய முகம்
மரச் செப்பின் உயிருருவாய்
உன் ஆதி மரங்களின்
சேதி சொல்கிறது

அவள் குரலின் உளி  
செதுக்குவது உன் தாய்நாளின்
அநாதி இசை மண்டபம்
அது எழுப்புவது
உன் இருப்பின் ஓசை
எனினும்

உயிருருவின் உட்புரி உனை
ஈர்ப்பதில்லை
சமீபத்தின் சம்பத்து உனை
சமைப்பதில்லை
அருவத்தின் அசல் உனை
அடைவதில்லை
--


No comments: